யாழ். சாவகச்சேரி பகுதியில் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி – சராசரி வடக்கை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய சின்னப்பு கெங்காதரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் ஏமாற்றப்பட்டதன் விளைவாக குறித்த நபர் நஞ்சருந்தி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு நாட்களின் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,
இவர் சொந்தமாக பாரவூர்தி ஒன்றை வைத்திருந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி மதவாச்சி பகுதியில் எரு ஏற்ற சென்ற போது பாரவூர்தி விபத்துக்குள்ளாகி உள்ளது.
பாரவூர்தியை திருத்தம் செய்வதற்கு உரிய பணத்தை இவர் காப்புறுதி செய்த நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் குறித்த நிறுவனம் அவருக்கு பணத்தை கொடுக்காது தொடர்ச்சியாக பின்னடித்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த இவர் கடந்த முதலாம் திகதி தனது தோட்டத்தில் இருந்த நஞ்சு மருந்தை குடித்துள்ளார்.
இதையடுத்து குறித்த நபர் உடனடியாக சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு சென்று பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் நேற்று உயிரிழந்துள்ளார். இந்த மரண விசாரணையை தென்மராட்சி பிரதேச மரண விசாரணை அதிகாரி கே. இளங்கீரன் மேற்கொண்டிருந்தார்.
சிலாபம் – இரணவில பிரதேசத்தில் 10 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த சிறுவனை “கிளி ஒன்றை பிடித்து தருவதாக கூறி ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்து சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்ததாக” அந்த சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அத்துடன், “கொலை செய்த அன்றே அந்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும்” சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.
சிலாபம் – இரணவில பகுதியில் சமிதுகமயை சேர்ந்த ருசித் நிர்மல் என்ற 10 வயதுடைய சிறுவன் கடந்த 25 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் 27 ஆம் திகதி வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் முல்லைதீவு – நாயாறு பகுதியில் மறைந்திருந்த நிலையில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது. குறித்த நபரிடம் மேலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு மாத்திரம் 418 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
அதேபோல் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் மார்ச் 02 ஆம் திகதிவரை 36 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவ்வாறாக தற்கொலைகள் அதிகரித்து செல்லுமானால் எமது சமூகம் வினைத்திறனில்லாத சமூகமாக நாளடைவில் மாறிவிடும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த வாரத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற தற்கொலைகள் தொடர்பாகவும் தற்கொலைகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விசேடமாக எமது செய்திச்சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன்..
கடந்த 2017 ஆம் ஆண்டு வவுனியாவில் மாத்திரம் 418 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதேபோல் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் மார்ச் 02 ஆம் திகதிவரை 36 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
எமது சமூகத்தில் 12 வயது மற்றும் 45 வயதிற்கு இடைப்பட்ட நபர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தற்கொலைகள் நாளாந்தம் அதிகரித்து செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது.
தற்கொலைகள் குறித்து பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். சமூதாயத்தின் கட்டுக்கோப்புக்கள் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை இந்த தற்கொலைகள் எடுத்துக் காட்டுகிறது.
தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆடம்பரப்பொருட்கள் வருவதற்கு முன்னைய காலப்பகுதியில் தற்கொலை என்பது அரிதாகவே காணப்பட்டது. இந்த விகிதாசாரத்தில் எப்பொழுதும் தற்கொலைகள் அதிகரித்து காணப்படவில்லை.
போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மக்கள் அதிகமாக மன அழுத்தத்திற்கு முகம் கொடுப்பது காரணமாகவும் இந்த தற்கொலைகள் அதிகரித்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.
அதே போல் இந்த சமூகத்தில் உள்ளவர்கள் எந்த அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதும் தங்கள் சுக துக்கங்களை குடும்பத்தினருக்கு சொல்ல முடியாத நிலையிலும் அதே போல் நண்பர்கள் உறவினருக்கு சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்த தற்கொலைகள் எடுத்துக்காட்டுகிறது. எனவே சமூகத்திலிருக்கிறவர்கள் தனித்தீவுகளாக இருப்பதை இந்த தற்கொலையின் வீதம் எடுத்துக்காட்டுகிறது.
பல்வேறுபட்ட அணியினரும் தற்கொலைக்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும். முக்கியமாக இளம் பராயத்தினர் சரியாக நல்வழிப்படுத்தப்பட வேண்டும். சினிமாக்களில் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் காட்டப்படும் தற்கொலைக்காட்சிகளும் ஒரு காரணமாக இருக்கிறது. அவ்வாறான காட்சிகள் மனதில் ஆளமாக பதிந்துவிடும்.
ஒரு நபருக்கு தன்னால் பிரச்சனைகளை கையாள முடியாத சந்தர்ப்பம் ஏற்படும் போது அவர் இலகுவாக இவ்வாறான முடிவுகளை எடுக்க தூண்டப்படுகிறார். எனவே ஒவ்வொருவரும் தங்களுக்கு பக்கத்திலுள்ளவர்களின் பிரச்சனைகளை கருத்தில் எடுத்து அவர்களுக்கு எந்தவிதத்தில் உதவலாம் என பழகினீர்கள் என்றால் இந்த தற்கொலைகளை குறைத்துக்கொள்ளலாம்.
பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டு கதையுங்கள், அவர்களுடன் நெருங்கி பழகுங்கள் சிலபிரச்சனைகளை உங்களிடம் பிள்ளைகள் சொல்ல முடியாமல் இருப்பார்கள். நண்பர்களாக நீங்கள் பழகினால் மாத்திரமே தங்கள் பிரச்சனைகளை அவர்கள் உங்களுக்குமுழுவதுமாக சொல்ல முன்வருவார்கள். பிள்ளைகளின் கருத்துக்களை கேட்காவிட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட ஒரு சமுதாயமாக மாறும் நிலையில் அவர்கள் தற்கொலைகளை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
அதேபோல் அதிகளவான மதுப்பாவனை, அதிகளவான போதைவஸ்து பாவனை எமது சமூகத்தில் அதிகமாக காணப்படுகின்றது. அதுவும் தற்கொலைகளை கூட்டுவதற்கு ஒரு காரணியாக கண்டறியப்பட்டுள்ளது. மது மற்றும் போதைவஸ்துக்களை பயன்படுத்தும் இளம் பராயத்தினர் அவைகளை தவிர்க்க முயல வேண்டும்.
வவுனியா பொது வைத்தியசாலையில் தற்கொலைகளுக்கு எதிராக இரண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது ஒன்று வைத்தியசாலையின் உளவள வைத்திய நிபுணரின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது. மன அழுத்தத்தின் காரணமாக வவுனியா வைத்தியசாக்கு வந்து மருந்து எடுத்துச் சென்றவர்களின் வீடுகளிற்கு சென்று அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்வுகளை வழங்கி வருகிறார்கள்.
அதே போல் வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்களுக்காக தற்கொலைக்கு எதிரான கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். அதில் போதைவஸ்து பாவனை மற்றும் மது பாவனையை எவ்வாறு குறைக்க
முடியும். சமூகச் சீரழிவுகளிலிருந்து பாடசாலை சமூகத்தை எப்படி பாதுகாக்க முடியும் என்றவகையில் ஒவ்வொரு வாரமும் கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்.
அதேபோல் சமூக சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் , மாவட்ட செயலகம் மற்றும் வலயக்கல்வி பனிமனை ஊடாக பல மட்டங்களில் தற்கெலைகளை தடுப்பதற்குரிய நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.
அத்துடன் ஆசிரியர் சமூகமானது பாடசாலை மாணவர்களின் பிரச்சனைகளை கருத்தில் எடுக்க வேண்டும். மாணவர்களை அழுத்தத்திற்கு உட்படுத்தாமல் அவர்களை நல்ல விதமாக கையாள வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பாக இருக்கிறது.
பாடசாலை மாணவர்களை உங்கள் சொந்தப் பிள்ளைகள் போல் கவனித்து அவர்களை வழிநடத்த வேண்டும். ஏனென்றால் இவ்வாறாக தற்கொலைகள் அதிகரித்து செல்லுமானால் எமது சமூகம் வினைத்திறனில்லாத சமூகமாக நாளடைவில் மாறிவிடும் எனவே அனைத்து சமூகத்தினரும் இணைந்து தற்கொலைகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இலங்கை முழுவதும் மின்சார தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சி, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையினால் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மேற்கொள்ளாமை காரணமாக இந்த நிலைமை ஏற்படவுள்ளது.
இந்த வருடம் அல்லது அடுத்த வருடத்தில் பிரதான மின்சார கட்டமைப்பிற்கு 1000 மெகாவோட் மின்சார சக்தியை இணைக்கும் நடவடிக்கை 2020ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டுள்ளது.
இவ்வாறான நெருக்கடி நிலை காரணமாக தனியார் நிறுவனங்களிடம் அவசர மின்சார கொள்வனவு செய்ய நேரிடும் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டமை இந்த நிலைமைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருடத்திற்கு 200 மெகாவோட் மின்சார தேவை காணப்படுகின்ற நிலையில் தற்போது 500 மெகாவோட் மின்சார பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொறியியலாளர் சங்கம் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடுகள் காணப்படுவதாகவும், இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு தீர்வு வழங்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
தேசிய அடையாள அட்டை விண்ணப்பிப்பதற்கான வயதெல்லையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 15 வயது முழுமையடைந்தவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் இது செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் 16 வயது முழுமையடைந்த நாட்டு பிரஜைகளுக்கே அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.
அவ்வாது வயது முழுமையடையாத மாணவர்கள் பல்வேறு சிக்கலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதனை கருத்தில் கொண்டு இந்த வயது எல்லை குறைக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் முறையில் எவ்வித மாற்றமும் எற்படாதென தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்கள் அடையாள அட்டை விண்ணப்பிப்பதற்காக பிறப்பு சான்றிதழ் மற்றும் தெளிவான புகைப்படம் சமர்ப்பித்தால் போதுமானதென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்காக பிரதேச செயலகத்தினால் உறுதி செய்யப்பட்ட அல்லது பதிவாளர் ஜெனரல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பிறப்பு சான்றிதழின் நகல் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இதேவேளை, புதிய அடையாள அட்டையில், முன்னர் பயன்படுத்திய 9 இலக்கங்களை கொண்ட அடையாள அட்டையின் இறுதி ஆங்கில எழுத்து நீக்கப்பட்டு 12 இலக்கங்களை கொண்ட அடையாள அட்டை விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வங்கிகளின் வட்டி வீதம் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கவுள்ளதாக வங்கிகளின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிணை முறி வட்டி அதிகரிப்பு, மத்திய வங்கியின் பண பெறுமதி குறைவடைந்தமை காரணமாக வட்டி வீதத்தை அதிகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு ஒதுக்கப்பட்டிருந்த பணத்தை விடவும் 900 மில்லியன் டொலர் அதிகமான செலவிடப்பட்டமை மற்றும் தங்க இறக்குமதி நிறுவனங்களுக்கு 500 மில்லியன் டொலர் அதிகரித்தமை காரணமாக அந்நிய செலாவணி பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு இறக்குமதி செலவினம் ஏனைய வருடத்துடன் ஒப்பிடும் 2 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.
இந்த அனைத்து விடயங்கள் காரணமாக வங்கி வட்டி எதிர்வரும் காலங்களில் அதிகரிக்க கூடும் என வங்கி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிரிவுல்ல – அதுருவல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
லொறி ஒன்று முறையற்ற விதத்தில் முன்னொக்கி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த விபத்தில் மோட்டர் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த பெண், ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, விபத்தில் படுகாயமடைந்த மோட்டர் சைக்கிள் ஓட்டுனரான அந்த பெண்ணின் மகன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
லொறி ஓட்டுனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முன்னிலைப்பத்தப்பட்ட பின்னர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் டீ வியாபாரி ஒருவர், தனது டீக்கடை மூலம் 12 லட்சம் மாத வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ளது யாவ்லே டீ ஹவுஸ். நகரின் பிரபலமான டீக்கடையான இது, மூன்று கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த டீக்கடையின் மாத வருமானம் 12 லட்சம் ஆகும். இது குறித்து, டீக்கடையின் உரிமையாளர் நவ்நாத் யாவ்லே கூறுகையில், டீ வியாபாரமும் வேலை வாய்ப்பு தான். இந்த தொழில் வேகமாக வளருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த டீக்கடைக்கு மூன்று கிளைகள் உள்ளது. ஒவ்வொரு கடையிலும் 12 பேர் வேலை பார்க்கிறார்கள். தினமும் 3 ஆயிரம், 4 ஆயிரம் என டீ விற்கிறது. இதனால், நிறைய பேருக்கு வேலை கொடுக்க முடிந்தது.
மேலும், நல்ல சம்பாத்தியமும் கிடைக்கிறது. விரைவில் இந்த கடையை, சர்வதேச Brand ஆக மாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திருமணமான சில மாதங்களில் மனைவி வீட்டார் பொலிசில் புகார் கொடுத்ததால். கணவர் அவர் தந்தையுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்தவர் இஸ்ரவேல் (55). இவர் மகன் கீர்த்தி ஆசிர் (29). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக உள்ளார்.
ஆசீருக்கும் சுகன்யா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
தற்போது சுகன்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்றும் வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பான நிலையில் இதுகுறித்து சுகன்யா குடும்பத்தினர் பொலிசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் பேராசிரியர் பணி நிரந்தரம் தொடர்பாக கீர்த்தி ஆசீருக்கு கல்லூரியில் நாளை நேர்முகத்தெரிவு நடப்பதாக இருந்தது.
இதுதொடர்பாக நேற்று ஆசீர், இஸ்ரவேலுடன் கல்லூரிக்கு சென்று நிர்வாகத்தினரிடம் தன் மீது மனைவி குடும்பத்தினர் அளித்துள்ள பொலிஸ் புகார் குறித்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் பொலிசில் சென்று பிரச்னையை சுமூகமாக முடித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
மனைவி குடும்பத்தினர் புகாரால் அவமானம் அடைந்ததோடு, தனக்கு பேராசிரியர் பணி நிரந்தரம் கிடைக்காமல் போய் விடுமென கருதிய ஆசீர், தந்தை இஸ்ரவேலுடன் விஷம் குடித்து கல்லூரி வாசலில் மயங்கினார்.
பின்னர் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிலாபம் – இரணவில பகுதியில் சிறுவன் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அண்மை நாட்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
சமிதுகமயை சேர்ந்த ருசித் நிர்மல் என்ற 10 வயதுடைய சிறுவன் கடந்த 25 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
இதையடுத்து குறித்த சிறுவன் 27 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிறுவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாயாறு பகுதியில் வைத்து பொன்சேகா எனும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
கேகாலை – புவக்தெனிய பகுதியில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் 42 வயதுடைய பிக்குவே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,
தனது வீட்டில் குறித்த பெண் குளித்துக்கொண்டிருந்த போது, அந்த வீட்டுக்கு அருகிலுள்ள விகாரையொன்றைச் சேர்ந்த பிக்கு அந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அதன்போது, குளித்துக்கொண்டிருந்த பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
இதையடுத்து குறித்த பெண் பிக்குவிடமிருந்து விடுபட்டு அது தொடர்பாக வீட்டாருக்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.