மக­ளை­யும் கொன்று தாயும் தற்கொலை : யாழில் நடந்த துயர சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில் தாயொருவர் தனது பிள்ளையை கொலை செய்து தானும் தற்கொலை நேற்று செய்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி பகுதியை சேர்ந்த 26 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இந்த கொடூர செயலை செய்துள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தாயின் தவறான முடிவால் 6 வயதான பாலகி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றைய குழந்தையையும் கொல்வதற்குத் தாய் முயன்றபோதும் அவர் தப்பியோடி அயலவர்களுக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவம் வெளியே தெரியவந்தது.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டையே அந்தப் பெண் இப்படித் தவறான முடிவெடுப்பதற்குக் காரணம் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையில் நேற்றைய தினம் சண்டை முற்றிய நிலையில் மாலையில் தாயார் தானும் பிள்ளைகளும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

ஒரு மகள் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், கடைசி மகளைத் தூக்கிலிட்டுவிட்டு மற்றைய மகளையும் தூக்கிலிட முயன்றிருக்கிறார். பயந்து போய் தாயிடமிருந்து தப்பித்து ஓடிய அந்தப் பிள்ளை அயலவர்களிடம் தகவல் சொல்லியுள்ளார்.

அயலவர்கள் வந்து பார்த்தபோது தாயும் பிள்ளையும் தூக்கில் தொங்கியபடி இருந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்து விரைந்தனர். எனினும் தாயார் ஏற்கனவே இறந்திருந்தார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்படும் போது உயிருடன் இருந்த சிறுமி 4 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார். இருவரது சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சியை சேர்ந்த 30 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடமிருந்து 3 கிலோ 570 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் சாத்தியம்!!

இலங்கையின் மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், சில கடற்கரை பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும், மொனராகலை, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுகிறது. அத்துடன், காங்கேசன்துறையில் இருந்து புத்தளம் வழியாக கொழும்பு வரையிலும், காலியிலிருந்து மாத்தறை வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியில் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்வதற்காக சாத்தியமும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமாக மரணம்!!

வவுனியா மருக்காரம்பளை கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சிவகுமார் கஜந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மர்மமாக மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் நேற்று இரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் திடீரென தன் தந்தையை அழைத்து தான் விஷம் அருந்தியுள்ளதாக கூறியதையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதித்ததும் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருடைய மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.‌

இலங்கை இந்திய ரசிகர் நட்பு : நெகிழ்ச்சியான சம்பவம்!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் விளையாடும் பொழுது பார்வையாளர் அரங்கில் சில ரசிகர்களை தனித்துவமாக இனங்காண முடியும்.

அவர்கள் தங்களது வித்தியாசமான நடையுடை பாவனைகளால் விளையாட்டின் சூழலை வேறொரு பரிமாணத்திற்குக் கொண்டு செல்வார்கள்.

அந்தவகையில் இந்தியாவின் சுதீர் சௌத்ரி, பாகிஸ்தானின் அப்துல் ஜலில், இலங்கையின் பேர்ஸி அபேசேகர போன்றவர்களை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும்.

இவர்கள் உள்நாட்டில் மாத்திரமில்லாமல் வெளிநாட்டில் நடைபெறுகின்ற போட்டிகளில் கூட தமது சொந்தப்பணத்திலும் கிரிக்கெட் சபைகள் மற்றும் விளையாடும் வீரர்களின் தயவிலும் ஒவ்வொரு போட்டியையும் கண்டு களித்து வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருவார்கள்.

இந்நிலையில் இந்தியாவின் சுதீர் சௌத்ரி குறித்தும் இலங்கை அணியின் இன்னொரு தீவிர ரசிகரான கஜன் சேனநாயக்க குறித்தும் செய்தி ஒன்று கடந்தவாரம் வெளியாகியுள்ளது.

தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்காக இலங்கையில் இருந்து வருகை தந்த கஜன் சேனநாயக்கவின் விமானப்பயணச் செலவு, விசா கட்டணம், தங்குமிடச் செலவு, பிரயாணச் செலவு ஆகியவற்றை சுதீர் சௌத்ரி ஏற்றுள்ளார் என்பது தான் அது.

இது குறித்து சுதீர் சௌத்ரி கூறுகையில் ‘ நான் 2012 ஆம் ஆண்டு இருதடவைகளும், 2015 ஆம் ஆண்டு ஒருதடவையும், இந்தவருடம் ஒருதடவையும் இந்தியாவின் போட்டிகளை இலங்கையில் பார்வையிடச் சென்ற போது என்னுடைய செலவுகள் அனைத்தையும் கஜன் சேனநாயக்கவே ஏற்றுள்ளார்.

ஆதலால் அவர் இம்முறை இந்தியாவுக்குப் போட்டியைப் பார்வையிட வரும்பொழுது அவரது செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள நான் விரும்பினேன் என்று கூறியுள்ளார்.

இவ்விருவரும் எதிரெதிர் அணிகளைச் சேர்ந்த ரசிகர்களாக இருந்தாலும் விளையாட்டையும் மதித்து நட்பையும் பேணிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் பல ரசிகர்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகின்றார்கள்.

புதிய மைல்கல்லை எட்டியது பேஸ்புக் மெசஞ்சர் லைட்!!

பேஸ்புக் வலைத்தள சேவையை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான விசேட அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றமை தெரிந்ததே.

அவற்றுள் பிரபல்யமானது பேஸ்புக் மெசஞ்சர் லைட் ஆகும் இது குறைந்த கோப்பு அளவினைக் கொண்டிருப்பதுடன் குறைந்த இணைய வேகத்திலும் செயற்படக்கூடியது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட இந்த அப்பிளிக்கேஷனை இதுவரை 100 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமே 50 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளங்கை அளவில் உயிருக்கு போராடிய குழந்தையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

 
பெண் என்பவள் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள் என கூறுவார்கள், ஒரு பெண் தாயாகும் போது, குழந்தையை கையில் ஏந்தும் அவள் படும் சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

அப்படி சந்தோஷமான தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்த Jeremy தம்பதியினருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி, இரட்டை குழந்தையை சுமந்த Jeremy-யின் மனைவி Leslie-க்கு 22 வாரத்திலேயே அதாவது கடந்தாண்டு நவம்பர் 20ம் திகதியே குழந்தை பிறந்துவிட்டது.

455 கிராம் எடையுடன் உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய குழந்தைக்கு Grayson Barnett என பெயரிட்டனர், மருத்துவர்களும் குழந்தை உயிர்பிழைத்து வாழ்வது கடினம் என்றனர்.

ஏற்கனவே பெண் குழந்தையை இழந்த சோகத்தில் இருந்த Jeremy-க்கு என்ன செய்தென்றே தெரியவில்லை, ஒருவழியாக ஆண் குழந்தையை காப்பாற்ற வேண்டிய சூழலில் Seattle Children’s Hospital-ன் Neonatal Intensive Care Unit இன்குபெட்டரில் வைத்து வளர்த்தனர்.

தோல்களும் மிக மெலிதான, சின்னஞ்சிறு உறுப்புகளுடன் பத்திரமாக பாதுகாக்கப்பட்டான் Grayson Barnett, ஒரு ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸை கொண்டாட தயாராகிவிட்டான்.

ஒவ்வொரு நிமிடமும் கொடூரமாக இருந்தாக கூறும் Jeremy, மிகவும் அதிர்ஷ்டசாலி என பெருமை கொள்கிறார்.

சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் அரிய பொக்கிஷத்துடன் கரை ஒதுங்கியது!!

 
ஜப்பான் சுனாமியால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் ஒன்று அரிய வகை பொக்கிஷங்களுடன் அமெரிக்காவில் கரை ஒதுங்கியுள்ளது.

உரிமையாளர் தொடர்பாக எந்த தகவலும் இல்லாத குறித்த கப்பலில் goose barnacles எனப்படும் அரியவகை கடல் உயிரனங்கள் நிறைந்திருந்துள்ளது.

கடலில் நீண்ட ஆறு ஆண்டுகள் பயணப்பட்ட அந்த உடைந்து நொறுங்கிய கப்பலில் goose barnacles குவிந்திருப்பதை மக்கள் வியப்புடன் பார்வையிட்டு வருகின்றனர்.

அதிக விலைக்கு விற்கப்படும் குறித்த கடல் உணவானது கிடைப்பதற்கு அரியது எனவும், மிகுந்த போராட்டங்களுக்கு பின்னரே உரிய மக்கள் தேடி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

2011 சுனாமியில் சிக்கிய குறித்த கப்பலானது உடைந்த பின்னர் 6 முதல் 8 மாதங்களுக்கு முன்னர் ஹவாய் தீவுகளில் கரை சேர்ந்திருக்கலாம் எனவும், பின்னர் சுமார் 14 மாதங்களில் பயணப்பட்டு அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரை பகுதியில் ஒதுங்கியிருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டாரின் எல்லையை மூடிய சவுதி அரேபியா!!

தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறி கட்டார் நாட்டின் நிலவழி எல்லைப் பகுதியை சவுதி அரேபியா நிரந்தரமாக மூடியுள்ளது.

தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டி, அந்த நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் துண்டித்தன.

இதன் விளைவாக கட்டார் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் கட்டார் உடனான நிலப்புற எல்லைப் பகுதியை, சவுதி அரேபியா இரண்டு வாரங்கள் மூடியது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை கட்டாரின் எல்லைப் பகுதியான சால்வாவை, சவுதி அரேபியா நிரந்தரமாக மூடியுள்ளது. இந்த தகவலை சவுதியின் சுங்க வரித்துறை நிர்வாகம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இலங்கையர்களை குறிவைத்து பேஸ்புக்கில் புதிய மோசடி!!

வெளிநாட்டிலிருந்து பரிசுப்பொதியை அனுப்புவதாககூறி, பேஸ்புக் மூலம் இலங்கையர்களிடம் வெளிநாட்டவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சில பேஸ்புக் பாவனையாளர்கள், இது தொடர்பான முறைப்பாடுகளை செய்துள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2017ஆம் ஆண்டில் பேஸ்புக் தொடர்பில் 3 ஆயிரத்து 400 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் புகைப்படங்களை மாற்றுவது தொடர்பிலேயே பெரும்பாலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பேஸ்புக் ஊடாக தொடர்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்கள், அறிமுகமாகிய ஒரு மாத காலத்தில், பரிசுப் பொதியொன்றை இலங்கைக்கு அனுப்புவதாகவும், அதனை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கப்படுவதாக முறைப்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
எனினும், தமக்கு பரிசுப் பொதி கிடைக்கவில்லை என்றும், தாம் செலுத்திய பணமும் இல்லாமல் போயுள்ளதாகவும் முறைப்பாட்டாளர்கள் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இவ்வாறான நிலைமைகள் தொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார்.

சொந்த மகளை நான்கு ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தைக்கு 115 ஆண்டுகள் சிறை!!

மகளை நான்கு ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்த தந்தைக்கு 115 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மலேசியாவின் குவாந்தான் நகரில் 53 வயதான நபர் தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். மீனவரான ஐந்து பிள்ளைகளின் தந்தை தனது 20 வயது மூத்த மகளை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்த விடயம் மகளின் தாய்க்கு தெரிந்தும் கணவர் மீதுள்ள பயம் காரணமாக அவர் தடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த மாதத்திலிருந்து இரண்டாவது மகளுக்கும் தந்தை பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார்.

தான் பட்ட கஷ்டத்தை தனது சகோதரியும் அனுபவிக்க கூடாது என நினைத்த மூத்த மகள் தைரியத்தை வரவழைத்து கொண்டு தனது தந்தையின் செயல் குறித்து பொலிசில் கடந்த 13-ஆம் திகதி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தந்தையை உடனடியாக கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து 115 ஆண்டுகள் சிறை தண்டனையும், 24 பிரம்படியும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொது வெளியில் பெண்ணின் ஆடைகளை கிழித்த 7 நபர்கள் : வெடித்த சர்ச்சை!!

ஆந்திராவில் நிலம் தொடர்பான ஒரு வாக்குவாதத்தில் பெண் ஒருவர் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு, அவருடைய ஆடைகள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் நிலத்தில் குழி தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறிய அப்பெண், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரால் தான் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்பெண் புகார் அளித்தும் பொலிசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அந்தப் பெண்ணைத் தாக்கிய 7 பேர் மீது, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகையில், அந்த ஊரில், சர்வே எண் 77 என்று குறிப்பிடப்பட்ட நிலத்தில் பட்டியல் சமூக மக்கள் வேளாண் தொழில் செய்துவருகின்றனர். அந்த நிலம், அவர்களுக்கு அரசினால் ஒதுக்கப்பட்ட நிலமாகும்.

ஆனால் திடீரென தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதிக்கு ஜே.சி.பி வாகனத்தோடு வந்தனர். முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் அங்கு பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி அழித்தனர்.

இதை எதிர்த்து அங்கிருந்த பட்டியல் சமூக மக்கள் குரல்கொடுத்ததால், அவர்கள் அந்தப் பெண்ணைத் தாக்கி, அவருடைய ஆடைகளைக் கிழித்தெறிந்தனர் என்று கூறியுள்ளார்கள்.

கணவன் சடலத்துடன் நாள் முழுக்க தனியாக இருந்த மனைவி : நெஞ்சை உருக்கும் காரணம்!!

 
கணவன் சடலத்துடன் நோய்வாய்ப்பட்ட வயதான மனைவி 24 மணி நேரம் தனியாக இருந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபூர்நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆத்மராம் கார்க் (78) என்ற முதியவர் தனது மனைவி ஓம்வதி (72) என்பவருடன் அங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரும், வெவ்வேறு நகரில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இரவு வேளையில் வீட்டு கட்டிலில் படுத்திருந்த ஆத்மராம் தவறி கீழே விழுந்து இறந்துள்ளார். அடுத்தநாள் காலை எழுந்து கணவர் சடலமாக கிடப்பதை பார்த்த ஓம்வதி இது குறித்து யாருக்கும் தகவல் கொடுக்காமல் கணவர் அருகிலேயே நாற்காலியில் அமர்ந்தவாறு நாள் முழுக்க இருந்துள்ளார்.

வயதான தம்பதியின் வீட்டு கதவு வெகுநேரமாக திறக்காததை கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கதவை உடைத்து பார்த்த போது ஆத்மராம் சடலமாக கிடந்தார். அப்போது தான் அவர் மனைவியால் எழுந்து நடக்க முடியாது எனவும், குனிந்து கணவரை கூட தொடமுடியாமல் அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து தம்பதியின் மகன்களுக்கு பொலிசார் தகவல் கொடுத்தும் அவர்கள் அங்கு வர மறுத்துவிட்டனர். இதையடுத்து ஆத்மராம் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

கடைசி காலத்தில் முதிய தம்பதியை பராமரிக்க ஆள் இல்லாததால், நடந்த இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

காலையில் திருமணம் செய்து இரவில் விவாகரத்து செய்யும் கொடுமை!!

புனேவில் காலையில் திருமணம் செய்துகொண்ட பின்னுக்கு இரவில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

Kanjarbhat சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. திருமணமான அன்று பெண்களுக்கு ஒரு வெள்ளைப்போர்வை கொடுத்து பெண்களின் கன்னித்தன்மை சோதனை செய்யப்படும். அந்த பரிசோதனையில் பெண்கள் தோற்றுவிட்டால், அந்த திருமணம் விவாகரத்தில் முடியும்.

இதுகுறித்து பொலிசாரிடமும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுப்பதில்லை. சமீபத்தில் 20 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமண நாளன்று இரவு, இவரின் கன்னித்தன்னை சோதனை செய்யப்பட்டபோது, இவர் அதில் தோல்வியுற்றுள்ளார். இதனால், கணவர் அப்பெண்ணை விவாகரத்து செய்யும் முடிவினை எடுத்துள்ளார். இதனால் அந்த சமூகத்தை சேர்ந்த அதிக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் பஞ்சாயத்தை வைத்து முடித்துக்கொள்கிறார்கள். இந்த பரிசோதனை முறைக்கு இந்த சமூகத்தை சேர்ந்த படித்த 30 இளைஞர்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, EPDP வேட்புமனுத் தாக்கல்!!

 
வவுனியா மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று (21.12) வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது.

கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வாசல தலைமையிலான குழுவினர், வவுனியா தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அத்தோடு, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி சார்பில் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன் தலைமையிலான குழுவினரும் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கே வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜயதிலக தலைமையிலான குழுவினரே ஐ.தே.க. சார்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

யாழில் 2 மாதங்களுக்குப் பின் சிக்கிய வாள்வெட்டுக் குழு முக்கியஸ்தர்!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வாள் வெட்டுச் சம்பவத்தில் 4ஆவது சந்தேகநபரான கைதடியைச் சேர்ந்த இவர் 2 மாதங்களாக பொலிஸாரிடமிருந்து தப்பித்து வந்த நிலையில் அண்மையில் கைதாகியுள்ளார்.

நுணாவில் பகுதியில் கடைத் தொகுதிகள் உள்ள இடத்தில் கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி பட்டப் பகலில் தலைக்கவசம் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர், அங்குள்ள ஒருவரை துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.

இதில் நுணாவில் மேற்கைச் சேர்ந்த அரசரத்தினம் அபுதன் என்பவர் படுகாயமடைந்திருந்தார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகி இருந்தது.

இதை ஆதாரமாக வைத்துக்கொண்டு சாவகச்சேரி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் 4ஆவது சந்தேகநபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், 2 மாதங்களுக்குப்பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.