வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று 06.08.2017 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது .
மேற்படிஆலயத்தில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த வருடம் கோவில் புனர்நிர்மான செய்யப்பட்டு கும்பாபிசேகம் இடம்பெற்றதுடன் 21 வருடங்களின் பின்னர் புதிய தேர் அமைக்கபட்டு மீண்டும் தேர்த்திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி கடினப்பந்து துடுப்பாட்ட அணிகளினை பலப்படுத்தும் முகமாக இந்துவின் 15 வயதின் கீழான அணிக்கும் 19 வயதின் கீழான அணிக்கும் இடையிலான கடினப்பந்து சிநேகபூர்வ துடுப்பாட்ட போட்டி நேற்று (06.08.2017) வவுனியா கோவில்குளம் ஐக்கிய நட்ச்சத்திர விளையாட்டு மைதானத்தில் ஆசிரியர் சிவதர்சனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
இத் துடுப்பாட்ட போட்டியினை புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சு.காண்டீபன், புளொட் இளைஞரணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வ.பிரதீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் பி.கெர்சோன் ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்கள்.
வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் நேற்று (06.08) காலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தானினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
இஸ்லாமிக் நிவாரண அமைப்பின் நிதி உதவியுடன் Wafa Charity நடைமுறைபடுத்தப்பட்ட உதவியிலிருந்து ஒரு மில்லியன் ரூபா பெறுமதியில் 5 பேருக்கு மாடுகள், 5பேருக்கு ஆடுகள் என வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.
யுத்தத்தினால் கணவனை இழந்த குடும்பங்கள் சுகயீனமுற்ற குடும்பங்களான பெரியதம்பனை, பாலமோட்டை, பாவற்குளம், ஆண்டியபுளியங்குளம், காக்கையன்குளம் ஆகிய பகுதிகளிலுள்ளவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானின் வேண்டுகோளிற்கு அமைய இவ்வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இஸ்லாமிக் நிவாரண அமைப்பின் திட்ட முகாமையாளர் எம்.எம்.பஷால், Wafa Charity நடைமுறைப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரி து.சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்தனர்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் ஒழுங்கமைப்பில் நெளுக்குளம் காத்தான் கோட்ட அமனா கழகத்தின் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (05.08.2017) கழக மண்டபத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
புளொட் அமைப்பின் உப தலைவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கத்தால் புளொட் அமைப்பின் இளைஞரணியின் வவுனியா மாவட்ட செயலாளர் ஸ்ரீகரன் கேசவனின் (இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்) பிறந்த தினத்தினை முன்னிட்டு இக் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புளொட் அமைப்பின் இளைஞரணி செயலாளர் சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமனா கழகத்தின் இயக்குனர் இராஜசிங்கம், உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் எ.ஜோன்சன், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தி.அமுதராஜ், ஆசிரியர் ரவி, புளொட் இளைஞரணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வ.பிரதீபன், உப தலைவர் பி.கெர்சோன், நிர்வாக உறுப்பினர் ஜெ.கஜுரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினதும் இளைஞர் பாராளுமன்றத்தின் ஊடான இளைஞர் கழகங்களின் சமூக அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழாக வழங்கப்பட்ட வவுனியா தோணிக்கல் இளங்கோ இளைஞர் கழகத்தின் குழாய் கிணறு மற்றும் மலசல கூட தொகுதிக்கான ஆரம்ப நிகழ்வு இளங்கோ இளைஞர் கழகத்தின் தலைவர் நிதர்ஷன் தலைமையில் கடந்த 04.08.2017 அன்று நடைபெற்றது.
இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஆர்.சசிகரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ரவி, தீடீர் மரண விசாரணை அதிகாரி லாசர் சுரேந்திரசேகரன், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவர் தே.அமுதராஜ், மாவட்ட சம்மேளன உறுப்பினர் நிபாத் ஆகியோருடன் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிரமாத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள சரி புல் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மாகாணத்தின் ஆளுநரான சபிநுல்லா அமானி இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்து இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மிர்ஸா ஒலங் பகுதியை ஒட்டிய சயாத் மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு சோதனை சாவடியில் கிளர்ச்சியாளர்கள் கொடூர தாக்குதல் நடத்தியதோடு 30-க்கும் அதிகமான வீடுகளுக்கு தீவைத்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், அதிகபட்சம் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலில் மிகவும் கொடூரமான முறையில் மனிதாபமற்ற நிலையில் கொல்லப்பட்டனர். இத்துடன் ஆப்கன் பாதுகாப்பு படையை சேர்ந்த ஏழு பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் தலிபான் மற்றும் ஐ.எஸ். இயக்கத்தினர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டதாக அமானி தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என தலிபான்கள் மறுத்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு படைகள் மற்றும் ஆப்கன் விமான படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் சம்பவங்கள் கடந்த சில காலங்களில் அதிகரித்துள்ளது. தினசரி அடிப்படையில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 1662 பேர் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளனர், 3581 பேர் காமுற்றுள்ளனர், என ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தில் இருந்து நாடுகடத்தப்படும் சிக்கலில் இருக்கும் 12 வயது சிறுமிக்கும் அவரது தந்தைக்கும் அங்குள்ள மக்கள் தங்கள் ஆதரவை குவித்து வருகின்றனர்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் டப்ளின் ஒழுங்குமுறைப்படி ஐஸ்லாந்தில் இருந்து 12 வயது சிறுமி Hanyie Maleki நாடுகடத்தப்பட உள்ளார்.
இந்த நிலையில் அவரது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழா ஒன்றை ஏற்பாடு செய்து சிறப்பித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டவரான Hanyie மற்றும் அவரது தந்தை Abrahim Maleki ஆகிய இருவரையும் விவாதத்துக்குரிய ஐரோப்பிய சட்டமான டப்ளின் ஒழுங்குமுறைப்படி ஐஸ்லாந்து அரசு, அவர்கள் எங்கிருந்து புறப்பட்டார்களோ அங்கே அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.
ஊனமுற்றவரான Abrahim Maleki குடும்பத்துடன் தங்களது நாட்டில் இருந்து ஈரான் சென்று அங்கிருந்து துருக்கி, பின்னர் கிரேக்கம் வழியாக ஜேர்மனி சென்றடைந்து, அங்கிருந்து தற்போது ஐஸ்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஈரானில் உள்ள அகதிகள் முகாமில் வைத்துதான் தற்போது 12 வயதாகும் Hanyie Maleki பிறந்துள்ளார். டப்ளின் ஒழுங்குமுறையை ஐஸ்லாந்து அரசு பயன்படுத்தும் என்றால் தந்தையும் மகளும் ஜேர்மனி நாட்டுக்கே திருப்பி அனுப்பட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட முடிவெடுத்துள்ள அப்பகுதி மக்களும் ஒருங்கிணைப்பாளர்களும் ஒன்றிணைந்து சிறப்பித்துள்ளனர்.
பிறந்தநாள் விழாவில் பங்கெடுத்த பலரும் முதன்முறையாக Hanyie Maleki ஐ சந்திக்கின்றனர். மட்டுமின்றி அவரது நீண்ட பயணத்தில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் ஒன்றைணைந்து திரட்டிய 4,380 பவுண்ட் நிதியை அவரது பெயரில் வங்கியில் சேமித்துள்ளனர்.
இதனிடையே Abrahim Maleki முன்வைத்துள்ள கோரிக்கையை ஐஸ்லாந்து அரசு பரிசீலிக்க வேண்டும் என அகதிகளுக்கான அமைப்பான Solaris தொடர்ந்து அழுத்தம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி அவர்களை ஐஸ்லாந்தில் குடியிருக்க அனுமதிக்க வலியுறுத்தி Solaris அமைப்பு 8,400 பேரிடம் இருந்து கையெழுத்து வேட்டையும் நடத்தியுள்ளனர்.
தொடர் ஏவுகணை சோதனை எதிரொலியாக பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது வடகொரியா.
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பொருளாதார தடையை ஐக்கிய நாடுகள் மன்றம் ஏற்றுக் கொண்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த நாடு, அமெரிக்காவை அழித்தொழிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கையை வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஒளிபரப்பியுள்ளது.
ஆனால் குறித்த பொருளாதார தடைக்கு ஒப்புதல் அளித்தது ஐக்கிய நாடுகள் மன்றம் என்ற போதிலும், அதற்கு முயற்சி மேற்கொண்டது அமெரிக்கா என்பதால் அமெரிக்கா மீது வடகொரியா கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
குறித்த பொருளாதார தடை காரணமாக வடகொரியாவின் ஏற்றுமதி கடும் வீழ்ச்சியை சந்திக்கும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகள் மட்டுப்படும். இதனால் கடும் பொருளாதார நெருக்கடியை வடகொரியா சந்திக்க நேரிடும்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் குறித்த தடையானது இந்த தலைமுறையில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை என, ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான அமெரிக்காவின் தூதர் Nikki Haley தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகமான தோழி ஒருவருக்காக இளைஞர் ஒருவர் தோழியின் தந்தையின் காரை திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு(28). இவருக்கு பேஸ்புக் மூலம் பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். அவர் தொழிலதிபரின் மகள் என்பதால், ஆடம்பரமாக செலவு செய்வார், ஆனால் குடும்பத்தார் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இதற்கிடையில் அப்பெண் தனக்கு ஆப்பிள் போன் வேண்டும் என்று தன் தந்தையிடம் கேட்டுள்ளார். அவரது தந்தை வாங்கிக் கொடுக்கவில்லை. ஆனால் இவருக்கோ ஆப்பிள் போன் காட்டாயம் வாங்கியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இதனால் அவர் தனது தந்தையின் காரை திருடி, விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து போன் வாங்கிவிடலாம் என்று முடிவு செய்துள்ளார்.
இதனால் அவர் தனது பேஸ்புக் நண்பனான சந்துருவிடம் தனது தந்தையின் காரை திருடி விற்றுவிடு என்று கூறி, காரின் சாவியை கொடுத்துள்ளார்.
அதன் பின் சந்துரு சாவியை பயன்படுத்தி, காரை வீட்டிலிருந்து திருடியுள்ளார். திருடிய காரை விற்பதற்குள், பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், பொலிசார் சந்துருவை பிடித்துள்ளனர்.
பொலிசாரின் விசாரணையில், காரை திருடு என்று கூறினால், அப்போது பொலிசில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என கேட்டேன். அதற்கு, அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என தைரியம் அளித்தார். அதன் காரணமாகவே இந்த செயலில் ஈடுபட்டதாக சந்துரு கூறியுள்ளார்.
சென்னை அம்பத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரைத்தளம் பூமிக்குள் இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது குறித்த அடுக்குமாடி குடியிருப்பு. இதன் தரைத்தளத்தில் சந்திரசேகரன் (69) என்பவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார்.
சம்பவத்தின்போது வீட்டில் சந்திரசேகரனும் அவரது மனைவி உமாவும் மட்டும் இருந்துள்ளனர். உடல் நலம் குன்றியுள்ள சந்திரசேகரன், தமது அறையில் படுத்திருந்துள்ளார்.
அப்போது திடீரென சந்திரசேகரன் அலறும் சத்தம் கேட்டுள்ளது. பதறியடித்து வந்த உமா பார்த்த போது, சந்திரசேகரனின் அறை 10 அடி ஆழத்துக்கு பூமிக்குள் இறங்கியுள்ளது.
சந்திரசேகர் அந்த பள்ளத்தில் விழுந்து கிடந்துள்ளார். சத்தம் கேட்டு முதல், 2-வது மாடிகளில் இருந்தவர்கள் கீழே ஓடி வந்துள்ளனர். சந்திரசேகரனும், உமாவும் 10 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், ஒரு ஏணியை கொண்டு வந்து சந்திரசேகரனையும், அவரது மனைவியையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் சந்திரசேகரன் குடும்பத்தினர் 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், கட்டிடம் புதைந்த இடத்தை ஆய்வு செய்தனர். அதில் பூமியில் புதைந்த பகுதியில் கிணறு இருப்பது தெரிய வந்தது.
இந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றது. கிணற்றை சரியாக மூடாதததே தரைத்தளம் பூமிக்குள் இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணிகள் பேருந்து ஒன்றில் பயணம் செய்து, இலங்கை அரசியலில் புது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார்.
புதிதான பயணத்தில் இணைந்த பேருந்து ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹற்றன் நோக்கி பயணித்துள்ளார்.
பேருந்து பயணத்தில் இணைந்த ரணில், பஸ் டிக்கெட் பெற்று பயணத்தை தொடர்ந்துள்ளார்.
பேருந்தில் பயணித்த சந்தர்ப்பத்தில் பிரதமருடன் அதிகாரிகள் சிலரும் இணைந்துள்ளனர். இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் ஒருவர் பயணிகள் பேருந்தில் பயணித்த சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் எவ்வித இடர்பாடுகளும் இன்றி விரைவாகவும், எளிமையுடனும் கணினியை இயக்கும் விதமாக புதிய வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் கணினி உபயோகிப்பவரின் கண் அசைவுக்கு அத்தனையும் கட்டுப்படும் விதமாக இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக கீபோர்ட் மற்றும் மௌஸ் ஆகியவற்றை இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை உபயோகிப்பவர் கணினியில் தனக்குத் தேவையான File ஐ பார்ப்பதன் மூலம், அதில் அவர் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
இந்த தொழில்நுட்பமானது Tobii eye tracker என்ற வெர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10 ஒபரேட்டிங் சிஸ்டத்தில் பரிசோதனை முயற்சியாக இது செயற்படுத்தப்பட்டு வருகிறது.
விண்டோஸ் இயங்குதளங்களில் முதலில் இந்த சொஃப்ட்வெயாரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதனைத்தொடர்ந்து, Eye Control என்ற வசதியை ஆக்டிவேட் செய்து அதன்மூலம் கம்ப்யூட்டரில் தோன்றும் மௌஸ் மற்றும் கீபோர்ட் ஆகியவற்றிடம் பார்த்தும், பேசியும் இயக்க முடியும்.
”முதலாவதாக, Eye Control மென்பொருளை உற்று நோக்குவதன் மூலம் இதனை உபயோகிக்க முடியும். நாம் எதை பார்க்கின்றோம் என இதனால் துல்லியமாக கணிக்க முடியும். அதற்கேற்ப இது இயங்கும் திறன் படைத்தது. இருப்பினும், சூரிய ஒளி அதிகம் உள்ள இடங்களில் இந்த வசதியை உபயோகிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, அதனை சரிசெய்யும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்பட்டு வருகின்றன,” என மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தலைமை மென்பொறியியலாளர் டோனோ சர்கார் கூறியுள்ளார்.
கிளிநொச்சி, இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இனக்கான நிலையில் யாழ் பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கானவர்கள் யாழ் பருத்தித்துறை பிரதேசத்தைச் சேரந்த 35, 25, 19 ஆகிய வயதுடைய ஆண்கள் என தெரியவருகின்றது. இதில் 25 வயதான இளைஞனே மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இவ் வாள்வெட்டுச் சம்பவம் ஆனது குடும்பத் தகராற்றினால் இடம்பெற்றுள்ளதென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது.
இதை இலங்கை மக்கள் அவதானிக்க முடியுமென கொழும்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.
இந்த சந்திர கிரகணம் இன்று இடம்பெறவுள்ளது. இதனை இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், அவுஸ்திரேலியா மற்றும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் அவதானிக்க முடியும்.
இன்றைய பௌர்ணமி தினத்தில் பகுதி சந்திர கிரகணம் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் சந்திர கிரகணத்தை இலங்கையில் உள்ளவர்கள் அவதானிக்க முடியும்.
இன்று இரவு 9.20 ஆரம்பமாகும் இந்த சந்திர கிரகணம் மறுநாள் அதிகாலை 2.21 உடன் நிறைவடையும். இதேபோன்ற இரு சந்திர கிரகணங்கள் அடுத்த வருடம் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விஜய் டி.வி.யில், பிக் பாஸ் என்ற 100 நாட்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச் சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கள் சக்தி, ஓவியா உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தை அவமதித்துள்ளதாக, தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் நலச் சங்கம் குற்றம்சாட்டி, வக்கீல் நோட்டீசை அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீசை வக்கீல் துரை குணசேகரன் என்பவர் அனுப்பியுள்ளார். விஜய் டி.வி.யின் தென்னிந் திய நிர்வாக இயக்குனர், கமல்ஹாசன், நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் சக்தி (இயக்குனர் பி.வாசுவின் மகன்), இந்த நிகழ்ச்சியை தயாரித்துள்ள என்டமோல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூலை 14ம் திகதி ஒளிபரப்பப்பட்டது. அதில், நடிகர் சக்தி நாதஸ்வர வித்வானாக நடித்தார். அப்போது, தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தை ஆணவமாக சக்தி கையாண்டார். அந்த நாதஸ்வரத்தை உணவு அருந்தும் மேஜையில் வைத்து அவமதித்தனர்.
அதாவது, அந்த நாதஸ்வரத்தை தூக்கி போட்டி பிடித்துக் கொண்டு செயல்பட்டார். இது இசை வேளாளர் சமுதாயத்தினரின் நம்பிக்கையையும், தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத் தையும் அவமதிக்கும் விதமாக உள்ளது.
இசை வேளாளர்கள், நாதஸ்வரத்தை தெய்வீக இசை கருவியாக பாவித்து வருகின்றனர். அந்த கருவியின் முகப்பு பகுதியை சூரியக் கடவுளாகவும், காற்றை ஊதும் பகுதியை பெண் தெய்வமான சக்தியாகவும், நாதஸ்வரத்தில் உள்ள 7 ஓட்டைகளை சப்த கன்னிகளாகவும், அந்த நாதஸ்வரத்தில் இருந்து வரும் இசையை, சிவன் கடவுளாகவும் இசை வேளாளர்கள் பாவித்து வருகின்றனர்.
இந்த நாதஸ்வரத்தை தினமும் பூஜை செய்வது, ஊதுபத்தியை கொளுத்தி வழிப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட தெய்வீக இசை கருவியை ஆணவமாக பயன்படுத்திய நடிகர் சக்தி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன், நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும்.
பொது மன்னிப்பு கேட்பதாக தமிழ், ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் செய்யவேண்டும். விஜய் டி.வி.யிலும் அதை ஒளிபரப்பவேண்டும். இதை செய்யவில்லை என்றால், கமலஹாசன் உள்ளிட்டோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.