வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலை ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை பாடசாலை முடிந்து தனது விடுதிக்கு சென்றுகொண்டிருந்த முதலியார் குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர் சில இளைஞர்களால் தாக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த செட்டிகுளம் பொலிசார் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு இளைஞர்களை கைது செய்து நேற்றைய தினம் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா நீதிமன்றம் அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் அடையாள அணிவகுப்பும் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.
வவுனியாவில் இன்று (20.07.2017)0 அதிகாலை 1 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவரை தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணத்தினை திருடிச்சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா புகையிரதத்திற்கு முன்பாகவுள்ள மதுபான விருந்தினர் விடுதியிலிருந்து மது அருந்திவிட்டு வந்த சில இளைஞர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் புகையிரத நிலையத்திற்கு முன்பாக வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த குருமன்காட்டில் வசித்துவரும் 30 வயதுடைய குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு அவரிடத்திலிருந்த 62100 ரூபா பணத்தினைத் திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து காயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புகையிரதக்கடவை காப்பாளர்களின் தொழில் உரிமைகள் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று (19.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜெ.றொகான் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..
கடந்த மூன்று வருடங்களாக நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளத்திற்கு பணியாற்றி வருவதாகவும் அதன் காரணமாக புகையிரதக்கடவை பாதுகாப்பு ஊழியர்களின் தொழில் உரிமைகள் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதுடன் புகையிரதக்கடவை பாதுகாப்பு ஊழியர்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வேண்டுகோளுக்கு அமைவாக புகையிரதத்திணைக்களகத்திற்குள் உள்வாங்கப்ட இருப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் புறக்கணிக்கப்படாமல் புகையிரதக் கடவை காப்பாளர்களாக பணியாற்றிய அனைவரும் புகையிரத திணைக்களகத்திற்குள் உள்வாங்கப்படவேண்டும். அவர்கள் புறக்கணிக்கப்பட்டால் எமது ஊழியர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவிதமான உதவித்திட்டங்களும் புகையிரதக்கடவை ஊழியர்களுக்கு கிடைப்பதில்லை என குற்றஞ்சாட்டினார்.
அதே போன்று நாடளாவிய ரீதியில் சமூர்த்தி பயனாளிகள் மீளாய்வு செய்யப்பட்டுவரும் நிலையில் எமது புகையிரதக்கடவை பாதுகாப்பு ஊழியர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள் என சுட்டிக்காட்டினார்.
நாங்கள் எங்களது உயிர்களை பணயம் வைத்தே பணியாற்றி வருகிறோம் ஆகவே அரச அதிகாரிகள் புகையிரதக்கடவை பாதுகாப்பு ஊழியர்களின் விடயத்தில் கரிசனை கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
வீடியோ பதிவுகளுக்காக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களும் (ட்ரோன்கள்) அதனை பயன்படுத்துவோரும் தங்களை பதிவு செய்து கொள்ளும் வகையில் நாடாளுமன்றில் புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
சிவில் விமான சேவை அதிகார சபையில் பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்படும் வகையில் சட்டங்கள் இயற்றப்படவுள்ளன.
தற்போது இந்த ஆளில்லா விமானங்கள் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகின்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவை அதிகார சபையின் அனுமதி மட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சு தொடர்பான பகுதியின் கலாச்சார, தொல்பொருள், வடிகாலமைப்பு, சக்திவள அதிகார சபைகளினதும் பொலிஸ் நிலையத்தினதும் அனுமதி பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதனால் விமான விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் பொழுது போக்கு அல்லது கல்வி நோக்கத்திற்காக 200 கிராமிற்கு குறைந்த எடையுடைய 150 அடி உயரம் வரையில் செல்லக்கூடிய சிறிய ரக ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு மேற்குறிப்பிட்ட அனுமதி அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சில நபர்கள் ட்ரோன்களை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட அந்தரங்க விடயங்களை வீடியோ பதிவிட்டுக் கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியா-இலங்கை மோதிய 2011 உலக கிண்ண இறுதிப்போட்டில் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த தயார் என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை தோல்வி குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்த நிலையில் 2011ம் ஆண்டில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகேவும் தனக்கு சந்தேகம் உள்ளதாக கூறி சர்ச்சைய கிளப்பினார்.
இந்நிலையில், 2011 உலக கிண்ணத்தில் ஆட்டநிர்ணயம் என எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து யாராவது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், நான் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
சீனாவில் இளம் பெண் ஒருவர் 102 ஐபோன்களை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளார்.
கொங்கொங்கிலிருந்து, சீனாவிற்கு இளம்பெண் ஒருவர் சட்டவிரோதமாக ஐபோன்களை கடத்த முயன்றதால், அவரை விமானநிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Shenzhen Bao’an சர்வதேச விமானநிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் கொங்கொங்கிலிருந்து வந்த இளம்பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் நடந்து சென்றுள்ளார். அதுமட்டுமின்றி கோடைக்காலத்தில் ஸ்வெட்டர் வேறு அணிந்து சென்றுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த விமானநிலைய அதிகாரிகள் அப்பெண்ணை சோதனை செய்துள்ளனர். அப்போது அப்பெண் ஐபோன்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து மொத்தம் 102 ஐபோன்கள் மற்றும் 15 Tissot காடிகாரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதன் மொத்த எடை 9 கிலோ இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கொங்கிலிருந்து சீனாவுக்கு ஐபோன்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது இது முதல்முறையல்ல எனவும் கடந்த 2015-ஆம் ஆண்டில்84 ஐபோன்களைச் சீனாவுக்குக் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் காதலி வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்ததால் அவரை கொலை செய்ததாக காதலன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரில் படித்து வருபவர் மோனிகா. இவர் சில தினங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஏரியில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.
பொலிசார் இது குறித்து விசாரித்து வந்த நிலையில் கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என மோனிகாவின் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில், மோனிகாவை கொலை செய்ததாக பொலிசாரிடம் சரணடைந்துள்ள கோகுல்நாத் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மோனிகாவும், கோகுல்நாத்தும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கோகுல்நாத் அளித்துள்ள வாக்குமூலத்தில், தன்னை காதலித்து விட்டு, வீட்டில் பார்க்கும் வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய மோனிக்கா சம்மதித்ததால் ஆத்திரத்தில் மோனிகாவை கல்லூரி விடுதியில் இருந்து வெளியே அழைத்து வந்து கொன்றதாக தெரிவித்துள்ளான். பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
சேனையில் பயிர்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு விட்டு இன்று அதிகாலை வீடு நோக்கி நடந்து சென்று விவசாயி ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விவசாயி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கமத்தொழிலாளின் வீட்டுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலிக்கு வெளியில் வந்திருந்த காட்டு யானையை விரட்ட முயற்சித்த போது யானை தும்பிக்கையால் விவசாயியை தூக்கி காட்டுக்குள் வீசியது என நேரில் பார்த்த விவசாயின் மகள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் ஹபரணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 1000கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமக்கக் கூடிய ஆளில்லா .எச்.-5 விமானங்களை சீனா தயாரித்துள்ளது.
அமெரிக்காவின் எம்.கியூ-9 ரீப்பர் ஆளில்லா தாக்குதல் விமானங்களுக்குப் போட்டியாக சீனா சி.எச்.-5 ரெய்ன்போ ஆளில்லா விமானங்களின் வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சீனா பெய்ஹாங் பல்கலைக்கழக பேராசிரியர் வாங் சாங் கருத்து தெரிவிக்கையில், சீனாவின் இந்த ஆளில்லா போர் விமானங்கள் அமெரிக்காவின் போர் விமானங்களின் உற்பத்திச் செலவில் அரைப்பகுதி தான் பயன்படுத்தப்படுகிறது.
எனினும், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை ஒப்பிடும்போது தங்களுடையது சற்று பலவீனமானதுதான். அமெரிக்க ரீப்பர் ஆளில்லா விமானங்கள் 12,000, 15,000 மீட்டர்கள் உயரம் வரை செல்லும் இதன் மூலம் தரையிலிருந்து தாக்கப்படும் வாய்ப்புகளிலிருந்து அது தப்பிவிடும்.
ஆனால் சீனாவின் இந்த ஆளில்லா தாக்குதல் விமானம் 9000 மீட்டர்களே உயரம் செல்லும், இதனால் இதனை தரையிலிருந்து தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, போர் விமானத் தொழில் நுட்பத்தில் சீனா இன்னமும் மேற்கு நாடுகளுக்குச் சமமாக விளங்க முடியவில்லை. இதுதான் சீனா உற்பத்தி செய்யும் அனைத்து விமானங்களின் பலவீனமும் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ரீப்பர் ஆளில்லா தாக்குதல் விமானம் உலகிலேயே அதிக செலவில் தயாரிக்கப்படுவதாகும். அதாவது 16.9 மில்லியன் டொலர்கள் செலவாகும். சீனாவின் இந்த ட்ரோன் விமானங்கள் அதில் பாதிச் செலவில் தயாரிக்கப்பட்டு விடும்.
சீனாவின் சி.எச்.-5 விமானத்தின் இறக்கை 21 மீட்டர்களாகும். சுமார் 1000கிலோ எடையுள்ள ஆயுதங்களை இது சுமக்கவல்லது.
இது வானில் 60 மணி நேரம் வரை இருக்கும். சுமார் 10,000 கிமீ வரை பறந்து தாக்குதல் நடத்த வல்லது. இதன் மூலமாக ஆயுதச் சந்தையில் சீனாவும் அடியெடுத்து வைத்துள்ளது.
வளைகுடாவில் நெருக்கடி நிலை தீவிரம் பெற்றுள்ள நிலையில், அதனை குறைத்துக் கொள்ள பிராந்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
இதற்கிணக்க கட்டாருக்கு எதிராக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை வளைகுடா நாடுகள் குறைத்துள்ளன. முதலில் 13 நிபந்தனைகளை விதித்திருந்த வளைகுடா நாடுகள், தற்போது அதை ஆறாக குறைத்துள்ளன.
தற்பொழுது எழுந்துள்ள பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண ஆறு நிபந்தனைகளையும் கட்டார் அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கட்டார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் ராஜதந்திர உறவுகளை துண்டித்தன.
பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால் மீண்டும் உறவைத் தொடரத் தயார் என்று கூறிய அந்த நாடுகள் அதற்காக 13 நிபந்தனைகளை விதித்தன.
13 நிபந்தனைகளையும் கட்டார் ஏற்க மறுத்ததால், அவற்றை தளர்த்தி புதிய நிபந்தனைகளை வளைகுடா நாடுகள் வித்துள்ளன.
நடந்து முடிந்த தமிழ் தின தேசிய போட்டி ஒன்றில் ஹட்டன் பிரதேசத்தின் மாணவி ஒருவர் பங்குபற்ற முடியாது போனமை தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கான அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறவில்லை என்ற காரணத்தினால் அவர் தேசிய மட்ட போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மாகாண சபை அமர்வின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கல்விக்குழு ஒன்றுகூடலின் போது மாகாண சபையின் தமிழ் உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், கணபதி கனகராஜ், எம். ராம் மற்றும் எஸ் ஸ்ரீதரன் ஆகியோர் கையெழுத்திட்டு கோரிக்கை கடிதம் ஒன்றை கூட்டாக மாகாண கல்வி பணிப்பாளருக்கு கையளித்துள்ளனர்.
மேலும், அநீதி இழைக்கப்பட்டதாக கூறப்படும் மாணவியின் விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர் மாகாண சபை உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
வடக்கு ஸ்பெயினில் பாரியளவு ஐஸ் மழை பெய்யும் காணொளியொன்றை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கோல்ஃப் பந்து அளவில் ஐஸ் கட்டிகள் நிலத்தில் வீழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பிரதேசத்தில் திறந்த வெளியில் இருந்த மிருகங்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் சடலத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதற்கு முதல் நான் இவ்வாறு ஒரு கொடூர கொலையை கண்டதில்லை என வித்தியா கொலை வழக்கின் 21வது சாட்சியமான உப பொலிஸ் பரிசோதகர் இரான் நீதாய ட்ரயல் அட்பார் மன்றின் முன்பாக முன்பாக சாட்சியமளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணையின் இரண்டாம் கட்ட சாட்சி பதிவுகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ட்ரயல் அட்பார் மன்றில் நடைபெற்றது. பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார்.
வழக்கு விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அதையடுத்து குறித்த வழக்கின் 21வது சாட்சியான உப பொலிஸ் பரிசோதகர் மரகல இரான் சாட்சியமளிக்கையில்
நான் தற்போது கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகிறேன். சம்பவம் நடைபெற்ற கால பகுதியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தேன்.
அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் பொறுப்பதிகாரியாக பணி புரிந்தேன்.
அந்நிலையில் 2015 மே மாதம் 14ம் திகதி காலை நான் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த போது , தகவல் கிடைத்தது புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அருகில் மக்கள் கூட்டமாக இருப்பதாக அதனை அடுந்த அந்த பகுதிக்கு நான் எனது பொலிஸ் குழுவுடன் அந்த இடத்திற்கு சென்று இருந்தேன்.
ஆலடி சந்தியில் இருந்து சிறிது தூரம் உள்ளே சென்றால், பற்றைக் காடுகளுக்கு மத்தியில் பாழடைந்த கட்டிடங்கள் உள்ள பகுதியில் மக்கள் கூட்டமாக இருந்தது.
அந்த பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் காணப்பட்டது. நான் நின்ற இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரத்தில் சடலம் காணப்பட்டது என தெரிவித்து சடலம் காணப்பட்ட நிலையை மன்றில் விபரித்து கூறினார்.
அவ்வேளை எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன, குறித்த பொலிஸ் சாட்சி , தகவல் புத்தகத்தை பார்த்து சாட்சியம் அளிக்காமல் தனது வாக்கு மூலத்தை பார்த்து சாட்சியம் அளிக்கின்றார். அதனை அனுமதிக்க கூடாது என மன்றில் கோரினார்.
அதனை அடுத்து மன்று , சாட்சியத்திடம் , வாக்கு மூலத்தை பார்த்து சாட்சியம் அளிக்காமல் , தகவல் புத்தகத்தை பார்த்து சாட்சியம் அளிக்குமாறு அறிவுறுத்தியது.
அதனை தொடர்ந்து சாட்சியம் அளிப்பவர் , தொடர்ந்து தனது சாட்சியத்தை அளித்தார். அதன் போது,நாம் அன்றைய தினம் சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி விட்டு , எமது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குயிண்டஸ் குணால் பெரேரா (அப்போதைய ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் பிரகாரம் அன்றைய தினம் (14ம் திகதி) இரவு 10 மணியளவில் பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரையும் அவர்களது வீட்டுகளுக்கு அருகில் வைத்து கைது செய்தோம்.
மறுநாள் (15ம் திகதி ) மாணவியின் இறுதி சடங்கு இடம்பெற்றது. அன்றைய தினம் காலை முதல் இறுதி சடங்கு முடிவடைந்து சடலம் நல்லடக்கம் செய்யப்படும் வரையில் , நான் மாணவி கல்வி கற்ற பாடசாலைக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்தேன்.
அதன் பின்னர் 17ம் திகதி மாலை எமது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குயிண்டஸ் குணால் பெரேரா எம்மை புங்குடுதீவில் உள்ள நாதன் கடைக்கு முன்பாக வருமாறு அழைத்து இருந்தார். அதனை அடுத்து நாம் அந்த இடத்திற்கு சென்று இருந்தோம்.
அந்த கடையில் இருந்து சுமார் 400 மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள இடத்திற்கு வர சொன்னார். நாம் அங்கு சென்ற போது மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐந்து சந்தேக நபர்களையும் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்தோம்.
அவர்களை கைது செய்த போது அவர்களில் ஒரு சிலர் ஆலயத்திற்கு செல்வதற்கு தயாரான நிலையில் வேட்டியுடன் மேலங்கி இல்லாமல் நின்று இருந்தார்கள். அவர்கள் ஐவரையும் ஒரே இடத்தில் வைத்தே கைது செய்தோம்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எமது பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லவில்லை ஏனெனில் சந்தேக நபர்களில் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதனால் நாம் அவர்களை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லாது குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு விசாரணைக்காக கொண்டு சென்றோம்.
நாம் அவர்களை குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு கொண்டு சென்று வாக்கு மூலங்களை பெற முயற்சிக்கும் போது , ஊரவர்கள் ஒன்று திரண்டு ,சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி காவலரணை தாக்கினார்கள்.
அதனால் எமது பொறுப்பதிகாரி மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு அதனை கொண்டு சென்று கடற்படையின் உதவியுடன் சந்தேக நபர்களை கடல் வழியாக நீருந்து விசைப் படகு (வோட்டர் ஜெட்) மூலம் காரைநகர் கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிசாரின் உதவியுடன் சந்தேக நபர்களை யாழ்ப்பான தலைமை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தோம்.
அன்றைய தினம் இரவு சந்தேக நபர்கள் வாக்கு மூலம் அளிக்கும் நிலைமையில் இல்லாத காரணத்தால் அவர்கள் ஓய்வெடுக்க விட்டு விட்டு நாம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு திரும்பி விட்டோம்.
பின்னர் மறுநாள் 18ம் திகதி அதிகாலை மீண்டும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் சென்று சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களை கோபி எனும் தமிழ் போலிஸ் உத்தியோகஸ்தரின் உதவியுடன் பெற்றுக்கொண்டு இருந்த வேளை , வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க என்னை தனது அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு அழைத்தார்.
அதனை அடுத்து நான் அவரது அலுவலகத்திற்கு சென்றேன். அவ்வேளை அங்கு யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபர் பெரேரா , யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசேகர , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் அப்போது கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் மற்றும் ஒருவர் சிவில் உடையில் இருந்தார்.
அப்போது சிவில் உடையில் இருந்தவர் யார் என்று தெரியாது பின்னர் அவர் சட்டத்துறை பீடாதிபதி தமிழ்மாறன் என அறிந்து கொண்டேன்.
அப்போது வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் என்னிடம் மாணவி கொலை வழக்கில் 17ம் திகதி கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் பற்றியும் என்னிடம் விசாரித்தார்.
பின்னர் , இந்த வழக்குடன் தொடர்புடைய நபர் ஒருவர் உள்ளார் எனவும் அவர் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முற்படலாம் அதானல் சர்வதேச விமான நிலைய பொலிசாருக்கு தகவல் வழங்கி அவர் வெளிநாடு தப்பி செல்லவதனை தடுக்குமாறு சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரது கடவுசீட்டு இலக்கத்தை கூறி அந்த தகவல்களை சர்வதேச விமான நிலைய பொலிசாருக்கு தகவல் வழங்குமாறு கூறினார். நான் அதனை எமது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கூறினேன்.
அதன் பின்னர் நான் மீண்டும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு வந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டு இருந்த ஐந்து சந்தேக நபர்களிடமும் வாக்கு மூலத்தினை பெற்று , அவர்களை யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் , அவர்களை அப்போதைய ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முற்படுத்தினோம்.
அங்கு நீதிவானிடம் ஐந்து சந்தேக நபர்களையும் 48 மணி நேர பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரினோம். அதற்கு நீதிவான் அனுமதியளித்து இருந்தார்.
ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் தொடர்பில் எமக்கு எந்த தகவலும் தெரியாது 18ம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து முறைப்பாடு பதிவு செய்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பின்னர் மறுநாள் 19ம் திகதி வெள்ளவத்தையில் வைத்து , மீள கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் அறிந்து கொண்டேன். என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணை செய்யும் போது ,
கேள்வி :- சடலத்திற்கு அருகில் துவிச்சக்கர வண்டி எதனையும் கண்டீரா?
பதில் :- ஆம். பெண்கள் துவிச்சக்கர வண்டி ஒன்றினை கண்டேன்.
கேள்வி :- சடலத்திற்கும் துவிச்சக்கர வண்டிக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருந்தது?
பதில் :- நான் சடலத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதற்கு முதல் நான் இவ்வாறு ஒரு கொடூர கொலையை கண்டதில்லை.
அதனால் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தமையால் சடலத்திற்கும் சைக்கிளுக்கும் இடையிலான தூரம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
அதனை தொடர்ந்து , எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , என்னுடைய கட்சிக்காரர்கள் பொலிசாருக்கு முதல் அளித்த வாக்கு மூலத்திற்கும் பின்னர் குற்ற புலனாய்வு துறையினருக்கு அளித்த வாக்கு மூலத்திற்கும் இடையில் வேறுபாடுள்ளது.
பொலிசாருக்கு முதல் அளித்த வாக்கு மூலம் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம். அது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கவோ முரண்பாட்டை முன் வைக்கவோ எனக்கு தனியுரிமை உண்டு என மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதற்கு மறுமொழி அளித்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல் , இது சட்ட முரணான விண்ணப்பம். என தெரிவித்து அந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு மன்றில் கோரினார்.
அதனை அடுத்து மன்று , எதிரிகளால் பொலிசாருக்கு வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழக்கில் சான்றாக அணைக்க முடியாது. என சட்டம் சொல்கின்றது.
அவ்வாறு கொடுக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் தொடர்பில் கேள்வி எழுப்ப முடியாது. என்பதனால் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை மன்று ஏகமனதாக மன்று நிராகரித்தது.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன மீண்டும் தனது குறுக்கு விசாரணைகளை முன்னெடுத்தார்.
கேள்வி :- சந்தேக நபர்களிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏதேனும் சான்று பொருட்களை கைப்பற்றினீர்களா ?
பதில் :- வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொல்லப்பட்ட மாணவியின் மூக்கு கண்ணாடியினை மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அதை மீட்க முடியவில்லை.
கேள்வி :- ஏன் ?
பதில் :- அன்றைய தினம் (18ம் திகதி ) யுத்த வெற்றி நாள் அதனால் மக்கள் கூடுவார்கள் அன்று சந்தேக நபர்களை புங்குடுதீவுக்கு அழைத்து செல்வது. நல்லதில்லை என மேல் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அதனால் அன்று அழைத்து செல்லவில்லை மறுநாள் நாம் விசாரித்ததில் புங்குடுதீவில் யுத்த வெற்றி நாளுக்காக எவரும் கூடவில்லை என அறிந்து கொண்டோம்.
அதன் பின்னர் மூக்கு கண்ணாடி உள்ளிட்ட சான்று பொருட்களை மீட்க முயற்சித்த வேளை சந்தேக நபர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு அந்த பகுதிகளில் அசாதரண சூழ்நிலை காணப்பட்டமையால் , நாம் சந்தேக நபர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் முகமாக அந்த பகுதிக்கு செல்லவில்லை.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , எதிரிகளை அடித்து துன்புறுத்தி சித்திரவதை புரிந்தே அவர்களின் வாக்கு மூலங்களை பெற்று உள்ளீர்கள் என நான் எதிரிகள் சார்பில் சொல்கிறேன் என தெரிவித்தார்.
அதனை தான் முற்றாக மறுப்பதாக சாட்சியமளித்தவர் தெரிவித்தார்.எதிரிகளின் உடலில் காயங்கள் இல்லை. அதனை அடுத்து எதிரிகள் தரப்பு சாட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி குறுக்கு விசாரணை செய்யும் போது,
கேள்வி :- எதிரிகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தினீர்கள் தானே ?
பதில் :- ஆம்.
கேள்வி :- அதில் எதிரிகளின் உடலில் கீறல் காயங்களோ , வேறு காயங்களோ இருந்தாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததா ?
பதில் :- இல்லை. அவ்வாறு எந்த காயங்களும் சந்தேக நபர்களின் உடலில் இல்லை.
எதிரிகளை சித்திரவதை புரியவில்லை. அதனை அடுத்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி சின்னையா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணை செய்யும் போது ,
4 ஆம் மற்றும் 7ம் எதிரிகளை தலைகீழாக கட்டி தூக்கி பொல்லால் அடித்து துன்புறுத்தி வாக்கு மூலம் பெற்றீர் என கூறுகிறேன் என தெரிவித்தார், அதற்கு சாட்சியளிப்பவர் இல்லை. அதனை நான் முற்றாக மறுக்கிறேன் என பதிலளித்தார்.
9வது சந்தேக நபர் தொடர்பில் உம்மிடம் எந்த சாட்சி ஆதாரமும் இல்லை என கூறுகிறேன். ஆம் என்னிடம் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என சாட்சியமளித்தார் பதிலளித்தார்.
09வது சந்தேக நபர் தொடர்பில் எந்த சாட்சி ஆதாரமும் இல்லாதமையால் தான் அவர் யாழ்ப்பாண பொலிசாரால் விடுவிக்கப்பட்டார் என கூறுகிறேன். அது தொடர்பில் எனக்கு தெரியாது என சாட்சியமளித்தவர் பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த பொலிஸ் சாட்சியம் மன்றில் சுமார் 6 மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
21 வயதுடைய ஜே எனும் இளைஞன் தனது குழந்தை பருவம் முதல் ஏறத்தாழ 20 ஆண்டுகள் வரை பல் துலக்காமல் இருந்துள்ளார்.
அவர் தற்போது பல் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற போது, அவருடைய பற்கள் ட்ரைனேஜ் விட மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது.
பல வருடங்களாக தவறான உணவுகள் மற்றும் அதிகமாக சோடா பானங்களை உட்கொண்டதாலும், பற்களை இதுவரை சுத்தம் செய்யாமல் இருந்ததாலும் தான் பற்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று ஜே மருத்துவரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஜேவின் வாயை சோதித்த மருத்துவர் ஜேம்ஸ், அவரின் வாயில் பல பற்கள் சொத்தையாகவும், பல தொற்றுகள் ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.
அதன் பின் மருத்துவர் ஜேம்ஸ், நுட்பமான கருவிகள் மூலம் ஜேவின் வாயில் ஏறத்தாழ 11 பற்களை பிடுங்கி, அதற்கு பதிலாக போலி பற்களை வைத்து, மீதுமுள்ள பற்களை பாலிஷ் செய்து, ஜேவின் வாயை புதிப்பித்துள்ளார்.
நல்ல கதைகள் அமைந்தால் சினிமாவில் நிச்சயம் நடிப்பேன் என ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளேன். இதில் தனுஷ், அமலாபால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பிரதிபலிக்கும் வலுவான கதாப்பாத்திரத்தில் கஜோல் வருகிறார். அவர் பெரிய நடிகையாக இருந்தாலும் படப்பிடிப்பில் இனிமையாகவே பழகினார் என சௌந்தர்யா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி படத்தை இயக்க விரும்புகிறேன். புதிதாக சினிமாவுக்கு வரும் பெண் இயக்குனர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு துறைகளிலும் பெண்கள் அதிகம் வரவேண்டும். கமல்ஹாசன் மகள்கள் இருவரும் சினிமாவில் நடிக்கிறார்கள். எனக்கும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை. நல்ல கதையும் கதாப்பாத்திரமும் அமைந்தால் சினிமாவில் நிச்சயம் நடிப்பேன் என சௌந்தர்யா கூறியுள்ளார்.
பயாகல, கலமுல்ல ஏத்தகம ஆகிய பிரதேசங்களில் நடமாடி இரவு நேரங்களில் யுவதிகள் மற்றும் பெண்கள் நித்திரை கொள்ளும் அறைகளுக்குள் நுழைந்து அவர்களைக் கட்டியணைப்பதாகக் கூறப்படும் ஒரு குழுவினரைக் கைது செய்ய பயாகல பொலிஸார் கிராமவாசிகளைக் கொண்ட பல விசேட குழுக்களை நியமித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக பொதுமக்களை பீதிக்குள்ளாக்கிவரும் இக்குழுவை கைது செய்வது குறித்த பேச்சுவார்த்தை கலமுல்ல குழந்தை யேசு கன்னியர் மட தேவாலயத்தில் பங்குத் தந்தை இந்திரத்னசிறி பெர் னாண்டோ தலைமையில் பொலிஸார் மற்றும் கிராம சேவகர்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.
இரவில் பொலிஸாருடன் இணைந்து கிராமவாசிகள் ரோந்து செல்லவும் தீர்மானிக்கப்பட்டது. இக்குழுவின் நடமாட்டம் காரணமாக யுவதிகள் பெண்கள் இரவில் நித்திரை கொள்ள அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகின்றது.