இரத்தினபுரி, திம்முல்விட்டய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (07) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் உச்சமடைய ஒருவர் மற்றையவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 39 வயதுடையவர் என்பதுடன் சந்தேகநபர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது என கூட்டுப்படைகளின் பிரதானி ரியல் எட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
எனவே இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அவசரகால நிலையின் கீழ் இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளனர்.
இது யுத்தமல்ல, இனவாத வன்முறையாகும். எனவே எமது அனுகுமுறை வித்தியாசமாக இருக்கும். தற்போது அவசரகால நிலையின் கீழ் இந்த விடயத்தில் தலையிட எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் கீழ் நாங்கள் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாதவகையில் நடவடிக்கையை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போம்.
தற்போது இராணுவத்தினர் அனைத்துப் பகுதிகளிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் ஒருவிடயத்தை கூற வேண்டும். இன்று நாம் உயிரோடு இருப்பதற்கு காரணம், யுத்தத்தின்போது முஸ்லிம் மக்கள் உயிர்த்தியாகத்துடன் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினால் யுத்தத்தை முடித்தோம்.
முஸ்லிம் மக்களின் மொழி அறிவு எமக்கு பாரிய ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம் எனவே அவர்களின் நிலைமை தொடர்பில் நான் கவலையடைகிறேன்.
நாங்கள் குறைந்த பட்ச அதிகாரத்தைப்பயன்படுத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் 99 பேர் ரயில்களில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
2018ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் ரயில் விபத்துக்களில் 99 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
புகையிரத கடவைகளில் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல், புகையிரத மிதி பலகையில் பயணித்தல், செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு ரயில் பாதையில் நடத்தல், தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்ளல், ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்து கீழே விழுதல் போன்ற காரணிகளினால் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.
கடந்த 2017ம் ஆண்டில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 517 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று ஒட்டுமொத்த இலங்கையும் முகம்கொடுத்திருக்கும் பாரிய பிரச்சனைக்கு காரணமாக இருந்தது குமாரசிங்க என்ற அப்பாவி இளைஞனின் மரணம் தான்.
கண்டியில் ஒரு சிங்கள இளைஞனை முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் தாக்கியதில் அந்த இளைஞன் 10 நாட்களுக்குப்பின் உயிரிழந்திருந்தார்.
அதையடுத்து குறித்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் ஆரம்பித்த பிரச்சினை இன்று நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டம் அமுல்படுத்தும் நிலைக்கு சென்று விட்டது.
குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள், அவரின் குடும்பத்தை நினைத்து பார்த்திருப்பார்களா? அவர்களது குடும்பத்தின் நிலை என்ன? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த குமாரசிங்க என்ற இளைஞனின் குடும்பத்தாரின் கோரிக்கை, அவர்களது கண்ணீர், கவலை சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
இவருக்கு தாய், தந்தை, உடல்நலம் குறைவான மகன், மனைவி மற்றும் சகோதரி உள்ளனர். உயிரிழந்த இளைஞனின் மனைவி கருத்து தெரிவிக்கையில்,
“நான் வெளியில் எங்கும் வேலைக்கு செல்லவில்லை. எனக்கு சுகமில்லாத மகன் ஒருவர் உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.
கணவனை இழந்த நாளில் இருந்து தனது குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் திடீரென முடக்கப்பட்டமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போதிலும் இணைய சேவை அல்லது தொலைபேசி இணைப்புகள் முழுமையாக தடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகள் நேற்றைய தினம் முடக்கப்பட்ட நிலையில் தற்போது நுழைவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வன்முறை செயற்பாடு தொடர்பில் தகவல் பெற்றுக்கொள்வதற்காகவும், அவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காகவும், உதவி சேவை நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இனவாதம் மற்றும் மதவாதமான முறையில் செயற்படுபவர்கள் தொடர்பில் தகவல் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்காக பாதுகாப்பு சபை பிரதானிகள் அலுவலகம் 24 மணித்தியாலங்களும் செயற்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி ஆதரவு சேவை வழங்கும் நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்காக வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இல்லக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தகவல் வழங்குமாறும், அவசியமான உடனடி உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறும் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொலைபேசி இலக்கம் – 0711261261
மின்னஞ்சல் முகவரி – helpdesk@dig.gov.lk
இந்திய கிரிக்கெட் அணிக்கு குல்தீப் என்ற தரகர் தான் பெண்களை ஏற்பாடு செய்வதாக ஷமி மனைவி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றம் சாட்டியிருந்தார்.
மட்டுமின்றி, ஷமி சில பெண்களுடன் ஆபாசமாக பேசியிருப்பது போல் சில ஸ்கிரீன்ஷொட்களையும்
தனது முகநூலில் அவரது மனைவி வெளியிட்டிருந்த நிலையில் தன் புகழை கெடுக்க பெரும் சதி நடப்பதாக ஷமி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குல்தீப் என்ற தரகர்தான் இந்திய அணிக்கு அதிகமாக பெண்களை ஏற்பாடு செய்கிறார்.
தென் ஆப்பிரிக்கா தொடருக்கு இந்திய அணி சென்ற போது கூட குல்தீப் உடனிருந்தார், அவரை என் கணவருடன் அடிக்கடி ஒன்றாக பார்த்திருக்கிறேன் என தற்போது கூறியுள்ளார்.
மேலும், மிகவும் கண்டிப்பான அமைப்பாக தன்னை காட்டிக் கொள்ளும் பிசிசிஐ-க்கு இந்த விடயம் அனைத்தும் தெரியும்.
ஆனால் இதையெல்லாம் பிசிசிஐ கண்டுகொள்வதுமில்லை, நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் தன்னை ஏமாற்றி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முமகது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான் தனது பேஸ்புக்கில் முகமது ஷமியின் உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார். இதில் ஷமி பல்வேறு பெண்கள் மற்றும் அவருடன் பேசிய அரட்டைகளை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் எனது பகிர்வுகள் பனிப்போர் முனைதான். ஷமியின் நடவடிக்கைகள் கொடூரமானவை அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஷாமியின் பிஎம்டபிள்யூ காரில் ஆண் கருத்தடை சாதனத்துடன் சேர்ந்து ஒரு தொலைபேசியைக் கண்டுபிடித்ததாக அவர் கூறி உள்ளார்.
மட்டுமின்றி ஷமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர்களது குடும்பத்தினர் அனைவரும் என்னை சித்திரவதை செய்தனர், அவரது தாயும் சகோதரரும் என்னை துஷ்பிரயோகம் செய்தார்கள்.
காலை 2-3 மணி வரை சித்திரவதை தொடர்கிறது, அவர்கள் என்னை கொல்ல விரும்புகிறார்கள் என ஜஹான் குற்றஞ்சாட்டினார்.
இலங்கைக்குள் நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் வெறுப்பும், அருவருப்பும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். சனத் ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை கூறியுள்ளார்.
நாட்டிற்குள் நடந்து வரும் வன்முறை சம்பவங்களை முழுமையாக கண்டிப்பதாகவும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இலங்கை மக்களை அனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமாகவும் அனைவருடன் ஐக்கியமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் சனத் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்குள் எவரும் மத மற்றும் இனம் காரணமாக அச்சுறுத்தலுக்கோ, பிரச்சினைகளுக்கோ ஆளாகக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு நாடு மற்றும் ஒரே இனம் எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் நடக்கும் இனவாத வன்முறைகள் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அன்பு, நம்பிக்கை மற்றும் அரவணைப்பு இலங்கையின் பொது பயன்படாக இருக்க வேண்டும். இனவாதம் மற்றும் வன்முறைகளுக்கு இடம் கிடையாது. வன்முறைகளை கைவிட்டு அனைவரும் வலுவாக ஒன்றிணைய வேண்டும் எனவும் சங்ககார கோரியுள்ளார்.
வவுனியாவில் அம்புலன்ஸ் சாரதிகள் இன்று (07.03.2018) பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கத்தினைச் சேர்ந்த சாரதிகள், வட மத்திய மாகாண சுகாதார திணைக்கள சாரதிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை கண்டித்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் அம்புலன்ஸ் சாரதிகளின் பணி பகிஸ்கரிப்புக்கு ஆதரவாக வவுனியா உட்பட வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தை சேர்ந்த 222 சாரதிகள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்வர்கள் அநுராதபுர மாவட்ட சுகாதார திணைக்களம் சார்ந்த 30 சாரதிகளுக்கு வேறு அரச திணைக்களங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதை தொடர்ந்து இடமாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும், அம்புலன்ஸ் மற்றும் சுகாதார திணைக்களம் சார்ந்த வாகனங்களின் சாரதிகளை நிரந்தரமாக சுகாதார சேவைக்குள் உள்வாங்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
அத்துடன் அநுராதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சுகாதார திணைக்களத்தை சார்ந்த 11 சங்கங்கள் அம்புலன்ஸ் சாரதிகளின் பணிபகிஸ்கரிப்பு ஆதரவு தெரிவித்துள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அம்புலன்ஸ் சாரதிகள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டாலும் அவசர சேவைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா நாட்டின் குடியுரிமை பெற்ற தமிழர் ஒருவர் கிளிநொச்சியில் தாக்கப்பட்டு படுககொலை செய்யப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று இரவு குறித்த நபர் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி – கனகபுரம், செல்வாநகரை பிறப்பிடமாகக் கொண்ட 71 வயது இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெற்றவர் எனவும், அவரது பிள்ளைகள் கனடாவில் வாழ்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் அவரது காணியில் அமைந்துள்ள வீட்டினைப் பார்வையிட வருவதாகவும், அவ்வாறு வந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னாரில் இருந்து வவுனியா கோமராசன் குளத்திற்கான பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில்,
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து இலங்கை அரசினால் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு அமுல் படுத்தப்பட்டுள்ள அவரச காலச் சட்டத்திற்கு அமைவாக இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவிருந்த வவுனியா கோமராசன்குளத்திற்கான பாதயாத்திரை மற்றும் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவிருந்த பாதயாத்திரை ஆகியன மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி. இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை அவர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09.03.2018) காலை 10 மணிக்கு கோமரசன்குளம் கல்வாரித் திருத்தலத்தில் திருச்சிலுவைப்பாதையும் திருப்பலியும் இடம்பெறும்.
மற்றும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.03.2018) அன்று காலை 8.30 மணிக்கு ஓலைத்தொடுவாய் கர்த்தர் திருத்தலத்தில் திருச்சிலுவைப்பாதையும் திருப்பலியும் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர கால தடைச்சட்டம் என்றால் என்ன என்பதை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும் .
இல்லையென்றால் மிகப் பெரிய தண்டனைகளுக்கோ, துப்பாக்கிப் பிரயோகத்திற்கோ இலக்காக நேரிடும். இந்த செய்தி அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை!
இலங்கை அரசாங்கத்தால் நேற்றில் இருந்து அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர காலத் தடைச் சட்டம் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அவசர கால தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் எங்கேயும் எதற்காகவும் சுடப்படலாம்.
இந்த அதிகாரத்தின் கீழ் முப்படையினரும் 24 மணி நேரமும் கடமையில் இருக்க வேண்டும். விடுமுறைகளை எடுக்க முடியாது.
இந்த சட்டத்தின் கீழ் நபரொருவர் எந்த நேரத்திலும் எவ்வித காரணமின்றியும் கைது செய்யப்படலாம். அத்துடன் சந்தேகத்தின் பேரில் எவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும்.
இரண்டு பேருக்கு அதிகமாக பொது இடங்களில் (தேசிய பாதுகாப்புக்கு பங்கம் இல்லாத அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய இடங்களில்) கூடுதல், திட்டம் தீட்டுதல், அதிக ஒலி எழுப்புதல் உட்பட ஆயுதங்களை உடமையில் (முகச் சவரம் செய்யும் அலகு, ஊசி என்பனவற்யைும்) வைத்திருத்தல் பாரிய குற்றமாகும்.
அத்துடன் தீவிரவாதத்திற்கு ஒத்துழைத்தல், நிதிசேகரித்தல் உட்பட பல விடயங்கள் இதற்குள் அடங்கும்.
சாதாரண சிவில் கடமைகளுக்கு கூட பொலிஸாரின் கைகளில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் ஒருவர் விசாரணைகள் எதுவும் இன்றி எவ்வளவு காலத்திற்கேனும் தடுத்துவைக்க முடியும்.
கைதுக்கு முன்னோ கைதுக்கு பின்னரோ விசாரணை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
கைது செய்யப்படும் போது யாராவது தப்பியோட முயன்றால் சுட்டுப்பிடிப்பதற்கும் அதிகாரம் உள்ளது.
அதேவேளை கைது செய்யப்படும் நபர் தேவையெற்படின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கும் உரிமை உண்டு.
விசாரணைக்காக புலனாய்வுப் பிரிவினரின் கைகளுக்கும் ஒப்படைப்பதற்கான சரத்துக்களும் உண்டு.
மேலும், அவசரகாலச்சட்டமானது, மக்களின் அல்லது வாகனங்களின் போக்குவரத்துக்களை தடை செய்யவும், பாதுகாப்பு பிரதேசங்களை உருவாக்கி, அங்கு வெளியிலிருந்து செல்பவர்களைத் தடுக்கவும் அனுமதி அளிக்கின்றது.
பாதுகாப்பு பிரிவினரின் கடமைக்குக் குந்தகம் விளைவிக்கும், குறிப்பிட்ட நபர்களை, குறிப்பிட்ட பகுதிக்கு வருவதற்கும், அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிப்பதற்கும், தடைசெய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது.
மக்கள் வாழும் பகுதிகளில், உடனாடியான பாதுகாப்புப் பிரதேசத்தை உருவாக்கி, அவர்களைப் பாதுகாக்கவும் காவற்துறையினர்க்கு அதிகாரம் அளிக்கின்றது.
யாரையும் அவர்களின் வீடுகளில் வைத்துக் கைது செய்வதற்கு அனுமதி வழங்க உள்துறை அமைச்சரிற்கு அதிகாரம் வழங்குகின்றது.
நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பவர்கள் எனச் சந்தேகப்படும் யாரையும் கைது செய்து விசாரைண செய்ய முடியும்.
விழா மண்டபங்களையோ அல்லது திரையங்குகளையோ அல்லது கூட்டம் நடக்கும் இடங்களையோ, உடனடியாக மூடுவதற்கும் அங்குள்ளவர்களை வெளியேற்றுவதற்கும் அனுமதி அளிக்கின்றது.
ஒரு கூட்டமோ, அல்லது சந்திப்புகளோ, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதனைத் தடை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தனியாரிடம் இருக்கும் ஆயுதங்களை, அனுமதி பெற்றிருந்தாலும் கூட, பறிமுதல் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் சர்வமத தலைவர்கள் மற்றும் முப்படையினர், பொலிஸாரை அழைத்து அரசாங்க அதிபர் அவசர சந்திப்பொன்றினை இன்று மேற்கொண்டுள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் 2 மணியளவில் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் ஆரம்பமான சந்திப்பில் சர்வ மத தலைவர்கள் கலந்துகொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.
வவுனியாவில் நேற்றைய தினம் மதினாநகர் பள்ளிவாசலுக்கு முன்பாக இனந்தெரியாதோரால் டயர் எரிக்கப்பட்ட சம்பவத்தினை அடுத்து அவசரமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் வவுனியா மாவட்டத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அனைவரும் ஒத்துழைக்க வெண்டும் என சர்வ மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பொலிஸ் அதிகாரிகள், இராணுவ, விமானப்படை, கடற்படை உயர் அதிகாரிகள் வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கண்டி – அக்குரனை மற்றும் கடுகஸ்தோட்டை பகுதியில் தொடர்ந்தும் வன்முறை தலைதூக்கியுள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, காலவரையறையற்ற வகையில் கண்டியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.