இம்முறை நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2017) பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றியிருந்தனர்.
மேலும், 77 ஆயிரத்து 284 தனியார் பரீட்சார்த்திகளும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சவுதியில் நண்பருக்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவாக, அவர்கள் தங்கள் பணத்தை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவர் சவுதியில் தனியார் மின்சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே வேளை கேரளாவைச் சேர்ந்த சஞ்சு என்பவர் சவுதியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு கெடுபிடி அதிகமானதால், அவர் இந்தியாவிற்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.
இதனால் சஞ்சு இரண்டு நாட்கள் உங்கள் ரூமில் தங்கிவிட்டுச் செல்கிறேன் என்று கூறி ராஜேந்திரன் ரூம்மில் தங்கியுள்ளார், இதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர் ராஜேந்திரன் ரூமில் இருந்த 4 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு கேரளாவிற்கு சென்றுள்ளார்.
வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய ராஜேந்திரன், ரூமில் இருந்த தன்னுடைய பணம் இரண்டரை லட்சம், தனது நண்பன் விஸ்வநாதன் வைத்திருந்த ஒன்றரை லட்சம் என மொத்தம் 4 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின் அவர்கள் கேரளா சென்ற சஞ்சுவிடம் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, ஆம் நான் தான் உங்கள் பணத்தை திருடிவிட்டேன், முடிந்ததை பாருங்கள் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் விரக்தியான அவர்கள் சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு அனுப்ப முடியாமலும், திருடிச் சென்ற சஞ்சு மீது பொலிசாரிடம் புகார் அளிக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பெரு மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள நபர் ஒருவர் முயற்சி செய்துள்ளார்.
அவருடைய வருங்கால மனைவியின் கண் முன்னே இந்த சம்பவம் நடை பெற்றதால் அவரை காப்பாற்றும் முயற்சியில் அந்த பெண் இறங்கியுள்ளார்.
சில மணித்துளிகள் பல்கனியில் தொங்கியபடியே இருந்தபோது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், அவர்களை காப்பாற்றும் முய்ற்சியில் இறங்கியுள்ளனர்.
அப்போது தன்னலமற்ற மீட்புபடை வீரர் ஒருவர் கயிற்றின் மூலம் தொங்கியபடியே அந்த ஜோடியை காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்துள்ளார்.
தொடர்ந்து அந்த நபர் தற்கொலை செய்துகொள்ளபோவதாகவும், தன்னை விட்டுவிடும்படியும் கூச்சலிட்டவாறு இருந்துள்ளார், ஒரு கட்டத்தில் கைதவறி பெண்ணுடன் கீழே குதித்துவிட்டார்.
அப்போது அதிர்ஷ்டவசமாக அந்த பெண் மூன்றாவது மாடியில் நின்றுவிட்ட நிலையில் நபர் மட்டும் பலியானார். மேலும் அந்த நபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் முன்னாள் மனைவியின் கள்ளக்காதலனை செந்தில்ராஜ் என்ற பல் மருத்துவர் ஒருவர் இதயத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், பல் மருத்துவம் முடித்துள்ள நான் பல்லாவரத்தில் டாட்டூ ஸ்டூடியோ நடத்தி வருகிறேன். அந்த பகுதியில் உள்ள நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். பின்னர் எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாங்கள் இருவரும் விவாகத்து பெற்றுக்கொண்டோம்.
இதற்கிடையில், எனது நிறுவனத்தில் பணியாற்றிய சஞ்சீவ் என்ற நபருடன் எனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. எனது நிறுவனத்தில் பணியாற்றிய சஞ்சீவ் சில மாதங்கள் கழித்து வேறு ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றினார்.
சஞ்சீவ்க்கும் எனது மனைவி நித்யாவும் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். விவாகரத்து பெற்றாலும் நித்யா என்னுடன் தொடர்பில் இருந்தார். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நித்யா தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அங்கு சஞ்சீவை தீர்த்துக்கட்ட திட்டம்போட்டேன். மரு அருந்திய பின்னர் சஞ்சீவ் எனது அருகில் போதையில் இருந்தார். அப்போது நகர் வெட்டியில் உள்ள சிறிய கத்தியால் சஞ்சீவின் இதயத்தை கிழத்ததில், சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்தான்.
அதன்பின்னர் அங்கிருந்து தப்பித்துவிட்டேன் என பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான செந்தில்ராஜ் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மூன்று செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சின்குவான் ஏவு தளத்தில் இருந்து, 3 செயற்கை கோள்கள் மார்ச்-2சி என்னும் ராக்கெட்டின் உதவியுடன் இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் மூன்று செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது சாதனையாக கூறப்படுகிறது. இது குறித்து சீன விண்வெளி ஆய்வு மையம் கூறுகையில், ‘விண்ணில் செலுத்தப்பட்டுள்ள மூன்று செயற்கை கோள்களும், சரியான வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் திட்டமிட்டப்படி சிறப்பாக செயல்படுகின்றன. மேலும், புவி காந்த புலத்தை ஆய்வு செய்வதில், இந்த 3 செயற்கை கோள்களும் முக்கிய பங்கு வகிக்கும்’ என தெரிவித்துள்ளது.
வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பேரூந்துகள் உள்ளூர் சேவைகளை முன்னெடுப்பதற்கு இன்று காலை சென்ற போது இ.போ.சபையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிகளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேரூந்து நிலையத்தில் கடந்த 11 மாதமாக சேவைகள் இடம்பெறாமையால் பேரூந்து நிலையம் பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் இ.போ.சபை மற்றும் தனியார் பேரூந்து சேவைகள் இரண்டும் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடுமாறு முதலமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் இரு பகுதியினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா நகரசபைக்கும், வவுனியா பொலிசாருக்கும் முதலமைச்சரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் இ.போ.சபை தரப்பால் சில பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து நேற்றைய தினம் முதலமைச்சர் அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன் மற்றும் வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் ஆகியோர் வவுனியாவிற்கு வருகை தந்து சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இதனடிப்படையில் நத்தார் மற்றும் பண்டிகைக்காலம் என்பதால் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து முழுமையான சேவையை மேற்கொள்வதனை இரண்டு வாரங்களுக்கு பிற்போடுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் இடைப்பட்ட காலப்பகுதியில் தனியார் பேருந்துகளின் உள்ளூர் சேவைகள் மட்டும் இ.போ.சபையின் பழைய பேரூந்து நிலையத்தில் இருந்தும், தூர இடங்களுக்கான சேவைகள் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்தும் செயற்படுத்துவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று (26.12) காலை வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்திற்கு தனியார் பேரூந்துகள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்க சென்ற போது இ.போ.சபையினர் அப் பேரூந்துகளை உள்நுழைய விடாது தடுத்து பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன் பொலிசார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வருகை தந்து இரண்டு தரப்பினருடனும் கலந்துரையாடினர்.
இதனையடுத்து புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தனியார் பேரூந்துகள் இயங்குவதற்கும், பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து இ.போ.சபை பேரூந்துகள் இயங்குவதற்கும் தற்காலிகமாக இணக்கம் காணப்பட்டது.
உரிய சட்ட நடவடிக்கை மூலம் இரு தரப்பினர்களையும் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை வழங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபைச் செயலாளர் இ.தயாபரன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து முறுகல் நிலை பிற்பகல் முடிவுக்கு வந்தது.
இது தொடர்பில் தனியார் பேரூந்து சங்கத் தலைவர் இ.இராஜேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
வடமாகாண முதலமைச்சரின் கீழ் உள்ள போக்குவரத்து அமைச்சின் மூலம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் எமக்கும், வவுனியா நகரசபைச் செயலாளருக்கும், இலங்கை போக்குவரத்து சபையினருக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இடையில் மூன்று மணிநேரம் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்படி எமது தனியார் பேரூந்துகளின் உள்ளூர் சேவையினை நகரசபைக்கு சொந்தமான பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து நடத்துமாறும் குழப்பம் விளைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து நாம் பழைய பேரூந்து நிலையத்திற்கு சென்ற போது எமது பேரூந்துகளை உள்நுழைய விடாது இ.போ.சபையினர் தடுத்து குழப்பம் விளைவித்தனர். அவர்களது செயற்பாட்டுக்கு உடந்தையாக வவுனியா பொலிசாரும் நடந்து கொண்டனர்.
இதனையடுத்து வவுனியா நகரசபையில் வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் செ.மயூரன், உள்ளூராட்சி உதவி ஆணையானளர், நகரசபைச் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்படி எம்மிடம் 5 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நகரசபைக்கு சொந்தமான பேரூந்து நிலையத்திற்கான ஒப்பந்த காலம் இ.போ.சபைக்கு முடிவுறுவதால் அதன் பின் அதாவது முதலாம் திகதி முதல் எந்தவொரு பேரூந்தும் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திலோ அல்லது முதலாம், இரண்டாம் குறுக்கு தெருவிலோ நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்படுவதாகவும் அதற்குரிய கடிதங்கள் சட்ட ரீதியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் வவுனியா நகரசபையால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக நாம் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து எமது சேவைகளை வழங்குகின்றோம் என்றார்.
இது தொடர்பாக இ.போ.சபை ஊழியர் தொழிற்சங்கத் தலைவர் எஸ்.வாமதேவன் தெரிவிக்கையில், பழைய பேரூந்து நிலையம் வவுனியா நகரசபையால் 99 வருட குத்தகைக்கு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. நாம் வாடகை செலுத்தி வருகின்றோம். எமக்கு உரிய வகையில் எதுவும் தெரியப்படுத்தாது தனியார் பேரூந்துகளை எமது பேரூந்து நிலையத்திற்குள் செலுத்த முற்பட்டதால் தான் குழப்பம் ஏற்பட்டது.
எமது தொழிற்சங்கம் மற்றும் எமது போக்குவரத்து சபை எடுக்கும் தீர்மானத்திற்கு அமைவாகவே எம்மால் செயற்பட முடியும். நாம் மத்திய அரசின் கீழே செயற்படுகின்றோம் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை குழப்பம் ஏற்படுத்தி மக்களது இயல்புக்கு பங்கம் விளைவித்தமைக்காக வவுனியா பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரியால் வவுனியா நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதையடுத்து தனியோர் பேரூந்து சங்கத்தைச் சேர்ந்த மூவருக்கும், இலங்கை போகுவரத்து சபை சாலை முகாமையாளர் மற்றும் இ.போ.சபை தொழிற்சங்க உறுப்பினர்கள் இருவருக்குமாக ஆறுபேரை நாளை (27.12) ஆஜராகுமாறு வவுனியா நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இரண்டாயிரம் ரூபாவுடன் வர்த்தகத்தை ஆரம்பித்த இலங்கையர் ஒருவர், உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளார்.
2000 ரூபாயில் கொழும்பிற்கு வந்து தெற்காசியாவின் மிகப்பெரிய தொழிற்சாலைக்கு இலங்கையர் ஒருவர் உரிமையைாளராகி உள்ளார்.
சம்பத் மாயாகடுவ என்ற நபரே இவ்வாறு வாழ்க்கையில் வென்றுள்ளார். 2008ஆம் ஆண்டு 2000 ரூபாய் பணத்துடன் கொழும்பிற்கு வந்த குறித்த நபருக்கு மென்பொருள் உருவாக்கம் தொடர்பில் மிகப்பெரிய திறமை காணப்பட்டுள்ளது.
இதனால் அப்போதைய காலப்பகுதியின் பிரபலமான தொலைபேசி நிறுவனம் ஒன்றில் இணைந்து பணியாற்றுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அவரது திறமையை பார்த்த தொலைபேசி நிறுவனம் சிறிது காலத்திலேயே அந்த நிறுவனத்தின் முக்கிய பணியை அவரிடம் வழங்க தீர்மானித்தது.
அதற்கமைய சிம் அட்டைகளை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களின் தரவுகளை பதிவு செய்யும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதற்காக அவரால் நிர்மாணிக்கப்பட்ட மென்பொருளையே அவர் பயன்படுத்தியுள்ளார்.
பின்னர் அந்த சேவையில் சிறப்பான இடத்திற்கு வந்தவர் 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் IDEA HOLDINGS என்ற பெயரில் தனது முதலாவது நிறுவனத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.
சம்பத் மாயாகடுவ இந்த நிறுவனத்தின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி சிறந்த வர்த்தகர் என உலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.
அத்துடன் தனது நிறுவனத்தினுள் எவ்வித ஆவணங்களும் பயன்படுத்தாமல் Paperless நிறுவனமாக மாற்றி, சுற்றாடல் மீது தான் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது வர்த்தகத்தில் சிறந்த இடத்தை பிடித்தவர் 2012ஆம் ஆண்டு ஆரம்பித்த கூரை மற்றும் சிலிங் விற்பனை நிலைய திட்டம் ஒன்றை நாடு முழுவதும் விஸ்தரித்தார்.
தற்போது 42 தொழில் பிரிவுகளுக்கு அனுமதி பத்திரம் கொண்டுள்ளவராக காணப்படும் சம்பத் மாயாகடுவ, தெற்காசியாவின் மிகப்பெரிய தொழிற்சாலைக்கு உரிமையாளராகியுள்ளார்.
தற்போது அவர் 5000 மில்லியன் ரூபா சொத்துக்களுக்கு உரிமையாளராக உள்ளார். இந்த திறமையான வர்த்தகர் 10 பில்லியன் ரூபா இலக்குடன் 2018ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு தயாராகி உள்ளார்.
இலங்கையின் 3000 முகநூல் கணக்குகளை முகநூல் நிறுவனம் இந்த ஆண்டில் முடக்கியுள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவைரயில் இவ்வாறு சுமார் 3000 முகநூல் கணக்குகள் பாவனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
போலி கணக்குகளை நடத்திச் செல்லல், முகநூலைப் பயன்படுத்தி பணம் மோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களின் அடிப்படையில் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
முகநூல் தொடர்பில் இந்த ஆண்டில் சுமார் 3400 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் இலங்கையின் கணனி அவசர பதிலளிக்கும் பிரிவினருக்கு அறிவுறுத்தியதனைத் தொடர்ந்து, முகநூல் நிறுவனம் கணக்குகளை முடக்கியுள்ளதாக இந்தப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாவலர் பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் தென் பகுதியிலுள்ள Milton Keynes எனுமிடத்தில் வசித்து வந்த Donna Lowe எனும் நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
நான்கு பிள்ளைகளின் தாயான அவர் சில மாதங்களில் மரணமடையும் நிலைக்கு சென்றுவிட்டார். அவரின் ஒவ்வொரு மாற்றங்களையும் புகைப்படங்களாக எடுத்த கணவர் Elliott, அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.
இந்த செயற்பாட்டினால் அவரது கணக்கினை பேஸ்புக் நிறுவனம் திடீரென இடைநிறுத்தம் செய்துள்ளது. 32 வயதான Donna Lowe கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகநூல் ஊடாக ஏற்பட்ட காதலினால் 17 வயதான யுவதியொருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். உடவளவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.
முகநூலின் ஊடாக காதல் வயப்பட்ட யுவதியொருவரை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவமொன்று பலாங்கொட, வெலிகெபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உடவளவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒரு மாத காலமாக முகநூல் ஊடாக இளைஞர் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். முகநூலில் இளைஞரின் புகைப்படங்களைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டே யுவதி காதல் வயப்பட்டுள்ளார்.
யுவதியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த 20ம் திகதி கொழும்பிற்கு வருமாறு யுவதிக்கு குறித்த இளைஞர் அறிவித்துள்ளார். இதனை நம்பிய யுவதி இளைஞரின் அழைப்பினை ஏற்று வீட்டாருக்குத் தெரியாமல் பஸ் மூலம் கொழும்பிற்கு சென்றுள்ளார்.
பஸ்ஸில் கொழும்பை நெருங்கும் போது தமக்கு இன்று அலுவலகத்தில் அதிக வேலைப்பளு காணப்படுவதாகவும் நண்பர் ஒருவர் அழைத்து வர வருவார் எனவும் இளைஞர் கூறியுள்ளார். அலுவலகத்தில் தாம் காருடன் காத்திருப்பதாகவும் பஸ் தரிப்பிடத்திற்கு வர முடியாது எனவும் குறித்த இளைஞர் யுவதியிடம் கூறியுள்ளார்.
பயம் கொள்ளத் தேவையில்லை, நண்பரின் தொலைபேசி இலக்கம் அங்க அடையாளங்கள் என்பனவற்றை யுவதிக்கு தொலைபேசி மூலம் குறித்த இளைஞர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் நண்பருடன் குறித்த யுவதி பஸ்ஸில் பயணித்துள்ளார். குளிர்பானம் ஒன்றையும் குடித்த யுவதி எழுந்து பார்க்கும் போது பலாங்கொடை பிரதேசத்தில் இருப்பதனை உணர்ந்துள்ளார். நண்பர் காலையில் வந்து அழைத்துச் செல்வார். நாம் இப்போது அக்காவின் வீட்டுக்குச் செல்வோம் என குறித்த யுவதியை வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்ற காதலனின் நண்பர், பாலியல் ரீதியாக யுவதியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
வீட்டில் மகள் இல்லாத காரணத்தினால் பெற்றோர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யுவதியும் தமக்கு நேர்ந்த கதி பற்றி பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகநூலில் கவர்ச்சியான வேறு ஒருவரின் புகைப்படத்தை பதிவேற்றி அதன் ஊடாக யுவதியை ஏமாற்றி, அவரை துஸ்பிரயோகம் செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. நண்பராகவும் முகநூலில் காதலனாகவும் தோன்றி யுவதியை ஏமாற்றியுள்ளார்.
என்னுடைய உழைப்புக்குக் குறைந்தது பத்தாயிரம் வாக்குகளாவது வந்திருக்க வேண்டும். இவ்வளவு கேவலமாக இந்த நாடு போய்விட்டது என்பதைத்தான் இந்த ஆர்.கே நகர் வெற்றி காட்டுகிறது என கடும் சீற்றத்தோடு பேசியிருக்கிறார் சீமான்.
பெரும் நெருக்கடிப் பின்னர் ஆர்கே நகர் இடைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் ஆளும்கட்சி வட்டாரத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனைவிட 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.
இந்நிலையில், இந்த தேர்தல் குறித்து தமிழகத்தில் இருந்து வெளிவரும் இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக பேட்டியளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னுடைய உழைப்புக்குக் குறைந்தது பத்தாயிரம் வாக்குகளாவது வந்திருக்க வேண்டும். இவ்வளவு கேவலமாக இந்த நாடு போய்விட்டது என்பதைத்தான் இந்த வெற்றி காட்டுகிறது.
இந்த நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. மக்களுக்குக் காசு கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலை இருக்கும் வரையில் வெற்றி பெறுகிறவர், சேவை செய்யும் மனநிலையில் இருக்க மாட்டார். பணம்தான் பிரதானம் என்றால், நேர்மையான நிர்வாகம், சேவை என்பதையெல்லாம் மக்கள் எதிர்பார்க்கக் கூடாது.
ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆண்ட இந்தக் கட்சிகள் எல்லாம், ‘காசு கொடுத்தால் போதும்’ என்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டார்கள். இதுதான் இவர்கள் இத்தனை ஆண்டுளாக செய்து வரும் சாதனை. மக்களும் தங்களுடைய உரிமையை விற்கும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.
வாக்கை விற்பது என்பது மானத்தை விற்பது போன்றது என்பதை மறந்துவிட்டார்கள். இவ்வளவு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு, பணம் எப்படி வந்தது என்பதை யோசிக்கும்போதுதான் நல்ல சிந்தனை பிறக்கும்.
பணம் பெறுகிறவரையில் மக்களிடமும் நேர்மை இருக்காது. ஆள்பவர்களிடமும் நேர்மை இருக்காது. ‘ நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள், எனக்குப் பணம் கொடு’ என்ற மனநிலையை எப்படிப் பார்ப்பது? இது ஒரு குற்ற சமூகமாகத்தான் மாறிப் போகும்.
2ஜி வழக்கில் சரியான ஆதாரங்களை முன்வைக்க அரசு தவறிவிட்டதால் விடுதலை செய்துவிட்டார்கள். சங்கர்ராமன் படுகொலையில் சரியான ஆதாரம் இல்லை; தா.கிருஷ்ணன் கொலை, லீலாவதி கொலை எனப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இந்த வழக்குகளின் தீர்ப்புகள் எதைக் காட்டுகிறது? நீ என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்து கொள். சாட்சி இல்லாமல் பார்த்துக் கொள் என்பதுதானே. சமூகமே குற்ற சமூகமாக இருக்கும்போது நல்ல சிந்தனைகள் எப்படிப் பிறக்கும்?
ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கெல்லாம் வாக்கு செலுத்துவார்களா என சிலர் தொடர்ந்து பேசி வந்தனர். அதையும் மீறி எதற்காக தினகரனுக்கு இவ்வளவு வாக்குகளைச் செலுத்தினார்கள்? அவர் மக்களுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தினார்? அவர் வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார் என இந்த மக்கள் எப்படி நம்பினார்கள்? தினகரன் வெற்றிக்கு ஒரே காரணம், பணம் மட்டும்தான். பணத்தை பிரதானமாக வைத்துக் கட்டமைக்கிற ஒரு சமூகம், எப்படி சரியான சமூகமாக இருக்கும்.
ஒரு முதலீட்டாளன் இலாபத்தைப் பெறுவதற்கு வருவாரா? மக்கள் சேவைக்காக வருவாரா? 100 கோடி, 200 கோடி என செலவிட்டு வெற்றியைப் பெறுகிறவர், எப்படி சேவை செய்வார்? ஒரு சட்டமன்ற உறுப்பினராகி சேவை செய்யும் அளவுக்கு இவர்கள் நல்லவர்களா? ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று அம்மையார் தமிழிசை தெருவில் இறங்கி போராடுகிறார். நீங்கள்தான் கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டீர்களே. பிறகு இவ்வளவு பணம் எப்படி வந்தது?
கேஸ்லெஸ் எகானமி என அறிவித்த பிறகும், முழுக்க 2 ஆயிரம் ரூபாய் தாள்களாக தொகுதியில் விளையாடியது எப்படி?
சமூகப் பொறுப்பு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. பணம்தான் பிரதானம் என்றால் இது முதலாளிகளின் வேட்டைக்காடாகத்தான் இருக்கும். மக்கள் வாழ்கிற நாடாக இது இருக்காது. இந்தமுறை தினகரன் கொடுத்த பணத்துக்காக மட்டும் மக்கள் வாக்களிக்கவில்லை. கடந்தமுறை தினகரனுக்காக எடப்பாடி பழனிசாமி வாக்குக் கேட்க வந்தபோது, 4 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அந்தப் பணமும் தினகரனுக்கான வாக்கு கணக்கில் சேர்ந்துவிட்டது. கடந்தமுறை நான்காயிரம் வாங்கிவிட்டோம். இந்தமுறையும் நான்காயிரம் வாங்கிவிட்டோம். அவருக்குத்தான் வாக்கு செலுத்த வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.
இந்த ஒரு விஷயத்தில்தான் மதுசூதனன் தோற்கிறார். இந்தப் பணத்தை தினகரன் எப்படி சம்பாதித்தார் என மக்கள் கேள்வி எழுப்பவில்லை. திருடர்களில் அதிகப் பணம் கொடுக்கிறவர் நல்லவர் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டார்கள். கடந்தமுறை தினகரனுக்காக காசு கொடுத்த எடப்பாடி பழனிசாமி, இந்தமுறை மதுசூதனனுக்காக வாக்கு கேட்கப் போகும்போது, ‘ கடந்தமுறை அவருக்காகப் பணம் கொடுத்தீர்கள். தேர்தலும் நின்று போய்விட்டது. இந்தமுறை தினகரனுக்கே ஓட்டு போடுகிறோம்’ என்பதைச் சுட்டிக் காட்டிவிட்டனர். இது மக்களிடம் இருக்கும் தர்மம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஐம்பதாயிரம் இளைஞர் வாக்குகள் இருக்கின்றது. இதை நம்பித்தான் நாங்கள் களத்தில் நின்றோம். தேர்தலில் கடுமையான உழைப்பைக் கொடுத்தோம். தெருத்தெருவாக பல கிலோமீட்டர்கள் தினமும் நடந்து மக்களிடம் பரப்புரை செய்தோம். அதில் ஒரு பத்தாயிரம் பேர் எங்களுக்கு வாக்கு செலுத்தியிருந்தால் கூட மகிழ்ச்சியடைந்திருப்போம். எங்களுக்கு 3,860 வாக்குகள் மட்டுமே வந்திருக்கின்றன. மீதமுள்ள வாக்குகள் எங்கே போனது என்று தெரியவில்லை.
அங்கு இருப்பவர்கள் எல்லாம் அடித்தட்டு மக்கள். ஆழ்ந்த வறுமையில் இருப்பவர்கள். தேர்தல் களத்தில் ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் பணம் வாங்குகிறார்கள். இந்தச் செயல் கொடுங்குற்றம் என மக்களுக்குப் புரியவில்லை. இதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
போட மாட்டோம் ஓட்டு; வாங்க மாட்டோம் நோட்டு’ எனப் பதாகையை கையில் வைத்திருக்கிறார்கள். அதை இந்த மக்கள் படிப்பதே இல்லை. வாக்குக்காக காசு கொடுத்த செல்வி என்ற பெண்ணைக் கைது செய்தார்கள். அவர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? காலையில் கைது செய்துவிட்டு மாலையில் விடுவிப்பதற்குப் பெயர் நடவடிக்கையா?
இந்தத் தேர்தலால் நான் சிறு பெருமைகூட அடையவில்லை. தொகுதியில் மக்கள் எங்களுக்குக் காட்டிய வரவேற்பைப் பார்த்து மற்ற கட்சிகள் மிரண்டு போனார்கள். இவர்கள் எங்களுக்கு வாக்கு போட்டுவிடக் கூடாது என பயந்து கொண்டே அதிகமாகப் பணம் கொடுத்தார்கள்.
எங்களுக்கு 3,800 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். இவ்வளவு பணத்தையும் மீறி, நல்ல நோக்கத்துக்காக வாக்கு செலுத்திய மக்களுக்கு உண்மையாக இருப்போம். இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை ஒழித்துக்கட்டி, உண்மையான ஜனநாயத்தை உருவாக்குவதற்கு இன்னும் உழைக்க வேண்டும்.
ஐம்பதாயிரம் இளைஞர்களை நம்பித்தானே களத்தில் நின்றோம். எனக்கு பத்தாயிரம் வாக்கு வந்திருந்தால், தொலைதூரத்தில் இருந்து பார்க்கும் இளைஞனுக்கு நம்பிக்கை வந்திருக்கும். தொடர்ச்சியாக தோல்வி வரும்போது விரக்தி நிலை ஏற்பட்டுவிடும். இந்த நிலை தொடர்ந்தால் மாவோயிஸமும் நக்சலிஸமும் தோன்றும். அது தேசத்துக்கு பேராபத்தாக முடியும்.
கேரளாவில் எளிய நிர்வாகம் இருக்கிறது. அங்கு ஓட்டுக்குப் பணமும் கொடுப்பதில்லை, அந்த மக்கள் வாங்குவதும் இல்லை. அங்கு ஒரு மீனவன் சாவுக்கு அந்த தேசமே அழுகிறது. இங்கு ஆயிரம் பேர் இறந்தும் ஆட்சியாளர்கள் அழுதார்களா? தேர்தல் நாடகத்துக்குள் மீனவன் சாவை மூடிவிட்டார்கள். எத்தனை பேர் செத்தார்கள் என புள்ளிவிபரத்தை கணக்கெடுத்து பணம் கொடுத்துவிட்டார்கள். இங்கு நெல்மணிகள் குறைவாகவும் பதர்கள் அதிகமாகவும் வளர்ந்துவிட்டது.
தினகரன் வீட்டில் எவ்வளவு ரெய்டு நடத்தினார்கள். அதையும் மீறி இவ்வளவு பணம் எப்படி வெளியில் வருகிறது? எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது? இந்த நாட்டில் என்ன நடக்கிறது? வருமான வரித்துறை வேட்டை என்ற பெயரில் சேகர் ரெட்டி, நத்தம் விஸ்வநாதன், அன்புநாதன் வீட்டுக்குச் சென்றார்களே, அவர்கள் வீட்டில் என்னதான் எடுத்தார்கள்?
எவ்வளவு எடுத்தோம் என நீங்கள் ஏன் மக்களிடம் சொல்லவில்லை? போனமுறை 89 கோடி கொடுத்தது குற்றம் எனத் தேர்தலை ரத்து செய்தார்கள். இந்தமுறையும் பணம் கொடுத்துத்தான் வெற்றி பெற்றார். கேரளாவில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அடி விழும். இங்கு காசு கொடுக்கவில்லையென்றால் அடி விழும். இதை மாற்ற வேண்டும் என்றால் ஒவ்வொரு குடிமகனும் நினைத்தால்தான் முடியும்.
ஆர்.கே.நகர் முதலமைச்சர் ஜெயலலிதா தொகுதி என்கிறார்கள். அவருடைய கால் அந்த நிலத்தில் ஒருமுறையாவது தொட்டிருக்குமா? நூறு ஏக்கரில் குப்பை நிறைந்திருக்கும் தொகுதி. எவ்வளவோ நம்பிக்கைகைளை அந்த மக்களிடம் விதைத்தோம். எங்களை ஏமாற்றிவிட்டார்கள். அதேபோல், இந்த நோட்டா என்பதே ஒரு மனநோய். குரங்கு கையில் பூ மாலை என்பதுபோல இவர்கள் கையில் வாக்கு. நன்றாக சமைத்து நானும் சாப்பிட மாட்டேன். மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டேன் என்பது போலத்தான் நோட்டா வாக்குகளும். இவர்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களைத்தான் பிடிக்கவில்லை. எங்களை ஏன் உங்களுக்குப் பிடிக்காமல் போனது? என்று குறிப்பிட்டுள்ளார்.
சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு கண்ணீருக்கு மத்தியில் யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை நடைபெற்றது.
இதன்போது கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் உயிர்நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகளாகும் நிலையில் இலங்கையின் பல இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் நேற்று நத்தார் கொண்டாடப்பட்ட சூழ்நிலையில் உலகிலேயே மிகச்சிறிய நத்தார் வாழ்த்து அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டை 15 மைக்ரோ மீட்டர் அகலமே உடையது. 20 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்டது. அதாவது 15X20 மைக்ரோ மீட்டர் என்ற அளவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
மிகச்சிறிய நத்தார் வாழ்த்து அட்டையை அதிக சக்தி வாய்ந்த மைக்ரோஸ் கோப் மூலமே பார்க்க முடியும். அப்போதுதான் அதில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படிக்க முடியும்.
இது பிளாட்டினத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மீது சிலிகான் நைட்ரேட் முலாம் பூசப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மூலமே இதை பயன்படுத்த முடியும்.
உலகிலேயே மிகச்சிறிய அளவிலான நத்தார் வாழ்த்து அட்டை என சாதனை படைத்துள்ள இதை இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் டேவிட்காஸ், கென்மிஸ்கார்ட் ஆகியோர் உருவாக்கினர்.
பிபா கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் சம்பியன் கிண்ணம் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருக்கின்றது. அதிலும் முக்கியமாக இந்தக் கிண்ணம் முதல் முறையாக இலங்கை வருகிறது.
2018 உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் முதலாவது நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி தெற்காசிய நாடுகளிலேயே இலங்கைக்கு அடுத்து பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இந்தக் கிண்ணம் கொண்டுசெல்லப்படவிருக்கின்றது என்பதும் விசேட அம்சமாகும்.
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணமானது சகல மக்களும் கண்டுகளிப்பதற்காக 23 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள முதலாவது நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2018 ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள வெற்றிக்கிண்ணத்தை கால்பந்து ரசிகர்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் தலைவராக இருக்கும் விராட் கோலி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து விளையாடி வந்ததால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது.
விராட் கோலியும், அவரது காதலியுமான அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் கடந்த 11ம் திகதி திருமணம் செய்து கொண்டனர். இதனால் டி20 கிரிக்கெட் தொடரில் இருந்தும் விராட் கோலி விலக நேரிட்டது. இதனால் இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
அவர் விளையாடாததால் ஐ.சி.சி. டி20 துடுப்பாட்ட தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த விராட் கோலி 3 வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
இலங்கை தொடருக்கு முன் 824 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தார். மூன்று போட்டிகளில் விளையாடாததால் 48 புள்ளிகள் குறைந்த 776 புள்ளிகளுடன் 3 வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
அவுஸ்திரேலிய வீரர் பிஞ்ச் 784 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அதிரடி வீரர் எவின் லெவிஸ் 780 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்திலேயே நீடிக்கிறார். டெஸ்ட் தரவரிசையில் 2 வது இடத்தில் உள்ளார்.
பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த பும்ரா, இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட் வீழ்த்த முடியாத காரணத்தினாலும், கடைசி போட்டியில் விளையாடாத காரணத்தினாலும் 3 வது இடத்திற்கு சரிந்துள்ளார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2வது இடத்தில் உள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல் 23 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 14வது இடத்தை பிடித்துள்ளார்.
லிந்துலை – நாகசேனை – டிலிகுற்றி தோட்டத்தில் நேற்று (25.12) மாலை உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
டிலிகுற்றி தோட்டத்தில் தேயிலை மலையில் தண்ணீர் பார்ப்பதற்காக சென்ற ஒருவர் அவ்விடத்தில் கிடந்த சிசுவை கண்டுள்ளார்.
இதனையடுத்து, லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
நீதவான் விசாரணைகளின் பின், பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.