இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (30-40) வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பத்தேகம பகுதியில் இறுதிச் சடங்கொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று(27.02.2025) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பத்தேகம – மத்தேவில பகுதியில் இறுதிச்சடங்கொன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது, படுகாயமடைந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த மோதலின் போது மேலும் இருவர் படுகாயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவருகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் போதையில் பயணிகள் பஸ்ஸில் குழப்பம் விளைவித்த குடிமகனால் அங்கிருந்தவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் மினி பஸ்ஸை எடுக்க விடாது அதன் சில்லுக்குள் கால்களை நீட்டிக்கொண்டிக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து கடும் பிரயத்தப்பட்டு அங்கிருந்த ஒருவர் குடிமகனை வெளியில் இழுத்து விட்டபோதும், போதையில் இருந்தவர் மீண்டும் பேருந்தின் கீழா செல்ல முயன்றதனால் பரப்ரப்பு ஏற்பட்டது.
அதன் பின் ஒருவழியாக போதை ஆசாமியை இழுத்து எடுத்துவிட்டு பேருந்து சென்ற நிலையில், குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதேவேளை அதிக வாகன நெரிசல் உள்ள பகுதியில் போக்குவரத்து பொலிசார் தமது கடமைகளை செய்யாமை பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மகா சிவராத்திரி தினத்தில் (26) அசைவம் சாப்பிட்ட பல்கலைக்கழக மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து வலதுசாரி மாணவர் அமைப்பு இழுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் செயல்பட்டு வரும் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் சில மாணவிகள் நேற்று அசைவம் சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது, வலதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் வந்து, “மகா சிவராத்திரி தினத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது.
மீறி சாப்பிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தனர். ஆனால், அதையும் மீறி அந்த மாணவிகள் அசைவம் சாப்பிட்ட போது திடீரென மோதல் ஏற்பட்டது.
இதனை அடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,
அசைவம் சாப்பிட்டதை வைத்து இரண்டு குழுக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இது குறித்து விசாரணை செய்து வருகிறோம். முறையான புகார் எதுவும் வரவில்லை. ஆனாலும், பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
இலங்கையில் (sri Lanka) கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அதன்படி, இன்றையதினம் (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 863,255 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 30,460 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 243,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் நடந்ததாகவும், உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, இறந்தவர், கணவன் மற்றும் மனைவியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாகவும், பின்னர் இறந்தவரின் கையில் இருந்த கூரிய ஆயுதத்தைப் பறித்த கணவன், அதே ஆயுதத்தால் இறந்தவரைத் தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் சந்தேகநபரும் அவரது மனைவியும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாணந்துறையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 82 கையடக்கத் தொலைபேசிககள் மீடக்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (27) அதிகாலை நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 82 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சந்தேக நபர் தனது மகனுடன் வீட்டில் வசித்து வருவதாகவும், சோதனையின் போது அவர் வீட்டில் இல்லாததால், அவர் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று நேற்று (26) மாலை கரை ஒதுங்கியுள்ளது .
கடலில் நிலவும் கடும் காற்றால் பாரிய தண்ணீர் தாங்கி கரையொதுங்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாரிய தண்ணீர் தாங்கி இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு அதன்மேல் பைரினால் வார்க்கப்பட்டு இளம் பச்சைக் வர்ண கூம்பக வடிவில் காணப்படுகின்றது.
கரையொதுங்கிய மிதவையை இராணுவம் கடற்படை பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.மேலும் இது தொடர்பாக கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகநூலில் நட்பால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருடம் சுமார் 29 இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,
பேஸ்புக்கில் மாக் என்பவருடன் நட்பு வேண்டுகோள் வந்தது அதன் மூலம் அவர் என்னுடன் நட்பாகினார். குறித்த நணபர் எனது வாட்ஸ் அப் இலக்கத்தை வாங்கி அதனூடாகவும் வாட்ஸ் அப்பில் என்னுடன் தொடர்பு கொண்டார்.
பரிசுபொதியால் நேர்ந்த வினை
2024 மே 31 ல் எனது முகவரியை கேட்டார். முதலில் நான் இவருக்கு முகவரியை வழங்கவில்லை. பின்னர் தனது பிறந்தநாளை என்னுடன் கொண்டாட இருப்பதாகவும் எனக்கு ஒரு பரிசுப்பொதி அனுப்ப இருப்பதாகவும் கூறி முகவரியை கேட்டபோது, நான் எனது முகவரியை அனுப்பினேன்.
மே மாதம் 31 மாலையில் எனக்கு டெல்டா கொரியர் சேர்விஸ் எனும் நிறுவனத்தினூடாக பொதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜுன் 1 ம் திகதி கொழும்பில் இருந்து தகவல் வரும் என தகவல் அனுப்பினார்.
பின்னர் கொழும்பு டெலிவரி ஏஜன்ட் என்று ஒருவர் மெசேஜ் அனுப்பினார். CLEARANCE FEE 95000/- அனுப்பும்படி கூறினார். இதற்கு நான் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறினேன்.
அப்போது முதலில் பொதி சம்மந்தமாக முதலில் கதைத்த மார்க் சிமித் என்பவர் எவ்வளவு பணம் இருக்கிறது என தொடர்பு கொண்டு கேட்டார்.
நான் பணம் இல்லை எனக் கூறினேன். பின்னர் 35000/- ரூபா வங்கிக்கு அனுப்ப சொல்லி வங்கி இலக்கத்தை தந்தனர் பின்னர் 40000 ரூபா போடும்படி சொன்னார். இதனடிப்படையில் 03/06/2024 ரூபாய் 40000 ஐ வங்கி கணக்கில் வைப்பிலிட்டேன்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிற்பதாகவும் பொதி ஸ்கான் பண்ணபடுவதாகவும் கூறினார். மேலும் பொறிக்குள் DOLLERS இருப்பதாகவும் அது ஒரு பெரிய தொகை என்றும் கூறி தான் அனுப்பும் வங்கிக்கணக்கு பணம் அனுப்பும் படியும் இல்லாவிடில் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் பயமுறுத்தினார்.
மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல்
அதன் பின்னர் ரூபாய் 1 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடச்சொன்னார். அடுத்த நாள் பொதிக்கு INSURANCE COVERAGE இல்லை அதற்கு ரூபா 48ஆயிரம் வைப்பிலிடச் சொன்னார்.
இவை அனைத்தையும் நான் இவர்கள் தந்த கணக்கிற்கு வைப்பிலிட்ட பின்னர் எனது பெயரில் பொதி வந்தால் பெரிய பிரச்சினை என்றார்கள். தை மாதம் 07 ம் திகதி மார்க் அண்டர்சன் தொடர்பு கொண்டார்.
அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். லண்டனில் இருந்து கொழும்பு வந்து வேலை செய்வதாக கூறினார். ரூபா இருபது லட்சம் வங்கியில் வைப்பிலிட்டால் 24 மணி நேரத்துக்குள் பொதியை வழங்குவதாக கூறினார்.
இதற்கு ஆதாரமாக தனது பாஸ்போர்ட் போட்டோவை அனுப்பி வைத்தார்.அதனை நம்பி அவர் சொன்ன வங்கி கணக்கிற்கு நான் இருந்து லட்சம் ரூபாவை வைப்பிலிட்டேன்.
பின்னர்.Airport delivery charge என கூறி ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வைப்பிலிடச்சொன்னார் அதையும் வைப்பிலிட்டேன்.
தற்போது மேலும் ஒருவர் பொதியை தருவதாக கூறி மேலும் 30 லட்சம் ரூபாயினை கேட்டு மிரட்டுகின்றனர் என்னை இந்த பொதி வருகிறது என கூறி இதுவரை 29 லட்சத்து இருபதாயிரம் ரூபாயினை மோசடி செய்து மேலும் என்னை பணம் தர சொல்லி மிரட்டுகின்றனர்.
என்னைத் தொடர்புகொண்ட இலக்கங்கள் மற்றும் வங்கியில் வைப்பிலிட்ட விபரங்கள் என அனைத்தும் என்னிடம் உள்ளது. எனவே மேற்படி மோசடி தொடர்பில் விசாரணை நடாத்தி இழந்த எனது பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
அதேவேளை நாட்டில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாகவும், மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு- வற்றாப்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (26) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்றையதினம் (25) காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து இன்றையதினம் தேடுதல் நடத்திய போது அருகில் இருந்த நீர் நிலை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது, 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் கொலை செய்யப்பட்டு நீரில் வீசப்பட்டானா அல்லது விபத்தா என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம் நாட்டிற்கு டொலர்களை ஈட்டித் தரும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் முதல் 15 சதவீத வரி செயற்பாட்டுக்கு வரவுள்ளதாக, இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.
15 விடவும் அதிக வரி சதவீதத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் இந்த வரி கட்டாயம் விதிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சமகாலத்தில் நாட்டுக்குள் ஒன்லைன் ஊடாக அதிகளவான டொலர்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.
சமூக வலைத்தளங்கள் மற்றும் fiverr போன்றவை ஊடாக திறமையான இளைஞர்கள் பாரிய அளவிலான டொலர்களை நாட்டிற்கு ஈட்டித்தருகின்றார்கள். இவ்வாறான முறையில் நாட்டிற்கு நன்மை ஏற்படுத்துபவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக ஏன் வரி விதிக்கப்படுகின்றது?” என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினர்.
“இதனை விடவும் அதிக வரியை அமுல்படுத்தவே யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும் எங்களால் இந்த சந்தர்ப்பத்தில் வரி அமுல்படுத்த நேரிட்டுள்ளது.
அவ்வாறு செய்யவில்லை என்றால் அதனை விடவும் கடுமையான வரிகளுக்கு செல்ல நேரிடும். மக்கள் மீது வரி சுமையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க நேரிட்டது.
எனினும் வேறு நிவாரணங்களை வழங்க முடியுமா என்பது குறித்து நிதி அமைச்சருடன் கலந்துரையாடல் மேற்கொண்டதன் பின்னர் அறிவிக்கின்றேன். தற்போதைக்கு இதனையே கூற முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கலடிய பகுதியைச் சேர்ந்த 19 வயதான சாமுதி விதர்ஷனா என்ற யுவதியே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலையின் மாணவியான அவர், குருணாகலிலில் உயர்கல்வி டிப்ளோமா கல்வி பயின்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டிற்கு மூத்த பிள்ளையான விதர்ஷனா, அன்றையதினம் இரவு மரக்கறி ரொட்டி உட்கொண்ட நிலையில் உறங்க சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காலையில் மாணவின் அறைக்கு சென்ற தாய், மகளின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மயக்க நிலையில் இருந்த மகளை புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவின் திடீர் மரணம் குறித்து புத்தளம் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி(Galle), கரந்தெனிய பிரதேசத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட கிளி உரிமையாளரை காட்டிக்கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளியின் நடத்தையை ஆராய்ந்ததன் மூலம், தங்க நகைகளை திருடிய 38 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண்ணின் கணவர் கறுவா வெட்டச் சென்றிருந்தபோது, வீட்டின் அலமாரியில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை யாரோ திருடிச் சென்றதாக அந்தப் பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.
அதற்கமைய கணவர் கரந்தெனிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் நடத்திய விசாரணையில், வீட்டில் இருந்த செல்லப் பிராணியான கிளி, திருட்டு நடந்த அறையின் வாசற்படியில் தங்கிப் பழகியிருப்பது கண்டறியப்பட்டது.
அந்த இடத்தில் தினமும் தங்கும் கிளி அங்கே இருப்பதாலும், வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாததாலும், இந்தத் திருட்டு குடியிருப்பாளரால் செய்யப்பட்டிருக்கலாம் எனவும், பொலிஸாரை தவறாக வழிநடத்த இது பயன்படுத்தப்படுவதாகவும் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
பணம் வைக்கப்பட்டிருந்த அலமாரியில் மிளகாய் தூள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சமையலறையில் இருந்த மிளகாய் தூளுடன் அலமாரியில் இருந்த மிளகாய் தூளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, இரண்டு வகையான மிளகாய் தூள்களும் ஒரே மாதிரியானவை என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டு நடந்த நேரத்தில் சந்தேக நபரான பெண்ணும் அவரது சிறுவயது மகனும் மட்டுமே வீட்டில் தங்கியிருந்தனர். எனவே, சந்தேகத்தின் அடிப்படையில், திருட்டு தொடர்பாக பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும், திருட்டு செய்ததாக அவர் ஒப்புக்கொள்ளாததால், அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய மோப்ப நாய் பிரிவிலிருந்து ஒரு நாயின் உதவியையும் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, திருட்டு நடந்த வீட்டின் அலமாரியை பொலிஸ் நாய் இரண்டு முறை மோப்பம் பிடித்த பிறகு, அவர் தான் திருட்டைச் செய்ததாக ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடியில் தொடர்புடைய முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது என்று சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனால் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் 10 பில்லியன் ரூபா அளவிலான பிணை முறி மோசடிகள் குறித்த விசாரணைக்கு புதிய சவால் உருவாகியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடைபெற்றதாகக் கூறப்படும் பிணை முறி மோசடியில் தொடர்புடையதாகக் கருதப்படும் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான முயற்சியை சட்ட மா அதிபர் திணைக்களம் மேற்கொண்டது.
இலங்கையில் பிறந்து சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றுக்கொண்ட மகேந்திரன், நல்லாட்சி அரசாங்க ஆட்சி காலத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தார்.
கடந்த ஆண்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், 2025 பெப்ரவரி 25ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
மேலும், கொழும்பு நீதவான் நீதிமன்றம் மகேந்திரனை கைது செய்ய இன்டர்போல் (Interpol) மூலம் சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ஜுன மகேந்திரன் தலைமையில் பிணை முறி மோசடி நடைபெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (Perpetual Treasuries Ltd) நிறுவனமும், அதன் உரிமையாளர் மற்றும் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸ் என்பவரும் முக்கிய பயனாளிகளாக இருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு திருப்பி அழைத்துவருவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதி அளித்திருந்தார்.
தேர்தலுக்கு பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பொது பாதுகாப்பு அமைச்சகம் பிணை முறி மோசடிக்கான சட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என அறிவித்தார்.
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் காமன்வெல்த் நாடுகள் ஊடாக தப்பிச் சென்ற குற்றவாளிகளை நாடு திரும்பச் செய்யும் திட்டங்கள் உள்ளன.
இருப்பினும், சிங்கப்பூர் சட்டப்படி மகேந்திரனை நாடு கடத்த முடியாது என அந்த நாட்டின் உயர் சட்ட அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா பொலன்னறுவை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
இதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. அந்தவகையில் மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது.
ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது.
இம்முறை ஆலயத்தில் மாலை 6மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மாலை 6 மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர்.
இதேவேளை காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களின் வழிபாட்டுசெயற்பாடுகளுக்கு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.
கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்யமுற்ப்பட்ட 8பேர் நெடுங்கேணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
அந்த செயற்பாடு மத பதற்றம் ஒன்றை உருவாக்கியிருந்ததுடன்,
பொலிசாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன.