யாழில் திடீரென மரணித்த ஒன்பது பேர் : பின்னணி என்ன?

யாழ்ப்பாணத்தில் திடீரென நோய்வாய்ப்பட்டு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த வியாபாரிகள் உள்ளிட்ட அவர்களின் உறவினர்கள் என ஒன்பது பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு தமிழ் வியாபாரிகள், இரண்டு முஸ்லிம் வியாபாரிகள், மூன்று வியாபாரிகளின் மனைவிமார், ஏனைய இரண்டு வியாபாரிகளின் தாய் மற்றும் மாமா என ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவரும் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக குறித்த சிற்றங்காடி வியாபார தொகுதியின் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த சிற்றங்காடியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் நட்டத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்கள்,

கடந்த கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த சிற்றங்காடி வியாபார தொகுதி அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும், அங்கு அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சுமார் 3 மாத காலப் பகுதியில் இந்த சிற்றங்காடி வியாபார தொகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள், அவர்களின் உறவினர்கள் என ஒன்பது பேர் திடீரென நோய் வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்த பகுதியில் நடமாடும் அமானுஷ்ய சக்திகள் தான் இதற்கெல்லாம் காரணம். கடந்த 1995ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த பகுதி சுடுகாடாக காணப்பட்டது. பின்னர் இராணுவ கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்தது. நீண்ட காலத்திற்குப் பின்னர் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.

இந்த காணியில் ஒரு இந்து ஆலயம் உள்ளது. அந்த ஆலயமும் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகின்றது. இந்த நிலையில் தான் இரவு வேளைகளில் அமானுஷ்ய சக்திகள் இந்த பகுதிகளில் உலாவி அட்டகாசம் புரிகின்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் அதிகாரி ஒருவரிடம் ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், “இது தேவையற்ற கட்டுக்கதை. பேய், பிசாசு உலாவுகின்றது என்பது மூட நம்பிக்கை” என அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த விடயத்தை அலட்சியமாக பார்க்கக் கூடாது என பொது மக்களும், அந்த சிற்றங்காடி தொகுதியில் இருக்கும் வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஏனெனில் அண்மைய காலங்களில் நாட்டின் பல பகுதிகளிலும், மர்மக் காய்ச்சல் குறித்து பொது மக்களிடத்தில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மர்மக் காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையிலேயே, தற்போது யாழ்ப்பாணத்தில் திடீரென நோய் வாய்ப்பட்டு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

எனவே, வியாபாரிகள் குறிப்பிடுவது போல் இந்த உயிரிழப்புகளின் பின்னணியில் அமானுஷ்ய சக்திகள் இருக்கின்றதா? அல்லது வேறேதும் காரணங்கள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தனியார் மற்றும் இ.போ.சபையினர் இடையே முறுகல் : பொலிசார் குவிப்பு!!

 
வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பேரூந்துகள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்கச் சென்றபோது இ.போ.சபையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்ப்பட்டுள்ளதுடன், அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரண்டு பஸ் சேவைகளும் சேவையில் ஈடுபடுமாறு முதலமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் இ.போ.சபை தரப்பால் சில பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நத்தார் மற்றும் பண்டிகைக்காலம் என்பதால் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து முழுமையான சேவையை மேற்கொள்வதனை இரண்டு வாரங்களுக்கு பிற்போடுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் இடைப்பட்ட காலப்பகுதியில் தனியார் பேருந்துகளின் உள்ளூர் சேவைகள் மட்டும் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், தூர இடங்களுக்கான சேவைகள் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் செயற்படுத்துவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் நேற்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று காலை வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்திற்கு தனியார் பேரூந்துகள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்க சென்ற போது இ.போ.சபைசபையினருக்கும் தனியார் பேரூந்து ஊழியர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 13ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை!!

 
ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் 13ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனையும் சுனாமி சிறுவர் பூங்கா திறப்பு விழாவும் இன்று ( 26.12.2017) காலை 9 மணிக்கு பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபி முன்றலில் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மௌன பிராத்தனையுடன் ஆரம்பமான இப் பிராத்தனை நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றுதல், மலர் அஞ்சலி செலுத்துதல், சர்வமத பிராத்தனை, சுனாமி சிறுவர் பூங்கா திறப்பு விழா என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன

இலங்கைத் தீவிலே முதன் முதலாக வவுனியா பூந்தோட்டம் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினரால் சுனாமி பேரலையின் 31ம் நாள் நினைவாக 26.01.2005ம் ஆண்டு பூந்தோட்டம் சிறுவர் பூங்காவில் சுனாமிப்பேரலை அனர்த்த நினைவுத் தூபி நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம் , ம.தியாகராஜா , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் நகர பிதா சந்திரகுலசிங்கம் மோகன் , கிராம சேவையாளர், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், நகரசபை உத்தியோகத்தர்கள், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வி.பிரதீபன், தமிழருவி சிவகுமார், கவிஞர் மாணிக்கம் ஜெகன், குடும்பநல உத்தியோகத்தர்கள், சுனாமியினால் உயிரிழந்த உறவினர்களின் உறவுகள், சர்வமதத்தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.

இதனையடுத்து பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட சிறுவர் நினைவுப் பூங்காவினை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் திரை நீக்கம் செய்து வைத்தார்.

வவுனியாவில் சாரதியின்றி பயணித்த தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (23.12.2017) மாலை 6.10 மணியளவில் சாரதியின்றி பயணித்த தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் பேரூந்து பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது. இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா புகையிரத நிலைய வீதி இலங்கை வங்கிக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேரூந்து இன்று 6.10 மணியளவில் தானாக நகரந்து சென்று வைரவப்புளியங்குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானதுடன் நிற்காமல் சென்றுள்ளது. அதனையடுத்து பொதுமக்களின் உதவியுடன் தனியார் பேரூந்து தடுத்து நிறுத்தப்பட்டது.

இவ் விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசவ வலியிலும் தேர்வு எழுதிய பெண் : வைரலான புகைப்படங்கள்!!

அமெரிக்காவில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி தேர்வு எழுதும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் உள்ள கல்லூரியில் படித்து வருபவர் நஸியா தாமஸ். இவர் கர்ப்பம் அடைந்த நிலையில் கல்லூரிக்கும் சென்று வந்தார். இந்நிலையில் பிரசவத்துக்காக கடந்த மாதம் 11ம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

அன்றைய தினமே இவருக்கு கல்லூரியில் செமஸ்டர் தேர்வும் இருந்தது. பிரசவ வலி இருந்த போதும், அதை பொருட்படுத்தாமல் தேர்வு எழுதினார், இப்புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.

தேர்வு எழுதி முடித்ததும் நஸியாவுக்கு அடுத்த நாள் அதாவது 12ம் திகதி அழகான குழந்தை பிறந்தது. அவர் கூறுகையில், என் மகனை உலகிற்கு கொண்டுவரும் முன் தேர்வு எழுதி முடிப்பதில் கவனமாக இருந்தேன், எனது கல்லூரியும் பாராட்டுகளை தெரிவித்தது.அடுத்ததடுத்த தேர்வுகளை எழுத கல்லூரி நிர்வாகம் தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மரணத்தின் வாசலில் பிள்ளைகளுக்காக அன்பு தாயின் செயல் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

பிரித்தானியாவில் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தனது மகன்கள் மகிழ்ச்சியாக வாழ 40,000 பவுண்டுளுக்கு மேல் நிதி திரட்டிவிட்டு உயிரிழந்துள்ளார்.

பான்புரி நகரை சேர்ந்தவர் சாம் கைமி (34), இவருக்கு மோட்டர் நியூரான் என்ற விசித்தர நரம்பு மண்டல நோய் இருந்த நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

தான் இறப்பதற்குள் தனது இரண்டு மகன்களான ஜோயி மற்றும் ஹேரியின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பணம் சேர்க்க முடிவெடுத்த சாம் வலைத்தளம் மூலமாக தனது நண்பர்களிடம் நிதி வழங்கும்படி கோரிக்கை வைத்திருந்தார்.

நான் உயிரிழக்கப் போவது குறித்து எனக்கு எந்த வித பயமும் இல்லை, என் மகன்களின் நலன் குறித்து தான் எனக்கு கவலை என வலைதளப் பக்கத்தில் சாம் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பல்வேறு நபர்கள் உதவியதன் மூலம் 40,000 பவுண்டுளுக்கு மேல் நிதி கிடைத்துள்ள நிலையில் சாம் கடந்த வியாழன் உயிரிழந்துள்ளார்.

மகன்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள தனது சகோதரி பிப்பா ஹ்யூஸுடன் வாழ வேண்டும் என்பதே சாமின் கடைசி ஆசையாகும்

இது தொடர்பில் பிப்பா கூறுகையில், சாம்-ஐ சுற்றி குடும்பத்தினர் இருந்த நிலையில் அமைதியான முறையில் அவர் உயிரிழந்தார். சாம் உயிரிழந்தது வேதனை அளித்தாலும், அவர் மேலும் துன்பப்படாமல் இறந்தது ஆறுதல் அளிப்பதாக கூறியுள்ளார்.

2 வருடங்களுக்கும் முன் காணாமல் போன தாய் : தொலைக்காட்சியில் பார்த்து கண்டுபிடித்த குடும்பத்தினர்!!

இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன தாயார், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கிடைத்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் தாலவாடியைச் சோ்ந்தவா் சாந்தம்மா (70). சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவரான இவர் கடந்த 2015ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய பின் வீட்டிற்கே திரும்பவில்லை.

இதனால் அவரது குடும்பத்தினர் அக்கம், பக்கம் முழுவதிலும் தேடியுள்ளனர். கிடைக்காத காரணத்தினால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொலிசாரும் தொடர்ந்து தேடி வந்த நிலையில், சமீபத்தில் கேரளா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாடப்பட்டது.

அந்த கிறிஸ்துமஸ் தின விழாவில் காணமல் போனதாக கூறப்பட்ட சாந்தம்மா இருந்துள்ளார். இந்த நிகழ்ச்சியைக் கண்ட அவரது குடும்பத்தினர், உடனடியாக அந்த தொலைக்காட்சி நிறுவனத்தினை தொடர்பு கொண்டு, அவர் இருக்கும் தற்போதைய முகவரியை கேட்டு வாங்கியுள்ளனர்.

அதன் பின் அங்கு சென்ற அவர்களை சாந்தம்மா நேரில் பார்த்த போது, அவரை அறியாமலே கட்டித் தழுவி முத்தமிட்டு அன்பை பறிமாறிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அத்துடன் அவர்கள் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தங்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

காதலித்து கரம்பிடித்த மனைவியை அடித்து துரத்திய கணவன்!!

 
குடும்பத்தை எதிர்த்து காதலியை திருமணம் செய்த இளைஞர் மனைவிக்கு வந்துள்ள இதய நோயை காரணம் காட்டி அவரை வீட்டை விட்டு துரத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, பாவ்னா என்ற இளம் பெண்ணுக்கு தாய் தந்தை இல்லாத நிலையில் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார்.

கடந்தாண்டு தனது உறவினர் வீட்டுக்கு பாவ்னா வந்த போது அந்த பகுதியில் வசிக்கும் ஆதர்ஷ் என்ற இளைஞருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதை மீறி பாவ்னாவை ஆதர்ஷ் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆதர்ஷ் வீட்டில் சமாதானமாகி அவர்களை ஏற்றுக் கொண்டனர்.

தம்பதியின் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் பாவ்னாவுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்ட நிலையில் அவருக்கு இதய நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

மருத்துவ சிகிச்சைக்கு அதிக பணம் தேவை என மருத்துவர்கள் கூறிய நிலையில் நோய்வாய்ப்பட்ட பாவ்னாவை ஆதர்ஷ் மற்றும் குடும்பத்தார் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் மனைவியையும், குழந்தையையும் ஆதர்ஷ் வீட்டை விட்டு இரக்கமின்றி துரத்தியுள்ளார். தற்போது உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் பாவ்னா மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாதததுடன், குழந்தைக்கு உணவு வாங்க கூட பணமில்லாமல் தவித்து வருகிறார்.

கணவர் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது குறித்து பாவ்னா பொலிசில் புகார் அளித்துள்ள நிலையிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இரண்டு மனைவிகளை காரோடு எரித்து கொன்றது ஏன்? திடுக்கிட வைக்கும் காரணம்!!

 
அம்மாவை தனது இரண்டு மனைவிகளும் சரியாக பார்த்து கொள்ளாத ஆத்திரத்தில் அவர்களை காரோடு எரித்து கொன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

தீபா ராம் என்ற நபருக்கு இரண்டு மனைவிகள் உள்ளதோடு மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மனைவிகளுக்கு நகைகள் வாங்கி தருவதாக கூறி தீபா ராம் அவர்களை காரில் ஏற்றி சென்றுள்ளார்.

அப்போது நடுவழியில் மனைவிகளுடன் தீபா ராமுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த ராம் காரில் இருவரையும் வைத்து பூட்டிவிட்டு காரை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

இதில் ஒருவர் காரிலிருந்து வெளியே வர முயன்ற போது மீண்டும் உள்ளே பிடித்து தள்ளியுள்ளார், கார் முழுவதுமாக எரிந்த நிலையில் ராமின் இரண்டு மனைவிகளும் தீயில் கருகி இறந்தனர்.

சம்பவத்தையடுத்து பொலிசார் ராமை கைது செய்துள்ளனர், தனது தாயை சரியாக நடத்தாததால் மனைவிகள் மீது ராம் ஆத்திரத்தில் இருந்ததாக பொலிசார் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காதலிக்க மறுத்த பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் இளைஞனின் கொடூர செயல்!!

காட்சி ஊடகமான சினிமா பிற்காலத்தில் மக்களிடத்தில் உளவியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை உண்டு செய்யும் என்பது பிரபல நடிகர் சார்லி சாப்ளினின் பொன்மொழிகளில் ஒன்று.

அந்த வகையான மாற்றத்தில் ஒன்று தான் இத்தகைய செயல்களின் அடித்தளமாக கருதப்படுகிறது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் சிறிய தொழிற்கூடம் ஒன்றில் வரவேற்பாளராக வேலை செய்து வந்த பெண்ணை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காதலிப்பதாக தினமும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தொந்தரவுக்கு ஆளான அப்பெண் இவ்விவகாரம் குறித்து தனது வீட்டில் தெரிவிக்காத நிலையில், காதலை மறுத்த அவரை அந்த நபர் தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

கேனில் மண்ணெண்ணை எடுத்துக்கொண்டு வந்த அந்த நபர் பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணை தீயிட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தற்போது படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

காணாமல் போனவர் தொடர்பில் தகவல் இல்லை : வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் மனைவி!!

மன்னார், பேசாலை காட்டாஸ்பத்திரி துறை பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை 16 ஆம் திகதி காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களின் படகு கடலில் மூழ்கிய நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் மீனவர் ஒருவரை இராமேஸ்வர மீனவர்கள் மீட்டதோடு,மேலும் ஒரு மீனவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த மீனவர் காணாமல் போய் இன்றுடன் 7 நாட்களை கடந்து சென்றுள்ள போதும், குறித்த மீனவர் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் மனைவி மற்றும் உறவினர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ் (வயது 37) மற்றும், சிறுத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சம்சிங் அன்ரன் (வயது 23) ஆகிய இரு மீனவர்களும் கடந்த சனிக்கிழமை 16 ஆம் திகதி காலை 5.30 மணியளவில் காட்டாஸ்பத்திரி துறை பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மீனவர்கள் தாம் செல்ல வேண்டிய பகுதிக்கு செல்லும் முன் குறித்த மீனவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது. இதன் போது குறித்த இரு மீனவர்களும் கடலில் உயிருக்கு போராடியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு வந்த இராமேஸ்வர மீனவர்கள் கடலில் தத்தழித்துக் கொண்டிருந்த மீனவரான அந்தோனி மரியதாஸ் (வயது 37) என்பவரை கண்ட நிலையில் உடனடியாக குறித்த மீனவரை காப்பாற்றி இராமேஸ்வர பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

எனினும் மற்றறைய மீனவரான சம்சிங் அன்ரன் (வயது 23) காணாமல் போயுள்ளார். குறித்த இரு மீனவர்களும் மீண்டும் வீடு திரும்பாமை குறித்து அவர்களுடைய உறவினர்கள் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையிலே காணமால் போன மீனவர்களில் ஒருவரான மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ்(வயது 37) இராமேஸ்வர மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு இராமேஸ்வரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது.

எனினும் மற்றைய மீனவரான சிறுத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சம்சிங் அன்ரன் (வயது 23) என்பவர் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில் உனடியாக கடற்படையினரின் உதவியுடன் தேடியும் குறித்த மீனவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. காப்பாற்றப்பட்டு இந்திய இராமேஸ்வரம் பொலிஸரிடம் ஒப்படைக்கப்பட்ட மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ் (வயது-37) என்ற மீனவரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மாவட்ட மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் காணாமல் போயுள்ள சிறுத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சம்சிங் அன்ரன் (வயது 23) என்ற மீனவர் தொடர்பிலான தகவல் எவையும் தெரியாத நிலையில், குறித்த மீனவர் காணாமல் போய் இன்று சனிக்கிழமையுடன் 7 நாட்களாகின்ற நிலையில் குறித்த குடும்பஸ்தர் மீண்டும் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் மனைவி மற்றும் உறவினர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வாகனம் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!!

இலங்கையில் வாகனங்களுக்கு வழங்கப்படும் இலக்கத் தகடுகளில் மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் முதல் புதிய வசதியை இணைக்க எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வாகனங்களுக்கான இலக்கங்களை அச்சிடும் நிறுவனங்களின் ஒப்பந்த காலம் அடுத்த வருடத்துடன் முடிவடைகிறது.

புதிதாக கேள்விப்பத்திரங்களை கோரும்போது, புதிய வசதிகளுடன் கூடிய இலக்கத் தகடு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

புதிய இலக்க தகடுக்காக RFD தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என ஆணையாளர் மேலும் கூறினார்.

ஐரோப்பாவில் உலக நாடுகளை பின்தள்ளி முதலிடம் பிடித்த இலங்கைப் பெண்!!

இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இத்தாலியில் நடைபெற்ற நத்தார் கேக் தயாரிக்கும் போட்டியில் இலங்கை பெண் ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இலங்கையின் சார்பில் கலந்து கொண்ட மஞ்சுளா என்ற பெண்ணே முதலிடம் பிடித்துள்ளார். பல நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மஞ்சுளா முதலிடம் பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டி கடந்த 20ம் திகதி சிசிலி தீவில் நடைபெற்றுள்ளது.

மஞ்சுளா தொடர்பான செய்தியை புகைப்படத்துடன் இத்தாலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.தான் இவ்வளவு பிரபலமடைவேன் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என மஞ்சுளா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

புதிய iPhoneகளை விற்க பழைய iPhone-களின் வேகத்தைக் குறைத்த அப்பிள்!!

iPhone களின் பயன்பாட்டுக்காலத்தை அதிகரிக்கும் போது அதன் பேட்டரி திறன் அதிகளவில் செயற்படுவதைத் தவிர்க்கும் வகையில் iPhone இன் இயக்க வேகத்தைக் குறைப்பதை அப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

புதிய iPhone-களை வாங்குவதைத் தூண்டுவதற்காக அப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைக்கிறது என்ற சந்தேகம் நீண்டகாலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்நிலையில், பழைய iPhone-களில் பேட்டரியின் திறன் குறைவதால் அதற்கேற்றவாறு அதன் இயக்க வேகத்தைக் குறைப்பதாக அப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயமானது ‘ரெட்டிட்’ என்ற சமூக இணையத்தளத்தில் பயனர் ஒருவர் தனது iPhone-இன் செயற்பாட்டு சோதனை முடிவுகளை வெளியிட்டவுடனே பலருக்குத் தெரியவந்தது.

அதாவது, ஐபோன் 6S மாடலை பயன்படுத்தி வந்த அவருடைய திறன்பேசியின் இயக்க வேகம் காலப்போக்கில் குறைந்துவிட்டது. ஆனால், அதன் பேட்டரியை புதிதாக மாற்றியவுடன் மீண்டும் அதன் வேகம் அதிகரித்துக் காணப்பட்டது.

”நான் எனது சகோதரரின் iPhone 6 பிளஸ் மாடலை பயன்படுத்தியபோது அது என் மாடலைவிட வேகமாக செயற்படுவதை அறிந்தபோது இதில் ஏதோ பிழை இருப்பதுபோல் தோன்றியது” என்று ரெட்டிட்டில் அவர் பதிவிட்டுள்ளார்.

வெவ்வேறு அப்பிள் இயங்குதள பதிப்புகளில் இயங்கும் பல iPhone-களைக் கொண்டு சோதனையை நடத்திய தொழில்நுட்ப இணையதளமான ஜீக்பென்ச், சில iPhone-களின் இயக்க வேகம் வேண்டுமென்றே குறைக்கப்படுவதைக் கண்டறிந்துள்ளது.

வடகொரியாவிற்கு மேலும் பல தடைகள் : பெட்ரோல் இறக்குமதி 90% குறையும் வாய்ப்பு!!

வட கொரியா நடத்திய சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது.

அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட இந்த தீர்மானம், வட கொரியாவின் பெட்ரோல் இறக்குமதியை 90% வரை குறைக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது.

வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளான சீனாவும் ரஷ்யாவும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

ஏற்கனவே வட கொரியா மீது அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் வட கொரியா மீது அமெரிக்கா தடைகளை விதித்து வருகிறது. வட கொரியாவின் அணு திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் சொத்துக்களை முடக்கியது, அந்நாட்டுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது என அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ளது.

வட கொரியா மேலும் தனது செயலைத் தொடர்ந்தால் அது மேலும் தண்டனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு வழிவகுக்கும் என்ற தெளிவான செய்தி இந்த பொருளாதாரத் தடை மூலம் வட கொரியாவுக்கு அனுப்பட்டுள்ளது என அமெரிக்காவுக்கான ஐ.நாவின் தூதர் நிக்கி ஹேலி கூறியுள்ளார்.

வட கொரியாவின் ஆயுத திட்டம் தொடர்பாக, சர்வதேச சமூகத்தின் ஒருமனதான நிலைப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என சீனாவின் தூதர் வூ ஹைடாவோ கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ளார். உலகம் அமைதியை விரும்புகிறது, மரணத்தை அல்ல என டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

வட கொரியாவின் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை ஒரு வருடத்திற்கு 5,00,000 பீப்பாய்களாகக் குறைப்பது, கச்சா எண்ணெய்யை ஒரு வருடத்திற்கு 4 மில்லியன் பீப்பாய்களாகக் குறைப்பது. இயந்திரங்கள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட வட கொரியா பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை ஆகியன புதிய தடைகளில் உள்ளது.

பயணிகள் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 30 பேர் உயிரிழப்பு!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டம் துபி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

துபி பகுதியில் உள்ள பனாஸ் ஆற்று பாலத்தில் பயணித்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது.

ஆற்றில் இருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகள், 3 பெண்கள் ஆவர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

15 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.