மனைவியின் மீது சந்தேகம் தீ வைத்துக் கொளுத்திய கணவன்!!

சிலாபம் – அம்பகண்டவில பகுதியில், கணவன் ஒருவர் தனது மனைவியை தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடுமையான காயங்களுக்கு உள்ளான மனைவி சிலாபம் வைத்தியசாலையில் சில நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றையதினம்(11) உயிரிழந்துள்ளார்.

தனது மனைவிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் கொண்ட கணவர் இவ்வாறு மனைவியை தீ வைத்துக் கொளுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த கணவர் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கை வந்த விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டிய வெள்ளவத்தையை சேர்ந்த நபர்!!

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்துவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்க விரோத முறைப்பாடாக இதனை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். வெள்ளவத்தை 33வது வீதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானம்!!

2009க்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்துள்ளது.

இதற்கான பொலிஸ் பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் பொலிஸ் திணைக்களத்திடம் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, இந்த விடயத்திற்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளரே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதால், விரைவில் அந்தத் திணைக்களம் இது தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையிடமிருந்து ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றுள்ளனர். மேலும் இவர்களில் நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் 2009இற்கு முன்னர் பெறப்பட்ட ஓட்டுநர் உரிமங்களைக் கொண்டுள்ளனர்.

இவற்றில், இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவை கனரக வாகன ஓட்டுநர் உரிமங்கள். அவற்றைப் புதுப்பிப்பது கட்டாயமில்லை. அதன்படி, 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யவும் புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேன் விபத்தில் ஒருவர் பலி : ஆறு பேர் காயம்!!

அநுராதபுரம் – இபலோகம பொலிஸ் பிரிவின் ஹிரிபிட்டியாகம சந்திக்கு அருகில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக இபலோகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (11) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவை ,அளுத்தென்னாவ,காகம பகுதியை வசிப்பிடமாக கொண்ட 48 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களில் நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இபலோகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் சுபரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்!!

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அகமதாபாத் – மேகனி நகரில் விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் எயார் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தின் போது விமானத்தில் 242 பயணிகள் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அநுர அரசு : 15 வீதத்தால் அதிகரித்தது மின் கட்டணம்!!

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15 வீதத்தால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மின் கட்டண திருத்தம் இன்று நள்ளிரவு(12) முதல் நடைமுறைக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இதனைத் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் இலங்கை மின்சார சபை (CEB) 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணங்களை 18.3 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்மொழியப்பட்டிருந்தது.

எனினும், தற்போது 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரஹராவின் போது குழப்பமடைந்த யானை : பதறியடித்து ஓடிய மக்கள்!!

பதுளை நகரில் நடைபெற்ற மிஹிது பெரஹராவின் போது, ஒரு யானை குழப்பமடைந்தமையால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பதுளை நகரில் நேற்று (10.06) இரவு நடைபெற்ற பெரஹராவின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பதுளை கைலகொட மிஹிது பெரஹரா நேற்று இரவு பதுளை நகர வீதிகளில் 85 ஆவது முறையாக இடம்பெற்றது.

இந்த பெரஹரா ஆண்டுதோறும் பதுளை, சத்தர்மானந்த பிரிவேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்படுகிறது. யானைகள், நடனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் நேற்று இரவு பெரஹரா நடைபெற்றது.

இருப்பினும், இந்த நேரத்தில், கலசத்தை சுமந்து செல்லும் யானை குழப்பமடைந்தமையால் பெரஹராவின் போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

எனினும் யானையை சிறிது நேரத்திற்குள் யானைப் பாகன் அமைதிப்படுத்திய பிறகு, பெரஹரா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் கிராமமொன்றில் பதிவுப் பெற்றுள்ள இரண்டு ஈழத்தமிழர்கள்!!

இங்கிலாந்தின்(UK) வடக்கு யோர்க்சயரில் உள்ள ப்ரோட்டன் கிராமத்தில் வாழ்பவர்களில், இரண்டு இலங்கையர்கள் மட்டுமே வெள்ளையர் அல்லாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, வடக்கு யோர்க்சயரின் குறித்த கிராமத்தில் 1108 பேரில் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போதே வெள்ளையர்கள் அல்லாத இரண்டு இலங்கை ஆண்கள் அங்கு வசிப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நண்பர்களான சேம் ருத்ரான் மற்றும் சாம்பசிவன் ஆகியோரே அவர்கள் இருவருமாகும். அவர்கள் குறித்த கிராமத்தில் முறையே விற்பனையகம் மற்றும் அஞ்சல்; அலுவலகத்தை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தாம் தாயகத்தை விட்டு வெளியேறிய பின்னர், உயிருக்கு ஆபத்து இல்லாத ஒரு கிராமத்தை உணர்வதாக குறித்த இரண்டு இலங்கையர்களும் தெரிவித்துள்ளனர்.

வாடகைக்குறைவு என்பதற்காகவே தாம் இந்த கிராமத்தில் குடியேறியதாகவும், உள்ளூர் மக்கள் தங்களை அன்பாக வரவேற்றதாகவும் குறித்த இரண்டு இலங்கையர்களும் தெரிவித்துள்ளனர்.

 

பாரிய விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவிப்பு!!

பாணந்துறை – மொரட்டுவ பகுதியில் ஏற்பட்ட இருந்த பாரிய தொடருந்து விபத்தை தடுத்த பொதுமகன் சமந்த பெர்னாண்டோ கௌரவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தொடருந்தை மோதாமல் நிறுத்திய ஓட்டுநர் விதுர விதர்ஷனும் நேற்று முன்தினம் (09.06) கௌரவிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் தொடருந்து பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பாணந்துறை – மொரட்டுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா என்ற தொடருந்து குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்பே தொடருந்தை நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்த சமந்த பெர்னாண்டோ என்ற நபர் தடுத்திருந்தார்.

தண்டவாளம் உடைந்திருந்த நிலையில், அதனை கண்ட சமந்த பெர்னாண்டோ, தனது சிவப்பு நிற சண்டையை கழற்றி தொடருந்து ஓட்டுநருக்கு ஆபத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பாதுகாப்பாக தொடருந்து நிறுத்தப்பட்டமையினால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!!

வவுனியாவில் பல்வேறு இடங்களில் வனவள திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோத முறையில் கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகளினை மீட்கப்பட்டுள்ளதாக வனவளத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வனவளத்திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து மாவட்ட வனவள திணைக்கள அதிகாரி அஜித் ஜயசிங்கவின் நெறிப்படுத்தல் இன் கீழ் வட்ட வனவள அதிகாரி

உடார சஞ்சீவவின் தலைமையிலான வனவள உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஓமந்தை மற்றும் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருநதனர். இந்நடவடிக்கையின் போது 27 முதிரை குற்றிகள் மீட்கப்பட்டதுடன் இரு கப் ரக வாகனமும் மீட்கப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியாவில் உள்ள மரக்காளையில் இருந்து அனுமதி பெறப்படாத 13 இலட்சம் பெறுமதியான தேக்கு மர பலகைகள் மீட்கப்பட்டதுடன்,

பறயநாலங்குளம் பகுதியில் காடழிப்பில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது டன், காடழிப்புக்கு பயன்படுத்திய டோசர் வாகனமும் கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்படவிருந்த பாரிய புகையிரத விபத்தை தவிர்த்த பெண்!!

இலங்கையில் ஏற்படவிருந்த மற்றுமொரு பாரிய தொடருந்து விபத்து பெண் ஒருவரினால் தடுக்கப்பட்டுள்ளது. கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான தொடருந்து பாதையில் இன்று காலை விபத்து ஏற்படவிருந்த நிலையில் அது தவிர்க்கப்பட்டுள்ளது.

கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் பாரிய தாழிறக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. காலை 5.30 மணியளவில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் இதனை அவதானித்து உடனடியாக தொடருந்து நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட தொடருந்து நிலைய அதிகாரிகள் அந்த நேரத்தில் குறித்த தண்டவாளத்தின் ஊடாக வந்த தொடருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றியுள்ளனர்.

இதன் காரணமாக கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி தொடருந்து ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை நபர் ஒருவர் தெரியப்படுத்தும் வகையில் சிவப்பு சட்டையுடன் ஓடியிருந்தார்.

இதன் காரணமாக ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டதுடன், தொடருந்த நிலைய அதிகாரிகளால் அவர் பாராட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

10 இளைஞர்களை ஏமாற்றி மணந்த பெண் : 11 ஆவது ஆணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் சிக்கிய சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர், திருமண வரன் தேடி வந்துள்ளார். அதில் தனது மகள் ரேஷ்மாவுக்கு வரன் பார்த்து வருகிறோம் என்றும், அவளுக்கு உங்களை பிடித்துள்ளதாகவும் பென் ஒருவர் கூறியுள்ளார்.

பின் ரேஷ்மா அவரை மாலில் சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து இருவரும் செல்போனில் உறவை வளர்த்த நிலையில், திடீரென திருமணத்துக்கு தனது தாயார் மறுப்பு தெரிவிப்பதாக ரேஷ்மா கூறியுள்ளார்.

இதனால் எதிர்ப்பை மீறி பஞ்சாயத்து உறுப்பினர் ரேஷ்மாவை திருமணம் செய்ய எண்ணி மணப்பெண்ணை அலங்காரம் செய்து காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ரேஷ்மா வைத்திருந்த பேக் அவரின் கையில் சிக்கியுள்ளது.

அதில் ரேஷ்மாவுக்கு 45 நாட்களுக்கு முன்பு வேறொரு ஆணுடன் திருமணம் நடைபெற்றதான் மேரேஜ் சர்டிபிகேட்டும் இருந்ததை கண்டு வார்டு உறுப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக ரேக்ஷ்மா தொடர்பில் அவர் முறைப்பாடு வழங்கியதை அடுத்து திருமண மண்டபம் விரைந்த பொலிஸார் ரேஷ்மாவை கைது செய்துனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , ரேஷ்மாவுக்கு இரண்டு வயதில் குழந்தை ஒன்று உள்ளதும் மேட்ரிமோனியில் வரன் தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது.

ரேக்ஷ்மா, திருமணம் முடிந்த கையுடன் மணமகளின் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதுவரை ரேக்ஷ்மா 10 பேரை ஏமாற்றியுள்ளதும் , 7 பேருடன் முறையாக திருமணம் செய்து, அதற்கு உரிய சான்றிதழையும் வைத்துள்ளார்.

அதேவேளை அடுத்த மாதம் 12 ஆவதாக வோறொரு ஆணுடன் திருமணம் செய்ய திட்டமிருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் திருமணம் செய்து ஆண்களை ஏமாற்றி பெண் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் மூவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாணம் , சுதுமலை அம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மூன்று பக்தர்களின் சுமார் 06 பவுண் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றரை பவுண் சங்கிலிகள் இரண்டும் , மூன்று பவுண் சங்கிலி ஒன்றும் அறுக்கப்பட்டுள்ளதாக மூவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தேர்த்திருவிழாவின் போது, பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்த வேளை பக்தர்கள் மத்தியில் புகுந்த திருடர்கள் தம் கைவரிசையை காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சங்கிலி அறுத்தவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க தாக்குதலுக்கு சதித்திட்டம் : கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தானியர்!!

நியூயோர்க் நகரில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்ததான குற்றச்சாட்டில், பாகிஸ்தானிய நபர் ஒருவர் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷாஜீப் ஜாதூன் என்றும் அழைக்கப்படும் 20 வயதான முகமது ஷாஜீப் கான், செப்டெம்பர் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டார்.

ஒரு குற்றவியல் முறைப்பாட்டின்படி, 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் அக்டோபர் 7 ஆம் திகதி நினைவு நாளில், புரூக்ளினில் உள்ள ஒரு யூத மையத்தில் இஸ்லாமிய அரசுக்கு (IS) ஆதரவாக ஒரு வெகுஜன துப்பாக்கிச் சூடு நடத்த கான் நியூயார்க்கிற்குச் சென்று திட்டமிட்டிருந்தார்.

ஐ.எஸ்-க்கு ஆதரவாக, நமது யூத சமூகத்தைச் சேர்ந்த முடிந்தவரை பலரைக் கொல்ல தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்த அவர் திட்டமிட்டார்,” என்று அமெரிக்க வழக்கறிஞர் ஜே கிளேட்டன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சட்ட அதிகாரிகளாக இருந்த சதிகாரர்களுடனான உரையாடல்களில் கான் தனது திட்டங்களை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க – கனடா எல்லையிலிருந்து சுமார் 12 மைல் (19 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஓர்ம்ஸ்டவுன் நகராட்சியில் கனேடிய அதிகாரிகளால் அவர் தடுத்து வைக்கப்பட்டார்.

ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு பொருள் ஆதரவு மற்றும் வளங்களை வழங்க முயற்சித்ததாகவும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முயன்றதாகவும் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தாக மாறும் AI தொழில்நுட்பம் : பெற்றோர்களே அவதானம்!!

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 16 வயதுடைய 4 மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக இணைத்து வட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களையும் ஹொரணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிபதி சந்தன கலன்சூரிய உத்தரவிட்டார்.

முறைப்பாட்டாளர்களான மாணவிகள் கற்கும் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் மற்றும் ஹொரணை பகுதியில் உள்ள மற்றுமொரு பாடசாலையின் மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரணையில் உள்ள பிரபலமான பாடசாலையின் மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

தங்கள் மகளின் முகத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் வட்ஸ்அப் குழுவில் பரப்பப்படுவதாகவும், தனது மகள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், வகுப்புகளுக்கு செல்ல தயங்குவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட ஒரு நாளுக்குள் அதே பாடசாலையை சேர்ந்த 3 மாணவர்களிடமிருந்து மேலும் 3 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்ததையடுத்து பொலிஸ் அதிகாரிகள் இந்த விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.

மாணவர்களின் முகங்களின் தகாத புகைப்படங்களை உருவாக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தங்க நகை வாங்கவுள்ள இலங்கையர்களே அவதானம் சிந்தித்து செயற்படுங்கள்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து கொண்டே வருகின்றது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது அவுன்ஸ் ஒன்று இலங்கை ரூபாவின் படி தொடர்ந்தும் 10 இலட்சம் ரூபா என்ற மட்டத்தில் காணப்படுகின்றது.

கடந்த ஒன்பதாம் திகதி இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், உலக சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலையானது 988,455.39 ரூபாவாக காணப்பட்டது.

இதேவேளை, உள்ளூர் சந்தைகளிலும் தங்கத்தின் விலையானது அதிகரித்த போக்கையே காட்டுகின்றது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கிட்டத்தட்ட 3 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2 இலட்சத்து 80ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக 24 கரட் தங்கத்தின் விலை பதிவாகியுள்ளது.

கடந்த 9ஆம் திகதி நிலவரப்பட்ட 2 இலட்சத்து 79ஆயிரம் ரூபாவாக 24 கரட் தங்கப் பவுனொன்றின் விலை பதிவாகியிருந்தது.

மேலும், 22 கரட் தங்கத்தின் விலையும் விரைவில் 3 இலட்சம் ரூபாவை அண்மிக்கலாம் என்ற நிலையில் உயர்ந்து செல்கின்றது. 2 இலட்சத்து 65ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக 22 கரட் தங்கத்தின் விலை பதிவாகியுள்ளது.

கடந்த 9ஆம் திகதி நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 2 இலட்சத்து 56ஆயிரம் ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து சற்று மாற்றம் பெறலாம். குறிப்பாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே தங்கநகை வாங்க காத்திருப்பவர்கள் சந்தை நிலவரங்களை ஆராய்ந்து நகை கொள்வனவில் ஈடுபடுவது சிறந்தது.