இலங்கையில் 70 சதவீதம் மரணங்கள் ஏற்படுவதற்கான காரணம் : வெளியான தகவல்!!

இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதம் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் நேர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது நாட்டு மக்களில் 34.8 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 64 சதவீதமானோர் இதற்கு எவ்வித மருந்துகளையும் பயன்படுத்தவில்லை என கூறியுள்ளார்.

 

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!!

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்த பெறுமதி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபா வரையில் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.

தங்க விலை நிலவரம்

இதேவேளை கடந்த சனிக்கிழமை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 246,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 266,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் இன்று 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்று 260,000 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

யாழில் பெற்றோர் சண்டையால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் பெற்றோர் சண்டையால் 19 வயது மாணவி உயிரை மாய்த்துள்ள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் துயர சம்பவம் கடந்த 9ம் திகதி இடம்பெற்றுள்ளது. யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவியின் தாயும் தந்தையும் வீட்டில் சண்டை பிடித்ததாகவும் இதனையடுத்தே குறித்த மாணவி உயிர்மாய்த்ததாகவும் அயலவர்கள் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கையில் பஸ் சாரதியின் செயல் : திட்டித்தீர்க்கும் சமூக ஆர்வலர்கள்!!

இலங்கையில் பேருந்து சாரதி ஒருவர் தொலைபேசியை அவதானித்தபடி பயணியுடன் சண்டை பிடித்துக்கொண்டு பேருந்து ஓடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழர் பிரதேசத்தில் குறித்த பேருந்தின் சாரதி கையில் போனை வைத்துக்கொண்டு சண்டை பிடித்த வண்ணம் பேருந்தை ஓட்டுகிறார். பேருந்தில் இருந்து பெண் ஒருவர் இறக்கத்தில் இறங்க முன்னரே சாரதி பேருந்தை இயக்கியதாக பயணி ஒருவர் சண்டை பிடித்துள்ளார்.

அந்த பயணியுடன் கடும் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுக்கொண்டே சாரதி , பேருந்தை செலுத்தியுள்ளார். அதேவேளை கடந்த நாட்களில் இலங்கையில் பேருந்துகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த விபத்துக்களில் உயிரிழந்தோர் 40 ஐ அண்மித்துள்ளது. இந் நிலையில் பேருந்தில் , சண்டை பிடித்துக்கொண்டே வாகனத்தை செலுத்தும் சாரதியையும் சமூக ஆர்வர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

யாழில் இளம் யுவதி உயிரிழப்பால் பெரும் சோகம்!!

யாழ்ப்பாணத்தில் இன்று (13) அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சிறுப்பிட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த 22 என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : கவனம் ஈர்த்த தாயின் இறுதிக் கிரியை!!

கொத்மலை விபத்துகுள்ளான பேருந்தில் தன்னுயிரை தியாகம் செய்து, தன்னுடைய பிள்ளையின் உயிரை காப்பாற்றிய தாயின் இறுதி கிரியை, இன்று (13.05) மாலை 3 மணிக்கு இடம்பெற்றது.

கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்லா பகுதியில் நேற்று முன் தினம் (11.05) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர், 45 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில், தனது 9 மாதங்களேயான மகளை, காப்பாற்றுவதற்கு பெரும் பாடுபட்ட தாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அந்த தாய், சேயுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அந்த தாய் உயிரிழந்தார். அவருடைய 9 மாதங்களேயான குழந்தை, பேராதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில், தாய், தந்தை மற்றும் 9 மாதங்களேயான குழந்தையுடன், தங்களுடைய ஏனைய நான்கு பிள்ளைகளும் சிக்கியுள்ளனர். காயமடைந்த நான்கு பிள்ளைகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொஸ்லாந்தை மீறியபெத்த எஸ் கே டிவிசைனைச் சேர்ந்த இவர்கள், கண்டியிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சம்பவத்தில் மரணமடைந்த, திரு,திருமதி காசிநாதன், தனலட்சுமி ஆகிய இருவரின் பூதவுடல்களும், கொஸ்லாந்தை மீறியபெத்த எஸ் கே டிவிசைன் பொது மயானத்தில், செவ்வாய்க்கிழமை (13.05) மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தன்னுயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றிய அந்த தாயின் செயல் கண்ணீரை வரவழக்கும் அதேசமயம் தாயையையும் தந்தையையும் இழந்து தவிக்கும் சிறுவர்களின் நிலை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் : ஒருவர் பலி!!

செட்டிக்குளம்-பூவரசன்குளம் வீதியில் தட்டான்குளம் சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பக்கவாட்டு வீதியில் திரும்பிய மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரு சாரதிகளும் செட்டிகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அங்கு செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். செட்டிகுளம் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

யாழில் போதை ஊசியால் பறிபோன உயிர்!!

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவரை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணாது உறவினர்கள் தேடியுள்ளதுடன், பின்னர் தாயாரின் வீட்டிற்கு பின்னால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை ஊசி மூலம் ஹெரோயின் பாவித்ததன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணை, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வெசாக் தினத்தன்று நடந்த அசம்பாவிதம் : 19 வயது இளம் பெண் பலி!!

கொட்டாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பரவியதில் 19 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையை சேர்ந்த புடம்மினி துரஞ்சா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டின் சொத்து மற்றும் கூரைக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்த சிறுமியின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் வெசாக் கொண்டாட்டங்களை காண சென்றிருந்தபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுர தீயணைப்புத் துறையின் அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்த போதும் ஆனால் அந்த இளம் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதுடன் மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்கிஸ்ஸையில் இளைஞன் சுட்டுக் கொலை : இருவர் கைது!!

கொழும்பு – கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் கடந்த மே மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (12) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 மற்றும் 32 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது,

கல்கிஸ்ஸை, சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் கடந்த மே மாதம் 05 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றுக்கு முன்னால் இருந்த இளைஞன் ஒருவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளனர்.

இதன்போது அந்த இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்று நீ்ண்ட தூரம் ஓடியுள்ளார். ஆனால் துப்பாக்கிதாரிகள் இளைஞனை துரத்திச் சென்று நடுவீதியில் வைத்து சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

தெஹிவளை, ஓபன் பிளேஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!!

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின், கொத்மலை, ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே ஞாயிற்றுக்கிழமை (11.05.2025) அதிகாலையில் கெரண்டியெல்ல பகுதியில் சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது, 40 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பில் விசாரணை செய்ய முன்னால் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் 5 பேர் கொண்ட பொலிஸ் குழுவை பிரதி பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார்.

 

வவுனியாவில் காணாமல்போன தந்தையை 50 நாட்களாக தேடும் பிள்ளைகள் : உதவுமாறு கோரிக்கை!!

வவுனியாவில் காணாமல் போன தமது தந்தையினை 50 நாட்களுக்கு மேலாக பிள்ளைகள் தேடி வருவதுடன் அவரை கண்டால் உடனடியாக தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வவுனியாவிற்கு செல்வதாக தெரிவித்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே குறித்த நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0743022280 அல்லது 0758320499 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது!!

யாழ்பல்கலைக்கழக வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று (13.05) இடம்பெற்றது.

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பரிமாறி தமிழ்மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் இன்றுகாலை 11 மணியளவில் வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை வலிந்து காணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா இலுப்பையடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுகளில், பொதுமக்கள் பலர் உணர்வுபூர்வமாக வருகைதந்து கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெறும் வெசாக் கொண்டாட்டம் : பார்வையிட திரளும் பெருமளவிலான மக்கள்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வெசாக் பண்டிகை வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

மே மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் புத்தரின் பிறப்பு மற்றும் பரிநிர்வாணம் என்பவற்றை நினைவுபடுத்தி வெசாக் தினம் பௌத்தர்களால் முக்கிய ஒரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதற்கமைவாக வவுனியாவிலும் நகரப் பகுதியில் அமைந்துள்ள போதிதட்சனராமய விகாரையை மையமாக கொண்டு வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

பொலிஸ் நிலையம், அரச அலுவலகங்கள், நீதிமன்றம், சிறைச்சாலை என்பவற்றுக்கு முன்னால் வெசாக் கூடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா நகரிலும் பெளத்த கொடிகள் பறக்க விடப்பட்டு வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்டி வீதியில் அமைந்துள்ள போதிதட்சனராமய விகாரை மற்றும் அதன் முன்பாக வெசாக் கூடுகள், புத்தரின் பரிநிர்வாண நிலைய வெளிப்படுத்தும் காட்சிகள் என்பன வைக்கப்பட்டுள்ளதுடன், வெசாக் வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் காரணமாக தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் அதிகளாவிலான மக்கள் வெசாக் கூடுகளையும், வெசாக் காட்சிகளையும் பார்வையிட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.

இதனால் வவுனியா நகரில் இருந்து போதிதட்சனராமய விகாரை வரையிலான ஏ9 வீதிப் பகுதி சன நெரிசல் மிக்கதாக காணப்படுவதுடன், பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா சிறைச்சாலையில் இருந்து 7 கைதிகள் விடுதலை!!

வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை இடம்பெற்ற நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்தும் 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

நாடளாவிய ரீதியில் 388 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ வெசாக் தினத்தை முன்னிட்டு நேற்று (12.05) விடுதலை செய்யப்பட்டனர்.

இதன் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையிலும் சிறு குற்றங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டனர். வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் பி. டபிள்யூ.எச். மதுசங்க தலைமையில் கைதிகள் விடுவிப்பு இடம்பெற்றிருந்தது.

அவுஸ்திரேலியாவில் கோர விபத்து : ஸ்தலத்தில் பலியான இலங்கையர்!!

அவுஸ்திரேலியாவில் சம்பவித்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். டாஸ்மேனியாவின் Travellers Rest உள்ள Bass நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 28 வயதான தாரக விஜேதுங்க என்பவர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டவர் என தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த இடத்திலேயே இலங்கையர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஓட்டுநர் போதைப்பொருள் மற்றும் மது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் 4வது வேட்பாளராக தாரக விஜேதுங்க போட்டியிட்டு 21,200 வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.