வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய தைபொங்கல் விழா -2018

 
வவுனியா ஓமந்தை  அரசர்பதி ஸ்ரீ கண்ணகை  அம்பாள்  ஆலயத்தில் நேற்று  14.01.2018  ஞாயிற்றுகிழமை  காலை 9.00 மணி முதல்  பொங்கல் விழா இடம்பெற்றது .

முற்றிலும் பாரம்பரிய முறைப்படி  கோவில் வயலில் நெல்லை அறுவடை செய்து நெற்கதிர் ஊர்வலமாக மாட்டு வண்டியில் எடுத்துவரப்பட்டு ஆலய முன்றலில் பாரம்பரிய முறையில் குத்தி அரிசி ஆக்கப்பட்டு கண்ணகை அம்மனுக்கு விசேட பொங்கல்  நிகழ்வு  இடம்பெற்றதுடன்  கண்ணகை  அம்பாளுக்கு விசேட   விசேட  பூஜை  நிகழ்வுகள்  இடம்பெறு வீதி   வலம் வந்த  நிகழ்வும் இடம்பெற்றது.  மேலும்  கலை நிகழ்ச்சிகளும்,சிறப்பு நடனம் ,சிறப்பு மேள கச்சேரி , உறிஉடைத்தல் போன்ற நிகழ்வுகளும்  இடம்பெற்றன.

மேற்படி  நிகழ்வில் வவுனியா  மாவட்ட  மேலதிக  அரச அதிபர்  மற்றும்  வவுனியா  பிரதேச  செயலர்  ஆகியோரும்  கலந்து கொண்டனர் .

வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் திருட்டு..!!

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள விநாயகர்  ஆலயத்தில் இன்று அதிகாலை திருட்டு ச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் மேல் பகுதியினூடாக ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்களே இத்திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் ஆலயத்தில் இருந்த தேர் தீருப்பணி உண்டியல் உட்பட மேலுமொரு உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆலயத்தின் அலுவலக அறையின் கதவு மற்றும் யன்னல் உடைக்கப்பட்டிருந்ததுடன் அலுவலகத்தினுள் புகுந்து பணத்தினையும் திருடர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.

அத்துடன் ஆலயத்தின் மற்றுமொரு அறையில் வைக்கப்பட்டிருந்த தேர் திருப்பணிக்கான பற்றுச்சீட்டுக்களை பையொன்றில் கட்டி ஆலயத்தின் பின்புறமாக கைவிட்டு சென்றுள்ளனர்.

இந் நிலையில் இத்திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் அதிசய கோழி முட்டை!!

ஹட்டன் நகரில் வீடொன்றில் இயங்கும் கோழிப் பண்ணையில் கோழி ஒன்று நேற்று அபூர்வமான முட்டையை இட்டுள்ளது.

சாதாரணமாக ஒரு முட்டையின் எடையானது 80 முதல் 90 கிராம் எடையுடன் காணப்படும். எனினும் இந்த முட்டை 120 கிராம் எடையுடன் கூடியது. என்பது மிகவும் பெரிய முட்டையாக காணப்படுகிறது.

இந்த கோழிப் பண்ணையில் வளர்க்கப்படும் கோழி ஒன்று முதல் முறையாக இவ்வாறு பெரிய முட்டையை இட்டுள்ளதாக அதன் உரிமையாளரான எஸ்.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த காரியம்!!

 
இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் காலி கோட்டையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் காலி கோட்டைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த சிறுவன் கையில் பையொன்றினை வைத்துக் கொண்டு, அந்த பகுதியில் காணப்பட்ட குப்பைகளை அகற்றியுள்ளார்.

சிறுவனின் இந்த நடவடிக்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அந்த சிறுவனிடம் பிரதேச மக்கள் “ஏன் இவ்வாறு குப்பைகளை அகற்றுகின்றீர்கள்?” என கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்து பேசிய அந்த சிறுவன், “இலங்கை ஒரு அழகான நாடு, அதை அழகாக வைத்திருப்பது எனது கடமை” எனக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் பனிப்பாறை படிவங்கள் கண்டுபிடிப்பு!!

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பனிப்பாறை படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஷேன் பைரன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலம் அங்கு முகாமிட்டு செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு, சுற்றுச் சூழல், தட்பவெப்ப நிலை குறித்த தகவல்களை புகைப்படம் மூலம் அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பனிப்பாறை படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நிலப்பரப்பில் இருந்து 100 மீட்டர் வரை அவை படர்ந்து கிடக்கின்றன. இது போன்ற பனிப்பாறைகள் அங்கு 8 இடங்களில் இருப்பதாக அரிசோனா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஷேன் பைரன் தெரிவித்துள்ளார்.

உழவர் திருநாளிலேயே உழவர் பலியான சோகம்!!

கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கற்கிளாச்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சித்தாண்டி பிரதான வீதியை அண்டி வாழும் தம்பிமுத்து கந்தசாமி (வயது 57) என்ற விவசாயியே உயிழந்துள்ளார்.

இவர் தைப்பொங்கல் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை வயல் பகுதியூடாக வரும்போது குறிக்கிட்ட காட்டு யானை இவரைத் தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் தினத்தில் பட்டாசு கொழுத்திய சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!!

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக மன்னார் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் பட்டாசு கொழுத்திய 11 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டாசுகளை கோர்த்து அவற்றை கொழுத்திய போதும் அது வெடிக்காததன் காரணமாக அதன் அருகில் சென்று அவற்றை மீண்டும் கொழுத்த முயற்சிக்கையில் அவை திடீரென வெடித்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு சிறுவர்கள் சிறு காயமடைந்துள்ளதால் அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் தேவையேற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் அந்த சிறுவனின் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இரண்டு கண்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறியுள்ளார்.

வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா!(படங்கள்)

 

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகமும் எல்லப்பர்மருதங்குளம் சிவன் முதியோர் இல்லமும் அல்லையூர் இணையத்துடன் இணைந்து பரீஸ் லாசப்பல் தமிழ் வர்த்தகர்கள் அனுசரணையில் நடாத்தும் மாபெரும் பொங்கல் விழா 14.01.2018 ஞாயிறு மாலை 2 மணிக்கு சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது.

சிவன் முதியோர் இல்லம் மற்றும் கோவில் குளம் சிவன் ஆலய செயலாளர் ஆ.நவரட்ணராஜா தலைமையில் நடைபெற்ற  இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன..

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், கௌரவ விருந்தினர்களாக பிரதேச செயலாளர் க.உதயராசா, , சட்டத்தரணி க.தயாபரன், நகரசபை செயலாளர் இ.தயாபரன் ஆகியோரும்,சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் மாவட்ட முதியோர் சங்கத்தலைவர் வைத்தியர் க.இராமச்சந்திரன், ஓய்வுபெற்ற அதிபர் சி.வையாபுரிநாதன், வவுனியா இந்துக்கல்லூரி அதிபர் த.பூலோகசிங்கம், தமிழ் விருட்சம் சந்திரகுமார் கண்ணன் ஆகியோரும் கலந்து  கொண்டனர் .

மேற்படி பொங்கல் விழாவில்   வணக்கம்  வரவேற்பு நடனம் என்பவற்றை தொடர்ந்து வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைகளத்தின் உத்தியோகத்தர்  செல்லத்துரை ஸ்ரீநிவாசன் வரவேற்புரை  வழங்க   வவுனியா கோவில்குள அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவல்சபையின்  செயலாளர்  ஆறுமுகம்  நவரட்ணராஜா  அவர்களின்  தலைமையுரை இடம்பெற்றது.

தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர்  திருச்செல்வம் திரேஸ்குமார்  சட்டத்தரணி  தயாபரன் ஆகியோர் உரையாற்றினர்

நிகழ்வில் விசேட அம்சமாக தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இன்பமாக வாழ்வதற்கு பெரிதும் துணை நிற்பவர்கள் நட்புகளே …! உறவுகளே..! என்ற தலைப்பிலான பட்டிமண்டபமும் இடம்பெற்றது.

மேற்படி  பட்டிமண்டப நிகழ்வில் எஸ்.எஸ்.வாஸன், சட்டதரணி தயாபரன்  , ஜெ.திருவரங்கன், ம.மதியழகன், திருமதி கி.கிசாலினி, திருமதி நந்தீஸ்வரி ஆகிய பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

 

வவுனியாவில் பொங்கல் தினத்தில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு!!

 
பொங்கல் தினத்தினை முன்னிட்டு வவுனியா தரணிக்குளம், கல்மடு 2ம் யுனிட் பகுதியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட முன்னாள் போராளிகள் இருவருக்கு கனடா கியுபைக் மொன்றியல் நகரைச் சேர்ந்த பாராவூர்தி சாரதிகள் நற்பணி மன்றத்தினால் இன்று (14.01.2018) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

முன்னாள் போராளிகள் ஆகிய நாங்கள் வறுமைக்கோட்டிற்குட்பட்டு கடும் வறுமைக்கு மத்தியில் வாழ்வதாக கனடா கியுபைக் மொன்றியல் நகரைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகள் நற்பணி மன்றத்தினருக்கு விடுத்த வேண்டுகோளிக்கிணங்க ஒருவருக்கு சுமார் ரூபா 5000 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று வீதம் இருவருக்கு இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவித்திட்டத்தினை நற்பணி மன்றத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளான பா.கதீஷன், பா.லம்போதரன் , வ.பிரதீபன் ஆகியோர் வழங்கினர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தைப் பொங்கல் நிகழ்வுகள்!!

 
வவுனியாவின் பல பகுதிகளில் இன்று (14.01.2018) உழவர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பாக இடம்பெற்றது.

ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் பொது இடங்கள் மற்றும் சிறுவர், முதியோர் இல்லங்கள் எனப் பல்வேறு இடங்களிலும் பல்வேறு தரப்பினராலும் இன்று பொங்கல் பொங்கி தைத்திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குறிப்பாக வவுனியா நகரிலுள்ள குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம் , வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயம், அருள்மிகு மாடசாமி ஆலயம் உட்பட சகல இந்து ஆலயங்களிலும் பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு மக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் பொங்கி மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.

சூரிய பகவானை தைத் திருநாளிலே வழிபடும் முகமாக அதிகாலையிலே பொங்கலுக்குரிய வேலைகளை முடித்து சூரிய பகவான் காலையில் எழுந்துவரும் வேளையில் பொங்கல் படைத்து விசேட வழிபாடுகள் செய்வது தமிழர் பண்பாடாகும்.

இன்று நடைபெற்ற தைத் திருநாள் நிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு சூரிய பகவானுக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!!

இன்று(14.01.2018) அதிகாலை வவுனியா புகையிரத நிலைய வீதியில் பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதுடன் ஏனைய இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்

மேலதிக சிகிச்சை பயனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா வைரவபுளியன்குளத்தைச் சேர்ந்த பிரதாப் வயது 21, இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் (யுகு) வயது 24 ஆகிய இளைஞர்களே விபத்தில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப்போட்டி!!

தமிழர் திருநாளான தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் கடந்த 02.12.2017 ஆரம்பிக்கப்பட்ட அணிக்கு ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாத அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் வெகு விமரிசையாக இன்று(14.01.2018) தைப்பொங்கல் தினத்தன்று நடைபெறஉள்ளன.

அத்துடன் மன்னார் மாநகரின் புகழ்பூத்த கழக அணி மற்றும் கிளிநொச்சி மாநகரின் புகழ்பூத்த கழக அணிக்கும் இடையேயான காட்சிப்போட்டிகளும் கோலாகலமாக நடைபெற உள்ளன.

எனவே அனைத்து கால்ப்பந்து ஆதரவாளர்கள், ஆவலர்கள் , நண்பர்கள், நலன்விரும்பிகள், பொது மக்கள் அனைவரையும் போட்டிகளை கண்டுகளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி
லயன்ஸ் விளையாட்டுக்கழகம்
பூந்தோட்டம்,வவுனியா.

ஐரோப்பிய நாட்டில் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி!!

இத்தாலியில் வாழும் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளாஸ்டிக் அரிசியை உணவாக உட்கொண்டமையினால் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலி, ஜினொவா நகரத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. குறித்த நகரத்தில் உள்ள சீன கடை ஒன்றில் பெற்றுக் கொண்ட அரிசியை சமைத்து உணவாக உட்கொண்டதன் பின்னர் அவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதுடன் வாந்தி, பேதி என பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் உட்கொண்ட அரிசியை சோதனையிட்ட போது அது பிளாஸ்டிக் அரிசி என தெரியவந்துள்ளது. இந்நிலையில் இத்தாலி பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெண்ணொருவர் வெட்டிக்கொலை!!

மொறட்டுவை – ராவத்தாவத்தை பிரதேசத்தில் கத்தியால் வெட்டி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

44 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் கொலையை செய்தது யார் என்பது கண்டறியப்படவில்லை.

மொறட்டுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் மாபெரும் பொங்கல் விழா!!

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகமும் எல்லப்பர்மருதங்குளம் சிவன் முதியோர் இல்லமும் அல்லையூர் இணையத்துடன் இணைந்து பரீஸ் லாசப்பல் தமிழ் வர்த்தகர்கள் அனுசரணையில் நடாத்தும் மாபெரும் பொங்கல் விழா 14.01.2018 ஞாயிறு மாலை 2 மணிக்கு சிவன் முதியோர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

சிவன் முதியோர் இல்லம் மற்றும் கோவில் குளம் சிவன் ஆலய செயலாளர் ஆ.நவரட்ணராஜா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், கௌரவ விருந்தினர்களாக பிரதேச செயலாளர் க.உதயராசா, வவுனியா கல்வியல் கல்லூரி பீடாதிபதி க.சுவர்ணராஜா, சட்டத்தரணி க.தயாபரன், நகரசபை செயலாளர் இ.தயாபரன் ஆகியோரும்,

சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் மாவட்ட முதியோர் சங்கத்தலைவர் வைத்தியர் க.இராமச்சந்திரன், ஓய்வுபெற்ற அதிபர் சி.வையாபுரிநாதன், வவுனியா இந்துக்கல்லூரி அதிபர் த.பூலோகசிங்கம் முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர் க.நடராஜா, தமிழ் விருட்சம் சந்திரகுமார் கண்ணன் ஆகி யோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வில் விசேட அம்சமாக தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இன்பமாக வாழ்வதற்கு பெரிதும் துணை நிற்பவர்கள் நட்புகளே …! உறவுகளே..! என்ற தலைப்பிலான பட்டிமண்டபமும் இடம்பெறவுள்ளது.

இதில் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாஸன், ல.சதீஸ்குமார் , ஜெ.திருவரங்கன், ம.மதியழகன், திருமதி கி.கிசாலினி, திருமதி நந்தீஸ்வரி ஆகிய பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பி.ப 1 மணிக்கு வவனியா யங்ஸ்ரார் மைதானத்தில் இருந்து போக்குவரத்துக்கான பஸ் வண்டிகள் புறப்படுகின்றன.

வவுனியா வடக்கு மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கிய வெளிச்சம் அறக்கட்டளை!!

 
வவுனியா வெளிச்சம் அறக்கட்டளை அமைப்பு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து 2018 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் முகமாக நெடுங்கேணிப் பகுதியில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களான கற்குளம், ஒலுமடு போன்ற பிரதேசங்களில் மிகவும் வறிய நிலையிலும் பிள்ளைகளின் பராமரிப்பு இல்லாமல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் அவர்களுடைய வீடுகளுக்கு நேரில் சென்று நேற்றையதினம் (12.01.2017) வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், செயலாளர் தி.கார்த்திக், மற்றும் உறுப்பினர் வ.பிரதீபன், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் சமூகசேவை உத்தியோகஸ்தர் திருமதி.வி.பிறேமநிதி, சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி செ.கலா, கற்குளம் கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி புவிதா, ஒலுமடு கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சு.ரஜனிகாந்தன், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கோ.கேசவன், போன்றவர்கள் கலந்து கொண்டனர்.