வடமாகாண முதலமைச்சரின் எச்சரிக்கை!!

வடக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை கட்டுப்படுத்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள கூடிய நிலை ஏற்படலாம் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியின் பின்னணியில் மறைந்திருந்து எவராவது தகாத முறையில் நடந்து கொண்டால், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை அழைக்கக் கூடிய நிலைமை ஏற்படும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் மக்கள் தமது மனோநிலையை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கு நான் தலைவணங்குகிறேன்.

எனினும் அவர்களாகவோ அதற்குள்ளிருக்கும் சில கறுப்பாடுகளோ, எங்காவது தகாத முறையில் நடந்து கொள்வார்களானால், பொலிஸாரையும், இராணுவத்தினரையும் அழைக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.

அதனால், அவர்கள் ஆளுனரிடம் கொடுத்த மனுவை மீளப் பெற்றுக் கொண்டால் மக்களை நாம் அமைதிப்படுத்த முடியும்.

மக்களும் அளவுக்கு மீறிச் சென்று தமது மனநிலையை வெளிப்படுத்த முனையக் கூடாது. அவ்வாறு செய்தால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படும். அரசாங்கம் அதனைக் காரணமாக வைத்து நடவடிக்கை எடுக்கலாம்.

மக்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும், சில கறுப்பாடுகள் செய்யக்கூடும். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

லண்டன் விபத்தில் சிக்கிய இளம் தம்பதி : அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு பலி!!

மேற்கு லண்டனில் உள்ள 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இளம் தம்பதி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்கள் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த தீ விபத்தில் Gloria Trevisan மற்றும் Marco Gottardi என்ற தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இத்தாலி நாட்டை சேர்ந்த கட்டட கலை நிபுணர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தம்பதி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தொழிலுக்காக லண்டனுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 23வது மாடியில் குறித்த இளம் தம்பதி சிக்கியிருந்த நிலையில், அந்த பெண் தனது தாய்க்கு இறுதியாக அழைப்பு மேற்கொண்டுள்ளார்.

தாம் தீ விபத்தில் சிக்கியிருப்பதாகவும், காப்பாற்றுவதற்காக குழுவினர் வருவார்கள் என காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர்கள் காப்பாற்றப்படவில்லை. உயிரிழப்பதற்கு முன்னர் மீண்டும் தனது தாய்க்கு அழைப்பேற்படுத்தி இதுவரை செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி என குறிப்பிட்டு விட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (16.06.2017) மதியம் 12.30 மணியளவில் கஞ்சாவுடன் நின்ற இராணுவ வீரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

கிளிநொச்சி அக்கராயன் இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் தரங்ககுமார சேனவிரத்ன ( வயது 33) இன்று விடுமுறையைடுத்து அவரது சொந்த ஊரான மதவாச்சி நோக்கி பேரூந்தில் பயணித்த சமயத்தில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து 16 பைகளில் பொதி செய்யப்பட்ட 25 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இராணுவ வீரரை நாளைய தினம் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியா சட்டத்தரணிகள் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக பணிப்புறக்கணிப்பு!!

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையைக் கண்டித்தும் முதலமைச்சரின் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் இன்று(16.06.2017) பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

நீதிமன்றத்திற்கு செல்லாது தமது பணிப்புறக்கணிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் சட்டதரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சட்டத்தரணி கங்காதரன் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பிட்ட அமைச்சர்கள் பிழை செய்தார்களா, இல்லையா என்பது விசாரணை செய்து கண்டுபிடிக்கப்பட்ட வேண்டும். அது பற்றி நாம் எதுவும் கூற முடியாது. ஆனால் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒரு முறையற்ற செயல். இதனை சட்டத்தரணிகள் ஆகிய நாங்கள் வன்மையான கண்டிப்பதுடன், அதனை தமிழரசுக் கட்சியினர் மீளப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்குகளுக்கு சார்பாக ஆஜராகாது இன்று நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் : குற்றவாளிகள் நீதிபதியை தண்டிப்பதா என மக்கள் கேள்வி!!

 
வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (16.06.2017) காலை 10.30 மணியளவில் வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிகள் நீதிபதியை தண்டிப்பதா, எதிர்கட்சிகளோடு கூட்டு தமிழ் மக்களுக்கு வேட்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் சகுனிகளே வெளியே போ, , இளைஞர்கள் புரட்சி மக்கள் எழுச்சி விக்கி வெற்றி, மக்கள் தெருவில் மாகாணசபை திமிரில், எதிர்கட்சிகளோடு ஒப்பந்தம் மக்களுக்கு தீப்பந்தம் என பல்வேறு வாகசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

இப் போராட்டத்தில் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ம.தியாகராசா, இ.இந்திரராசா, ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா மாவட்ட பொது அமைப்பின் பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் , முச்சக்கரவண்டி சாரதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இப் போராட்டமானது சுமார் ஒரு மணிநேரம் மேற்கொள்ளப்பட்டதுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

வவுனியாவில் இளைஞர்கள் குழுவினர் 6 பேருக்கு 10ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!!

வவுனியாவில் 6பேர் கொண்ட இளைஞர் குழுவினருக்கு நேற்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 10வருட கடூழிய சிறைத்தண்டனையும் தலா 10ஆயிரம் தண்டப்பணமும் செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு வவுனியா பூந்தோட்டம் பகுதிக்குச் சென்ற முச்சக்கரவண்டியினை வழிமறித்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையின்போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 6 இளைஞர்களை சோதனை மேற்கொண்டபோது வாள்கள், கத்திகள், பொல்லுகள் கைக்குண்டு என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைகள் இடம்பெற்றதையடுத்து பிணையில் செல்ல அனுமதிவழங்கப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

நேற்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது முச்சக்கரவண்டியில் அபாயகரமான ஆயுதங்களை தமது உடமையில் வைத்திருந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த 6 பேரடங்கிய இளைஞர் குழவினருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேருக்கே 10வருட கடூழியச்சிறைத்தண்டனையும் தலா 10ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்தமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார். தீர்ப்பு வழங்கியவுடன் எதிரிகளின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே அமர்ந்திருந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது பொலிசார் சென்று அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியிருந்தனர்.

யாழ்.குடாநாட்டில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால்!!

 
வடக்குமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இன்று யாழ்.குடா நாடு முழுவதிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக யாழ். குடாநாட்டில் போக்குவரத்தும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. ஒருசில உணவகங்கள் மற்றும் மருந்தகங்களைத் தவிர அனைத்து வியாபார நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் என்பனவும் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

வரலாற்று சாதனை படைத்த விராட் கோஹ்லி!!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோஹ்லி நிகழ்த்தியுள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ண தொடரின் நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி 88 ஓட்டங்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 8000 ஓட்டங்களை அதி வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேற்றைய போட்டி கோஹ்லிக்கு 175வது போட்டியாகும்.

இதற்கு முன்பு தென்னாபிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸ் 182 போட்டியில் இந்த இலக்கைத் தொட்டதே சாதனையாக இருந்தது. அதை கோஹ்லி முறியடித்து இருக்கிறார்.

28 வயதான விராட் கோஹ்லி இதுவரை 27 சதங்கள், 42 அரை சதங்கள் உட்பட 8,008 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நோக்கி பயணித்த வான் விபத்து : மதகுரு உட்பட இருவர் பலி!!

 
மதவாச்சி பூணாவை பகுதியில் நேற்று​ (15.06.2017)​ மாலை 6.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் மதகுரு உட்பட இருவர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர் என மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த வான் எதிர் திசையில் வந்த முற்சக்கரவண்டியுடன் மோதுண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது முற்சக்கரவண்டி சாரதியும் இதில் பயணம் செய்த பௌத்த மதகுருவொருவரும் ஸ்தலத்தில் பலியாகியதுடன் வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா நகரெங்கும் கருப்புக்கொடிகள் மற்றும் முதலமைச்சருக்கு ஆதரவாக சுவரொட்டிகள்!!

 
வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி, அரச கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் தாங்கி சுவரொட்டிகள் வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக்கட்சியினாலும், சில வடக்கு மாகாணசபை உறுப்பினர்களாலும் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அதன் ஒரு கட்டமாக முதலமைச்சருக்கு ஆதரவாக இந்த சுவரொட்டிகள் வவுனியாவில் ஒட்டப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டுள்ளது.

மேலும் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கி வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMEI நம்பரை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்று தெரியுமா?

நாம் வெளியிடங்களுக்கு செல்லும் போது எதிர்பாராமல் மொபைல் போன் தொலைந்து விட்டால் உடனடியாக நாம் அந்த எண்ணுக்கு போன் செய்வோம்.

சுவிட்ச் ஓப் செய்யப்பட்ட பின் மொபைல் இருக்கும் இடத்தை கண்டறிய முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும்.

நம் அனைவரின் மொபைல் போனுக்கும் தனித்தனியாக IMEI நம்பர் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் நம் மொபைல் இருக்கும் இடத்தை எளிதாக கண்டறியலாம்.

IMEI நம்பர்

IMEI நம்பர் என்பது நம் மொபைலில் உள்ள 15 இலக்க எண்ணாகும். மொபைல் போன் எந்த நாட்டை சேர்ந்தது, தற்போது எந்த நெட்வொர்க்கில் உள்ளது என்பதை அறியப்பயன்படுகிறது.

பட்டரியின் பின் புறத்தில் IMEI நம்பர் ஆனது குறிப்பிடப்பட்டு இருக்கும். இதனை மொபைலில் *#06# என்னும் எண்ணுக்கு அழைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

2003ம் ஆண்டில் முதன் முதலாக அவுஸ்திரேலியாவில் தான் இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டது. போலியாக வரும் மொபைல் போன்களை அடையாளம் காணவே இது பயன்படுத்தப்பட்டது.

IMEI நம்பர் வைத்து மொபைல் இருக்கும் இடத்தை அறியலாம். இது மட்டுமல்லாமல் இந்த எண்ணை வைத்து மொபைல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும் எளிது.

மொபைலில் வேறு சிம் கார்டு பயன்படுத்தப்பட்டாலும் மொபைல் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது எளிது.

சாதாரண நபர்களால் மொபைலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவோ அல்லது மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளவோ இயலாது. ஆனால் மொபைல் நிறுவனங்களுக்கு இது சாத்தியமே.

எனினும் மொபைல் நிறுவனங்கள் அவ்வளவு எளிதாக இந்த விவரங்களை யாருக்கும் தருவதில்லை. சில ஹேக்கர்கள் இரகசியமாக இந்த வேலை செய்து மற்றவர்களின் விவரங்களை எளிதாக திருடிவிடுகின்றனர்.

லண்டன் தீ விபத்து : சடலத்தின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த நபர் கைது!!

 
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் 27 மாடிகளை கொண்ட Grenfell Tower என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த தீ விபத்தில் தற்போது வரை 17பேர் பலியாகியிருப்பதாகவும். 70-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பலர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை தீயணைப்பு படையினர் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தீவிபத்தில் இறந்துபோன நபரின் உடலை பொலித்தீன் பையில் வைத்து அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட குற்றத்திற்காக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தீவிபத்தில் இறந்து தப்பித்துக்கொள்வதற்காக கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்த போது அந்த நபர் உயிரிழந்துள்ளார், இதனால் அவரது உடல் அந்த இடத்திலேயே பொலித்தீன் பையில் போட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதனை நபர் ஒருவர் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். வெடிகுண்டு சம்பவங்கள், தீவிபத்து சம்பவங்களின் போது இறந்துபோனவர்களின் சடலம் தொடர்பான புகைப்படங்கள் மக்களின் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பொலிசார் சடலங்களின் புகைப்படங்களை எளிதில் வெளியிடமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியிருக்கையில், இந்த நபரின் செயல் தண்டனைக்குரியது என்பதால், இவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த குற்றத்திற்காக இந்த நபருக்கு குறைந்தபட்சம் 6 மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

லண்டன் தீ விபத்துக்கு காரணம் என்ன?

பிரித்தானியா தலைநகர் லண்டனில் Grenfell Tower என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர், 74 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது தீ விபத்துக்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.

கட்டிடத்தில் 2 அல்லது 3வது மாடியில் பழுதான நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்த குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட தீ குடியிருப்பு முழுவதும் பரவி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

சமீபத்தில் தான் கட்டிடத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. கட்டிடத்தின் வெளியே மரம், அலுமினியத்தால் செய்யப்பட்ட வேலைப்பாடுகளே தீ மளமளவென பரவியதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளில் லண்டனில் நடந்த மோசமான தீ விபத்து இதுவாகும்.

கட்டிடம் முழுவதும் சேதமடைந்து விட்டதால் இடிந்து விழும் அபாய நிலை ஏற்பட்டது, எனவே அருகில் வசித்தவர்கள் வேறு இடங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1974ம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டாலும், கடந்தாண்டு தான் பல மில்லியன் பவுண்ட் செலவில் புனரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அலங்கார வேலைப்பாடுகளில் கவனம் செலுத்திய நிர்வாகம் பாதுகாப்பு பணிகளில் செலுத்தியிருந்தால் மாபெரும் விபத்தை தவிர்த்திருக்கலாம்.

திருமணம் செய்து கொண்ட 3 ஆண்கள்!!

தென் அமெரிக்காவில் 3 ஆண்கள் திருமணம் செய்துகொண்டுள்ளது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாலினத் திருமணத்துக்கு அண்மைக் காலமாக பல நாடுகள் சட்டப் பூர்வமான அங்கீகாரத்தை அளித்து வருகின்றன.

தென் அமெரிக்க நாடு மூன்று ஆண்கள் செய்து கொண்ட மிகவும் மாறுபட்ட திருமணத்தை அங்கீகரித்திருக்கிறது.

இதற்கான ஆவணங்களில் மூன்று பேரும் கையெழுத்திட்டனர். இவர்களில் ஒருவர் கணவராகவும், மற்றவர்கள் அவருடைய துணைவர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.

கொலம்பியாவில் மூன்று பேர் செய்து கொள்ளும் திருமணம் ஆங்காங்கே நடைபெறுவதாகக் கூறப்படுவதுண்டு. ஆயினும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறை.

வளைகுடாவில் நெருக்கடி நிலை : இலங்கை வர தற்காலிக கடவுச்சீட்டு தயார்!!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டாரில் ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் அங்கு பணியாற்றும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக தற்காலிக கடவுச்சீட்டு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டாரிலுள்ள இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.

இலங்கை சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தூதரகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இது தொடர்பில் இலங்கையர்களிடம் அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கட்டாரில் சுமார் ஒன்றரை இலட்சம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

காருக்குள் மூச்சுத்திணறி இரட்டை சகோதரிகள் பலி : கதறும் பெற்றோர்!!

இந்திய மாநிலம் ஹரியானாவில் நிறுத்தி வைக்கப்ப்பட்டிருந்த காருக்குள் ஏறி தவறுதலாக கதவுகளை பூட்டிக் கொண்டு திறக்க முடியாததால் இரட்டைப் பெண் குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குர்கான் அருகிலுள்ள பட்டாடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் கோவிந்த சிங். இவரின் ஐந்து வயது இரட்டைப் பெண் குழந்தைகள் குருகிராம் மாவட்டத்தில் ஜமால்பூருக்கு தாத்தா வீட்டுக்கு தாயுடன் விடுமுறைக்கு சென்றுள்ளனர்.

அங்கு ஹர்ஷிதாவும், ஹர்ஷாவும் பழைய கார் ஒன்றில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் கதவுகள் தானாக மூடிவிட்டதாக கூறப்படுகிறது.

கார் கதவின் தாழ் பழுதாகியிருந்ததால் அதை திறக்க முடியாமல் போராடியுள்ளனர். கார் கதவின் கண்ணாடிகள் ஏற்றிவிடப்பட்டிருந்த நிலையில் அதையும் அவர்களால் திறக்க முடியவில்லை.

இதனிடையே காரினுள் சிக்கிக்கொண்ட குழந்தைகள் 2 பேரும் சத்தமிட்டுள்ளனர். காருக்குள் காற்றோட்டம் இல்லாததோடு, அதிக வெப்பமும் இருந்ததால், சில மணி நேரங்களில் மூச்சுத்திணறி இருவரும் மயங்கியுள்ளனர்.

சிறுமிகளை காணவில்லை என ராணுவ வீரர் பதட்டத்துடன் தேடியுள்ளார். காரினுள் இருக்கலாம் என சென்று பார்த்தபோது குழந்தைகள் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இதையடுத்து மூச்சுபேச்சு இல்லாமல் இருந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சகோதரிகள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரட்டைக் குழந்தைகள் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.