அமெரிக்கா மீது வடகொரியா தாக்குதல் நடத்தக்கூடும் : இராணுவ கூட்டுத் தலைவர் எச்சரிக்கை!!

அமெரிக்கா மீது வடகொரியா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அமெரிக்க இராணுவக் கூட்டுத் தலைவர்களின் தலைவர் ஜோசப் டன்போர்ட் கூறியுள்ளார்.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மேற்கொண்ட ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததைத் தொடந்து மீண்டும் ஒரு ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அமெரிக்க இராணுவக் கூட்டுத் தலைவர்களின் தலைவர் ஜோசப் டன்போர்ட் கோலரடோவில் நடைபெற்ற பாதுகாப்பு மன்றத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசுகையில், வடகொரியா ஏவுகணை திட்டங்களுடன் பின்னிப் பிணைந்த நாடு.

தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா மீது வடகொரியா ஏவுகணை தாக்குதலை நடத்தக் கூடும். அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வடகொரியாவின் ஏவுகணைகள் எந்த கோணத்திலும் அமெரிக்காவை தாக்கும் வல்லமையுடன் இருக்கலாம் எனவும் ஜோசப் டன்போர்ட் கூறியுள்ளார்.

தங்கையை கொன்று நேரலை செய்த சகோதரி!!

அமெரிக்காவில் தங்கையை கார் மோதி கொலை செய்து சகோதரி, அதை நேரலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் பனோஸ் பகுதியில் குறித்த கொடூர செயல் நடந்துள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட அப்துலியா சான்செஸ்(18) தமது தங்கை இறந்துவிட்டார், இதுவே எங்களுக்குள் ஏற்படும் கடைசி நிகழ்வாக இருக்கும் என ஆசைப்பட்டேன், ஆனால் அது இப்போதே நடந்துவிட்டது என இன்ஸ்டாகிராம் நேரலையில் கத்திப் பேசியுள்ளார்.

உயிரிழந்த ஜாக்குலின் சான்சேஸ்(14) சம்பவத்தின்போது அந்த வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து வந்துள்ளார்.

ஆனால் அப்துலியா போதை மருந்து பயன்படுத்தியிருந்ததால் வாகனத்தை மிக வேகமாகவும் கண்மூடித்தனமாகவும் செலுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் உரிய பாதுகாப்பு இன்றி அமர்ந்திருந்த ஜாக்குலின் வாகனத்தில் இருந்து வெளியே வீசப்பட்டுள்ளார். ஆனால் இது தெரியாத அவரின் சகோதரி பலமுறை வாகனத்தை அவரின் மீது மோதவிட்டுள்ளார்.

இதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை நேரலை செய்துள்ள அப்துலியா, கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை என்றும், ஆனாலும் நிம்மதியாக தூங்கு என இறுதியாக தெரிவித்துள்ளார்.

ஜாக்குலினுடன் அந்த வாகனத்தில் பயணித்த இன்னொரு இளைஞரும் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் அப்துலியாவை கைது செய்துள்ள பொலிசார் சிறையில் அடைத்துள்ளன

74 வயதுப் பெண்ணின் கணவனான கன்றுக்குட்டி!!

 
கம்போடியாவை சேர்ந்த 74 வயது பெண்மணி ஒருவர் கன்றுக்குட்டியை தனது கணவராக பாவித்து மரியாதை செலுத்தி வருகிறார்.

கம்போடியாவை சேர்ந்தவர் கிம் ஹாங், இவரது கணவர் டோல் குட் ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சோகமாக இருந்த கிம் ஹாங் சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார்.

அப்போது, உங்கள் வீட்டில் உள்ள மாடு கன்று போடும், உன் கணவனே கன்றுக்குட்டியாக பிறப்பார் என கூறியுள்ளார்.
இதன்படி கடந்த மார்ச் மாதம் கன்று ஈன்றது, இதை தன் கணவனாக பாவித்து பணிவிடைகளை செய்து வருகிறாராம் கிம் ஹாங்.

அவர் கூறுகையில், நான் இப்போது தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், கன்றுக்குட்டியாக என் கணவர் மறுபிறவி எடுத்திருப்பதை முழுமையாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதற்காக தன் வீட்டை பெரிதாக்கியதுடன், ஸ்பெஷல் படுக்கை அறை ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளாராம்.

இவர் மட்டுமல்லாது இவரது குழந்தைகள், பேரன் பேத்திகள் மற்றும் உறவினர்களும் கன்றுக்குட்டியுடன் அன்பாக பழகுகிறார்களாம்.

 

வவுனியா தனியார் பேரூந்து நடத்துனர் ரயிலில் மோதி உடல் சிதறி பலி!!

 
மாங்குளம், குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று (24.07.2017) இரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்தில் மோதுண்டு வவுனியாவைச் சேர்ந்த தனியார் பேருந்து சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மாங்குளம் பகுதியிலுள்ள குஞ்சுக்குளத்தில் தனது உறவினரின் வீட்டிற்குச் சென்ற தனியார் பேருந்து சாரதியான மரியசெல்வன் மயூரன் (32 வயது) வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு மாங்குளம், குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள உறவினரின் வீட்டிற்கு பின்புறமாக இருக்கும் புகையிரதப்பாதையில் காற்றோட்டத்திற்காக இருந்துள்ளார். இரவு 9.15 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த புகையிரதத்தில் மோதி சம்பவ இடத்திலே உடல் சிதறி உயிரிழந்துள்ளதாகவும் எனினும் புகையிரத சாரதி புகையிரத்தினை நிறுத்தாது சென்றுள்ளதாகவும் பின்னர் கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சிதறிய உடல் பாகங்களை மீட்டு சடலத்தினை எடுத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று தனியார் பேருந்து சாரதிகள் வடமாகாணத்தில் பணிப்பறக்கணிப்பு மேற்கொண்டுள்ளனர் இதன்போதே குறித்த சாரதி உறவினரின் வீட்டிற்கு நேற்று மாலை சென்றுள்ளார். இதன்போதே புகையிரதம் மோதி உயிரிழந்தள்ளார்.

பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சப்பாத்தி வட்டமாக இல்லை : கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்!!

இந்தியாவில் நபர் ஒருவர் சப்பாத்தி வட்டமாக இல்லாததால் கர்ப்பிணி மனைவியை கழுத்து நெறித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜஹாங்கிரிபுரி பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. 22 வயதான சிம்ரன் என்ற கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் நான்கு வயது குழந்தையுடன் ஜஹாங்கிரிபுரி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு உணவு அருந்தும் போது சப்பாத்தி ஏன் வட்டமாக இல்லை என கணவர் பிரச்சனை எழுப்பியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற கோபமடைந்த கணவர் சிம்ரன் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.

உடனே நான்கு வயது மகள் அம்மாவை காப்பாற்ற முயன்ற போது, குழந்தையை இழுத்துச்சென்று ஒரு அறைக்குள் அடைத்துள்ளார். பின்னர், சிம்ரனின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு சம்பவயிடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

வீட்டில் சிம்ரன் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சகோதரர் உடனே பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, சிம்ரனின் நான்கு வயது குழந்தை நடந்த சம்பவத்தை பொலிசாரிடம் விளக்கியுள்ளார். தற்போது, தலைமறைவான சிம்ரனின் கணவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வியாபாரத்தில் தோல்வியடைந்த சிம்ரனின் கணவர், தற்போது, தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தற்கொலை முயற்சி!!

தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தான் வசிக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பல ஆண்டுகளுக்கு முன் மனு அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இவர் மாதந்தோறும் அது தொடர்பாக மனு அளித்துள்ளார். ஆனால் வீட்டு பட்டா வழங்கப்படவில்லை.

இதனால் மனமுடைந்த சரவணன், மனைவி, குழந்தைகள், தாய், தந்தை உள்ளிட்ட 13 பேருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

தங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் தற்கொலை செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொண்டனர்.

அதன் பின் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 13 பேரையும் பொலிசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

டெஸ்ட் டியூப் பிரசவம் : தாய், சேய் பலியான பரிதாபம்!!

தமிழகத்தில் டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமாகியும் தாயும், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை முத்தரையர்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை.

குழந்தை உருவாவதற்கான வாய்ப்பும் இல்லாமல் இருந்தது, இதனால் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர். இதன்படி திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திவ்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் உருவானது, இதனை தொடர்ந்து புதுவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திவ்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திவ்யாவுக்கு பிரசவ வலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதித்தனர், அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில் திவ்யாவும், இரட்டை குழந்தைகளும் இறந்து போயின.

அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது திவ்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதே இறப்புக்கான காரணம் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது.

ஆனால் தவறான சிகிச்சை அளித்ததே காரணம் எனக்கூறி திவ்யாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுதொடர்பாக லாஸ்பேட்டை பொலிஸ் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி இளஞ்செழியனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!

துணிச்சல் மிகு நீதிபதி என்னும் பெயரை சம்பாதித்துக் கொண்டவர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். செம்மணிப் படுகொலை வழக்கு அவரின் துணிச்சலான செயற்பாட்டை புடம்போட்டுக் காட்டியிருந்தது.

வடக்கில் வன்முறைச் சம்பவங்களும், அடிதடிகளும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்க, அவற்றை தன்னுடைய அதிரடி தீர்ப்புக்களாலும், உத்தரவுகளாலும் தடுத்து நிறுத்தவும், மக்களின் நம்பிக்கைக்கும் வழி வகுத்திருந்தார்.

இன்று அவரை இலக்கு வைப்பதற்கும் அவை தான் காரணமாக இருக்கின்றன.

செம்மணியில் யாரால் படுகொலை நடத்தப்பட்டதோ அவர்களைக் கொண்டே அதனை தோண்டுவதற்கும் நடவடிக்கை எடுத்த போது தமிழ் மக்களின் மனங்களில் அவர் நம்பிக்கையை விதைத்திருந்தார்.

அன்றே எதிரிகள் அவரை இலக்கு வைக்கத் தொடங்கி விட்டனர். ஒரு வகையில் சொன்னால், நம்பிக்கை ஒளிக்கீற்றாக தமிழினத்திற்கு தென்பட்டார் என்றால் மிகையாகாது.

அப்படிப்பட்ட ஒரு நீதிபதியை இன்று தென்னிலங்கையும் மெச்சி உச்சி குளிர்கின்றதெனில், அவரிடம் ஏதோவொன்று இருக்கின்றது என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

மேல்.நீதிமன்ற நீதிபதியாக மாத்திரமல்ல, அவர் நல்ல மனிதராக, தமிழனாக, மனிதாபிமானம் மிக்கவராக, நேர்மையானவராக இருந்திருக்கிறார்.

இவை யாவற்றுக்கும் மேலாக அவரின் துணிச்சல் தான் இன்று அவரை அனைவரும் வியந்து பார்க்குமளவிற்கு மாற்றியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை அவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அன்றைய தினம் அவரின் மெய்ப்பாதுகாவலர் தன் கடமையைத் தான் செய்திருக்கிறார்.

தனக்கு கொடுக்கப்பட்ட கடமை, நீதிபதியின் உயிரைக் காப்பாற்றுவது, அதனை என் உயிர் இருக்கும் வரை செய்வேன் என்பதை நிச்சையம் அந்த சார்ஜன்ட் உறுதி மொழி எடுத்திருப்பார். அதனை செயலில் காட்டி விண்ணுலகம் சென்றும் விட்டார். கடமையை காத்தார்.

ஆனால், தன்னுடைய பாதுகாவலின் மீதான நீதிபதியின் உருக்கம், மனிதாபிமானம், அன்பு என்பது எப்படிப்பட்டது என்பதை இளஞ்செழியன் அவர்களின் கண்ணீர் துளிகள் சாட்சியாகி நிற்கின்றன.

கடந்த சனிக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இரண்டு பாதுகாவலர்களையும் தனது காரில் போட்டுக் கொண்டு, பதற்றமான நிலையிலும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் அவர்.

நிதானமான செயற்பாட்டின் அவரின் இந்த செயல்களை இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பதற்றம் என்பது பொதுவானது தான், ஆனால் அந்தப் பதற்றம் மற்றவர்களின் உயிர் போகும் வரை இருக்கக் கூடாது.

இன்று தென்னிலங்கை ஏன் அவரை நினைத்து பெருமைப்படுகிறது? சிங்கள ஊடகங்கள் எதற்காக இளஞ்செழியன் என்னும் தமிழ் நீதிபதியை உச்சத்தில் வைத்து எழுதுகின்றன?

அதற்கான பதில், தான் அவரின் கண்ணீரும், காலில் மண்டியிட்டு உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினரிடம் அவர் உருகிய தருணமும்.

இதை வேறு எவரும் செய்திருக்க மாட்டார்கள். ஆனால், நீதிபதி இளஞ்செழியன் தன்னுடைய பதவி நிலை, அதிகாரம், அந்தஸ்து என்று எதனையும் அந்த நொடிப் பொழுதில் அவர் கருத்தில் கொண்டிருக்கவில்லை.

சாதாரண ஒரு மனிதனாக, என்னைப் பாதுகாக்க வந்த மெய்ப்பாதுகாவலனாகிய உங்கள் குடும்பத்தின் பாதுகாவலனை இழந்து நிற்கிறீர்களே. என்ன செய்வேன். பலருக்கு தீர்ப்பளித்த நான், உங்கள் குடும்பத்தின் தலைவனை திருப்பித் தரமுடியவில்லையே என்னும் அவரின் ஏக்கமும், கூடவே 18 ஆண்டுகள் அன்பாய் இருந்தவரை பறிகொடுத்த துன்பமும் அவரை நிச்சயம் வாட்டியிருக்கும்.

இதை இன்றைய தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டும். இதனால் தான் தென்னிலங்கை சமூகமும் அவரை நினைத்து கொண்டாடி வருகிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இதுவொருபுறமிருக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களுக்கும் இதேபோன்றே தென்னிலங்கையில் பெரும் வரவேற்பு இருந்தது.

தென்னிலங்கை மக்களிடத்தே அவர் கொண்டிருந்த நெருக்கமும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தென்னிலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் நினைத்ததும் அவருக்கு தென்னிலங்கையில் ஒருவகை மரியாதை இருந்தது.

இன்று அதே மரியாதை அடுத்து கிடைக்கின்றதெனில், அது யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்கு தான். தென்னிலங்கையும் இன்று கொண்டாடும் மனிதராக, போற்றும் ஒருவராக இருக்கிறார்.

இனம், மதம், மொழி கடந்து அவரை நேசிக்கிறார்கள். இந்த நேசிப்பானது அனைத்து இனத்தவர்களிடத்திலும் வரவேண்டும். அதேபோன்று, இளஞ்செழியன் அவர்களிடத்தில் இருந்து நாம் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அது துணிச்சலாக இருந்தாலும் சரி, மனிதாபிமானச் செயலாகவிருந்தாலும், அல்லது அளவு கடந்த அன்பாகவும், கடமையாகவும் எல்லாவற்றையும் அவரிடத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

வல்லுறவு புரிந்த குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை : 17 வருடங்களின் பின் தீர்ப்பு!!

பெண்ணொருவரை வல்லுறவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின்கீழ் வழக்குதொடரப்பட்டிருந்த இருவருக்கு கம்பஹா மேல் நீதிமன்ற நீதியரசர் பிரியந்தபெர்னாண்டோ தலா இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நேற்றுதீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருவரும் ஐந்து லட்சம் ரூபாவை நட்டஈடாகசெலுத்தவேண்டுமெனவும், அவ்வாறு செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டுசிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

2002 செப்டெம்பர் 2ம் திகதி லலித் பிரேமகுமார (வயது 47), இந்திக்க சம்பத்(வயது 37) ஆகிய இவர்கள் இருவரும் 49 வயதான பெண்ணொருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் பலவந்தமாகக் கடத்திச் சென்று வல்லுறவு செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது

வித்தியா கொலை வழக்கில் சிக்கிய முக்கியமான தடயம்!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடி ஆறாம் இலக்க சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துசாந்தனின் வீட்டில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு தீர்ப்பாய விசாரணை அடுத்த மாதம் 2ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிறேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ் மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்றது

விசேட வழக்கு தொடுநரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமாரரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியிருந்தனர்.

இந்த கொலை வழக்கின் சந்தேகநபர்களை விசாரணை செய்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா 35வது சாட்சியாளராக நேற்று சாட்சியமளித்துள்ளார்.

வித்தியாவின் கண்ணாடியை வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக ஆறாம் இலக்க சந்தேகநபர் துசாந்தன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்ததாக அவரது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் வழிகாட்டலில் அவருடன் புங்குடுதீவிலுள்ள வீட்டுக்கு சென்றதாகவும் தீயில் எரிந்த நிலையில் காணப்பட்ட அந்த வீட்டில் யாரும் இருக்கவில்லை எனவும் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா கூறியுள்ளார்.

குறித்த வீட்டின் 11 அடி உயர கொங்கிரீட் பீமில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை இதன்போது கைப்பற்றியதாக சாட்சியாளர் கூறியுள்ளார்.

பெண்கள் அணியும் நீள காற்சட்டையினால் சுற்றி பொலித்தீன் பைக்குள் இடப்பட்ட நிலையில் மாணவியின் மூக்குக் கண்ணாடி மீட்கப்பட்டதாகவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

கண்ணாடி மீட்கப்பட்ட போது இருந்த நீள காற்சட்டை மற்றும் பொலித்தீன் பையை, 157 இலக்கம் ஒன்று குற்றவியல் கோவையின்கீழ் புதிய சான்றுப் பொருட்களாக இணைக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமாரரட்ணம் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்த விண்ணப்பத்திற்கு எதிர் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன, கடும் ஆட்சேபனை தெரிவித்த போதிலும், நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதனை நிராகரித்துள்ளார்.

167 இலக்கம் ஒன்று நடவடிக்கையின் பிரகாரம் தீர்ப்பு பிரகடனம் செய்வதற்கு முன்னதாக எந்தவொரு சான்றுப் பொருளையும் மன்றுக்கு இணைக்க முடியும் என நீதிபதி இளஞ்செழியன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பிரகாரம் நீளக் காற்சட்டை மற்றும் பொலித்தீன் பை என்பன திறந்த மன்றில் காண்பிக்கப்பட்டதுடன் சாட்சியாளர் அவற்றை அடையாளம் காண்பித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது காணப்படும் சூழலையும் நேரத்தையும் காலத்தையும் கருத்திற்கொண்டு இந்த சாட்சியம் முடிவுறுத்தப்படுவதாக நேற்று மாலை 4.45ற்கு நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய 26ம் திகதி நடைபெறவிருந்த வழக்கு விசாரணை நடைபெறாது எனவும் வழக்கு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

 

வெளிநாட்டில் இலங்கை இளைஞனின் மோசமான செயற்பாடு : சிறுமியால் கொழும்பில் சிக்கினார்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 24 வயதான இளைஞர் ஒருவரை மேலதிக நீதவான் அசங்கா ஹெட்டிவல பிணையில் விடுதலை செய்துள்ளார்.

15 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 1 மில்லியன் ரூபா தனிப்பட்ட பிணையிலும் குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பூர்வீகத்தை கொண்ட 15 வயதுடைய அவுஸ்திரேலிய சிறுமியை, அந்நாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் கடவுச்சீட்டு விசாரணைக்காக நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அயேஷ கௌஷல்ய டி சில்வா என்ற 24 வயதுடைய குறித்த இளைஞர் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் கற்று வந்த நிலையில், 15 வயதான பாதிக்கப்பட்ட சிறுமியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சந்தேக நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி 2017ம் ஆண்டு ஜுன் மாதம் 15ம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தான் விடுமுறைக்கு இலங்கைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாகவும், அதன்போது தான் 15 வயதில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டவுடன் சந்தேகநபர் உடனடியாக இலங்கைக்கு பயணித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிலும் அவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சிறுமி மற்றும் சந்தேகநபரான இளைஞனின் குடும்பங்கள் நெருக்கமான உறவினை பேணி வந்துள்ளதாகவும், 20 மில்லியன் ரூபா பண உதவி கோரிய போது, அதனை வழங்க முடியாமல் போயுள்ளது.

இதற்கு பழிவாங்கும் நோக்கில் குறித்த சிறுமியால் தனது காதலனுக்கு எதிராக தவறான முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 25ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த இரண்டு நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரிப்பு!!

குழந்தைப் பேறுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

சமோதனி ரனிதிக்கா பெர்னாண்டோ தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 22 ஆம் திகதி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதிலும் பதிவான டெங்கு நோயாளர்களி எண்ணிக்கை 1400 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி நாட்டில் மொத்தமாக 103000 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதுடன், டெங்குவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.

பெற்றோலிய தொழிற்சங்கங்கள், அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!!

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் சில நேற்று (24) நள்ளிரவு முதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணறுகளை குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவதற்கு எதிராக இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோதிலும், தங்களின் கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான உடன்படிக்கை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது கூறினார்.

இந்த உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவையில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், பெற்றோலிய தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை அறிவித்ததைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களின் நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிந்தது.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக மக்கள் கூட்டம் காணப்பட்டதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று (25) காலை முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தயாராகின்றது.

இன்று காலை 8 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த நேற்று (24) அறிவித்தார்.

மருத்துவ பீட மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளரான ரயன் ஜயலத்தைக் கைதுசெய்ய முற்பட்டபோது ஏற்பட்டிருந்த நிலைமை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், மருத்துவ பீட மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளரை கைதுசெய்ய முற்பட்ட சந்தர்ப்பத்தில், தமது கடமைகளுக்கு சிலர் இடையூறு விளைவித்ததாக, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று அறிவிருத்திருந்தனர்.

இதேவேளை, வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் பல அதிருப்தி தெரிவித்துள்ளன.

தமக்குப் பொருத்தமற்ற விடயங்களுக்காக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது தவறான செயலாகும் என தரப்படுத்தப்பட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நிரோஷன பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்ற நிலையில், கடந்த முறை தொடர் பணிப்பகிஷ்கரிப்பை அறிவித்தபோதிலும் அது வெற்றியளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முழு நாட்டிலும் கேலிக்கைக்குரிய ஒரு சங்கமாக மாறியுள்ளதாக தரப்படுத்தப்பட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கூறினார்.

அரசாங்கத்தைக் கவிழச்செய்வதன் ஊடாக அடுத்து வரும் அரசாங்கத்தில் தங்களில் ஒருவருக்கு சுகாதார அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நப்பாசையில் இத்தகைய அடிப்படையற்ற பணிப்பகிஷ்கரிப்புக்களை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்றது என அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மக்களை பாரிய சிரமத்திற்குள் தள்ளிடும் வகையில் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பை எந்தவிதத்திலும் அங்கீகரிக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக சுகாதாரத் துறையிலுள்ள எந்தவொரு தொழிற்சங்கமும் ஆதரவளிக்கவில்லை என அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, அரசியல் நோக்கங்களை இலக்காக்கொண்டு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முற்படுவதாக சுகாதாரத் துறையின் தொழில்சார் புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ், கூறியுள்ளார்.

மேலும், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் ஒரு தொழிற்சங்க நடவடிக்கையாகவே அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு அமைந்துள்ளதாக ரயில்வே ஊழியர் தொழிற்சங்க கூட்டப்பின் செயலாளர் சம்பத் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு பாரிய அழுத்தம் விடுக்கப்படும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்ற ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் அதிரடியாக சுற்றிவளைப்பு!!

மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நடவடிக்கை அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமினின் உத்தரவிற்கமைய எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலை தீவு சபாநாயகர் அப்துல்லா மஸிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை, மாலைதீவில் ஜனாதிபதி ஆட்சி இடம்பெறுகின்ற நிலையில், சபாநாயகருக்கொதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையே குறித்த முற்றுகைக்கு காரணம் என தொிவிக்கப்படுகின்றது.

தாக்குதல்தாரி தப்பிக்க முயற்சி : நடுக்கடலில் மடக்கிப் பிடித்த பொலிஸார்!!

முல்லைத்தீவு – முகத்துவாரம், கொக்கிளாய் பகுதியில் இளைஞரொருவர் மீது கத்தி குத்துத் தாக்குதலை மேற்கொண்டதாக சொல்லப்படும் சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை கொக்கிளாய் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இளைஞரொருவர் மீது மற்றொரு நபர் கத்தி வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபர் கடல் வழியாக தப்பிச் செல்ல முயற்சித்த வேளை பொலிஸார் மற்றுமொரு படகில் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த கத்தி வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய 25 வயதான இளைஞர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

திருகோணமலையில் கடும் வரட்சி 27646 குடும்பங்கள் பாதிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியான காலநிலை, காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த வறட்சியான காலநிலை தொடர்ந்தும் நிலவி வருகின்றன.

11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 96 கிராம சேவையாளர் பிரிவுகளில் 27,646 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், தோப்பூர், தம்பலகமம், ஈச்சலம்பற்று, வெருகல் புல்மோட்டை, கோமரங்கடவல, மொறவௌ முதலான பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நடுவூற்று, சூரங்கல், சுங்கான்குழி, மணியரசங்குளம், ஆயிலியடி முதலான கிராமங்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நடுவூற்றுக்குளம், மணியரசங்குளம், பட்டியனூர்க்குளம் முற்றாக நீரின்றிக் காணப்படுகின்றது. மீன்கள் இறந்தும் காணப்படுகின்றன. நன்னீர் மீன் பிடிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளனர்.

இந்த கிராமங்களில் வேளாண்மைப் பயிர்சசெய்கை வறட்சியினால் கருகிக் காணப்படுகின்றது.வயல் நிலங்கள் வெடித்துக் காணப்படுகின்றன. அத்துடன் வேளாண்மை.தண்ணீர் இல்லாமல் அழிவடைந்து காணப்படுகின்றது.

இதேவேளை வீட்டுத் தோட்டப்பயிர்கள் கருகி அழிவடைந்து காணப்படுகின்றன. கால் நடைகள் தண்ணீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றன.குளங்களில் நீர் மட்டம் குறைந்து காணப்படுகின்றது.

கிணறுகளில் நீரைப் பெறுவது மிகக் கடினமாகவுள்ளது. இதனால் இந்த பிரதேசத்திலுள்ளவர்கள் குடி நீரைப் பெறுவதிலும் மக்கள் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அத்துடன் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்ட்டுள்ளனர்.