தேர்தலில் ரஜினி – கமல் கூட்டணியா?

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21ம் திகதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் ரஜினி கூறும்போது, புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த கமலுஹாசனுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார். மேலும் கமலுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, ‘காலம் தான் பதில் சொல்லும் என்று கூறியிருக்கிறார். அதன்பின், எப்போது தேர்தல் வந்தாலும் சந்திப்பேன் என்றும் ரஜினி கூறியிருக்கிறார்.

கவிஞர் வைரமுத்துவின் நாக்கிற்கு10 கோடி ரூபா பரிசு அறிவிப்பு!!

வைரமுத்துவின் நாக்கை அறுத்து வருபவர்களுக்கு10 கோடி பரிசு வழங்கப்படும் என பா.ஜ.க துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார்.

ஆண்டாள் குறித்து இழிவாக கட்டுரை எழுதியதாகக் கூறி பலரும் கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஒருபகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஜவகர் திடலில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பா.ஜ.க மாநில துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “வைரமுத்துவின் நாக்கை அறுத்துக்கொண்டு வந்தால் 10 லட்சம் பரிசு என்று சொன்னால், காவல்துறையினர் என்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வார்கள்.

ஆனால், ஆண்டாளை இழிவாகப் பேசிய வைரமுத்துவின் மீது எவ்விதமான நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை எனக்கூறினார். மேலும், ஆண்டாளை இழிவாகப் பேசிய வைரமுத்துவின் நாக்கை அறுத்துக்கொண்டு வந்தால், 10 கோடி தயாராக இருக்கிறேன் எனக்கூறிய அவர், இனி இந்துக்கள் குறித்து இழிவாகப் பேசுபவர்களைக் கொலை செய்ய இந்துக்கள் தயங்கக்கூடாது என சர்ச்சையைக் கிளப்பும் விதமாகப் பேசினார்.

அதேபோல், வைரமுத்துவிற்குப் பின்னால் திமுக செயல்படுகிறது என்றும், ஆர்.கே.நகர் தோல்வியை மறைக்க திமுக இவ்வாறு செய்வதாக அவர் தெரிவித்தார்.

தோழியை கொன்ற பெண் : காட்டிக் கொடுத்த செல்பி!!

கொலையை கண்டுபிடிக்க போலீஸுக்கு ஒரு செல்ஃபி புகைப்படம் உதவியது என்றால் நம்பமுடிகிறதா? ஆம் இது உண்மையிலேயே நடந்துள்ளது, கனடாவில் 2 ஆண்டுகளுக்கு முன் பிரிட்னி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் சாஸ்கடோன் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் குற்றவாளி யார் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் பிரிட்னியின் உடல் அருகே பெல்ட் ஒன்று கிடந்தது, இதை முக்கிய ஆதாரமாக கருதிய பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே பிரிட்னி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது, பொலிஸாருக்கு பிரிட்னியின் தோழியான ஆண்டனி மீது சந்தேகம் இருந்தது.

இந்நிலையில் ஆண்டனியின் பேஸ்புக் பக்கத்தை பொலிசார் ஆராய்ந்த போது, பிரிட்னி கொல்லப்படுவதற்கு முன்பாக இருவரும் செல்பி எடுத்த புகைப்படம் இருந்தது.

அதில் ஆண்டனி அணிந்திருந்த பெல்ட்டும் , கொலை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட பெல்ட்டும் ஒரே மாதிரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்பின்னர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆண்டனி, மது போதையில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்ததால் ஆத்திரத்தில் பிரிட்னியை கொன்றதாக தெரிவித்துள்ளார்.

ஆண்டனிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம் : வியக்க வைக்கும் தொழில்நுட்பம்!!

 
இன்னும் பத்து ஆண்டுகளில் இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள், Cryogenics தொழில்நுட்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ’Cryogenics’ எனும் கல்வி நிறுவனம், இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில், இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைப்பதில் உலகளவில் முன்னணியில் உள்ளது.

’Cryogenics’ அமைப்பின் தலைவர் டென்னிஸ் கோவல்ஸ்கி கூறுகையில், ‘அடுத்த 10 ஆண்டுகளுக்குள் விஞ்ஞானிகள், நாங்கள் பதப்படுத்தி வைத்துள்ள உடல்களுக்கு உயிர் கொடுக்க வாய்ப்புள்ளது.

எந்த உடல் முதலில் உயிர்பெறும் என்பது இதற்கு தேவையான அறிவியல் மருந்து எந்த அளவு வேகமாக கண்டுபிடிக்கப்படுகிறது என்பதின் அடிப்படையிலேயே அமையும்.

குறிப்பாக ஸ்டெம் செல்ஸ் டெக்னாலஜி எந்த அளவிற்கு வேகமாக வளர்கிறதோ, அந்த வேகத்தில் மீண்டும் உடல்களுக்கு உயிர் கொடுக்க முடியும்.

சி.பி.ஆர் தொழில்நுட்பம் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், இன்று அது நடைமுறையில் உள்ளது. அதேபோல, இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக, உடல்களுக்கு மீண்டும் முழுமையாக உயிர் கொடுக்கும் அறிவியல் வரும் என தெரிவித்துள்ளார்.

இவரது Cryogenics அமைப்பில், சுமார் 2,000 பேர் தங்களது மரணத்திற்கு பிறகு உடலை பதப்படுத்தி வைக்குமாறு ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும், ஏற்கனவே இந்த அமைப்பில் 160 உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

’Cryogenics’ என்பது, ஒரு மனிதனின் இதயத் துடிப்பு நின்று அவன் இறந்து விட்டதாக அறிவித்த 2 நிமிடங்களுக்குள், கடுங்குளிரில் அவரின் உடலில் உள்ள ரத்தத்தை வெளியேற்றி விட்டு, அதற்கு பதிலாக வேறு ஒரு ரசாயனம் உடலில் செலுத்தப்படும்.

அதன் பின்னர், செல்கள் சேதமடையாமல் இருக்க உடலுக்குள் ஊசியின் மூலமாக மருந்து செலுத்தப்படும். மேலும், உடலானது Minus 130 டிகிரி குளிரில் நிலையில் வைக்கப்படும். இதன் பிறகு, நைட்ரஜன் அடைக்கப்பட்ட Container-யில் உடல், Minus 196 டிகிரி செல்சியஸ் குளிரில் வைக்கப்படும்.

ஆனால் உடலில் உள்ள செல்களை புதுப்பிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தால் மட்டுமே, இறந்தவரை உயிருடன் கொண்டு வர முடியும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில், இதயம் மற்றும் சிறுநீரகம் ஆகியவை என்னதான் பதப்படுத்தப்பட்டாலும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும், ’Cryogenics’ நிறுவனம் இந்த முறையில் இறந்தவரின் உடலை பதப்படுத்தி வைக்க, 35,000 அமெரிக்க டொலர்களை கட்டணமாக நிர்ணயித்துள்ளது.

இவ்வாறு உடலை பதப்படுத்தி வைத்தாலும், செல் என்பது ஒருமுறை சேதமடைந்து விட்டால் அதனை மீண்டும் புதுப்பிக்க முடியாது. எனவே, இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க நூற்றாண்டுகள் கூட ஆகலாம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாணவனின் உயிரை பறித்த தண்டனை : 10 நிமிட தாமதத்தால் நடந்த துயரம்!!

சென்னையில் 10 நிமிடம் தாமதமாக வந்த மாணவனுக்கு ஆசிரியர் வழங்கிய தண்டனையால் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் முரளி, இவரது இளைய மகன் நரேந்திர், பெரம்பூரில் உள்ள டொன்பாஸ்கோ பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று காலை 10 நிமிடம் தாமதமாக பள்ளிக்கு சென்றுள்ளான், இதற்காக உடற்கல்வி ஆசிரியர் வாத்து போல் நடக்கச்சொல்ல தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது மயங்கி விழுந்த மாணவனை உடனடியாக ஆசிரியவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர், எனினும் செல்லும் வழியிலேயே மாணவனின் உயிர் பிரிந்தது.

இதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோரை அழைத்த நிர்வாகம், இயற்கை மரணம் அடைந்ததாக கூறி பெற்றோரிடம் சடலத்தை ஒப்படைத்தனர். ஆனால் நரேந்திருக்கு வழங்கப்பட்ட தண்டனையை இதற்கு காரணம் என மற்ற மாணவர்கள் கூறியதால் ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, தண்டனையின் போதே மாணவன் மயங்கி விழுந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து முரளி கொடுத்த புகாரின் பேரில் உடற்கல்வி ஆசிரியரை ஜெய்சிங்கை கைது செய்த பொலிசார் முதல்வர் அருள்சாமியையும் கைது செய்துள்ளனர்.

பிரேத பரிசோனை அறிக்கை வந்த பிறகே மாணவன் இறப்புக்காக காரணம் தெரியவரும் என்றும், முதற்கட்ட விசாரணையில் மூச்சுத்திணறி இறந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்த தம்பதி : உருக வைக்கும் காரணம்!!

ஈரோடு மாவட்டத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு ரங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் மாதேஸ்வரன்(56) – ராஜாமணி(45) தம்பதியர், இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இவர்கள் இருவரும், திருமண விழாவில் சமையல் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள தண்டவாளத்திற்கு மாதேஸ்வரன் மற்றும் ராஜாமணி இருவரும் சென்று, கைகோர்த்தபடி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மாதேஸ்வரன் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், கடன் தொல்லை மற்றும் குழந்தை இல்லாத ஏக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட மன உளைச்சலால் தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தம்பதியரின் உடல்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

லண்டனில் பணக்காரர்களாக மாறிய இலங்கை இளைஞர்கள்!!

 
லண்டனில் உணவகம் ஒன்று நடந்தும் ஐந்து இலங்கை இளைஞர்கள் பிரபல்யமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Coconut Tree என்ற பெயரில் சிறிய உணவகம் ஒன்றை ஆரம்பித்த குறித்த இளைஞர்கள் தற்போது பெரிய அளவில் அதனை விஸ்தரித்துள்ளனர்.

லண்டன், Cheltenham பகுதியில் வசிக்கும் இந்த இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிய இடம் ஒன்றில் உணவகத்தை ஆரம்பித்த குறித்த இளைஞர் தற்போதே தங்கள் வாழ்க்கையை கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் வளர்ச்சிப் பாதை குறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட இலங்கை இளைஞர்கள்,

“ஆரம்பித்தில் வாடகைக்கு சிறிய பப் ஒன்றை பெற்றுக் கொண்ட நாம், வேலை முடிந்து வந்து அங்கு உணவு தயாரிக்க ஆரம்பித்தோம், அதன் ஊடாக வளர்ச்சியடைந்து இன்று Coconut Tree என உணவகத்தை வளர்த்துள்ளோம்.

அனைத்து விருந்தோம்பல் ஆர்வலர்களை நாங்கள் வரவழைத்தோம், இரகசிய சமையல் குறிப்புகளை இலங்கையில் உள்ள தாயாரிடம் பெற்றுக் கொண்டோம்.

இலங்கையில் எங்கள் தாய்மார் சிறப்பாக சமையல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அது எங்கள் உணவகத்திற்கு மேலும் உதவியாக இருந்தது.

Coconut Tree வளர்ச்சியடைந்தது. விருந்து மற்றும் நிகழ்வுகளுக்கு சமைக்க ஆரம்பிதோம். எங்களுக்கு பெரிய இடம் தேவைப்பட்டது. எதிர்பாராத விருந்தினர்கள் எங்கள் இடத்தை தேடி வர ஆரம்பித்தனர்.

நாங்கள் தெரு உணவுகள் வழங்கினோம். எங்கள் உணவை பெற்றுக் கொள்ள அனைவரும் விரும்பினார்கள். எங்கள் உணவை பலர் இரசித்து உண்ண ஆரம்பித்தனர். தெரு உணவாக வழங்கிய நாம் அமர்ந்து உண்ணும் இடமாக அதனை மாற்றினோம். அதுவே எங்கள் நோக்கமாகவும் இருந்தது.

இலங்கை உணவுகள், இறைச்சி, மீன் போன்ற உணவுகளை வழங்கினோம். நாங்கள் அப்பம், கொத்து ரொட்டியை லண்டனில் அறிமுகப்படுத்தி வைத்தோம். 2.50 பவுண்ட்கள் முதல் உணவு வழங்கினோம்.

நாங்கள் ஆடம்பரத்தை அறிந்திருக்கிறோம். உலக நகரங்கள் வழங்கியுள்ளவற்றில் ஒரு சிறிய பகுதியை நாம் பார்த்துள்ளோம், சிறியவைகளை விரும்பியவர்களும் அதிமாகும்.

சிறிய முறையில் பிறந்த நாள் வைபவங்களை நாம் அங்கு நடத்தினோம். வயிறு நிறைய உணவை சிறிய விலையில் வழங்கினோம். தற்போது பெரிய வளர்ச்சியை கண்டுள்ளோம்” என குறித்த இலங்கை இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

முகநூல் பதிவால் நாடுகடத்தப்படும் இலங்கைப் பெண்!!

திருடியதாகக் கூறப்படும் நெக்லஸை அணிந்தவாறு, முகநூலில் ஒளிப்படத்தைப் பதிவேற்றிய இலங்கைப் பணிப்பெண்ணுக்கு ஷார்ஜா நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனையும் அதன் இறுதியில், நாடு கடத்துமாறும் உத்தரவிட்டது.

இந்த இலங்கைப் பெண், அரபு வீடொன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவிக்குச் சொந்தமான நெக்லஸ் திருடு போனது.

திருடுபோன நெக்லஸை அணிந்தபடி, குறித்த இலங்கைப் பெண் தனது முகநூலில் ஒளிப்படம் ஒன்றைப் பதிவேற்றியிருந்தார்.

இதை தற்செயலாகக் கண்டு அதிர்ச்சியுற்ற உரிமையாளரின் மனைவி, அது குறித்துப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

பொலிஸ் விசாரணையின் போது குறித்த பணிப்பெண் தான் நெக்லஸைத் திருடவில்லை என்று கூறினாலும் , அவரது வீட்டு குப்பைவாளியில் இருந்து நெக்லஸை பொலிஸார் கண்டெடுத்தனர்.

அதுபற்றி விசாரித்த போது, அதைத் தமது உரிமையாளரின் மனைவி தனக்குப் பரிசாகத் தந்ததாகவும், அது தங்கமாக இருக்காது என்று நினைத்து குப்பைவாளியில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

நடுவீதியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

திருவாரூர் மாவட்டத்தில் நபர் ஒருவர் நடுவீதியில் வைத்து தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்தவர், சுமதி என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நித்யா, தரணிதரன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

தர்மராஜ் தினமும் மது அருந்திவிட்டு, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை தர்மராஜ் தனது மனைவி சுமதியுடன் கடைத் தெருவிற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ், தனது மனைவி சுமதியின் கழுத்தை நடுவீதியிலேயே கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார்.

இச்சம்பவத்தை பார்த்த அங்கிருந்த மக்கள், தர்மராஜை பிடித்து கட்டி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார், தர்மராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷொப்பிங் அழைத்துச் செல்ல மறுத்த கணவன் : இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில் ஷொப்பிங் அழைத்து செல்ல கணவர் மறுத்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. தீபக் திவேதி என்பவர் மாநில தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தீபிகா (23) என்ற பெண்ணுடன் ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் ஆனது. சிறிய விடயத்துக்கு எல்லாம் அடிக்கடி கணவனை கோபித்து கொள்ளும் தீபிகா கோபத்தில் தனது அறைக்குள் சென்று பூட்டி கொள்வது வழக்கமாகும்.

இந்நிலையில் தீபிகாவின் உறவினருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதையடுத்து சில பொருட்கள் வாங்க நினைத்த தீபிகா சனிக்கிழமை தன்னை ஷொப்பிங் அழைத்து செல்லுமாறு தீபக்கிடம் கூறியுள்ளார்.

ஆனால் தனது அலுவலகத்தில் அதிக வேலை உள்ளதாக கூறிய தீபக் ஞாயிறு அழைத்து செல்வதாக கூறி அலுவலகத்துக்கு சென்று விட்டார். பின்னர் மாலை தீபக் வீட்டுக்கு வந்த வந்த போது அவர் மீது போபத்தில் இருந்த தீபிகா தனது அறைக்குள் சென்று பூட்டி கொண்டுள்ளார்.

இரவு முழுவதும் அறை கதவை திறக்காததால், தீபக் வீட்டு ஹோலிலேயே படுத்து தூங்கியுள்ளார். காலை எழுந்தும் தீபிகா கதவை திறக்காததால் சந்தேகமடைந்த தீபக் கதவை உடைத்துப் பார்த்த போது மின்விசிறியில் தீபிகா சடலமாக தொங்கியுள்ளார்.

பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் நடந்த அனைத்து விடயங்களையும் தீபக் பொலிசில் கூறியுள்ளார். இதையடுத்து தீபிகா சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை தீபிகா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் குடும்பத்தார் புகார் எதுவும் கூறவில்லை.

கட்டு வெடியில் சிக்குண்டு பரிதாபமாக பலியாகிய முதியவர்!!

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெலங்கஹஉல்பொத்த பகுதியில் கட்டு வெடியில் சிக்குண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் நேர்ந்துள்ளது. தான் வைத்த கட்டுத்துவக்கில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் வழமையாக கட்டுத்துவக்கு வைத்து மிருகங்களை வேட்டையாடி வருபவர் எனவும் காட்டுக்கு போனவர் வீட்டுக்கு வராத நிலையில் அவரை தேடிச்சென்ற போது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த தினயாகே சிறிவர்தன (57 வயது) என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் காட்டில் காணப்படுவதாகவும் விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் முன்னெடுத்து வருன்றனர்.

நூறு ஆண்டுகள் பழமையான இலங்கை நாணயங்கள் இந்தியாவில் கண்டுபிடிப்பு!!

இலங்கையில் புழக்கத்தில் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான நாணயங்கள் தமிழகம் – சேதுக்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலை பாடசாலையில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதனை கண்பிடித்துள்ளனர்.

குறித்த மாணவர்கள், பழங்காலத்துப் பொருட்கள், நாணயங்கள், வரலாற்றுச் சுவடுகள் ஆகியவற்றை சேகரித்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்திய நாணயங்களை குறித்த மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி இலங்கை நாணயம் 1 சதம் ஒன்றும், அரை சதம் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த நாணயம் கி.பி.1901, 1912, 1926 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் ஒரு பக்கத்தில் விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மறு பக்கத்தில் தாளிப்பனை மரம் உள்ளது. அத்துடன் நாணயத்தின் மதிப்பு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.

வட்டவடிவிலான செப்பு நாணயங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நாணயத்தில் அரை என்னும் பின்னம் பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் காணப்படுவதை போன்ற தமிழ் எண்ணுருவில் பதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு கருத்து தெரிவிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்கள் இராமாயாணத்துடன் தொடர்புடையன. சேதுக்கரைக் கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்கிறார்கள். மேலும் வைகையின் கிளை ஆறான கொற்றக்குடி ஆறு, திருப்புல்லாணி வழியாகச் சென்று சேதுக்கரையில் கடலில் கலக்கிறது.

இதனால் இக்கடலோரத்தில் பழைய காசுகள் கிடைப்பதுண்டு. ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. புனித நீராடலுக்காக இலங்கையில் இருந்து மக்கள் இங்கு வந்துள்ளார்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு வேலைக்காகச் சென்று திரும்பி வந்தபோது அங்குள்ள நாணயங்களை கொண்டு வந்துள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குளிர்பானம் என எண்ணெய் மருந்தை பருகிய இரண்டரை வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை!!

குளிர்பானம் எனக் கருதி எண்ணெய் மருந்து வகையொன்றை பருகிய இரண்டரை வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நொச்சியாகம, அபகஹாவெவ என்னும் பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டரை வயதான சொனக்ஸா வன்னிநாயக்க என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சோடா போத்தல் ஒன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வகை எண்ணெய் மருந்தை குளிர்பானம் என கருதி இந்த சிறுவன் பருகியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவன் இந்த பானத்தை பருகியதாகவும் வயிறு வலிக்கின்றது எனவும் தாயிடம் கூறியுள்ளான்.

பின்னர் தாயும் தந்தையும் நொச்சியாகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆறு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த போதிலும் சிகிச்சைகள் பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

வாத நோய்க்கு பயன்படுத்தும் பழைய எண்ணெய் மருந்து ஒன்றையே சிறுவன் பருகியுள்ளான் என தெரிவிக்கப்படுகின்றது.

விசம் உடலில் கலந்தமையே இந்த மரணத்திற்கான காரணம் என சட்ட வைத்திய அதிகாரி எம்.கே.சேனாநாயக்க அறிவித்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த இவரைக் கண்டால் தெரியப்படுத்துங்கள்!!

தனது மனைவியை கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் காரணமாக தனது 6 வயதுடைய மகனை பாடசாலைக்கு சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தனது மனைவியை கண்டுபிடித்துத்தருமாறு அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

வவுனியா தோணிக்கல் பார்க்குழி வீதியைச் சேர்ந்த குமாரையா ரஞ்சனி என்ற 40 வயதுடைய பெண் ஒருவரே கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.

அவர் மோட்டார் சைக்கிளுடன் காணாமல் போயுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டிற்கு அமைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தமிழ்வின்-

ஹொலிவுட் நடிகை ஜெசிகா ஃபால்க்ஹோல்ட் கார் விபத்தில் பலி!!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹொலிவுட் நடிகை ஜெசிகா ஃபால்க்ஹோல்ட் (Jessica Falkholt) விபத்தில் சிக்குண்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Home and Away திரைப்படத்தில் நடித்த இவர் மூன்று வாரங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தாருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்திற்குள்ளானார்.

எதிரே வந்த கார் இவர்கள் பயணித்த காரில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஜெசிகாவின் தந்தை லாட்ஸ் (69), தாயார் விவிலியன் (60) ஆகியோர் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ஜெசிகாவும் அவரது தங்கை அனபெல்லேயும் (21) சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று நாட்களில் அனபெல்லே உயிரிழந்தார்.

இந்நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த ஜெசிகாவும் (29) நேற்று (16) உயிரிழந்துள்ளார்.

மற்றொரு காரை ஓட்டிவந்த 50 வயதான க்ரைக் விட்டல் என்பவரும் விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் காமெடியனாக நடிக்கவேண்டும் : நடிகர் விக்ரம்!!

விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம், ஸ்ரீமன், இயக்குனர் விஜய் சந்தர். கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் தாணு பேசுகையில், இந்த படத்திற்கு தற்போது பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. மலேசியாவில் கபாலி 72 சென்டர்களிலும், ஸ்கெட்ச் 71 சென்டர்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது. தஞ்சாவூரில் இந்த படம் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டது. தற்போது நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி .’ என்றார்.

விக்ரம் பேசுகையில்,‘ கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து, அதற்காக கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். கேமராமேன் சுகுமார் மூலமா டைரக்டர் விஜய் சந்தர் அறிமுகமாகி, என்னிடம் கதையைச் சொன்னார். அந்த கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டது. இதுக்காக நான் சுகுமாருக்கு தான் நன்றி சொல்லணும். இந்த படத்துக்கு சுகுமார் பயங்கரமா வொர்க் பண்ணியிருக்கார். படத்தோட டோன் ரியலிஸ்டிக்காகவும், கமர்சியலாவும் இருக்குறதுக்கு அவர் தான் காரணம்.

அதைவிட டைரக்டர் விஜய் இந்த கதையை பிரசண்ட் பண்ண ஸ்டைல் ரொம்ப புதுசா இருந்துச்சி. அவரோட காஸ்டிங் ஹண்ட்டிங்லேர்ந்து சின்ன சின்ன டீடெயில் வரைக்கும் அவரு எல்லாம் புதுசா இருக்கணும்னு நெனச்சி பண்ணார். அவரோட டயலாக், சென்ஸ் ஆஃப் ஹியூமர், பஞ்ச் டயலாக், ஸ்லாங், மியூசிக் சென்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். சூட்டிங் ஸ்பாட்ல நா கேட்டா கூட பஞ்ச் டயலாக்க உடனே சொல்வார். மாத்தி சொல்லுங்கன்னு சொன்னாக்கூட உடனே மாத்தி அத விட பவர்ஃபுல்லா சொல்வார். அவ்வளவு டேலண்ட் உள்ள கிரியேட்டர். இந்த படத்தோட ஃபர்ஸ்ட் ஓபனிங்கே ‘கனவே கனவே..’ என்ற பாடலோடத்தான் ஆரம்பிச்சது.

இந்த படம் ரிலீஸானப்புறம் தொடர்ந்து 30, 40 தடவ படத்த ஆடியன்சோட பாத்துட்டு இருக்கார். ஆடியன்ஸ் ரசிக்கிறத இவர சந்தோஷமா ரசிச்சார். நா எப்படி 1999 டிசம்பர் 10 சேது ரிலீஸானப்போ ஒவ்வொரு தியேட்டருக்கா போயி ஆடியன்ஸ் என்ஜாய் பண்றத ரசிச்சனோ அதே மாதிரி இப்போ டைரக்டர் விஜய் ரசிச்சிட்டு இருக்கார். இந்த சந்தோஷம் எப்படியிருக்கும்னா ஒரு பொண்ண லவ் பண்றா மாதிரி இருக்கும். மனசுல சந்தோஷம் இருக்கும். தூக்கம் வராது. பசியிருக்காது. இந்த மாதிரி ஒரு வெற்றியை கொடுத்ததுக்காக டைரக்டர் விஜய் சந்தருக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன்.

இந்த படத்தோட ரிலீஸ தாணு சார் கையில் சென்றவுடன் நா சந்தோஷமாயிட்டேன். அவருக்கு மார்க்கெட்டிங் ஸ்ட்ராஜிடி அத்துப்படி. இந்த படத்தோட ப்ரொடியூஸர்ஸ் பார்த்தி அண்ட் சீனு, இவங்க டைரக்டருக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. படத்துக்கு என்ன வேணும்னு கேட்டு கேட்டு செஞ்சாங்க. எல்லாரும் கேக்குறாங்க. ஏன் இப்படி ஒரு படம்னு.? பட், இந்த படம் எப்படி கமர்சியலா சக்ஸஸ் ஆவும்னு எனக்கு மட்டும் தான் தெரியும். இப்போ கூட ஸ்கெட்ச்சுக்கு தியேட்டர் இன்கிரீஸ் ஆயிட்ருக்குன்னு செய்தி வந்துட்டேயிருக்கு. இத தான் தாணு சாரும் உங்ககிட்ட சொன்னார். நா கூட சத்யம்ல மேட்னி ஷோவுக்கு போனேன். எவ்வளவு கூட்டம். சத்யம்னாலே ரசிகர்கள் அமைதியா படத்த ரசிப்பாங்க. ஆனா ஸ்கெட்ச்சா கலாட்டாவா ஆடியன்ஸ் பாத்தப்போ எனக்கு சந்தோஷமாயிருந்தது.

இந்த படத்துக்கு தமன் சாரோட பேக்ரவுண்ட் ஸ்கோர் பிரமாதம். பல சீன எலிவேட் பண்றதே தமனோட பிஜிஎம் தான். உண்மையச் சொல்லணும்னா இந்த படத்துக்கு மியூசிக்கும் ஒரு கேரக்டரா ஆடியன்ஸ ரீச் பண்ணிச்சி.இதுக்காக தமனுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்

இந்த படத்தோடஓபனிங்லேர்ந்து சாங்கோட லிரிக் வீடியோவ கிரியேட் பண்ணி வெளியிட்டு இந்த ஸ்கெட்ச்ச பத்தி ஹைப் கொடுத்த மகேசுக்கு நன்றி.

இந்த படத்துக்கு என்னோட பேன்ஸ் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. ஒவ்வொரு வீடியோவ சோசியல் மீடியாவுல அப்லோட் பண்றதிலிருந்து. ஸ்கெட்ச்சோட டீ சர்ட்ட போட்டுகிட்டு டான்ஸ் ஆடிகிட்டே படம் பாத்து என்ஜாய் பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. ஒவ்வொரு ரசிகர்களும் அவங்க வீட்ல ஒருத்தர என்ன கொண்டாடுறது எனக்கு கிடைச்ச பெரிய கிப்ட்.

என்னோட லைப்ல லாஸ்ட் இயர் என்னோட பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சி. என்னோட அப்பா தவறிட்டாங்க. ஆனாலும் இந்த மீடியாவோட சப்போர்ட் நா எதிர்பார்த்தவிட பெரிசா இருந்திச்சி. அதுக்கு எவ்வோ நன்றி சொன்னாலும் அது சாதாரணமானதாகத்தான் இருக்கும். இருந்தாலும் நன்றி.

சூரி நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான் தான். அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனது பண்ணி சரியென்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்ல இரண்டு பேரும் ஹீரோவா நடிக்க ரெடி. இல்ல இன்னொரு படத்துல அவர் கூட சேர்ந்து நடிக்கணும். இருந்தாலும் சூரி ஒரு பர்பெக்ட் ஜென்டில்மேன். படபிடிப்புக்கு வருவது தெரியாது. போவதும் தெரியாது. பாஸ்ட்டா போற ஸ்கிரிப்ட்ல இவரோட சீன் ஸ்பிடு பிரேக் மாதிரி இருந்ததால தூக்கிட்டோம். இதுக்கு காரணம் நான் தான்.அதுக்காக சூரிகிட்ட நா ஸாரி கேட்டுகிறேன்.

இந்த படத்திற்காக உழைத்து அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.

இயக்குநர் விஜய் சந்தர் பேசுகையில்,‘ இந்த படத்தில் ஒரு பாடலை எழுதியதற்கு விக்ரம் சாரின் தூண்டுதல் தான் காரணம். ஒருவரிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் விக்ரமிற்கு நிகர் அவர் தான். இந்த படத்துல என்னோட ஸ்கிரிப்ட் லாஸ்ட் டிவென்டி மினிட்ஸ் தான் நான் ஹோல்ட் பண்ணியிருப்பேன். அத ஆடியன்ஸ கரெக்ட்டா ரீசிவ் பண்ணி ரியாக்ட் பண்ணதாலத்தான் இந்த படம் சக்ஸஸ் ஆச்சி. இந்த படத்திற்காக உழைத்து அனைவருக்கும் நன்றி.’ என்றார்.