வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்று (21.07.2017) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
குருமன்காடு பகுதியிலிருந்து வவுனியா நகரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது அதே பாதையில் பயணித்த முச்சக்கரவண்டி மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
இவ் விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிலின் சாரதி இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டியைபிறப்பிடமாகவும் வவுனியா கோவில்குளம் 5 ஆம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட
குமாரசாமி நாகரத்தினம் அவர்கள் நேற்று 20.07.2017 வியாழகிழமை காலமானார்.
அன்னார்ர் காலம் சென்ற குமாரசாமியின் மனைவியும் நிரஞ்சன்(ஆசிரியர் -வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயம் ) நிரஞ்சனா( ஆசிரியை வவுனியா சுத்தானந்த முன்பள்ளி ) கண்ணன் ராஜா ஆகியோரின் தாயாரும் பபா -Germany தர்சினி – (UK) வதனா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 21.07.2017 வெள்ளிகிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்று தகனகிரியைகளுக்காக கோவில்குளம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் .
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறீர்கள் …
தகவல்
சென்னையில் தனது காதலுக்கு இடையூறாக இருந்த தோழியை கொலை செய்துள்ள பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டியை சேர்ந்த ஜெகதீஸ்வரி, திவ்யா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் இருவரும் நர்ஸிங் பயிற்சி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜயராஜ் என்பவர் சிகிச்சை பெறுவதற்காக இவர்கள் பயிற்சி பெற்ற மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, அவர்கள் இருவரும் விஜயராஜிடம் நெருங்கி பழகியுள்ளனர்.
நாளடைவில் இவர்கள் இருவருமே விஜயராஜை காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஜெகதீஸ்வரி தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் தோழி என்றும் பார்க்காமல் திவ்யாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி தனது நண்பர் மோகன் என்பவரின் உதவியுடன் திவ்யாவை கொலை செய்து கெடிலம் ஆற்றில் புதைத்துள்ளார்.
இதற்கிடையில் திவ்யாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் அவரது தோழியான ஜெகதீஸ்வரியிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில், மேற்கூறிய தகவல்கள் தெரியவந்துள்ளன. தற்போது ஜெகதீஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார்.
எகிப்து நாட்டில் இருந்து வறுமையின் காரணமாக லிபியாவிற்கு வேலை தேடி சென்ற 22 பேர் பாலைவனத்தில் சிக்கி உணவு, தண்ணீரின்றி உயிரிழந்துள்ளனர்.
எகிப்து நாட்டுத் தலைநகர் கெய்ரோ அருகே இருக்கும் மினியா கிராமத்தைச் சேர்ந்த பல குடும்பம் வறுமையின்பிடியில் சிக்கி அல்லல்பட்டு வருகின்றனர்.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம். வறுமை ஒருபுறம் வாட்டியதால் வேலைதேடி லிபியாவிற்கு சென்ற இந்த கிராமத்தை சேர்ந்த 22 பேர் பாலைவனத்தில் உணவு, தண்ணீரின்றி சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இடைத்தரகர்களை நம்பி இவர்கள் வேலைக்குச் சென்றபோது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எகிப்தை சேர்ந்தவர்கள் லிபியாவிற்கே வேலை தேடி செல்கிறார்கள்.
இதனிடையே, வேலை தேடி சட்டவிரோதமாக லிபியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் எகிப்தியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதுகுறித்து லிபியாவில் கைது செய்யப்பட்ட ஒருவரின் தாயான நபிலா ஹசிப் கூறும்போது, “படிப்பிற்கு தேவையான பணத்தைப் பெற எனது மகன் லிபியா செல்ல வேண்டும் என்று கூறினான்.
ஆனால் படிக்க வேண்டாம் என்று கூறி இங்கேயே இருக்க வலியுறுத்தினேன். ஆனால், படிப்பதற்கு பணம் வேண்டும் என்று கூறி அங்கே சென்றான். தற்போது அங்கே அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
எனது மகன் உயிருடனோ அல்லது பிணமாகவோ வேண்டும். எனது மகனை நினைத்து கடந்த 10 மாதங்களாக மிகவும் கவலையடைந்துள்ளேன்” என்றார்.
எகிப்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள வேளையில், விலைவாசியும் உயர்ந்துள்ளாதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் இதை மறுத்துள்ள அரசு, எகிப்தில் 12 சதவிகித மக்களுக்கே வேலையில்லை என்று கூறி வருகின்றது. இப்பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்திற்கான திட்டத்தை வடிவமைக்கும் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த SOM என்ற நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
269 ஹெக்டேர் கடற்பகுதியை மூடும் வகையில் நிர்மாணிக்கப்படும் இந்த திட்டம் கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தில் புதிய நகர வளர்ச்சியை ஏற்படுத்தும்.
இயற்கை கட்டுமானத்துடன் இணைந்து இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கால்வாய், புதிய தோட்டங்கள், புதிய துறைமுகம் மற்றும் புதிய நகர பூங்கா ஆகியவை அடங்கும்.
மேலும் இந்த திட்டத்தில் கடலுக்கு முன் ஒரு மைய கலாச்சார மையமும் உள்ளடங்கும்.
SOM நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட திட்டத்திற்கமைய துறைமுக நகரம் கொழும்பிற்கான ஒரு மாபெரும் புதிய பார்வை அளிக்கிறது.
குடியிருப்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் உயர் தரமான நகர்ப்புற சூழல்களை வழங்குவதாக இந்த திட்டத்தின் ஊடாக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் பாரிய பொருட்செலவில் காலிமுகத் திடலில் கொழும்பு துறைமுக நகர திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கியவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில், 17 வயது மாணவன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் அவர்களை நீதிமன்றம் முன்னர் பிணையில் செல்ல அனுமதித்தது. இந்நிலையில் கொழும்பு பிரதான நீதவான் அவர்களை விடுதலை செய்துள்ளார்.
சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதவான் லால் ரணசிங்க பண்டாரவிடம் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் மீள ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலாவுக்கு சென்ற போது அங்குள்ள மண், கல் துகள்களை சேகரிக்க பயன்படுத்திய பை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (இலங்கை மதிப்பு 26 கோடி ரூபா) அளவுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருப்பது, நிலாவில் மனிதர்களை களமிறக்கியது தான். 1969-ம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் ஒல்ட்ரின் ஆகிய இருவரை நிலாவுக்கு அனுப்பி வைத்தது.
நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அப்பல்லோ விண்கலத்திலிருந்து, நிலாவில் முதலில் கால்வைத்த நீல் ஆம்ஸ்ட்ரோங் தனது பெயரை வரலாற்றில் பொறித்துக்கொண்டார்.
அங்குள்ள மண், கல் துகள்கள் ஆகியவற்றை ஒரு பையில் எடுத்துக்கொண்டு இருவரும் பூமிக்கு திரும்பினர்.
பூமிக்கு விண்கலம் வந்ததும் அதிலுள்ள பொருட்கள் அனைத்தும் ஸ்மித்சோனியன் மியூசியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், நிலாவின் மண், கல்களை சுமந்த அந்த பை பலரது கைகளுக்கு மாறி நியூயோர்க்கில் உள்ள தனியார் நிறுவனத்தின் வசம் வந்தது.
இந்நிலையில், அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பையானது நேற்று ஏலம் விடப்பட்டது.
பெயர் வெளியே தெரியாத நபர் ஒருவர் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் ஏலத்திற்கு பையை எடுத்துள்ளார். அந்த பையில் இன்னும் மண் துகள்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மிஸ் இலங்கையாக தெரிவாகும் நோக்கில் கொழும்பு சென்ற யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்றைய தினம் மிஸ் இலங்கை (இலங்கை அழகி) போட்டிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது.
இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்று தெரிவாகத் தவறிய யுவதியொருவர், நேர்முகத் தேர்வில் தெரிவான யுவதி ஒருவரின் செல்லிடப்பேசியை திருடியுள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட செல்லிடப்பேசி 38500 ரூபா பெறுமதியானது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த யுவதி நேற்று கொழும்பு – கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதேவேளை, யுவதியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சத்துரிக்கா தயாரட்ன என்ற யுவதியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நட்சத்திர ஹோட்டலின் சீ.சீ.டி.வி கமரா பதிவுகளை கொம்பனித்தெரு பொலிஸாருக்கு வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மெர்சிடிஸ் பென்ஸ் கடந்த ஆறு ஆண்டுகளில் விற்பனை செய்த அனைத்து கார்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த ஆறு வருடங்களில் விற்பனை செய்த அனைத்து டீசல் மொடல் கார்களின் உமிழ்வை மேம்படுத்துவதற்காக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
வாகனங்களை தயாரிக்கும் ஜெர்மனியை சேர்ந்த டையம்லெர் இந்த நடவடிக்கை மூலம் நைட்ரஜன் ஆக்சைடு வெளியேறுவதை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதை செய்து முடிக்க மொத்தம் €220 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சில ஆயிரம் கோடிகள் ஆகும்.
எனினும் வாடிக்கையாளர்களிடம் எவ்வித பணமும் வசூலிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் இன்ஜின் கொண்ட அனைத்து கார்களும் யூரோ 6 தரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதால் புதிய மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
எனினும் இந்த பாதிப்பில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
எனினும் ஜெர்மனியில் மட்டும் 10 லட்சம் வாகனங்களும், ஐரோப்பாவில் 20 லட்சம் வாகனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு லண்டனில் மட்டும் 170,000 புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா புதிய பஸ் நிலையத்தில் வௌி மாகாணங்களுக்கான பஸ் சேவைகளையும் பழைய பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ் சேவைகளையும் முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
195 மில்லியன் ரூபா செலவில் வவுனியா புதிய பஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் பயன்பாடற்ற நிலையிலேயே அது காணப்படுகின்றது.
நேர அட்டவணையை அடிப்படையாக வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் தோன்றிய முரண்பாடே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் ஊழியர்கள் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் புதிய பஸ் நிலையத்தில் வௌி மாகாணங்களுக்கான பஸ் சேவைகளையும் பழைய பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ் சேவைகளையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இதனை பரீட்சார்த்தமாக ஒரு மாதத்திற்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பஸ்கள் இயங்குவதற்கான நேர அட்டவணை தொடர்பான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.
கூட்டாக இணைந்து சவுதி மற்றும் கல்ப் வலயத்தினுள் பிச்சையெடுத்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 கோடிஸ்வரர்களை அந் நாட்டு பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சவுதி பிரஜைகள் எனவும் இதில் பெண்களும், குழந்தைகளும் உள்ளடங்கிள்ளனர் என அந் நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அல் காசிம் பகுதியில் சகல வசதிகள் நிரம்பிய தொடர் அடுக்கு மாடிகளில் வாழ்ந்து வந்த இவர்கள் மக்களை ஏமாற்றி பிச்சை எடுத்து வந்துள்ளனர்.
இவ்வாறு பிச்சை எடுத்து குடும்ப பாவனைக்காக அதி நவீன வசதிகள் நிரம்பிய கார் உட்பட ஐந்து கார்களை வாங்கியுள்ளனர். இக் கார்களை பயன்படுத்தி வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று விபத்து ஏற்பட்டதை போல் நடித்து தனவந்தர்களின் அனுதாபங்களால் பணம் பெற்று வந்துள்ளனர்.
குறித்த 21 பேரையும் கைது செய்யும் போது அவர்களிடமிருந்து சவுதி ரியால் 12,049 மற்றும் திரம் 150 என்பனவற்றோடு தங்க நகைகளையும் பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சவுதி உள்ளிட்ட கல்ப் வலயங்களில் பிச்சை எடுத்தல், பணம் பெறல் என்பன சட்ட விரோத குற்றமாக கருதப்படுகிறது.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டமையை சர்வதேச சமூகம் வரவேற்றுள்ளது.
இலங்கையின் ஸ்திரமான சமாதானத்துக்கான ஒரு படிக்கல்லாக தாம் இந்த சட்டத்தில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால இன்று தமது டுவிட்டர் தளத்தின் ஊடாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இந்த நடவடிக்கையை ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான இணைப்பாளர் உனா மெக்கலி, குறிப்பிட்டத்தக்க முன்னேற்ற நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தூதுவர் அடுல் கெசாப், மைத்திரிபாலவின் இந்த நடவடிக்கை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
இந்த முனைப்பை, காணாமல் போனோரின் நிலையை கண்டறிவதற்காக காத்திருக்கும் உறவுகள் நம்பிக்கையுடன் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை, காணாமல் போனோரின் குடும்பங்களை பொறுத்தவரை, அவர்களின் கேள்விகளுக்கு பதில்களை வழங்கும் முக்கியமான அம்சம் என்று கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாம் பெறும் வெற்றிகள் மிகக் கடினமாக இருக்கும். இலங்கை மண்ணில் இலங்கையை எதிர்த்து விளையாடுவது எப்போதும் இலகுவாக இருக்காதென இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்தார்.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை வந்தடைந்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு – 20 போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் கொழும்பு மூவன்பிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இந்திய அணியின் தலைவர் விராட் கோலி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தபோதும் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடுவதென்பது மிகவும் சவால் இருக்கும் என நினைக்கின்றேன்.
இலங்கையில் விளையாடுவதற்கு எமது வீரர்கள் எப்போதும் விரும்புவார்கள். எமது கிரிக்கெட் சுற்றுப்பயணங்களின் போது இளைப்பாறும் இடமாக இலங்கை உள்ளது.
இலங்கை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வதென்பது இலகுவான காரியமல்ல. இலங்கையில் நாம் பெறும் வெற்றிகள் மிகக் கடினமானதாகவே அமையும்.
ஓர் அணியாக ஒன்றிணைந்து எமது பலம், பலவீனங்களை தெரிந்து டெஸ்ட் போட்டியில் எமது ஆட்டத்தை வரையறுத்துக்கொண்டு தரவரிசையில் அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தோம்.
கடைசியாக நாம் இலங்கையில் டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது இரு அணிகளுக்கும் இடையிலான அனுபவம் அதிக இடைவெளி கொண்டதாக இருந்தது. சங்கக்கார விளையாடிக் கொண்டிருந்தார், அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் தம்மிக்க பிரசாத் ஆகியோர் விளையாடினர். ரங்கன ஹேரத் சிறந்த பந்துவீச்சாளர்.
எல்லா வீரர்களும் பொறுப்புணர்வுடனும் கடின உழைப்புடனம் விளையாடும் போதே நல்ல பயனை அடையமுடியும்.
எவரும் வந்து எந்த நேரத்திலும் தமது திறமைகளை வெளிப்படுத்தமுடியும். உபாதையென்பதை விரும்பியோ விரும்பாமலோ நாம் விளையாட்டில் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். குறிப்பாக உபாதை எல்லா விளையாட்டுகளிலும் பொதுவாக வரக்கூடியதொரு பிரச்சினை.
ஏதோ ஒருவகையில் அனைத்து வீரர்களுக்கும் நாட்டுக்காக விளையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன.
நான் ஒரு துடுப்பாட்ட வீரன் என்ற வகையில் டெஸ்ட் போட்டிகளைப்போன்று தொடர் போட்டிகளில் விளையாடுவதையே விரும்புகின்றேன். நாளை எமக்கான பயிற்சி ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன.
கிரிக்கெட்டை நாம் எந்த நேரத்திலும் ஒப்பிட்டுப்பார்க்க முடியாது. எந்த நேரத்திலும் குறிப்பாக கடந்த காலத்தில் விளையாடியதையோ அல்லது எதிர்காலத்தில் எவ்வாறு விளையாடுவதென்றோ கிரிக்கெட்டை பார்க்க முடியாது. நிகழ்காலத்தில் எவ்வாறு விளையாட முடியுமென்று நினைக்க வேண்டும்.
இலங்கை அணி தனது சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட முடியும். பயிற்சிப்போட்டியில் தவறுகள் இருந்தால் அவை திருத்தப்படும்.
நாம் நம்பர் -1 அணியாக இருந்தாலும் அனைத்து விதமான துறைகளிலும் சமநிலையில் உள்ளோம். திறமைகளை வெளிக்காட்டும் போது வெற்றிபெற சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
லண்டனில் நடைபெற்று வரும் பாரா தடகள போட்டியில் இலங்கை வீரரின் நெகிழச்சியான செயற்பாடு சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இலங்கை வீரரான அனில் பிரசன்ன ஜயலத் D42 ஊனமுற்றோருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார். முதல் 50 மீற்றர் தூரம் வரை அனில் பிரசன்ன முன்னிலையில் ஓடிக் கொண்டிருந்தார்.
எனினும் போட்டியின் இறுதி 40 மீற்றர் தூரத்தின் போது தென்னாபிரிக்க வீரர் அனில் ஓடிக் கொண்டிருந்த இடத்திற்கு வேகமாக வந்துள்ளார்.
எப்படியிருப்பினும் அவருக்கு அவரது காலில் பொருத்தப்பட்டுள்ள உபகரணத்தினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதனை அனில் புரிந்து கொண்டுள்ளார்.
ஓடி வரும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தென்னாபிரிக்க வீரர் அனில் பிரசன்னவுக்கு அருகில் வந்து விழுந்துள்ளார்.
ஓட்ட எல்லைக் கோட்டை கடக்க சொற்ப விநாடிகள் உள்ள நிலையில், கீழே விழுந்த வீரருக்கு அருகில் ஒருவரும் செல்லவில்லை. இதனை அவதானித்த அனில் பிரசன்ன உடனடியாக விழுந்த வீரரின் திசையை நோக்கி ஓடியுள்ளார்.
அங்கு சென்று அனில் பிரசன்ன அவருக்கு உதவியுள்ளார். போட்டி நிறைவடைந்து வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த அனைத்து வீரர்களின் கவனமும் அணில் பிரசன்ன மீது திரும்பியுள்ளது.
அந்த போட்டியில் அவர் தோல்வியடைந்த போதிலும் அனைவரினதும் மனங்களை அவர் வென்று விட்டதாக சர்வதேச ஊடகங்கள் புகழராம் சூட்டியுள்ளன.