வவுனியா மதீனாநகர் பள்ளிவாசலுக்கு முன்பாக பதற்றநிலை : பொலிஸார் குவிப்பு!!

வவுனியா பூந்தோட்டம் மதீனாநகர் பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று (07.03.2018) அதிகாலை 12.10 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் டயர் ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது.

கண்டியில் தற்போது சிங்கள, முஸ்ஸிம் மக்களுக்கிடையே முறன்பாடுகள் ஏற்பட்டு பதட்ட நிலை காணப்படும் இந் நிலையில் இச் சம்பவம் முஸ்ஸிம் மக்களிடையே பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே விரிசலை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நிதானமாக செயட்படவேண்டியது மக்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

வவுனியாவில் ஒன்பது மாதக் குழந்தை பரிதாபமாகப் பலி : காரணம் என்ன?

வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் இளம் குடும்பத்தினரின் ஒன்பது மாத ஆண் குழந்தைக்கு சுகயீனம் காரணமாக இன்று காலை வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அங்கு வழங்கப்பட்ட பாணி மருந்தை இன்று இரண்டு தடவை குழந்தைக்கு வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு அதிக வயிற்றோட்டம் ஏற்பட்டு மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றதும் அங்கிருக்கும் வைத்தியர் தனது கடிதம் ஒன்றுடன் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

பொதுவைத்தியசாலைக்கு குழந்தை கொண்டு சென்றதும் வைத்தியர்கள் இரத்தப் பரிசோதனை செய்து சிகிச்சை வழங்கியும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணித்துள்ளது.

இச்சம்பவத்தை போன்று இதே தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற குழந்தை ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

11 ஆண்டுகளாக மகளுக்காக கண்ணீருடன் காத்திருக்கும் தந்தையின் பரிதவிப்பு!!

 
இங்கிலாந்தைச் சேர்ந்த கேட் மெக்கனின் மற்றும் ஜெர்ரி என்பவரின் முதல் மகள் மெட்லின், இவர் தனது 4 வயதில் காணாமல் போய் விட்டார். அவர் தொலைந்து 11 ஆண்டுகள் ஆன பின்பும் அவர்கள் நம்பிக்கையோடு தேடி வருகின்றனர்.

அவர்கள் கூறுகையில், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் விடுமுறைக்காகப் போர்த்துக்கல் சென்றோம்.

அங்கே ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தோம், மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த எனது மகள் திடீரென்று காணாமல் போய்விட்டாள். அவளை தேடாத இடமில்லை, கேட்காத ஆட்கள் இல்லை, ஒரு பலனும் கிடைக்கவில்லை.

பின் போர்த்துக்கல் காவல்துறை விபத்தில் மகள் இறந்து விட்டாள் என்று சொல்லி விட்டது, ஆனால் அதற்கான சாட்சி எதையும் காட்டவில்லை.

அதனால் நாங்கள் அதை நம்பவில்லை, இங்கிலாந்து காவல் துறை மூலம் விசாரித்தபோது, யாரோ ஒருவர் எங்கள் மகளை அழைத்துச் சென்றிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.
அதன் மூலம் எங்களுக்கு நம்பிக்கை வந்தது, அதனால் நாங்களே பணம் கொடுத்து தேடச் சொன்னோம். என் மகள் தொலைந்ததில் இருந்து என்னால் ஒருநாள் கூட நிம்மதியாகத் தூங்க முடிந்ததில்லை.

பண்டிகை நாட்களின் போது அவளின் சிந்தனையிலேயே இருப்பதால் பல மடங்கு துயரமான வாழ்க்கையை நான் வாழ்கின்றேன்.

நண்பர்கள், உறவினர்கள் என்று எவ்வளவோ பேர் வருகிறார்கள். ஆறுதல் கூறுகிறார்கள். துக்கத்தை விட்டு வெளியே வர முடியவில்லை.

அவளின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இப்படி வளர்ந்திருப்பாள் என்று டிஜிட்டலில் உருவத்தை உருவாக்கி வருகிறேன்.

அதோடு என் மகள் பற்றி ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறேன், மற்றவர்களை இந்தப் புத்தகம் ஈர்க்குமா என்று தெரியாது. ஆனால் இந்தப் புத்தகம் படிக்கும் யார் மூலமாவது என் மகள் எங்களுக்கு மீண்டும் கிடைத்து விடுவாள் என்ற காரணத்திற்காகவே இப்புத்தகத்தை வெளியிட்டேன்.

இதுவரை இந்த வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை, ஆனாலும் மகள் இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் உயிருடன் இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது.

என்னுடைய விடா முயற்சியும் நம்பிக்கையும், பிரார்த்தனையும் விரைவில் எங்களது மகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று காத்திருக்கிறேன் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

உயிருக்கு போராடும் தங்கையின் கன்னத்தில் முத்தமிடும் சகோதரன் : மனதை உருக்கும் புகைப்படம்!!

 
சிரியா போரில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடும் தனது தங்கையிடம் அன்பை வெளிப்படுத்தும் வகையில் கன்னத்தில் முத்தமிடும் சகோதரனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சிரியாவின் பிரதான நகரமான டூமாவிலுள்ள ஒரு மருத்துவமனையின் ரேடியோகிராஃபி அறையில் மனதை உருக்கும் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் சிரியா மக்கள் படும் இன்னல்கள் புகைப்படங்களாக இணையத்தில் வெளியாகியவாறு இருப்பது உலகெங்கும் உள்ள மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், சிரியாவில் அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஐ.நா.சபை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் சிரியா அரசு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 34 பேர் உயிரிழந்ததாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை செய்தனர் : இளைஞனின் கண்ணீர் வாக்குமூலம்!!

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணுடன் தகாத உறவு கொண்டதாக இளைஞர் மீது சந்தேகம் எழுந்த நிலையில் சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் சஹரன் பூர் அருகில் உள்ளது இந்திரா காலனி, இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இளம் பெண்ணும் தகாத உறவு இருப்பதாக உள்ளூர் மக்கள் சந்தேகம் அடைந்தனர். இதுதொடர்பாக பஞ்சாயத்தினர் விசாரித்த போது, தனக்கு அப்பெண் யார் என்றே தெரியாது என பதிலளித்துள்ளார்.

இதனை நம்ப மறுத்த பஞ்சாயத்தினர், குறித்த இளைஞரை அடித்து உதைத்ததோடு, சிறுநீரை குடிக்க வைத்து துன்புறுத்தியுள்ளனர், இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்தவர்கள், இளைஞரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர் இது குறித்து கூறுகையில், ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு, அவருடன் தகாத உறவு வைத்திருக்கிறாய் என்று கூறினார்கள்.

அவர்கள் கூறிய பெண் யாரென்றே எனக்கு தெரியாது என்பதால், இல்லை என்றேன். அவர்கள் அதை நம்பாமல் என்னை சிறுநீரை குடிக்க வைத்து அடித்து உதைத்தனர்.

எனக்கு பயமாக இருக்கிறது, என்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள், பொலிசார் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயிலிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை : காரணம் என்ன?

கணவரின் தகாத உறவை பற்றி கேள்வி கேட்டபோது திட்டியதால் கோபத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்த முரளியின் மகன் ரோஸ், இவருக்கும் ஜீவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார், இந்நிலையில் தனது கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி கணவரிடம் கேட்டபோது, அவரது குடும்பமே சேர்ந்து கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.

உடனடியாக தனது பெற்றோரிடம் ஜீவிதா கூற, அவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும் கள்ள உறவை கணவர் தொடர்ந்ததால் மறுபடியும் ஜீவிதா தட்டிக் கேட்டுள்ளார்.

கடுமையான வார்த்தைகளால் ரோஸ் திட்டவே, மனமுடைந்த ஜீவிதா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் ரயிலில் ஏறியுள்ளார்.

அடையாறு பாலம் அருகே வந்த போது ரயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார், தகவலறிந்து விரைந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தானம் பெற்ற கண்களை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம் : அதிர்ச்சியடைந்த கணவர்!!

நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கண்களை செவிலியர்கள் ஆட்டோவில் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துாத்துக்குடியைச் சேர்ந்த சிவகுருவின் மனைவி சாந்தா(வயது 35), கடந்த பிப்ரவரி மாதம் 26ம் திகதி உறவினர் திருமணத்திற்காக பைக்கில் சென்ற போது விபத்து நேர்ந்தது.

இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், சாந்தா மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மதுரை தனியார் மருத்துவமனையில் சாந்தா மூளைச்சாவு அடைந்ததால், உடல் உறுப்புகளை தானம் செய்ய சிவகுரு முடிவெடுத்தார். இதற்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு சிறுநீரகம் அங்குள்ள நோயாளிக்கும், மற்றொன்று தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கண்கள், நெல்லையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.

கண்களை தானமாக பெற்ற செவிலியர்கள் பெட்டியுடன் ஆட்டோவில் ஏறிச்சென்றனர், இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

பெரியார் சிலை நிழலை கூட தொட முடியாது : கொந்தளிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள்!!

பெரியார் ஈ.வே.ரா சிலை உடைக்கப்படும் என்ற ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திரிபுராவில் பாஜக வெற்றி பெற்ற பிறகு 25 ஆண்டுகளாக இருந்து வந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலை இடிக்கப்பட்டது.

இந்த தகவலை தன் முகநூல் பக்கத்தில் பெருமையாக பதிவிட்டிருந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டு விட்டது. அடுத்து தமிழகத்தில் பெரியார் சிலை தான்’ என பதிவிட்டிருந்தார்.

இதைக்கண்டு கொதித்தெழுந்த தமிழக அரசியல் தலைவர்கள் ஹெச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்

பெரியார் சிலையை தொட்டுப் பார்க்கக்கூட தகுதியற்றவர் ஹெச்.ராஜா. வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

டிடிவி தினகரன்

பெரியார் சிலை உடைக்கப்படும் என ஹெச்.ராஜா பேசியிருப்பது அநாகரிகம்.

நாம் தமிழர் கட்சி சீமான்

அவர் பேசியதை பெரிது படுத்த வேண்டாம். பெரியார் சிலையை தொட்டால் என்ன நடக்கும் என்று ராஜாவுக்கு நன்றாக தெரியும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

பெரியார் சிலை மீது கை வைத்தால் நடப்பதே வேறு. கை வைத்தால் துண்டு துண்டாக கை வெட்டப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன்

பெரியார் சிலையை அகற்ற ஹெச்.ராஜாவின் முப்பாட்டனே வந்தாலும் முடியாது.

சுப.வீரபாண்டியன்

நாளை என்ன நாளை வீராதி வீரர்கள் இன்றே பெரியார் சிலை மீது கை வைத்து பார்க்கட்டும்.

குஷ்பு, காங்கிரஸ்

எங்களைத் தாண்டி பெரியார் சிலையின் நிழலை கூட உங்களால் தொட முடியாது. திகதி குறித்து வாருங்கள். முடிந்தால் எங்களைத் தாண்டி தொட்டுப் பாருங்கள்.

ஜெ.தீபா

பெரியார் மண்ணிலிருந்து பெரியார் சிலையை அகற்றி விட முடியுமா? வெறும் சிலை இல்லை, சிங்கம் அவர். அவரை தொட்டால் ஏற்படும் விளைவுகள் நினைத்து பார்க்க முடியாதவை.

வவுனியா புகையிரதநிலைய வீதியில் விபத்து : பெண்ணொருவர் படுகாயம்!!

 
வவுனியா புகையிரதநிலைய வீதி, இலங்கை வங்கிக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட 58 வயதுடைய பெண்ணொருவர் விபத்துகுட்பட்டுள்ளார்.

இவர் வவுனியா கரப்பன்காட்டுப் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்றும், இவர் மீது மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே குறித்த பெண்ணின் தலையில் படுகாயம் ஏற்பட்டதென்றும் அறியமுடிகின்றது.

இந் நிலையில், அவர் தற்பொழுது வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பந்தமான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!!

 
சிலாவத்துறை பிரதான வீதி அல்லிராணிக்கோட்டைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியின் உரிமையாளர் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திக்கொண்டு சென்ற போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதையடுத்து குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றவர் முச்சக்கர வண்டியில் இருந்து வெளியே பாய்ந்து தப்பியுள்ளார். எனினும், குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக தீயில் எறிந்துள்ளது.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு வந்த சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இளைஞரொருவர் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு!!

யாழ். கொடிகாமம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி நபரொருவர் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவசிகுளத்தைச் சேர்ந்த சகாயநாதன் விஜிதரன் (றமணன்) எனும் 32 வயதான நபரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் காணாமல்போயுள்ள நபரின் தாயார் சகாயநாதன் மனோரஞ்சிதமலர் தெரிவிக்கையில்,

எனது மகன் அண்மையில் தான் திருமணம் செய்தார். கடந்த மாதம் 22ஆம் திகதி வீட்டிற்கு வந்துவிட்டு வேலைக்குச் செல்வதாக்க கூறி சென்றார்.

எனினும் அவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. சம்பவ தினமன்று மாலை இறுதியாக அவரது நண்பர் ஒருவரிடம் தொலைபேசியினூடாக கதைத்தார்.

அவர் காணாமல் போன சம்பவத்திற்கு பின்னர் அவர் கதைத்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினையேற்படுத்தி கதைத்த போது தான அழைப்பெடுக்கவில்லை என கூறி நண்பர் அழைப்பினை துண்டித்தார்.

இதனால் அவரது நண்பர்கள் மீது எமக்கு சந்தேகமாகவுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் கிளிநொச்சி ப குதியிலிருந்து இரண்டு கிலோ 117 கிராம் கேரள கஞ்சாவினை எடுத்து வந்த நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சிப் பகுதியிலிருந்து மாவத்தகமவிற்கு கொண்டு செல்வதற்கு 2கிலோ 117கிராம் கேரளா கஞ்வினை எடுத்து வந்த நபர் ஒருவரை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரள கஞ்சாவினை எடுத்த வந்த மாவத்தகம பகுதியைச் சேர்ந்த (27வயதுடைய முகமட் அக்பா) என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அம்பாறையில் டயர்கள் எரிப்பு : பேரூந்துகள் மீது கல் வீச்சு : கண்ணீர்ப்புகைப் பிரயோகம்!!

 
நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளையும் கண்டித்து அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் கல்முனை சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பல பிரதேசங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு வீதிகளில் டயர் போட்டு தடையேற்படுத்தி வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் மக்கள் மத்தியில் அச்சநிலை மேலோங்கி இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.

இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கடைகள் போன்றன மூடப்பட்டும், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் இஸ்தம்பிதம் அடைந்தும் காணப்படுகின்றன.

இந்த நிலையில், மருதமுனை பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் பஸ்ஸின் கண்ணாடிகள் உடைந்த நிலையில் குறித்த பஸ்கள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து கல்முனையில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அக்கறைப்பற்றுக்கான பஸ் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை.

அதேவேளை மருதமுனையில் கல்முனை – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டும் மரக்குற்றிகள் மற்றும் கொங்க்ரீட் தூண்கள் போடப்பட்டும்வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

இதனால் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்த. அத்துடன் அங்கு இளைஞர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி ஒன்றையும் நடத்தினர்.

இந்த நிலையில் மருதமுனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கலைப்பதற்காக விசேட அதிரடிப்படையினரால் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருந்திரளான இளைஞர்கள் அங்கு திரண்டு கண்டனப் பேரணியை நடத்தியதுடன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பயனளிக்காமையினால் விசேட அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு முற்பகல் 11.30 மணியளவில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், இதன்போது சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் சாராயக் கடைகளை மூடுமாறு கோரி கண்டனப் போராட்டம்!!

சாராயக்கடைகளை மூடுமாறு கோரி கண்டனப் போராட்டம் ஒன்று எதிர்வரும் (08.02.2018) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பிரதேச செயலகம் முன்பாக நடைபெறவுள்ளது.

அனைத்துலகப் பெண்கள் தினத்தில் நடைபெறவுள்ள இக்கண்டன போராட்டத்தை சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதுடன் உழைக்கும் பெண்கள் விடுதலை முன்ணணி அமைப்பும் இணைந்து நடத்தவுள்ளது.

இக்கண்டன போராட்டம் தொடர்பாக சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

வடக்கு கிழக்கு மக்களாகிய எம் மீது யுத்தம் திணிக்கப்பட்டு சகல அடக்கு முறைகளுக்கும் ஆளாகி எமது அடிப்படைப் பொருளாதார கட்டமைப்பை இழந்து தெருவில் விடப்பட்டுள்ளோம்.

இந்த யுத்தத்தில் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டது எமது பெண் சமூகமே. இந் நிலையில் கடந்த 09 வருடங்களில் வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்த வாழ்க்கைச் சுமை என்பவற்றினால் ஏற்பட்டு வரும் கடன் சுமையினால் பெண்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

லீசிங் நாள் கடன்கள், கிழமைக் கடன்கள், குழுக்கடன் திட்டங்கள் போதாக்குறைக்கு பிரமிட் வியாபாரமுறை என எம் அடிப்படைப் பொருளாதாரத்தையே ஆட்டங்கன வைக்கின்ற மக்கள் விரோத திட்டங்கள் ஒருபுறம் சாராய (பார்) மதுக்கடை போத்தல் கள்ளுப்பாவனையும், மாவா, கஞ்சா, ஹெரோயின் போதை பொருட்கள் பாவனைகள் அதிகரிப்பு மறுபுறம் என பெண்களின் குடும்ப வாழ்விற்கும் சுய பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாமல் செய்திருப்பது மட்டுமல்லாமல் உழைக்கும் மக்களின் வருமானத்தில் பெரும் பகுதியை மதுக் கடைகளினாலேயே சுரண்டப்படுகின்றது.

மது மற்றும் போதைப்பொருள் பாவனைகளின் அதிகரிப்பானது எமது பொருளாதார மற்றும் கல்வி
கட்டமைப்புக்களை அழிப்பது மட்டுமின்றி சமூகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, லஞ்சம் மற்றும் வீதி விபத்துக்கள் என பாரிய குற்றச் செயல்களுக்கு பிரதான காரணியாக மாறியிருக்கின்றது.

எமது சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளையும் தகரத்து பொருளாதரத்தை சிதைத்து எம்சமூகத்தை கடனாளியாக, நோயாளியாக, சிந்தனையற்றவர்களாக மாற்றி மக்களைச் சுரண்டி மேலும் வறுமையில் தள்ளும் அனைத்து திட்டங்களை முறியடிக்கவும் சாராய (பார்) மதுக்கடை, கள்ளுக்கடைகளை இழுத்து மூடி எமது சமூகத்தின் நல்வாழ்விற்காகவும் இந் நாளில் ஒன்றிணைந்து குரல்கொடுக்கவும் போராடவும் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பாகிய நாம் உழைக்கும் பெண்கள் விடுதலை முன்னணி உடன் இணைந்து கண்டன போராட்டம் ஒன்றினைட வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பிரதேச செயலகம் முன்பாக ஏற்பாடுசெய்திருக்கின்றோம்.

எம்முடன் இணைந்துகொள்ளுமாறு அனைத்து மகளீர் பெண்கள் அமைப்புக்களையும், அனைத்து சமூக அமைப்புக்களையும் மக்களையும் உரிமையுடன் போராட அழைக்கின்றோம்.

இவற்றை எம் சமூகத்திலிருந்து முழுமையாக அகற்றும் வரை தொடர்போராட்டங்களை முன்னெடுக்க எம்முடன் இணைந்து செயற்படுமாறும் அனைத்து மகளீர் பெண்கள் அமைப்புக்களையும், அனைத்து சமூக அமைப்புக்களையும் மக்களையும் உரிமையுடன் போராட அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தொழில்நுட்ப உத்தியோகத்தரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய நபர் கைது!!

வவுனியா நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து அரசியல் கட்சியின் உறுப்பினர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றுமுதல் வவுனியா கற்குழி 3வது ஒழுங்கையில் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அங்கு குறித்த வீதியில் கால்வாய்கள் அமைக்கப்படாமல் வீதி புனரமைப்புப்பணிகள் இடம்பெறுவதால் கழிவு நீர் வீட்டிற்குள் செல்வதாகத் தெரிவித்து அப்பகுதியிலுள்ளவர்கள் நகரசபை செயலாளருக்கு கடிதம் ஒன்றினை வழங்கியிருந்தனர்.

இதையடுத்து நேற்று அங்கு சென்ற நகரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியில் வீதி புனரமைப்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் நகரசபையில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த வீதிபுனரமைப்புப்பணிகளை நிறுத்தி நகரசபையின் அனுமதியைப் பெற்று புனரமைப்புப்பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த அரசியல் கட்சியின் உறுப்பினர் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு வந்த ஒருவர் நகரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தரின் பணிகளைச் செய்யவிடாது இடையூறுகள் ஏற்படுத்தியதுடன் அவரை தனது கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்து அச்சுறுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு அவரது மோட்டார் சைக்கிலின் சாவியினை பறித்து எடுத்துள்ளார். இதையடுத்து குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் உடனடியாக நகரசபை செயலாளரிடம் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சியின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபரை அழைத்து பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவரிடம் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் அமானுஷ்ய சக்தி : புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அமானுஷ்யம் தொடர்பில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களும், தங்களுடன் இணைந்து வர்த்தகம் செய்பவர்களும் எந்த இலாபமும் பெறுவதில்லை எனவும் பாரிய நட்டம் அடைந்துள்ளதாகவும் யாழ். சிறிய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக யாழ். மக்கள் ஒருவித அச்ச உணர்வில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக நிலையத்தில் வர்த்தகம் செய்தவர்களில் சிலர் மர்ம நோய் காரணமாக கடந்த 4 மாதங்களில் உயிரிழந்தனர். இதனால் இவர்களின் வீடுகளுக்கு தினமும் அமானுஷ்ய சக்தி வருவதாகவும், அமானுஷ்ய சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வர்த்தக நிலையத்தில் ஆரம்பமான அமானுஷ்ய கதைகள் தற்போது யாழ்ப்பாணத்தின் சிறு பிரதேசம் வரை பரவியுள்ளது.

இந்த நிலைமைக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இவ்வாறான அமானுஷ்ய சம்பங்கள் இடம்பெறுவதாக தெரிய வருகிறது.

கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கிரிஸ் பேய் பயம் போன்று தற்போது ஏற்பட்டுள்ள பயம் குறித்தும் மக்களுக்கு தெளிவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.