வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதி!!​​

 
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (25.07.2017) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி இலுப்பையடிச் சந்தியில் இரு மோட்டர் சைக்கிள்கள் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.

சந்தை உள்வட்ட வீதியில் இருந்து ஹொரவப்பொத்தானை பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டர் சைக்கிளும், பசார் வீதியில் இருந்து வவுனியா வைத்தியசாலை நோக்கி ஹொரவப்பொத்தானை வீதி வழியாக சென்ற மோட்டா சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டர் சைக்கிள் ஒன்றின் சாரதியான பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

வவுனியாவிலுள்ள வடபகுதிக்கான எரிபொருள் விநியோக மையம் இராணுவக்கட்டுபாட்டில்!!

 
இன்று (26.07.2017) காலை இலங்கை பொற்றோலியக்கூட்டுத்தாபனம் அத்தியாவசிய தேவைக்கு உட்பட்டதாக வெளிவந்த வர்த்தகமானி அறிவித்தலையடுத்து இராணுவத்தினரிடம் இச் சேவை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவிற்கு அமைவாக நாட்டிலுள்ள சகல எரிபொருள் விநியோக நிலையங்களை இன்று முதல் இராணுவம் பொறுப்பேற்று விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதையடுத்து வவுனியாவிலுள்ள வடபகுதிக்கான பிரதான எரிபொருள் விநியோக நிலையத்தினை இன்று (26.07.2017) 26 காலை 8 மணியளவில் காலை படையினர் பொலிசாருடன் இணைந்து பொறுப்பேற்றுள்ளனர்.

இதையடுத்து தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோகம் இனி வழமைபோன்று இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று முதல் எரிபொருள் விநியோக நிலையங்களிலுள்ள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று படையினர் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ)

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஒன்பதாம் நாள் நாள் திருவிழாரதோற்சவ நிகழ்வு இன்று 25.07.2017காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

அதிகாலை ஐந்து மணிக்கு யாகபூசை கும்பபூசை மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை எட்டு மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் ஒன்பது நாற்பத்தைந்து மணியளவில் தேரில் ஆரோகணித்து சரியாக பத்து மணியளவில் ரதபவனி ஆரம்பமானது.

மீண்டும் பத்தரை மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது. மேற்படி ரதோற்சவதில் நூற்றுக்கணக்கான அம்பாள் பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா கோவில்குளம ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளின் முத்துசப்பர திருவிழா!!(படங்கள், வீடியோ)

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு  எட்டாம் நாள் திருவிழாவான  நேற்று முன்தினம் 24.07.2017  திங்கட்கிழமையன்று முத்துசப்பர நிகழ்வு நேற்று இடம் பெற்றது .

காலை பத்து மணிக்கு மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசை. தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் கைலாச வாகனத்தில் உள்வீதி வெளி வீதி எழுந்தருளி செய்தாள். மீண்டும் மாலை நாலரை மணிக்கு யாகபூசை கும்பபூசை மூலஸ்தான பூசையை தொடர்ந்து ஆறுமணியளவில் விசேட  தவில் நாதஸ்வர கச்சேரி நேற்றைய சப்பர நிகழ்வின் விசேட அம்சமாக இடம்பெற்றது.

தொடர்ந்து ஏழரை மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது. தொடர்ந்து மாலையில்ஒன்பது மணியளில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் அழகிய முத்து சப்பரத்தில் வீதிஉலா வந்தாள்.விசேடமாக வீதி உலா வந்த சமயம் ஆங்காங்கே வாண வேடிக்கை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

 

வவுனியா தோனிக்கல் ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர திருவிழா!!

வவுனியா தோனிக்கல் திருவருள்மிகு ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர திருவிழாவும் ஆடிச் செவ்வாய் பழமடையும் நாளை புதன்கிழமை (26.07.2017) காலை 08.30 மணியளவில் சக்தி ஹோமத்துடன் பூஜை ஆரம்பமாகி, அண்ணா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ அதிசய விநாயகப் பெருமாள் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு பால் அபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடைபெறும்.

மாலை 05 மணியளவில் ஸ்ரீ அதிசய விநாயகப் பெருமாள் ஆலயத்தில் இருந்து சீர்வரிசை எடுத்து வரப்பட்டு அம்பிகையின் ஆடிப்பூர விழா இனிதே நடைபெறும்.

இப் பூஜைகளில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.

வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள மயானத்திற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைப்பு!!

 
வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள ஈரட்டைபுளியங்குளம் மயானத்திற்கு அடையாளம் தெரியாத சிலரால் இன்று மதியம் தீ வைக்கப்பட்டுள்ளது.

மயானம் முழுவதும் தீ பரவியதை அவதானித்த ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து மயானத்தை நோக்கி விரைந்த நகரசபை தீயணைப்புப் பிரிவினர் தீயினை அருகில் இருந்த குடியிருப்பு பகுதி மற்றும் ஈரட்டை பெரியகுளம் பொலிஸ் நிலையம் உட்பட ஏ9 வீதிக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

அத்தோடு இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் தேசியக் கொடியை கழற்றி எறிந்த நபர் கைது!!

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (25.07.2017) மதியம் 2 மணியளவில் இனந்தெரியாத நபரொருவர் மாவட்ட செயலகத்தில் பறக்க விடப்பட்டிருந்த இலங்கையின் தேசிய கொடியினை கழற்றி கிழே வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியா மாவட்ட செயலகத்தின் சி.சி.ரி.வி காணொளியினை வைத்து குறித்த நபரின் வாகனத்தினையும் குறித்த நபரையும் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மனநல பாதிக்கப்பட்டவர் எவ்வாறு வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருப்பார்? மற்றும் எவ்வாறு வாகனம் செலுத்துவார்? என பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

வவுனியாவில் இராணுவ கோப்ரலை கொலைசெய்த இராணுவ  வீரருக்கு இரண்டு வருட கடூழிய சிறை!!

கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் இராணுவ கோப்ரலை கொலை செய்த குற்றச்சாட்டில் இராணுவ வீரர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் வழங்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் வைத்து இராணுவக் கோப்ரல் அம்பகஸ்பிட்டிய ஆராய்சிலாக நிரஞ்சன் குமார பண்டார என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக 2011 ஆம் ஆண்டு எதிரியான அதே இராணுவ முகாமைச் சேர்ந்த திசநாயக்க முதியன் திலாக தனுஸ்க பண்டார என்பவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் குறித்த இராணுவ வீரரான எதிரி இராணுவ கோப்ரல் அம்பகஸ் பிட்டிய ஆராய்சிலாக நிரஞ்சன் குமார பண்டார என்பவருக்கு மரணத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

2011 ஆம் ஆண்டு யூன் மாதம் 20 ஆம் திகதி வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் இராணுவ உத்தியோகத்தர்களுடைய ஆண்டுப் பூர்த்தி விழா (பற்றாலியன் பார்ட்டி) நடைபெற்றது.

அன்யை தினம் குறித்த முகாமில் பகல் இரவாக கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இரவு நேரம் உணவும் குடிவகைகளும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எதிரியும் இறந்த நபரும் சம்பவ தினம் மதுபோதையில் இருந்துள்ளனர்.

அன்றைய தினம் அதிகாலை 3.30 – 4 மணியளவில் இந்த எதிரிக்கும், இறந்த நபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்தர்க்கத்தின் காரணமாக எதிரி இறந்த நபரை தாக்கியதாகவும், இறந்த நபர் இந்த எதிரியைத் தாக்கியதாகவும் சாட்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடுனர் தரப்பு சார்பாக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வழக்கு தொடுனர் தரப்பால் பம்பைமடு இராணுவ முகாம் உத்தியோகத்தர்கள் சாட்சியம் வழங்கியதுடன், எதிரியும் சாட்சியமளித்திருந்தார். எதிரி தனது சாட்சியத்தில், மரணித்த இராணுவ கோப்ரல் தன்னை தாக்கியதாகவும், அதன்காரணமாக அவரது பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள திருப்பி தாக்கிவிட்டு ஓடிச் சென்றதாக சாட்சியமளித்திருந்தார்.

இதன் பின் குறித்த வழக்கு தீர்ப்புக்காக இம் மாதம் 17 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

அன்றைய தினம் தீர்ப்புக்காக வழக்கு ஆரம்பிக்கப்பட்ட போது நீதிபதி, இந்த எதிரிக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு இருந்தாலும், இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளை, இந்த எதிரியும் இறந்த நபரும் மது போதையில் இருந்ததாகவும், இந்த எதிரி ஏற்கனவே இறந்த நபரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கவில்லை என்பதையும் அவர்கள் இருவருக்கும் இடையில் பியர் சம்மந்தமாக ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த எதிரி இறந்த இராணுவ கோப்ரலை தாக்கியுள்ளார். இதனால் அவர் இறந்துள்ளார் என்பதனை சுட்டிக்காட்டி குற்றவாளியாக எதிரியை இனம் கண்டார்.

இன்யைதினம் (25.07) தண்டனைத் தீர்ப்புக்காக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த எதிரிக்கு எதிராக மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், ஒரு இலட்சம் ரூபாய் நஸ்டஈடும்  வழங்க வேண்டும் எனவும் அத்துடன் ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். குறித்த வழக்கினை அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தியிருந்தார்.

வவுனியா நீதிமன்றத்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்த்த முன்னாள் போராளிக்கு ஆயுள்தண்டனை!!

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பெண் ஒருவரை கடத்திச் சென்ற குற்றத்திற்காக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியும், தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுபவருமான க.கண்ணதாஸ் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு ஜனவரி காலப்பகுதியில் கிளிநொச்சியில் வைத்து விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கொண்டு சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் கணெய்சுந்தரம் கண்ணதாஸ் (வயது 50) என்ற முன்னாள் போராளிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் தந்தையால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த எதிரிக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் வியபாலன் மஞ்சுளா என்பவரை விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டுக்காக கடத்திய குற்றச்சாட்டுக்காக குற்றப் பகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

2016 மே மாதத்தில் இருந்து குறித்த எதிரிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.

வழக்கு விசாரணைகளின் போது கடத்தப்பட்ட விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணினுடைய தந்தை நாகரத்தினம் விஜயபாலன், தாய் விஜயபாலன் சாந்திமலர் சாட்சியமளித்திருந்தனர்.

இதன்போது தனது மகளை குறிப்பிட்ட எதிரி வீட்டில் இருந்து இழுத்துச் சென்றதாக சாட்சியமளித்தார். அத்துடன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களும் சாட்சியமளித்தனர். அதன் பின் எதிரி நீதிமன்றிலே சாட்சியமளித்திருந்தார்.

எதிரி சாட்சியமளிக்கும் போது தான் தற்போது யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றி வருவதாகவும், தான் ஏற்கனவே விசேட புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நபர் எனவும் தெரிவித்திருந்தார்.

எதிர்தரப்பு விவாதம் முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் தீர்ப்புக்காக இம் மாதம் 17 ஆம் திகதி வழக்கு நியமிக்கப்பட்டு அன்றைய தினம் வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்டு எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எதிரியை குற்றவாளி எனக் கண்டு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பு வழங்கியதோடு, தண்டனைத் தீர்ப்புக்காக இன்றைய தினம் (25.07) வழக்கு நியமிக்கப்பட்டு இருந்தது.

இந்த எதிரி ஏற்கனவே புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் எதிரிக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி இந்த எதிரிக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணைகளின் போது கடத்தப்பட்ட குறித்த பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளின் போது மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகளை அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன நெறிப்படுத்தியிருந்தார்.

வவுனியாவில் நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து கண்டனப்பேரணி!!

 
வவுனியாவில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (25.07.2017) காலை 10 மணியளவில் கண்டனப்பேரணி இடம்பெற்றது.

வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனை சந்தையின் முன்பாகவிருந்து ஆரம்பமான கண்டனப் பேரணியானது பசார் வீதி வழியாக வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியை வந்தடைந்து அங்கிருந்து A9 வீதிவழியாக வவுனியா மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் ஒன்றுகூடிய பொது அமைப்புக்கள் யாழ்ப்பாணம் நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து மரணமான பொலிஸ் சார்ஜன் சரத் கேமச்சந்திரவுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்கள்.

இப்பேரணியில் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், வரையறுக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா வர்த்தகசங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளிகள் அவதி!!

 
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது.​

இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

மாலபே தனியார் வைத்திய கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக கடந்த மாதம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது.

எனினும், இம்மாத ஆரம்பத்தில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்த போது நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளதால் பேராயர் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலர் பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய போராட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் கொழும்பில் கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை நாடு தழுவிய ரீதியில் முன்னேடுத்து வருகின்றனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் இன்று (25.07.2017) காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில்வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவைகள் முழுமையாக இயங்காமையினால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குளத்தில் திடிர் தீ விபத்து : வீடு முற்றாக எரிந்து நாசம்!!

 
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீடு ஒன்று எரிந்து நாசமாகியுள்ளதாக  செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம், அழகாபுரி கிராமத்தில் நேற்று(24.07.2017) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செட்டிகுளம், அழகாபுரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்த குடும்பத்தினர் தமது பிள்ளையான சிறுவன் ஒருவனை வீட்டில் நிறுத்திவிட்டு வெளியில் சென்ற சமயமே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ பரவியதையடுத்து சிறுவன் கூச்சலிட்டதுடன் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் தீயை அணைக்க முயன்றதுடன் பொலிசாருக்கும் தகவல் வழங்கினர்.

பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் வீடு முழுமையாக எரிந்து நாசமாகிய நிலையிலேயே தீ பரம்பல் கட்டுப்படுத்தப்பட்து.

வீட்டில் இருந்த சகல பொருட்களும் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இத் தீ விபத்துக்கு மின்னொழுக்கே காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

 
கூமாங்குளம் முதியோர் சங்கம் வவுனியாவில் மிகச்சிறப்பாக இயங்கிவரும் முதியோர் சங்கங்களில் ஒன்றாகும். இதன் செயற்பாடுகள் பாராட்டும்படி அமைந்துள்ளன.

அந்தவகையில் வடமாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் வவுனியா பிரதேச செயலகத்தினூடாக இவ்வருட மூலதன நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரூபா பத்து இலட்சத்தினை முதியோர் சங்கக்கட்டிடத்திற்கு ஒதுக்கி உதவியுள்ளார்.

வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா கட்டிடம் அமைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ள இவ்வேளை நேற்று (24.07.2017) கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சங்கத்தின் தலைவர் திரு முனுசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் விசேட விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் அடிக்கல் நாட்டும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் .

சங்கத்தின் செயலாளர் திரு.நாகையா பொருளாளர் திரு.ஸ்ரீதரன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ்.கே.வசந்தன், செல்வி கமலாம்பிகை மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.

6 பந்துகளில் 6 சிக்ஸர் : சாதனை படைத்த ரோஸ் வைட்லே!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ’2017 நாட்வெஸ்ட் டி20’ தொடர் போட்டியில் வொர்செஸ்டர்ஷைர் அணியை சேர்ந்த ரோஸ் வைட்லே ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ’2017 நாட்வெஸ்ட் டி20’ போட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வொர்செஸ்டர்ஷைர் அணியும் யார்க்க்ஷைர் அணியும் மோதின.

இதில் முதலில் விளையாடிய யார்க்க்ஷைர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியை சேர்ந்த டேவிட் வெல்லே 118 ஓட்டங்களை எடுத்தார்.

234 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய வொர்செஸ்டர்ஷைர் அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அந்த அணியை சேர்ந்த ரோஸ் வைட்லே என்பவர் 20 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 16ஆவது ஓவரை வீச வந்த கார்வரின் பந்தை எல்லா பக்கமும் சிதறடித்தார்.

அவர் வீசிய 6 பந்துகளிலும் 6 சிகஸர்களை அடித்து ரோஸ் வைட்லே சாதனை படைத்தார். 26 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் அவரின் வெறித்தனமான ஆட்டம் அணிக்கு கைக்கொடுக்கவில்லை. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பூமிக்கு அடியில் சீனாவின் சாதனை!!

சீனாவில் பூமிக்கு அடியில் 31 மாடியில் சுரங்க ரெயில் நிலையம் ஒன்றை அமைக்கும் பணியில் அங்குள்ள மெட்ரோ ரெயில் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.

சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் உள்ள மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் இந்த 31 மாடி கட்டிடம் அமைய உள்ளது. இது சுமார் 94 மீற்றர் ஆழம் வரை செல்லக் கூடியதாகும்.

சாலையில் இருந்து பூமிக்கு அடியில் ரெயில் நிலையம் செல்ல நகரும் படிக்கட்டு (எக்ஸ்லேட்டர்) அமைக்கப்படுகிறது. அதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு 3 நிமிடத்தில் செல்ல முடியும்.

இந்த திட்டத்தின் மூலம் உலகில் உள்ள மிக ஆழமான மெட்ரோ ரெயில்களில் இதுவும் ஒன்று என்ற பெருமையை இது பெறுகிறது.

தற்போது வடகொரியாவில் 110 மீற்றர் ஆழத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதுவே பூமிக்கு அடியில் உள்ள மிக ஆழமான மெட்ரோ நிலையம் என்ற பெருமையை தக்கவைத்து வருகின்றது.

ரெயில் போக்குவரத்தில் சீனா அதிவேகமாக முன்னேறி வருகிறது. புல்லட் ரெயில், சுரங்க பாதை ரெயில், பறக்கும் ரெயில் என சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கு சென்றால் உயிரோடு திரும்பமாட்டார்கள் : திகிலூட்டும் கிராமம்!!

 
பாறைகளுக்கு அமைந்து பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் டர்காவ்ஸ் கிராமத்திற்கு சென்றால் மக்கள் உயிருடன் திரும்பவே முடியாது என்ற கருத்து நிலவுகிறது.

ரஷ்யாவின் வடக்கு ஒசட்டியாவின் ஒதுக்குப்புறமாக டர்காவ்ஸ் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் 5 மலைகள் அமைந்துள்ள இடத்தில் உள்ளது, ஏராளமான குன்றுகள் இங்கே உள்ளது.

இந்த கிராமம் மிக அழகாக இருந்தாலும், யாரும் இங்கு செல்ல விரும்பவதில்லை, ஏனெனில் இந்த கிராமத்திற்கு செல்பவர்கள் யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்களாம்.

இறந்தவர்கள் மட்டும் வாழும் கிராமமாக இது கருதப்படுகிறது. இதற்கு Dead Village என்று பெயர்.

இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் பல மாடிகளை கொண்டுள்ளன. இவற்றின் ஒவ்வொரு தளத்திலும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமத்தில் சுமார் 99 கட்டிடங்கள் உள்ளன, இங்கு இறந்த உடல்களை புதைக்கும் பழக்கம் 16 ஆம் நூற்றாண்டு முதல் இருக்கிறது.

இங்கு செல்லாததற்கு மற்றுமொரு முக்கிய காரணம், இங்கு நிலவும் கடுமையான வானிலையாகும்.

மேலும், மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது, 19 ஆம் நூற்றாண்டில் இந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

அந்த நோயின் தீவிரம் குறையும் இவர்கள் வேறு எங்கும் செல்லவில்லை. இவர்கள் இறந்தபின்னர் கூட அவர்களது வீட்டிலேயே புதைக்கப்பட்டனர்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் , இறந்த உடல்கள் ஒரு படகு வடிவத்தில் இருந்த ஒரு மர பெட்டியில், புதைக்கப்பட்டிருந்தது என்று கூறுகிறார்கள்.

இந்த படகுகள் கடந்த காலத்தின் நம்பிக்கையாக இருந்தன, ஆன்மா சொர்க்கத்தை அடைவதற்கு இது உதவியதால், அவர்கள் ஒரு படகு வடிவ பெட்டியில் புதைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த கிராமத்தில் உள்ள கிணற்றில் நாணயங்கள் வீசப்பட்டுள்ளன, அதாவது இறந்தவர்கள் புதைக்கப்பட்ட பிறகு இந்த கிணற்றில் நாணயங்களை வீசுகையில், ஒரு நாணயத்தின் அடிப்பகுதி மற்றொன்று மோதினால் இறந்தவர்களின் ஆத்மா பரலோகத்தை அடைந்துவிட்டது என்பது இவர்களது நம்பிக்கை.