வவுனியா ஓமந்தையில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது!!

வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் வளாகத்திற்குள் திருவள்ளுவர் சிலை இன்று (04.06.2025) திறந்துவைக்கப்பட்டது.

கிராம அலுவலர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் சிலையை திறந்துவைத்தார்.

நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலஷண்குகன், தெற்கு பிரதேசசபையின் செயலாளர் சு.தெர்ஜனா, அதிபர், பாடசாலை மாணவர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவர் : விசாரணையில் அதிர்ச்சி!!

வவுனியாவில் ஆசிரியையான 32 இளம் குடும்பப் பெண் கணவனால் கழுத்து வெட்டி கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் நேற்றையதினம் (03.06.2025) இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளம் குடும்பஸ்தரான மரணமடைந்த பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவர்ணலதா என்ற 32 வயதான ஆரம்பப் பிரிவு ஆசிரியரான இவர் கணவனால் கொலை செய்யப்பட்டமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த போதிலும் கணவனினால் புளியங்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனது மனைவி ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில்,

கடந்த வியாழக்கிழமை தனது தொலைபேசிக்கு ஒரு 21 வயது இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர்,

இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டதன் பிரகாரம் எவ்விதமான பதிலும் கூறவில்லை.

நேற்று (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே அவர் சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்திருக்கின்றார் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் பொலிசாரிடம் கூறி இருக்கின்றார்.

இதன் பின்னர் தான் அவரை கொலை செய்ததாகவும் வந்ததாகவும் புளியங்குளம் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர்.

இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி இருந்தனர்.

குறித்த பகுதிக்கு தடயவியல் பொலிசாரும் வருகை தந்து அங்கிருந்த சான்று பொருட்களை சேகரித்ததோடு, குறித்த விடயம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று (04.06.2025) மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேபகுதியை சேர்ந்த செல்லத்துரை கபிநாத் என்ற 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சடலத்தில் இரத்தக்கறை படிந்துள்ள நிலையில் குறித்த மரணம் கொலையா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த இளைஞர் நேற்று (03.06) மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா குற்றப்பிரிவு பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!!

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இன்று (03.06.2025) இடம்பெற்றது.

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வு தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.எ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

நிகழ்வில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள்,கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருத்தனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினை முற்றுகையிட்ட விற்பனை முகவர்களால் பரபரப்பு!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினை இன்று (03.06.2025) காலை 10.30 மணியளவில் விற்பனை முகவர்கள் முற்றுகையிட்டமையினால் அங்கு சற்று பதற்ற நிலமை காணப்பட்டதுடன் பிரதி அமைச்சரின் தலையீட்டினால் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

பேரூந்து நிலையத்தில் இரு வர்த்தக நிலையங்கள் காணப்படுவதுடன் அவற்றில் நெடுந்தூர சேவை தரிப்பிட கட்டிடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு கடன் அடிப்படையில் 18 வர்த்தக முகவர்கள் 15 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கியுள்ளனர்.

ஒப்பந்தகாலம் நிறைவடைந்துள்ளமையினால் வர்த்தக நிலைய உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை கடந்த ஓர் வாரமாக முடியுள்ளார். இதனால் வர்த்தகருக்கு வழங்கிய கடனை மீட்க முடியாத நிலைக்கு விற்பனை முகவர்கள் தள்ளப்பட்டனர்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு சென்ற விற்பனை முகவர்கள் குறித்த வர்த்தக நிலைய ஒப்பந்தகாரரின் அடையாள அட்டை இலக்கம் மற்றும் விலாசம் என்பவற்றினை கோரியுள்ளனர்.

எனினும் அதற்கு பதிலளித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினர் தம்மிடம் ஆவணங்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றையதினம் இரவு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு சென்ற குறித்த வர்த்தக நிலையத்தின் ஒப்பந்ததாரர் ஆணைக்குழு ஊழியர்களுடன் கலந்துரையாடியமையுடன் வர்த்தக நிலைய பொருட்களையும் எடுத்துச்செல்ல முயற்சித்துள்ளார்.

இதனால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் ஒப்பந்தம் மேற்கொண்டவரின் ஆவணம் எவ்வாறு இல்லாமல் செல்லும் மற்றும் இரவில் எவ்வாறு ஆணைக்குழு இயங்கும் என ஆத்திரமடைந்த விற்பனை முகவர்கள் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினை முற்றுகையிட்டு தமக்குரிய நீதியினையினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் பிராந்திய இணைப்பாளர் லெனின், மாநகரசபை உறுப்பினர் லக்சனா ஆகியோர் குறித்த விற்பனை முகவர்களுடன் கலந்துரையாடியமையுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அதிகாரிகளையும் அழைத்து பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.

ஒரு வாரத்தில் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்தமையுடன் ஆணைக்குழு அதிகாரிகளிடமிருந்து ஒப்பந்ததாரரின் தொலைபேசி இலக்கம், விலாசம், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றினையும் பெற்று விற்பனை முகவர்களிடம் வழங்கியிருந்தார். பிரதி அமைச்சரின் வாக்குறிதியினையடுத்து விற்பனை முகவர்கள் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து கலைந்து சென்றனர்.

பலரின் கண்ணீருக்கு மத்தியில் முல்லைத்தீவு மாணவியின் இறுதி ஊர்வலம்!!

முல்லைத்தீவு மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் (03.06.2025) இடம்பெற்றது. குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு நேற்றுமுன்தினம் மூன்று மாணவிகள் சென்றுள்ளனர்.

அதில் இருவர் கேணிக்குள் புகைப்படம் எடுப்பதற்காக இறங்கிய வேளை இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்த நிலையில் மற்றைய மாணவியின் கதறல் சத்தம் கேட்டு,

குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி இரு மாணவிகளும் உயிரிழந்திருந்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சற்சொரூபநாதன் றஸ்மிளா எனும் மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியினை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கிளிநொச்சி இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும்: இறுதி ஊர்வலத்தில் சலசலப்பு!!

கிளிநொச்சி பூநகரி இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டி, அவரின் இறுதி ஊர்வலத்தின் போது பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தம்பிராய் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பூநகரி செம்மன் குன்று பகுதியைச்சேர்ந்த கந்தசாமி பிரணவனின் இறுதிக்கிரியை இன்று நடைபெற்றது.

இந் நிலையில் இளைஞனின் கொலைக்கு நீதி வேண்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வாள் வெட்டுக் குழுக்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள், உயிரை பறித்தவரை ஒரு போதும் மன்னிக்காதே, போதையை கூண்டோடு ஒழிப்போம் போன்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வலியுறுத்தி, பூநகரி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடம், பொது மக்களின் கையொப்பம் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டது.

அதேவேளை இளைஞன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேர் பூநகரி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாழ்வாகப் பறந்து இலங்கையில் தரையிறங்கவுள்ள புதிய விமானம் : மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு!!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்காக புதிய ஏர்பஸ் A330-200 wide-body விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவில் மீது குறைந்த உயரத்தில் பறக்கும் இதன்போது பாரிய விமானத்தை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, சுமார் 1,500 அடி உயரத்தில் கொழும்பு கடற்கரையோரம், துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவ வரை பறக்கும்.

பின்னர் அது கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து, தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலையத்திற்கு மேல் குறைந்த உயரத்தில் மீண்டும் பறக்கும்.

இலங்கையை உலகத்துடன் இணைக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நீண்ட தூர மற்றும் குறுகிய தூர விமானக் குழுவில் சேரும் இந்த விமானத்தின் முதல் வருகையை விமான ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் காண இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கோவிட் உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள் குறித்து சுகாதார அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு!!

கோவிட் தொற்று அபாயத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், டெங்கு, சிக்கன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கோவிட் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருகிறது.

அத்துடன், தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தற்போது பரவிவரும் வைரஸ் தொற்றுகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவித்துள்ளார்.

எனினும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் கூறுகையில், கோவிட் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தியாவில் தற்போது கோவிட் வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி முடிவு!!

யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாக தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட திருத்தம்

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையை எடுப்பதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

யுத்தகாலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு தேடி இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர்.

அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.

அமைச்சரவை பத்திரம்

அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தடையாக இருப்பதால், அந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து அனுமதி பெறப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மாணவி ஒருவருக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள தடை!!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உரையாற்றிய இந்திய வம்சாவளி மாணவிகபட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அமெரிக்காவில் உள்ள MIT என்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (MIT) பயிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேகா வெமுரி என்ற மாணவி, காசா போரைக் கண்டித்தும் இஸ்ரேலை விமர்சித்தும் உரையாற்றியிருந்தார்.

இதன் காரணமாக, அவரது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

MITயின் 2025ஆம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி, கடந்த வியாழக்கிழமை (மே 29) நடைபெற்ற ஒன்எம்ஐடி – OneMIT தொடக்க விழாவில் உரையாற்றினார்.

அதன்போது, அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலைக் கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடிய தனது சக மாணவர்களைப் பாராட்டியதுடன், இஸ்ரேலுடனான பல்கலைக்கழகத்தின் உறவுகளையும் விமர்சித்தார்.

அவரது உரைக்குப் பிறகு, மேகா வெமுரி மீது MIT ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையவும் அவருக்கு தடை விதித்து MIT பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், “எம்ஐடி கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அதே நேரத்தில், மேகா வெமுரி மீதான நடவடிக்கையில் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது.

ஏனெனில், அந்த நபர் வேண்டுமென்றே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தி மேடையில் இருந்து போராட்டத்தை வழிநடத்தி இருக்கிறார்” என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாலர் பாடசாலை மாணவர்கள் மீது பாய்ந்த கார் : ஆறு பேர் படுகாயம்!!

தெஹியத்தகண்டிய – மஹியங்கனை பிரதான வீதியில் இன்று (03) காலை பயணித்த கார் ஒன்று, ஹோபரியாவ ஸ்ரீ குணரதனாராமய விகாரைக்கு முன்பாக உள்ள நடைபாதை மீது பாய்ந்ததில், நடைபாதையில் பயணித்துக்கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

மஹியங்கனையில் இருந்து தெஹியத்தகண்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

பாலர் பாடசாலை சென்று கொண்டிருந்த நான்கு சிறுவர்கள், ஒரு மாற்றுத்திறனாளியொருவர் மற்றும் பெண் ஒருவர் விபத்தில் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கிராந்துரு கோட்டே பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம், விபத்துக்கான காரண​ம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழில் கடலுக்குள் பாய்ந்த வேன் : அதிகாலையில் நேர்ந்த விபரீதம்!!

பொன்னாலை பாலத்தடியில் இன்று (03.06.2025) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வேன் ஒன்று சேதமடைந்துள்ளது.

காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது.

இந்நிலையில் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியது. வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு : கடலென குவிந்த பக்தர்கள்!!

உப்பு நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த பொங்கல் உட்சவத்திற்கு முன்னர் முதல் திங்கள் பாக்குத் தெண்டல் இரண்டாவது திங்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயமான நிகழ்வுக்காக அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் இறுதி மூன்றாவது திங்கள் வைகாசிப் பொங்கல் விழாவும் இடம்பெறும்.

இந்த சடங்கு முறையில் இரண்டாவது திங்கள் கிழமையான இன்றைய நாளில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது உப்பு நீரில் விளக்கெரியும் எம்பிராடியின் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் பக்தர்கள் கடலென குவிந்துள்ளனர்.

காட்டு விநாயகர் ஆலயத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய வழிகள் ஊடாக முல்லைத்தீவு தீர்த்தக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்படும்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் பாரம்பரிய வழிகள் ஊடாக காட்டுவிநாயகர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு உப்புநீரில் விளக்கெரியும் அற்புதம் இடம்பெறும்.

தொடர்ந்து எதிர்வரும் 08 ஆம் திகதி அன்று காட்டுவிநாயகர் ஆலய பொங்கல் இடம்பெற்று 09 ஆம் திகதி திங்கள் வைகாசி பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்ற மறுநாளே பலியான பிரதேச சபை உறுப்பினர்!!

கலவான பிரதேச சபை உறுப்பினர் சுஜீவ புஷ்பகுமார நேற்று (02.06) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். புதிதாகக் கூட்டப்பட்ட உள்ளாட்சி மன்றத்தின் முதல் நாளன்று, பதவியேற்ற மறுநாளே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டெல்கொட காலனி பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பிக்கு அருகில் இருந்த மரக்கிளையை புஷ்பகுமார அகற்ற முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குப் பிறகு அவர் கலாவன ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த நேரத்தில் கவுன்சிலர் ஒப்பந்த அடிப்படையிலான மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்புத்தேகமவில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு!!

அநுராதபுரத்தில் தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெஹிஎல்லேவ வீதிக்கு அருகில் உள்ள வயலில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அநுராதபுரம், தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

இவர் 15 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை விட்டு பிரிந்து கொழும்பு பிரதேசத்தில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள தனது சகோதரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் இவர் மீண்டும் கொழும்பு பிரதேசத்திற்கு செல்வதற்காக கடந்த மே மாதம் 31 ஆம் திகதி தனது சகோதரனின் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது கொலையா என்பது தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.