யாழில் சிறுமி ஒருவரை ஈவிரக்கமின்றி கட்டிவைத்து தாக்குதல் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை , பெண் ஒருவர் ஈவிரக்கமின்றி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் (23) மாலை, அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.

இதன்போது, இனிப்பு வகையை கையாடியதாகக் கூறி, கடையின் உரிமையாளரான ஒரு பெண், சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி, அன்று இரவே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்து,

தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, வைத்தியசாலையில் உள்ள பருத்தித்துறை பொலிஸார் மூலம் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மருதங்கேணி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றபோது, அவர் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தில் சிறுமையை தாக்கிய பெண்ணின் வீட்டிற்கு பொலிஸார் சென்றபோது, வீடு பூட்டியிருந்ததால், தொலைபேசி மூலம் அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பு ஒன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் தொலைபேசி வழியாக முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

14 வயது சிறுமிக்கு 33 வயது நபருடன் காதல் : பேருந்தில் சிக்கிய ஜோடி!!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (24) அன்று மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இருவரும் எம்பிலிபிட்டியவிலிருந்து மொனராகலைக்கு வரும் பேருந்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் யுவதி பரிதாபமாக உயிரிழப்பு!!

களுத்துறை, பனாபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மதில் இடிந்து விழுந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வாதுவை, மொரொன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தன்று, இந்த யுவதி தனது காதலனின் பாட்டியிடம் நலம் விசாரிப்பதற்காக பனாபிட்டிய பிரதேசத்தில் உள்ள காதலனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்போது வீட்டின் மதில் யுவதியின் மேல் இடிந்து விழுந்துள்ளது.

படுகாயமடைந்த யுவதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனமே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

80 வயது முதியவரான சாதாரண தர பரீட்சார்த்தி கணித வினாத்தாள் தொடர்பில் வெளியிட்ட அதிருப்தி!!

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் 80 வயது முதியவர் ஒருவர், கணிதத் தேர்வு வினாத்தாள் குறித்து அதிருப்தி தெரிவித்ததை அடுத்து, கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்திக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய அந்த முதியவர், பொறியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கணிதப் பாடத்திற்கான வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறினார்.

“முன்னர், கலை, வணிகம் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனித்தனி கணிதத் தேர்வுத் தாள்கள் வழங்கப்பட்டன.

இருப்பினும், இப்போது பொறியாளர்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாள்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இது நியாயமற்றது மற்றும் பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுவான வினாத்தாளுக்கு பதிலாக, பாடப் பிரிவுகளுக்கு ஏற்றவாறு கணித வினாத்தாள்களை வழங்கும் முறையை மீண்டும் தொடங்குமாறு அந்த முதியவர் கல்வி அதிகாரிகளை வலியுறுத்தினார்.

மேலும், தனியார் வகுப்பு முறையை ஒழிக்க வேண்டும் என்றும், தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், பாடசாலைகளில் கற்பிக்க அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

யாழில் 38 ஆண்டுகளின் பின் எரிக்கப்பட்ட உடல்கள் : புலம்பெயர் தமிழர்கள் செய்த செயல்!!

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில், கொல்லப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் வெளிநாடு ஒன்றிலிருந்து தாயகத்திற்கு வந்து உடல்களை நீதிமன்ற அனுமதிபெற்று மீள தோண்டி எடுக்கப்பட்டு மார்ச் 23ம் திகதி சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி மேற்கொண்ட படை நடவடிக்கைகயில், கண்டி வீதியில் உள்ள வீடொன்றில் இருந்த தாயும் அவரது மகனும் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டுவளவிலேயே அடக்கம் செய்துள்ளார்.

அதோடு அவர்களை புதைத்த இடத்தில் கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் ஏனைய பிள்ளைகளுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது ஏனைய பிள்ளைகளுக்கு அவர் தெரிவித்திருந்ததுடன், மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு சமய முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு குறித்த தந்தையும் உயிரிழந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாடு திரும்பிய ஏனைய பிள்ளைகள் தாய் மற்றும் சகோதரனின் உடல்களை மீளத் தோண்டியெடுத்து கிரியைகள் செய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு நீதிமன்று அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு இந்து சமயக் கிரியைகள் நடாத்தப்பட்டு அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டுள்ளன.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கைது!!

மோசடியான விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் குழுவினால் இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கனடாவுக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 11 இலங்கையர்களும் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.

அவர்கள் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்குத் திரும்பிய ஒரு குழுவினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடு செல்ல முயன்ற 10 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!

ஐரோப்பாவிற்கு தப்பி செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க, அடியம்பலம பகுதியில் தங்கியிருந்தபோது இந்தக் குழு நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்கு வந்து, கடந்த பெப்ரவரி மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, சுற்றுலா விசாக்களைப் பெற்று, நாட்டிலேயே தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நேரத்தில், பங்களாதேஷ் நாட்டினர் நாட்டில் தங்குவதற்கான விசாக்களை மீறி தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குழு இலங்கையில் இருந்து டுபாய்க்கு சென்று, அங்கிருந்து எகிப்துக்குள் நுழைந்து, பின்னர் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளை அவர்களது நாட்டிற்கு நாடு கடத்தும் வரை வெலிசறை தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களமிறக்கப்படவுள்ள 500 சிறப்பு அதிரடிப்படையினர்!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை (STF) பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த புதிய சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர்கள் விரைவில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு பணிக்கு வருவார்கள் என கூறியுள்ளார்.

மேலும், தென் மாகாணத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த நான்கு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், அம்பலாங்கொடை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை சமாளிக்க இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

போதுமான அனுபவம் இல்லாத மருத்துவர் : பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!!

பிரித்தானியாவில், போதுமான அனுபவம் இல்லாத ஒரு மருத்துவர் செய்த தவறால் இந்தியக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவனது உடல் புதிய கல்லீரலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, அவனது கல்லீரலின் மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த சோதனைக்காக குழந்தையின் நெஞ்சு வழியாக ஊசி ஒன்றைச் செலுத்தி, அவனது கல்லீரலில் மாதிரியை சேகரிக்கவேண்டியிருந்தது.

மிகவும் கவனமாக, அனுபவம் மிக்க மருத்துவர்கள் செய்யவேண்டிய அந்த விடயத்தை, போதுமான அனுபவம் இல்லாத ஒரு பயிற்சி மருத்துவர் செய்துள்ளார்.

சரியான அனுபவம் இல்லாததால் அந்த பயிற்சி மருத்துவர் குழந்தையின் நெஞ்சிலிருந்த ஒரு முக்கியமான இரத்தக் குழாயை சேதப்படுத்த, மார்புக்கூட்டில் இரத்தம் கட்டி உயிரிழந்துவிட்டான்.

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த துயரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடந்துவந்தது.

இந்நிலையில், அந்த விசாரணையின் முடிவில், அந்த பயிற்சி மருத்துவரின் தவறால், குழந்தை நீண்ட ஒரு மாரடைப்பால் அவதியுற்று மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை, குறித்த குழந்தை குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்புக்காக வருத்தம் மட்டும் தெரிவித்துள்ளது.

யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து!!

யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து யாழ் பொன்னாலைப் பாலத்தில் இன்று காலை ஏற்பட்ட ஆட்டோ விபத்தில் அதில் சென்ற தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது .

சம்பவத்தில் காரைநகர் மருதபுரத்தை சேர்ந்தவர்களே படுகாயமடைந்து்ளளதாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த தந்தையையும் , மகனையும் மீட்டு அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

காதலன் வீட்டுக்குச் சென்ற இளம் காதலி பரிதாபமாக மரணம்!!

களுத்துறையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாதுவ, மொரோந்துடுவ பகுதியைச் சேர்ந்த பிரசாதினி பிரியங்கிகா என்ற 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளம் பெண் நேற்று மதியம் தனது காதலனின் வீட்டிற்குச் சென்றபோது இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நாட்டில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்.

தமிழைப் படித்து வியந்து கீழடி வரை பயணம் : யாழில் தமிழில் பட்டம் பெற்ற பௌத்த தேரரின் நெகிழ்ச்சி!!

தமிழைப் படித்து வியந்து ஒரு புத்தக ஆராய்ச்சிக்காக இந்தியாவிலுள்ள கீழடி வரை சென்றேன் என்று யாழ்.பல்கலைகழகத்தில் தமிழில் பட்டம் பெற்ற இந்திரானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்(Jaffna University) தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமாவைப் பயின்று தேரர் ஒருவர் பட்டம் பெற்றுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த மதகுரு, உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, பட்டம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாய பூர்வமாக இவரது பட்டம் கையளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்த ஊடகமொன்றிற்கு நேர்காணல் வழங்கிய அவர், “தமிழ் படிக்க ஆசைதான் வந்தது. அதற்கு பல ஆசிரியர்களும் உதவி கூறினார்கள். தேரர்கள் சின்னவயதிலிருந்து மனப்பாடம் செய்ய வேண்டும், எனவே அது தமிழ் படிக்க மிகவும் உதவியது.

தமிழ் மொழி ஒரு கடல் போன்றது, இன்னும் பல நூல்களை நான் கற்க வேண்டும். இந்து சமயம் படிப்பதற்கு தமிழ்மொழி படிக்க வேண்டும், அன்னும் தமிழ் மொழியில் பல பட்டங்களை பெற வேண்மென்ற ஆசையும் உள்ளது.

யாழ்.பல்கலைகழகத்தில் பட்டம் பெற வேண்டுமென்பது கனவுதான் அது இப்போது நடைபெற்றுள்ளது. எனக்கு எந்தவொரு பிரச்சினையும் வரவில்லை, நாங்கள் 12 மணிக்கு முன்னர் உணவு அருந்த வேண்டும், அதற்குமே எனக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தமிழ் என்றால் யாழ்- யாழ் என்றால் தமிழ் எனவே அவ்வாறானவொரு இடத்தில் பட்டம் பெற்றது மிகவும் சந்தோசமாகவுள்ளது. நிறைய தேரர்களும் தமிழ் படிக்கிறார்கள், தமிழ் தெரிந்த சிங்கள ஆசிரியர்கள் இல்லாதது தான் இங்கு பிரச்சினையாக உள்ளது.

நான் திருக்குறள், மணிமேகலை, மதுரைகாஞ்சி ஆகிய நூல்களை கற்றுள்ளேன். தம்மபதத்திற்கு எவ்வாறான மரியாதை மனதில் உள்ளதோ, அதே மரியாதை திருக்குறள் மீதும் உள்ளது.

இவைகளை ஆராய்ச்சி செய்யும் பொழுது மிகவும் ஆச்சரியமும், மரியாதையும் கலாசாரத்தை தெரிந்துக்கொள்ளகூடியதாக இருந்தது. நான் என்னுடைய பகுதியில் தமிழ் மக்களுக்கான அறநெறி பாடசாலையொன்றை ஆரம்பிக்கவுள்ளேன்.

முன்பு என்னுடைய விகாரையில் சிங்கள மொழியில் மட்டுமே பெயர்பலகை இருந்தது. தற்போது தமிழிலும் பெயர் பலகை உள்ளது.

சிங்கள மக்களும் தமிழ் மொழியை கற்கவேண்டும், தமிழ் புத்தகங்களை சிங்கள் மொழியிலும் மொழிபெயர்க்க வேண்டும், அப்போதுதான் தமிழ் மொழியின் சிறப்புகள் அவர்களுக்கும் தெரியவரும்” என குறிப்பிட்டுள்ளார்.

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி குடைசாய்ந்து விபத்து : இருவர் காயம்!!

பதுளை – பண்டாரவளை வீதியில் திக்கராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து பண்டாவரளை நோக்கி அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஏமாறாதீர்கள் : யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றதாகவும் இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நன்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வங்கிக் கணக்கில் உள்ள பணம் மோசடி

நிகழ்நிலை செயலி (online App) ஒன்றினை மக்களிடையே பகிர்ந்து அதில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த செயலியில் ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலிடுவதன் மூலம் சிறிய அளவிலான கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

மக்கள் முதல் வருமானத்தை நம்பி அடுத்த தடவை பெரிய ஒரு தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த நிதியானது மோசடியாளர்களால் அபகரிக்கப்படுகிறது.

வங்கி கணக்கில் பணத்தினை வைப்புச் செய்துள்ளவர்களது கணக்கு இலக்கங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்கள் என்பன ஆசை வார்த்தை கூறி மக்களிடமிருந்து மோசடியாளர்களால் பெறப்படுகிறது.

அதன் பின்னர் அவர்களது கைபேசிக்கு இரகசிய இலக்கம் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து அந்த இரகசிய இலக்கமானது பெறப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் மோசடி செய்யப்படுகிறது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சம்பவங்கள் சமகாலத்தில் அதிகரித்து காணப்படுகின்றதாகவும் இது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.