இலங்கையில் அறிமுகமாகும் அதி நவீன Audi கார்!!

 
ஜேர்மன் தயாரிப்பான Audi ரக வாகனத்தின் Audi Q2 SUV கார் தற்போது இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பம் மற்றும் அலங்காரத்துடன் நிர்மாணிக்கப்பட்டு இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காரினை 9.5 மில்லியன் ரூபா என்ற ஆரம்ப விலையில் Audi கார் விற்பனை காட்சி அறைகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

Audi Q2 வாகனத்தினுள் ஐந்து பேர் இலகுவாக பயணிக்க கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் கொண்டு செல்வதற்காக அந்த காரில் பெரிய இடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆசனங்கள் ஒவ்வொன்றும் தனி தனியாக உயர்த்தவும் கீழ் நோக்கி கொண்டு செல்லவும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

Turbocharged என்ஜினை Audi Q2 SUV கொண்டுள்ள இந்த கார், குறைந்த அளவிலான நிறையை கொண்டுள்ளது. அதி வேகமாக பயணிப்பதற்காக இவ்வாறு நிறை குறைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த காரினை கொள்வனவு செய்வதற்கு கனவு காணும் வாடிக்கையாளர்களுக்காக விசேட விலை ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Audi Sri Lanka நிறுவனத்தினர் இயக்குனர் ரஜீவ் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை இலக்கம் 3 ஆர்.ஏ.டி.மெல் மாவத்தை, கொழும்பு 5 என்ற இடத்தில் அமைந்துள்ள Audi காட்சியறையில் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

என் வாழ்வில் நிச்சயமாக மீண்டும் திருமணம் நடைபெறும் : அமலா பால்!!

தன் வாழ்வில் நிச்சயமாக மீண்டும் திருமணம் நடைபெறும் என அமலா பால் கூறியுள்ளார்.

‘சிந்து சமவெளி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அமலா பால். ‘மைனா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.

தொடர்ந்து நடித்த படங்கள் அமலா பாலுக்கு நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்தன. பல விருதுகளையும் அவர் பெற்றார்.

‘தெய்வத் திருமகள்’ படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்தார். 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இரண்டு வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்தது. 2016 இல் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தை அணுகினார்கள். கடந்த பெப்ரவரி மாதம் அமலா பால் சட்டப்படி இயக்குனர் ஏ.எல்.விஜய்யைப் பிரிந்தார்.

அதன் பிறகு, நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘திருட்டுப் பயலே-2’ மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், “திருமணம் என்பது முழுவதுமாக வெறுத்து ஒதுக்கும் வி‌டயம் அல்ல. என் வாழ்வில் மீண்டும் நிச்சயமாக திருமணம் நடைபெறும். என்றாலும், அதற்கு இன்னும் நேரம் வரவில்லை. இப்போது என் கவனம் நடிப்பின் மீது மட்டுமே இருக்கிறது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமலா பால்.

 

மதுக்கடைக்குள் நுழைந்த மயிலால் 500 அமெரிக்க டொலர்கள் நட்டம்!!(வீடியோ)

அமெரிக்காவில் மதுக்கடைக்குள் நுழைந்த மயில் ஒன்று அங்கிருந்த மது போத்தல்களை உடைத்து, கடைக்காரருக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தென்மேற்கு மாநிலமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து 13 மைல் தொலைவில் அர்காடியா எனும் நகரம் உள்ளது.
சான் கேப்ரியல் மலைத்தொடரின் அடிவாரப் பிரதேசமான அர்காடியாவில் வண்ணமிகு மயில்கள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

இதனால், இப்பகுதியில் பறவை வேட்டையில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், அர்காடியாவின் அருகில் உள்ள நகரமான சான் பெர்னார்டினோவில் மயிலொன்று மதுக்கடைக்குள் நுழைந்து விட்டது.

மதுக்கடை உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, மயிலைப் பிடிக்க விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் கையில் வலையுடன் கடைக்குள் நுழைந்தனர்.

அதிகாரிகளின் வலையில் சிக்காமல், மதுக்கூடத்தில் அங்குமிங்கும் ஓடித்திரிந்த மயிலால் மதுப்போத்தல்கள் பல உடைந்தன.

இறுதியில் ஒரு வழியாக மயிலை வலையில் சிக்க வைத்த அதிகாரிகள் அதனை வெளியே எடுத்துச் சென்றனர்.

90 நிமிடங்கள் வரை அதிகாரிகளை மயில் பாடாய்ப்படுத்தியுள்ளது.

சேதமடைந்த மதுப்போத்தல்களின் விலை மட்டும் 500 அமெரிக்க டொலர்கள் என மதுக்கடை உரிமையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 30ஆக உயர்வு!!

லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள கிரென்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் பற்றி முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட லண்டன் பிரதர் திரேசா மே தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஐ விட அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தீ விபத்தில் காயமடைந்த 24 பேர் தற்போதும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களோடு தன்னுடைய நினைவுகளும், பிரார்த்தனைகளும் இருப்பதாக சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிரித்தானிய இளசவரசி எலிசபெத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை வருகின்றது சிம்பாவே அணி!!

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­டு­வ­தற்கு இலங்­கைக்கு இம்­மாத இறுதியில் சிம்பாவே அணி சுற்றுப் பயணம் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ளது.

அதன்­படி இங்கு வரும் சிம்பாவே அணி இலங்­கை­யுடன் மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரிலும், ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் மோத­வுள்­ளது. இந்தப் போட்­டிகள் அனைத்தும் காலி மற்றும் பல்­லே­கல ஆகிய மைதா­னங்­க­ளி­லேயே நடை­பெ­ற­வுள்­ளன.

சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரை­யி­று­திக்கு முன்­னேறும் வாய்ப்பை தவ­ற­விட்ட இலங்கை அணி தற்­போது நாடு திரும்பி தங்­களின் வழக்­க­மான பயிற்­சி­களை முன்­னெ­டுத்து வருகின்றது.

இந்­நி­லையில் சிம்பாவே அணி­யு­ட­னான தொடரில் இலங்கை அணி தங்­களை மெரு­கேற்றிக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்­கின்­றது.

சிம்பாவே தொடர் முடிவடைந்ததும் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இந்திய அணி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவாதி கொலை வழக்கு திரைப்படத்தின் இயக்குனர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்ய நீதிமன்ற தடை!!

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ராம்குமார் என்ற இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலையை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அது தொடர்பான ‘டிரைலர்’ காட்சிகளும் வெளியானது. இதையடுத்து, இந்த திரைப்படத்தை தடைசெய்யும்படி, சென்னை போலீஸ் கமிஷனரிடம், சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவர் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், அந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வம், தயாரிப்பாளர் சுப்பையா, கதை ஆசிரியர் ரவி ஆகியோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு பிணை வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றில் 3 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பாஸ்கரன், மனு மீதான விசாரணையை வருகிற 21ம் திகதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை 3 பேரையும் கைது செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதியரசரே ஏன் நிரபராதிகளுக்கும் தண்டனை வழங்குகின்றீர்கள் : அமைச்சர் சத்தியலிங்கம்!!

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (17.06.2017) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரு அமைச்சர்கள் குற்றவாளிகள் எனவும் நானும் டெனிஸ்வரனும் நிரபராதிகள் எனவும் முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முதலமைச்சரினால் குற்றவாளிக்கும் நிரபராதிக்கும் வழங்கப்பட்ட தண்டனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது.

முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு அவருக்கு முழுமையான ஒரு அறிக்கையை வழங்கியுள்ளது.

ஏன் இந்த விசாரணைக் குழுவுடைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் அந்த விசாரணைக் குழுவினுடைய அறிக்கையை ஒரு பக்கத்திலே வைத்துவிட்டு அந்தக்குற்றம் செய்ததாக கூறப்படுகின்ற இரு அமைச்சர்களுக்கு தண்டனை வழங்குவதுபோல குற்றவாளிகள் இல்லை என்று இந்த விசாரணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்கும் என்ன காரணம்? அப்படி ஒரு மாதகாலம் கட்டாய ஓய்வு ( தேவை ஏற்பட்டால் கட்டாய லீவை நான் மேலும் நீடிப்பேன்) என்ற ஒரு நிபந்தனையுடன் என்னுடைய அமைச்சினுடைய முழுப்பொறுப்பையும் செயலாளர் ஊடாக தான் நிர்வகிப்பேன் என்று ஏன் முதலமைச்சர் கூறினார்.

அவர் ஒரு நீதியரசர். எங்களை விசாரித்தவர்கள் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள். அந்த இரண்டு நீதிபதிகளுடைய அறிக்கை ஏற்காமல் இப்படி ஒரு மாறான முடிவை முதலமைச்சர் எடுப்பதற்கு யார் அவரை துண்டினார்கள் அல்லது யார் அவரை பிழையாக வழிநடத்தினார்கள் என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கின்றது. ஆகவே தான் அந்த அவையிலிருந்து நான் வெளிநடப்புச் செய்தேன்.

அதிலிருந்து தான் அனைத்துப் பிரச்சனைகளும் ஆரம்பித்தது. எனக்கு எதிராக கொண்டவரப்பட்ட அறிக்கை உள்நோக்கம் கொண்டது என்னை பழிவாங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டள்ளதாகவே கருதுகின்றேன்.

அதைவிட மேலே சென்று முதலமைச்சர் ஒருவிடயத்தைச் சொன்னார், மத்திய அமைச்சர்களுடன் நாங்கள் சென்று நெருக்கமான உறவைப்பேணுவதாகவும் ஒரு விடயத்தைச் சொன்னார். எங்களுடைய மாகாணசபை அமைப்பிலே 13ஆவது திருத்தச்சட்டத்தில் இருக்கின்ற சொற்ப அதிகாரங்களோடு 30 வருட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவையை வழங்குவதற்கு நிதிப்பலமோ? ஆள்பலமோ? வடமாகாணசபையில் இல்லை.

மத்திய அமைச்சின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் இருக்கின்ற ஒரு சபையே வடமாகாணசபை. இந்த மாகாண சபை மத்திய அரசாங்கத்தின் உறுதுணை இல்லாமல் சுயமாக எழுந்து நிற்கக்கூடிய ஒரு சபை அல்ல. இது ஒரு அரசாங்கம் அல்ல. அகவே தான் நாங்கள் மத்திய அரசாங்கத்தினுடைய சுகாதார அமைச்சரோடு நான் தொடர்புகளை ஏற்படுத்தி என்னுடைய தனிப்பட்ட தேவைகளைச் செய்யவில்லை. எமது மாகாண மக்களுக்குத் தேவையான வேலைத்திட்டங்களைக் கொண்டு வந்து செய்தேன்.

என் மீது முதலமைச்சரின் விசாரணைக் குழுவினால் ஐந்து  குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவைகள் அனைத்தும்  உண்மைக்கு புறம்பானவை என மேலும் தெரிவித்தார்.

முழுமையான செவ்வியை இங்கே காணுங்கள்..

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!!

அடுத்த மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய முதலாவது கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் 10ஆம் திகதி முதல் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டிக்கான உதிரி பாகங்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பே கட்டண உயர்வுக்கான காரணம் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் முச்சக்கர வண்டிக்கான ஆரம்ப கட்ட கட்டணமாக 50 ரூபாய் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனியின் விலை இன்று முதல் குறைப்பு!!

சீனியின் மொத்த விற்பனை விலை 3 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், 1 கிலோகிராம் சீனி 99 ரூபாயிலிருந்து 96 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனை மாற்றுவது உறுதி!!

வட மாகாண முதலமைச்சரை மாற்றுவது உறுதி என தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், புதிய முதலமைச்சராக சீ.வி.கே.சிவஞானத்தை நியமிப்பதற்கு அதிக பெரும்பான்மை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அடுத்த படியாக பெரும்பான்மை வாக்குகளை சத்தியலிங்கம் பெற்றுள்ளதாகவும் தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெரும்பான்மையை நிரூபித்து எப்படியும் சீ.வி.கே.சிவஞானத்தை வட மாகாண முதலமைச்சராக்குவது உறுதி எனவும் தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் ஏற்பட்டால் வலி நிவாரணி மருந்தை உட்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கோரிக்கை!!

நாட்டில் தற்போது டெங்கு நோய் பரவி வருவது அதிகரித்துள்ளதால், காய்ச்சல் ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் எந்த சந்தர்ப்பத்திலும் வலி நிவாரணி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் பொதுக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் இணைப்பாளர் மருத்துவர் ஹசித திசேரா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் மருத்துவரிடம் சிகிச்சை பெறும் சந்தர்ப்பத்தில் நோயாளி வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுள்ளார என்பதை கேட்டறிய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் போது பெரசிட்டமோல் மருந்தை தவிர வேறு எதனையும் அருந்தக் கூடாது எனவும் உடனடியாக மருத்துவரை அனுகி சிகிச்சை பெற வேண்டும் எனவும் மருத்துவர் திசேரா குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோய் ஏற்பட்ட ஒருவர் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டால் மரணம் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் குறிப்பாக இளம் வயதினர் இந்த ஆலோசனையை பின்பற்ற வேண்டும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெங்கு நோய் காரணமாக மரணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்களை ஏமாற்றிய சுகாதார அமைச்சர் : சுகாதாரத் தொண்டர்கள் குற்றச்சாட்டு!!

 
வவுனியாவில் இன்று (17.06.2017) 45ஆவது நாட்களாக சுகாதாரத் தொண்டர்கள் தமது நியமனத்திற்கான போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் இன்று சுகாதார தொண்டர்களின் போராட்ட இடத்திற்குச் வருவதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் காலை 10.30 மணியவில் சென்று தனது வாகனத்திலிருந்தபடியே சுகாதாரத் தொண்டர்களை அழைத்து பேசிவிட்டு உத்தரவாதம் எதனையும் வழங்காமல் தம்தை எறமாற்றி விட்டுச் சென்றுவிட்டதாக சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண சுகாதார அமைச்சரினால் உள்வாங்கப்பட்டு வவுனியா மாவட்டத்தில் பல ஆண்டுகளாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றி வந்த சுகாதாரத் தொண்டர்கள் கடந்த 45 நாட்களாக தமது நியமனத்திற்காக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் : பதறிய மக்கள்!!

தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஒரு பகுதி தரைமட்டமாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தி நகரில் அமைந்திருக்கும் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31ஆம் திகதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்தது.

இதையடுத்து அரசு உத்தரவின் பேரில் கட்டிடத்தை முழுவதுமாக இடிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

கடந்த வாரம் இடிபாடுகளில் சிக்கி ஊழியர் ஒருவர் பலியானதால் கட்டிட இடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை கட்டிடம் இடிக்கும் பணி மீண்டும் துவங்கிய நிலையில், ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதையடுத்து அந்த பகுதியை சுற்றிலும் புகை மண்டலாக தற்போது காட்சியளிக்கிறது. இது குறித்து கட்டிட இடிப்பு ஒப்பந்ததாரர் பீர் முகமது கூறுகையில், கட்டிடத்தின் ஒரு பகுதி தானாக இடிந்து விழவில்லை. எங்களின் திட்ட மேற்பார்வையின் படியே இடிக்கப்பட்டது என கூறியுள்ளார்.

மிச்சமிருக்கும் பாதி கட்டிடத்தையும் இன்று மாலைக்குள் இடித்து விடுவோம் என கூறிய முகமது, இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

 

முதலமைச்சருடன் விரைவில் இணக்கம் ஏற்படும் : இரா.சம்பந்தன்!!

வடக்கு மாகாண சபையின் தற்போதைய முரண்பாடான நிலையை தீர்த்துக் கொள்வதற்கு தாம் தயார் எனத் தெரிவித்துள்ள த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் விரைவில் இணக்கம் ஏற்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனிடம் நேற்றிரவு தொடர்பு கொண்டு கேட்டபோது இவ் விடயம் சம்பந்தமாக அவர் கூறுகையில்,

இது தொடர்பில் கூட்டமைப்பு முடிவெடுக்க வேண்டும். குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் குற்றவாளிகளாக்கப்படாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதானால் அவர்களுடைய பதவிக்கு ஏற்புடையதல்ல. அவர்களுக்கு மாறாக எடுப்பதை அவர்களைப் பொறுத்தவரையிலோ அல்லது கட்சி க்கோ ஏற்புடையதல்ல.

ஆனால் இவ்விடயத்தை சுமுகமாக தீர்ப்பதற்கு விரும்புகின்றோம். அந்த முடிவும் முதலமைச்சர் கையில் தான் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

– வலம்புரி-

 

ரம்புட்டான் தோலினால் சிக்கிய திருடன்!!

வீடொன்றில் நுழைந்து 40 ஆயிரம் பெறுமதியான தங்க நகை மற்றும் பணம் திருடி சென்ற நபர் ஒருவர் ரம்புட்டான் தோலினால் பொலிஸாரிடம் சிக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நபர் வீசிய ரம்புட்டான் தோலை மொப்பம் பிடித்து சென்று பொலிஸாரின் உத்தியோகபூர்வ நாய் “ஆடிஸ்” சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளது.

உடகம தெற்கு பியதிலக்க மாவத்தை வீடொன்றில் நுழைந்த திருடன் ஒருரே இவ்வாறு சிக்கியுள்ளார்.

திருடுவதற்காக சென்ற குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் அருகில் இருந்த ரம்புட்டான் மரத்தில் ஏறி ரம்புட்டான் காய்களை பறித்து சாப்பிட்டு விட்டு தோலை வீட்டு வாசலில் வீசி சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்குள் நுழைந்த திருடன் அங்கிருந்த பணம் மற்றும் தங்க நகைகளை திருடி விட்டு தப்பி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய காலி பொலிஸ் உத்தியோகபூர்வ நாயை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பொறுப்பான பொலிஸ் கான்ஸ்டபிலுடன் நாய் அங்கும் இங்கு சென்றுள்ளது. பின்னர் வீட்டு வாசலில் கிடந்த ரம்புட்டான் தோலை நாய் மோப்பம் பிடித்துள்ளது.

பின்னர் அந்த ரம்புட்டான் தோலின் ஊடாக முன்னோக்கி சென்ற நாய் அருகில் இருந்து முச்சக்கரவண்டிக்குள் சென்றுள்ளது. அதனை தொடர்ந்து முச்சக்கரவண்டியில் இருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு பேரம் பேசப்படுகிறது : பா.டெனீஸ்வரன்!!

இந்திய அரசியல் மற்றும் தென் பகுதி அரசியல் போன்று என்னிடம் பேசப்படுகின்றது என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினை அடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

வடமாகாண சபையில் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 15 பேரும், முதலமைச்சர் தலைமையில் 15 பேரும் தற்போது இருக்கின்றனர். சி.வி.கே.சிவஞானம் தலைமையில் எங்களுடைய தரப்பில் எதிர்க்கட்சியையும் சேர்த்து 21 பேர் இருக்கின்றோம்.

இந்த நிலையில் இன்றைய தினம் சிலர் தொடர்பு கொண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தரப்பிற்கு வருமாறும் கேட்கிறார்கள். குறிப்பாக என்னிடம் தொடர்பு கொண்டு அமைச்சுப்பொறுப்பை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆனாலும் அமைச்சுப் பொறுப்புக்கு ஆசைபட்டு குறித்த செயற்பாட்டில் நான் இறங்கவில்லை. நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகவே இறங்கியுள்ளேன். அற்ப சொற்ப அமைச்சுப்பதவிக்காக நான் நீதியை கொன்றுவிட்டு வர முடியாது.

நடந்த பிழைகள் என்ன? என்பதினை ஏற்றுக்கொண்டு நகர வேண்டுமே தவிர, இரண்டு பகுதியிலும் மாறி மாறி பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதோ, மாறி மாறி கட்சி தாவுவதோ தீர்வு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.