திருமணம் செய்துக்கொண்ட இரண்டு ஆண்கள்!!

இந்தியாவில் இரண்டு ஆண்கள் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த 3ம் திகதி மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகரத்திலே இத்திருமணம் நடந்துள்ளது. அஹிர்வர் மற்றும் ராகேஷ் அதாஜா ஆகியோரே இவ்வாறு திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

மழை வேண்டி கடவுளிடம் வழிபாடு செய்யும் முயற்சியாகவே இருவரம் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின் இருவரும் அவர்களின் மனைவியுடன் வாழ்ந்து வருவதாக திருமணத்தை ஏற்பாடு செய்த ரமேஷ் சிங் தோமர் என்பவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் நடந்துக்கொண்டிருந்த போதே மழை பொழிந்ததால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

எனினும், இந்த திருணம் ஓரினச் சேர்க்கை திருமணம் என LGBTQ என்ற பத்திரிகை குற்றம்சாட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஓரினச் சேர்க்கை திருமணம் தற்போது வரை குற்றம் என்பதால் சமூக வலைதளங்கில் இது உண்மையான ஓரினச் சேர்க்கை திருமணமா என சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்ந்து இந்த திருமணம் ஓரினச் சேர்க்கை என குற்றம்சாட்டி வரும் LGBTQ பத்திரிகை, இந்தூர் அமைந்துள்ள பகுதியில் யூன் 1ம் திகதி முதல் ஆகஸ்ட் 8ம் திகதி வரை மழைக்காலம் என முன்னதாகவே வானிலை ஆய்வு மையத்தின் படி அறிவித்திருந்ததை குறிப்பிட்டுள்ளது.

ஒருதலைக் காதல் : பெற்றோர் முன் துடிதுடிக்க கொல்லப்பட்ட இளம்பெண்!!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் தான் ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் பன்ஸ்வாரா நகரத்திலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது, இச்செயலில் ஈடுபட்ட ஜகதீஷ் பஞ்ஜாரா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜகதீஷ், வைசாலி ஒரே பள்ளியில் படித்து வந்த நிலையில் ஜகதீஷ் ஒருதலையாக வைசாலியை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வைசாலி தனது வீட்டில் துணி காயவைத்துக்கொண்டிருந்த போது சுவர் ஏறி குதித்து உள்ள நுழைந்த ஜகதீஷ், கூர்மையான ஆயுதத்தால் வைசாலி கழுத்தை அழுத்து விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதன்போது வீட்டிலிருந்த வைசாலியின் பெற்றோர் மகள் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இறுதியில் வைசாலி துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஜகதீஷ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் இளம் பெண் வீட்டில் வைத்து கொல்லப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

தங்களை மீறி மகள் திருமணம் செய்து கொண்டதால் விரக்தி அடைந்த குடும்பத்தினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இந்தியா – சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஊர் பெத்தநாயக்கன் பாளையம். அங்கு வசிப்பவர் ராஜேந்திரன்(50) மற்றும் அவரின் மனைவி ராணி(45). அவர்களுக்கு மோகனா(21), ஆர்த்தி (19) என இரண்டு மகள்களும், நவீன்குமார் (15) என ஒரு மகனும் உள்ளனர். அதில் ஆர்த்தி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தமிழக அரசு வேலையை பெற டி.என்.பி.எஸ்-சி தேர்வுக்கு பயிற்சி செய்து வந்தார்.

அந்நிலையில், அவருக்கும், பெரிய கவுண்டாபுரம் பகுதியை சேர்ந்த மணி என்ற முச்சக்கரவண்டி ஒட்டுனருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த விவாகரம் மோகனாவின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணியை சந்தித்து பேச தடையும் விதித்தனர்.

மேலும், இந்த விவகாரம் ஊர் மக்களுக்கும் தெரியவந்தது. அதனால் அவரின் பெற்றோர்கள் அவமானம் அடைந்தனர். ஆனாலும், மோகனா அடிக்கடி மணியை சந்தித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறிய மோகனா, மணியை திருமணம் செய்து கொண்டார். மேலும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொலிஸாரிடமும் அவர்கள் புகார் அளித்தனர்.

இதனால், இந்த தகவலை மோகனாவின் பெற்றோருக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபற்றி பேச பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு மோகனாவின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த மோகனாவின் பெற்றோர்கள், நேற்று இரவு குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தனது மகள் மற்றும் மகனுக்கு கொடுத்து விட்டு அவர்களும் குடித்தனர். இதில் வாயில் நுரை தள்ளி அனைவரும் இறந்துவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் குடிநீர் இயந்திரத்தொகுதி திறப்பு!!

 
வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் வடிகட்டும் குடிநீர் இயந்திரத்தொகுதி திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (04.08.2017) காலை 8.15 மணியளவில் பாடசாலையின் அதிபர் சொ.கமலாம்பிகை தலமையில் இடம்பெற்றது.

மாகாண சபை உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட இவ் வடிகட்டும் குடிநீர் இயந்திர தொகுதியினை (01 மில்லியன் ரூபாய்) வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நான் ஏலியன் : 9 வயதுச் சிறுவன் அனுப்பிய விண்ணப்பம்!!

நாசாவின் பூமியைப் பாதுகாக்கும் வேலைக்கு 4ம் வகுப்பு பயிலும் 9 வயது ஜேக் டேவிஸ் என்ற சிறுவன் அனுப்பிய விண்ணப்பம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஏலியன்களிடமிருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருந்தது.

இந்தநிலையில் நாசாவின் பூமியைப் பாதுகாக்கும் வேலைக்கு விண்ணப்பித்து நாசாவுக்கு ஜேக் எழுதியுள்ள கடிதத்தில், எனது பெயர் ஜேக் டேவிஸ். பூமியின் பாதுகாவலன் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். எனக்கு 9 வயது மட்டுமே ஆகியிருக்கலாம். ஆனால், நான் இந்தப் பணிக்கு பொருத்தமாக இருப்பேன் என்று நினைக்கிறேன்.

ஏலியன் என்றே எனது சகோதரி என்னை அழைப்பதும் அதற்கான காரணங்களுள் ஒன்று. இதுதவிர, விண்வெளி மற்றும் ஏலியன் தொடர்பாக வெளியாகியுள்ள அனைத்துப் படங்களையும் நான் பார்த்துள்ளேன்.

மேலும், மார்வெல் ‘ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்டு’ சீரியல்களையும் தவறாமல் பார்த்து வருகிறேன். ‘மென் இன் பிளாக்’ படத்தையும் பார்த்துவிடுவேன் என்று நம்புகிறேன். வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளில் சிறந்து விளங்குகிறேன்.

நான் இளமையாக இருப்பதால் ஏலியன்கள்போல சிந்திக்கக் கற்றுக்கொள்வேன் என்று நம்புகிறேன் என்று ஜேக் டேவிஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த விண்ணப்பக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய காதலிக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை!!

அமெரிக்காவில் காதலனை தற்கொலைக்கு தூண்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பிய பெண்ணுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் Massachusetts பகுதியை சேர்ந்தவர் கான்ராட் ராய். இவரது காதலி மிச்செலி கார்டர். மிச்செலி கார்டர் தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டும் வகையில் அனுப்பிய குறுஞ்செய்திகளால் மன உளைச்சலுக்கு உள்ளான கான்ராட் ராய் அவரது காருக்குள் ஒருவித நச்சு வாயுவை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு நடந்தது. இச்சம்பவம் கான்ராட் ராய் குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்கொலைக்கான காரணத்தை அவர்கள் ஆராய்ந்தபோது மிச்செலி கார்டர் தனது காதலர் கான்ராட் ராய்க்கு தற்கொலையை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பி இருந்தது தெரியவந்தது. மேலும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் காதலனுடன் டெலிபோனிலும் பேசி இருந்தார்.

அதில் தற்கொலைக்கு பல வழிகள் உண்டு எனக்குறிப்பிட்ட அவர், தூக்கில் தொங்கலாம், கட்டிடத்தில் இருந்து குதிக்கலாம், கத்தியால் குத்திக் கொண்டு சாகலாம் என்பன போன்ற தகவல்களைத் தெரிவித்திருந்தார்.

எனவே தற்கொலைக்கு தூண்டியதாக மிச்செலி கார்டர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 20 வயதான மிச்செலி கார்டருக்கு தற்கொலைக்கு தூண்டியதன் அடிப்படையில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால் இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தத்துவ ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் கார்டர் செய்து தவறுதான் என்றபோதும் அவர் தவறுதலாக தண்டிக்கப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி காருக்குள் சென்று நச்சு வாயுவை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டது ராயின் முடிவு. அதில் கார்டரின் பங்கு குறித்து தீவிரமாக ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்!!

காதலனுடன் சேர்ந்து தனது 5 மாத ஆண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Faversham நகரத்தை சேர்ந்தவர் Katherine Cox (33) இவருக்கு Eli Cox என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இவருக்கு Danny Shepherd (25) என்ற நபருடன் இரு வருடங்களுக்கு முன்னர் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் குழந்தை Eli படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது.

குழந்தை Eli கொடூரமாக தாக்கப்பட்டதும், அவன் உடலில் 28 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதும் பின்னர் தெரியவந்தது.

இதோடு குழந்தையின் தலையிலும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்பட்டிருந்தையும் மருத்துவர்கள் உறுதி செய்தார்கள்.

இதற்கெல்லாம் மேலாக குழந்தை Eli-ன் ரத்தத்தில் Cocaine ரக போதை மருந்துகள் கலந்திருந்தது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் இவை அனைத்தையும் செய்தது Katherine மற்றும் Danny தான் எனவும் தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் இருவரையும் கைது செய்தார்கள். முதலில் தங்கள் தவறை ஒப்பு கொள்ளாத இருவரும் பின்னர் ஒப்பு கொண்டுள்ளார்கள்.

குழந்தையை அதிகம் கொடுமைப்படுத்தியது இருவரில் Danny தான் என்பதும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்து வந்த வழக்கு விசாரணையில் Danny மற்றும் Katherine இருவரும் குற்றவாளிகள் என்பதை தற்போது நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

உளவியல் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டவுடன் இருவருக்குமான தண்டனை விபரங்களை நீதிமன்றம் வெளியிடும் என தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிஸ் அதிகாரி Ivan Beasley கூறுகையில், இது மிகவும் துயரமான சம்பவம் என்பதில் சந்தேகமில்லை.

குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்க எது போன்ற விடயம் இவர்களுக்கு தூண்டுதலாக இருக்கிறது என புரியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

விளையாட்டு வினையானது : தீயில் கருகி பலியான சிறுவன்!!

தெலுங்கானா மாநிலத்தில் 11 வயது மாணவன் தொலைக்காட்சியை பார்த்து தீயில் சாகசம் செய்த போது தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரபல்லே காளி விஸ்வநாத் என்ற 11 வயது சிறுவன் மூன்று நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் தீயை வைத்து சாகசம் செய்யும் நிகழ்ச்சியை பார்த்துள்ளான்.

அதில் வாயிலிருந்து தீ வருவது போலவும், வட்டமிடுவது போலவும் சாகசம் செய்துள்ளனர். அதை பார்த்து தானும் அதைபோல செய்து பார்க்க வேண்டும் என எண்ணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளான். ஆனால் தீயானது அவன் உடல் முழுவதும் பரவியுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

தொலைக்காட்சி தொடர்களை பார்த்து பல இடங்களில் சிறுவர்கள் இது போன்ற விபரீத விளையாட்டில் ஈடுபட்டு உயிரிழப்பது தொடர்ச்சியாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் மனைவி பொலிஸ் சேவையில் இணைவு!!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கும் போது உயிரிழந்த பொலிஸ் சர்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் மனைவி மீண்டும் பொலிஸ் சேவையில் இணைவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கைக்கமைய ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக அதன் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் சர்ஜன்டின் மனைவி கான்ஸ்டபிலாக சேவை செய்துள்ள நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக பொலிஸ் சேவையில் இருந்து விலகியுள்ளார்.

எப்படியிருப்பினும் தனது கணவர் உயிரிழந்த பின்னர் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு தன்னை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்து கொள்ளுமாறு அவர் பொலிஸ் திணைக்களத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 22ஆம் திகதி யாழ். நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு 15 வருடமாக மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய சரத் ஹேமச்சந்திர உயிரிழந்ததுடன் மற்றொரு அதிகாரி காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு : சர்வதேசத்தில் கிடைத்த பரிசு!!

 
இலங்கை மாணவரின் புதிய கண்டுபிடிப்பால் சர்வதேச கண்காட்சியில் கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

வாழைச்சேனை – அந்நூர் தேசிய பாடசாலையில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இளம் கண்டு பிடிப்பாளரான எம்.எம்.யூனூஸ் கான் நெல் விதைக்கும், உரம், எண்ணெய் விசுறும் செயற்பாடுகளைக் கொண்ட இயந்திரம் ஒன்றினை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார்.

குறித்த இயந்திரம் மூலம் மேற்கூறிய செயற்பாடுகளைத் திறம்பட மேற்கொள்வதோடு, தன்னியக்க கருவியூடாக வயல் வரப்புகளிலிருந்து கொண்டே சிரமம்மின்றி இயக்கும் திறனைக் கொண்டமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள ரூபாய்!!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வருடத்தில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 2.5 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில் அவை இன்னமும் வீழ்ச்சியடையும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாய் வலுவடைதல் என்பது பொருளாதாரத்திற்கோ அல்லது மக்களுக்கோ அவசியம் அல்ல என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் உள்ளூர் பரிமாற்றம் வலுவடையும் போது வெளிநாட்டு தயாரிப்புகளுக்கு அதிக இலாபம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரூபாவின் பெறுமதி டொலருக்கு அமைவாக போட்டித் தன்மையுடன் அதிகரிப்பது அவசியமாகும். ஏற்றுமதியை அதிகரிப்பது பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி, முதலீடுகள் என்பனவற்றை அதிகரித்து புதிய தொழில்வாய்ப்புக்களும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தின் ஊடாக இந்த வருடம் டிசம்பர் மாதம் வரையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் முறையான விதத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்து வருகின்ற நிலையில், நாட்டின் பொருளாதாரக் கொள்கை பற்றி சர்வதேச நாணய நிதியமும் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் தேசிய பொருளாதாரம் 2.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இயற்கை அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 6.8 சதவீத்தினால் அதிகரித்திருந்தது. பணவீக்கம் 6.1 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.

சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுவதாகவும் இவ்வருடத்தில் இதுவரை பத்து இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளானர் என மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

4 கால்கள், 2 பிறப்புறுப்புகளுடன் பிறந்த குழந்தை!!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் 2 கால்கள், 3 கைகள் மற்றும் 2 பிறப்புறுப்புகளுடன் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கால்கள் அகற்றப்பட்டுள்ளது.

Kuli Bai (22) என்ற பெண்ணுக்கு நகரில் 4 கால்கள், 3 கைகள் மற்றும் 2 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இப்படி ஒரு குழந்தை தங்களுக்கு தேவையில்லை என்று Kuli Bai- யின் உறவினர்கள், குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்துவிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

ஆனால், குழந்தையின் தாய், Matra Chhaya மருத்துவமனையில் உள்ள மருத்துவர் Bharat Pal Danda என்பவரை அணுகியுள்ளார்.

Bharat Pal Danda மருத்துவர் குழு இணைந்து அறுவை சிகிச்சை மூலம் 2 கால்கள் மற்றும் 1 கை அகற்றப்பட்டுள்ளது. தற்போது, குழந்தை நலமாக இருந்தாலும், மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரட்டை கரு உருவாகும்போது , அதில் ஒரு கரு பாதி வளர்ச்சியடைந்த நிலையில் இறந்துவிடும்போது, அதன் எஞ்சிய திசுக்கள் உயிருடன் இருக்கும் கருவுடன் சேர்ந்து வளர்ச்சியடைகிறது.

இதனால் தான் இதுபோன்ற குழந்தைகள் பிறக்கின்றன என்று மருத்துவர் Bharat Pal Danda கூறியுள்ளார்.

யாழில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!!

யாழ். சாவகச்சேரி தனங்கிளப்புப் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

25 வயதான இளைஞர் ஒருவரே இன்று(04) மதியம் வீட்டில் தூக்கிட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா நோக்கி சென்ற ரயிலில் பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற இளம்தாய்!!

இளம் தாயொருவர் தனது பிள்ளைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

தாய் ஒருவர் தனது மகள்கள் இருவருடன் கல்கமுவ பிரதேசத்தில் ரயலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இதன்போது ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

பாரிய காயங்களுக்குள்ளான இவர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 7.40 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் இருந்து குதித்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தாய் 23 வயதானவர் எனவும், அவரது 6 வயதுடைய மகளும், 3 வயதுடைய மகளுமே இவ்வாறு ரயில்ல பாய்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர்கள் மூவரும் பழுகன்தெவ பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். கல்கமுவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரவிந்த் சாமியை தேடும் மதுரை, தூத்துக்குடி பெண்கள்!!

செல்வா இயக்கத்தில் ”வணங்காமுடி” படத்தில் நடித்து வரும் அரவிந்த் சாமியை மதுரை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த இரு பெண்கள் தேடி வருகிறார்களாம்.

அரவிந்த் சாமி தற்போது சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், நரகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்காமுடி’. அரவிந்த் சாமி நாயகனாக நடிக்கும் இதில் ரித்திகா சிங், சிம்ரன், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், கணேஷ் வெங்கட்ராம், தம்பி ராமைய்யா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இவர்களில் அரவிந்த் சாமி மனைவியாக ரித்திகாசிங் நடிக்கிறார். இவரது தோழியாக சிம்ரன் நடிக்கிறார்.

நந்திதா, சாந்தினி ஆகியோர் மதுரை, தூத்துக்குடி பெண்களாக நடிக்கிறார்கள். இவர்கள் அரவிந்த்சாமியை ஏன் தேடிச் செல்கிறார்கள் என்பதுதான் கதையின் ‘சஸ்பென்ஸ்’ என்று சொல்லப்படுகிறது. டி. இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மணற்காடு பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை : தாயும், சகோதரியும் நீதிமன்றில் வாக்குமூலம்!!

யாழ்ப்பாணம் – மணற்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் அவரின் தாயும், சகோதரியும் நீதிமன்றில் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இளைஞரின் சகோதரியும் தாயும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதனை அடுத்து , சம்பவ தினத்தன்று இளைஞருடன் வாகனத்தில் பயணித்த ஏனையவர்களின் தகவல்களையும் அடுத்த தவணையில் மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறை – மணற்காடு, ஆறாம் கட்டை பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற வாகனம் மீது கடந்த 9 ஆம் திகதி பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் துன்னாலை – கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே உயிரிழந்தார்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மணற்காடு பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.