இலங்கையில் பாரிய எறும்புண்ணி கண்டுபிடிப்பு!!

 
இலங்கையில் சுமார் 15 கிலோ கிராம் நிறையுடைய எறும்புண்ணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பமுனுவ, தெலிவெவ பிரதேசத்தை சேர்ந்த விக்ரமசிங்க என்பவரின் வீட்டில் எறும்புண்ணி சிக்கியுள்ளது.

மிருகங்கள் அல்லது மனிதர்களினால் எறும்புண்ணிக்கு பாதிப்பு ஏற்படும் என எண்ணி குறித்த நபர் பொலிஸாருக்கு அறிவித்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவித்துள்ளார்.

கொழும்பு வனவிலங்கு அலுவலகத்தில் அதனை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த வீட்டை விட்டு செல்ல விரும்பாமையினால் அதிகாரிகள் அங்கையே விட்டு சென்றுள்ளனர்.

அழிந்து வரும் இந்த உயிரினம் இலங்கையின் மிக முக்கியமான உயிரினம் எனவும் நாடு முழுவதும் இது உள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்

ஒருவருக்கும் தீங்கு விளைவிக்காத இந்த உயிரினம் இந்தியா, இலங்கை பூட்டான் ஆகிய நாடுகளில் மாத்திரமே காண முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

விஞ்ஞான பெயரில் Maniscrassicaudata என்ற அழைக்கப்படும் இந்த உயிரினம் 15 கிலோ கிராமில் கண்டுபிடிக்கப்பட்டதென்பது ஒரு அரிய சம்பவமாக கருதப்படுகின்றது.

ஜூலியை களமிறக்கும் அனிருத்!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் காதலர் தினத்தை முன்னிட்டு ஜூலி என்ற பாடலை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் இவரது இசைக்கு இளைஞர்களிடையே எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், அவ்வப்போது அல்பம் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பெப்ரவரி 14 ஆம் திகதி ஜூலி என்ற சிங்கிள் டிராக்கை வெளியிடப் போவதாக அனிருத் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பாடலை தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். சொனி மியூசிக் அந்த பாடலை வெளியிடுகிறது.

அனிருத் ஏற்கனவே `எனக்கென யாரும் இல்லையே’, `அவளுக்கென்ன’, `ஒன்னுமே ஆகல’ உள்ளிட்ட அல்பம் பாடல்களை காதலர் தினத்தன்று வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நட்சத்திர விடுதி அறைகளில் பெண் ரோபோக்கள்!!

 
அமெரிக்காவில் நட்சத்திர விடுதி அறைகளில் பணிபுரியும் ரோபோ வாடிக்கையாளர்கள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று அவர்களது தேவைகளை பூர்த்தி செய்கிறது.

அமெரிக்காவில் சிலிக்கன் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள “அலோப்ட் குபர்டினோ” நட்சத்திர விடுதியில் 3 அடி உயர தானியங்கி ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 40 கிலோ எடையுள்ள “போட்லர்” என்ற ரோபோ பல விதமான உணர்வுகள் கொண்டது. ‘3டி’ கமெராக்கள் மற்றும் ‘வை-பை’ வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ரோபோ விடுதியில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் போத்தல்கள், மைக்ரோவேவ் பொப்கான், குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி பணிபுரிகின்றன. இதை பல விடுதிகளும் பின்பற்ற தொடங்கி விட்டன.

லோஸ்ஏஞ்சல்ஸ் நட்சத்திர விடுதியில் ‘ஹன்னா’ என பெயரிடப்பட்ட ‘ரோபோ’ பணியாற்றி வருகிறது. அறைகளில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. 2.7 கி. மீட்டர் வேகத்தில் நடந்து சென்று அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு சேவை செய்கிறது.

‘தி ஷெராடன்’ லோஸ்ஏஞ்சல்ஸ்கான் கேபிரியல் என்ற நட்சத்திர விடுதி விரைவில் திறக்கப்பட உள்ளது. இங்கு 8 ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது.

அதில் ஒரு ரோபோ முதல் மாடி அறைகளில் தங்கும் விருந்தினர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். மீதமுள்ள 7 ரோபோக்கள் அறைகளுக்கு சென்று பணிபுரியும்.

இதுபோன்று நிவேடா, லாஸ்வேகாஸ் உள்ளிட்ட நகரங்களில் விடுதி அறைகளில் பலவிதமான ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசியலில் பரபரப்பு : நிலைப்பாட்டை வெளியிட்டது த.தே.கூ!!

ஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை எமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசியல்நிலைப்பாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் அதன் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அழைப்புக்கள் விடுக்கப்படுமாயின் , எமது கட்சியின் மத்திய செயற்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றினை மேற்கொள்ளுமென அவர் மேலும் தெரிவித்தார்.

149KM வேகத்தில் பந்து வீசியவர்க்கு 25 லட்சம் ரூபா பரிசு!!

நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்காமலேயே சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்த தொடரில் அனைவரது பார்வையையும் ஈர்த்தவர்களில் ராஜஸ்தானின் கம்லேஷ் நகர்கோட்டியும் ஒருவர். இவர் சீ்னியர் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் வீசுவதுபோல் 140 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீசி அசத்தினார். ஒரு ஓவரில் ஒரு பந்தை மட்டும் அப்படி வீசவில்லை. சராசரியாக 140 கிலோ மீட்டருக்கு அதிகமாக வேகத்தில் வீசி அச்சுறுத்தினார்.

6 போட்டிகளில் விளையாடிய அவர் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஜூனியர் உலகக்கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, நகர்கோட்டிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டசபையில் பட்ஜெட் குறித்து பேசுகையில், நகர்கோட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், இந்த பரிசுத் தொகையையும் வழங்கியுள்ளார்.

ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் நகர்கோட்டியை 3.2 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

பிரதமர் பதவியை கைவிடுவாரா ரணில்?

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன​ உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிசி சிங்கள சேவை செய்தி வௌியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புதிய பிரதமரை நியமிக்குமாறு ஜனாதிபதி அந்த கட்சிக்கு அறிவித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மேற்கொள்காட்டி வௌியிடப்பட்டுள்ள அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகி, சஜித் பிரேமதாஸ அல்லது கரு ஜயசூரியவிடம் தலைமைத்துவத்தை, ஒப்படைக்க வேண்டும் என அந்தக் கட்சிக்குள் கருத்து வலுப்பெற்றுள்ளதாகவும் பிபிசி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்து தனியாக ஆட்சியமைக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த கருத்திற்கு பதிலளித்த ஜனாதிபதி,அவ்வாறு இணையும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு தாம் அமைச்சர் பதவிகளை வழங்கப் போவதில்லை என குறிப்பிட்டதாகவும் பிபிசி செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் பரபரப்பு : தனி அரசாங்கத்தை அமைக்குமாறு ரணிலிடம் வலியுறுத்தல்!!

ஐக்கிய தேசியக்கட்சியை தனி அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதன் பிரகாரம் இன்றைய தினம் ஜனாதிபதியுடன் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடி தீர்க்கமான முடிவென்றை எடுக்கவுள்ளார்.

ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேருடன் இன்று நண்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிவன் முதியோர் இல்லத்திற்கு வட மாகாண முதலமைச்சர் கெளரவ நீதியரசர். க.வி.விக்னேஸ்வரன் வருகை !

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவில் அனுசரணையின் கீழ் இயங்கும் எல்லப்பர் மருதங்குளத்தில்  அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்திற்கு  நேற்று  12.02.2018 திங்கட்கிழமை வட மாகாண முதலமைச்சர் கெளரவ நீதியரசர். க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இவருடன் வடமாகாண சபை உறுப்பினரான திரு.G.T. லிங்கநாதன் அவர்களும்  வருகை தந்து இல்லத்தின் தேவைப்பாடுகள் குறித்து  ஆலய அறங்காவலர்களிடம்  கேட்டறிந்து கொண்டார்..

வவுனியா கோவில்குளம் இந்துகல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி -2018

வவுனியா கோவில்குளம் இந்துகல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி  நேற்று -2018.02.12 திங்கட்கிழமை இடம்பெற்றது. மேற்படி கல்லூரியின் விளையாட்டு  போட்டியானது கல்லூரி அதிபர்  திரு .பூலோகசிங்கம்  அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

வடமாகாண  முதலமைச்சர் கௌரவ நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன்  வலயகல்வி பணிப்பாளர் திரு.முத்து இராதாகிருஷ்ணன்  மற்றும் வடமாகாண சபை  உறுப்பினர்  ஜீ.ரி.லிங்கநாதன் ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

 

என் கணவர் தான் கடவுள் : மனம் திறந்த நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா!!

என் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் மதிப்பளிக்கக் கூடியவர் என் கணவர் என அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக மேடைப் பேச்சாளராக இருந்து வரும் அறந்தாங்கி நிஷா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியிலும் கலக்கி கொண்டிருக்கிறார்.

இதோடு முன்னணி நடிகர்கள் படத்தில் நகைச்சுவை நடிகையாகவும் அறந்தாங்கி நிஷா நடித்து வருகிறார்.

அறந்தாங்கி நிஷாவின் வெற்றிகளுக்கு பின்னர் இருப்பது அவரின் கணவர் தான். கணவர் குறித்து அவர் கூறுகையில், அவரை போல என்னை புரிந்து கொண்டவர் இந்த உலகில் எவருமில்லை.

பெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதே தவறு என கூறும் இந்த சமுதாயத்தில், நான் நிகழ்ச்சிகள் முடிந்து எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் என்னை கணவர் எந்த கேள்வியும் கேட்டதில்லை. அதிகாலை 3 மணிக்கு கூட நிகழ்ச்சி சம்மந்தமாக எனக்கு போன் வரும், அப்போது செல்போனை என்னிடம் கொண்டு வந்து உனக்கென தனிப்பட்ட விடயங்கள் இருக்கும், நீ பேசு என கணவர் கூறுவார்.

அந்த அளவுக்கு என் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் அவர் மதிப்பளிப்பார். சுருக்கமாக சொல்வதென்றால், எனது கணவரை கடவுள் தந்த வரம் என்பதை விட கடவுளே நேரில் இறங்கி வந்தது போல தான் என் கணவர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

குறைந்த செலவில் இரும்புக்கு இணையான மரப் பலகை உருவாக்கம்!!

தற்போது காணப்படும் பலம் வாய்ந்த மரப் பலகைகளை விடவும் 10 மடங்கு பலம் வாய்ந்த மரப் பலகையை உருவாக்கும் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இச் செயற்கை பலகையானது இரும்பிற்கு இணையான வலிமை உடையதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

கார்பன் பைபர் மற்றும் ஸ்டீல்கள் என்பன வலிமை மிகுந்தவையாயினும் அவற்றினை உருவாக்குவதற்கான செலவு அதிகம். ஆனால் இப் புதிய மரப் பலகையினை உருவாக்குவதற்கு மிகக் குறைந்த செலவு போதுமானது.

விரைவில் இச் செயற்கை பலகையையும், வழமையான இயற்கை பலகையையும் துப்பாக்கிச் சூட்டு பரிசோதனைக்கு உள்ளாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

பட்டப்பகலில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண் : அதிர்ச்சி வீடியோ!!

தமிழகத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வீதி ஒன்றில் மேனகா என்ற பெயருடைய நடுத்தர வயது பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப் பெண் தனியே வருவதை கவனித்த 2 மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் செல்ல முயன்றுள்ளனர்.

ஆனால் அவரின் சங்கிலி கையோடு வராததால் அந்த பெண் நடு ரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்படும் மனதை பதற வைக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பொலிசார், வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரான்ஸை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

பிரான்சில் 5 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அதன் தாயார் மற்றும் அவரது முன்னாள் துணைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு Cecile Bourgeon(30) என்பவர் தமது 5 வயது மகள் மாயமானதாகவும், பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மாயமான சிறுமியை பொலிசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில், 4 மாதங்கள் கடந்து செசில் மற்றும் அவரது முன்னாள் துணைவர் Berkane Makhlouf ஆகிய இருவரும் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதில் குடியிருப்பில் நடந்த ஒரு அசம்பாவிதத்தில் சிறுமி கொல்லப்பட்டதாகவும், பொலிசாருக்கும் சமூகத்திற்கும் பயந்து, சிறுமியின் உடலை அருகாமையில் உள்ள வனப்பகுதியில் மறைவு செய்ததாகவும் பகீர் தகவலை வெளியிட்டனர்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கீழ் நிலை நீதிமன்றம் கொல்லப்பட்ட சிறுமியின் தாயார் செசிலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது முன்னாள் துணைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

தொடர்ந்து 2 வார கால மேல்முறையீட்டு நடவடிக்கையில் நீதிமன்றம் குறித்த தாயாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமி பியோனா கடுமையான சித்திரவதைக்கு பின்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், ஆனால் ஆதாரங்கள் அனைத்தையும் இருவரும் மறைத்துள்ளதையும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகளைக் கொன்று நாடகமாடிய தந்தை : பொலிஸ் விசாரணையில் சிக்கியது எப்படி?

பிரித்தானியாவில் 8 வயது மகளைக் கொன்று நாடகமாடிய தந்தை பொலிஸ் விசாரணையில் வசமாக சிக்கியுள்ளார்.

மேற்கு மிட்லேண்ட்ஸ் பகுதியில் வசித்து வந்த வில்லியம் பில்லிங்கம் என்பரின் மகள் மில்(வயது 8) கடந்த ஜனவரி 20ம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.

கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியின் உடலை மீட்ட பொலிசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் தந்தையான வில்லியம்(54) தன் மகளை கொன்றுவிட்டு தான் கொலை செய்யவில்லை என நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபரை கைது செய்துள்ள பொலிசார், இன்று 12ஆம் திகதி Wolverhampton நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக உயரமான நட்சத்திர ஹோட்டல் துபாயில் திறக்கப்பட்டது!!

 
உலகின் மிக உயரமான நட்சத்திர ஹோட்டல் துபாயில் இன்று திறக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான கட்டிடங்களின் தலைநகரமாக துபாய் விளங்குகிறது. இங்குள்ள புர்ஜ் கலீஃபா பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்நிலையில் துபாயின் சேக் சையது சாலையில் உலகின் மிக உயரமான நட்சத்திர ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது, 2008ம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்த இந்த புதிய ஹோட்டல் இன்று திறக்கப்பட்டுள்ளது.

75 மாடிகளுடன் 528 தங்கும் அறைகளைக் கொண்டு பிரம்மாண்டமாக இந்த ஹோட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. நீச்சல்குளம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்த சொகுசு ஹோட்டலில் உள்ளன.

லண்டனின் பிக் பென் கடிகாரம் அல்லது பாரிசின் உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரத்தை விடவும் இந்த ஹோட்டல் பலமடங்கு பெரியது.

உலகின் மிக உயரமான விடுதியாக கருதப்படும் துபாயின் ஜே.டபிள்யு. மரியாட் மார்க்குஸ் விடுதியை விடவும் ஒரு மீட்டர் கூடுதலான உயரம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்மாண்டமான ஹோட்டலின் உள்கட்டமைப்பு பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் உள்ளது.

எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல ஷொப்பிங் மால்கள், ஏராளமான ஆடம்பர சுற்றுலா இடங்கள் மற்றும் ஒரு ஸ்கை ரிசார்ட் ஆகியவற்றின் மூலம் 2020ம் ஆண்டுக்குள் சுமார் 20 மில்லியன் சுற்றுலா பயணிகளை தன்னகத்தே ஈர்க்க திட்டமிட்டு கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தூக்கில் தொங்கிய மாணவி : இந்த வீடியோ தான் காரணமாம்!!

இந்தியாவில் சக மாணவ, மாணவிகள் தொந்தரவு கொடுத்தும், துன்புறுத்தியும் வந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் மேகனா (18). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் மேகனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனிடையில் கல்லூரியில் மேகனாவை சக மாணவ, மாணவிகள் துன்புறுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மேகனாவின் அம்மா கூறுகையில், மேகனா கல்லூரி பிரதிநிதித் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார்.
இது அவரை எதிர்த்து போட்டியிடும் சக மாணவி ஒருவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அந்த மாணவி தனது நண்பர்களுடன் சேர்ந்து மேகனாவை அடித்ததோடு, மிகவும் துன்புறுத்தியுள்ளார். இதோடு தனது செல்போனை காணவில்லை என கூறி அந்த பழியையும் மேகனா மீது மாணவி போட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இதனிடையில் சக மாணவிகள் மேகனாவை கிண்டல் செய்து துன்புறுத்தும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட மாணவி, மேகனா இறப்புக்கு பிறகு கல்லூரிக்கு வராத நிலையில் பொலிசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.