சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம், நேற்று (05.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
அருகிலுள்ள வீட்டில் பதிக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார வடத்தில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக சூரியவெவ பொலிஸார் கூறியுள்ளனர்.
இறந்த குழந்தை தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கீகரிக்கப்படாத மின்சார வடத்தில் சிக்கியதாகவும், தனது மகனைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு விரைந்த தாயும் மின்சாரம் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில், 38 வயது தாயும் அவரது 05 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
உலகின் பலவீனமான கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை முன்னணி இடத்தை பிடித்துள்ளது. வீசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் நாடுகளில், கடவுச்சீட்டு மிகவும் பலவீனமான நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளது.
இந்த பட்டியலில் இலங்கை 91வது இடத்தில் உள்ளது. சூடான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் அந்த இடத்தில் உள்ளன. வீசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் நாடுகளில், சிங்கப்பூரின் கடவுச்சீட்டு மிகவும் மதிப்புமிக்கதாக மாறியுள்ளது.
சிறந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளன. சிறந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
எனது அம்மா கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லை, மனஅழுத்தம் காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரையின் வீரியம் தான் காரணம் என பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா மகள் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எனவே தயவு செய்து இந்த விவகாரத்தை திசை திருப்ப வேண்டாம் எனவும் கல்பனா மகள் வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமா பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
பாடகி கல்பனா ஹைதராபாத்தின் நிஜாம்பேட் பகுதியில் அவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாகவே அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவருக்கு போன் செய்தபோதும் அவர் போனை எடுக்காததால் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த பொலிஸார் கதை உடைத்து பார்த்தபோது கல்பனாவை மயங்கிய நிலையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியான நிலையில் , கல்பனா மகள் அதனை மறுத்ததுடன் , மாத்திரையின் வீரியம் தான் தாயின் மயக்கத்திற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்தின் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இண்டிக்கோ விமான சேவையினரால் நடாத்தப்படவுள்ள இந்த விமான சேவை திருச்சியில் இருந்து மதியம் 01.25க்கு புறப்பட்டு மாலை 02.25 மணிக்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.
அதேபோல யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 03.10 மணிக்கு புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்தை மாலை 04.05 மணிக்கு சென்றடையும் என இண்டிக்கோ விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(6) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 864,856 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,510 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 244,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27,970 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 223,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,700 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 213,600 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
கெக்கிராவ பிரதேசத்தில் காட்டு யானையொன்று இரவு நேரங்களில் குடுயிருப்புகளின் கதவுகளைத் தட்டி அசாதாரணமான நடத்தையை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கதவுகளை திறக்கவில்லை எனில், யானை ஆக்ரோஷமாக செயற்பட்டு கதவுகளை உடைப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கெக்கிராவ, சாஸ்திரவெல்லிய பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சமீபத்தில் குறித்த யானை அப்பகுதி வீடொன்றின் கதவை தட்டியபோது, வீட்டில் உள்ளவர்கள் அறை ஒன்றில் பதுங்கியுள்ளனர்.
யானை, சிறிதுநேரம் விடாப்பிடியாக வீட்டு கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால், கோபத்தில் கதவை உடைத்துள்ளது. இதன்பின்னர், கதவின் திறப்பு பகுதியை எடுத்துக்கொண்டு கலாவெவ தேசிய பூங்காவை நோக்கி தப்பிச் சென்றுள்ளது.
கதவை சேதப்படுத்தியதோடு, அருகில் இருந்த வாழைத் தோட்டத்தையும் யானை நாசம் செய்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் கணிசமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இதுவரை, 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகளவில் புதிய பெருங்குடல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 1.9 மில்லியன் ஆகும். இதில் இறப்புகளின் எண்ணிக்கை 900,000 ஐ தாண்டியுள்ளது.
இந்தநிலையில் நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது பெரும்பாலும் முழுமையான குணப்படுத்துதலுக்கு வழிவகுக்கும் என்று,தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ கூறியுள்ளார்.
வயதுக்கு ஏற்ப, குறிப்பாக 50 வயதிற்குப் பிறகு, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் பெருங்குடல் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்றும் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், 2040 ஆம் ஆண்டுக்குள் சுமார் 3.5 மில்லியன் நோயாளிகளுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படும் என்று பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் வசந்த விஜேநாயக தெரிவித்துள்ளார்.
40 வயதுக்குப் பிறகு, சுமார் 50% பேருக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படலாம். அத்துடன் 23 ஆண்களில் ஒருவருக்கும் 26 பெண்களில் ஒருவருக்கும் பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் அபாயம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனினும், அடையாளம் காணப்படும் கட்டிகளை அகற்றி நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் விஜயநாயக்க கூறியுள்ளார்.
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 09.03.2025 முதல் 14.03.2025 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமான மழை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மார்ச் மாத மழை வீழ்ச்சியானது அயன இடை ஒருங்கல் வலய செயற்பாட்டினால் தூண்டப்பட்ட மேற்காவுகை (வெப்பச்சலனம்) செயன்முறை மூலம் கிடைப்பதனால் பரவலான இடி மின்னல் நிகழ்வுகளுடன் இணைந்ததாகவே இம்மழை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பனிமூட்டமான நிலை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க இரகசிய சேவையின் புதிய உறுப்பினராக, மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயதான சிறுவனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஹூஸ்டன் பொலிஸ் சீருடையில், பிரதிநிதிகள் சபையின் பார்வையாளர் பகுதியில் தனது தந்தையுடன் அமர்ந்திருந்த சிறுவன் DJ டேனியல் (DJ Danie), எப்போதும் ஒரு பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டதாக ட்ரம்ப், இதன்போது கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் அவருக்கு Send புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் மருத்துவர்கள் அவருக்கு அதிகபட்சமாக ஐந்து மாதங்களே வாழ முடியும் என்று சான்றளித்தனர். இது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட சான்று என்று ட்ரம்ப் கூறிய போது அறையிலிருந்து பலத்த கைதட்டல் எழுப்பப்பட்டது.
இந்தநிலையில் இன்றிரவு, DJ ஐ எங்கள் புதிய இரகசிய சேவை இயக்குனர் சீன் கரனிடம், உங்களை அமெரிக்க இரகசிய சேவையின் முகவராக அதிகார பூர்வமாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
குறிப்பாக, அவரது தந்தையும் தனது மகனின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மருதடி வீதியை சேர்ந்த , 41 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சனை காரணமாக தனித்து வீட்டில் வசித்து வந்த நிலையிலையே, குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் இன்று (5) காலை பயணித்த பெண்ணொருவரின் தங்க நகையை, உயர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சாவகச்சேரிப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் நகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மற்றையவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் . கைதான சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு பேர் புது வாழ்வு அடைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 16 மாத பெண் குழந்தையான ஜன்மேஷ் லென்காவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த முதலாம் திகதி குழந்தை மூளைச்சாவு அடைந்ததையடுத்து மீளாதுயரத்தில் இருந்த குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவ குழு உடல் உறுப்பு தானம் குறித்து ஆலோசனை வழங்கியது.
மிகுந்த மன வலிமையுடனும், இரக்கத்துடனும் குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர்.
இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டு கல்லீரலை அகற்றி டெல்லியில் உள்ள ILBS-க்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அபாய கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
அதேபோன்று குழந்தையின் சிறுநீரகங்கள் புவனேஸ்வரியில் உள்ள AIIMS-BBS-ல் ஒரு நோயாளிக்கு என்-பிளாக் முறையில் பொருத்தப்பட்டன. இதன்மூலம் 2 பேருக்கு புதிய வாழ்க்கையை 16 மாத குழந்தை ஜன்மேஷ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய பின்னணி பாடகிகளில் ஒருவர் கல்பனா. ராசாவின் மனசுல படம் தொடங்கி வரலாறு, மைனா, ரஜினி முருகன், மாமன்னன் என இவர் பல படங்களில் பல்வேறு பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தற்கொலைக்கு முயன்றுள்ளார்
தமிழ் மொழி மட்டுமல்லாது, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள கல்பனா, ஹைதராபாத்தில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஹைதராபாத்தின் நிஜாம்பேட் பகுதியில் அவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாகவே அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவருக்கு போன் செய்துள்ளனர்.
இருப்பினும், அவர் போனை எடுக்கவில்லை. வெகுநேரமாக கதவு திறக்கப்படாமல் உள்ளதால், அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில், காவல் துறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கல்பனா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று தெரியவந்தநிலையில், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த பிரபல கன்னட நடிகை ரான்யா ராவ் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கடந்த 15 நாள்களில் ரான்யா நான்கு முறை துபாய் சென்று திரும்பியதனால், நடிகை ரான்யா ராவ் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளார் ரான்யா.
அப்போது அவரை சோதித்ததில் அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரான்யா நகைகளை அணிந்தும், துணிகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்தும் கடத்தி வந்துள்ளார். இவர் சோதனைகளில் இருந்து தப்பிக்க சில அதிகாரிகள் மூலம் முயற்சி செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு முன்பு அவர் துபாயில் இருந்து பெங்களூருவிற்கு வந்திறங்கியதும் தன்னை கர்நாடகா டிஜிபியின் மகள் என்று கூறி, போலீஸாரை காவலுக்கு வர கூறியிருக்கிறார்.
தற்போது இந்தக் கடத்தலில் இவர் மட்டும் சம்பந்தப்பட்டிருக்கிறாரா அல்லது அவருக்கு பின்னால் பெரிய நெட்வொர்க் இருக்கிறதா என்ற விசாரணை போய்கொண்டிருக்கின்றது.
சம்பவம் தொடர்பில் அவரது அப்பா (கர்நாடகா டிஜிபி) கூறிகையில், “ரான்யா ராவின் திருமணத்திற்கு பின்பு அவருக்கும், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் கணவர் என்ன செய்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது.
தற்போது ரான்யா குறித்து கிடைத்துள்ள தகவல் அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது. அவர் தவறு செய்திருப்பது உறுதியானால் சட்டம் தன் கடமையை செய்யும்” என்று கூறியிருக்கிறார்.
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வந்த பயணியால் விமானநிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து குஷ் போதைப்பொருளுடன் பயணி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று அதிகாலை 01.00 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து வருகைத்தந்துள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் நிறை சுமார் 05 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான நபர் தனது பயணப்பொதியில் இருந்த உணவுப் பைகளில் போதைப்பொருளை மறைத்து வைத்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பலாங்கொடையில் தந்தை ஒருவர் பல்கலைக்கழக மாணவனான தனது மகனின் தலையில் தடியால் தாக்கியதுடன் தந்தை விஷம் அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இருவரும் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தனது மனைவியையும் கத்தியால் தாக்கியதாகவும், எனினும் அவர் அதிலிருந்து தப்பியதாக தெரிய வருகிறது. குறித்த தந்தை, பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தனது 23 வயது மகனை,
முற்றத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, தடியால் தலையில் தாங்கியதாக தெரிய வருகிறது. பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.