தாயின் உயிரை காக்க கண்ணீருடன் உதவிக் கரம் நீட்டும் மகள்!!

 
சுவாசப்பையில் ஏற்பட்டுள்ள நோயினால் செயற்கை சுவாசத்தில் வாழும் தனது தாய்க்கு செயற்கை சுவாச இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு உதவுமாறு அந்த தாயின் மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹட்டன் டிக்கோயா தோட்டத்தை சேர்ந்த ரூபாசாமி ஸ்ரீயானி என்பவரே இவ்வாறு உதவியை நாடியுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாயாரான 62 வயதுடைய மொரின் ராஜேந்திரி, கடந்த நான்கு மாத காலமாக சுவாசப்பையில் ஏற்பட்டுள்ள நோயினால் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருக்கு செயற்கை சுவாச இயந்திரத்தினால் சுவாசம் வழங்கப்படுகின்றது. இதனால் அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலையில் குடும்பத்தினர் உள்ளனர்.

இந்த தாயிற்கு செயற்கை சுவாச இயந்திரம் ஒன்றை பெற்றுக்கொடுக்க முன் வந்தால் அவர் தனது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருடன் வாழ முடியும் என்று குறித்த தாயின் மகள் கண்ணீருடன் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.

கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் : உதவி கோரும் பிள்ளைகள்!!

கனடாவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்ணின் பிள்ளைகளுக்கு உதவி கோரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் ரொறண்டோவில் வசிக்கும் ஜெயந்தி சீவரத்னம் என்ற பெண் கொடூரமான தாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரின் இரு பிள்ளைகளுக்கு உதவி செய்யுறுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணான ஜெயந்தி சீவரத்னம் என்ற பெண்ணின் சகோதரி சுமி சீவரத்னம் இந்த உதவியை கோரியுள்ளார்.

“எனது பெயர் சுமி சீவரத்னம். நான் ஒன்ராரியோவில் வாழ்கின்றேன். அண்மையில் தனது தாயை இழந்த மகள் மற்றும் மகனுக்கு உதவுங்கள். அவர் Alexander Stirling இளநிலைப் பாடசாலையில் மதிய உணவு மேற்பார்வையாளராக கடமையாற்றினார்.

கடந்த 12ஆம் திகதி அவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். பல்கலைகழகத்தில் தாதியாக முதலாம் ஆண்டில் கற்கும் மகள் சோபியா மற்றும் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மகன் லகீவனையும் உலகில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

இந்த பிள்ளைகளின் கற்கை மற்றும் எதிர்கால தேவைகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து உதவிகளும் வரவேற்கப்படும்” என அவர் கோரியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கனடாவில் வசித்த யாழ். அளவெட்டி செட்டிச்சோலை வடக்கை சேர்ந்த ஜெயந்தி சீவரத்னம் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடவுள்ள சுப்பர் ஸ்டார்!!

25 ஆவது ஆண்டை கொண்டாடி வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாட்டு பாட இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகியுள்ளதால், இசை நிகழ்ச்சி மூலம் கொண்டாடி வருகிறார்.
மேலும் பல்வேறு பெருநகரங்களிலும் தனது இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தலைநகர் டெல்லியில் அவர் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பாட்டு பாட இருக்கிறார்.

வரும் 23 ஆம் திகதி அன்று என்கோர் (Encore) என்ற தலைப்பில் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்துக் கொள்ள இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில் ரஜினிகாந்த் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘2.O’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். சங்கர் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!!

 
எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் ஸ்வீடன் மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கெப்பில் அல்-சில்சிலா என்ற இடத்தில் இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைக்காக கல்லில் செதுக்கப்பட்ட ஒரு கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

அத்தோடு அந்த உடலை பதப்படுத்துவதற்காக சுற்றப்பட்டிருந்த துணியுடன், மரச் சவப்பெட்டியின் எஞ்சியுள்ள கரிமப் பொருளும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

அதே இடத்தில் மேற்கொண்டு சில கல்லறைகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஆறுலிருந்து ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைக்கான சவப்பெட்டி, மற்றொன்றில் ஐந்திலிருந்து எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைக்கானதான சவபெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரண்டிலும் சில தாயத்துகள் மற்றும் மண்பாண்ட பொருட்களும் இருந்தன. நான்காவது கல்லறையில் ஐந்திலிருந்து எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைக்கானதாகும்.

சுண்ணாம்புக் கல்லில் செதுக்கப்பட்ட 35 சென்றீ மீட்டர் உயரமான கால் மற்றும் வலது கையிழந்த தலையற்ற பெண்ணின் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை அணிந்திருந்த உடையானது, கிரேக்கப் பெண் கடவுளான ஆர்டேமிஸ் அணிந்திருக்கும் உடை போல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

எகிப்தின் 18 ஆவது இராஜவம்சத்தில் (1549/1550- 1292 கி.மு) இந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

தட்மாசிட்’ என்றழைக்கப்படும் எகிப்தின் 18 ஆவது இராஜவம்ச காலத்தில் கடைபிடிக்கப்பட்ட இறுதி சடங்கு முறைகள், அக்காலத்து மக்களின் சமூகம், பொருளாதாரம் மற்றும் மத வாழ்க்கை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகள் உதவும் என ஸ்வீடன் ஆராய்ச்சி குழுவின் தலைவர் கூறினார்.

கெப்பில் அல்-சில்சிலா தளத்தில் இதுவரை 69 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பாதி கல்லறைகள் தோண்டி எடுக்கப்பட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார். பழங்காலத்தில் ஏற்கனவே பாதி கல்லறைகள் சூறையாடப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், 4000 ஆண்டுகளுக்கு முன், எகிப்தின் முதல் இடைநிலை காலத்தின் திகதியிட்ட கல்லறையின் ஒரு பகுதியை கொம் அம்போ நகரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த எகிப்து-ஆஸ்திரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.

மண்- செங்கல் பயன்படுத்தி கட்டப்பட்ட கல்லறைகளில், மண்பாண்டங்கள் மற்றும் பல இறுதி சடங்குக்கான பொருட்கள் இருந்ததாக அந்த குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

26 வயதான தாய்க்கு 24 வருடங்களுக்கு முன்னர் உருவான கருவால் குழந்தைப் பேறு!!

இருபத்து நான்கு ஆண்டுகளாக உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கரு கடந்த மாதம் 25 ஆம் திகதி பெண் குழந்தையாக பிறந்துள்ளது.

அமெரிக்காவின் டென்னசி பகுதியை சேர்ந்த பெஞ்சமின் கிம்சன் – டினா கிப்சன் தம்பதியினருக்கு திருமணமாகி சில வருடங்களாகியும் குழந்தை பிறக்காததன் காரணமாக வைத்தியரை நாடியுள்ளனர் .

டினாவை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவருக்கு செயற்கை முறை குழந்தை பேற்றை பரிந்துரைத்துள்ளனர்.

வைத்தியர்களின் ஆலோசனைக்கிணங்கிய தம்பதியினருக்கு வைத்தியர்கள் 24 வருடங்களுக்கு முன்னர் உருவாகி உறை நிலையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்த கருவை உட் செலுத்தியுள்ளனர்.

வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் டினா கடந்த ஒன்பது மாதங்களாக இருந்து கடந்த 25ஆம் திகதி 6 பவுண்டுகள் எடையுடனும் 20 இஞ்ச் நீளமுடனும் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தைக்கு பெற்றோர் எம்மா ரென் என பெயரிடப்பட்டுள்ளது.

டினா பிறந்து 18 மாதங்களுக்கு பின்னர் உருவான கருவை அவர் சுமந்துள்ளார் என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருமணச் சான்றிழ்களுடன் மூன்று பெண்கள் ஒரு கணவருக்காக மோதல்!!

திருமண சான்றிதழ்களுடன் மூன்று பெண்கள் ஒரு கணவருக்காக மோதிக் கொண்ட சம்பவமொன்று கெஸ்பேவ பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொருவருக்கும் தெரியாமல் மற்றைய பெண்களை இந்த நபர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் மூன்று திருமணங்களை செய்து கொண்ட நபரை பண்டாரகம பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
பண்டாரகம சங்கமித்தா மாவத்தையில் இரண்டு பெண்கள் மோதிக் கொள்வதாக 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தொடர் தகவல்களை அடுத்து பொலிஸார் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அதன் போது இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டு கணவருக்கு உரிமை கோரிக் கொண்டிருந்ததனை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
அந்த இரண்டு பெண்களையும் அங்கிருந்த ஆணையும் பொலிஸார், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்ட போது இரண்டு பெண்களும் இவர் என் கணவர் எனக்கூறி அதற்கான ஆதாரமாக திருமண சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர்.
போலிப் பெயர்களில் போலி பிறப்புச் சான்றிதழ்கள் தயாரித்து இரண்டு பெண்களையும் ஏமாற்றி இந்த நபர் , இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை சட்டவிரோதமான முறையில் செய்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததுடன் மற்றுமொரு பெண் இவர் என் கணவர் என மற்றுமொரு திருமண சான்றிதழை சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, குறித்த நபர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மூன்று திருமணங்களை செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
முதல் இரண்டு திருமணங்களின் ஊடாகவும் இரண்டு மனைவியருக்கும் தலா இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதில் ஒர் பெண் திருமணமானவர் எனவும் முதல் திருமணத்தில் இரண்டு பிள்ளைகளையும் நிர்க்கதியாக்கி விட்டு இந்த நபருடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை, அலுபோலுமுல மற்றும் பலங்கொட ஆகிய பகுதிகளில் மூன்று பெண்களை குறித்த நபர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
39 வயதான நபர் பல திருமணங்களை செய்து கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலையப்படுத்தப்படவுள்ளார்.

வெளிநாடொன்றில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கை யுவதி கைது!!

வெளிநாடொன்றில் முதியோர் இல்லத்தில் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சைபிரஸ் நாட்டின் Limassol பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 70 வயதுடைய நபரின் மரணம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை தூக்குவதற்கு முயற்சித்த பெண்ணால், அந்த நபரின் சட்டை கொலரை பிடிக்கும் போது கழுத்து நெரிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அனுமதிப் பத்திரம் இல்லாம் இரவு நேரப் பணி செய்த 27 வயதான இலங்கை பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இல்லத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களிலிருந்த காட்சிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த கமராவில் இருந்த காட்சிகளுக்கமைய வயோதிபரை படுக்கையில் இருந்து இழுக்கும் போது கழுத்து நெரிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் குறித்த இலங்கை பெண் அவரை பார்த்து கொள்ளச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் அவர் உயிரிழந்த விடயம் குறித்து அலட்சியமாக இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரேத பரிசோதனைக்கமைய குறித்த நபரின் கழுத்துப் பகுதியில் கடுமையான காயங்கள் காணப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றுடன் நிறைவடைகின்றது க.பொ.த. சாதாரண தர பரீட்சை!!

2017 ஆம் கல்வி ஆண்டுக்காக இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் யாவும் இன்றுடன் நிறைவுபெறுகின்றன.

இந்நிலையில், பரீட்சை முடிவடைந்ததும் பரீட்சார்த்திகள் அமைதியான முறையில் வீடு திரும்ப வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மற்றும் நாரஹேன்பிட்டியில் பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு பரீட்சார்த்திகள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

பரீட்சைக்குப் பின்னர் எவரேனும் தன்னிச்சையாக செயற்பட்டு சட்ட திட்டங்களை மீறும் பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீரற்ற காலநிலையால் நெடுந்தீவிற்கு வினாத்தாள்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தீர்ப்பதற்கு கடற்படையினரும், விமானப் படையினரும் உதவியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2ஜி அலைக்கற்றை வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு!!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் இந்திய தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் எவ்விதமான குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படவில்லை, போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருமே வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான முன்னைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, திராவிட முன்னேற்றக் கழகத்தினை சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, இந்திய மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த முறைகேடு காரணமாக, இந்திய அரசுக்கு, 1.76 லட்சம் கோடி இந்திய ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2011 பெப்ரவரியில் அவர் கைது செய்யப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிந்தது.

இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியே வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்குகளை, டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி வழக்கை விசாரித்து வந்தார்.

6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் விசாரணை, ஏப்ரல் 26-ம் தேதி முடிவுக்கு வந்ததுடன் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன் படி ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேசத்தை தொடர்ந்தும் தமிழ் மக்களே ஆள வேண்டும் : ஜி.ரி.லிங்கநாதன்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு சம்மந்தமாக திருப்தியற்ற நிலை இருந்த போதிலும் வவுனியா வடக்கு பிரதேசத்தின் எதிர்கால நலன்கருதி செயற்படவேண்டிய ஒரு பாரிய கடமை எம் எல்லோருக்கும் இருக்கின்றது என வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபை உறுப்பினரால் ஊடகங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், வவுனியா வடக்கின் புதிய குடியேற்றத்தின் ஊடாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 4 வட்டாரங்களும் வெடிவைத்தகல்லு கிராமத்தோடு களவாக இணைக்கப்பட்ட 2 பெரும்பான்மை இன கிராமங்களில் உள்ள மக்களின் தொகையும் கருத்தில் கொள்ளும் போது வவுனியா வடக்கு பிரதேசசபை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களிடம் செல்ல கூடிய ஒரு அபாயம் ஏற்பட்டு இருக்கின்றது.

அதிலும் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முகவர்கள் இம்முறை வவுனியா வடக்கு பிரதேசத்தை தாங்கள் கைப்பற்றுவோம் என உறுதிபட தெரிவித்து வருகின்ற கருத்துக்களும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகும்.

ஏனைய தமிழ் கட்சிகளும் வவுனியா வடக்கு பிரதேசத்தில் வாக்கை சிதறடிக்கும் நோக்கத்துடனும் இருக்கின்றமையால் தமிழ் மக்கள் மிக நிதானமாக சிந்தித்து செயற்பட ஒரு தேவை இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே வருகின்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமான வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் மக்களின் பூர்வீகமான வவுனியா வடக்கு பிரதேசத்தை தொடர்ந்தும் தமிழ் மக்களே ஆள வாக்காள பெருமக்களான நீங்கள் அனைவரும் சிந்தித்து செயற்படுமாறு உங்கள் அனைவரையும் அன்பாக வேண்டுகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் 4 சபைகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!

 
வவுனியா மாவட்டத்தில் 5 சபைகளில் 4 சபைகளுக்கு நேற்றைய தினம்(20.12) தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.

நேற்று மாலை வட மாகாணசபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான ப.சத்தியலிங்கம் தலைமையிலான குழுவினர் இந்த வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ப.சத்தியலிங்கம்..

அனைத்து சபைகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது, வவுனியா வடக்கு பிரதேச சபையில் பெரும்பான்மை இனத்தவர்கள் உள்வாங்கப்படவுள்ளமையினால் பொது மக்கள் மிக அவதானமாக வாக்குகள் சிதறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இன்று வியாழக்கிழமை (21.12) நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் அனைத்தும் நிறைவடைகின்ற நிலையில் காலதாமதம் இன்றி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் தெரிவித்தார்.

  

வவுனியாவில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்புமனுத் தாக்கல்!!

 
தமிழர் விடுதலைக் கூட்டணி வவுனியாவில் இன்று(20.12) வேட்புமனுத் தாக்கல் செய்தது.

வவுனியாவில் உள்ளூராட்சி சபைகளில் வவுனியா நகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை என்பவற்றில் போட்டியிடுவதற்காகவே வவுனியா மாவட்ட செயலக தேர்தல் அலுவலகத்தில் இந்த வேட்புமனுவை தாக்கல் செய்தது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, இ.இந்திரராஜா மற்றும் வேட்பாளர்கள் எனப் பலரும் இதன் போது வருகை தந்திருந்தனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

 
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் (20.12) வவுனியாவில் 300 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் சர்வதே சமூகம் தலையிட்டு தங்கள் பிரச்சனைக்கு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.

தாயகத்தில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து கடை வீதி வழியாக தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கண்டி வீதியில் அமைந்துள்ள பிராதான தபாலகத்திற்கு அருகாமையிலுள்ள கொட்டகையை வந்தடைந்திருந்தனர்.

சுமார் 50 பேர் வரையில் கலந்துகொண்ட இப்போராட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தாம் அரசாங்கத்தினை நம்பி ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேசமே தமக்கான தீர்வை பெற்றுத்தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

வவுனியாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது!!

 
வவுனியா மாவட்டத்தின் ஐந்து உள்ளூராட்சி சபைகளில் மூன்று சபைகளில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மாஹிர், வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் முனாபர் உள்ளிட்டோரே கட்டுப்பணத்தை செலுத்தினர்.

இதன்போது, நல்லெண்ண அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக இதன்போது கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மாஹிர் தெரிவித்தார்.

காட்டுப்பன்றி இறைச்சியை சாப்பிட்டு கோமா நிலைக்கு சென்ற குடும்பம்!!

 
நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியக் குடும்பத்தினர் சமீபத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாடி அதை பதப்படுத்தி ஆசையாக சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

அவர்கள் சாப்பிட்ட சில மணி நேரத்திலே ஒவ்வொருவராக மயக்க நிலைக்கு சென்றுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் மயக்க நிலையிலேயே அம்புலன்ஸிற்கு தகவல் அளித்துள்ளார்.

அதன் பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர்கள் கோமா நிலைக்கு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

கோமா நிலைக்கு என்ன காரணம் என்பதை சோதித்த போது அவர்கள் அனைவரும் சாப்பிட்ட காட்டுப்பன்றியின் இறைச்சி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காட்டுபன்றி இறைச்சியால் பாட்டுலிஸம் எனும் அரிய வகை நோயின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் அதனால் தான் கோமா நிலைக்கு சென்றுள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் பாட்டுலிஸத்தால் ஏற்படக்கூடிய விஷத்தன்மையை முறிக்கும் மருந்துகளை அளித்துள்ளனர். அந்த மருந்து நன்கு வேலை செய்து அவர்களில் இருவரிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்ததால் அது பாட்டுலிஸம் நோயின் பாதிப்பாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

முன்னேற்றம் என்றால் கண்களை மட்டுமே திறந்து பார்கின்றார்களே தவிர, இயல்பு நிலைக்கு வரவில்லை. அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மட்டும் காட்டுபன்றியின் இறைச்சியை சாப்பிடாததல் அவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை.

பாட்டுலிஸம் நோயானது பக்டீரியம் கிளாஸ்டிரிடியம் பாட்டுலினம் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த பக்டீரியாவினால் பரவக்கூடியது.

இந்தவகை பக்டீரியா அவர்கள் சாப்பிட்ட காட்டுப்பன்றி இறைச்சியில் இருந்துள்ள காரணத்தினால் தான் அவர்கள் கோமா நிலையை அடைந்துள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைத்தொலைபேசியை அருகில் வைத்து உறங்கினால் புற்றுநோய் அபாயம்!!

 

கைத்தொலைபேசியை அருகில் வைத்துக்கொண்டு உறங்கினால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கலிபோர்னிய சுகாதார ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் தங்களின் கைத்தொலைபேசியை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதை பழக்கமாக வைத்துள்ளனர்.

அலாரம் வைப்பது, சமூக வலைதளங்களை இரவில் அதிகம் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை முடித்த பின் கைப்பேசியை அருகில் வைத்தபடி தூங்குவதால் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒருவித ரேடியோ அதிர்வலைகள் செல்போன் மூலம் நம்மை தாக்குவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக California Department of Public Health (CDPH) தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து California Department of Public Health (CDPH) இயக்குநரும் மாநில பொது சுகாதர அதிகாரியுமான Dr.Karen Smith கூறுகையில், விஞ்ஞானம் பெரிய அளவில் வளர்ந்து இருந்தாலும் இதுபோன்ற கதிர்வீச்சுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் இரவில் கைப்பேசியை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் மூளையில் கட்டிகளுடன் வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் பத்து வருடத்திற்கு மேலாக செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்கும் பழக்கத்தை கொண்டவர்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.