சாதித்த மாணவிக்கு கௌரவிப்பு : நேரில் செல்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!

ஆசிய நாடுகளுக்கிடையிலான பாடசாலை மட்ட பளுதூக்கல் போட்டியில் 1ம் இடம் பிடி த்து முல்லைத்தீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவி தேவராசா தர்ஷிகா மற்றும் அவருக்கு பயிற்சியளித்த ஆசிரியர் பத்மநாதன் பிரதீபன் ஆகியோர் இன்று கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த கௌரவிப்பு நிகழ்வு இன்று மாலை 3 மணிக்கு முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தில் நடைபெறவுள்ளது.

செல்வபுரம் கிராம கலைமகள் விளையாட்டு கழகம் மற்றும் செல்வபுரம் கிராம கமக்கார அமைப்பு ஆகியன இணைந்து இந்த கௌரவிப்பு நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளனர்.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கலந்து கொண்டு மாணவி தேவராசா தர்ஷிகாவை கௌரவிக்கவுள்ளார்.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு இராணுவத்தினரின் நல்லிணக்க பொங்கல்!!

 
இந்துக்களின் விசேட தினமான சிவராத்திரியை முன்னிட்டு இராணுவத்தினரால் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட பொங்கல் இடம்பெற்று பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை குறித்த பொங்கல் நிகழ்வும் விசேட பூஜை வழிபாடும் இடம்பெற்றது.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பொங்கல் செய்து விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இதன்போது வன்னிப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர் எனப் பலரும் சீருடையுடன் கலந்து கொண்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வழிபாடுகளை மேற்கொண்டு பொங்கல் உண்டு சென்றனர்.

இதில் ஆலயக் குருக்கள், ஆலய நிர்வாகத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நான் அவ்வளவு பெரிய ரௌடி இல்லை : என்னை விட்டு விடுங்கள் : கண்ணீர் விட்டு கதறும் ரௌடி!!

என்கவுண்டரில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு, நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை, நான் ஒரு சர்க்கரை நோயாளி என்று கண்ணீர் விட்டு கதறிய வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான பினு கடந்த 6ம் திகதி தன்னுடைய பிறந்த நாளை மாங்காடு மலையம்பாக்கத்தில் பல ரவுடிகளுடன் கொண்டாடினான்.

இதுகுறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், அப்பகுதியை சுற்றி வளைத்த பொலிசார் 75 ரவுடிகளை கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது பினு தப்பியோடிவிட்டதால், அவன் உட்பட 100 பேரை பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நோக்கமே பிரபல ரவுடி ராதா கிருஷ்ணனை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டதாகவும், அதனால் சமீபகாலமாக சென்னையில் ஓய்ந்திருந்த ரவுடிகள் மோதல் தற்போது மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

அதைத் தொடர்ந்து தப்பியோடிய பினு மற்றும் கூட்டாளிகளை தேவைப்பட்டால் சுட்டு பிடிக்கவும் பொலிசார் திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று இரவு ரவுடி பினு பொலிசாரிடம் சரணடைந்தான்.

இந்நிலையில் சரணடைந்த பின் அவன் பேசிய தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவன் நான் பெரிய ரௌடி இல்லை, சர்க்கரை நோயாளி மற்றவர்களின் வேண்டுகோளுக்கினங்கவே பிறந்த நாள் கொண்டாட சென்னை வந்ததாக கண்ணீர் விட்டு கூறியுள்ளான்.

லட்சுமி ராமகிருஷ்ணனை அதிர வைத்த இளைஞன் : பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர், பெண்ணின் மொபைல் போனை வாங்காமலே அந்த பெண்ணின் மொபைல் போனில் இருக்கும் அனைத்து விடயங்களையும் தெரிந்து கொள்ளும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல திரைப்பட நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

அந்த நிகழ்ச்சியால் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியால் லட்சுமி ராமகிருஷ்ணன் பல்வேறு பெண்களின் மனதில் நீக்க முடியாத ஹீரோவாக மாறிவிட்டார். டுவிட்டரில் அவருக்கு பலரும் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

குறித்த நிகழ்ச்சியில் ஒருபுறம் மூன்று இளைஞர்களும், மறுபுறம் இரண்டு பெண்களும் அமர்ந்துள்ளனர். அப்போது அந்த மூன்று இளைஞர்களில் ஒருவர், குறித்த பெண்ணின் மொபைல் போனில் இருக்கும் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கிறார்.

இதைக்கண்ட அப்பெண் சற்று அதிர்ச்சியடைகிறார், தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வடகொரியா வேடம் போடுகின்றது : 115 பேரைக் கொன்ற பெண் உளவாளியின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

ஒலிம்பிக்கில் பங்கேற்று பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்பதே வடகொரியாவின் நோக்கமாக இருக்கிறது என 115 பேரைக் கொன்ற பெண் உளவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பியாங்சங் நகரில் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது, இதன் தொடக்க விழாவில் வடகொரியா ஜனாதிபதியின் தங்கை கலந்து கொண்டார்.

இந்நிலையில் 1988ம் ஆண்டு நடந்த தென்கொரியாவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக்ஸை சீர்குலைக்க வடகொரியா சதித்திட்டம் குறித்து தெரிந்து கொள்ளலாம், அன்றைய நாளில் நடந்தது என்ன?

1987 ஆம் ஆண்டு இரண்டு வட கொரிய உளவாளிகள் தென் கொரிய விமானம் ஒன்றில் ஏறினர், அந்த விமானத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைப் பொருத்திய அவர்கள் அபுதாபியில் இறங்கிவிட்டனர். மீண்டும் புறப்பட்ட தென் கொரிய விமானம் அந்தமான் பகுதியில் பறந்து கொண்டிருக்கும்போது வெடித்துச் சிதறியது, அதில் பயணம் செய்த 115 பேரும் கோரமாக பலியானர்கள்.

உளவாளிகள் இருவரும் பஹ்ரைனில் பிடிபட்டார்கள், பிடிபட்டதும் சயனைட் அருந்தியதில் ஆண் உளவாளி அங்கேயே உயிரிழந்தார். அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாள்.

பின்னர் தென் கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரை விசாரித்த நீதிமன்றம் அவளுக்கு மரணதண்டனை வழங்கியது. தான் எவ்விதம் வட கொரிய அதிபரின் மகனால் மூளைச் சலவை செய்ய்ப்பட்டார் என்பதை அந்தப் பெண் விவரித்தார். தன்னால் உயிரிழந்த குடும்பங்களிடம் மன்னிப்பும் கோரினார்.

தென் கொரிய அதிபர், இந்த சம்பவத்துக்குக் காரணம் அவர் அல்ல, அவரை இயக்கிய வட கொரியாதான் காரணம் என்று கூறி அவரை மன்னித்தார்.

பின்னர் தன்னை விசாரணை செய்த அதிகாரியையே மணந்து கொண்டு அவள் ஒரு மறைவிடத்தில் வசிக்கிறார். இன்னும் தான் குற்ற உணர்வோடேயே வாழ்வதாகவும் தான் செய்த கொலைகளுக்காக பரிகாரம் தேட வேண்டும் என்றும் கூறும் அவர், தென் கொரிய ஒலிம்பிக்கில் பங்கு பெறுவது குறித்து பேச வட கொரிய தலைவர்கள் தென் கொரியாவுக்கு செல்வதைக் கண்டிருக்கிறார்.

இது பொய், ஏமாற்றுவேலை என்று கூறும் அவ ர், தன் அணு ஆயுத திட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர வட கொரியாவுக்கு வேறெந்த நோக்கமும் கிடையாது என்கிறார்.

பேச்சு வார்த்தை மூலமோ மென்மையான சொற்களாலோ வட கொரியாவை மாற்ற முடியாது என்று கூறும் அவர், அழுத்தம் கொடுப்பதன் மூலமாக மட்டுமே அதை வழிக்கு கொண்டு வர முடியும் என்று தான் நம்புவதாகக் கூறுகிறார்.

வட கொரியா ஒலிம்பிக்கை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த விரும்புகிறது அவ்வளவுதான் என்னும் அந்த உளவாளி தென் கொரியாவுடன் கை கோர்ப்பதன்மூலம் தன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளிலிருந்து வட கொரியா தப்பிக்க முயற்சி செய்கிறது. அனைத்து நாடுகளும் தன்னைத் ஒதுக்கி வைத்துள்ள தனிமைப்படுத்துவதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக அது முயற்சிக்கிறது என்கிறார் அவர்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல, வட கொரியாவில் பயிற்றுவிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டு 115 பேரின் சாவுக்குக் காரணமாக இருந்த அவர் சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும். சரி இந்த வெடிகுண்டு வெடிப்பால் வட கொரியாவுக்கு என்ன லாபம்? அது மற்ற நாடுகளை அச்சுறுத்த விரும்பியது. அந்த அச்சுறுத்தல் மூலம் அப்போதுதான் வெளி உலகோடு நல்லுறவு வைத்துக்கொள்ள விரும்பிய தென் கொரியாவுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்வதை அது தடுக்க விரும்பியது. ஒலிம்பிக்கின் மூலம் தென் கொரியாவுக்கு ஏற்பட இருந்த புகழை அது தடுக்க நினைத்தது என்று காரணங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.

உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு : அவரே கலந்து கொள்ளும் ஆச்சரியம்!!

 
பிரித்தானியாவில் மூதாட்டி ஒருவர் ஆரோக்கியத்துடன் உயிரோடு இருக்கும் நிலையில் தனது சொந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவுள்ளார்.

டெர்பி நகரை சேர்ந்தவர் எத்தில் லெதர் (93), இவர் கடந்த 1925ல் Surrey-வில் பிறந்த நிலையில் பின்னர் தனது பெற்றோருடன் டெர்பி நகருக்கு குடிபெயர்ந்துள்ளார்.

அவருக்கு கடந்த 1943ல் முதல் திருமணம் நடந்தது. பின்னர் முதல் கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் இரண்டாவது கணவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில் உயிரோடு இருக்கும் லெதருக்கு வரும் 23ம் திகதி இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில் அதில் அவரும் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த ஐடியாவை லெதரின் மகள் பவுலின் நீல் (73) விளையாட்டாக சில வாரங்களுக்கு முன்னர் கூறிய நிலையில் அதை நடத்த வேண்டும் என லெதர் கூறியுள்ளார். லெதர் கூறுகையில், என் குடும்பத்தினர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை. அவர்கள் எனக்கு பிடித்த பாடலை நான் இறந்தவுடன் இறுதிச்சடங்கில் பாடவிருப்பதாக கூறினார்கள்.

இப்போது நானே அந்த பாடலை இறுதிச்சடங்கின் போது பாடவுள்ளேன் என கூறியுள்ளார். இந்நிகழ்வில் லெதரின் எட்டு சகோதர, சகோதரிகள், பிள்ளைகள், பேரன்கள், கொள்ளு பேரன்கள் என 30-க்கும் அதிகமானோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

13 வயது சிறுமியை உயிருடன் கொளுத்திய சிறுவன் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்திய மாநிலம் மத்தியபிரதேசத்தில் வன்புணர்வுக்கு மறுப்பு தெரிவித்த ஆத்திரத்தில் 13 வயது சிறுமியை சிறுவன் ஒருவன் உயிருடன் கொளுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெற்றோர் வேலைக்கு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பக்கத்துத் தெருவை சேர்ந்த 16 வயதான அந்தச் சிறுவன் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளான்.

ஆனால் இதற்கு அந்தப் சிறுமி சம்மதிக்காமல் சிறுவனை எதிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட சிறுவன் குறித்த சிறுமியை பலமாக தாக்கியுள்ளான். பின்னர் அந்த சிறுமி மீது மண்ணெண்ணெய் எடுத்து வந்து ஊற்றியுள்ளான். அதேபோல் அங்கேயே கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

திடீரென்று தீ பற்றி எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே புகுந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாயமான சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். உடல் முழுவதும் வெந்த நிலையில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் சிறுமி சிகிச்சைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிர் தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்!!

அமெரிக்காவில் உயிர் தோழியை பள்ளி ஆசிரியை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அவர் பள்ளியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ப்ளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் உள்ள செண்ட் பீட்டர் கத்தோலிக பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்பவர் ஜோசிலின் மோர்பி. ஓரின சேர்க்கையாளரான இவர் தனது உயிர் தோழி நடாஷாவை காதலித்து வந்த நிலையில் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பள்ளி நிர்வாகம் ஜோசிலினை தற்போது பணிநீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து ஜோஸ்லின் கூறுகையில், என் காதலியை திருமணம் செய்து கொண்டதால் நான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். அவர்கள் பார்வையில் நான் செய்தது தவறாக உள்ளது, ஆனாலும் ஆசிரியை தொழிலை தான் வருங்காலத்திலும் செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

செண்ட் பீட்ட பள்ளி நிர்வாக செய்தி தொடர்பாளர் கூறுகையில், பணிக்கு சேரும் முன்னரே எல்லா ஆசிரியைகளிடமும் கத்தோலிக தேவாலய விதிமுறைப்படி செயல்பட வேண்டும் என ஒப்பந்தம் போட்டுள்ளோம். ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஜோசிலின் மீறியதால் அவரை வேறு வழியின்றி பணிநீக்கம் செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

ஜோசிலின் திருமணத்தில் கலந்து கொண்ட சக ஆசிரியைகளுக்கு கடும் எச்சரிக்கையை பள்ளி நிர்வாகம் விடுத்துள்ளது.

லண்டனில் தமிழருக்கு கிடைத்த கெளரவம்!!

பிரித்தானியாவில் அமைத்திக்கான தூதுவர் விருதை தமிழர் ஒருவருக்கு வழங்கி அரசு சாரா அமைப்பு கெளரவித்துள்ளது.

அப்துல் பாசித் என்ற தமிழர் கடந்த 15 அண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவில் குடியேறியுள்ளார். தற்போது குடியுரிமை பெற்றிருக்கும் அப்துல் முக்கிய பணிகள் பலவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

முக்கியமாக அமைதி சார்ந்த பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார். இலங்கையில் போர் நடந்த சமயத்திலும், அதற்கு பின்பாகவும் அப்துல் பல்வேறு அமைதி நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார். அதேபோல மியான்மர் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பிரச்சனைக்காக களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார்.

அப்துலின் செயலை பாராட்டும் வகையில் லண்டனில் இருக்கும் சர்வதேச அமைதிக்கான கூட்டமைப்பு அவருக்கு அமைத்திக்கான தூதுவர் விருதை வழங்கி கெளரவித்துள்ளது

உலகின் முக்கிய நபர்கள் மட்டுமே இவ்விருதை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய மகன் : அதிர்ச்சி சம்பவம்!!

 
அரசு வேலைக்காக கூலிப்படையினருடன் சேர்ந்து மகனே தந்தையை கொலை செய்ய திட்டமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சென்னை பூந்தமல்லி பகுதியில் வசித்து வருபவர்கள் சுதாகர், விவேக். விவேக்கின் அப்பா நசரதப்பேட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அம்மா, சென்னை குற்றப்பிரிவு பொலிசில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பாதியில் படிப்பை நிறுத்திய விவேக், பல கம்பெனிகளில் பணியாற்றி வந்த நிலையில் மூன்று லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது, கடனை அடைக்க தன் நண்பரான சுதாகரிடம் ஐடியா கேட்டுள்ளார். சுதாகர், சென்னை மாநகராட்சியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தனக்கு அறிமுகமான ஜோஸ், செல்வக்குமார் என இரண்டு ரவுடிகளின் உதவியோடு வழிப்பறியில் ஈடுபட்டு கடனை அடைத்துவிடலாம் என விவேக்கிற்கு தைரியம் கொடுத்துள்ளார் சுதாகர்.

இதுகுறித்து பிடிபட்ட ரவுடிகள் ஜோஸ், செல்வக்குமார் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, விவேக்கின் அப்பா சரிவர குடும்பத்தை கவனிக்கவில்லை, நிரந்தர வேலை இல்லாமல் விவேக் கஷ்டபட்டு கொண்டிருக்கிறார். விவேக்கின் தந்தையை தீர்த்துக் கட்டினால் அந்த வேலையை உனக்கு வாங்கிவிடலாம் என சுதாகர் கூறியதை ஏற்று விவேக்கும் கொலைக்கு சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில் கொலை திட்டம் தீட்டியதாக ரவுடிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இதனை மறுத்த பொலிசார், கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் வழிப்பறி செய்ய திட்டம் தீட்டியதாக ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிச்சயதார்த்தம் முடிந்த மகளை கொலை செய்த தாய் : திடுக்கிடும் காரணம்!!

 
இந்தியாவில் நிச்சயதார்த்தம் முடிந்த மகளை சொத்துக்காக மாற்றாந்தாய் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மீனு. இவரின் கணவர் அஜித் சிங் கடந்த 2016-ல் உயிரிழந்துவிட்டார். அஜித்சிங்குக்கு மீனு இரண்டாவது மனைவியாவார். இந்நிலையில் அவரின் முதல் மனைவிக்கு பிறந்த பிராப்தி (24) என்ற பெண்ணுடன் மீனு ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

அஜித் சிங்குக்கு ஒரே பெண் என்பதால் அவரின் வீடு உட்பட சொத்துக்கள் அனைத்தும் பிராப்தி பெயரில் உள்ளது.

இந்நிலையில் பிராப்திக்கும், உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் வருண் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கவிருந்தது.

எல்லா சொத்துக்களும் பிராப்தி பெயரில் உள்ளதால் தனக்கு எதுவுமே கிடைக்காது என பயந்து போன மீனு, அவரை சொத்துக்காக கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 7ம் திகதி இரவு படுக்கையறையில் பிராப்தி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு கையில் செங்கலுடன் சென்ற மீனு, அவரை தலையில் செங்கலால் பலமாக தாக்கி கொலை செய்தார். பின்னர் பிராப்தி சடலத்தை இரு துண்டுகளாக வெட்டி ஒரு பையில் போட்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளார்.

அடுத்த நாள் வருண் பிராப்தியை போனில் தொடர்பு கொண்ட போது அவர் போன் சுவிச் ஓப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பிராப்தி வீட்டுக்கு வந்த வருண் அவர் குறித்து மீனுவிடம் விசாரித்துள்ளார்.

அதற்கு, பிராப்தி டெல்லிக்கு வேலை நேர்முக தெரிவுக்காக போயிருப்பதாக மீனு கூறியுள்ளார். ஆனால் மீனு மீது வருணுக்கு சந்தேகம் வந்து அவரிடம் மிரட்டி விசாரித்ததில் நடந்த அனைத்தையும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட, சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பிராப்தி சடலத்தை கைப்பற்றி மீனுவை கைது செய்துள்ளனர்.

இறந்தது தெரியாமலேயே தாயுடன் உறங்கிய  மகன் : மனதை உருக்கும் சம்பவம்!!

ஐதராபாத்தில் தாய் இறந்தது தெரியாமல் அவர்களுடனே மகன் உறங்கிய சம்பவம் நடந்துள்ளது.

ஐதராபாத்தின் கடேடன் பகுதியை சேர்ந்தவர் சமீனா சுல்தானா (வயது 36), இவருக்கு 6 வயதில் சோயிப் என்ற மகன் உள்ள நிலையில், கணவர் பிரிந்து சென்று விட்டார்.

இதனையடுத்து மகனுடன் தனியாக வசித்து வந்த நிலையில், சமீனாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மகன் சோயிப்புடன் ஓஸ்மானியா அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

இதனை அறியாத மகன் தாயின் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளான், இந்நிலையில் சில மணிநேரம் கழித்து மருத்துவர்கள் வந்து பரிசோதித்த போது தான் சமீனா இறந்தது தெரியவந்தது.

தாயை விட்டு பிரிய மனமில்லாமல் சோயிப் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது, இதனை தொடர்ந்து உறவினர்களிடம் சமீனாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

வவுனியாவில் 8 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் இன்று(13.02) காலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட 8 கிலோ கேரள கஞ்சாவினை வவுனியா மத்திய நகரில் வைத்து கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழிநடத்தலில் வவுனியா வலய பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னண்டோவின் ஆலோசனையில் வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லவராச்சியின் கண்காணிப்பில்,

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.சுபசிங்க மற்றும் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழவினரால் யாழப்பாணம் பகுதியிலிருந்து இன்று காலை 10.20 மணியளவில் கொழும்பிற்கு பொதி செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 8 கிலோ கேரளா கஞ்சாவினை வவுனியா நகர மத்திய நிலையத்தில் வைத்து கொழும்பு வசிப்பிடமாக் கொண்ட 54 வயதுடைய நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எமக்கு வேண்டும் எனப் போராட்டம்!!

 
வவுனியாவில் இன்று 355வது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் சர்வதேசத்தின் வருகையே எமது உறவுகளின் வருகையை உறுதிப்படுத்தும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எமக்கு வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து தமது பிள்ளைகளுடன் ஒன்றிணைந்து இப்போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேசம் அமெரிக்க, ஜரோப்பிய ஒன்றியத்தின் வருகையை வலியுறுத்தி இன்றை போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12.30 மணியளவில் போராட்ட களத்தில் ஒன்றிணைந்த காணாமற்போனோரின் உறவுகள் தமது போராட்டத்தினை மேற்கொண்டதுடன் தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் தனது தந்தை, சகோதரர்கள், சகோதரிகளை மீட்டத்தருமாறும் அதுவரையில் தமது போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழில் குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!!

யாழ். சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் பெண்ணொருவர் பாதுகாப்பு கோரி தனது குழந்தைகளுடன் வைத்தியசாலையில் தஞ்சமடைந்துள்ளார்.

35 வயதான சாவகச்சேரி, கிராம்புவிலைச் சேர்ந்த குறித்த குடும்பப் பெண் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையை அடைந்துள்ளார்.

இதன்போது அந்த குடும்ப பெண், தனது கணவன் தன்னை மோசமாக தாக்கியதுடன், வாளாலும் தலையில் வெட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே தாக்கப்பட்ட தனக்கும், குழந்தைகளுக்கும் கணவனால் ஆபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

சிவராத்திரி தினத்தில் மன்னாரில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதம் : மக்கள் கவலை!!

 
மன்னாரில் இரு வணக்கஸ்தலங்களில் இருந்த சிலைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதுடன், ஒரு ஆலயத்தில் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இந்திய இராணுவத்தால் அமைக்கப்பட்ட லிங்கேஸ்வரர் தேவஸ்தானத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.

மன்னார் – தாழ்வுபாடு பிரதன வீதி, கீரி சந்தியில் கடந்த 18 வருடங்களாக காணப்பட்ட ஆலையடி பிள்ளையார் சிலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னார் – தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக பல தடவைகள் அடையாளம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மகா சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகி இருந்த நிலையில் குறித்த சம்பவமானது அப்பகுதி மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.