பெற்ற மகன்கள் செய்த செயலால் உயிரை விட்ட பெற்றோர்!!

கடன் பெற்று இரு மகன்களுக்கும் வீடு கட்டி தந்த நிலையில், மகன்கள் கடனை கட்ட மறுத்ததால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பு.ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (65) இவர் மனைவி ரெங்கநாயகி (60). இவர்களுக்கு சிவானந்தம் (40) பரமானந்தம் (35) என்று இருமகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கந்தசாமி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தனது இரண்டு மகன்களுக்கும்‌ வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இதற்கான மாதத் தவணையை கந்தசாமியே செலுத்தி வந்த நிலையில், அவரு‌க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் மீதி பணத்தை கட்ட முடியாமல் கந்தசாமி திணறியுள்ளார். மேலும், தன் மகன்கள் கடனை கட்டிவிடுவார்கள் என நினைத்துள்ளார்.

ஆனால், மகன்களுக்குள் ஏற்பட்ட போட்டி காரணமாக தந்தை வாங்கிய கடனைக் கட்ட அவர்கள் இருவரும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கந்தசாமியும் அவரது மனைவி ரெங்கநாயகியும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

இலங்கையின் இளம் விஞ்ஞானிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!!

இலங்கையை சேர்ந்த இளம் விஞ்ஞானிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சு மற்றும் ரோயல் இராணுவ பாடசாலை இணைந்து முதல் முறையாக ஏற்பாடு செய்த விஞ்ஞான மாநாட்டில் இலங்கையின் இளம் விஞ்ஞானி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

நாலந்தா பாடசாலையில் 10ம் ஆண்டில் கல்வி கற்கும் ரகிது என்ற மாணவரே இவ்வாறு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். காற்று மாசு தொடர்பான ஆய்விற்காக அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

அந்த பாடசாலையின் ரவிந்து மனோஹர, துமன் பீரிஸ் மற்றும் சுஹித் ஜயசேகர ஆகிய மாணவர்களுக்கு தங்களின் ஆய்விற்காக வெண்கல பதக்கங்கள் இரண்டினை வென்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் சர்வதேச நீதிபதிகள் குழுக்களுக்கு முன்னால் தங்களின் ஆய்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் அங்கு முன்வைக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியா, ஈரான், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், குவாம் மாநிலம், நைஜீரியா மற்றும் லாகூர் உட்பட பல நாடுகளை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கு ரகிது ரன்தில் ஜேர்மனில் இடம்பெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டிலும் வெளிப்பதக்கம் வென்றுள்ளார். அவர் அங்கு இளம் விஞ்ஞானியாக கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் வித்தியாசமான திருமணம் : மாட்டு வண்டியில் வந்த ஜெர்மன் மாப்பிள்ளை!!

 
யாழ்ப்பாணம் – மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யாழ். மீசாலையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவருக்கும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்த இருவரும் ஜெர்மன் நாட்டில் ஆங்கில ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

இவர்கள் இன்று திருமணம் செய்து கொள்வதற்காக மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்திற்கு மாட்டு வண்டியில் வருகை தந்து தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணக் கோலத்தில் இருவரும் தம்பதிகளாக மாட்டு வண்டியில் செல்வதை அப்பகுதி மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்ததுடன், ஆச்சரியமடைந்துள்ளனர்.

குறித்த மணமகனுடன் வருகை தந்திருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழர் பாரம்பரியத்துடன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மரணம்!!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி ஓட்டமாவடியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்றிரவு உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி, ஓட்டமாவடியில் மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் முச்சக்கரவண்டி சாரதி வெளியே வீசப்பட்டு கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ்ஸில் மோதுண்டதில் படுகாயமடைந்தார்.

இவ்விபத்தில் மரணமடைந்தவர் ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த சுலைமா லெப்பை ஜனூஸ் (வயது 27) என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

இவ்விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இளைஞரும், பஸ்ஸின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்தவரின் ஜனாஸா வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் நாளை சனிக்கிழமை ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென உறவினர்கள் தெரிவித்தனர்.

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் 100 கோடி ரூபாய் மோசடி!!

அண்மையில் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையர் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஒருவர் என தி டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய கடனட்டை மோசடி தொடர்பிலேயே குறித்த நபர் தேடப்பட்டு வந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடனட்டை ஊடாக 100 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக ஆளுநரால் 2012ம் ஆண்டு குறித்த நபரை கைது செய்வதற்கு அவசர உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் பெங்களூர் ஜலஹாலி பகுதியில் போலிக் கடனட்டையைப் பயன்படுத்தி தொலைக்காட்சி ஒன்றை கொள்வனவு செய்த பின்னர் குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வளைகுடா நெருக்கடி : கட்டார் அரசின் திடீர் தீர்மானம்!!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்டார் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிராந்திய அரபு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கட்டார் ஆட்சியாளர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இணக்கம் தெரிவித்துள்ளார்.

கட்டாருடன் ராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொண்ட நான்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வுக் காணும் எந்த தீர்மானமும், கட்டாரின் அரசுரிமையை மதிக்க வேண்டும் எனவும் ஆட்சியாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜூன் மாதத்திலிருந்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள், கட்டாருடனான உறவைத் துண்டித்துக்கொண்டன.

பயங்கரவாதக் குழுக்களுக்கு கட்டார், டோஹா நிதி உதவி அளிப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கட்டார் பயங்கரவாத குழுக்களுக்கு அளிக்கும் பண உதவியை நிறுத்த எடுத்திருக்கும் இந்த முயற்சி, வொஷிங்டனுக்கு திருப்தி அளித்திருப்பதாக, அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

உயிருக்கு போராடிய இலங்கை மாணவி லண்டனில் சாதனை!!

 
புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்த இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மாணவி பட்டதாரியாகியுள்ளார்.

வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழக கண் சிகிச்சை மருத்துவத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வந்தார்.

எனினும் 2015ம் ஆண்டில் தீராத நோயினால் பாதிக்கப்பட்ட வித்தியா அல்போன்ஸ் மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்.

25 வயதான அவருக்கு புற்றுநோய் தீவிரமடைய ஆரம்பித்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வித்தியாவுக்கு உடனடியாக ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதனை பெற்றுக் கொள்வதற்காக பொது மக்களின் உதவியை நாடி சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் வித்தியாவுக்கு பொருத்தமான ஸ்டெம் செல்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை. இறுதியில் தனது மகளின் உயிரை காப்பாற்றுவதற்கு வித்தியாவின் தாயார் தனது ஸ்டெம் செல்களை வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இதன்மூலம் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் வழமையான வாழ்க்கை முறைக்கு திரும்பினார்.

இரண்டு வருடங்களின் பின்னர் தனது இறுதியாண்டு கற்கை நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டதாரியாக பட்டம் பெறும் விழாவில் கலந்து கொண்டார்.

“எனது சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் கல்வி நடவடிக்கையில் கவனத்தை செலுத்துவது மிகவும் கடினமாக இருந்ததென வித்தியா தெரிவித்துள்ளார்.

நான் விரிவுரைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கற்கையின் பதிவுகளைப் பயன்படுத்தி எனது சொந்த முயற்சியில் அதைச் செய்ய வேண்டியிருந்தது.

எனது பட்டம் பெறும் நடவடிக்கையில் புற்றுநோய்க்கு இடமளிக்கப் போவதில்லை. கண் தொடர்பான வைத்திய நிபுணராகுவதே எனது கனவாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மாணவியான வித்தியா லண்டன் Walthamstow பகுதியில் வாழ்ந்து வருகின்றார். தனது கற்கையின் இறுதி நாட்களின் போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார்.

அவரது நோய் நிலைமையை அறிந்ததனை தொடர்ந்து, வித்தியாவுக்கு பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு வருடம் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அவர் சிகிச்சைக்காக 10 மாதங்கள் செலவிட்டார்.

வித்தியாவுக்கு ஸ்டெம் செல்களை தானமாக வழங்குவதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் முன்வந்தனர். லண்டன் மற்றும் கார்டிவ்பில் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பெற்ற நம்பமுடியாத உதவிகளுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார்.

கார்டிவ் பல்கலைக்கழகம் தனக்கு எதிர்பார்க்க முடியாத ஆதரவை வழங்கியதாக வித்தியா குறிப்பிட்டுள்ளார்.

“என்னுடைய அற்புதமான மேற்பார்வையாளர்கள் இன்றி எனது பட்டப்படிப்பை முடிக்கவும் எனது கனவை அடைந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

என் கதையானது கடினமான நேரத்தை கடந்து செல்ல முடியாமல் உள்ளவர்களை ஊக்குவிக்க உதவுமென நம்புகிறேன் எதுவும் சாத்தியமே.

எனது கனவை அடைவதற்கு உதவிய எனது பெற்றோர் மற்றும் எனது நண்பர்களுக்கு நன்றி சொல்வதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

கடினமான காலங்களில் நடப்பவர்கள் அனைவரும் கடவுளை நம்புங்கள், கடினமாக உழைக்கவும், எப்பொழுதும் முயற்சியை கைவிட்டு விடாதீர்கள். இதைச் செய்ய முடியும் என்றால், எதையும் செய்ய முடியும்” என வித்தியா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வித்தியா BSc பட்டதாரியாக பட்டம் பெற்றார். அத்துடன் ஒகஸ்ட் மாதம் முதல் முறையாக கண் நிபுணராக பதவியேற்கவுள்ளார்.

நெற்றியில் வாள் குத்தி காயமடைந்த கங்கனா ரணாவத்!!

நடிகை கங்கனா ரணாவத் சண்டைக்காட்சியில் நடித்தபோது நெற்றியில் வாள் குத்தி காயமடைந்துள்ளார்.

தாம் தூம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாவார். குயின் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

தற்போது ஜான்சி ராணி வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் மணிகர்னிகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தமிழில் வானம் படத்தை எடுத்த கிரிஷ் இயக்குகிறார்.

மணிகர்னிகா படத்தில் நடிப்பதற்காக கங்கனா ரணாவத் வாள் சண்டை, குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளை எடுத்து வந்தார்.

இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வில்லன்களுடன் கங்கனா ரணாவத் வாள் சண்டை போடுவது போன்ற காட்சியைப் படமாக்கும் போது, கங்கனா ரணாவத் உண்மையான வாளைக் கையில் வைத்து சண்டை போட்டுள்ளார்.

அவரை எதிர்த்து சண்டையிட்டவரின் வாள் எதிர்பாராத விதமாக கங்கனா ரணாவத்தின் நெற்றியில் குத்தியது. இதனால் நெற்றியில் இருந்து ரத்தம் கொட்ட கங்கனா ரணாவத் மயக்கமடைந்துள்ளார்.

படக்குழுவினர் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்துள்ளனர். நெற்றியில் அவருக்கு 15 தையல்கள் போடப்பட்டுள்ளன

விமானம் அவசரமாக தரையிறக்கப்படுகிறது : எதுவும் நடக்கலாம் : பெண் அனுப்பிய குறுந்தகவல்!!

ஸ்பெயினில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்ற விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, பெண் ஒருவர் பயத்தின் காரணமாக தன் குடும்பத்தாருக்கு குறுந் தகவல் அனுப்பியுள்ளார்.

ஸ்பெயினின் Ibiza பகுதியிலிருந்து பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை Jet2 விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில், விமானத்தில் சிறிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதனால் அவசரமாக விமானம் தரையிறக்கப்படுகிறது என அதிகாரிகள் அறிவித்தனர்.

எனவே அனைவரும் விமானத்தின் அவசர உதவிக்கு பயன்படும் ஆக்ஸிஜன் மாஸ்க்களை அணிந்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டனர். அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்து அறிவித்த அடுத்த நிமிடமே மாஸ்க்கும் கீழே வந்துள்ளது.

இந்நிலையில் விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் பெரும் பதற்றமடைந்தனர். அதில் சில பயணிகள் அழுதுள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்த 39 வயதான Nickola Tye தன் குடும்பத்தாருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், விமானம் அவசரமாக தரையிறக்கப்படுகிறது, எதுவும் நடக்கலாம், ஐ லவ் யூ என்று குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார்.

இதேவேளை, இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், விமானத்தில் உள்ள அதிகாரி ஒருவர் அவசர நிலை, அவசர நிலை என்று கூறுகிறார். உடனடியாக ஆக்ஸிஜன் மாஸ் கீழே வருகிறது. அவசரமாக விமானம் தரையிறக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

இதனால் பயத்தில் இருந்த எனக்கு இரண்டு குழந்தைகள், கணவர் என்று அவர்கள் ஞாபகம் தான் வந்தது.

அவர்களை நான் மீண்டும் பார்ப்பேன் என்று நினைத்துப் பார்க்க வில்லை, விமானத்தில் இருந்த சிலர் அழுது கொண்டிருந்தனர். எதுவும் நடக்கலாம் என்ற காரணத்தினால் அது போன்ற குறுந்தகவல் அனுப்பியதாக பதிவிட்டுள்ளார்.

 

80 தடவைகள் மீண்டும் மீண்டும் அச்சிடக்கூடிய புதிய காகிதம் விஞ்ஞானிகளால் உருவாக்கம்!!

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது.

அந்த துகள்களை, அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும், அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறைய ஆரம்பிக்கும்.

காற்றிலுள்ள ஒட்சிசன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும்.

மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

வவுனியா புதிய பஸ் நிலைய சர்ச்சை : சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!!

வவுனியா புதிய பஸ் நிலையத்தினை மீள செயற்படுத்துவது தொடர்பில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

195 மில்லியன் ரூபா செலவில் வவுனியா புதிய பஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் பயன்பாடற்ற நிலையிலேயே அது காணப்படுகின்றது.

நேர அட்டவணையை அடிப்படையாக வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் தோன்றிய முரண்பாடே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் ஊழியர்கள் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளை முன்னெடுக்கவும் ,பழைய பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ் சேவைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இணைந்த நேர அட்டவணையின் பிரகாரம், இதனை பரீட்சார்த்தமாக ஒரு மாதத்திற்கு முன்னெடுக்கவுள்ளதாக கூட்டத்தின் போது முடிவு எட்டப்பட்டது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர், வடமாகாண ஆளுநர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கும் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடத்தினை இயங்கச்செய்வதற்கு வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்குவதானது தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வட மாகாணத்தில் இணைந்த நேர அட்டவணையை அமுல்படுத்துவது தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நேரக்கணிப்பாளர்கள் மற்றும் தனியார் பஸ் நேரக்கணிப்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எனினும், இந்த கலந்துரையாடலில் இலங்கை போக்குவரத்து சபையின் நேரக்கணிப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

பாடசாலை தோழனுக்கு உணவில் விஷம் வைத்த மாணவன்!!

தன்னுடைய பாடசாலை தோழனுக்கு கரப்பான் பூச்சிகளைக் கொல்லும் விஷத்தை உணவில் கலந்து கொடுத்த குற்றத்திற்காக மாணவனொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் மலேசியாவில் சரவாக் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவன் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் (மலேசிய நேரப்படி) அவனது வீட்டில் வைத்து கைது செய்ததாக சரவாக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் டத்தோ தேவ் குமார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவன், பாடசாலைக்கு கொண்டு வந்த உணவில் கரப்பான் பூச்சியைக் கொல்லும் மருந்தைக் கலந்து வகுப்பறைத் தோழனுக்குத் கொடுத்துள்ளான். அதனை உட்கொண்ட அவன் சற்று நேரத்திலேயே உடல் நலம் மோசமடைந்துள்ளது.

இதனிடையே, பாடசாலை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர்களுக்கு தகவல் வழங்கியுள்ளதோடு, அவனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது செயலால் பதட்டமடைந்த குறித்த மாணவன் பாடசாலையிலிருந்து தப்பிச்சென்றுவிட்டாக அப்பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த மாணவனை கைது செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் டத்தோ தேவ் குமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவன் 13 வயதுடையதோடு,பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கல்வீச்சு!!

 
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகளிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பலி!!

 
மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் நேற்று  வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தின் காரணமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்  மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான றெக்ஸ் கமில்டன்(வயது-27) என தெரிய வருகின்றது.

மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் நேற்று  வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில்  இரண்டு  மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படு காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இதன் போதே  நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான றெக்ஸ் கமில்டன்(வயது 27) என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

படுகாயமடைந்த மேலும் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் விபத்து : இருவர் படுகாயம்!!

 
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்று (21.07.2017) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

குருமன்காடு பகுதியிலிருந்து வவுனியா நகரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது அதே பாதையில் பயணித்த முச்சக்கரவண்டி மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இவ் விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிலின் சாரதி இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல் – குமாரசாமி நாகரத்தினம்

மரண அறிவித்தல்

குமாரசாமி நாகரத்தினம்

கண்டியைபிறப்பிடமாகவும் வவுனியா கோவில்குளம் 5 ஆம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட 
குமாரசாமி நாகரத்தினம் அவர்கள் நேற்று 20.07.2017 வியாழகிழமை காலமானார்.


அன்னார்ர் காலம் சென்ற குமாரசாமியின் மனைவியும் நிரஞ்சன்(ஆசிரியர் -வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயம் ) நிரஞ்சனா( ஆசிரியை வவுனியா சுத்தானந்த முன்பள்ளி ) கண்ணன் ராஜா ஆகியோரின் தாயாரும் பபா -Germany தர்சினி – (UK) வதனா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 21.07.2017 வெள்ளிகிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்று தகனகிரியைகளுக்காக கோவில்குளம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் .

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறீர்கள் …
தகவல்

குடும்பத்தினர் …