ஓமான் சென்ற மட்டக்களப்பு பெண் மாயம் : குடும்பத்தினர் கவலை!!

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் இருந்து வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணிடம் இருந்து எதுவித தொடர்பும் இல்லை என பெண்ணின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தாயான ஹயாத்து முகம்மது ஐதுறூஸ் நௌபியா என்பவர் பணிப்பெண்னாக வெளிநாடு சென்றுள்ளார்.

குறித்த பெண் 15 வருடங்களுக்கு முன்னர் துபாய் நாட்டுக்குச் சென்றவர் அங்கிருந்து ஓமான் நாட்டிற்கு சென்று பணிப் பெண்னாக வேலை செய்து வந்த நிலையில் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பெண்ணை அனுப்பிய முகவர் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் போன்றவைகளிலும் இவரை கண்டுகொள்ள பல முயற்சி செய்தும் இதுவரை எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஓமானில் இருக்கும் நபர்கள், குறித்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அவரது சகோதரர் சாஜஹான் என்பவரின் தொலைபேசி இலக்கத்துடன் 0096565850217 தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு குடும்பத்தினர் வேண்டிக் கொள்கின்றனர்.

 

யாழில் நகையை தொலைத்தவரை தேடி நகையை கையளித்த நகைக்கடை உரிமையாளர்!!

யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடி கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கொடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பேருந்தில் பயணித்த பெண் ஒரு கடந்த 09.04.2025 அன்று தனது நகையை தவறவிட்டுள்ளார். இந்நிலையில், இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பின்னர் குறித்த நகையை கண்டெடுத்தவர் அதனை நகை கடையில் கொடுத்து வேறு நகை செய்வதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது, நடந்த சம்பவத்தையும் நகைக்கடை உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

இதன்போது, நகைக்கடை உரிமையாளர் இது தவறு என அவருக்கு எடுத்துக்கூறிய பின்னர், நகை காணாமல் போனதாக ஏதாவது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதா என தேடுதலில் ஈடுபட்டனர்.

அந்தவகையில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தெரியவந்தது.

இந்நிலையில், நகையை தொலைத்த பெண்ணை அழைத்த நகைக்கடை உரிமையாளர், மதகுரு ஒருவருக்கு முன்னால் வைத்து அந்த நகையை நேற்றையதினம் கையளித்துள்ளார்.

நகையை தொலைத்த பெண்ணிடமே மீண்டும் நகையை வழங்கிய சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குறித்த நகைக்கடை உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

யாழில் மது போதையில் சேற்றில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு!!

யாழில் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் மது போதையில் சேற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கே.கே.எஸ். வீதி வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞரின் வீட்டார் மட்டக்களப்புக்கு சென்ற நிலையில் சகோதரன் ஒருவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை (17) வீட்டில் மது விருந்து நடைபெற்று முடிந்த நிலையில் வெளியில் சென்ற இளைஞர் சேற்றில் விழுந்து உயிரிழந்தார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார். இறப்பிற்கான காரணம் கண்டறிய உடற் கூற்று மாதிரிகள் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

காணாமல் போன நபரின் சடலம் கடற்கரையில் கண்டெடுப்பு!!

ஹிக்கடுவ கடற்கரையில் காணாமல் போனவரின் சடலம் வேவெல கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) ஹிக்கடுவ கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் குறித்த நபரின் சடலம் வேவெல கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், நோர்வே நாட்டைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

உயிரிழந்தவர் தனது சகோதரருடன் ஹிக்கடுவ கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தபோது, கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து : இளம் பெண் உயிரிழப்பு!!

அத்தனகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவல வீதியில், ஞாயிற்றுக்கிழமை (18) மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், கலபிடமட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் பெண் ஆவார்.

அத்தனகல்லவிலிருந்து அலவல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்து வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்தனகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை முழுவதும் நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை!!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மத்திய மாகாணத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

முடியால் பறிபோன இரண்டு உயிர்கள் : விசாரணையில் வைத்தியர்கள் கொடுத்த அதிர்ச்சி!!

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பல் வைத்தியர் ஒருவர் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர்கள் சவுரப் திரிபாதி- அனுஷ்கா திரிவேதி தம்பதியினர். இவர்கள் இருவரும் வைத்தியராக பணிப்புரிந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ராவத்பூரில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் முடிமாற்று அறுவை சிகிச்சையால் தனது கணவர் வினித் தூபே உயிரிழந்ததாக ஜெயா திரிபாதி என்பவர் முதலமைச்சர் சேவை மையத்தில் ஒன்லைன் வழியாக புகார் அளித்துள்ளார்.

புகாரில், “கடந்த மார்ச் 13ஆம் திகதி என் கணவர் முடிமாற்று சிகிச்சை செய்துகொண்டார். ஆனால், அடுத்த நாளே அவரது முகம் வீங்கி கடுமையான வலி ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் நிலைமையில் முன்னேற்றம் இல்லாமல், மறுநாளே உயிரிழந்தார்,” என கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு எதிராக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த தம்பதியின் மீது மீண்டும் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதில் குஷக்ரா கதியார் என்பவர் அளித்த புகாரில், “30 வயதான எனது சகோதரர் மயங்க், கடந்த ஆண்டு நவம்பரில் எம்பையர் கிளினிக்கில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

அதே நாளில் ஃபருக்காபாத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பிய அவர், சில மணி நேரத்திலேயே முக வீக்கம் மற்றும் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்,”என கூறியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த அனுஷ்கா திவாரி, பல் வைத்தியர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்த அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

மேலும் அனுஷ்கா தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் அனுஷ்கா நடத்திய வைத்தியசாலை அலுவகம் தற்காலிகமாக மூடப்பட்டு, அதன் பெயர்ப்பலகையும் அகற்றப்பட்டுவுள்ளது.

இந்நிலையில், அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வைத்திய விதிமீறல்கள் தொடர்பாகவும் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

19 வயது இளைஞனை பலியெடுத்த துப்பாக்கிச் சூடு : சிக்கிய விமானப்படை சிப்பாய்!!

கல்கிஸையில் இளைஞன் ஒருவரை துரத்திச் சென்று சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரியும், அவருடன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற நபர் மற்றும் அவருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் மேலும் இருவரை கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரிடமிருந்து இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, 9mm ரக தோட்டாக்கள் 15 மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

கொட்டாவ விகாரை மாவத்தையில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி விமானப்படையில் ஒன்றரை வருடம் கடமையாற்றிய விமானப்படை சிப்பாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்காக துப்பாக்கிதாரி வருகைதந்த மோட்டார் சைக்கிள், கொட்டாவ மாபுல்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்னால் பாகங்களாக பிரிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில், இரண்டு போலி எண் தகடுகளுடன் கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கொலைக்கு உடந்தையாக செயற்பட்ட இரண்டு நபர்கள் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ வலயத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிராஹ்மனகேயின் நேரடி மேற்பார்வையின் கீழ் கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்,

இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய நாட்டில் உள்ள அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5ம் திகதி இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் தெஹிவளை, ஓர்பன் பிளேஸைச் சேர்ந்த 19 வயதுடைய பிரவீன் நிசங்க என்ற இளைஞர் ஆவார். இவர் கல்கிஸ்ஸ நகர சபையில் துப்புரவுப் பணியாளராக செயற்பட்டு வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் சம்பவ தினத்தன்று கல்கிஸ்ஸயில் உள்ள சில்வெஸ்டர் வீதிப் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட இளைஞன் தற்போது சிறையில் உள்ள தெஹிவளை சத்துரி என்ற போதைப்பொருள் கடத்தல்காரியின் மகன் என்றும், அந்தப் பெண்ணின் மகளும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காருக்குள் சிக்கி உயிரிழந்த நான்கு சிறுவர்கள் : துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சிறுவர்கள் 8முதல் 6வயதிட்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

சிறுவர்கள் விளையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைத் தேடியுள்ளனர்.

இதன்போது நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் சிறுவர்கள் நான்கு பேரும் மயங்கி கிடப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கார் கண்ணாடியை உடைத்து சிறுவர்கள் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சிறுவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சரிந்து வரும் தங்கம் விலையால் மக்கள் மகிழ்ச்சி!!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 259,000 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 239,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 32,375 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 29,950 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவெளை கடந்த சில வாரங்களை ஒப்பிடும்போது தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இலங்கையில் கடந்த 3 வாரங்களில் தங்கத்தின் விலையானது இருபதாயிரம் ரூபாவை விட அதிகமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் சூறாவளி காற்று : முறிந்த மரங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

வவுனியாவில் இன்று வீசிய சூறாவளிக்காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இன்று (17.05.2025) காலை ஏழு மணியளவில் கடும் சூறாவளிக்காற்று வீசியதுடன், மழையும் பொழிந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்தடையும் ஏற்ப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நகரப் பகுதியில் இருந்த நடைபாதை விற்பனை நிலையங்கள் காற்றில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.

நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. குறிப்பாக மின்வடங்களுக்கு மேல் மரங்கள் வீழ்ந்தமையால் சில பகுதிகளில் மின்சார தடங்கல் ஏற்ப்பட்டுள்ளது.

தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தமிழரசுக்கட்சியால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (16.05.2025) மதியம் இடம்பெற்றது.

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுகளில், பொதுமக்கள் பலர் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்திப் பவனி!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று (16.05.2025) காலை வவுனியாவை வந்தடைந்தது.

யாழ்ப்பாணம் நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஆரம்பமான குறித்த ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை வந்தடைந்தது.

வவுனியாவில் நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து நகரவீதியூடாக தினச்சந்தையை அடைந்தது.

குறித்த ஊர்தி பவனியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

பல்கலை மாணவன் உயிரிழப்பு : 10 மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மாணவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 மாணவர்களும் இன்று (16.05) நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அழிவை நெருங்கியுள்ள பூமி : ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!!

பூமி அழிவது குறித்து ஜப்பானைச் சேர்ந்த டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். இதனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நாசாவின் கிரக மாடலை பயன்படுத்தி ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் முறையைச் சோதித்துள்ளனர்.

அதில், பூமியின் ஆக்சிஜன் சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளில் காலியாகிவிடும் எனத் தெரியவந்துள்ளது. அவ்வாறு ஆக்சிஜன் அனைத்தும் காலியானால் அதன் பிறகு உயிர்வாழ்வதே சாத்தியமற்றதாக மாறிவிடும்.

இது தொடர்பாக ஜப்பானின் டோக்கியோவில் உள்ள டோஹோ பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் கசுமி ஓசாகி கூறுகையில்,

“சூரியன் மற்றும் கார்பனேட்-சிலிகேட் சுழற்சி எப்படி இருக்கிறது என்பதை வைத்தே பல ஆண்டுகளாக பூமியின் எதிர்காலம் குறித்து விவாதித்து வருகிறோம்.

அதில் நாம் முக்கியமாகக் கவனிப்பது வளிமண்டலத்தில் உள்ள CO2 அளவு தொடர்ந்து குறைவதும்.. பூமி தொடர்ச்சியாக வெப்ப மயமாவதும் ஆகும்.

அதிக வெப்பம் காரணமாக ஒளிச்சேர்க்கை (photosynthesis) பாதிக்கப்படும். அதேபோல வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு குறையும்.

இதனால் பூமியின் பயோஸ்பியர் 2 பில்லியன் ஆண்டுகளில் முடிவுக்கு வரும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் பூமியில் உள்ள ஆக்சிஜன் அளவுகளும் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

பூமியில் ஆக்சிஜன் அளவுக்குக் குறையும்போதும் உயிர்கள் வாழ முடியும் என்ற போதும் அதில் தற்போதைய நிலையில் இருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, பூமி ஒரு பில்லியன் ஆண்டுகளில் அழியும் எனக் கணித்துள்ளனர்.

மர்மான முறையில் வீட்டின் முன் கிடந்த சடலம் : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

பசறை பொலிஸ் பிரிவின் தும்மலதென்ன பகுதியில், வீட்டின் முன் உள்ள தாழ்வான பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடப்பதாக நேற்று (15) இரவு பசறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் அம்பதென்ன, பசறை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் நீதவான் விசாரணைகளுக்காக சம்பவம் நடந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதோடு, இது கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.