இப்படியும் ஒரு திருடன்!!

பெங்களூரு மெட்ரோ ரயில் சாரதிகளாகப் பணியாற்றும் இளம் பெண்கள் சிலர், பொலிஸில் வித்தியாசமான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது..

இவ்விளம்பெண்கள் பையனஹப்பள்ளியில் உள்ள பெங்களூரு ரயில்வேக்குச் சொந்தமான அடுக்கு மாடி விடுதிகளில் தங்கியுள்ளனர்.

கடந்த பதினோராம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில், தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் தூக்கம் கலைந்து எழுந்தார். அப்போது, அறையில் நபர் ஒருவர் கையில் கத்தியுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர், அருகில் தூங்கிக்கொண்டிருந்த தோழியைத் தட்டியெழுப்பினார்.

துணிச்சலை வரவழைத்துக்கொண்ட அந்தப் பெண், “யார் நீ?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர், தான் ஒரு திருடன் என்றும் தமது குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.

சில நிமிடங்களில் அந்த அறையை விட்டு வெளியேறிய அந்த நபர், கொடியில் காய்ந்துகொண்டிருந்த உள்ளாடைகள் சிலவற்றைக் காட்டி, அவை அவர்களுடையனவா என்று கேட்டபடியே அவற்றை மோப்பம் பிடித்துள்ளார். பின்னர் அவர்களது பதிலுக்காகக் காத்திராமல், அவ்வுள்ளாடைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.

இவ்வாறு அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொகுசு வேனை போலி பத்திரங்களுடன் அடகு வைக்க முற்பட்ட இருவர் கைது!!

மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் தலவாக்கலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா எலயில் உள்ள வாகனம் விற்பனை செய்யும் நிலையத்தில் இருந்து 80 இலட்சம் ரூபா பொறுமதியான வாகனம் ஒன்றை லீசிங் முறையில் கொள்வனவு செய்து, அந்த வாகனத்துக்கு போலியான பத்திரங்களை தயாரித்து 35இலட்சசம் ரூபாவிற்கு ஆடகு வைக்க தலவாக்கலை பகுதிக்கு வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று இ்று (17) புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.

தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்கள் இது போன்ற வியாபாரத்தில் பலவருடகாலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட இருவரும் நுவரெலிய நீதவான் முன்னிலையில் அஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

டெல்லியில் இரத்த காயத்துடன் இறந்து கிடந்த தமிழக மாணவர் : கொலை செய்யப்பட்டாரா?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் உள்ள கழிவறையில் தமிழக மாணவர் சடலமாக கிடந்த நிலையில் அவர் தலையில் ரத்த காயம் உள்ளதால் கொலை செய்யப்பட்டாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துமனை கல்லூரியில் எம்.எஸ் படித்து வந்தார். மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கியிருந்த சரத்பிரபு அங்குள்ள கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

சரத்பிரபுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட கழிவறையில் ஊசி கண்டெடுக்கப்பட்டதாகவும், பொட்டாசியம் குளோரைட் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

இது தற்கொலையாக இருக்கும் என பொலிசார் முதலில் சந்தேகப்பட்ட நிலையில் சரத்பிரபுவின் தலையில் ரத்தகாயம் உள்ளதை கண்டுப்பிடித்துள்ளனர். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கமாட்டார் என்றும் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பொலிசார்ர் சந்தேகிக்கின்றனர்.

சரத்பிரபுவுடன் அரவிந்த், கார்த்திகேயன் உட்பட தமிழகத்தை சேர்ந்த 4 பேர் தங்கியிருந்தனர். இதில் கார்த்திகேயன், அரவிந்த் ஆகியோரை தனி அறையில் வைத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் கார்த்திகேயன் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே உண்மை தெரிய வரும் என கருதப்படுகிறது.

சரத்பிரபு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் கூறும் நிலையில் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத தனது மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என சரத்பிரபுவின் தந்தை செல்வமணி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

டிசம்பரில் வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை பார்த்த மக்கள் : எங்கே தெரியுமா?

 
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் கடந்த டிசம்பர் மாதம் வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை அங்குள்ள மக்கள் பார்த்துள்ளனர்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சுமார் 18 மணி நேரம் மொஸ்கோவில் வெயில் அடிக்கும் என கூறும் ஆய்வாளர்கள், கடந்த டிசம்பர் மாதம் மிகவும் இருள் சூழ்ந்த மாதமாக இருந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி டிசம்பர் மாதத்தில் தினசரி ஒரு மணி நேரமேனும் சூரிய வெளிச்சம் தென்படும் எனவும் ஆனால் கடந்த டிசம்பரில் மொத்தமாக வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை மக்கள் பார்த்துள்ளனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மொஸ்கோவில் 3 மணி நேரம் மட்டுமே சூரிய வெளிச்சத்தை மக்கள் பார்த்துள்ளனர். இதுவே அப்போது வரைக்கும் சாதனையாக இருந்து வந்துள்ளது.

மேலும் மொஸ்கோவில் கிழக்கே 3,300 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Yakutia கிராமத்தில் வெப்பநிலை -67C என பதிவாகி, உலகின் கடுங்குளிர் பிரதேசம் என்ற பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வீதியில் பிச்சையெடுக்கும் மிகப்பெரிய கோடீஸ்வரர்!!

இந்தியாவில் வீதியில் பிச்சையெடுக்கும் கோடீஸ்வரரை பொலிசார் மீட்டு அவர் குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் உள்ள வீதியில் வயதானவர் ஒருவர் பிச்சையெடுத்தபடி இருந்துள்ளார். அவரை சமீபத்தில் பார்த்த பிரிஜிமோகன் என்ற காவலர் அருகில் சென்று அவர் குறித்த தகவலை கேட்டுள்ளார்.

பின்னர் தட்டுதடுமாறி தனது பெயர் சிவச்சன் (60) என கூறிய முதியவர், பச்வாரா பகுதியில் தனது வீடு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிவச்சனால் சரியாக பேச மற்றும் எழுந்து நடக்கமுடியாத நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பிச்சையெடுத்து வந்துள்ளார். சிவச்சன் கூறிய பகுதியில் சென்று பொலிசார் விசாரித்த போது அவர் மிக பெரிய கோடீஸ்வரர் என தெரியவந்தது.

அதே நேரத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. சிவச்சனுக்கு 70 ஏக்கர் நிலமும், ஆறு கடைகளும் சொந்தமாக உள்ளது. அவர் குடும்பத்தை கண்டுப்பிடித்த பொலிசார் அவர்களிடம் சிவச்சனை ஒப்படைத்தனர்.

சிவச்சன் சகோதரர் ராமன் கூறுகையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் தசரா திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றோம். அங்கு சிவச்சன் தொலைந்து போய்விட்டார். பொலிசார் உதவியுடன் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தற்போது அவர் திரும்ப கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார். சிவச்சனுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

8 வயதில் மூன்று குழந்தைகளை கொலை செய்த உலகின் இளம் வயது கொலையாளி!!

உலகளவில் இளம் வயதில் சீரியல் கில்லர் என அழைக்கப்படும் அமர்ஜித் சடா, தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டு புது வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

தனக்கு 8 வயது இருக்கையில் அமர்ஜித் 3 குழந்தைகளை கொலை செய்துள்ளான். 1998 ஆம் ஆண்டு பீகாரின் முசாரி என்ற கிராமத்தில் பிறந்த இச்சிறுவனின் தந்தை ஒரு கூலித்தொழிலாளி ஆவார்.

2006 ஆம் ஆண்டு இச்சிறுவன் முதல் கொலை செய்துள்ளான், தனது உறவுக்காரின் 6 மாத குழந்தையை கொலை செய்துள்ளான். அதன்பின்னர், சில மாதங்கள் கழித்து தனது சொந்த தங்கச்சியை கொலை செய்துள்ளான். ஆனால் இது தங்களின் குடும்ப பிரச்சனை என சிறுவனின் பெற்றோர் இதனை மூடி மறைத்துள்ளனர்.

அதன்பின்னர் அருகில் வசிப்பவரின் 6 மாத குழந்தையை கொலை செய்துள்ளான். இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கூறப்பட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.

மேலும் கொலைக்கான காரணமாக, நான் பிஸ்கேட் கேட்டேன், ஆனால் எனக்கு கொடுக்காமல் என்னை பார்த்து சிரித்தது, இதனால் கொலை செய்தேன் என இந்த 8 வயது சிறுவன் அளித்த பதில் பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்தது.

இதனைத்தொடர்ந்து, இச்சிறுவனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், Conduct Disorder எனப்படும் நடத்தை பிரச்சனை இருக்கிறது என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர், அதாவது தன்னிடம் நடந்துகொள்ளும் விதம் மற்றும் அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காணுதல் பிரச்சனை இருந்துள்ளது.

இந்திய சட்டத்தின் படி, மிக சிறிய வயதிலான இந்த சிறுவனுக்கு தகுந்த தண்டனை வழங்கலாகாது என்பதால், இச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

அதன்பின்னர் இச்சிறுவன் என்ன ஆனான் என்பது குறித்து யாரும் அறியப்படாத நிலையில், 18 வயதை எட்டியுள்ள இவன், தனது பெயரை Samarjit என மாற்றிக்கொண்டு, குழந்தைகள் இல்லத்தில் புது வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அரை நிர்வாணமாக இறந்து கிடந்த தொகுப்பாளினி வழக்கில் திருப்பம் : நடந்தது என்ன?

மும்பையில் அரை நிர்வாணமாக இறந்து கிடந்த தொகுப்பாளினி வழக்கு தொடர்பாக அவரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்பிதா திவாரி (24) என்ற தொகுப்பாளினி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி தனது காதலர் பங்கஜ் (30) மற்றும் நண்பர்களுடன் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்தார்.

15வது மாடியிலிருந்த கழிப்பறை ஜன்னல் வழியாக அர்பிதா கீழே குதித்தார் என அவருடன் இருந்தவர்கள் பொலிசாரிடம் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் அர்பிதாவுடன் தங்கியிருந்த நண்பர்களில் ஒருவரான அமித் ஹஸ்ராவை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

அர்பிதாவை கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் அவரை பொலிசார் கைது செய்தனர். அர்பிதா இறக்கும் போது உடனிருந்த அனைவரிடமும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அர்பிதாவின் தந்தை கூறுகையில், பங்கஜ், அமித், மனிஷ், ஸ்ரவன் ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்பில் சம்பவம் நடந்த அன்று தங்கியிருந்தனர். சமையல்காரரும் உடன் தங்கியிருந்தார், இவர்களில் யாராவது அல்லது எல்லோரும் சேர்ந்து தான் அர்பிதாவை ஏதாவது செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

அதே சமயத்தில் தற்போது கைது செய்யப்பட்ட அமித், அர்பிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வந்துள்ள நிலையில் அதுகுறித்தும் பொலிசார் விசாரிக்கிறார்கள்.

பொலிஸ் விசாரணையில் பங்கஜ் கூறுகையில், நாங்கள் அதிகாலை 4 மணிக்கு தான் தூங்க சென்றோம். 9 மணிக்கு நான் எழுந்து பார்த்த போது அர்பிதாவை வீட்டில் காணவில்லை.

ஜன்னல் வழியாக பார்க்கும் போது அரைநிர்வாண நிலையில் இரண்டு மாடிகளுக்கு இடையில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார் என கூறியுள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அர்பிதாவின் சகோதரி ஸ்வேதா கோரிக்கை வைத்துள்ளார். அர்பிதாவின் நண்பர் லக்கி சர்மா கூறுகையில், தனக்கும் காதலர் பங்கஜுக்கும் பிரச்சனை உள்ளது என அர்பிதா தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தாயின் தொண்டைக்குள் கைத்தொலைபேசியைப் போட்டு இறுக்கி கொலை செய்த மகன்!!

தாயின் தொண்டைக்குள் கைத்தொலைபேசியை செலுத்தி, மூச்சடைக்கச் செய்து தாயை கொலை செய்ததாக கூறப்படும் மகனை ஊவா பரணகம பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஊவா பரணகம மொரகொல்ல உமானதி கிராமத்தில் வசித்து வந்த ரத்நாயக்க முதியான்சலாகே கருணாவதி என்ற 61 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சந்தேக நபரான மகன் நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி இரவு தானும் மனைவியும் வீட்டில் புறப்பட்டு சென்று மறுநாள் வீட்டுக்கு வந்த போது தாய் படுக்கையில் இறந்து கிடந்ததாக மகன் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

எனினும், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என கருதி நீதவான் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும், இதற்கு அமைய பதுளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேதப் பரிசோதனை நடத்தியுள்ளார்.

மூச்சை இறுக்கியதால், மரணம் சம்பவித்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, செல்போனை தொண்டைக்குள் போட்டு இறுக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வட பகுதி கடற்பரப்பில் பெருந்தொகை தங்கம் மீட்பு!!

 
வட பகுதி கடற்பரப்பில் பெருந்தொகை தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில், மீன்பிடிப் படகொன்றில் நங்கூரத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

வட கடல் ஊடாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவதாக காங்கேசன்துறைகடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்கம் சுமார் 7 கிலோகிராம் என கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். தங்கத்துடன் வடமராட்சியை சேர்ந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தங்கத்தின் பெறுமதி 5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கம் இன்று யாழ். தெல்லிப்பழையிலுள்ள சுங்கப்பிரிவினரிடம் கையளிக்கப்படுவதுடன் சந்தேகநபர்களையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இலங்கை வந்த வெளிநாட்டவர்களின் மோசமான செயல்!!

இலங்கை வந்த வெளிநாட்டவர்கள் இருவர் இலங்கைப் பிரஜை ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து சுமார் 28000 ரூபா பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாரவில – கட்டுனேரி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்ற இரு வெளிநாட்டுப் பிரஜைகள், அங்கு பணியாற்றும் நபரிடம் சிலிண்டர் ஒன்றின் விலையை விசாரித்துள்ளனர்.

ஒருவர் விலை தொடர்பில் விசாரிக்க மற்றைய நபர் அப்பணியாளரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளார். இதன்போது, இந்த நாட்டில் உள்ள பெறுமதி கூடிய நாணயம் பற்றியும் விசாரித்துள்ளனர்.

மேலும் பணியாளரின் கையிலிருந்த பணத்தை பார்க்க வேண்டும் எனக் கூறிய பின்னர் அந்த ஊழியர் 28,000 ரூபா பணத்தைக் காண்பித்த நிலையில், அப்பணத்தை மிக நூதனமான முறையில் அபகரித்துள்ளனர்.

அதன்பின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த பணத்தை நிறுவன முகாமையாளரிடம் ஒப்படைக்கும் போது அதில் பணம் குறைவாக இருப்பதாக ஊழியர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சோதனையிட்டுள்ளனர். அதில் குறித்த பணியாளரிடம் அங்கு வந்த இரு வெளிநாட்டவர்களும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் காட்சிகள் பதிவாகி இருப்பதை நிறுவன பணியாளர்கள் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் மாரவில பொலிஸ் நிலையத்தில் நிறுவன முகாமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு பணத்தை மோசடி செய்த இரு வெளிநாட்டவர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் மாரவில பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாடிய கனடா பிரதமர்!!

 
தமிழ் மக்களுடன் கனடா நாட்டு தலைமை அமைச்சர் பொங்கல் விழா கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 14 ஆம் திகதியன்று தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை தமிழர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடினர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழர்களுக்கு வாழ்த்து கூறினார்.

இங்கிலாந்து மற்றும் கனடா நாட்டு தலைமை அமைச்சர்களும் தமிழ் மக்களுக்கு பொங்கல் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பொங்கல் தினத்தன்று கனடிய தலைமை அமைச்சர், தமிழ் மக்களின் பாரம்பரியம் மற்றும் இந்த மதத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை கற்றுக்கொள்வதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என பொங்கல் தினம் குறித்து கூறினார்.

இந்நிலையில் தமிழ் மக்களுடன் இணைந்து, தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து கனடா பிரதமர் பொங்கல் விழாவை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.

அதன் புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் திடீரென சரிந்து விழுந்த மின்கம்பம்!!

 
வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையம் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திடீரென பேரூந்து நிலையப்பகுதியிலுள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. எனினும் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டு ஒருவருடமான நிலையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.

ஒருபோதும் ரஜனிகாந்த் ஆட்சியமைக்க முடியாது : வெளியான கருத்துக் கணிப்பு!!

 

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் 33 இடங்களில்தான் வெற்றி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஊடகம் ஒன்று தமிழக அரசியல் நிலவரம் குறித்து நடத்திய கருத்து கணிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பு முடிவுகளுக்கு அமைய, “ தேர்தல் நடைபெற்றால் தி.மு.க 130 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும். 2016ஆம் ஆண்டு தேர்தலை விட தி.மு.கவுக்கு 32 இடங்கள் அதிகமாக கிடைக்கும்.
அ.தி.மு.க படுதோல்வியைச் சந்திக்கும். அக்கட்சிக்கு 68 இடங்கள்தான் கிடைக்கும். 2016ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற 68 தொகுதிகளை அ.தி.மு.க இழக்கும். ரஜினிகாந்த் கட்சி 33 தொகுதிகளில் வெல்லும்.
இதர கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றும்” என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் ரஜினி வெல்ல முடியும் என 53 வீதமானவர்களும், ரஜினியால் வெற்றிபெற முடியாது என 34 வீதமானவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என 13 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வந்த இந்திய அமைதிப்படையின் தமிழ் இராணுவ வீரருக்கு சிலை!!

இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையில் பணியாற்றி உயிரிழந்த மேஜர் பரமேஸ்வரனின் சிலை தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலையினை சென்னை இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், இராணுவ கொமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் ராஜன் ரவீந்திரன் நேற்று திறந்து வைத்துள்ளார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “தமிழகத்தில் வலிமையான, அறிவுமிகுந்த இளைஞர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இராணுவத்தில் இணைந்துகொள்வதில்லை. அவர்கள் இராணுவத்தில் இணைந்துகொள்ள வேண்டும். இதேவேளை, இராணுவம் இலங்கைக்கு அமைதிப்படையாகவே சென்றது. கொடுத்த பணியையே செய்தது. உத்தரவுகளை பின்பற்றியது.

எவ்வாறாயினும், இராணுவத்தில் அரசியல் கிடையாது” என லெப்டினண்ட் ஜெனரல் ராஜன் ரவீந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மூவர் பலி!!

தமிழ் நாட்டில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற மஞ்சு விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது பார்வையாளர்கள் மூவர் காளை முட்டியதில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் – சிவகங்கை மாவட்டம் சிராவயலில் இடம்பெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்வில் பார்வையாளர்களை காளைகள் முட்டியதால் 70 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிகழ்வில் 77 காளை மாடுகள் கலந்துகொண்டன. பெரும் பாதுகாப்புக்கு மத்தியிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் நாச்சியாபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் உள்ள பாலக்குறிச்சி என்ற இடத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது பார்வையாளர் ஒருவர் காளை முட்டி உயிரிழந்தார்.
மேலும், இதன் போது 70 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு!!

ஒருநாள் சேவையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கான அடையாள அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பெருமளவானோர் நேற்று ஆட்பதிவு திணைக்களத்துக்கு சென்றுள்ளனர்.

எனினும், திணைக்கள சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரி ஒருவர்,

ஒருநாள் சேவையில் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுப்பதற்கான பணிகளை முன்னெடுக்கும் பல இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டார்

இந்தநிலையில் ஒருநாள் சேவைக்காக விண்ணப்பித்தவர்களது அடையாள அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.