முச்சக்கரவண்டி குடை சாய்ந்ததில் இருவர் படுகாயம்!!

 
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதியில் வனராஜா பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (06) மாலை 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியது.

அதில் பயணஞ் செய்த 02 பேர் படுங்காயமடைந்து கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கரவண்டி மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் பகுதியிலிருந்து ஹட்டன் நகரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த லொறியுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்டம் கண்டுள்ள இலங்கையின் பங்குச்சந்தை!!

 

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த ஏழு நாட்களாக பங்குச்சந்தையில் பங்குகளின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பங்குதாரர்கள் 56.47 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது இந்த ஆண்டின் இரண்டாவது மிகப் பெரிய வீழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பங்குச்சந்தை சுட்டெண்களான ASPI 1.91 சதவீதத்தாலும் S&P SL 20 ஆனது 1.40 சதவீதத்தாலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த விசாரணை காரணமாக அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாது போகும் என்ற காரணத்தினால் உள்ளூர் முதலீட்டாளர்களின் முதலீடு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிரேஷ்ட பொருளியலாளர் லலித்சிறி குணருவான் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையின் நிதி நிலைமையை காட்டும் குறியீடான பங்குச்சந்தையின் வீழ்ச்சி எழுச்சி காணப்படாத போதிலும் இந்நிலைமை, இலங்கையின் நிதிமுகாமைத்துவமானது படுமோசமடைந்துள்ளமையினை சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன், அரசாங்கம் வெளிநாட்டு நாணயங்களை ஒழுங்காக முகாமை செய்வதிலும் தவறு விடுகின்றது.

வெளிநாட்டு நாணய நிதியத்தின் தாக்கத்தால் இலங்கையின் கொள்கை வட்டிவீதத்தில் தளம்பல் ஏற்படும் என்ற அச்சம் மத்திய வங்கிக்கு காணப்பட்டது.

பங்குச்சந்தையும், பங்குச்சந்தையின் அலுவலக நாட்களான, போயா, விடுமுறை தினங்கள் தவிர்ந்த நாட்களான கடந்த ஜூலை 17ஆம் திகதி தொடக்கம் ஜூலை 24ஆம் திகதி வரையான ஏழு நாட்களில் வீழ்ச்சியடைந்துள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

வேலணை வடக்கு இலந்தவனபதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இசைபேழை வெளியீடு!(படங்கள், வீடியோ )

வேலணை வடக்கு  இலந்தவனப்பதி  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மீது  ஈழத்து புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான   தில்லைச்சிவன் என அழைக்கப்படும்  சிவசாமி அவர்களின் புதல்வர் (சிவசாமி தயாபரன் )வேலணையூர் சாமி புத்தனின்  வரிகளில் இசைவாரிதி வர்ஷன் அவர்களின் இசையமைப்பில் தென்னிந்திய பாடகர்களான  டாக்டர்.நாராயணன் ,அனந்து,செந்தில்தாஸ்,முகேஷ்   வர்ஷன் மற்றும் நம்நாட்டு பாடகி  லம்பிகாத்வனி  ஆகியோரால் பாடப்பட்ட இலந்தைவனப் பாடல்கள் என்னும் இசைப்பேழை நேற்றுமுன்தினம்    05.08.2017 சனிக்கிழமை காலை வேலணை இலந்தைவனம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் அமரர்.கார்த்திகன் வேலாயுதனாதன் நினைவாக  வெளியிடப்பட்டது.

மேற்படி நிகழ்வு   ஆலய பூஜையை தொடர்ந்து  அதிதிகள் அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. செல்விகள் நிரோஷினி அபிலக்க்ஷனா லக்ஷா  ஆகியோரது வரவேற்று நடனம் இடம்பெற்று தொடர்ந்து ஆலய தர்மகர்த்தா அமரர் மதியழகனின் புதல்வி திருமதி. வேணுப்பிரியா தெய்வீகன்  வரவேற்புரை   நிகழ்த்தினார்.

கோ.பரமானந்தன் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் )தலைமையுரையை நிகழ்த்த கவிஞர் .இ.த.ஜெயசீலன் (பிரதேச செயலர் பருத்தித்துறை)அறிமுக உரையையும் பேராசிரியர்.இரா.சிவச்சந்திரன் (முன்னாள் கலைப்பீடாதிபதி யாழ்ப்பாண பல்கலைகழகம்)வெளியீட்டுரையையும் வழங்கினர் .

தொடர்ந்து இசைபேழை  வெளியீட்டின்  சிறப்பு பிரதிகள் வழங்கும் வைபவம் இடம்பெற்று பாடலாசிரியர்  வேலணையூர்  சாமி புத்தன் அவர்களை கௌரவிக்கும்  நிகழ்வும்  சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் மு.திருஞானசம்பந்தபிள்ளை அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது .நிகழ்வு பாடலாசிரியர் சாமிபுத்தனின் நன்றி பகிர்தலுடன் நிறைவு பெற்றது.

வவுனியா மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு!!

 
மக்கள் வங்கி வவுனியா கிளையின் ஏற்பாட்டில் இன்று (05.08.2017) வவுனியா கலாச்சார மண்டபத்தில் காலை 8.30 தொடக்கம் மதியம் 1.00 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.

மக்கள் வங்கியின் வன்னி பிராந்திய முகாமையாளர் சிவா சிவக்கொழுந்து தலைமையில்  இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மக்கள் வங்கி முகாமையாளர் கு.கோடிஸ்வரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர், மாணவர்கள், மக்கள் வங்கி பிராந்திய மற்றும் வவுனியா கிளை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜி.ஜங்கரன் ( வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) , கே.ஆர்.கமலநாதன் (யாழ். பல்கலைக்கழகம்) இருவரினதும் விரிவுரையில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பொது வைத்தியசாலை ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு!!

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வாளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் நேற்று (04.05.2017) இரவு இனந்தெரியாத நபர்களினால் உண்டியல் உடைத்து திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் உள்ள மின்விளக்கினை நேற்று மாலை அங்கு கடமையிலிருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் போட்டுள்ளார். பின்னர் இன்று அதிகாலை மின் விளக்கினை அணைக்க சென்ற சமயத்தில் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்து உடனே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவிற்கு 2200 பொருத்து வீடுகளை வழங்க நடவடிக்கை!!

வவுனியா மாவட்டத்திற்கு பொருத்து வீடுகள் வழங்குமாறு கோரி 12 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 2200 வீடுகளைப் பெற்றுக்கொடுக்க இந்து கலாச்சார அமைச்சு மற்றும் புனர்வாழ்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின் இணைப்பாளரும் சிறைச்சாலை கண்காணிப்பாருமான எம்.எம்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவரிடம் வவுனியா மாவட்டத்தில் பொருத்து வீடுகளைப் பெற்றுக்கொள்ள வண்ணப்பித்தவர்களின் நிலைமைகள் தொடர்பாக வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்துளள்ளார்.

வவுனியா மாவட்டத்திலிருந்து பொருத்து வீடுகளைப் பெற்றுக்கொள்ள நான்கு பிரதேச செயலகங்கள், கிராம அபிவிருத்திச்சங்கம் மாவட்டச் செயலகம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி பொதுமக்களின் விருப்பத்திற்கு அமைய அவர்களுக்கு பொருத்து வீடு பெற்றுக்கொடுக்க இந்து கலாச்சார அமைச்சு மற்றும் புனர்வாழ்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி. எம்.சுவாமிநாதன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பொருத்து வீடுகளில் வவுனியா தெற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு 500 வீடுகளை வழங்குவதற்கும் வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திலுள்ளவர்களுக்கு 119 பொருத்து வீடுகளும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 07 வீடுகளும் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 1074 வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் மிகுதியாகவுள்ள 500 வீடுகளை மேலதிகமாக விண்ணப்பித்துள்ள நான்கு பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா அரசாங்க அதிபரின் அனுமதியுடன் பூர்வீகக் கிராமத்திலுள்ளவர்களுக்கு 20 வீடுகளும் மீள் குடியேற்றக் கிராமங்களிலுள்ளவர்களுக்கு 60 வீடுகளையும் வழங்க சிபாரிசு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வவுனியா பட்டாணிச்சூரில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

 
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இன்று (06.08) இரவு 6.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து நெளுக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வேப்பங்குளத்திலிருந்து வவுனியா நகருக்கு சென்ற மோட்டார் சைக்கிளும் பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கைக்கு அருகே எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலை விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.​

வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம்!!

வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய விஜயமுனி சோமரத்னவிற்கு திடீர் இடமாற்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவிசாவளை பகுதியில் பொலிஸ்நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரியாக கடமையேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் வவுனியாவின் புதிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக அம்பலாங்கொடை பகுதி பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய உயர்பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பொறுப்பேற்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கள ஊடகங்களில் வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் சில செயற்பாடு குறித்து விசனங்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

உறங்கினால் மரணம் : வினோதமான நோயால் அவதிப்படும் இளைஞன்!!

 
பிரித்தானியாவில் உறங்கினால் உயிரை பறிக்கும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Gosport நகரில் வசித்து வரும் Liam Derbyshire(17) என்ற இளைஞரை தான் இந்த வினோதமான நோய் தாக்கியுள்ளது. இவ் இளைஞன் பிறந்த நாள் முதல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பெரும் சித்ரவதையை அனுபவித்து வருகிறார்.

குறிப்பாக, Central Hypoventilation Syndrome என்னும் விசித்திரமான நோய் இவ் இளைஞரை தாக்கியுள்ளது. உலக மக்கள் தொகையில் 1,500 நபர்களை மட்டுமே தாக்கும் இந்த அரிதான நோயின் தன்மையால் இளைஞனின் பெற்றோர் ஒவ்வொரு நாளும் நரகத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நோய் தாக்கியுள்ள நபர் உறங்கினால் அவரது நுரையீரல் செயல்பாடு முற்றிலுமாக நின்றுவிடும் அபாயம் உள்ளது.
இதுமட்டுமில்லாமல், இதயத்துடிப்பின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதுடன் இரத்தக்கொதிப்பும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இளைஞரை பரிசோதனை செய்து வரும் மருத்துவர் இது குறித்து தெரிவிக்கும்போது, இளைஞனின் எதிர்காலம் நிச்சயத்தன்மை இல்லாதது. ஒவ்வொரு முறை இவர் படுக்கைக்கு செல்லும்போது ‘உயிரை பாதுகாக்க உதவும் கருவிகளை’ பொருத்திய பின்னர் தான் தூங்க முடியும்.

இச்சாதனங்கள் பொருத்தாமல் தூங்கினால், அதுவே கடைசி தூக்கமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மகளை காப்பாற்றிவிட்டு பரிதாபமாக உயிரிழந்த தந்தை!!

தண்ணீரில் மூழ்கிய தனது மகளை காப்பாற்றும் முயற்சியில் தந்தை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொழிலதிபராக இருப்பவர் Simon Pearson (47), இவர் மனைவி Emma (43). இவர்களுக்கு Lily (10) என்ற மகளும் Monty (6) என்ற மகனும் உள்ளனர். விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் நோக்கில் Simon தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு தெற்கு இத்தாலிக்கு சென்றுள்ளனர்.

இவர்களுடன் Simon-ன் மாமனார் Anthony McGregor-ம் உடன் சென்றுள்ளார். அங்குள்ள கடலில் Simon, Lily, Anthony ஆகிய மூன்று பேரும் சேர்ந்து குளித்துள்ளனர். அப்போது திடீரென மூவரும் கடலில் மூழ்க தொடங்கினார்கள். Anthony சாமர்த்தியமாக தண்ணீரில் நீந்தி வெளியேறினார்.

Simon-க்கு நீச்சல் தெரிந்திருந்த நிலையில் தனது மகள் Lily-ஐ காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். தண்ணீரில் தத்தளித்த நிலையில் தனது கையை கெட்டியாக பிடித்து கொள் என மகளிடம் Simon கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் அங்கிருந்த ஒருவர் Simon மற்றும் Lily-ஐ காப்பாற்ற நீரில் குதித்துள்ளார். ஆனால் அவரால் Lily-ஐ மட்டுமே காப்பாற்ற முடிந்தது. தண்ணீரின் வேகத்தை ஈடு கொடுக்க முடியாமல் Simon நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து Simon மனைவி Emma கூறுகையில், தனது உயிரை காட்டிலும் தனது மகளின் உயிரை காப்பாற்றவே இறுதி வரை Simon போராடியதாகவும், அன்பான கணவர் எனவும் தெரிவித்துள்ளார்.

Simon-ன் பிரேத பரிசோதனை முடிவில் அவர் நுரையீரலில் அதிகளவு தண்ணீர் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம் : கிளிநொச்சியில் நடந்த சோகம்!!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று இரவு 8 மணியளவில் இறந்துள்ளார்.

ஸ்கந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி இன்று நண்பகல் 1 மணியளவில் நெஞ்சு நோவு, இருமலுடன் இரத்தம் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சிறுமி கடந்த ஐந்து நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினமே குறித்த சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி இன்று இரவு 8 மணியளவில் இறந்துள்ளார்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இச்சிறுமிக்கு பாரதூரமான நோய் எதுவும் இருப்பதாகத் தெரியவரவில்லை என வைத்தியசாலை தரப்பு தெரிவிக்கின்றன.

எனினும் இவரது இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காய்ச்சல் முதலான அறிகுறி தென்படும் எவரும் அருகில் உள்ள அரச மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு கிளிநொச்சி சுகாதாரப் பிரிவினர் வேண்டிக் கொள்கின்றனர்.

 

2030ம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!!

இலங்கையில் காணப்படும் மூலாதாரங்களில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்மூலம் 2030ஆம் ஆண்டளவில் உள்நாட்டு மூலாதாரங்களில் இருந்து மின்வலுவை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சூரிய மின்வலு புரட்சி என்ற பெயரிலான திட்டத்தின் கீழ், 2025ஆம் ஆண்டுக்குள் 10 இலட்சம் வீடுகளுக்கு சூரிய கலங்களை பொருத்தவுள்ளதாக மூலோபாய தொழில்வாண்மை முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் இரண்டு இலட்சம் வீடுகளுக்கான செலவினங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும். ஏனைய வீடுகளுக்கான கடன் தொகைக்குரிய வட்டியில் 50 சதவீதத்தை அரசாங்கம் செலுத்தவுள்ளது.

இந்தத் தகவலை மூலோபாய தொழில்வாண்மை முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் அசோக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் இலங்கை மின்வலு விநியோகம் நெருக்கடி நிலையை எதிர்கொள்கிறது. மின்வலுத் தேவை வருடந்தோறும் 5 சதவீதத்தால் அதிகரிக்கிறது. இதற்கு பரிகாரமாக சூரிய சக்தியின் மூலம் மின்சார்த்தை உற்பத்தி செய்து வீடுகளுக்கு விநியோகிக்கப் போவதாக அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

செயற்றிறன் மிக்க மின் உபகரணங்களை பயன்படுத்துவதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். விரைவில் CFL மற்றும் LED மின் குமிழ்களுக்கான தரப்படுத்தல் முறை அறிமுகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இந்திய அணி!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

கொழும்பில் கடந்த 3ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதனையடுத்து, களமிறங்கிய அந்த அணியின் ஆரம்ப வீரர்களான தவான் 35 ஓட்டங்களையும் லோகேஸ் ராகுல் 57 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் வௌியேறினர். எனினும், அடுத்ததாக வந்த புஜாரா அதிரடியாக ஆடி 133 ஓட்டங்களை குவித்தார்.

மறுபுறம் விராட் கோலி 13 ஓட்டங்களுடன் வௌியேறி இரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த போதும், ரஹானே 132 ஓட்டங்களை விளாசினார்.

இதற்கமைய, 622 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்திருந்த வேளை, இந்திய அணி ஆட்டத்தை இடைநிறுத்தி, இலங்கைக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பளித்தது.

எனினும், இலங்கை அணி சார்பில் களமிறங்கிய திமுத் கருணாரத்ன 25 ஓட்டங்களையும், உப்புல் தரங்க ஓட்டம் எதுவும் பெறாத நிலையிலும், குஷல் மென்டிஸ் 24 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்களுடனும், மெத்தியூஸ் 26 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து வௌியேறி இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

எனினும் ஓரளவு நிதானமான ஆட்டத்தை வௌிப்படுத்திய நிரோஷன் திக்வெல்ல 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பின்னால் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் வௌியேற, 183 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கைக்கு எதிராக அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 5 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

இந்தநிலையில், மீண்டும் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு இலங்கைக்கே வழங்கப்பட்டது. இதன்படி இம்முறை அபார ஆட்டத்தை வௌிப்படுத்திய திமுத் கருணாரத்ன 141 ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் 110 ஓட்டங்களையும் குவித்தனர்.

எனினும், அணியின் மற்றைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் நடையைக் கட்ட போட்டியின் 4ம் நாளான இன்று 386 ஓட்டங்ளை மட்டுமே பெற்ற இலங்கை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இந்திய அணி சார்ப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இடம்பெற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 2-0 என தொடரை வசப்படுத்தியுள்ளது.

தந்தங்களுடன் மரக்கிளையில் மாட்டிக்கொண்ட யானை!!

 
மரக்கிளை ஒன்றில் தந்தங்கள் மற்றும் தும்பிக்கையுடன் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய யானை ஒன்று பல மணித்தியாலங்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.

உடவளவ தேசிய வன பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த யானையை காப்பாற்றும் நடவடிக்கையில் 30க்கும் மேற்பட்ட வன உயிரின இலாகா அதிகாரிகளும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் ஈடுபட்டிருந்தனர்.

பூங்காவில் உள்ள மரமொன்றில் சிக்குண்ட யானைக்கு மயக்க மருந்து ஊசி ஏற்றப்பட்டு பின்னர், மரக் கிளைகளை அகற்றி யானையை காப்பாற்றியுள்ளதாக வன உயிரின இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

45 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த யானை அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களுக்கு சேதம் விளைவித்து வந்த ஒன்று என கூறப்படுகின்றது.

இலங்கையர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய சீனப் பெண்!!

 
நுவரெலியாவில் அநாதரவாக திரியும் நாய்களுக்காக சீனப் பெண்ணொருவர் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நுவரெலியா நகரத்தில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு வழங்கியதோடு, அவை பாதுகாப்பாக உறங்கும் வகையில் சாக்குகளையும் கொள்வனவு செய்து கொடுத்துள்ளார்.

குறித்த வெளிநாட்டு பெண்ணினால் பல்வேறு வகையான உணவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த நகரில் சுற்றித் திரியும் நாய்களை ஒரு இடத்திற்கு அழைத்து வந்து அவற்றினை மிகவும் அன்போடு வழங்கியுள்ளார்.

நாய்களின் மூக்கு பகுதியில் உணவினை வைக்கும், அவர் நாய்கள் விரும்புவதனை மாத்திரம் தெரிவு செய்து அதனை வழங்கியுள்ளார். இதன்போது நாயின் தலையினை அன்பாக தடவிக் கொடுத்து உணவு வழங்குகிறார்.

தனது பெயர் மற்றும் ஊர் போன்றவை அவசியமற்ற விடயங்கள் எனவும், சுற்றி திரியும் நாய்களையும் செல்ல பிராணிகளை போன்று பாதுகாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களுக்கு போன்று அவற்றிற்கும் அன்பு காட்ட வேண்டும் என குறித்த சீனப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சீனப் பெண்ணின் மனிதாபிமான செயற்பாடு, இலங்கையர்களுக்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மர்ம நபர்களால் ஈழத் தமிழர் படுகொலை!!

நெல்லை மாவட்டத்தில் ஈழத் தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே உள்ள கோபாலசமுத்திரத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமை சேர்ந்த சண்முகராஜ் இவரை மர்ம நபர்கள் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர் என காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படுகொலை தொடர்பாக நெல்லை மாவட்ட பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.