வவுனியா பொதி அனுப்பும் நிறுவனத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் 7 முறைப்பாடுகள்!!

வவுனியா கந்தசாமி கோவில் வீதியிலுள்ள பிரபல பொதிகள் அனுப்பும் நிலையத்திற்கு எதிராக ஏழு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து வெளிநாடுகளிலுள்ள உறவினருக்கு அனுப்பும் பொருட்கள் அங்கு சென்று சேரவில்லை என ஏழு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பொதி அனுப்பும் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அனுப்பப்படும் பொருட்களுக்கு 17ஆயிரம் ரூபா செலவிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட போதிலும் அப் பொருட்கள் உறவினர்களுக்குச் செல்லவில்லை எனவும் பொதி அனுப்பும் நிலையத்தில் கேட்டால் உங்களுடைய உறவினருக்கு வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்து வருகின்றனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கந்தசாமி கோவில் வீதியிலுள்ள பொதி அனுப்பும் ஒரு கடைக்கே ஏழு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் இம் முறைப்பாடு தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

பீச் பழங்கள் மட்டுமே உணவு : மரபணு குறைபாட்டால் தவிக்கும் சிறுவன்!!

கனடாவில் சிறுவன் ஒருவனுக்கு ஏற்பட்டுள்ள மரபணு குறைபாட்டால், பீச் பழங்களை மட்டுமே உண்டு வாழ்ந்து வருகிறான்.

மிகா கேப்ரியல் என்னும் 2 வயது சிறுவனே, மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இவனுக்கு உணவு ஒவ்வாமை நோய் மரபணு குறைபாட்டால் ஏற்பட்டதால், பீச் பழங்களைத் தவிர எந்த உணவை சாப்பிட்டாலும் இவனின் உடல் ஏற்றுக்கொள்வதில்லையாம்.

இது குறித்து கேப்ரியலின் தாயார் கூறுகையில், ‘ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இவனுக்கு இந்தப் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. மிகவும் அன்பான குழந்தை, எதையும் சாப்பிட முடியாமல் தவிக்கிறான்.

உரம் போடாமல், இயற்கையாக விளைவிக்கப்பட்ட பீச் பழங்கள் ஆண்டு முழுதும் கிடைப்பதில்லை. எனினும், பழங்கள் கிடைக்கும் காலத்தில் வாங்கி, மீதி காலத்துக்குப் பயன்படுத்துகிறோம். இதற்கு அதிக செலவாகிறது. எங்களிடம் வசதி இல்லாததால், செலவுகளை சமாளிக்க நன்கொடை திரட்டி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

அண்ணனின் கையில் உயிரை விட்ட தம்பி!!

பிரித்தானியாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 15 வயது சிறுவன் வழக்கில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

பிரித்தானியாவின் Hertfordshire நகரில் கடந்த வாரம் 15 வயது மதிக்கத்தக்க ஜேக்கப் ஆபிரகாம் இறந்து கிடந்தார். சம்பவ தினத்தன்று உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய ஜேக்கப், ஒரு மணிநேரத்தில் கொல்லப்பட்டார். தன்னுடைய மூத்த சகோதரர் கையில் உயிரைவிட்ட ஜேக்கப், குத்தப்பட்ட நிலையில் வீட்டை நோக்கி ஓட முயன்றதாக தெரிகிறது.

இந்தகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிசார், ஜேக்கப்பின் இந்த இறப்பு குறித்து எவருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு அறிவித்துள்ளனர்.

மேலும் நேரில் தகவல் அளிக்க பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், தங்களது இணையதள பக்கத்தில் தெரிவிக்குமாறும் கோரியுள்ளனர்.

இந்நிலையில், லண்டனில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவன், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே விடுவிக்கப்பட்டுள்ளான்.

ஜேக்கப் ஆபிரகாம் பத்து நாட்களில் தனது 16வது பிறந்த நாளை கொண்டாடவிருந்தது குறிப்பிடத்தக்கது.

என்னை கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள் : இளைஞனின் கண்ணீர் மனு!!

தமிழகத்தில் டையிங் தொழிலாளி ஒருவர் தன்னைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(19), இவர் கடந்த ஜூன் மாதம் தன் நண்பர் கலைச்செல்வன் என்பவர் மூலம் திருப்பூர் சென்று வேலைக்கு சேர்ந்துள்ளார். அதன் பின் இவர்கள் இருவரும் சின்னக்கரை என்ற இடத்தில் இயங்கி வரும் தனியார் டையிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களிலே பணி செய்து கொண்டிருந்த போது பாலமுருகனின் கண்ணில் அசிட் பட்டதால், அவரது இடது கண் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாலமுருகன் அதன்பிறகு அந்நிறுவனத்தில் பணியாற்றவில்லை.

இந்நிலையில் பாலமுருகன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளிக்க சென்றுள்ளார். அதில், அந்த டையிங் நிறுவனத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்த எனக்கு எந்தவொரு பயிற்சியும் தராமல் நேரடியாகப் பணியாற்றச் செய்தனர். ஆனால் வேலைக்குச் சேர்ந்த இரண்டே நாட்களில், அங்கு பயன்படுத்தப்பட்ட அசிட், என்னுடைய இடது கண்ணில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அப்போதைக்கு மட்டும் மருத்துவச் செலவை செய்த டையிங் நிறுவனத்தார், பின்னர் நிறுவனத்திலிருந்து என்னை வெளியேற்றி அனுப்பிவிட்டனர்.

தற்போது என்னுடைய இடது கண் பார்வை முற்றிலும் பறிபோயிருக்கிறது, தலைவலியும் அடிக்கடி ஏற்படுகிறது. மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருக்கும் நான், மீண்டும் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் கேட்டு, சம்பந்தப்பட்ட டையிங் நிறுவனத்தை அணுகினேன்.

ஆனால் அவர்கள் பணம் தரமுடியாது என்று கூறிவிட்டனர். எந்தப் பொருளாதார வசதியும் இல்லாமல், கண் சிகிச்சை மேற்கொள்ள வழியின்றித் தவிக்கும் என்னை, கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மகளுக்காக மரத்தில் தந்தை : காரணம் என்ன?

பொலநறுவையில் மகளுக்காக தந்தை ஒருவர் மேற்கொண்ட போராட்டம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தனது மகளை தன்னிடம் வழங்குமாறு கோரி 9 பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை பொலநறுவை நீதிமன்ற கட்டடத்திற்கு முன்னாலுள்ள மரத்தின் மீது ஏறி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பொலநறுவை லக்ஷ உயன பிரதேசத்தைச் சேர்ந்த எல்.குணரத்ன என்பவரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சந்திமாசமன் குமாரி என்ற 9 வயதுடைய மகளை பொலநறுவை மாவட்ட நீதிமன்றம் ஊடாக தனது மூத்த சகோதரனின் மனைவியிடம் ஒப்படைப்பதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு தான் இவ்வாறு மரத்தில் ஏறியிருப்பதாக குறித்த தந்தை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபரின் மனைவி அவரை பிரிந்து வாழ்கின்ற நிலையில், மகளான சந்திமா அவருடைய சகோதரனின் மனைவியின் பாதுகாப்பில் வாழ்ந்து வருகின்றார்.

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் : உடற்கூற்று பரிசோதனையில் வெளிவந்த உண்மை!!

 
மன்னாரில் வீடொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் மரணம் கொலையென உடற்கூற்று பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

மன்னார் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்டனிஸ்லஸ் நளின் குரூஸ் (வயது 29) என்னும் இளைஞரே கடந்த ஒன்பதாம் திகதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பேசாலை 8ஆம் வட்டாரத்தில் கடந்த வியாழக்கிழமை (7.12) இரவு வீட்டார் அனைவரும் நிகழ்வுக்குச் சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நிகழ்விற்குச் சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பிய போதும் இளைஞர் நித்திரையில் இருப்பதாக நினைத்து அவர்கள் இளைஞரை எழுப்பாது இருந்துள்ளனர். மறுநாள் வெள்ளிக்கிழமை (8.12) நீண்ட நேரமாகியும் இளைஞன் எழும்பாத நிலையில் சந்தேகம் கொண்டு உறவினர்கள் இளைஞரை எழுப்ப முயன்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே அவர்கள் இளைஞன் உயிரிழந்துள்ளதை அறிந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக பேசாலைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வவுனியாவில் இருந்து விசேட தடயவியல் நிபுண பொலிஸார் வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நீதவானின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த நீதவான் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

குறித்த சடலத்தை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி, இளைஞரின் மரணத்தில் சந்தேகம் கொண்டு சட்ட வைத்திய நிபுணரின் பார்வைக்கு சிபார்சு செய்திருந்தார்.

சட்ட வைத்திய நிபுணர் சடலத்தினை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தி, கயிற்றை ஒத்த ஓர் பொருளினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் தென்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இளைஞரின் மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அம்மா, மனைவி, பிள்ளைகள் படுகொலை : தற்கொலைக்கு முயன்ற தந்தையின் உருக்கமான கடிதம்!!

சென்னையில் நபர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகள், மனைவி மற்றும் தாயை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரத்தை அடுத்த பம்மலில் துணிக்கடை நடத்தி வருபவர் தாமோதரன், இவர் கிருஷ்ணா நகரில் தாய், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று தனது தாய், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த தாமோதரன், பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தமோதரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்த ஜவுளிக்கடை அதிபர் தாமோதரன் உருக்கமாக 5 பக்க கடிதம் எழுதியுள்ளார். அன்புள்ள குமாரவேல் என்கிற ராஜாவுக்கு எழுதிக்கொள்வது உன்னிடம் நான் பலமுறை தொழில் செய்வதற்கு பணம் வாங்கினேன். எனக்குக் கொடுத்து உதவினாய். ஆனால் எனது தொழில் மேலும், மேலும் மந்தமாகிக் கொண்டே சென்றதால் என்னால் வசூல் செய்து கொடுக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடு. நான் மட்டும் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.

ஆனால் எனது குடும்பம் நான் இருக்கும்போதே மிகவும் சிரமப்படுகிறது. நான் இறந்தும் சிரமப்பட எனக்கு மனம் வரவில்லை. இதனால் எனது குடும்ப உறுப்பினர்களையும் நான் என்னுடன் கொண்டு செல்கிறேன். இந்த முடிவுக்கு என்னைத் தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என்று கண்ணீர்விட்டு கேட்டுக்கொள்கிறேன்.

இதையடுத்து, தாமோதரன் வங்கி விவரங்கள், ஆவணங்கள் குறித்த விவரங்களையும் குறிப்பிட்டு இரண்டு பக்க கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘பிரகாஷ் கிளாத் ஸ்டோர்ஸ் என்ற எனது கடையில் கல்லாப்பெட்டி அருகில் எனது ஆவணங்கள் உள்ளன. எனது நகைக்கடன் மற்றும் இதர விவரங்கள் எனது வசூல் பையில் உள்ளது.

எனது டாக்குமென்ட்டை வங்கியில் கொடுத்துள்ளேன். இத்துடன் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இலங்கையில் மற்றுமொரு சிவப்பு எச்சரிக்கை!!

புகையிரத சேவையாளர்கள் இன்று ஐந்தாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை மின்சார சபை பணியாளர்கள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சார சபைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் சட்டவிரோத ஈ – சேர்க்கல் சம்பள முறைமைக்கு இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டால், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த பணியார்களின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் குறிப்பிட்ட சில பணியாளர்களுக்கு 60% இற்கு 120% வரை சம்பளத்தை உயர்த்த 2014 இல் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக, மின்சார சபைக்கு தற்போது வரை 225 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி!!

உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் கேட்ட போதே மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் ஒரு நகரசபை உட்பட 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அதில் வவுனியா நகரசபைக்கு 20 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 20 ஆயிரத்து 300 வாக்காளர்களும், வவுனியா வடக்கு பிரதேச சபையில் 23 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 12 ஆயிரத்து 166 வாக்காளர்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச சபைக்கு 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 16 ஆயிரத்து 680 வாக்காளர்களும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 26 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 55 ஆயிரத்து 5 வாக்காளர்களும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 10 ஆயிரத்து 448 வாக்களாருமாக 103 அங்கத்தவர்களை தெரிவு செய்ய ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மொபைல் போனில் You Tube ன் புதிய அம்சம் ( Download Feature ) அறிமுகம்!

உங்கள் கையடக்க தொலைபேசி யில்  You Tube காணொளிகளை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்று தெரிய வில்லையா? அல்லது பதிவிறக்கம் செய்வதற்கு பல மென்பொருள்கலைக் நிறுவி (Install) களைப்படைந்தவரா நீங்கள்? அப்படியென்றால் இப்பதிவு உங்களுக்கானது.

How to download You Tube videos?

You Tube ன் இப் புதிய பதிவிறக்க ( Download ) அம்சதை ( Feature ) எவ்வாறு பயன்படுவது?

உங்கள் கையடக்க தொலைபேசியில் நிறுவப்பட்டிருக்கும்  You Tube மென்பொருளை புதுப்பிபதன் (Update) மூலம்  நீங்கள்  இந்த அம்சதை ( Feature ) பெற்றுக்கொள்ள முடியும்,

 

 

அதன் பின்னர் பதிவிறக்க பொத்தானை அழுத்தி உங்களுக்கு தேவையான தரத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

கூகுள் மேப்பில்(Google Map-Real-time Data) மற்றுமொரு அதிரடி வசதி விரைவில்!

பயணத்தின்போது திக்கு திசை தெரியாமல் தவிப்பவர்களுக்கு பெரிதும் உதவும் அப்பிளிக்கேஷனாக கூகுள் மேப்காணப்படுகிறது. இந் த அப் பிளிக் கேஷனில் புதிய வசதி ஒன்றினை உள்ளடக்கியதாக புதிய பதிப்பு ஒன்று விரைவில் வெளிவரஉள்ளது.

இவ்வசதி மூலம் நிகழ்நேர (Real-time) தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பஸ் அல்லது புகையிரதங்களில் பயணங்களை மேற்கொள்பவர்கள் தாம் அடுத்த பஸ் அல்லது புகையிரதத்தினை பெற வேண்டிய நேரம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற முடியும்.

சில சமம்யங்களில் இரண்டவது பஸ் அல்லது புகையிரதத்தினை அநேகமானவர்கள் தவிர விடுவார்கள் இதனால் பயணத்தில் சிரமங்கள் ஏற்றப்படும். இதனை தவிர்க்கவே இவ்வசதி மேப் பில் சேர்க்கப்பட்ட உள்ளது.

 

இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.

வவுனியாவில் சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் – 2017!!

 
சர்வதேச விசேட தேவைடையோர் தின நிகழ்வு வடக்கு சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் தலைமையில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (12.12.2017) காலை 9.45 மணிக்கு இடம்பெற்றது.

வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் நடனம் , மாவட்ட மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியேற்றியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வின் அதிதிகளாக முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ப.தனுஷா, கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ச.ரஜீபன், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பாத்திமா ஹிக்மா, மன்னார் மாவட்ட சேர்ந்த த.அபிகாஜினி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.அபிவர்மன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன், கூட்டுறவு திணைக்கள பணிப்பாளர் நளாயினி இன்பராஜ் , சமூக சேவைகள் திணைக்கள தலமைப்பீட அதிகாரி இராஜமனோகரன், வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், விசேட தேவையுடையோர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா, மாணவர் கௌரவிப்பு!!

 
வவுனியா திருநாவற்குளம் உமா மகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கலை விழா மற்றும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (11.12.2017) காலை 9.30 மணியளவில் முன்பள்ளி ஆசிரியை மீரா குணசீலன் தலைமையில் இடம்பெற்றது .

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ஜி .ரி.லிங்கநாதன், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம் , ராஜேஸ்வரன், அருள்வேல்நாயகி, பிரதி கல்விப் பணிப்பாளர் ரகுபதி, முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .

இதன் போது மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

யாழில் கடத்தப்பட்ட 13 வயதுச் சிறுமி வவுனியாவில் மீட்பு!!

யாழ். புன்னாலைகட்டுவான் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் வவுனியாவில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 5ஆம் திகதி குறித்த சிறுமியை அவரது உறவினர் ஒருவர், சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று வவுனியாவில் உள்ள தனது வீட்டில் தங்கவைத்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியை காணாத பெற்றோர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். எவ்வாறாயினும், சிறுமியை உறவினர் அழைத்து சென்று வவுனியாவில் தங்க வைத்திருப்பதை பெற்றோர் அறிந்துகொண்டனர்.

இந்நிலையில், உறவினர்களை கைது செய்த சுன்னாகம் பொலிஸார், சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்டுபடுத்தப்படவில்லை என்பது வைத்திய பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் தம்பதியினரின் மோசமான நடவடிக்கை : அடிமையாக மீட்கப்பட்ட பெண்!!

சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியா வந்த இந்திய பெண் ஒருவர் மெல்பேர்னில் வசிக்கும் தமிழ் தம்பதியினரின் வீட்டில் எட்டு ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு இன்று Melbourne Magistrates நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மெல்பேர்ன் நகரில் Mount Waverley இல் உள்ள தனது வீட்டில் 8 ஆண்டுகளாக பெண் ஒருவரை அடிமையாக அடைத்து வைத்திருந்ததாக கந்தசாமி கண்ணன் மற்றும் அவரது மனைவி குமுதினி கண்ணன் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு கண்ணன் தம்பதியினரின் மூன்று குழந்தைகளை பராமரிக்கவென இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் விசாவில் குறித்த பெண் அவுஸ்திரேலியா வந்துள்ளார்.

வீட்டை விட்டுத் தனியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை எனவும், ஊதியமும் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த பெண் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திகாலை 5:30 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 3:30 மணி வரை எவ்வித ஓய்வுமின்றி அப்பெண் பணிபுரிய வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 2015ஆம் ஆண்டில் கண்ணன் குடும்பத்தினர் ஒரு மாத காலம் சுற்றுலா சென்ற நிலையில், அந்த காலப்பகுதியில் உணவு ஏதும் இன்றி, மயங்கிய நிலையில் குளியல் அறையில் குறித்த பெண் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கண்ணன் தம்பதியினர், அப்பெண்ணைத் தனது குடும்பத்தில் ஒருவராகவே நடத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணை நாளையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கைப் பெண் : பேஸ்புக்கில் சிக்கிய பரிதாபம்!!

ஷார்ஜாவில் பணி புரியும் இலங்கை பெண் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு பேஸ்புக் ஊடாக சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இலங்கை பணிப்பெண் தான் பணி செய்யும் வீட்டின் உரிமையாளரின் தங்க சங்கிலியை திருடியுள்ளார். பின்னர் பேஸ்புக்கில் அவரால் பதிவிடப்பட்ட புகைப்படத்தின் ஊடாக அவர் சிக்கிக் கொண்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு ஷார்ஜா நீதிமன்றில் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை பணிப்பெண் பேஸ்புக்கில் பதிவிட்ட புகைப்படத்தில் அவரால் திருடப்பட்ட தங்கச் சங்கிலி காணப்பட்டதனை உரிமையாளர் அவதானித்துள்ளார்.

அதற்கமைய ஷார்ஜா குற்றவியல் நீதிமன்றத்தில், பணியிடத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார் என இலங்கை பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

குறித்த பணிப்பெண் ஒரு எமிரேட்ஸ் குடும்பத்தில் பணி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. புகைப்படத்தை அவதானித்த வீட்டு உரிமையாளர் உடனடியாக பொலிஸாரிடம் அறிவித்துள்ளார்.

பணிப்பெண்ணிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது தான் திருடவில்லை என குற்றச்சாட்டை மறுத்துள்ளார். பின்னர் குப்பைத்தொட்டியில் இருந்து தங்க சங்கிலியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் தான் அந்த தங்க சங்கிலியை திருடவில்லை எனவும், தான் பணி செய்யும் வீட்டு உரிமையாளரே தன்னிடம் அதனை வழங்கியதாகவும் இலங்கை பெண் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அது தங்கம் என தனக்கு தெரியாது என்பதால் அதனை குப்பைத் தொட்டியில் போட்டதாக இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.