ஒரே நாளில் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(04) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 853,884 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 30,120 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 241,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 27,610ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 220,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 26,360 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 210,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 230,000ரூபாவாகும். இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 212,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 இளம் பெண்கள் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் விமானப் பயணிகள் இன்று காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இருவரில் ஒருவர் பொலநறுவை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் எனவும் மற்றைய பெண் நாரம்மல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த சிகரெட்டுகளை கொண்டு வருவதற்காகவே இருவரும் சுற்றுலா விசாக்களின் கீழ் டுபாய்க்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

 

வவுனியாவில் உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் : ஒருவர் கைது!!

வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (03.03) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது அதில் ஒரு இளைஞர் கையில் கொண்டு சென்ற பியர் போத்தலால் குறித்த சைவ உணவகத்தின் கண்ணாடிப் பெட்டியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் கண்ணாடிப் பெட்டி உடைந்து சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த வவுனியா பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைக்க முயற்சி : விசாரணையை ஆரம்பித்துள்ள சிஐடி!!

நாட்டின் எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைக்க முயற்சித்ததாகக் கூறப்படும் முறைப்பாடு குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் என்று கூறும் சில நபர்கள் இதன் பின்னணியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு மக்களை பதற்ற நிலையில் வைத்திருக்க முயற்சிகளை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக எரிப்பொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் உள்ளனர். இந்நிலையில் எரிபொருளுக்கு தட்டுபாடு நிலவுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

இதனால் மக்கள் மீண்டும் வரிசையுகம் ஆரம்பிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். இந்தநிலையிலே காவல்துறையினர் இவ்வாறான தகவலொன்றினை வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைத் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு வரி அறவிடப்பட மாட்டாது என அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு 15 வீதம் வரி அறிவிடப்படும் என போலியான தகவல்கள் வெளியிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படும் நிலையில், அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல்கள் போலியாக பரப்பப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் போலியான தகவலை வெளியிட்ட தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வருமானம் ஈட்டுவோருக்கு எதிராக வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கும் சலுகை அடிப்படையிலேயே வரி விதிக்கப்படவுள்ளது. 150000 ரூபாவுக்கும் குறைவான வருமானத்தை பெறும் டிஜிட்டல் செயற்பாட்டர்களுக்கு வரி விதிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாகை – யாழ் பயணிகள் கப்பல் சேவை : நடுக்கடலில் தத்தளிப்பு : அலறிய பயணிகள்!!

தமிழகத்தின் நாகையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தள்ளாடியது. இந்நிலையில் அச்சத்தில் பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை வானிலை மாற்றம், சர்வதேச தொழில்நுட்ப அனுமதி உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக கடந்தாண்டு நவம்பர் 18ம்தேதி முதல் நிறுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து கடந்த மாதம் 22ம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை துவங்கியது. இருப்பினும் கடல் காற்று அதிகமாக வீசுவதால் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வானிலை மாற்றம் சீரடைந்ததும் மீண்டும் மார்ச் 1 முதல் நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் நேற்றுமுன்தினம் காலை 7.30 மணிக்கு 78 பயணிகளுடன் புறப்பட்டது. வேளாங்கண்ணிக்கு தென்கிழக்கே 15 நாட்டிக்கல் தொலைவில் கப்பல் சென்றபோது கடல் சீற்றம் அதிகமானது.

இதனால் கப்பல் கடலில் தள்ளாட ஆரம்பித்ததால் பயணிகள் அலறினர். வானிலை மோசமானதை தொடர்ந்து கப்பலை அவசர, அவசரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கேப்டன் பாஸ்கர் திருப்பினார்.

இதனால் 78 பயணிகள், 17 பணியாளர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதை தொடர்ந்து நேற்று(2 ) மற்றும் இன்று (3 ) கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(3) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 849,282 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 29,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 239,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 27,470.ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 219,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 26,220 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 209,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 228,500 ரூபாவாகும். இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 211,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் தமிழினி மரணத்தில் சந்தேகம் : விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்!!

தீயில் கருகி உயிரிழந்த சாவகச்சேரி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக இருந்த தமிழினி, கடந்த பெப்ரவரி மாதம் 16ம் திகதி தீயில் கருகி உயிரிழந்திருந்தார்.

தற்செயலான தீ விபத்தினால் தன் உடம்பில் தீப்பற்றிக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், அவரது மரணம் விபத்து மரணம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

எனினும் தமிழினியின் தகப்பனார் பீ. சண்முகராஜா, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது கொலையாக இருக்கக் கூடும் என்பதால் மீண்டும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் (01) தமிழினி மரணம் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் இன்றும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்!!

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தின் கரையோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்க பொதுமக்கள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் இன்று முதல் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வாரம் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் கூறியதை மறுத்துள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம், வெள்ளிக்கிழமை முதல் எந்த எரிபொருள் ஓர்டர்களும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (02.28) காலை 10 மணிக்கு முன்பு 1,581 ஓர்டர்கள் கிடைக்கப்பெற்றதாக சங்கம் ஒப்புக்கொண்ட போதும் அதன் பிறகு புதிய ஓர்டர்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு திங்கள்கிழமை வரை நீடிக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வார இறுதியில் சில எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் பெற்றிருந்தாலும், பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் தங்களிடம் இருப்பு இல்லை என்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அரச நிறுவனங்களுக்கு பணம் செலுத்திய பிறகு எரிபொருள் விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பொலிஸ் மற்றும் மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு பணத்தை செலுத்த அனுமதிக்கப்பட்டன, ஆனால் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கடனில் எரிபொருள் வழங்கப்படாது என விநியோகஸ்தர்கள் எச்சரித்துள்ளனர்.

புகையிரதம் மோதி பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி!!

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் இடையில் 52.5 தூணுக்கு அருகில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் எல்பிட்டிய, எல்ல வீதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் என்பதுடன், உயிரிழந்த மாணவன் சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

குறித்த மாணவன் தனது கைடயக்க தொலைபேசியின் handsfree அணிந்தவாறு ரயில் தண்டவாளத்தில் தனியாகப் பயணித்ததாகவும் ரயிலில் ஒலி எழுப்பியும் சத்தம் கேட்கவில்லை என்றும் இதனால் பின்னால் வந்த ரயிலில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து விபத்து : 12 பேர் காயம்!!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை 6 மணியளவில் குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் எரத்ன பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மேலும் இருவரை இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியிருந்தாலும், வேறொரு வைத்தியசாலையிலிருந்து ஆம்பியூலன்ஸ் வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்தில் பரிதாபமாக பலியான யுவதி!!

இரத்தினபுரி – பானந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பானந்துறையில் இருந்து இரத்தினபுரி நோக்கி கவனயீனமாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்படும் போதே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பண்டாரஹேன, கெடலியம்பல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி பொலிஸார் எசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் : பொலிசார் திகைப்பு!!

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற 23 வயது இளைஞர் கடுகன்னாவ பொலிஸாரால் இன்று(3) காலை ஒருவர் கைது செய்யப்பட்டார். சட்ட அமலாக்கப் பிரிவினரின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி-கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பல பொலிஸ் அதிகாரிகள் கவனித்து அவரைப் பிடிக்க முயன்றனர், ஆனால் யாராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

கேகாலை மற்றும் மாவனெல்லை பொலிஸாரும் அந்த நபரைப் பின்தொடர்ந்து சென்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை.

கடுகண்ணாவை மற்றும் பேராதனை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த பின்னர், கடுகண்ணாவை அதிகாரிகள் வீதித் தடைகளைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை நிறுத்த முடிந்தது.

கைதானவர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், இதன்போது இளைஞனின் மனநல மதிப்பீட்டைப் பெற அதிகாரிகள் அனுமதி கோருவார்கள்.

மேலும் சம்பவம் தொடர்பில் கண்டி பிரிவுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் கடுகண்ணாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோர விபத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் பேருந்து : பலர் வைத்தியசாலையில்!!

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுர பகுதியில் லொறி ஒன்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து ஒன்றும் இன்று (1) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (01) பகல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 29 பேர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையிலிருந்து சாரதி உதவியாளர் உட்பட இருவருடன் திருகோணமலை நோக்கி பயணித்த லொறியும், கம்பஹா -வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் சேருவில ரஜ மஹா விகாரையை பார்வையிடுவதற்காக பயணித்த பேருந்துமே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 29 பேரில் மூன்று சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். விபத்தில் காயமடைந்தோர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!!

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்றைய தினம் (01) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.