இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டம் துபி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
துபி பகுதியில் உள்ள பனாஸ் ஆற்று பாலத்தில் பயணித்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது.
ஆற்றில் இருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகள், 3 பெண்கள் ஆவர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
15 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச சேவைகள் இடம்பெற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தல் வழங்கியுள்ள நிலையில் இதற்கு தடையாக அரசியல்வாதிகள் எவராவது இருப்பார்களேயானால் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். ரி.இராஜேஸ்வரனிடம் கேட்டபோது,
புதிய பேருந்து நிலையம் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தியை மையமாக கொண்டு அமைக்கப்பட்டதுடன் இரு பேருந்து சேவையினரும் இணைந்து செயற்படவே உருவாக்கப்பட்டது.
மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட இப் பேருந்து நிலையத்தினை இன்று உதாசீனப்படுத்தி எமது தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு முன்னிடம் கொடுக்க முடியாது. பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளபோது பலரும் விமர்சனம் செய்தனர்.
தற்போது முதலமைச்சரும் வட மாகாண போக்குவரத்து அமைச்சருமான சி. வி. விக்னேஸ்வரன் முன்னின்று இப்பேருந்து நிலையத்தினை திறக்கவேண்டும் என கூட்டத்தினை கூட்டி தீர்மானம் எடுத்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடும் தற்போதைய பேருந்து நிலையத்தினை சூழவுள்ள ஒரு சில வர்த்தகர்களும் வவுனியா வர்த்தக சங்க தலைவர் உட்பட்ட சிலரும் இன்று புதிய பேருந்து நிலையத்தினை மீள் இயங்குவதற்கு தடையாகவுள்ளதாக அறிகின்றேன்.
இது ஓர் அரசியல் பின்னணியில் இயக்கப்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது. முதலமைச்சர் எடுத்த திடமான தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் எமது சேவைகள் எவர் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே செயற்படும்.
எனவே இலங்கை போக்குவரத்து சபையினையும் இணைந்த நேர அட்டவனையின் பிரகாரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையை மேற்கொள்ள வவுனியா அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.
அதனைவிடுத்து பிரதேசத்தின் அபிவிருத்தியை பயனற்றதாக்க முற்பட்டு வவுனியாவிற்கு மேலும் வரவுள்ள அபிவிருத்திகளையும் ஒதுக்கப்படும் நிதிகளையும் தடை செய்யும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது என்பதனை வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.
இதனையும் மீறி புதிய பேருந்து நிலையத்தினை திறப்பதற்கு அரசியல்வாதிகள் எவராவது தடையாக இருப்பார்களேயானால் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் சாகும் வரையான உணவுத் தவிர்ப்பில் ஈடுபட தயாராகவே உள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவனிடம் கேட்டபோது, எமக்கு எந்தவிதமான அறிவித்தல்களும் இதுவரை தலைமைப்பீடத்தால் வழங்கப்படவில்லை. எனவே நாம் தற்போது செயற்படும் பேருந்து நிலையத்தில் இருந்தே சேவையில் ஈடுபடுவோம்.
எமக்கான அறிவித்தல் வராதவரை நாம் எந்த தீர்மானத்தினையும் எடுக்கமுடியாது. முதலமைச்சருடனான சந்திப்பில் நாம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாது என்பதனை தெளிவாக கூறியிருந்தோம். அன்றைய கூட்டம் எந்த முடிவும் இல்லாமல் நிறைவடைந்திருந்தது என்று தெரிவித்தார்.
இரத்தினபுரி ஹம்பிலிபிட்டிய பிரதான வீதியில் இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஊறுபொக்கையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி இருந்து.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் 16 பெண்களும் 09 சிறுவர்களும் உள்ளடங்குவதாக இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினார்.
விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா வைரவபுளியங்குளத்தில் இயங்கிவரும் தனியார் கல்லூரியினால் இன்று (22.12.2017) காலை 10 மணியளவில் ஓவியா மண்டபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் வவுனியாவைச் சார்ந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் இலங்கைக்கான முதல்வர் சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் இராதாகிருஷ்ணன் ,வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன், ஆயுபோவான் நிறுவனத்தின் கனடிய பணிப்பாளர், இலங்கைக்கான இயக்குனர், ஐ.சி.சி கம்பஸ் நிறுவனத்தின் தலைவர் என பலரும் கலந்து கொண்டு குறித்த கல்லூரியின் 9 பேர் கொண்ட தெரிவுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்களான பொன்னையா மாணிக்கவாசகம், பரமேஸ்வரன் கார்த்தீபன், பாலநாதன் சதீசன், பாஸ்கரன் கதீசன், குமாரசிங்கம் கோகுலன் ஆகிய ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் கல்வி, சமூக சேவை சினிமா, மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
வவுனியா கூமாங்குள பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என தங்களை அடையாளப்படுத்தி பணம் பெற முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
இன்று (22.12) மதியம் 2 மணியளவில் வவுனியா கூமாங்குளம் பகுதியில் வீடுவீடாக சென்ற இருவர் தம்மை பிரபல தனியார் இலத்திரனியல் நிறுவனத்தின் ஊழியர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு பொருட்கள் மலிவு விலையில் தருவதாக கூறி மக்களிடம் முற்பணம் பெற்று வந்துள்ளனர்.
இதனையறிந்த சிலர் இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர்களை மடக்கிக் பிடித்துள்ளனர். இதனையடுத்து குறித்த நிறுவனத்தை தொடர்புகொண்ட பிரதேசவாசிகள் இவர்கள் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதுடன் குறித்த நபர்களை பண்டாரிகுளம் பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர்கள் மட்டக்களப்பு கதிரவெளி,காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிவாவின் இயக்கத்தில் வௌிவரவிருக்கும் ‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் இளமையான தோற்றத்தில் இருப்பதாகத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் அவரின் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றது.
அண்மையில் வௌியான படங்களில் அஜித்குமார் இலேசான நரைத்த தாடியுடன் ”சால்ட் அண்ட் பெப்பர்” கெட்டப்பில் தோன்றினார்.
விசுவாசம் படத்திற்காக அவர் எடை குறைத்து, இளமையாகிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசுவாசம் படத்தில் அஜித் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த படத்தில் வட சென்னை தாதா கதாப்பாத்திரத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட சென்னை பகுதியில் நடக்கும் ரவுடிகள் மோதலை மையப்படுத்தி திரைக்கதை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
90 சதவீதம் படப்பிடிப்பு சென்னையிலேயே நடக்கிறது. அடுத்த மாதம் (ஜனவரி) 19 ஆம் திகதி படப்பிடிப்பை ஆரம்பித்து தீபாவளிக்கு படத்தை திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்திற்கு கதாநாயகியாக அனுஷ்காவைத் தெரிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் பாராளுமன்ற மேல் சபையின் நியமன உறுப்பினராக உள்ளார்.
அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த போதும் இதுவரை விவாதங்களில் எதுவும் பங்கேற்கவில்லை. முதல் முறையாக நேற்று தனது கன்னிப்பேச்சை நிகழ்த்த அவர் அனுமதி கேட்டிருந்தார்.
விளையாட்டு உரிமை மற்றும் இந்திய விளையாட்டின் எதிர்காலம் குறித்த விவாதத்தில் பங்கேற்பதற்காக அனுமதி கேட்டிருந்த அவருக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் அனுமதி வழங்கி இருந்தார்.
நேற்று மேல்-சபை முதல் முறை ஒத்திவைக்கப்பட்டு, 2 மணிக்கு கூடிய போது தெண்டுல்கரை உரையாற்ற வெங்கையா நாயுடு அழைத்தார்.
அப்போது மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு வெளியிட்ட பிரதமர் மோடி மன்னிப்பு கேட்குமாறு காங்கிரசார் அமளியில் ஈடுபட்டதால் டெண்டுல்கரால் உரையாற்ற முடியவில்லை. தனது இடத்தில் எழுந்து நின்று காங்கிரசாரின் அமளியை வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றார்.
டெண்டுல்கர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் என்றும், பாரத ரத்னா விருது பெற்றவர் என்றும் கூறிய வெங்கையா நாயுடு, அவரது பேச்சு இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்பதால் அவரை பேச அனுமதிக்குமாறு காங்கிரசாரை கேட்டுக்கொண்டார்.
எனினும் காங்கிரசார் அமைதியடையாததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் டெண்டுல்கர் மிகவும் ஏமாற்றமடைந்தார்.
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் உருவாகி உள்ளது. இதில் நாயகனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். சித்திக் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இதையடுத்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ராம் குமார் என்பவர் இயக்க இருக்கின்றார்.
தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் அமலாபால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். ‘ஆயுஸ் மான்பவ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் காதல் கதையாக உருவாக இருக்கிறது. இதில் அமலாபால் முஸ்லிம் பெண்ணாக நடிக்க இருக்கிறார். புதிய இயக்குனர் சரண் தேஜ் என்பவர் இயக்குகின்றார்.
இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு T20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் இலங்கை அணி நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் கட்டக் நகரில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிராக 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியானது இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.
இதேபோல இலங்கை அணி சந்தித்த மோசமான தோல்வியும் இதுதான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பல்லேகலை மைதானத்தில் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றதே மோசமான நிலையாக இருந்தது.
செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் கடல் பஞ்சால் உறிஞ்சப்பட்டது போன்று நீர் உறிஞ்சப்பட்ட நிலையில் காணப்படுவதாக புதிய ஆய்வொன்று உரிமை கோருகிறது.
அந்தக் கிரகத்திலுள்ள பாறைகளில் எரிமலைச் செயற்பாடுகள் காரணமாக வெளித்தள்ளப்பட்ட கனியுப்புகள் படிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்தக் கனியுப்புகள் பூமியிலுள்ள நீரை விடவும் 25 சதவீதத்திலும் அதிகமான நீரை உறிஞ்சி வைத்திருக்கக் கூடியவை எனவும் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பூமி விஞ்ஞான பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அந்த நீர் செவ்வாயின் மேற்பரப்பில் எவ்விடங்களில் உறிஞ்சப்பட்டுள்ளது என்பது தொடர்ந்து மர்மமாகவுள்ளதாக அவர்கள் தெரிவிக் கின்றனர்.
இலங்கையில் சர்வதேச ரீதியான பல புதிய அம்சங்கள் அடங்கிய கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்தின்படி சர்வதேச அங்கீகாரம் கொண்ட புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஜெனரல் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய கடவுச்சீட்டு மக்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் டிலாரு என்ற பிரித்தானிய நிறுவனம் புதிய கடவுச்சீட்டினை அச்சிடவுள்ளது. புதிய கடவுச்சீட்டு வெளியிடுவதற்கான அறிக்கைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த அனைத்து மாற்றங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கட்டுப்பாட்டு ஜெனரல் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது வழங்கப்படுகின்ற கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதியில் இருந்து சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஐ.சி.ஏயின் தரநிலை தரத்திற்கு இணங்க ஒரு டிஜிட்டல் புகைப்படம் மற்றும் உயிரியியல் தரவுகளாக கைரேகையை திணைக்களத்திற்கு வழங்க வேண்டும்.
இந்த புகைப்படங்கள் எங்களுடைய திணைக்களத்தினால் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டூடியோ அல்லது புகைப்பட தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் இருந்து பெற்றுகொள்ள முடியும்.
கைரேகைகளை எங்கள் திணைக்களத்தின் பிரதான அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் வருகைத்தந்து வழங்குவது அவசியமாகும்.
கடவுச்சீட்டு தொடர்பான முக்கிய தகவல்கள்
வயது பேதம் இன்றி அனைத்து கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் “K RV 35A”வடிவ விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களினதும் கைரேகை பிரதான அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.
வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கை ரேகை மற்றும் டிஜிட்டல் புகைப்படம் வழங்காமல் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முடியும்.
பெற்றோரின் கடவுச்சீட்டுக்காக பிள்ளைகளை அனுமதிப்பது இனிமேலும் செல்லுப்படியாகாது. பிள்ளைகளுக்காக தனியாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
60 வயதுக்கு குறைவான எந்தவொரு நபருக்கும் அவசர சான்றிதழ்கள் வெளியிடப்படாது.
கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை திணைக்களத்திற்கு வழங்கும் முறை
திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களில் உங்கள் புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் புகைப்படங்கள், புகைப்பட நிலையங்கள் மூலம் எங்கள் திணைக்களத்தின் தரவுத்தளத்திற்கு அனுப்பப்படுகின்ற நிலையில், அங்கு ஒரு ரசீது உங்களுக்கு வழங்கப்படும். கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான அச்சிடப்பட்ட புகைப்படங்கள் தேவையில்லை.
இந்த ரசீது, கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது கிளை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுகொள்வதற்கு 1962 அல்லது 011 532 9200 / 001 532 9175 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கையின் குடிமக்கள் எவரும் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கிற்கான சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் சில அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் சீரான ஆவணங்களை சமர்ப்பிக்காமையால் அந்தந்த வட்டாரங்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்தார்.
வேட்பு மனு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த மாதம் 18ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி வரை வேட்பு மனு காலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 12 கட்சிகளும், 5 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இதனடிப்படையில் வவுனியா நகரசபைக்கு 10 அரசியல் கட்சிகள் மாத்திரமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 9 அரசியல் கட்சியும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு 4 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும், வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.
வெண்கல செட்டிக்குளம் பிரதேசசபைக்கு 8 அரசியற் கட்சிகள் மாத்திரமே வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன. இதனடிப்படையில் 45 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒரேயொரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சில வேட்புமனுக்களில் வேட்பாளர்களது ஆவணங்கள் சரியாக சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் கட்சிகள் நிராகரிக்கப்படா விட்டாலும் அந்த வட்டாரங்களிற்குரிய வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.” எனவும் தெரிவித்தார்.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் கொண்டு செல்லும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவின் நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கெசல்கமுவ ஓயா ஆற்றில் செல்லும் நீர் இன்று காலை திடீரென கறுப்பு நிறத்தில் செல்வதை பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கெசல்கமுவ ஒயா ஆற்று நீரின் நிறம் திடீரென மாறியது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை தேயிலை தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் கலந்ததால் இந்த நிறமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன் காரனமாக பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை அமைக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களை பொலிஸார் சோதனை செய்து வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.