காணொளி விற்பனை செய்யும் நோக்கில் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை!!

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் தொடர் விசாரணை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் யாழ். நீதிமன்றத்தில் இன்று (28) ஆரம்பமானது.

இன்று காலை 9.30 இற்கு ஆரம்பமான ட்ரயல் அட்பார் மன்றத்தில் பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆஜராகி தமது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார்.

வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் ட்ரயல் அட்பார் முறையில் விசாரிக்க முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பதில் சட்டமாஅதிபர் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ட்ரயல் அட்பாருக்கு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கின் முக்கிய சூத்திரதாரி, சுவிஸ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் சட்ட மாஅதிபர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மாணவி வித்தியாவை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகளை நேரடியாக பதிவு செய்து சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் சுவிஸில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பதில் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

இதற்காக சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்ததாக யாழ். மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் காட்சிகளை இவர் விற்பனை செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததாக பதில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் ஒன்பது சந்தேகநகபர்களும் மாணவி வித்தியாவை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் அவர்களே மாணவியை கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்துடன் இணைந்து காட்டுமிராண்டித்தனமான இந்தக கொடூரம் இழைக்கப்பட்டதாகவும், நாட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இந்த சம்பவம் இடம்பெற்றதை கூறுவதில் தமக்கு தயக்கம் இல்லை எனவும் பதில் சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

வழக்கின் இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஆறாம் சந்தேகநபர்கள் உறவினர்கள் எனவும் அவர்கள் கூட்டாக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த விடயங்களுக்கான ஆதாரம் சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் இருப்பதாகவும் விசாரணைகளின்போது அவற்றை சமர்ப்பிப்பதாகவும் பதில் சட்ட மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவருக்கு சிறைச்சாலையிலிருந்த சுவிஸ் குமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுப்பதற்கு முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆதாரமும் தம்மிடமுள்ளதாகவும் பதில் சட்ட மா அதிபர் யாழ். மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான தொடர் விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா பூவரசங்குளத்தில் யானை பரிதாபமாக மரணம்!!

சாளம்பக்குளம், இலுப்பைக்குளத்தில் இன்று காலை 11 மணியளவில் யானை ஒன்று இறந்துள்ளது. இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ பிரிவிற்குட்பட்ட சாளம்பக்குளம், இலுப்பைக்குளத்தில் பெண் யானை ஒன்று சுகவீனம் காரணமாக திடீரென கீழே விழுந்துள்ளது. இதனை கண்ணுற்ற கிராமவாசிகள் பூவரசங்குளம் பொலிஸிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூவரங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஆர்.ராஜகுரு, குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி காமினி மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சகிதம் அவ்விடம் சென்று யானையை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இருந்தபோதும் காலை 11 மணிக்கு யானை இறந்துள்ளது.

இதன் பின்னர் வன ஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் பி.கிரிதரனால் மதியம் 1 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் படி 12 வயதுடைய பெண் யானையின் தொண்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக உணவு உண்ண முடியாமலேயே இறந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை சம்பவ இடத்திற்கு வவுனியா மாவட்ட உதவி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி மல்வெலகே பார்வையிட்டிருந்தார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தை திடீரென முற்றுகையிட்ட மக்கள்!!

 
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்கள் இன்று(28.06.2017) யானைகளில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி ஆர்ப்பட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

செட்டிகுளம் கமநல அபிவிருத்தி திணைக்களததிற்கு முன்பாக ஒன்று கூடிய செட்டிகுளம் பிரதேச விவசாயிகள் மற்றும் யானைகளின் தாக்கத்திற்கு உள்ளாகும் கிராம மக்கள் அங்கிருந்து பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக சென்றிருந்தனர்.

பிரதேச செயலக வாயிலில் யானைகளின் மேச்சல் நிலமாக செட்டிக்குளம் மாறினால் பொருளாதாரத்தில் எப்படி முன்னேற்றம் அடைய முடியும், வில்பத்து சரணாலயமா செட்டிகுளம் சரணாலயமா அரசே பதில் சொல், திட்மிட்டு எமது வாழ்வாதரத்தை கேள்விக்குறியாக்கி எமது மக்களை பட்டினி போடாதே, இறக்காதே இறக்காதே எமது பிரதேசத்தில் யானைகளை இறக்காதே போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டததில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்களிடம் வருகைதந்த செட்டிக்குளம் பிரதேச செயலக கிராம சேவை தலைமைப் பீட உத்தியோகத்தர் சு.ஞானேஸ்வரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் வழங்கப்பட்ட மகஜரைப்பெறறுக்கொணடதுடன் பிரதேச செயலகத்தினால் யானை வேலி அமைப்பதற்கான வேண்டுகோள் வன ஜீவராசிகள் திணைக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்காமையினால் பிரதேச சயெலக மட்டத்தில் இம் மகஜரையும் வைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தை அடுதது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த கலைந்து சென்றிருந்தனர்.

வவுனியாவில் 2வது நாளாகவும் ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பால் தபால்துறை முடங்கியது!!

 
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தால் வவுனியாவில் 2வது நாளாகவும் தபால்துறை முடங்கியுள்ளது.

நிர்வாக ரீதியாக தாம் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 24 மணிநேர பணி பகிஸ்கரிப்பாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று (27.06.2017) அதிகாலை 12 மணியில் இருந்து ஆரம்பமான பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் 2வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக வவுனியா பிரதான தபால் நிலையம் உட்பட அனைத்து உப தபால் நிலையங்களும் மூடப்பட்டு காணப்படுகின்றது.

ஊழியர்கள் பணியில் இன்மையால் பல்வேறு தேவைகளுக்காகவும் தபால் நிலையங்களுக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

வயிறு பானை போன்று இருக்கின்றதா : இவற்றை சாப்பிடுங்கள்!!

தற்போது மாறிவரும் உணவு பழக்கம் நம்மை பல வித பிரச்சனைகளுக்கு அழைத்து செல்கிறது. இப்போது உள்ள காலகட்டத்தில் வீட்டில் சிறந்த உணவுகளை சமைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

இதற்கு மாறாக பலர் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் உள்ள உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர்.

இதன் விளைவு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விரைவில் வரக்கூடும்.

ஆகவே உடல் பருமன் அதிகம் இருந்தால், முடிந்த அளவில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே கலோரி குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

தக்காளி

தக்காளியில் லைகோபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இதில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டு வந்தால், விரைவில் வயிறு நிறைந்துவிடும்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸில் கலோரிகளே கிடையாது. ஆனால் அஸ்பாரகஸில் உடலுக்கு வேண்டிய வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் அதிகம் நிறைந்துள்ளது.

தர்பூசணி

தர்பூசணியிலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தர்பூசணி மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஆகவே இதனை தினமும் உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும்.

ப்ராக்கோலி

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதிலும் கலோரிகள் இல்லாததால், இதனை தினமும் உணவில் சிறிது சேர்த்து வருவது மிகவும் சிறந்தது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. எனவே சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்து வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும்.

பரங்கிக்காய்

பரங்கிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதுடன், வைட்டமின்களும், இதர சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கலோரிகளும் இல்லை. ஆகவே எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருளாக இருக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் நிறைந்திருப்பதால், இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய இதர சத்துக்களான வைட்டமின் கே, பொட்டாசியம் போன்றவையும் கிடைக்கும்.

குடைமிளகாய்

குடைமிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இதனையும் உணவில் அதிக அளவில் சேர்த்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்

விசித்திரமான நோயால் என்றும் இளமையாக தோன்றும் இளைஞன்!!

குரோசியா நாட்டில் விசித்திரமான நோயால் தாக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவர் இளமை குன்றாமல் சிறுவன் போலவே வாழ்ந்து வருகிறார்.

குரோசியாவில் Zagreb பகுதியில் வாழ்ந்து வருபவர் 23 வயதான Tomislav Jurcec. இவர்தான் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது 10 வயது சிறுவன் போலவே என்றும் இளமையுடன் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் இவரது இந்த நிலையை ஒரு வரமாகவே கருதப்படுவதாக Jurcec தெரிவித்துள்ளார். இதனால் தற்போது உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளதாம்.

மட்டுமின்றி புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட Jurcec அதுபோன்ற வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பொருட்களை வாங்கும்போது மிகவும் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமயங்களில் மதுபான விடுதிக்கு செல்லும்போது பலமுறை இவரது நண்பருக்கு பொதுமக்களால் திட்டு விழுந்துள்ளதாக கூறும் இவர், எப்படி ஒரு சிறுவனுக்கு மது அளிக்கலாம் எனவும் பொதுமக்கள் அக்கறையுடன் கேள்வி கேட்பதை ரசனையுடன் இவர் கேட்டிருப்பாராம்.

தற்போது Game of Thrones தொடர்களில் நடித்துவருவதாக கூறும் இவர் ‘Hero Corpse Child’என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

 

மரணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் குழந்தை : சவக்குழியில் விளையாடிய தந்தை!!

சீனாவில் இரண்டு வயது குழந்தை அரிய வகை நோய் பாதிப்பினால், மரணத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கும் வேளையில், அவரது தந்தை சவக்குழியில் அக்குழந்தையுடன் விளையாடிய சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த Zhang Xin Lei என்ற இரண்டு வயது குழந்தைக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் Thalassaemia என்ற நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் அக்குழந்தையின் பெற்றோர் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சிகிச்சைக்கு மட்டும் £11,000 பவுண்டிற்கு அதிகமாக செலவு செய்துள்ளனர்.

இது போததால் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் சிகிச்சைக்காக பணம் வாங்கியுள்ளனர். தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிர் வாழமுடியும். இல்லை எனில் குழந்தை இறக்க நேரிடும்.

தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்வதற்கு பணம் வேண்டும். தற்போது அவர்களிடம் பணம் இல்லை. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் அவர்களால் கேட்க முடியவில்லை.

இதனால் குழந்தையின் தந்தை இதற்கு மேல் சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்ற எண்ணத்தில், அங்குள்ள ஒரு பகுதியில் சவக்குழி ஒன்றை தோண்டி அங்கு இருவரும் விளையாடி வருகின்றனர்.

இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், தான் Zhang-ஐ இங்கு அழைத்து வந்து விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

ஏனென்றால் அவள் தற்போது மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள். அவளை இங்கு தான் புதைக்க உள்ளோம்.

அதனால் அவளை தினந்தோறும் இங்கு அழைத்து வந்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். இதை அக்குழந்தையின் தாய் அருகில் இருந்துகொண்டு பேசமுடியாத நிலைமையில் பார்த்துக் கொண்டிருந்தார்.

விட்டுச் சென்ற கணவன் : போராட்டத்தில் ஈடுபடும் மனைவி!!

காதலித்து கரம் பிடித்த கணவன் விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த மனைவி கணவன் வீட்டு முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாய் பொட்டல் நகரை சேர்ந்தவர் விக்டோரியா. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த, பிரிட்டோ என்பவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொணடனர்.

இதனை பிரிட்டோ குடும்பத்தார்கள் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரிட்டோ, மனைவி விக்டோரியாவை விட்டு விலகி சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விக்டோரியா, பிரிட்டோ வீடு முன் தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.​

சிறுவனின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தை சேர்ந்த 12 வயது சிறுவன், சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில், பள்ளங்களை அடைத்து வருகிறான். அவனது சேவைக்கு பலரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐதராபாத் நகரில் உள்ள கட்கேசர் பகுதியை சேர்ந்தவர் ரவிதேஜா(12). இங்குள்ள அரசு பள்ளியொன்றில் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் ஹப்சிகுடா மெயின் ரோட்டில் இருந்த சாலை பள்ளங்களை, சிறுகற்கள் கொண்டு மூடும் பணியில் ரவிதேஜா ஈடுபட்டு கொண்டிருந்தான்.

போக்குவரத்து நெரிசல் குறித்தோ, வாகனங்கள் வெளியிடும் புகை குறித்தோ அவன் சிறிதும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அந்த வழியாக சென்ற பலர், இவனது செயலைப் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரவிதேஜா கூறுகையில், சமீபத்தில் ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள செவல்லா பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சென்னாரி என்ற சிறுமி மரணம் அடைந்ததை என்னால் மறக்க முடியாது.

நான் சாலையில் செல்லும்போது பலர் பள்ளங்களில் விழாமல் இருக்கும் வகையில் பயந்தவாறு வாகனங்களை ஓட்டிச் செல்வதை பார்த்து வருகிறேன்.

ஆனாலும், சிலர் அந்த பள்ளங்களில் விழுந்து செல்வதையும் பார்த்துள்ளேன். இனி, வாகனத்தில் செல்பவர்கள் இதுபோல் பள்ளங்களில் விழுந்து உயிரை விடுவதை நான் விரும்பவில்லை.

எனவே, சாலையில் உள்ள பள்ளங்களை நானே மூட முடிவு செய்தேன். அதற்காக சிறிய கற்கள் மற்றும் களிமண் கட்டிகளை சேகரித்து சாலையில் இருக்கும் பள்ளங்களை மூடி வருகிறேன்.

இந்த பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவேன். விரைவில் எனது நண்பர்களும் இந்த சேவையில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தான்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்துவரும் ரவி தேஜாவுக்கு, அப்பகுதியை சேர்ந்த பலரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவிற்கு ஆளில்லா உளவு விமானங்களை விற்கும் அமெரிக்கா!!

அமெரிக்க பிரதமர் டிரம்ப் உடனான மோடி சந்திப்பில், ஆளில்லா உளவு விமானங்களான கார்டியன் ட்ரோன்களை இந்தியாவுக்கு விற்பதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பணம் செய்த நிலையில் இருநாடுகளும் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோர மற்றும் நிலப்பரப்பு எல்லைகளைக் கண்காணிக்கும் பணிக்காக, 22 கார்டியன் ட்ரோன் வகை ஆளில்லா உளவு விமானங்களை வாங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் இருக்கும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவிடமிருந்து ஃஎப் 16, ஃஎப் ஏ 18 ரக போர் விமானங்கள் மற்றும் சி 17 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்கும் தறுவாயில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட தாயின் சோகம்!!

பிறந்து 32 நாட்களில் உயிரிழந்த குழந்தை, அசைவுடன் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை குழந்தையின் தாய் வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த Catherine Hughes என்பவருக்கு கடந்த மார்ச் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. Riley என பெயரிடப்பட்ட குழந்தைக்கு பிறந்தவுடனேயே கிருமி தொற்று நோய் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொடர்ந்து இருமல் வந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ள இயந்திரம் ஒன்றின் ஊடாக குழந்தையை மருத்துவர்கள் பராமரித்து வந்துள்ளனர்.

ஆனாலும் குழந்தையின் உயிரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தனது குழந்தை கை, கால்களை அசைக்கும் நிலையில் Catherine புகைப்படங்களை எடுத்துள்ளார்.

பின்னர், பிறந்து 32 நாட்களில் குழந்தை உயிரிழந்துள்ளது. Catherine கர்ப்பமாக இருந்த போதே சரியான அளவில் தடுப்பூசிகளை போட்டு கொண்டிருந்தால் குழந்தையால் நோயை எதிர்த்து போராடியிருக்க முடியும் என பின்னர் மருத்துவர்கள் கூறினார்கள்.

இந்நிலையில் தான் எடுத்த புகைப்படங்களை Catherine பேஸ்புக்கில் கனத்த மனதுடன் பதிவேற்றியுள்ளார்.

Catherine கூறுகையில், என் குழந்தை இறந்து விடுவான் என மருத்துவர் என்னிடம் கூறும் போது என் இதயமே உறைந்து போனது போல இருந்தது. சரியான அளவில் தடுப்பூசி போட்டு வந்ததாக தான் நினைத்ததாக கூறியுள்ளார்.

மேலும், என் குழந்தையை தாக்கிய கண்ணுக்கு தெரியாத கிருமி மீது எனக்கு கோபம் வருகிறது. அது தான் என் குழந்தையின் உடலை சீரழித்து விட்டது.

தன் குழந்தையை வீட்டுக்கு எடுத்து செல்ல முடியாமல் போனதை நினைத்தால் அதிர்ச்சியாக உள்ளது என கூறிய Catherine, தன் குழந்தையின் அழகான நீல நிற கண்களை இனி பார்க்கவே முடியாது என்பது வருத்தமாக உள்ளதாக கூறியுள்ளார்.

 

அமெரிக்காவில் சாதனை படைத்த தமிழ் மாணவன்!!

அமெரிக்காவில் கல்வி கற்று வரும் தமிழ் மணவனான நிருபன் பகிதரன் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். Technology High School, Newark ல் உயர்தரக் கல்வியைக் கற்று அதிகூடிய புள்ளிகளைப் பெற்று, முதல் நிலை மாணவனாக தன்னை பதிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் மருத்துவ, பொறியியல் துறைகளில் கல்வி கற்கத் தகைமை பெற்றுள்ளார். Rutgers University புலமைப்பரிசில் வழங்கி, கல்வியைத் தொடர வாய்ப்பளித்துள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பகிதரன் குருநாதபிள்ளை – கமலேஸ்வரி பகிதரன் ஆகியோரின் புதல்வரான நிருபன் ஜேர்மனியை பிறப்பிடமாக கொண்டுள்ளார். தற்போது அமெரிக்காவின் Newark, New Jerseyல் வசித்து வருகிறார்.

நிருபன் தனது பாடசாலையில் National Honor Society President ஆகவும், தனது வகுப்பு மாணவ தலைவனாகவும் இருந்து வந்துள்ளார்.

பாடசாலையில் நடைபெறும் இயல், இசை, நாடக நிகழ்வுகளில் பங்குபற்றி வந்ததுடன், மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.

இவருக்கு Valedictorian Award, National Honor Society President Award, Leadership Award போன்றவற்றை பாடசாலை வழங்கி கௌரவித்துள்ளதுடன், Essex County Scholastic Award னை Essex County, New Jersey யும், Superintendent Award னை The State of New Jersey Senator M. Teresa Ruiz அவர்களும் வழங்கி கௌரவித்துள்ளனர்.

தனது 7 வயதில் கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தினைப் பெற்றுக் கொண்டமைக்காக , Newark Major Sharp James அவர்கள் சிறப்புப் பரிசில் வழங்கி கௌரவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழிகளில் திறமை பெற்ற நிருபன், தமிழ் மொழியையும் கற்று வருவதுடன், எமது கலை, கலாச்சார நிகழ்வுகளிலும் பங்குபற்றி தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

கடந்த வருடம், இலங்கைத் தமிழ்ச் சங்கம், அமெரிக்கா நடாத்திய கட்டுரைப் போட்டியில் நிருபன் இரண்டாம் இடத்தினைப் பெற்றமைக்காக முன்னாள் ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையாளரும், நீதிபதியுமான மதிப்பிற்குரிய நவநீதம்பிள்ளை அவர்கள் வெற்றிக்கிண்ணத்தை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பல்கேரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 இலங்கையர்கள் நாடு கடத்தல்!!

பல்கேரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பல்கேரிய விசேட விமானம் ஒன்றின் மூலம் இன்று குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் இவர்களை துருக்கியில் நிர்க்கதியாக்கிச் சென்றுள்ளனர்.

இந்த இலங்கையர்கள் இத்தாலி செல்லும் எண்ணத்தில் துருக்கியிலிருந்து பல்கேரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இலங்கையர்கள் எப்போது இவ்வாறு பல்கேரியாவிற்குள் பிரவேசித்தனர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக 38 குடிவரவு, குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளும் விசேட விமானத்தில் பயணித்திருந்தனர் என தெரியவந்துள்ளது.

நாடு கடத்தப்பட்டவர்களிடம் அரச புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர் நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

உணவுக்கே வழியில்லை : பாடசாலை செல்வது எவ்வாறு : இடம்பெயர் முகாம் மக்களின் அவலம்!!

எங்கள் சொந்த இடங்களில் நாங்கள் இருக்க வேண்டும். முகாமில் இருக்கிறதால் எங்கட பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கு. பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போறதில் கூட சிக்கல் இருக்கிறது.

முகாமில் இருக்கிற பிள்ளைகள் என பிரித்துப் பார்க்கின்றனர். கெதியா எங்கட இடத்துக்குச் செல்ல வேண்டும் என்பது யாழ். மயிலிட்டியிலிருந்து பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த வள்ளியம்மாவின் கருத்து.

வள்ளியம்மா போன்று நூற்றுக்கணக்கானவர்கள் தமது அபிலாஷைகளை அடக்கி வைத்தவர்களாகவும், உயிரை விடுவதற்கு முன்னர் தமது சொந்த இடங்களுக்குச் சென்று விடலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

இடப்பெயர்வு என்றால் எமக்கு நினைவுக்கு வருவது வடக்கு, கிழக்கு மக்கள்தான்.யுத்தம், இயற்கை அனர்த்தம் என பலவற்றாலும் அடிக்கடி இடம்பெயர்ந்தவர்கள் வடக்கு, கிழக்கு வாழ் மக்கள்.

குறிப்பாக 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்த யுத்தம் சிலரை நிரந்தரமாக தமது சொந்த இடங்களிலிருந்து பிரித்து வைத்து விட்டது.

மாறிமாறி ஆட்சிக்கு வருபவர்கள் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவோம் என பல்வேறு உறுதிமொழிகளை வழங்கினாலும், அவர்களின் வாழ்க்கை என்னவோ இன்னமும் ‘இடம்பெயர்ந்தவர்கள்’ என்ற பெயருடனேயே தொடர்கிறது.

வடக்கு, கிழக்கு மாகாண மாவட்ட செயலக புள்ளி விபரங்களின் அடிப்படையில், சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து இன்னமும் நலன்புரி முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றார்கள்.

யாழ் மாவட்டத்தின் நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களின் நிலைமை பற்றி அறிவதற்கு நலன்புரி நிலையத்துக்கு நேரில் சென்றால் உண்மை நிலைமையை அறிந்து கொள்ளலாம்.

அங்கிருக்கின்ற மக்களின் எதிர்பார்ப்புகள் யாவும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றன. முகாம் வாழ்க்கை போதும், சொந்த இடங்களுக்குச் சென்று நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே அவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.

இங்​கே எங்களுக்கு ஒரு துண்டு நிலம் கூட இல்லை. யாரோ ஒருவரின் காணியில் குடிசையைப் போட்டு இருக்கிறதால் காணி உரிமையாளர் தனது இடத்தை விடுமாறு சண்டைக்கு வாறார்.

நாங்க எங்கட பிள்ளைகளை கூட்டிக் கொண்டு எங்கதான் போறது? எனது மகளின் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்துக்கு போக கூட முடியாது.பிள்ளைகளின் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறம்,

எப்பிடி பள்ளிக்கூடம் போய் படிக்கிறது? என்றார் பல வருடங்களுக்கு முன்னர் பலாலியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் 82 வயது மூதாட்டி பொன்னம்மா. அவர் தழுதழுத்த குரலில் கூறிய கருத்துக்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தன.

சொந்த ஊருக்குப் போனா கூலி வேலை பார்த்து பிள்ளைகளை காப்பாத்துவம். எங்கட காலம் முடியப் போகுது.எங்கட பிள்ளைகள் சரி இனி நல்லா இருக்கட்டும் என்றால் அது கூட நடக்காது. நான் சாகும் போது சரி என்ட சொந்த மண்ணில சாக வேணும்’ என்கிறார் அவர்.

யுத்தம் மாத்திரமன்றி, சுனாமி போன்ற இயற்கை அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் தமிழ் மக்கள் பலர் வடக்கு, கிழக்கில் இருக்கின்றனர்.

வட மாகாண மக்களின் காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதுடன், கிழக்கு மாகாணத்தில் சுனாமி மற்றும் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகள் பலவற்றிலிருந்து இன்னும் வெளியேறவில்லை.

வடமாகாணத்தின் யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் பலர் நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்றார்கள்.

இவ்வாறான வாழ்க்கையானது அவர்களுக்கு கசப்புணர்வுகளை வழங்குவதுடன், இந்த இடம்பெயர்ந்த வாழ்க்கையானது அவர்களின் உரிமைகள் பலவற்றையும் மறுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் நில உரிமை, கல்வி உரிமை, மத உரிமை உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் குரல் எழுப்பி வருகின்ற போதும் அவற்றை எவரும் காதில் வாங்கிக் கொள்வதாகத் தெரியவில்லை.

யுத்தம், சுனாமி மற்றும் இராணுவ நில ஆக்கிரமிப்பு காரணமாக மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறி தமது உறவினர்கள் வீடுகளிலும், தரிசு நிலங்களிலும் குடிசைகளை போட்டு வாழ்க்கை நடாத்தி வருகின்றார்கள்.

நிலைமை வடக்கில் மாத்திரமன்றி கிழக்கிலும் தொடர்ந்தே வருகிறது.கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா பிரதேசத்திற்கு அண்மித்த கருமுலையூற்று என்ற கிராமம் உள்ளது. அங்கு முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது அந்தப்பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பின்னர், அக்கிராமத்துக் காணிகளை பாதுகாப்புப் படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

எனக்கு இப்ப 63 வயது. என்னோட பாட்டன் பூட்டி வாழ்ந்த பாரம்பரிய கிராமம். எங்கட பூர்வீக காணிகளையே பறிச்சுப் போட்டு அந்த காணிகள் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணி என்று சொல்றாங்க.

சுனாமியின் போது நாங்க எங்கட இடங்கள விட்டுப் போய் விட்டோம்.மறுகா வந்து பார்த்தா, எங்கட காணிகள இராணுவம் அபகரிச்சிட்டு, மற்ற பக்கம் பார்த்தா விமானப்படை எடுத்திட்டு.

நாங்க இப்ப வேறு காணிகள்ல இருக்குறோம். கடற்றொழில் தான் எங்கட வாழ்வாதார தொழில். நாங்க எங்கட தொழில கூட செய்ய முடியாம இருக்கு’ என்றார் அங்கு வசித்து வரும் பாத்திமா என்ற பெண்.

அதோட பார்த்திங்க என்டா, 4 பரம்பரைக்குரிய 400 வருட பாரம்பரியம் கொண்ட பள்ளிவாயல இராணும் இடிச்சுப் போட்டாங்க. நாங்க பல போராட்டங்கள செய்தப்ப, மலசலகூடம் கட்டுற மாதிரி சின்னதா எங்களுக்கு பள்ளிவாயல் என்டு கட்டித் தந்திருக்கிறாங்க.

நாங்க தொழுகைக்கு இங்க தான் வாறோம். மிகப் பெரிய பள்ளிவாசல் இருந்த இடம். எங்களுக்கு அதனைக் கொடுத்தா கட்டி இங்க தொழுகைய செய்வோம் என்றார் அவர்.

ஒருவர் தமது மதத்தை பின்பற்றுவதற்கும், அதனைக் கடைப்பிடிப்பதற்கும் காணப்படுகின்ற உரிமைகள் மீறப்படுவதை இங்கு எம்மால் அவதானிக்க முடிந்தது.

இடம்பெயர்ந்தவர்கள் என்ற காரணத்துக்காக அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

எங்கட பிள்ளைகளுக்கு கல்வி இல்ல, பள்ளிக்கூடம் ஒன்டு தற்காலி கொட்டில்லதான் இயங்குது. பிள்ளைகள் படிக்கிறாங்க. இப்பதான் புதுசா ஓரு பள்ளிக்கூடம் கட்டிட்டு இருக்கிறாங்க.

அந்த பள்ளிக்கூடம் திறந்த பிறகுதான் இனி எங்கட பிள்ளைகள் நல்ல படிப்பு படிக்க முடியும் என்கிறார் திருகோணமலை கருமலையூற்று சேர்ந்த பஸீர்.

எங்கட முப்பாட்டன் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, அன்பளிப்பாக கொடுத்த காணி இது. அதற்கான காகிதங்களும் எங்க கிட்ட இப்பவும் இருக்கு, அந்த காணியள கூட அரசாங்கம் தங்கட காணி என்டு சொல்றாங்க.

பாதுகாப்புப் படை காணிகளை தருவதாக இல்லை என்பது அவர்களுடைய அங்கலாய்ப்பாக இருந்தது. பிரிடிஷ் ஆட்சியின் போது வழங்கப்பட்டதாக கூறப்படும் காகிதங்கள் சிலவற்றையும் அவர்கள் எம்மிடம் காண்பித்தனர்.

கருமுலையூற்று (ஜும்மா பள்ளி வாசல்) கடந்த 2014 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் இடிக்கப்பட்டது.பள்ளிக்குரிய காணி விடுவிக்கப்படுவதாக இராணுவம் கூறிய போதும், இதுவரையில் அந்த மக்களுக்குரிய குடியிருப்பு காணிகள் கையளிப்பதற்கான எந்த வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை.

மறுபக்கம் பள்ளிவாசலுக்குரிய காணியை சுவீகரிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் புராதன சின்னமாக விளங்கிய பள்ளிவாசல் இராணுவத்தினரால் இடிக்கப்பட்டது என்பது அக்கிராம மக்களின் விசனமாகும்.

இங்குள்ள ஏறத்தாழ 1000 குடும்பங்கள் கடற்றொழிலை நம்பி வாழ்க்கை நடத்துகின்றன. அந்த குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது.

பாடசாலைகளுக்கான நிரந்தர ஏற்பாடுகள் எதுவும் இல்லாத சூழலில் தற்காலிக கட்டடத்தில் பாடசாலை இயங்கி வருகிறது. குவைத் அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து ஒரு பள்ளிக்கூடத்தினைக் கட்டிக் கொண்டிருக்கின்றன.

இது போன்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வடக்கிலும், கிழக்கிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றன.

எதிர்பார்ப்புகள் தொடர்ந்தும் ஏமாற்றம் தருவதாகவே அமைந்துள்ளன. காணி விடுவிப்பை வலியுறுத்தி வடக்கின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருந்த போதும் அதற்கான சரியான சமிக்ஞைகள் அரசிடமிருந்து வரவில்லையென்பது துரதிர்ஷ்டவசமாகும்.

குறிப்பாக வடக்கில் யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து குடாநாட்டில் வந்து வசிப்பவர்களை ஒதுக்கி வைத்துப் பார்க்கும் மனோநிலையொன்று காணப்படுகிறது.

இடம்பெயர்ந்தவர்கள் என்றால் சமூகத்தில் அவர்களும் பிரஜைகள் இல்லையா? அவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்களா?.

யுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வசிக்க வழியின்றி தற்காலிக கொட்டில்களிலும், உறவுகளின் வீடுகளிலும் தங்கியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி பல்வேறு உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி, சர்வதேச நியமங்களுக்கு அமைய இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.

 

முல்லைத்தீவு பெருங்கடலில் இருந்து கரையேறும் கடல்பாம்புகள்!!

 
முல்லைத்தீவு பெருங்கடலில் கடல்பாம்புகள் சில கரை ஏறுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாவட்டத்தில் தொடர்ந்து பல நாட்களாக வறட்சி நிலை ஏற்பட்ட நிலையில் தற்பொழுது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கடலின் இயற்கைச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டிருகின்றது. அதனால் இவ்வாறு கடல்பாம்புகள் கரை ஏறுகின்றது என்று கரையோரப் பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு கடல்பாம்புகள் கரை ஏறுவது அரியதொரு சம்பவமாகவே தான் அறிவதாக அப்பகுதி முதியவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கரை ஏறும் பாம்புகள் மண்ணில் ஊர்ந்து செல்ல முடியாமலும் மீள கடலுக்கு செல்ல முடியாமலும் இருந்துள்ளதால் அந்தக் கடல்பாம்புகளை பிடித்து மீள கடலில் விட்டுள்ளதாகவும் அப்பகுதி மீனவர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சைபர் தாக்குதல் தீவிரம் : பாரிய நெருக்கடியில் உலக நாடுகள்!!

உலகிலுள்ள பிரதான நிறுவனங்கள் பலவற்றை இலக்கு வைத்து மீண்டும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் கப்பமாக பணம் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு சமமான ஒன்றே மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா, உக்ரைன், ரஷ்யா, டென்மார்க், ஸ்பெய்ன், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதான நிறுவனங்களின் கணினி கட்டமைப்பை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உக்ரைன் அரச நிறுவனம், கிவ் விமான நிலையம், உக்ரைன் மத்திய வங்கி, என்டநோவ் விமான தயாரிப்பு நிறுவனம், ரஷ்ய எண்ணெய் நிறுவனம் மற்றும் டென்மார்க் கடற்படை நிறுவனங்களும் இதில் அடங்கும்.

இந்த சைபர் தாக்குதல் எந்த நாட்டில் இருந்து எந்த நபரால் அல்லது குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளதென இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந் தாக்குதலினால் வின்டோஸ் கணினி கட்டமைப்பின் நடவடிக்கை முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல நாடுகளை முடக்கி போட்ட சைபர் தாக்குதல், வடகொரியாவிலிருந்து செயற்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.