பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்ய வசதியான வர்த்தமானியை மீளப்பெற அனுமதி!!

மதுபான விற்பனை தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட வர்த்தமானியை மீளப் பெற அமைச்சரவை ஏகமனதாக அனுமதியளித்துள்ளது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானம் விற்பனை செய்யும் நேரத்தை அதிகரித்தல் மற்றும் பெண்கள் மதுபான கொள்வனவில் ஈடுபடுவது, மதுபான விற்பனை, தயாரிப்பு நிலையங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துதல் போன்றவற்றுக்கு இருந்த தடையை நீக்குதல் தொடர்பில் அண்மையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரவுள்ளதாக நிதி அமைச்சு தெரியப்படுத்தியது.

எனினும், இந்த திருத்தம் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என, அகலவத்தை பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கருத்து வௌியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதனை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

வவுனியாவிலும் கணவனை இழந்த ஆசிரியைகளிடம் பணம் பறிக்கும் மோசடி!

வவுனியாவில் கடமையாற்றும் பாடசாலை ஆசிரியர்களிடம் வட மாகாண திட்டமிடல் கிளையில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி பணம் பறித்து வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா பிரபல பாடசாலைக்கு கடந்த வெள்ளிக்கிழமை 0768689726 என்ற இலக்க தொலைபேசியில் இருந்து அழைப்பை எடுத்த நபரொருவர், தான் வட மாகாண திட்டமிடல் கிளையில் பணியாற்றும் என். எஸ். கிரிசாந்தன் எனவும் தங்களது பாடசாலையில் கடமையாற்றும் கணவனை இழந்த ஆசிரியைகளின் விபரங்களையும் கோரியுள்ளார்.

பாடசாலை பிரதி அதிபரும் தமது பாடசாலையில் கற்பிக்கும் கணவனை இழந்த ஆசிரியைகள் இருவரின் தொலைபேசி இலக்கத்தினையும் அவாகளின் சேவைக்காலம் மற்றும் பெரையும் வழங்கியுள்ளார். இந்நிலையில் குறித்த நபர் சம்பந்தப்பட்ட ஆசரியர்களுக்கு அழைப்பையேற்படுத்தி வட மாகாண திட்டமிடல் கிளையினால் 7 இலட்சம் ரூபா தங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அதனை பெறுவதற்கு சனிக்கிழமை 10 மணிக்கு 56 ஆயிரம் ரூபா பணத்துடன் மாகாண அலுவலகத்திற்கு வருமாறும் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த ஆசிரியர்கள் சுதாகரித்து பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறு ஒரு நடைமுறை இருக்குமானால் வட மகாணசபை எழுத்து மூலம் அறிவிக்கும் எனவும் பணத்தினை கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார். இந் நிலையில் நேற்று திங்கட்கிழமை மாகாண திட்டமிடல் கிளைக்கு தொடர்பை ஏற்படுத்திய அதிபர் குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவித்த போது அவ்வாறான நபரொருவர் தமது திணைக்களத்தில் இல்லை எனவும் போலியான தகவல் எனவும் கூறியுள்ளனர். எனவே இவ்விடயம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய தேவையேற்பட்டுள்ளதாக குறித்த பாடசாலை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

-தமிழ் வின் –

ஜனாதிபதியிடம் ஓடிவந்த சிறுமி : அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சம்பவம்!!

உள்ளூராட்சி சபை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீ.சு.கட்சியின் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி, ஒரு சிறுமியுடன் உரையாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அகலவத்தை நகரில் நேற்று இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த சமரசிங்க உள்ளிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பல முக்கிய அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு நடுவில் ஒரு சிறுமி ஜனாதிபதியிடம் வருவதற்கு ஆசைப்பட்டு முயற்சி செய்துள்ளார்.

இதை அவதானித்த ஜனாதிபதி குறித்த சிறுமியை தனக்கு அருகில் அழைத்து அவருடன் கலந்துரையாடியுள்ளார்.

தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சின்னஞ்சிறு சிறுமி ஒருவர் ஜனாதிபதியுடன் உரையாடியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதற்கு முன்னரும் ஜனாதிபதி தான் செல்லும் கூட்டங்களிலோ அல்லது வீதியிலோ, தன்னை சந்திக்க வரும் சிறுவர் சிறுமிகளையோ கவனிக்காமல் விட்டதில்லை. அவர்களுக்கும் மதிப்பு கொடுத்து, அவர்களிடம் கலந்துரையாடி அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எருமைக் கன்றை விழுங்கிய மலைப்பாம்பு : அச்சத்தில் மக்கள்!!

கஹந்தமோதர, தில்லவடவன பிரதேசத்தில் பாரிய மலைப்பாம்பு ஒன்று எருமை கன்று ஒன்றை விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எருமைக் கன்றை விழுங்கி மிகவும் சிரமத்தில் இருந்த குறித்த மலைப்பாம்பை கண்டு பிரதேசவாசிகள் வனவிலங்கு அலுவலகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் பாம்பை பிடித்து புந்தல தேசிய பூங்காவில் விடுவித்துள்ளனர்.

குறித்த மலைப்பாம்பு ஏனைய கால்நடைகளை விழுங்கக்கூடும் என பிரதேசவாசிகள் தெரிவித்ததுடன், அச்சம் வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்தே குறித்த மலைப்பாம்பை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்ததாக கலமெடிய வனவிலங்கு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஆலயத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வெளிநாட்டுப் பெண்ணின் செயல்!!

 

தமிழர் திருவிழாவான பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. உழவரின் உழைப்பும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளின் உழைப்பும் சேர்ந்ததே, நாம் உண்ணும் உணவு.
 அதன் காரணமாகவே மாடுகளை வழிபடும் விதமாக, நன்றி மறவாமல் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும், மாடுகளை சுத்தம் செய்து, மாலை போட்டு, பொங்கல் பொங்கி மாடுகளை கடவுளாக வழிபடுவார்கள்.

தமிழர் திருவிழாக்களை வெளிநாட்டவர்கள் விரும்புவதுடன், அவர்களும் கொண்டாடுவதற்கு விருப்பப்படுவார்கள். தமிழர் முறைப்படி திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு தமிழர் கலாச்சாரமும், விழாக்களும் அவர்களுக்கு பிடித்துபோகின்றது.

அந்த வகையின் இன்று மாட்டுப்பொங்கல் தினத்தன்று கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைத்தந்திருந்த வெளிநாட்டுப் பெண்ணின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த பெண் குட்டையாக ஆடை அணிந்திருந்தாலும், ஆலயத்திற்குள் வரும் போது தனது சால்வையால் உடலை முழுவதும் மூடியவாறு வந்திருந்தார்.

அத்துடன், மாடுகளுக்கு அருகில் செல்ல பயப்படும் இளைஞர் யுவதிகளுக்கு மத்தியில் குறித்த வெளிநாட்டுப்பெண் அந்த மாடுகளுக்கு அருகில் சென்று உணவு கொடுத்து இரு கரம் கூப்பி கும்பிட்டுள்ளார்.

கனடாவில் இலங்கை தமிழ் இளைஞன் குத்திக் கொலை!!

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். Oshawa வணிக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

17 வயதான நிவேதன் பாஸ்கரன் என்ற இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய இளைஞன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட பாஸ்கரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறின் அடுத்தே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாஸ்கரன் மிகவும் மகிழ்ச்சியான இளைஞர் எனவும், எப்போதும் சிரித்தவாறு காணப்படும் ஒருவர் எனவும், தன்னை எப்போதும் சிரிக்க வைத்து கொண்டிருப்பார் எனவும் பாஸ்கரின் நண்பர் Cassidy Grayson பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Maxwell Heights Secondary பாடசாலை கற்ற பாஸ்கரின் கொலை சம்பவம் தொடர்பில் பாடசாலை வாரியம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. எனினும் வியாழனன்று வகுப்புகள் முடிந்து சிறிது நேரத்தின் பின்னர் நடந்த சம்பவங்களை விபரிக்கும் அறிக்கை ஒன்று பாடசாலை இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய மாணவர் கைது செய்யப்பட்டதனை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரின் விபரங்கள் இளைஞர் குற்றவியல் நீதி சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளமையினால் ஊடகங்களுக்கு அவரது தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எனினும் இளைஞனின் மரணம் தொடர்பில் நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிட்டுள்ளதுடன், இளைஞனின் மரண சடங்குகளுக்காக நிதி சேகரித்து வருகின்றனர்.

வானில் பறக்கும் பட்டத்தில் ஆடும் மனிதர்கள் : பிரம்மிக்க வைத்த வல்வெட்டித்துறை!!

 
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்டம் ஏற்றும் போட்டி நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் வகையிலும், ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் சுமார் 60 பட்டங்கள் ஏற்றப்பட்டன. இவற்றில் பறக்கும் மேடையில் பொம்மலாட்டம் பட்டம் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

அந்தப் பட்டத்தை வடிவமைத்த ம.பிரசாந்த்க்கு 15 ஆயிரம் ரூபா பணமும் ஒரு பவுண் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

அன்னப்படகு பட்டம் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது. அதனை வடிவமைந்த ம.ஆரோக் என்பவருக்கு அரை பவுண் தங்க நாணயமும், 10 ஆயிரம் ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை உருமாறும் ரான்ஸ்போமர் பெற்றுக்கொண்டது. அதனை வடிவமைத்த வெ.ராஜேந்திரனுக்கு துவிசக்கர வண்டி ஒன்றும், 5 ஆயிரம் ரூபாய் பணமும் பரிசாக வழங்கப்பட்டது.

ஆனால் நேற்று உதயசூரியன் கடற்கரையில் பறக்கவிடப்பட்ட அனைத்து பட்டங்களுமே பார்வையாளர்களை வியக்கவைத்தன. கற்பனைக்கு எட்டாத வகையில் இந்த இளைஞர்கள் பட்டங்களை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட மாட்டுப்பொங்கல்!!

 
தைத் திருநாளின் இரண்டாம் நாளான இன்று, ஆண்டு முழுவதும் தங்களுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழர்களால் மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

உழவர்களின் நண்பர்களான மாடுகளை அலங்கரித்து அவற்றிற்கு பூஜைகள் செய்து தெய்வமாக வணங்கப்படும். மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து வவுனியாவில் பல்வேறு இடங்களில் மாட்டுப்பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்பட்டன.

வவுனியா யுரேனஸ் இளைஞர் கழகத்தினர் கொண்டாடிய தைப்பொங்கல் விழா 2018!!

 
யுரேனஸ் இளைஞர் கழகம், சிறகுகள் இளைஞர் அமைப்பு மற்றும் யுரேனஸ் விளையாட்டு கழகம் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் விழா நேற்று (14.01.2018) காலை 10.30 மணிக்கு சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய முன்றலில் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், மாணிக்கம் ஜெகன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆலய பிரதம குரு சண்முகநாத குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்

இத் தைப்பொங்கல் விழா எம் இனத்தை நிலை நிறுத்த போதையில் இருந்து விடுபடுவோம். எனும் நோக்கோடு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. மாற்றத்தை தமிழர் திருநாளும் தமிழின் முதல் நாளும் ஆன தைப்பொங்கல் தினத்தில் இருந்து ஆரம்பிக்கின்றோம் என்று தனது உரையில் கணேசலிங்கம் சிம்சுபன் குறிப்பிட்டத்தோடு சிகரட் பாவனையில் இருந்து விடுபடுவோம் என்ற துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறகுகள் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள் மூலமாக சேர்க்கப்பட்ட நிதியில் வறிய மாணவர்களுக்கு அப்பியசாக் கொப்பிகளும் வழங்கப்பட்டன.

வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில பொங்கல் விழா!!

 
வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நேற்று(15.01) இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி சுகானி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை கலாச்சார நடனங்கள் தைப் பொங்கல் விழாவை பற்றிய சிறப்பு சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தழிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் சிறப்பு விருந்தினர்களாக சதாசிகர் குருக்கள், சிவகுகநாதக் குருக்கள், சண்முகநாதக் குருக்கள், மயூரக் குருக்கள், ராஜ்மோகசர்மா வாசுதேவசர்மா ஆகிய மதத்தலைவர்களும் வவுனியா மாவட்ட இளைஞர்சேவைகள் மன்ற உதவிப்பணிப் பணிப்பாளர் செனவிரத்ன, வவுனியாமாவட்ட செயலக இந்து கலாச்சார அபிவிருத்தி அதிகாரி கஜேந்திரன் தமிழ்விருட்சம் அமைப்பின் செயலாளர் ஜெகன், வவனியா மாவட்ட இளைஞர் கழக அங்கத்தவர்கள், நாடக இயக்குனர் சு.வரதகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இப் பொங்கல் விழாவிற்கான அனுசரனையை தமிழ்விருட்சம் அமைப்பினர் வழங்கினர்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா!!

 
2018ம் கல்வியாண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று (15.01.2018) சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை பிரதி அதிபர் மதிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை முன் வாயிலில் தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்கள் தரம் 1 இல் கற்பதற்காக பாடசாலைக்கு வருகை தந்த புதிய மாணவர்களை மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றதுடன், பான்ட் வாத்தியத்துடன் அவர்களை அரவணைத்து பாடசாலைக்கு அழைத்துச் சென்றனர். இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையினால் 180 குடும்பத்தினருக்கு பொங்கல் பொருட்கள்!!

 
வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையினரால் 180 பேருக்கான பொங்கலுக்கு தேவையான அனைத்து பொதிகளுடனும் அவரவர் ஊர்தேடிச் சென்று வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் காலை கோவில்குளம் மஹாவிஷ்ணு தேவஸ்தானத்தில் ஆச்சிபுரம், சிதம்பரபுரம், இறம்பைக்குளம், மகா இறம்பைக்குளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற 47 குடும்பங்களுக்கும் பேரவையின் தலைவர் சிவ.கஜேந்திரகுமார், நிர்வாக உறுப்பினர் வை.மயூரகுருக்கள், வைத்தியர் ராமச்சந்திரன் பேரவையின் மூத்த உறுப்பினர் பாலா ஆகியோர் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து கல்மடு, பூம்புகார், ஈஸ்வரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு கல்மடுவில் வைத்தும், கந்தசாமி நகர், சாம்பல் தோட்டம், சமயபுரம், சுந்தரபுரம் சாஸ்த்திரி கூழாங்குளம் கிராமத்தை சேர்ந்த 53 குடும்பத்தினருக்கு சாம்பல் தோட்டம் விநாயகர் ஆலயத்தின் அருகே அமைந்துள்ள மண்டபத்திலும் கன்னாட்டி ஓமந்தை பனிக்க நீராவியை சேர்ந்த 20 குடும்பத்தினருக்கு பனிக்க நீராவியில் அமைந்துள்ள திருமண மண்டபத்திலும் தம்பனைச்சோலை கிராமத்தை சேர்ந்த 10 குடும்பத்தினருக்கு அக்கிராமத்திலும் வைத்து வழங்கப்பட்டது.

கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களை வடமாகாண சபை ஊக்குவிக்க வேண்டும் : சு.வரதகுமார்!!

 
கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களினை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை வடக்கு மாகாணசபை முன்னெடுக்கவேண்டும் என வவுனியா நகரக்கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான உலக உணவுத்திட்ட இணைப்பு அதிகாரி சு.வரதகுமார் தெரிவித்தார்.

தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா வவுனியா கல்நாட்டினகுளம் பாடசாலையில் பாடசாலை அதிபர் கே.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது இதன்போது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் தொகை குறைவு என்ற காரணங்களை காட்டி நாங்கள் அவர்களுக்கான பௌதீக வளத்தேவைகளை வழங்குவதில் பின்னடித்துவிடமுடியாது.

கிராமிய பண்புகளைக்கொண்ட கிராமப்புறப் பாடசாலைகளின் வளர்ச்சியினால் கிராமியப் பண்புகளும் கிராமிய விழுமியங்களும் கட்டியெழுப்பபடுகிறது.

தற்காலத்தில் ஒரு சில கிராமப்புற பாடசாலைகளில் கிராமிய கலைவிழாக்கள் அழகாக கொண்டாடப்படுகிறன. பாரம்பரிய விளையாட்டுக்கள் கொண்டாடப்படுகிறன. கிராமிய கலாச்சாரத்தை கட்டியெழுப்ப வடக்குமாகாணசபை முன்வரவேண்டும்.

கிராமிய விழாக்கள், கிராமிய விளையாட்டுக்களை கிராமப்புற பாடசாலைகளிருந்து வளர்த்தெடுக்கவேண்டும். கிராமப்புறப் பாடசாலைகளில் கிராமப்புற பாடசாலைகளில் கற்பதை ஊக்கிவிக்ககூடிய வகையில் கிராமப்புற பாடசாலை மாணவர்களை ஊக்கிவிக்கும் கல்விச்செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

அவர்களிற்கான பாடசாலை பௌதீக வளத்தேவைகள், உள ஆற்றுப்படுத்தல் தேவைகள், உடற்கல்விச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதன்மூலம் கிராமப்புறத்தில் பல கல்வியலாளர்கள் உருவாகுவார்கள். இதன் ஊடாக கிராமப்புறங்கள் வளர்ச்சியடையும்.

கிராமப்புறங்களில் வீடுகளில் அவர்களின் ஆக்கச்செயற்பாட்டை முன்னெடுக்கும் போட்டிகளுக்கு பரிசில் வழங்கும் செயற்றிட்டத்தை வடக்குமாகாணசபை முன்னெடுக்கவேண்டும்.

வெகுவிரைவில் கிராமியப் பண்பாட்டின் அனுகூலங்களை புரிந்து கொண்டு நகர்ப்புறத்தினரும் கிராமியப்பண்புகளை நோக்கி நகர்வார்கள். இதன் மூலம் நல்லதொரு எதிர்கால சமூகம் கட்டியெழுப்பப்படும் என்றார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர் பாடசாலை ஆசியர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாண T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பொலிஸ் அணி சம்பியன்!!

 
ஆகாஷ் குழு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வட மாகாண T20 கிரிக்கெட் போட்டியில் வவுனியா பொலிஸ் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

வட மாகாண கிரிக்கெட் விளையாட்டின் ஒரு வளர்ச்சிப் படியாக ஆகாஷ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வடமாகாண T20 கிரிக்கெட் போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த 31 ஆம் திகதி முதல் நடைபெற்ற இந்தப் போட்டியில் முப்பத்து மூன்று அணிகள் பங்கேற்றன. இந்த T20 போட்டியின் இறுதியில் ஆகாஷ் சம்பியன் கிண்ணத்தை வென்ற சம்பியன் அணி, ரன்னர்அப் மற்றும் சிறந்த பந்துவீச்சு, சிறந்த துடுப்பாட்டம், தொடரின் வெற்றி வீரர், ஆட்ட நாயகன் அனைவருக்கும் பெறுமதியான பணப் பரிசில்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

சனிக்கிழமை நடைபெற்ற அரைஇறுதி சுற்றில் வவுனியா பொலிஸ் அணியும், செட்டிகுளம் காரைநகர் விளையாட்டு அணியும் மோதின. அதே தினத்தில் புனித ஜோசப் விளையாட்டு அணி மற்றும் வவுனியா யுனிபைட் விளையாட்டுக் கழக அணியும் மோதியது. இந்தப் போட்டிகளில் வவுனியா பொலிஸ் அணியும், வவுனியா யுனிபைட் விளையாட்டுக் கழக அணியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை மோதின.

இறுதிப் போட்டியின் போது 10 ஓவர்களைக் கொண்ட ஆகாஷ் நிறுவன ஊழியர்களுக்கும் மற்றும் ஆதிவாசிகளுக்கு இடையிலான மென்பந்துப் போட்டி ஒன்றும் நடைபெற்றது. அத்துடன் பாராம்பரிய கலாசாரங்களை வெளிப்படுத்தும் நடன நிகழ்வுகளும், ஆதிவாசிகளின் விசேட பூஜைகளும் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் வவுனியா பொலிஸ் அணி வெற்றி பெற்று 2 இலட்சம் ரூபாய் பணப் பரிசிலைப் பெற்றதுடன் யுனிபைட் அணி இரண்டாம் இடத்தைப் பெற்று ஒரு இலட்சம் ரூபாய் பணப் பரிசிலையும் பெற்றுக் கொண்டது.

இதில் ஆகாஷ் குழு நிறுவனமான தலைமை அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி எஸ்.ராமசுப்ரமணியன், குறஜித்த நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளை அதிகாரிகள், வவுனியா மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் திருட்டு!!

 
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இன்று (15.01.2017) அதிகாலை திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் மேல் பகுதியினூடாக நுழைந்த திருடர்களே இத்திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் ஆலயத்தில் இருந்த தேர் திருப்பணி உண்டியல் உட்பட மேலுமொரு உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆலயத்தின் அலுவலக அறையின் கதவு மற்றும் யன்னல் உடைக்கப்பட்டிருந்ததுடன் அலுவலகத்தினுள் புகுந்து பணத்தினையும் திருடர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.

அத்துடன் ஆலயத்தின் மற்றுமொரு அறையில் வைக்கப்பட்டிருந்த தேர் திருப்பணிக்கான பற்றுச்சீட்டுக்களை ஆலயத்தின் பின்புறமாக கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இந் நிலையில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா!!

 
2018ம் கல்வியாண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று (15.01.2018) காலை 9 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.

கல்லூரியின் முதல்வர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகர கோட்ட கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராசா, சிறப்பு விருந்தினர்களாக மும்மதப் பெரியோர்கள் கல்லூரியின் பிரதி அதிபர் கு.முல்லைக்குமார், ஆரம்பப்பிரிவு அதிபர் ஞானமதி மோகனதாஸ், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர் செ.சந்திரகுமார் (கண்ணன்) பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் நிர்வாகிகள், இணைப்பாடவிதான பிரதி அதிபர் திருமதி எஸ்.ரவீந்திரன், மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் , மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.