லண்டனின் வடக்கு பின்ஸ்பெரி பார்க் பகுதியில் பள்ளி அருகே பாதசாரிகள் மீது வாகனம் ஒன்றினால் மோதி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் எனவும் இது ஒரு இனவாத தாக்குதல் என தற்போதைய சூழலில் அறிவிக்க முடியாது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும் குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
தற்போது சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு கருதி ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (19.06.2017) காலை 10.30 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
சத்தியத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் கடைசியில் சத்தியமே வெல்லும் , விசாரணைக்குழுவின் தீர்ப்பை முதல்வர் உதாசீனம் செய்வதா? , என பல்வேறு வாசகங்களை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது அவ்விடத்திற்கு வருகைதந்த வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்டத்தின் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்விடத்தில் பதட்டநிலை ஏற்ப்பட்டதுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்ப்பட்டது. தொடர்ந்து பொலிஸாரின் தலையிட்டினால் சுமுகமான நிலைக்கு வந்தது.
தற்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்ட இடத்தினை விட்டு சென்றதுடன் முதலமைச்சரின் ஆதரவாளர்களும் போராட்ட இடத்தினை விட்டு சென்றுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் 8வது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் நேற்று மல்லுகட்டின. ஆனால் இறுதியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதில் வீழ்த்தி முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது. தோல்விக்கு பிறகு இந்திய அணி தலைவர் விராட் கோலி கூறியதாவது..
தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் எனது முகத்தில் சிரிப்பு இருக்கிறது. அதற்கு காரணம், நமது வீரர்கள் இந்த தொடரில் ஆடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்த பெருமையும் பாகிஸ்தானையே சாரும். எல்லா வகையிலும் எங்களை தோற்கடித்து விட்டனர். அவர்களுக்கு வாழ்த்துகள்.
கிரிக்கெட்டில் சில நேரம் சிறு விஷயம் கூட பெரிய தாக்கத்தை (பஹார் ஜமான் நோ-பாலில் கேட்ச் ஆகி தப்பியது குறித்து) ஏற்படுத்திவிடும். ஆனால் இப்போது நாங்கள் தோற்று விட்டோம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு சென்று விட வேண்டும்.
நாணயசுழற்சியை வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது சரியான முடிவு தான். ஏனெனில் ஆடுகளம் ஆட்டம் முழுவதும் ஒரே மாதிரியாகவே இருந்தது’ என்றார்.
கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெஸ்பேவ வீதியின் நுகேகொட – சூரியவெவ மாவத்தையின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தை அண்மித்த பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் 119 அவசர அழைப்பு இலக்கம் ஊடாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாகவே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் 25 வயதான மத்துகம பகுதியை சேர்ந்த பிரியங்கா சங்கல்பனி குணசிங்க எனும் அழகுக்கலை நிலையம் ஒன்றில் சேவையாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் என நம்பப்படும் இளைஞன் கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் சந்தேக நபர் பொலிஸாருக்கு ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கொஹுவலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
‘கொலை செய்யப்பட்ட பெண் தனது காதலி எனவும் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பழைய கெஸ்பேவ வீதியில் மைதானம் அருகில் சென்றதாகவும் அங்கு அவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் அவரை கழுத்தறுத்து கொலை செய்ததாகவும் சந்தேக நபர் வாக்கு மூலம் அளித்துள்ளார். தமது காதலுக்கு இடையே மற்றொரு நபரின் காதல் விவகாரமும் தொடர்புபட்டதால் இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலைப் பகுதியை அண்மித்து மட்டும் 12 வெட்டுக் காயங்களும் உடல் முழுவதும் 20 வெட்டுக் காயங்கள் வரை காணப்படுவதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சடலம் மீட்கப்பட்ட இரவில் ஸ்தலத்துக்கு பொலிஸார் விசாரணைக்காக சென்றிருந்த போது இரத்தம் சொட்டும் கத்தியுடன் சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை இன்று கங்கொடவில நீதிமன் றில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவ டிக்கை எடுத்துள்ளனர்.
பிரான்ஸ் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்று பெரும்பான்மை இடத்தை பிடித்தது.
சமீபத்தில் நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 39 வயதே ஆன இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கி ஓராண்டுக்குள் வெற்றி வாகை சூடினார்.
ஜனாதிபதி தேர்தல் முடிந்ததையொட்டி கடந்த 11ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரான்ஸ் பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 577 ஆகும். அவற்றுக்கு நடந்த வாக்குப்பதிவில் பெரும்பான்மையான இடங்களில் ஜனாதிபதி மெக்ரானின் செஞ்சுறிஸ் கட்சி வெற்றி பெற்றது.
பிரான்சை பொறுத்த வரை எம்.பி., தேர்தலில் போட்டியிடுபவர்கள் 50 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும். இதற்காக 2 கட்டமாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் 50 சதவீத ஓட்டு கிடைக்காவிடில் குறைந்த ஓட்டுகள் பெற்றவர்கள் நீக்கப்பட்டு முன்னணியில் இருப்பவர்கள் மீண்டும் போட்டியிடுவார்கள். அவர்களில் 80 சதவீதம் வாக்குகள் பெறுபவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
முதல் சுற்று தேர்தலை வைத்து எத்தனை எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். என கணிக்க முடியாது. எனவே இன்று 2-வது சுற்று தேர்தல் நடந்தது. அதில் ஏற்கனவே நடந்த தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்றவர்கள் மட்டும் போட்டியிட்டனர்.
அதற்காக பிரான்ஸ் முழுவதும் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டு போட்டனர். வாக்கு பதிவு முடிந்ததும் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இதில், ஜனாதிபதி மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி மொத்தம் உள்ள 577 தொகுதிகளில் 355-ல் இருந்து 425 இடங்கள் வரை கைப்பற்றியது. பாராளுமன்ற தேர்தலில் அதிபரின் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேக்ரான் முன்வைத்த புதிய பொருளாதார திட்டங்கள், பிரிட்டனுடனான உறவு குறித்த கொள்கைகள் பாராளுமன்றத்தில் பெரிய எதிர்ப்பின்றி நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ரொத்தஸ் தோட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய பீ.வசந்தன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (19.06) காலை 6 மணியளவிலே அவரது வீட்டின் சமையலறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குடும்பதகராறே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் உறவினர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று(19.06.2017) காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போதே முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்ப்பட்டது.
குறித்த மோதலை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் வருகைதந்துள்ளதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.
LONDON, ENGLAND – JUNE 18: Pakistan captain Sarfraz Ahmed celebrates with a prayer after winning the ICC Champions Trophy Final between India and Pakistan at The Kia Oval on June 18, 2017 in London, England. (Photo by Gareth Copley/Getty Images)
சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் ரோஹித்,கோலி, டோனி உள்ளிட்டோர் துடுப்பெடுத்தாட்டத்தில் அசத்த தவறியமையால் இந்திய அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது. பகர் ஜமான் சதம் அடிக்க, பாகிஸ்தான் அணி முதல் முறையாக கிண்ணத்தினை கைப்பெற்றியது.
லண்டன் ஒவல் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில்,கிரிக்கெட் விளையாட்டு உலகின் ‘பரம எதிரிகள்’ என கூறப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ருமான் நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட முகமது ஆமிர் அணியில் சேர்க்கப்பட்டார்.
பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி, பகர் ஜமான் ஜோடி ஆரம்பத்துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கினர். பும்ரா 4 ஆவது ஓவரின் முதல் பந்தை ‘நோ போலாக’ வீச, பகர் கண்டம் தப்பினார். பின், இருவரும் சிறப்பாக துடுப்பாட்டத்தில் செயல்பட்டனர். அரை சதம் அடித்த அசார் (59) ரன்–அவுட்டானார். தொடர்ந்து அசத்திய பகர், ஒரு நாள் அரங்கில் முதல் சதம் அடித்தார். இவர் 114 ஓட்டங்களில் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார்.
பாபர் அசாம் 46 ஓட்டங்கள் எடுத்தார். பின், இணைந்த ஹபீஸ், வசிம் அதிரடியாக ரன் சேர்த்தனர். ஹபீஸ் அரை சதம் அடித்தார். முடிவில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 338 ஓட்டங்கள் எடுத்தது. ஹபீஸ் (57), வாசிம் (25) ஆட்டமிழப்பின்றி களத்தில் இருந்தனர். இந்தியா சார்பில் புவனேஷ்வர், பாண்ட்யா, ஜாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அமிர் வேகத்தில் முதல் ஓவரில் ரோஹித் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். பின், வந்த அணித்தலைவர் கோலியும் (5) இவரிடமே சிக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஷிகர் தவான் 21 ஓட்டங்களுடன் களத்தினை விட்டு வெளியேறினார். ஷாதப் சுழலில் யுவராஜ் சிங் (22) வெளியேறினார்.
இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி 4 ஓட்டங்களில் வெளியேற, ஜாதவ் (9) நிலைக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தினையும் ஆறுதலும் அளித்தார். அரை சதம் கடந்த இவர் 76 ஓட்டங்கள் பெற்றவேளை ஆட்டமிழந்தார். மற்றவர்களும் ஏமாற்ற, இந்திய அணி 30.3 ஓவரில் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆமிர், ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெறவிருந்த நிலையில், அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா, கிடாச்சூரி பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இன்று(18.06.2017) இடம்பெறவிருந்தது.
எனினும் குறித்த பொது நோக்கு மண்டபம் கட்சி கூட்டங்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும், கலந்துரையாடல் குறித்து பொது மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு முறையான அனுமதி பெற்றிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் கருணா மக்கள் சந்திப்பு
வவுனியா கிடாச்சூரி பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (18.06.2017) காலை 11.00 மணியளவில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெறவிருந்தது.
மக்களின் எதிர்ப்பினையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெறவிருந்த கூட்டமும் நிறுத்தப்பட்டு கிடாச்சூரி பகுதியிலுள்ள பொதுமகன் ஒருவரின் இல்லத்தில் 12.30 மணியளவில் கூட்டம் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன், உபதலைவர் சோமசுந்தரம் சிறீகரன், ஊடகப் பேச்சாளர் சூசைமுத்து வசந்தகுமார், பொருளாளர் கிருஷ்ணபிள்ளை உதயகுமார் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அண்மையில் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.
வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த சகோதரனும் அவரை அழைத்துச் செல்ல வந்த அவரின் தம்பியுமே இவ்வாறு உயிரிழந்திருந்தனர்.
செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த வேளையில் இருவரும் ரயிலில் மோதுண்டு அகால மரணமடைந்தனர்.
இந்நிலையில் செல்பி எடுக்க முயற்சித்து உயிரை பறிகொடுத்த சகோதரர்கள் பற்றி, அவர்களின் பாட்டி கண்ணீருடன் ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதில்,
“ரயில் ஒன்று வருவதாக கூறி கடைசி மகனுக்கு நான் சத்தமிட்டேன். இதன்போது திடீரென சிறிய மகன் ரயில் வீதியில் பாய்ந்து அண்ணன் இருக்கும் இடத்திற்கு வந்தார்.
வர வேண்டாம் என கூறிய நிலையில் தம்பியை காப்பாற்றுவதற்கு மூத்த மகன் பாய்ந்த போது இருவரும் ரயிலில் மோதுண்டுள்ளனர்.
இராணுவத்தில் சேவை செய்து ஓய்வு பெற்ற கோப்ரலான 49 வயதுடைய பிரசந்த பிரியங்கர ரணவீர மற்றும் ஓய்வு பெண் சிப்பாயான ஆ.ஏ.பண்டார மெனிக்கே தம்பதியினரின் மூன்று பிள்ளைகளில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த அநுராதபுரம் தூய ஜோசப் வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஷஷி மதுஷான் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறிக்காக சிங்கபூர் நோக்கி சென்றார். இந்த நிலையில் மூன்று வருடங்களின் பின்னர் நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.
தனது மகன் சிங்கபூரில் கற்கைகளை நிறைவு செய்து விட்டு சான்றிதழுடன் நாட்டுக்கு வருகின்றார். அவரை அழைத்து வருவதற்காக தாய், தந்தை, சகோதரர்கள், பாட்டி உட்பட உறவினர்கள் அந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.
அவர்கள் கட்டுநாயக்கவில் இருந்து அதிவேக வீதி ஊடாக கொழும்பிற்கு வந்து காலிமுகத்திடலில் நேரத்தை செலவிட்டுள்ளனர்.
பின்னர் கொள்ளுப்பிட்டியிலுள்ள சித்தியின் வீட்டிற்கு செல்வதற்கு அவர்கள் ஆயத்தமாகியுள்ளனர். அதன்போது கடற்கரைக்கு அருகில் ரயில் பயணிக்கும் இடத்தில் புகைப்படம் எடுப்பதற்காக வேனை நிறுத்துமாறு சிறிய மகன் தந்தை உட்பட அனைவரையும் கேட்டுள்ளார்.
“சிறிய மகன் தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என வாகனத்தை நிறுத்தினார். எனினும் நாங்கள் விரும்பவில்லை. பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி அண்ணனும் தம்பியும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
நானும் அந்த இடத்திற்கு சென்றேன். அதன் போது நேரம் 5.45 ஆகும். மின்விளக்குடன் ரயில் வருவதனை அவதானித்தேன். கடல் அலைகளின் சத்தம் காரணமாக ரயில் அருகில் வரும் வரை ரயில் சத்தம் கேட்கவில்லை.
ரயில் வருவதாக சிறிய மகனுக்கு நான் கூச்சலிட்டேன். இதன் பின்னர் சிறிய மகன் அண்ணன் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார். வரவேண்டாம் என கூறிய நிலையில் தம்பியை காப்பாற்றுவதற்கு ஷஷி முயற்சித்த போது ரயிலில் மோதுண்டனர்.
அதன் பின்னர் இருவரும் அந்த இடத்தில் விழுந்து கிடந்தனர். சிறிது நேரம் செல்லும் வரை அவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ஒருவரும் முன்வரவில்லை. பெரிய மகனின் கால்கள் வேறு வேறாக கிடந்தன. ஒரு காலை எடுத்து நான் முச்சக்கர வண்டியில் வைத்தேன்.
பாட்டி ஒருவரால் இதனை தாங்கிக் கொள்ள முடியுமா? சிறிய மகனின் தலை பகுதியை காணவில்லை. அம்மாவும் அப்பாவும் இதனை பார்த்து அழுதார்கள்.
சான்றிதழ் பெற்று வந்து அதனை எங்களிடம் காட்டாமலே எங்கள் பிள்ளை எங்களை விட்டு சென்று விட்டார்.. என அழுதவாறு பாட்டி சம்பவத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி மாலை கொள்ளுப்பிட்டிய ரயில் வீதியில் செல்பி எடுக்க முயற்சித்து ரயிலில் மோதுண்டு சகோதரர்கள் உயிரிழந்தனர்.
அனுராதபுரத்தை சேர்ந்த ஷஷி மதுஷான் ரணவீர என்ற 24 வயது இளைஞனும் தீக்ஷன ஷக்ஷான் ரணவீர என 12 வயது சிறுவனும் இவ்வாறு உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பற்ற இடங்களில் பொறுப்பற்ற வகையில் செல்பி புகைப்படங்கள் எடுப்போருக்கு இவர்களின் மரணம் ஒரு பாடமாக இருக்கும் என்பது உண்மை.
அண்மைக்காலமாக வட மாகாண சபைக்குள் நிலவிவரும் குழப்ப நிலையும் அதன் பின்னரான தீமானங்கள் மூலம் மாகாண சபைக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவும் தமிழ் பேசும் சமூகத்தின் எதிர்கால அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்கி இருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலை தொடர்பாக தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு அனுப்பியியுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் பேசும் மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்களுடன் உருவாக்கப்பட்ட வட மாகாண சபை ஊழலற்றதாக இருக்க வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
எனவே முதலமைச்சர் என்ற வகையில் அவர் தனது கடமையை செய்திருக்கின்றார். மேலும் அதனையே மக்களும் விரும்புகின்றனர். அதே நேரத்தில் வட மாகாணசபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்களே பதவி வகிக்க வேண்டும்.
ஏனெனில் நாட்டில் சிறுபான்மையாகவும் வடக்கில் பெரும்பான்மையாகவும் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்கள் சார்பாக எடுக்கப்படும் எதிர்கால நலன் கருதிய தீர்மானங்களுக்கு என்னைப்பொறுத்த வரையில் மாகாண சபைக்கு சிறந்த தலைமைத்துவத்தை கொண்ட முதலமைச்சராக விக்னேஸ்வரன் காணப்படுகின்றார்.
மேலும் கடந்த காலங்களில் நாட்டில் மிக முக்கியமான பதவி வகித்த தமிழர் ஒருவரை தமிழ் சமூகமே வீட்டுக்கு அனுப்புவது பொருத்தமான ஒன்றல்ல.
குற்றம் யார் செய்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
அந்த வகையில் முதலமைச்சர் தன் கடைமையை சரிவர செய்திருக்கின்றார் என்றே கருதுகின்றேன். அத்துடன் முதலமைச்சரின் நடவடிக்கை ஏனைய மாகாணங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகும்.
என்னுடைய ஆரம்பமும் வடக்கில் ஊழலுக்கு எதிரான அரசியல் பிரவேசமாக காணப்படுவதை மக்கள் அறிவர். அந்த வகையில் மாகாண சபை அமைச்சர்கள் மட்டுமன்றி மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதியாக இருந்தாலும் ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டிருப்பின் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், தவறிழைக்காதவர்களுக்கு தண்டனைகளை வழங்கப்படக்கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கின்றேன். இதுவே மக்களினதும் புத்திஜீவிகளினதும் எதிர்பார்ப்பாகும்.
அத்துடன் இந்த மாகாணசபை குழப்பநிலை காரணமாக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பத்தப்பட்ட தமிழ் சமூகத்தின் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த விடையத்தில் ஒருசில விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு மீண்டும் நாம் ஒற்றுமையான தமிழ் பேசும் சமூகம் என முன்னுதாரணம் காட்டுமளவுக்கு ஒரே கூரையின் கீழ் ஒன்றிணையுமாறு தாம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்குகளில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் வடமாகாண முதமைச்சரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு எத்தனிக்கும் அரசியல் சக்திகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
முதலமைச்சரின் நடவடிக்கை தமிழ் அரசியல் போக்கில் ஊழல்கள் செய்ய எத்தனிக்கும் அரசியல் வாதிகளுக்குப் பாடம் புகட்டுவதாகவும், தூய்மையான அரசியல் போக்கிற்கான ஒரு பலமான அத்திவாரமாகவும் அமையும் எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் பாராட்டி வரவேற்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக “வடமாகாண சபையில் தற்போது இடம்பெறுகின்ற அரசியல் செயற்பாடுகள் தொடர்பான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு” எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மூன்றாம் உலக நாடுகளின் சமகால அரசியல் தலைமைகளின் மத்தியில் அரசியல் வாதிகளின் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகக் காத்திரமான முடிவினைத் துணிகரமாக மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சரைப் பல்கலைக்கழகச் சமூகம் சார்பாகப் பாராட்டி நிற்கின்றோம்.
வடமாகாண முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கட்சிகளுக்கும், அதனைச் சார்ந்த அரசியல் வாதிகளிற்கும் தமிழ் மக்களின் குரலாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இக்கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகள் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழப்பதோடு மாணவர்களிடமிருந்தான எதிர்மறையான விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
தமிழ் மக்களின் கொள்கைகளையும், அபிலாசைகளையும் நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்லும் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல் கட்சிகள் மற்றும் அதனுடன் சார்ந்த அரசியல் வாதிகளின் நடவடிக்கையாகவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கருதப்படுகின்றது.
மேலும், இச் செயற்பாட்டிற்கு எதிராகவும், முதலமைச்சரின் நேர்மையான செயற்பாட்டிற்கு ஆதரவாகவும் நிற்போம் என்பதனை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவதுடன், புதிய முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவது, நீதியரசர் விக்னேஸ்வரன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என்று எந்த பிரகடனமும் செய்யப்படாமல் பெரும்பான்மையை நிரூபிக்க கோரவும் முடியும் என சட்டத்தரணியும், வட மாகாண சபை உறுப்பினருமான கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
புதிய முதலமைச்சர் என்ற சிபாரிசுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் சீ.வி.கே.சிவஞானம் பெரும்பான்மையை பெற்றுள்ளர். அத்துடன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. சபையில் நிச்சயமாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என உறுதியளித்துள்ளார்
ஆளும் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையாக 15 உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராகவும், 14 உறுப்பினர்கள் சார்பாகவும் உள்ளனர்.
சபையில் பெரும்பான்மையை நிரூபித்து அகற்றுவது, ஆளும் கட்சி தலைவர் ஒருவரை நியமித்து முதலமைச்சரை அகற்றுவது என அனைத்து தெரிவிற்குமான நிலைப்பாட்டில் உள்ளனர்.
சமரசத்திற்கான நடவடிக்கைகள் ஏதும் உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, சமரசத்திற்கான ஒரு கூற்றினைக்கூட தவறவிடமாட்டோம்.
சமரசத்திற்கான அனைத்து வாய்ப்புக்களையும் இறுதிவரை பயன்படுத்துவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பினூடாக வழங்கப்படவுள்ள ஒற்றையாட்சி அமைப்பின் கீழான 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஒத்த அதிகாரங்களுடன்கூடிய தீர்வுத்திட்டமொன்றுக்கு வடகிழக்கு தமிழர்களை தயார்படுத்துவதோடு அதற்குத் தடையாகவுள்ள விக்னேஸ்வரனை வெளியேற்றுவதே பிரதான இலக்கு என சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் சுயமாக இயங்குவதற்கான எந்தவொரு அதிகாரத்தையும் கொண்டிராத முதலமைச்சர் ஒருவரினால் சுயமாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தொடர்பாக தமிழரசுக்கட்சி முன்வைக்கும் வாதங்கள் வரவுள்ள புதிய அரசியலமைப்பினூடாக வடகிழக்கு தமிழர்களுக்கு வழங்கப்படவுள்ள அதிகாரங்கள் தொடர்பில் நியாயமான சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
மாகாண சபை ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மைகளை அறிந்துகொள்ள விசாரணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கு முதலமைச்ருக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அதிகாரம் இல்லை என்பதை தமிழரசுக் கட்சியின் சட்டவல்லுனர்கள் தெரிந்தும்கூட, மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடாக விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அவ்வாறு தமிழரசுக்கட்சி உறுப்பினர்களின் தூண்டுதலினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் மூலமாக ஒருபுறம் ஒற்றையாட்சி அமைப்பினுள் மாகாணசபையை இயங்கவைப்பதற்கும் மறுபுறம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்றவும் சதி செய்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் விக்னேஸ்வரன் வடமாகாண மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலமைச்சர். ஆனாலும் அந்த நிறைவேற்று அதிகாரத்திற்குள் என்னென்ன விடயங்கள் இருக்கின்றது என்பது சட்டத்தில் தெளிவாக இல்லை. இருந்தாலும் தற்துணிவுடன் விசாரணைக்குழுவை அமைத்தார்.
இவ்வாறு விசாரணைக்குழு அமைக்கப்பட்டதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட சமூகம் ஒன்றினால் ஜனநாயகரீதியாக தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையொன்றின் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகளை விசாரித்து மக்களிடத்தில் நம்பிக்கையைக் கட்டயெழுப்பியுள்ளார்.
மத்திய அரசாங்கத்திற்குரிய அதிகாரங்களை மாகாண அமைச்சர்கள் மீது பிரயோகித்ததன் மூலம் அவர் தனது அதிகார வரம்பையும் மீறி செயற்பட்டார் என அறிக்கையிட்டிருப்பது ஆபத்தானது. ஆகவே இந்த அறிக்கையின் மூலமாக விசாரணைக்குழு உறுப்பினர்களின் நம்பகத்தன்மையயும் அவர்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்தும் அவர்களது நிபுணத்துவம் பற்றியும் சந்தேகங்கொள்ளவைக்கிறது.
நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாண நிரலிலுள்ள அதிகார விடயங்கள் மாகாணசபையின் கீழான குறித்த அமைச்சுக்குரியவை. இந்த அதிகார விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மாகாண அமைச்சு எடுக்க முற்படுகின்றபோது அது மத்திய அரசுக்கான விடயம் என்று அரசியலமைப்பின் உறுப்புரைகளை வியாக்கியானம் செய்யும்வகையில் அறிக்கையிடும் அதிகாரம் மாகாணசபையின் கீழான எந்தவொரு விசாரணைக்குழுவுக்கும் கிடையாது என்பதுடன் அதனை அதிகார துஷ்பிரயோகமாக கொள்ளவும் முடியாது.
இந்த விசாரணைக்குழு அறிக்கையினை வைத்துக்கொண்டு அரசின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி மறைமுகமாக, புதிய அரசியலமைப்பினூடாக வழங்கப்படவுள்ள ஒற்றையாட்சி அமைப்பின் கீழான 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஒத்த அதிகாரங்களுடன்கூடிய தீர்வுத்திட்டமொன்றுக்கு வடகிழக்கு தமிழர்களை தயார்படுத்துவதோடு அதற்குத் தடையாகவுள்ள விக்னேஸ்வரனை வெளியேற்றுவதே பிரதான இலக்கு.
இதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையை நியாயப்படுத்துவதனூடாக இலங்கை அரசாங்கத்தின் ஒற்றையாட்சிக் கோட்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் நோக்கில் தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சாம்பல் நிற கங்காரு அளவிலான ‘பறக்கும் ராட்சத வான்கோழி’ போன்றதொரு பறவை முற்காலத்தில் இருந்ததாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, அழிந்து போய்விட்ட பறவையினங்களில் ஒன்றாகும்.
இலை குப்பைகளைக் கொண்டு நிலத்தில் மண்மேடுகளை உருவாக்கி, முட்டையிட்டு, புதைத்து வைப்பதற்கு பேர்போன நவீன கால மல்லீ ஃபவுல் (Mallee Fowl) பறவையின் முற்கால பறவை உறவினம் தான் இந்த சாம்பல் நிற கங்காரு அளவிலான ‘பறக்கும் ராட்சத வான்கோழி’
இருப்பினும், இந்த ‘பறக்கும் ராட்சத வான்கோழியான’, ப்ராகுரா காலினாசியாவிற்கு, மல்லீ ஃபவுல் பறவை பெற்றிருக்கும் பெரிய பாதங்களோ, தனி சிறப்பு மிக்க கூர்நகங்களோ இல்லை என `ராயல் சொசைட்டி` சஞ்சிகையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மாறாக, இந்தோனேஷியாவிலும் பசுபிக்கிலும் வாழும், இன்றும் மணல் மேடு கட்டி குஞ்சு பொரிக்கும் சில பறவையினங்களைப் போல, ப்ராகுரா காலினாசியா வெப்பமான மணல் அல்லது மண்ணில் தங்கள் முட்டைகளைப் புதைத்து வைத்துள்ளன.
அடிலெய்டிலுள்ள ஃபிளின்டஸ் பல்கலைக்கழகத்தின் குழு ஒன்று புதிய மற்றும் புதை படிவ எச்சங்களை ஆய்வு செய்திருக்கிறது.
இவற்றில் சில மாதிரிகள் முதன்முதலில் 1800களில் சேகரிக்கப்பட்டவை. புதிய மாதிரிகள் அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள புகழ்பெற்ற தைலாகோலியோ காவெர்ன்ஸில் இருந்து கிடைத்தவை. இங்குதான் சுண்ணாம்புக் குழாய்களால் எண்ணற்ற முற்கால விலங்குகள் அழிந்ததாகக் கருதப்படுகிறது.
மணல் மேடு கட்டி குஞ்சு பொரிக்கும் அழிந்துவிட்ட பறவையினங்களில் ப்ராகுரா காலினாசியா மிகவும் பெரியதாகும்.
11,700 ஆண்டுகள் முதல் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான பிளாய்ஸ்டோசீன் காலத்தில் இந்த பறவையினங்கள் எல்லாம் வாழ்ந்துள்ளன.
அழிந்துபோன பல பெரிய பறவைகளில் டோடோ போன்றவை பறக்க முடியாதவையாக இருந்தாலும், ப்ராகுரா காலினாசியா நிச்சயமாகப் பறந்திருக்க முடியும் என ஃபிளின்டஸ் பல்கலைக்கழக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வலுவான இறகு எலும்புகளைக் கொண்ட இது, மரங்களில் தங்கியதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மணல் மேடு கட்டி குஞ்சு பொரிக்கும் முற்கால பறவையினங்கள் பற்றிய இந்த ஆய்வு “ஒபன் சைன்ஸ்” பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப்போகிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence – AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதைக் கணக்கிட்டு கூறுகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருந்தமை தெரியவந்தது.
ஒருவரின் உடலில் எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கணிப்பது மிகவும் உபயோகமானது. ஏனெனில், அதற்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அதிலும், ஒருவர் எவ்வளவு ஆண்டுகாலம் வாழ்வார் என்பதை மருத்துவர் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான ஒன்று.
அந்த வகையில், ஒருவரின் உடலுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தையும் கண்டுபிடிக்க, இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.
இந்த கண்டுபிடிப்பானது மருத்துவ பீட பகுப்பாய்வுத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒரு புதிய வாயிலை திறந்துள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் நோய்களை வரும் முன்பே கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை முன்கூட்டியே அளிக்க உதவும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.