ரயில் மோதுண்டு இரு உயிர்கள் பலி : மாணவி படுகாயம் : யாழில் நடந்த துயரம்!!

 
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டு பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக இரு பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த துரைசிங்கம் கீர்த்திகா (வயது 15) என்ற மாணவி படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகையிரதத்தில் மோதுண்ட பசு மாடுகள் பல மீற்றருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளன.

வீசப்பட்ட பசுக்கள் வீதியோரத்தில் நின்ற மாணவி மீது மோதுண்டதனால் மாணவி தரையில் வீழந்து படுகாயம் அடைந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாய்களின் குரலொலியை இனி மொழிபெயர்த்து புரிந்துகொள்ளலாம்!!

மனித இனத்துடன் இணக்கமாக ஒன்றி வாழும் செல்லப்பிராணிகளாய் நாய்கள் உள்ளன.

இந்நிலையில், நாய்களுடன் மக்கள் சரியாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள புதிய வழிமுறையொன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வழிமுறை மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விலங்குகளின் குரலொலி மற்றும் முக பாவனைகளை எளிமையாக ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய முடியும்.

வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கான் லெபோட்சிகோஃப் என்பவர் நாய்களின் உடல் மொழி மற்றும் அவை தகவல் பரிமாற்றம் செய்யும் வழிமுறைகள் குறித்து 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆய்வு செய்து வருகிறார்.

தனது ஆய்வு மட்டுமின்றி பல்வேறு இதர ஆய்வாளர்களின் தகவல்களைக் கொண்டு Pet Translator (விலங்கு மொழிமாற்றம்) எனும் சாதனத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கி வருகின்றார்.

அத்துடன் நாய்கள் குரைத்தல், உறுமல் மற்றும் ஊளையிடல் மூலம் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை செயற்கை நுண்ணறிவினால் கண்டறிய முடிகிறது.

Machine Learning மூலம் கம்ப்யூட்டர்கள் உதவியுடன் நாய்களின் உறுமல் மற்றும் வால் அசைவுகளால் அவை வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை புரிந்துகொள்ள முடியும் என லெபோட்சிகோஃப் தெரிவித்துள்ளார்.

இன்னும் 10 ஆண்டுகளில் நாய்கள் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை மனிதர்களால் மிக எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

தற்சமயம் லெபோட்சிகோஃப் மற்றும் அவரது குழுவினர் இணைந்து கண்டறிந்திருக்கும் புதிய வழிமுறையானது நாய்களின் மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்.

இவ்வாறான தொழில்நுட்ப சாதனங்கள் விலங்குகள் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை மிக எளிமையாக மனிதர்கள் புரிந்துகொள்ள வழி செய்யும்.

13 பிள்ளைகளை வீட்டில் அடைத்து, சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய பெற்றோர் கைது!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெர்ரீஸ் நகரில் வசித்து வருபவர்கள் டேவிட் ஆலென் டர்பின் (வயது 57) மற்றும் லூயிஸ் அன்னா டர்பின் (வயது 49). இவர்களுக்கு 13 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் இவர்கள் வெளியுலகு தெரியாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அங்கிருந்து தப்பிய அவர்களது 17 வயது மகள் கையில் கிடைத்த செல்போன் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவர்களின் வீட்டிற்குச் சென்ற பொலிசார், 2 வயது முதல் 29 வயது வரை இருந்த 13 பேரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

அங்கே 12 பேர் இருப்பார்கள் என தாம் தேடிச்சென்றதாகவும் 13 பேர் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

”அவர்களில் பலர் படுக்கையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருளில் இருந்தனர். அவர்களை சுற்றி துர்நாற்றம் வீசியது. பலருக்கு சரியான உணவு தரப்படவில்லை. அழுக்கடைந்த நிலையில் இருந்த அவர்களை ஏன் இப்படி வைத்திருந்தனர் என்பது பற்றி உடனடியாக அவர்களது பெற்றோரால் சரியான பதில் தர முடியவில்லை. பசியாக இருக்கிறது என கூறியதனை அடுத்து 13 பேருக்கும் உணவு மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டது,” என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து, கொடுமைப்படுத்தியது மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தியது ஆகிய குற்றங்களின் கீழ் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிணை பெற 90 இலட்சம் அமெரிக்க டொலர் தொகையைச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. அவர்கள் மீது வங்கிக்கொள்ளை முயற்சி வழக்கு ஒன்றும் முன்பே பதிவாகியுள்ளது.

50 குற்றவாளிகள் வேட்பாளர்களாகக் களமிறங்கும் தேர்தல் : மார்ச் 12 அமைப்பு அறிக்கை!!

குற்றங்கள் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய 50 பேர் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக ‘மார்ச் 12’ அமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்களில் ஐவர் பாதாளக்கோ‌ஷ்டித் தலைவர்கள் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற 56,066 வேட்பாளர்கள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின் பின்னர் மார்ச் 12 அமைப்பு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.

இந்த வேட்பாளர்களில் 14 பேர் சட்டவிரோத மதுபானம் சார்ந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல்களுடன் தொடர்புடைய 6 பேரும், குற்றச்செயல்கள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 6 பேரும், நிதி மோசடி செய்த 14 பேரும் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பாதாள உலகக்கோஷ்டித் தலைவர்கள் ஐவரும் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரும் மரக்கடத்தலில் ஈடுபட்ட நால்வரும் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

வவுனியாவில் காசநோய் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு போசாக்குணவு!!

 
வவுனியா பொதுவைத்தியசாலையில் உள்ள மார்பகசிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற்று வருகின்ற நோயாளிகளுக்கான போசாக்கினை மேம்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் V3 அமைப்பின் ஊடாக மாதாந்தம் போசாக்கு உணவினை வழங்கும் திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் இன்று (16.01.2018) செவ்வாய்க்கிழமை வவுனியா பொதுவைத்தியசாலை காசநோய்ப்பிரிவில் வைத்து வைத்தியர்கள் எஸ்.ஹரிஹரன், ம.கலைச்செல்வன் ஆகியோரிடம் மேற்படி போசாக்கு உணவுப்பொருட்களை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் கையளித்தார்.

மட்டக்களப்பில் காணாமல் போன தாய் கொழும்பில் மீட்பு!!

ஏறாவூர், புன்னைக்குடா பிரதேசத்தில் வைத்து கடந்த 11ஆம் திகதி காணாமல் போயிருந்த 60 வயதுடைய பெண் கொழும்பில் ஒரு வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் இன்றைய தினம் காலை மீட்கப்பட்டுள்ளதாக அவரது மகன் தங்கவேல் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த பெண் காணாமல் போனமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் உடனடியாக அவரை கொழும்பில் ஒரு வீட்டில் வைத்து பராமரித்து வருவதாக அவ்வீட்டார் தகவல் வழங்கியுள்ளனர்.

அவ்வீட்டார் வழங்கிய தகவலுக்கமையவே தனது தாயைக் கண்டு பிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புன்னைக்குடா வீதியை அண்டி வாழும் 60 வயதுடைய, 5 பிள்ளைகளின் தாயான சுமத்திரா தங்கவேல் காணாமல் போயுள்ளதாக அவரது மகனால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!

 
மட்டக்களப்பு – வாழைச்சேனை, பேருளாவெளி பகுதியில் இன்று காலை காட்டு யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் தம்பிமுத்து கந்தசாமி எனும் 55 வயது நபரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்படுள்ளது.

குறித்த நபர் தனது வயலுக்குள் இருந்து சேனைக்குடிலுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை தாக்கியுள்ளது.

இதனையடுத்து அந்த இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி சென்று மரண விசாரணை தொடர்பாக அறிக்கையிட்டுள்ளார்.

இதன் பின்னர் சடலம் வாழைச்சேனை வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் வைத்திய விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது!!

1995ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் ‘பெரியார் விருது’ வழங்கப்படுகிறது. இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி இந்த விருது வழங்கப்படுகின்றது.

இந்த ஆண்டுக்கான பெரியார் விருது நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான், சென்னை முன்னாள் மேயரும் மரத்தான் வீரருமான சைதை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன், இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், கவிஞர் சல்மா, ஓவியர் அபராஜிதன் ஆகிய 11 பேருக்கு 2018ம் ஆண்டிற்கான பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளை தி.க. தலைவர் வீரமணி அறிவித்தார். இந்த விருது வழங்கும் விழா ஜனவரி 15, 16 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறுகின்றது.

பேஸ்புக் நட்பால் கொழும்பு பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட நிலை!!

பேஸ்புக் நட்பால் பல இலட்சம் ரூபாவினை இழந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவி ஒருவரே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார். அவரிடம் 7 இலட்சத்து 75 ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவியுடன் பேஸ்புக் ஊடாக நட்புறவை ஏற்படுத்தி பாரியளவு பரிசு பெற்றுக் கொள்ள முடியும் என மோசடியாளர் தெரிவித்துள்ளார். அதனை நம்பி ஏமாந்த பெண் குறித்த மோசடியாளரின் வங்கிக் கணக்கில் 7 இலட்சத்து 75 ரூபாய் பணத்தை வைப்பிட்டுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி பரிசு கிடைக்கும் என தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறிப்பிட்ட மாதிரி பரிசு வந்து சேராமையினால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதனை மாணவி அறிந்துள்ளார்.

இந்த மோசடியில் சிக்கிய மாணவி கும்புருப்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இணையம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பெரிய மோசடியாகவே இது கருப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலைஞர்மடப் பகுதியில் கரையொதுங்கிய பெரிய கடல்பந்துகள்!!

 
முள்ளிவாய்க்காலில் இருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வலைஞர்மடப் பகுதி கடற்கரையில் இரண்டு பெரிய கடல்பந்துகள் இன்று கரையொதுங்கி உள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோடர் படகுகளில் சட்டவிரோத மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவோர் கடல்பந்து வளைகளை பயன்படுத்தி இருக்கலாம் என்று மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த கடல்பந்து வளைகள் சுமார் 25 கிலோ கிராம் எடையுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சட்டவிரோத மீன்பிடித்தொழில் அதிகரித்துள்ள காரணத்தினால் அப்பகுதி மீனவர்களின் கடற்தொழில் பாதிப்படைந்துள்ளதாக வலைஞர்மடம் மீன்பிடி சங்கத்தின் தலைவர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சட்டவிரோத மீன்பிடி தொழிலை மேற்கொண்ட வெளிமாவட்ட மீனவர்களின் போயா காவி மிதப்பு என்று அழைக்கப்படும் கடற்பந்துகளே இன்று இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் மரதன் ஓட்டப்போட்டியில் புதிய சாதனை படைத்த இலங்கைப் பெண்!!

அமெரிக்காவில் இடம்பெற்ற ஹுஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையின் சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஹிருணி விஜேரத்ன என்ற வீராங்கனையே இந்த சாதனையை புதுப்பித்துள்ளார்.

நேற்று முன்தினம் நிறைவடைந்த இந்த போட்டியில் ஹிருணி எட்டாவது போட்டியாளராக நிறைவு செய்தார். போட்டியை நிறைவு செய்ய ஹிருணி 2:36:35 மணி நேரத்தை செலவிட்டுள்ளார்.

முழுமையான அந்த போட்டியில் இருபாலாருக்கும் மத்தியில் இலங்கையின் சார்பில் ஹிருணி 51 வது இடத்தை பிடித்துள்ளார்.

நிலூக்கா ராஜசேகர என்பவரினால் நிகழ்த்தப்பட்ட சாதனையை, இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை பெண் ஒருவரினால் புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீதித்தடுப்பில் மோதி வானில் பறந்து மாடிக் கட்டிடத்தில் பாய்ந்து சொருகி நின்ற கார்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதித் தடுப்பில் மோதி வானில் பறந்து அருகிலிருந்த கட்டிடத்தின் மாடியில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதியின் வீதியில் அதிகாலை வேளையில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த வௌ்ளை நிற சொகுசுக் கார், கட்டுப்பாட்டை இழந்து வீதியின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு வானில் பறந்து எகிறிய கார், அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்து, சொருகி நின்றது.

பல் மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான கிளினிக்கில் நோயாளிகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்திருக்கும் அறைக்குள் முன்பகுதி புகுந்த நிலையில் பின்பக்கத்தின் பெரும்பகுதி அந்தரத்தில் தொங்கியபடி ஒரு கார் நிற்கும் காட்சியைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து சென்ற பொலிஸார் கிரேன் உதவியுடன் காரை அப்புறப்படுத்தியுள்ளனர். ஓட்டிச்சென்றவர் பற்றிய விபரங்கள் எவையும் வௌியிடப்படவில்லை.

பிரட்மனின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி தலைவர் விராட் கோலியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அவர் தனது 21வது சதத்தை பதிவு செய்தார்.

விராட் கோலி 217 பந்துகளில் 15 நான்கு ஓட்டங்களுடன் 153 ஓட்டங்கள் குவித்தார். அணி தலைவர் பதவியிலிருந்து அவர் 8வது முறையாக 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

இதன் மூலம் கிரிக்கெட் சகாப்தமான டொன் பிரட்மனின் சாதனையை கோலி தனது 65வது டெஸ்டில் சமன் செய்தார். பிரட்மன் அணித் தலைவர் பதவியிலிருந்து 8 முறையுடன் ஒட்டு மொத்தமாக 9 முறை 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

மைக்கல் கிளார்க் , மஹேல ஜயவர்த்தன, பிரைன் லாரா , ஸ்மித் ஆகியோர் தலா 7 தடவை அணி தலைவர் பதவியிலிருந்து 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

மேலும் செஞ்சூரியன் மைதானத்தில் சதம் அடித்த முதல் வெளிநாட்டு அணித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்பு இந்த மைதானத்தில் டோனி அணித் தலைவர் பதவியில் 90 ஓட்டங்கள் (2010) எடுத்ததே சிறந்த நிலையாக இருந்தது.

தென்னாபிரிக்க மண்ணில் சதம் அடித்த 2வது ஆசிய அணித் தலைவர் கோலி ஆவார். இதற்கு முன்னர் டெண்டுல்கர் 1997ம் ஆண்டு கேப்டவுன் மைதானத்தில்அணித் தலைவராக இருந்த போது 169 ஓட்டங்கள் குவித்தார். ஒட்டு மொத்தமாக அவர் தென்னாப்பிரிக்காவில் 5 சதங்கள் அடித்துள்ளார். கோலி 2 சதங்கள் அடித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பன்னங்கண்டி வாய்க்கால் பகுதியிலேயே இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் காணப்பட்ட இடத்தில், மோட்டார் சைக்கிளொன்றும் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

22 வயதான இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரியவரவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வட்ஸ்அப் பயனாளியா நீங்கள் : ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!!

வட்ஸ்அப் குரூப் செட்களை ஹெக் செய்ய முடியும் என்று ‘Real World Crypto security’ என்கிற இணைய ஆய்வுகள் குறித்த மாநாட்டில் ஜேர்மனைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் இந்த ஆய்வை முன் வைத்துள்ளனர்.

ருகர் பல்கலைக்கழக ஆய்வாளர்களில் ஒருவரான பௌல் ரோஸ்லர்,

“வட்ஸ் – அப் server ஐ ஹெக் செய்வதன் மூலம், வட்ஸ் – அப் குழுக்களுக்குள் நுழைந்து, வெளியிலிருந்து ஒருவரை அந்த குழுவுக்குள் இணைக்க முடியும், இப்படி இணைப்பதால் அந்த குழுவில் உள்ள அனைத்து நபர்களின் வட்ஸ் – அப் எண்களோடும் ஹெக்கர்களுக்கு ‘End to end encryption’ எனப்படும் தனிப்பட்ட உரையாடல் பாதுகாப்புத் தன்மையைப் பெற்றுவிட முடியும். இதைப்பயன்படுத்தி ஹெக்கர்கள் வட்ஸ் – அப் உரையாடல்களின் அந்தரங்கத் தகவல்கள் உள்ளிட்ட அனைத்தையும் திருடலாம்” என தெரிவித்துள்ளார்.

ஆனால் வட்ஸ் – அப் server ஐ ஹெக் செய்வதற்கு மிகச்சிறந்த தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஹெக்கர் குழுவால் மட்டுமே முடியும் என்றும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆய்வு முடிவுகளை வட்ஸ் – அப் செயலியின் தாய் அமைப்பான முகநூல் நிறுவனம் மறுத்துள்ளது.

மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை!!

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பகுதியிலுள்ள, உமாமில் வீதியைச் சேர்ந்த கந்தலிங்கம் ரேஸ்மியா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் 15 வயதான குறித்த மாணவியின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.