வவுனியா வேப்பங்குளத்தில் குளக்காணியில் அத்துமீறி வேலியடைப்பு : பொலிஸார் தடையுத்தரவு!!

 
வவுனியா வேப்பங்குளத்தில் கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் போடப்பட்டுள்ள எல்லைக்கல்லை உடைத்து குளக்காணியில் வேலி அமைத்துள்ளமையையடுத்து வேப்பங்குளம் கமக்கார அமைப்பினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது .

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தற்காலிகமாக அவ் காணியில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் கடந்த 6மாதங்களுக்கு முன் பொதுமகன் ஒருவரின் காணியில் இவ்விடம் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட குளக்காணியேன தெரிவித்து எல்லைக்கல்லையும் நாட்டினார்கள்.

அதன் பின்னர் கடந்த ஆறு வாரங்களுக்கு முன் காணியில் முன்னர் இருந்த எல்லைக்கல்லினை விடுத்து இன்னுமொரு இடத்தில் இவ்விடம் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட காணியென தெரிவித்து எல்லைக்கல்லையும் நாட்டினார்கள்.

நேற்று அவ்விடத்திலிருந்த எல்லைக்கல்லை காணியின் உரிமையாளர் மண்ணை பதப்படுத்துவதற்காக இடித்து சேதமாக்கியுள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு வந்த வேப்பங்குளம் கமக்கார அமைப்பின் பிரதிநிதியொருவர் இவ்விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தற்காலிகமாக மண்ணை பதப்படுத்தும் வேலையை நிறுத்துமாறும் நாளைய தினம் வவுனியா கமக்கார திணைக்களத்திற்கு செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரிடம் வினவிய போது, இக் காணியின் ஆவணக்கள் எம்மிடம் உள்ளது. இது எமது முத்தோர் வாழ்ந்த இடம். பொய்யான விடங்களை தெரிவித்து எமது காணியினை ஆக்கிரமிக்கப் பார்ப்பதாகவும் நாளைய தினம் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சென்று இவ்விடயம் தொடர்பாக கதைக்கவுள்ளதாகவும், பொலிஸாரின் வேண்டுகோளிற்கு இனங்க தற்காலிகமாக இக் காணியில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.

இக் குளக்காணியில் 10க்கு மேற்பட்ட பொதுமக்களின் வீடுகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்ப 10 நாட்கள் போராடிய சொகுசுக் கப்பல்!!

Sea Princess எனும் ஆடம்பர கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க 10 நாட்கள் இரவும் பகலும் கடுமையாக போராடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 1,900 பயணிகளுடன் Sea Princess எனும் சொகுசு கப்பல் ஐக்கிய அமீரகத்தின் துபாய் நோக்கி பயணமாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த கப்பலானது இந்திய பெருங்கடல், அரேபிய கடல், ஏடன் வளைகுடா மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக பயணம் மேற்கொண்டபோது சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்காமல் இருக்க கடும் போராட்டத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

குறித்த பகுதிகள் வழியாக பயணப்பட்ட கப்பலானது தொடர்ந்து 10 நாட்கள் இரவும் பகலும் எவ்வித விளக்குகளோ காதை பிளக்கும் இசை நிகழ்ச்சிகளோ எதும் கூடாது என நிர்வாகம் வலியுறுத்தியதன் பேரில் அச்சத்தின் நடுவே பயணமாகியுள்ளது.

குறித்த 10 நாட்களும் பேய் கப்பல் போன்று மயான அமைதி குடிகொண்டிருந்ததாக அந்த கப்பலில் பயணப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளானதால், அதில் பயணம் செய்த 1900 பயணிகளும் கடும் நெருக்கடியான சூழலை உணர்ந்துள்ளனர்.

கொள்ளையர்களிடம் சிக்கியிருந்தால் அவர்கள் பயணிகளுடன் கப்பலையும் சோமாலியா கொண்டு சென்றிருப்பார்கள், பின்னர் பெருந்தொகை கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பார்கள். கப்பல் ஊழியர்களை கொடூரமாக தாக்குவது என்பது சாதாரணம் என அதில் பயணம் செய்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாளரங்கள் அனைத்தும் அந்த 10 நாட்களும் மூடியே இருந்தன. எந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. இரவு மட்டுமல்ல பகலிலும் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது.

மட்டுமின்றி கப்பலில் இருந்த 1,900 பயணிகளுக்கும் கடற்கொள்ளையர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் மேற்கொள்ளவேண்டிய பயிற்சியும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கப்பலில் பயணம் செய்த அனைவரிடமும் நடந்தவற்றிற்கு மன்னிப்பு கோரிய அதன் தலைவர், கடற்கொள்ளையர் அச்சுறுத்தல் என்பது உண்மையே ஆனால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டியது நமது கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் இருந்து துபாய் வரையான 104 நாட்கள் பயணத்திற்கு 1,900 பயணிகள் தலா 10,000 டொலர் கட்டணமாக செலுத்தியிருந்துள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளில் குறிப்பிட்ட பாதை வழியாக சென்ற 6 சொகுசு கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

குடித்து விட்டு தந்தை செய்த செயல் : உயிரிழந்த இரண்டு மகள்கள்!!

குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் போது இரு மகள்களையும் செங்கலால் அடித்து கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குர்கானை சேர்ந்தவர் முகேஷ் யாதவ் (40), இவர் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டுக்கு குடிபோதையில் வந்துள்ளார்.

இதன் பின்னர், முகேஷின் மனைவி அவருக்கு உணவு பரிமாறி கொண்டிருக்கும் போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த முகேஷ் மனைவியை அடித்துள்ளார், இதை கண்டு பயந்து போன அவரின் 5 மற்றும் 3 வயதுடைய இரு மகள்கள் தாயின் அருகில் அழுத நிலையில் சென்றுள்ளனர்.

இருவரையும் கண்டு ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற முகேஷ் செங்கல்லை எடுத்து மகள்களை அடித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் முகேஷை கைது செய்தார்கள்.

முகேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

தாய், தந்தையை கொன்று நாடகமாடிய மகன்!!

தமிழகத்தில் மகன் ஒருவன் பெற்ற தாயை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள ஈசன் ஓடை பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. ஈசன் ஓடை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், ஆறுமுகத்தின் சகோதரிகளான ஆனந்தி, பொன்னியம்மாள், தாய் ராணியம்மாளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார், ஆறுமுகமே தனது தாயை கொலை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், தலையணையால் அழுத்தி மூச்சுத் திணற வைத்து தாயை படுகொலை செய்த ஆறுமுகம், பின்னர் அவரது உடலை தீ வைத்து எரித்துவிட்டு, எஞ்சிய பாகங்களை வீட்டின் அருகே புதைத்துவிட்டு ஒன்றும் அறியாதவர்போல் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

ராணியம்மாள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரது உடல் பாகங்களை தோண்டி எடுத்த பொலிசார், அதன் பாகங்களை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆறுமுகத்தின் மனைவி பிரியாவிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்பு சொத்துக்காக தந்தை வேலாயுதம் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்ற ஆறுமுகம். பிணையில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது சொத்தை அபகரிக்கவே தாயையும் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சகோதரருக்கு தனது சிறுநீரகத்தை பரிசளித்த சகோதரி!!

 
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உள்ள சகோதரருக்கு ரக்ஷா பந்தன் பரிசாக தனது சிறுநீரகத்தை வழங்கிய சகோதரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் சாரா பாய் (38) இவரது இரு சிறுநீரகங்களும் திடீரென செயலிழந்து விட்டன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான சிறுநீரகமும் உடனடியாக கிடைக்கவில்லை.

விவேக்கின் உடல்நிலை மோசமடைந்து கொண்டே செல்ல அவருக்கு ரக்ஷா பந்தன் பரிசாக தனது சிறுநீரகத்தை தானம் செய்ய அவரின் சகோதரி வந்தனா சந்திரா முன் வந்தார்.

இதையடுத்து புதுடெல்லி மாநிலத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

தற்போது விவேக் மற்றும் வந்தனா இருவரும் நலமாக உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து ரஷா பந்தனை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

வந்தனா கூறுகையில், என் சகோதரர் விவேக்கை நான் அதிகம் நேசிக்கிறேன். என் கஷ்டமான சூழ்நிலையில் என்னுடன் அவர் இருந்திருக்கிறார்.

அவரது வாழ்க்கையை காப்பாற்றுவது என்பது எனக்கு முக்கியம் என வந்தனா கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வீதி விபத்து : இலங்கை இளைஞன் மரணம்!!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மெல்போர்ன் நகரத்தில் பணியாற்றிய இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அளுத்கம பகுதியை சேர்ந்த தரிந்து குரே என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மோட்டார் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது பிரிவை தாங்க முடியாத நண்பர்கள் பேஸ்புக் பக்கத்தில் தங்கள் அனுதாபங்களை வெளியிட்டுள்ளன.

யாழில் தொடரும் தேடுதல் வேட்டை : இதுவரை 100 பேர் கைது!!

யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினால் இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடாநாட்டின் ஐந்து பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பாதுகாப்பு இராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய 100 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி காலை 6 மணியில் இருந்து நேற்று வரையான காலப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு தொடர்புடைய சந்தேக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அடையாளம் உறுதி செய்யப்படாத 31 மோட்டார் சைக்கிள்கள், வான்கள் மற்றும் லொரிகள் என்பன பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மானிப்பாய் உட்பட 5 பொலிஸ் பிரிவில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிலைமையை கருத்திற் கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியாவில் இயந்திரத்திற்குள் சிக்கி இலங்கையர் பரிதாபமாக பலி!!

கொரியாவில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி, இலங்கையர் உயிரிழந்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் தேகு என்ற பகுதியிலுள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய 35 வயதுடைய சாம் சௌமிய பாலித என்ற இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கியிருந்த நூலினை எடுத்து விடுவதற்காக செல்லும் போது மற்றொரு இயந்திரத்தினுள் விழுந்த இந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

2008ஆம் கொரியாவுக்கு சென்றுள்ள நிலையில் தற்போது வரை வீசா இன்றி சட்டவிரோதமாக அவர் தங்கியிருந்தார் என தெரியவந்துள்ளது.

வறட்சியினால் 19 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிப்பு!!

19 மாவட்டங்களில் கடும் வறட்சியினால் 341, 411 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 139,000 இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 39,183 குடும்பங்களைச் சேர்ந்த 1,39,056 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் முந்தல், வண்ணாத்திவில்லு, ஆனமடு, கருவலகஸ்வெவ, நவகத்தேகம, மகாகும்புகடவல,சிலாபம், மஹவ,தங்கொட்டுவ ,பள்ளம, ஆராச்சிக்கட்டு மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடி நீரின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் வறட்சி காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள பல குளங்கள் மற்றும் குட்டைகளில் நீர்வற்றிக் காணப்படுகிறது.

குறிப்பாக நவ்டான்குளம் பெரிய கடவல குளம் கடும் வறட்சினால் நீர் இன்றி காணப்படுவதினால் அதனை நம்பி நன்னீர் பீடியில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியினால் குடி நீருக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன் பணம் கொடுத்தே குடி நீரை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வறட்சியினால் கிளிநொச்சி மாவட்ட மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அரத்திநகர் பகுதியில் தொடர்ந்தும் நிலவிவரும் வறட்சி காரணமாக 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த பகுதியில் வாழும் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் கிணறுகளில் நீர் வற்றிக் காணப்படுகிறது

இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கக் காத்திருக்கும் கிளிநொச்சி இளைஞன்!!

மாகாண மட்டத்தில் வெளிப்படுத்தப்படும் திறமைகள் தேசிய ரீதியில் பிரகாசிக்கும் வாய்ப்பை உருவாக்குகின்றன. ஆனால் இதற்கான சந்தர்ப்பங்கள் அமைவது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றது.

கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் விஜயராஜ் என்ற கிரிக்கெட் வீரர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற விஜயராஜ் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்டத்தில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் . அதற்கான சான்றுகள் பல உள்ளன.

மாகாண மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழும் விஜயராஜின் இலட்சியம் இலங்கை கிரிக்கெட் குழுவில் இணையவேண்டும் என்பதே.

என்றபோதிலும் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்வதற்கான போதிய பௌதீக வளங்கள் இல்லை என்பதே இந்த வீரரின் ஏக்கமாக இருக்கின்றது.

பௌதீக வளங்கள் சரியான முறையில் வழங்கப்பட்டால் விஜயராஜும் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பிரகாசிப்பார் என்பது திண்ணம்.

 

உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,230 நிலையங்களில் இன்று ஆரம்பம்!!

கல்விப் பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,230 நிலையங்களில் இன்று ஆரம்பமாகின்றது. இன்று முதல் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்காக 315,227 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். பரீட்சை கடமைகளுக்காக சுமார் 28,000 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிட்டார்.

அத்துடன் பரீட்சை மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளில் வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அனுஷ்காவுடன் காதல் இல்லை : பிரபாஸ்!!

நடிகை அனுஷ்­கா­வுடன் காதல் என்ற தகவல் வெறும் வதந்தி. அதில் உண்மை இல்லை. தற்போதைக்கு திரு­மணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை’ என்று நடிகர் பிரபாஸ் கூறி­யுள்ளார்.

பல்­வேறு தெலுங்கு படங்­களில் நடித்­துள்ள நடிகர் பிரபாஸ், பாகு­பலி படத்­துக்குப் பிறகு, வெளி­நா­டு­க­ளிலும் பிர­ப­ல­மாகி விட்டார்.

தெலுங்கு, தமிழ், மலை­யாளம், இந்தி ஆகிய 4 மொழி­களில் தயா­ரா­கி­வரும் சாஹோ என்ற திரைப்­ப­டத்தில் தற்­போது நடித்து வரு­கிறார். இதற்­கி­டையில், இவ­ரது திரு­மணம் குறித்து பல வதந்­திகள் வந்த வண்ணம் உள்­ளன.

நடிகை அனுஷ்­கா­வுடன் காதல் என்றும், இவர்கள் இரு­வரும் விரைவில் திரு­மணம் செய்­து­கொள்ளப் போவ­தா­கவும் தகவல்கள் பரவி வரு­கின்றன.

அவர்கள் இரு­வரும் இத்­த­க­வல்­களை மறுக்­கா­ததால், ஒருவேளை உண்­மை­யாக இருக்குமோ என்ற சந்­தே­கமும் இருந்­தது.

இந்­நி­லையில், ஆங்­கில தொலைக்­காட்­சிக்கு பேட்­டி­யளித்துள்ள பிரபாஸ், தனது திரு­மணம் குறித்து முதன்­மு­றை­யாக பேசி­யுள்ளார்.

அவர் கூறி­ய­தா­வது: தற்­போது திரு­மணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இதனால் எனது ரசி­கைகள் மகிழ்ச்சி அடை­வார்கள் என நினைக்­கிறேன்.

திரு­மணம் குறித்து நான் நினைத்­துக்­கூட பார்க்­க­வில்லை. ஆனால் ஊட­கங்கள் என்­னையும், ஒரு நடி­கை­யையும் (அனுஷ்கா) இணைத்து செய்­தி­களை வெளி யிட்டு வரு­கின்­றன.

இதில் உண்மை இல்லை. முதலில் இது­போன்ற செய்­திகள் வந்தால் மனம் வருந்­துவேன். இப்­போது பழ­கிவிட் டது. 2 படங்­களில் தொடர்ந்து இணைந்து நடித்­ததால், மக்­களும், ஊட­கங்­களும் தவ­றாக புரிந்து கொள்­கின்­றன.

தற்­போது நடித்து வரும் ‘சாஹோ’ படத்தில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. இவ்வாறு பிரபாஸ் கூறியுள்ளார்.

ஆண் நண்பருடன் வெளியே செல்ல நடிகைக்கு தடை!!

இந்தி நடிகை அம்ரிதாசிங் மகள் சாரா அலிகான். இவர், கேதார்நாத் என்ற படத்தின் மூலம் இந்தி பட உலகில் அறிமுகமாகிறார். கு‌ஷந்த்சிங்ராஜ்புட் ஜோடியாக சாரா நடிக்கும் இந்த படத்தை அபிஷேக்கபூர் இயக்குகிறார்.
இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், சாரா அலிகான் ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லக்கூடாது என்று அவரது தாயாரும் நடிகையுமான அம்ரிதாசிங் தடை விதித்து இருக்கிறார்.

மகள் பற்றி கிசுகிசுக்கள் வந்து விட கூடாது என்பதால், ஸ்ரீதேவி போலவே, இவரும் தனது மகளுக்கு இந்த தடையை விதித்து இருக்கிறார்.

வதந்திகள் பரவினால் மகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் அம்ரிதாசிங் இந்த உத்தரவை மகளுக்கு பிறப்பித்து இருக்கிறார். சாராவுக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் மட்டுமே செய்திகள், விளம்பரங்கள் வரவேண்டும் என்பதில் அம்ரிதாசிங் உறுதியாக இருக்கிறார்.

கதிர்காமத்தில் விபத்து : கிளிநொச்சியை சேர்ந்த இருவர் பலி!!

கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து, இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்கியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள், கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 41 வயதான இரண்டு பேர் என தெரியவந்துள்ளது.

பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பதவியை இராஜினாமா செய்த சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களிடையேயான முக்கிய ஒன்றுகூடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, கட்சியின் மாகாண உறுப்பினர்கள் குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் குறித்த இராஜினாமா அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒன்றுகூடலில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்பதில்லையென முடிவெடுக்கபட்டதையடுத்து, வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவி விலகலை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் வாகன விபத்து : இருவர் படுகாயம்!!

 
வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று (07.08.2017) மதியம் 2.50 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கந்தசுவாமி ஆலய வீதியூடாக வைரவப்புளியங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது மணிக்கூட்டு சந்தியடியில் கண்டி வீதியுடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த 52, 55 வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.