வவுனியா மதினாநகர் பள்ளிவாசல் முன்பாக விசமிகளால் ரயர் எரிப்பு : இன முறுகலை ஏற்படுத்த சதி!!

 
வவுனியா மதினா நகர் பள்ளிவாசலுக்கு முன்பாக இனந்தெரியாத நபர்களால் ரயர் எரிக்கப்பட்ட சம்பவம் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்த திட்டமிட்ட நாசகார செயல் என பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வவுனியா, மதீனாநகர் பள்ளிவாசல் முன்பாக நேற்று (06.03) இரவு 11.30 மணியளவில் மோட்டர் சைக்கிளில் வந்த குழு ஒன்றினால் ரயர் எரியூட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மதினா நகர் பள்ளிவாசல் பகுதிக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

இச்சம்பவத்தால் மதீனா நகர் கிராமத்திலும் அதனைச்சூழவுள்ள பகுதியிலும் பதற்ற நிலைமை காணப்பட்டது.

மதினா நகர் பள்ளிவாசல் முன்பாக நடைபெற்ற டயர் எரிப்பு சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் மௌலவி எம்.எச்.எஸ்.அலாவுதீன், பிரஜைகள் பொலிஸ் குழு தலைவர் முகமட் பைசல் மற்றும் மதினா நகர் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் யு.அயுப்கான் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,

பள்ளிவாசல் முன்பாக டயர் எரிக்கப்பட்ட நிலைமையானது ஒரு நாசகார செயலாகவே நாங்கள் பார்க்கிறோம். இவ்வாறான வணக்கஸ்தலங்கள் தாக்கப்படுவது இனங்களுக்கிடையிலான முறுகலை ஏற்படுத்தும் நோக்கமே.

இக்கிராமத்தில் யுத்த காலத்தில் கூட தமிழ், முஸ்லிம் இனங்களை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஒற்றுமையை சீர்குலைக்க சில விசமிகள் திட்டமிட்டு இந்த செயலைச் செய்கின்றார்கள்.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்திற்கான பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. இவ்வாறான வேண்டத்தகாத சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமலிருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

இதேவேளை மதினா நகர் பள்ளிவாசலுக்கு வருகை தந்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் அப்துல் பாரி மற்றும் கட்சியின் இணைப்பாளர் முத்து முகமது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு.திலீபன் ஆகியோர் பள்ளிவாசல் நிர்வாகத்தினரை சந்தித்து நிலமைகளை கேட்டறிந்துகொண்டனர்.

வவுனியாவில் பள்ளிவாசல், எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர் குவிப்பு!!

 
அம்பாறை மற்றும் கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் எதிரொலியாக வவுனியா செட்டிக்குளத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பாறை மற்றும் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்று வரும் இன வன்முறை வவுனியாவிலும் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இவ் இனக்கலவரம் தொடர்பாக சமூக ஆர்வளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

சகல இனங்களுக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சமத்துவமாக வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், சட்டம் ஒழுங்கு பாகுபாடின்றி நிலை நாட்டப்பட வேண்டும்.

அத்தோடு முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவத்தை உடன் நிறுத்த வேண்டும். இதன் சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த ஜனாதிபதி மற்றும் சட்ட அமைச்சராக திகழும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தனர்.

வன்முறையின் தீவிரம் : இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் அதிரடியாக நிறுத்தம்!!

இலங்கை பூராகவும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், வட்ஸ்அப், பேஸ்புக் மெசன்ஜர், வைபர் ஆகிய பிரான சமூக வலைத்தளங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் வேகமாக தகவல் பரவி வருவதால் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐஎம்ஓ போன்ற உரையாடல் செயலிகள் வழமை போன்று செயற்பட்டு வருகின்றன.

பேஸ்புக், வட்ஸ்அப் நிறுத்தப்பட்டமையால் இலங்கை பயனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வன்முறையை தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதன் காரணமாக பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்களுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் சாதனை!!

வவுனியா மாவட்ட பிரதேச செயலகத்தினால் இடம்பெற்ற பாடல் நயத்தல் போட்டியில் (18வயதுக்குட்பட்ட) முதலாமிடத்தினை பெற்று அகில இலங்கை ரீதியிலும் முதலாமிடத்தினை பெற்று வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரி மாணவி சற்குணராஜா ஜீவநந்தினி வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (05.03.2018) இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பாடல் நயத்தில் போட்டியில் முதலாமிடத்தினை பெற்றமைக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ்களை அமைச்சர் அமைச்சர். எஸ்.பீ.நாவின்ன வழங்கி வைத்தார்.

சற்குணராஜா ஜீவநந்தினி வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி கற்று வருகின்றார். இவருடைய விடா முயற்சியினால் இச் சாதனையினை படைத்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

3 மாதத்தில் ஆயிரம் குழந்தைகளை காவு வாங்கிய சிரியா : அதிர்ச்சித் தகவல்கள்!!

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சிரியா முழுக்க சுமார் 1000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ளது.

Unicef அமைப்பின் Christophe Boulierac என்பவர் வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சி தகவலில், போர் உச்சத்தில் இருக்கும் Ghouta பகுதியில் அப்பாவி பொதுமக்கள் பதுங்கு குழிகள் போன்ற பகுதிகளில் உயிரை காக்க போராடி வருகின்றனர் என்றார்.

இதே பகுதியில் சுமார் 400,000 எண்ணிக்கையிலான அப்பாவி மக்கள் குடியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு தரப்பின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் சிக்கி பரிதவிக்கும் மக்களுக்கு அனுப்பப்பட்ட 14 லொறி உதவிகள் இதுவரை உரிய மக்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை எனவும்,

வியாழனன்று மேலும் சில எண்ணிக்கையிலான அவசர உதவி லொறிகள் Ghouta பகுதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர் உச்சத்தில் இருக்கும் பகுதிகளில் இருந்து அப்பாவி மக்கள் வெளியேற விதிக்கப்பட்டுள்ள 9 மணி நேர கெடு போதுமானதாக இல்லை எனவும், அப்பாவி மக்கள் உயிருக்கு பயந்து இன்னமும் மறைவிடத்தில் அல்லாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காதலனை காப்பாற்றுவதற்காக தந்தையை கொலை செய்த மகள்!!

இந்தியாவில் காதலனை காப்பாற்றுவதற்காக பெற்ற தந்தையை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 4 மணியளவில் தனது மகளின் அறையிலிருந்து தொடர்ந்து சத்தம் வந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக மகளின் அறையை திறந்து பார்த்த போது, அவரது மகள், தன்னுடைய காதலனுடன் ஒன்றாக இருந்திருக்கிறார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மகளின் காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இது முற்ற, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது.

அப்போது தனது காதலனை காப்பாற்றுவதற்காக மூன்றாவது மாடியில் இருந்து மகளும், அவரின் காதலனும் இணைந்து அவரை கீழே தள்ளிவிட்டதால், பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

ஏதோ வெளியில் சத்தம் கேட்கிறதே என்று சாந்தி வெளியில் வந்து பார்த்த போது, கணவன் இறந்து கிடப்பதை பார்த்து கதறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சாந்தி, தனது மகள் மற்றும் அவரின் காதலன் மீது காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விஷ்ணுவின் மகளை கைது செய்துள்ளனர். ஆனால் அவரது காதலன் தப்பிஓடிவிட்டார். பொலிசார் அவரை தேடி வருகின்றனர்

என் கணவனுடன் வெளியில் செல்லாதீர்கள் : தற்கொலை செய்து கொண்ட மனைவி கெஞ்சல்!!

தமிழகத்தில் ஓடும் ரயிலிலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண் விவகாரத்தில், கணவர் தொடர்பு வைத்திருந்த பெண்ணிடம், அப்பெண் பேசியது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை பெண்ணின் தாயார் பொலிசாரிடம் கொடுத்துள்ளார்.

சென்னை ஆவடியை சேர்ந்த முரளியின் மகன் ரோஸ். இவருக்கும் ஜீவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் ஜீவிதாவுக்கு தனது கணவன் வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அவர் கணவரிடம் கேட்ட போது, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து ஜீவிதா அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன் பின் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இருந்த போதிலும் ஜீவிதாவின் கணவர் வேறொரு பெண்ணுடான இருந்த உறவை விடவில்லை. இதனால் மீண்டும் ஜீவிதா இது குறித்து கேட்ட போது, அவர் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

பெரிதும் மனமுடைந்த ஜீவிதா ரயிலில் சென்று கொண்டிருந்த போது அடையாறு பாலம் அருகே வந்த போது ரயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜீவிதாவின் தற்கொலையை சாதாரணமான தற்கொலை வழக்காக ரயில்வே பொலிசார் பதிவு செய்த நிலையில், ஜீவிதாவின் தாயார் என்னுடைய மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஜீவிதா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கணவர் தொடர்பு வைத்திருந்த பெண்ணிடம், தனது கணவருடனான நட்பை விட்டுவிடும்படி கேட்கும் ஆடியோவையும் ஜீவிதாவின் தாயார் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதில் ஜீவிதா என் கணவருடன் எங்கும் வெளியில் செல்லாதீர்கள், அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. குழந்தை ஒன்று உள்ளது. உங்களிடம் பல முறை சொல்லியிருக்கிறேன் என்று கெஞ்சியுள்ளார்.

ஆனால் அந்த பெண்ணோ, நாங்கள் நட்பின் அடிப்படையில் தான் பழகுகிறோம், வேண்டுமென்றால் உங்கள் கணவனிடம் இதை சொல்லுங்கள், அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது என்று திமிராக கூறியுள்ளார்.

மேலும் ஜீவிதா கடந்த ஞாயிறு அன்று வெளியில் சென்றுள்ளீர்கள், அடுத்த பெண்ணின் கணவருடன் செல்வது முறையா என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண், சும்மா தான் வெளியில் சென்றோம் என்று கூற, ஜீவிதா நீங்கள் நண்பர்களுடன் செல்லுங்கள், அடுத்தவரின் கணவருடன் செல்லாதீர்கள் என்று ஆடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த ஆடியோவைத் தொடர்ந்து ஜீவிதாவின் கணவரை பொலிசார் உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளிர்சாதனப் பெட்டியில் சடலமாக கிடந்த பெண் பொலிஸ் அதிகாரி!!

இந்தியாவில் பொலிஸ் பெண் அதிகாரியை ஆய்வாளரே கொன்று குளிர்சாதப் பெட்டியில் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மும்பையில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அஸ்வினி ஜெயகுமார் கோரெ-பிந்த்ரே(37) என்னும் பெண் கடந்த 2016, ஏப்ரல் 15ஆம் திகதியன்று மாயமாகியுள்ளார்.

அது குறித்து மாயமான அதிகாரியின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ராஜு கோரே என்பவரை திருமணம் செய்திருந்த அஸ்வினுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் அஸ்வினிக்கும் பொலிஸ் ஆய்வாளர் அபய் குருந்த்கர் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது.

இந்த உறவு குறித்து ராஜுக்கு தெரிய வந்த நிலையில் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டு தனியே வசிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த நிலையில் தான் ஒரு வருடமாக தனியே வசித்து வந்த அஸ்வினி மாயமானார்.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், சிசிடிவி கெமரா காட்சிகள் உதவியுடன் அபய் என்ற ஒரு ஆய்வாளரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அஸ்வினியை கொலை செய்து தன் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் அபய் அடைத்து வைத்திருந்ததாக அவரது நண்பர் மகேஷ் என்பவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி அஸ்வினியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியுள்ள அபய், அவரை கொலை செய்வதற்காக பவர் கட்டர் உபோகித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

பேஸ்புக், வட்ஸ்அப்பில் தகவல்களை பரிமாறுவோருக்கு எதிராக அவசரகாலச் சட்டம்!!

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக அவசர கால சட்டம் பிரயோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 நாட்களுக்கு அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் போலி பிரச்சார மற்றும் இனவாத பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் மற்றும் மெசென்ஜர்களில் போலியான தகவல்களை பரப்பும் குழுக்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இனவாதம் அல்லது போலிப் பிரச்சாரங்களை வெளியிட்டமை உறுதி செய்யப்பட்டால் அவசரகால சட்டத்தின் கீழ் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கண்டியில் நடைபெற்ற இன மோதல் தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் பரிமாறப்பட்ட நிலையில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 80 வயதான தமிழர் கைது!!

கனடா டொரொன்டோ பகுதியில் 80 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

12 வயதுடைய சிறுமி மீது பாலியல் தாக்குதல் மேறகொண்ட 80 வயதுடைய தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 28ஆம் குறித்த நபர் தனது வீட்டில் சிறுமிக்கு பாடம் கற்பிக்கும் போதும் இவ்வாறு பாலியல் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிவலிங்கம் வல்லிபுரம் என்ற 80 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தாக்குதல், பாலியல் தலையீடு மற்றும் பாலியல் சேட்டை ஆகிய குற்றம் சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது.

எனினும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

-தமிழ்வின்-

போதைக்கு அடிமையான 16 வயது சிறுமி செய்த மோசமான செயல்!!

16 வயதான சிறுமி ஒருவரைக் கொண்டு, வயதான வர்த்தகர்களிடம் கொள்ளையிட்டு வந்த நபர்களை அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியை பயன்படுத்தி, வயதான வர்த்தகர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் மற்றும் ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இரண்டு இளைஞர்களும், 16 வயதான சிறுமியும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சிறுமி கடுமையாக போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கொடகம பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான வர்த்தகர் ஒருவருக்கு சிறுமி தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, அவரை காதலிப்பதாகத் தெரிவித்து ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.

சிறுமியின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு அத்துருகிரிய கொடகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு சென்ற வர்த்தகரை இரண்டு இளைஞர்கள் தாக்கி அவரிடமிருந்த பணம் மற்றும் ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வர்த்தகர் அத்துருகிரிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது குறித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட போது குறித்த சிறுமி போதைப் பொருள் பயன்படுத்தியிருந்ததுடன், ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைக்கு செல்லாது, இளைஞர்களுடன் சுற்றித் திரிந்ததாகவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுமிக்கு எதிராக ஏற்கனவே போதைப் பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் ரஷ்ய விமானம் வீழ்ந்து விபத்து : 32 பேர் பலி!!

சிரியாவில் இடம்பெற்றுவரும் போரில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்து உள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது.

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

போர் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில், சிரியாவில் இடம்பெற்றுவரும் இராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 15 நாட்களில் மட்டும் இதுவரை 1300 பேர் உயிரழந்துள்ளனர்.

இந்த போரில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆனாலும் ரஷ்யா அவ்வப்போது வான்வெளி தாக்குதல் மேற்கொள்கிறது.

இந்த நிலையில் சிரியா அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்துகுள்ளாகியுள்ளது. சிரியாவின் லடாகியாவிலுள்ள ரஷ்ய விமான தளத்திற்கு சென்றபோது விபத்துக்குள்ளானது.

சிரியாவில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். 32 பேரில் 6 பேர் விமான சிப்பந்திகள் ஆவர்.

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தாழங்குடாவில் உள்ள பாடசாலையொன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாழங்குடா விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்வி பயிலும் இன்பராஜா சகீர்தன் (14வயது) என்னும் மாணவனே நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் ஒருவரினால் தாக்கப்பட்ட நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

நேற்று பாடசாலைக்கு வந்த குறித்த மாணவன் பாதணி அணிந்துவரவில்லையென குறித்த ஆசிரியர் மாணவனை தாக்கியுள்ளதாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகளை பெற்ற சன்னி லியோன்!!

கவர்ச்சிப் படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம் பதித்தவர் சன்னி லியோன். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘லைலா மை லைலா’ பாடல் பலரது தூக்கத்தை கெடுத்து பரிதவிக்க வைத்தது.

சன்னி லியோன் – டேனியல் வெப்பர் தம்பதியருக்கு குழந்தைகள் பிறக்காததால் கடந்த ஆண்டு இவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து, வளர்த்து வருகின்றனர்.
இருப்பினும், மரபியல் வழியாக தங்களுக்கென்று வாரிசு இல்லையே என்ற ஏக்கம் சன்னி லியோனின் மனதில் குடிகொண்டிருந்தது.

இந்த ஏக்கத்தை போக்குவதற்கு வாடகை தாயாக குழந்தையை பிரசவித்துத்தர ஒரு பெண் முன்வந்தார். இதையடுத்து, சன்னி லியோனின் கரு முட்டையும், டேனியல் வெப்பரின் விந்தணுவும் மருத்துவ ரீதியாக செயற்கை முறையில் செறிவூட்டப்பட்டு அந்த வாடகைத்தாயின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது. இந்த கரு முழுமையாக வளர்ச்சியடைந்த பின்னர் சமீபத்தில் அந்த பெண்ணுக்கு சில வாரங்களுக்கு முன்னர் பிரசவம் நடந்தது.

ஒரு குழந்தைக்கு ஏங்கிய சன்னி லியோன் தம்பதியருக்கு ஒரே நேரத்தில் இரட்டை குழந்தைகளை அவர் பெற்றெடுத்து தந்தார். அவை இரண்டுமே ஆண் குழந்தைகள் என்பதில் சன்னி லியோன் தம்பதியர் பூரிப்பிலும், மகிழ்ச்சியிலும் திளைத்துள்ளனர்.

ஆஷெர் சிங் வெப்பர் மற்றும் நோவா சிங் வெப்பர் என்று தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ள சன்னி லியோன் இவர்களின் வருகையால் தங்களது குடும்பம் தற்போது முழுமையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு தத்தெடுத்த பெண் குழந்தையுடன், தங்களது வாரிசும், புதிய வரவுமான இரட்டை குழந்தைகளுடன் சன்னி லியோனும் அவரது கணவரும் காணப்படும் புதிய புகைப்படம் ஒன்றையும் தனது ‘இன்ஸ்ட்டாகிராம்’ பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

குஷலின் அதிரடியில் 1வது T20 போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி!!

 
சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் இன்று கொழும்பில் ஆரம்பமானது.

ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் விளையாடின.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பில் தவான் 90 ஓட்டங்களையும் பாண்டியா 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிர 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 175 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி குஷல் ஜனித்தின் அதிரடியில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்த இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடியாக விளையாடிய குஷல் ஜனித் பெரேரா 66 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வொஷிங்டன் சுந்தர் மற்றும் ஷால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 புள்ளிகளைப்பெற்று முன்னிலையிலுள்ளது.

சீமானுக்கு பதிலடி கொடுத்த ரஜினி!!

ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் சிலை திறந்து வைத்த ரஜினி ரசிகர்களிடம் பின் உரையாற்றினார்.

அவர் நேற்று பேசிய கருத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது, குறிப்பாக என்னை வரவேற்கைவில்லை என்றாலும், கிண்டல் செய்யாதீர்கள் என்றார்.

மேலும் சீமான் தொடர்ந்து ரஜினியை தமிழன் இல்லை என்று குற்றம் சாட்டி வருகின்றார், அதற்கு பதிலடி தரும் வகையிலும் சில கருத்துக்களை ரஜினி பேசினார்.

இதில் தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் உலக அளவில் வளர வேண்டும், அப்போது தான் தமிழின் சிறப்பு உலகிற்கு தெரியும் என மறைமுகமாக சீமானுக்கு பதிலடி கொடுத்தார்.