சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
வெளுத்ததெல்லாம் பால் என்ற எண்ணம் என்னிடம் இருப்பதால் எல்லோரையும் நம்பியிருந்தேன். இந்த எண்ணத்தில் தொடர்ந்தும் இருக்கிறேன்.
வடமாகாண சபையின் நடவடிக்கைகள் நிர்வாக ரீதியானதாக காணப்படுகின்றது. அதனால் அரசியில் கட்சிகளுடன் கூடிய தொடர்புகளை நான் பேணுவதில்லை. சிந்தனையில் நாம் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள்.
இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது நியாயமானது. ஆனால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக எவ்வாறு நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என இரா.சம்பந்தன் என்னிடம் வினவினார்.
ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்க சாட்சியாளர் விரும்புவதாகவும் அதேபோல் அவர்களுக்கு எதிராக மேலும் பல புதிய எழுத்து மூலமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நான் சம்பந்தனிடம் கூறினேன்.
எனவே அந்த இருவரும் தொடர்ந்தும் அமைச்சு பதிவிகளில் இருக்கலாம் எனவும் ஆனால் அவர்கள் அமைச்சின் அலுவலகங்களுக்கு செல்ல கூடாது எனவும் சம்பந்தனிடம் எடுத்து கூறியிருக்கிறேன்.
ஆனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவறு என்று எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதில் தவறில்லை. அது சரியானது தான் என்று நான் அவருக்கு தெரிவித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தலைமையுடன் அதாவது இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் எனக்கு எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன் – நானு ஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
நேற்று காலை 7 மணியளவில் பாடசாலை செல்வதற்காக 6 வயது சிறுமியொருவர் பாதசாரிக் கடவையைக் கடக்க முற்பட்ட போது, டிப்பர் வண்டி ஒன்று மோதி விபத்து நேர்ந்துள்ளது. ரதல்லை தோட்டத்தைச் சேர்ந்த சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தையடுத்து வாகனம் நிறுத்தாமல் முன்னோக்கிச் சென்றதினால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பிரதேச மக்களால் டிப்பர் வண்டிக்கு தீ மூட்டப்பட்டுள்ளது.
இதன் பின்னர் வாகன சாரதி நானு ஓயா பொலிஸில் சரணடைந்திருந்தார். எனினும், குறித்த சாரதி சம்பவ இடத்திற்கு வருகை தரும் வரை சிறுமியின் சடலத்தை அகற்ற அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை மறித்து பிரதேச மக்களினால் சுமார் 8 மணி நேரம் கவனயீர்ப்புப் பேராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் காரணமாக ஹட்டன் – நானு ஓயா பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. மேலும், பதற்ற நிலைமை அதிகரித்ததை அடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தார். அவரினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய, சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இதன் பின்னர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிற்பகல் 2.30 மணியளவில் கலைந்து சென்றனர். இதேவேளை, நானு ஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நானு ஓயா பொலிஸ் நிலையத்திலிருந்து அவரை நுவரெலியாவிற்கு இடமாற்றம் செய்துள்ளதாக பிராந்தியத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை அவரை தற்காலிகமாக இடமாற்றம் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாகன உலகம், எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் எரிபொருள் சவால்களுக்கு ஏற்றபடி, பி.எம்.டபுள்யூ நிறுவனம் இந்த ஆண்டில் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த ஆண்டில் பி.எம்.டபிள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிடுகிறது.
இத்தாலியில் பழங்கால கார்களுக்கான கண்காட்சி தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது, அப்போது பி.எம்.டபுள்யூ நிறுவனம் மோட்டார்ராட் கருத்தின் அடிப்படையில் அது உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்படவுள்ளது. இதில் செராமிக் எல்.இ.சி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது, ஆங்கில ”சி” எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது.
இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சம் உள்ளது, தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் இதில் உள்ளது.
டிஸ்பிளேயில் வண்டியின் வேகம், போகும் பாதை மற்றும் ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும்.
அட்டகாசமான தோற்றம், தொழில்நுட்பத்தில் தயாராக உள்ள பி.எம்.டபிள்யூ மோட்டார் ரெட் கான்செப்ட் ஸ்கூட்டரின் விற்பனை குறித்த விபரங்களை பி.எம்.டபுள்யூ நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பியன்ஸ் கிண்ணத்தொடரின் அரையிறுதியில் போராட்டமின்றி பங்களாதேஷ் அணியினை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சம்பியன்ஸ் கிண்ணத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி பங்களாதேஷ் அணியினை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.
அதன்படி முதலில் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்களை பெற்றது.பங்களாதேஷ் தமிம் இக்பாலை ஏழு நான்கு மற்றும் ஓர் ஆறு ஓட்டம் அடங்கலாக எழுபது ஓட்டங்களையும்,ரகிம் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். கடைசியாக அதிரடியாக ஆடிய மோட்ராசா ஐந்து நான்கு ஓட்டங்களுடன் முப்பதினைப் பெற்றார்.பந்து வீச்சில் பூம்ரா, புவனேஸ்வர் குமார், கேதார் யாதவ் தலா இரு விக்கெட்டுக்களையும் ஜடேயா ஒரு விக்கெட்டையும் கைப்பெற்றினார்கள்.
265 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களது விக்கெட்டுக்களை வீழ்த்த பங்களாதேஷ் வீரர்கள் கடுமையாகப் போராடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.தவான் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா சதம் அடித்தார். விராட் கோலி 96 ஓட்டங்களை எடுத்தார். இவர்களது ஆட்டத்தால் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 40.1 ஓவரில் 265 ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
129 பந்தில் 15 நான்கு, 1 சிக்சருடன் 123 ஓட்டங்களை பெற்ற ரோகித் சர்மா ஆட்ட நாயகன் தெரிவுசெய்யப்பட்டார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நேற்று முன்தினம் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாக கூறி வடமாகாண சபையின் 15 உறுப்பினர்கள் ஆளுநருக்கு இன்று பெயர் பட்டியலையும், சத்திய கடதாசியையும் சமர்பித்திருக்கின்றனர்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முறைகேட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தமையினையடுத்து வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேர் இணைந்து நம்பிக்கையில்லா பிரேரணையினை சமர்பித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (15.06.2017) இரவு 10 மணிக்கு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், க.சர்வேஸ்வரன் விந்தன் கனகரட்ணம் ஆகியோர் முதலமைச்சர் மீது நம்பிக்கை உள்ளது என 15 மாகாணசபை உறுப்பினர்களின் கையொப்பங்களையும் சத்திய கடதாசிகளையும் வழங்கியிருக்கின்றனர்.
இவர்களில் 2 பேர் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் என்பதுடன் மற்றயவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் சேர்ந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை மேற்படி பெயர்பட்டியலையும் சத்திய கடதாசியையும் சமர்பித்து மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றுகையில்,மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பித்திருக்கின்றனர்.
இதற்கிடையில் இந்த பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக முதலமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்.
இதனடிப்படையில் அவர்களுடைய நம்பிக்கையில்லா தீர்மானம் மீள பெறப்படவேண்டும். இல்லையேல் நாங்கள் மாகாணசபையில் முதலமைச்சரின் பெரும்பான்மையை நிருபிப்போம் அது தமிழர்களின் வெற்றியாக அமையும் என்றார்.
சினிமா கலைஞர்களின் வாழ்க்கையில் காதல் சர்ச்சை எப்போதுமே சுற்றிக்கொண்டே இருக்கும். இவர்களில் பலருக்கு வயது பெரிய தடையாக இருப்பதே இல்லை. சமீபத்தில் 60 வயது இயக்குனர் வேலு பிரபாகரன் 30 வயது நடிகையை திருமணம் செய்தார்.
அதே போல் பொலிவுட்டில் பல வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.
44 வயதான அனுராக் 23 வயது சுப்ரதா ஷெட்டி என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இவருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திவருகிறாராம்.
இவர் கடந்த 2015ல் தான் இரண்டாவது மனைவி நடிகை கல்கி கோச்சிலினை விவாகரத்து செய்தார். மேலும் இவரது மகளுக்கு வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.
பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவர்களில் வசதி குறைந்த மாணவர்களின் கல்வித்துறையை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நலன்விரும்பிகள் மூலம் கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகமூடாக பாடசாலை ஆசிரியர் அ.ரஞ்சன் கேட்டுக்கொண்டதற்கிணங்க லண்டனில் உள்ள V3 அமைப்பினர் நேற்று கற்றல் உபகரணங்களை வழங்கினர்.
இவ்வமைப்பின் உறுப்பினர் லண்டன் வாழ் தி.கிருபாகரன் தனது மகன் செல்வன் கி.அகழியனின் பிறந்ததினத்தை முன்னிட்டு செல்வி சி.துஸானிக்கு துவிச்சக்கர வண்டியை வழங்கினார். மேலும் V3 அமைப்பினர் 30 மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளையும் வழங்கியுள்ளனர்.
மாவட்ட சமூகசேவை அதிகாரி செ.ஸ்ரீநிவாசன், அபிவிருத்தி உத்தியோகத்ததர் எஸ்.கே.வசந்தன் மற்றும் எஸ்.புருசோத்தமன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
அதிபர் தனது உரையில் பல சவால்களை எதிர்கொண்டு இந்தக்கல்லூரிக்கு மாணவர்கள் கல்வி கற்க வருகின்றனர் .இவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை. அந்த வகையில் இன்று வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகமூடாக லண்டனில் உள்ள V3 அமைப்பினர் உதவிபுரிவதை நான் நன்றியுடன் வரவேற்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
மாவட்ட சமூகசேவை அதிகாரி செ.ஸ்ரீநிவாசன் மாணவர்கள் தமது கல்விக்கு மேலாக ஒழுக்கத்தை கண்ணெனப்போற்ற வேண்டும் அதை உயிராக மதிக்க வேண்டும் , ஒழுக்கம் ஏதாவது ஒரு கட்டத்தில் எமக்கு உயர்வைத்தரும் .பல விசமிகள் மாணவர்களின் ஒழுக்கத்தை சீர்குழைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலைகளின் அருகே இனந்தெரியாதோர் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டால் பாடசாலை சமூகமும் ஊர்மக்களும் அவற்றைத்தட்டிக்கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
வவுனியா முஸ்ஸிம் தேசிய பாடசாலையில் வவுனியா பட்டாணிச்சூர் அல் ஹிஜ்ரா விளையாட்டு கழகத்தின் ஏற்ப்பாட்டில் சமாதான நீதவான் A.M. றகீம் தலைமையில் A.R.M.லறீப் நெறிப்படுத்தலில் நேற்று முன்தினம் (14.06.2017) மாலை 5.30 மணியளில் இப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சமூக சேவையாளர்கள், வர்த்தகர்கள், சமயத்தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், ஊடகவியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் இன மன பேதங்களை கடந்து வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து சமயத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இளைஞர் சேவை மன்றத்திற்கான புதிய கட்டட தொகுதி நேற்று (15.06.2017) திறந்து வைக்கப்பட்டது.
வவுனியாவில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் இளைஞர் சேவை மன்றத்திற்கான புதிய கட்டட தொகுதி அமைக்கப்பட்டிருந்தது. தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் நிரோசன் பெரேராவினால் குறித்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது இளைஞர் சேவைகள் மன்றத்தில் கற்கும் மாணவர்களுக்கான விசேட உதவித் திட்டங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், ஜெயதிலக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார, கைத்தொழில் வாணிப அமைச்சின் இணைப்பாளர் முத்து முகமது, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இழைஞர் கழக சம்மேளத்தின் தலைவர் சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் நாளை (16.05.2017) காலை 10 மணிக்கு வவுனியா மத்திய பேரூந்து நிலையம் முன்பாக வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று (15.06.2017) மதியம் 3.30 மணியளவில் வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொதுஅமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போதே நாளைய தினம் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளன.
பிளாஸ்டிக் அரிசி சம்பந்தமாக போலியான தகவல்களை உருவாக்கிய நபர்களுக்கு எதிராக நட்ட நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தங்களில் பிளாஸ்டிக் அரிசி சம்பந்தமாக போலியான தகவல்களை உருவாக்கிய மற்றும் ஊக்குவித்த குழுக்கள் தொடர்பான தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு அந்த அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் கூறினார்.
மேலும், பிளாஸ்டிக் அரிசி சம்பந்தமாக போலியான சதி இதுவென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிக அரிய வகை திமிங்கிலங்கள் இனம் ஒன்று இலங்கையின் கடற்பரப்பில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தெற்கு கடலில் திமிங்கிலங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் குழுவொன்றினால் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. “ஒமுரா” என்ற பெயரில் இந்த திமிங்கில வகை அடையாளப்படுத்தப்படுகின்றது.
இந்த திமிங்கில இனம் தெற்கு மற்றும் வட அட்லாண்டிக் கடல், மேற்கு பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் வெற்று கண்களினால் இந்த திமிங்கிலங்களை காண்பதென்பது மிகவும் கடினமான விடயமாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த வகை திமிங்கிலங்கள் இலங்கையில் காணும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென அந்த குழுவினர் தெரிவித்துள்ளார்.
தெற்கு கடலில் கமராவில் பதிவாகிய புகைப்படங்கள் சிலவற்றை அந்த குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
1999 – 2000 ஆண்டு காலப்பகுதியில் இந்த திமிங்கிலங்களை வெற்று கண்களினால் காண்பதற்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு நோக்கி பயணித்த கௌனிவெலி புகையிரதத்தில் மோதி உயிரிழந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவிந்தி பபசரா ஜயசேகர (18 வயது) என்ற மாணவி நேற்று இரவு 8.05 மணியளவில் புகையிரத்தில் மோதி உயிரிழந்தார். இந்த நிலையிலேயே அவரது தந்தை இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்த மாணவியின் சடலம் தற்போது ஹோமாகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான கபட நாடகங்களுக்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக வடகிழக்கில் நாளைய தினம் பொது கடையடைப்பு ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்மக்கள் பேரவை இன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறுகிய முன் அறிவிப்பை பொறுத்துக்கொண்டு, இனத்தின் நலன்கருதி எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அனைவரும் இந்த கடையடைப்புக்கு ஆதரவு தரவேண்டும் என நாம் வேண்டுகிறோம்.
முதல்வர் மீதான நெருக்கடிகளின் உச்சமாக, இந்த முறைகேடுகள் குறித்த விசாரணையில் குறிப்பிடப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்குடன் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை சிறிலங்கா அரசின் அங்கத்தவர்களுடன் இணைந்து சில தமிழ் அரசியல்வாதிகள் கொண்டுவந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இதை வெறும் மாகாண சபையின் நிர்வாக சிக்கலாகவோ அல்லது கட்சி உறுப்பினர்களின் பதவி மோகம் காரணமாக எழுந்த உட்கட்சி பிரச்சினையாகவோ இனியும் கருதமுடியாது.
தமிழர் இனப்பிரச்சினை தொடர்பிலான ஸ்ரீலங்கா அரசின் கபட நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருந்தமைக்காக தமிழர்களின் கோட்பாடுகளை சமரசமின்றி முன்கொண்டு சென்றமைக்காக அவர் மீது இந்த நெருக்கடியை அரசும், அரசு சார்ந்தவர்களும் கொண்டு வந்திருக்கின்ற நிலையில்,
இனத்தின் நலன்சார்ந்து இந்தக் கொள்கைகளை முன்கொண்டு சென்றமைக்காக அவர் இலக்கு வைக்கப்பட்டாரோ அந்தக் கொள்கைகள் மக்களின் கொள்கைகளே என்பதை மீண்டும் வெளிப்படுத்தும் நோக்குடன், பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை கோருகின்றது.
வடமாகாணசபை முதலமைச்சரின் மீது சில மாகாணசபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் மக்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை தமிழ் மக்கள் பேரவை பதிவு செய்கிறது.
எமது மக்களின் இலட்சிய அரசியல் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மீதான இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமும் அவர் தன் ஆட்சியை செவ்வனே கொண்டு செல்லமுடியாது.
ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளும் திடீரென எழுந்த ஒன்றல்ல. சிறிலங்கா அரசின் தமிழர் விரோதப்போக்கை எதுவித மூடிமறைத்தல் இன்றி வெளிப்படுத்தியமையும், தமிழர்களின் அரசியல் அபிலாசைகளில் எந்தவித விட்டுக்கொடுப்புகளுமின்றி இருந்தமையும் அந்தக் கோரிக்கைகளை சமரசமின்றி சர்வதேச இராஜதந்திரிகளிடம்
முன்வைத்து அழிக்கப்படுகின்ற எமது மக்கள் சார்பாக குரல் கொடுத்தமையுமே தற்போது நிகழும் அரசியல் கபட நாடகங்களின் பின்புலமாகும் என்பது தற்போது வெளிப்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசியம் குறித்த முதலமைச்சர் அவர்களின் புரிதலும் சமரசமற்று அதை மக்கள் மத்தியில் முன்னெடுத்தமையும் சிறிலங்கா அரசு தனது அடக்கியாளும் திட்டத்தைத் தன் பிரமுகர்கள் மூலம் முன்னெடுக்க பாரிய இடையூறாக இருந்தது.
குறிப்பாக, மாகாணசபைக்குள் தமிழர் அரசியலை முடக்கிவிடும் கபட நோக்கோடு , சிறிலங்கா அரசும் சில தமிழ் அரசியல்வாதிகளும் தமது முயற்சிகளை செய்து கொண்டு வருகையிலே , 13 ஆம் திருத்தத்தின் வழியிலான மாகாணசபை முறைமை எமது அரசியல் வேட்கையை ஒரு போதும் பூர்த்தி செய்யாது.
தன் ஆட்சி அனுபவம் மூலமாகவும் தன் சட்ட நிபுணத்துவம் ஊடாகவும் அவர் மிகத்தெளிவாக மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் வடக்கு மாகாணசபையில் இருந்து கொண்டே அறிவித்தமை சிறிலங்கா அரசின் கபட திட்டத்தை முறியடித்திருந்தது.
அதுபோலவே, தொடர்ச்சியாக எமது மக்கள் மீது நடத்தப்படுவது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பே என்பதையும் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றே இதற்கான பொறுப்புக்கூறலிற்கும் நீதிக்கும் வழிசமைக்கும் என்பதையும் மிக ஆணித்தரமாக, ஒரு ஜனநாயக மன்றின் தீர்மானமாக வெளிப்படுத்தப்பட்டமையும் அது சர்வதேச அரங்கில் மிகப்பெரிய கவனிப்பிற்குள்ளாகியமையும் சிறிலங்கா அரசினால் கடும் விசனத்துடனேயே பார்க்கப்பட்டது.
எமக்கு இழைக்கப்பட்டது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையே என்பதை தனக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வந்த அழுத்தங்களையும் மீறி முதலமைச்சர் என்று அறிவித்தாரோ, ஒரு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைதான் எமக்கான நீதியை பெற்றுக்கொடுக்குமென்பதை வெளிப்படையாக எப்போது
அறிவித்தாரோ இந்த மாகாணசபை முறைமை எமக்கான தீர்வாக அமையாது என்பதை ஆணித்தரமாக என்று தெரிவித்தாரோ அன்றுமுதல் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் சிறிலங்கா அரசாலும் சில தமிழ் அரசியல்வாதிகளாலும் தொடர்ச்சியான நெருக்கடிகளுக்குள்ளாக்கப்பட்டார்.
இன்று, தனது ஆட்சியின் கீழ் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட முறைகேடுகளை விசாரிக்க நேர்மையுடனும் தற்துணிவுடனும் ஒரு விசாரணைக்குழுவை நியமித்து எமது அரசியலில் முறைகேடுகளுக்கு இடமே இருக்க முடியாது எனும் தூய்மையான இலட்சியத்தை பேச்சில் மட்டுமல்லாது செயலிலும் காட்டி இருந்தார்.
முதலமைச்சர் முன் கொண்டு செல்லும் எமது அரசியலின் அடிப்படைக்கொள்கைகளுக்கு பின்னால் எமது மக்கள் எப்போதும் அணிதிரண்டு வருவார்கள் என்பதை நாம் எமது அணிதிரள்வுகள் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும் எனவும் தமிழ் மக்கள் பேரவை கோருகிறது.
சகல உள் புற அழுத்தங்களையும தாண்டி எமது தேசத்தின் அடிப்படை அரசியற் கோட்பாடுகளுக்கு தலைமையேற்று முன்கொண்டு செல்லுமாறு தமிழினத்தின் பெயரால் மக்களின் முதல்வருக்கு அழைப்பு விடுக்கிறோம்.
மேலும், பதவி போன்ற அற்ப பேரங்களுக்காக கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது , எமக்காக புரியப்பட்ட தியாகங் களையும் அர்ப்பணிப்புகளையும் மனதில் கொண்டு மனச்சாட்சியுடன் செயற்பட முன்வருமாறு வடமாகாண சபையின் அங்கத்தவர்கள் அனைவரையும் இனத்தின் பெயரால் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தமிழ்மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று (15.06.2017) மதியம் 3.30 மணியளவில் வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொதுஅமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
தமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசு கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.
முதலமைச்சரை மாகாணசபையிலிருந்து வெளியேற்றுவதற்கு முழுமையான எதிர்பினை வெளியிடுகின்றோம், தமிழரசு கட்சி மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழரசு கட்சி மிகப்பாரிய தவறு ஒன்றை செய்து கொண்டிருக்கின்றது, வவுனியா மாவட்டத்தை பிரநிதிப்படுத்துக்கின்ற அமைச்சர் முதலமைச்சரை வெளியேற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தால் அவரது வீட்டை முற்றுகையிடுதல் , தமிழரசு கட்சியின் இவ்வாறான செயற்பாட்டால் வவுனியா வாழ் மக்கள் கவலையடைகின்றோம்,
மற்றும் நாளைய தினம் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதற்கும் இக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான, சர்வதிகாரப் போக்குடைய செயற்பாடே வடமாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை முன்மொழிவு என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் தற்போதைய நிலை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஊழல் மோசடிக்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தையடுத்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதை எக்காரணம் கொண்டு ஏற்க முடியாது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சர் இந்த விவகாரத்தில் முடிவெடுத்து செயற்படலாம் எனத் தெரிவித்த பின்னர் அவரை முடிவெடுக்க விடாமல் தமிரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.
நான்கு அமைச்சர்கள் தொடர்பில் முடிவெடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக அரசாங்க கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு சர்வதிகாரப் போக்குடன், தான்தோன்றித்தனமாக தமிழரசுக் கட்சி முடிவெடுத்து ஏனைய பங்காளிக் கட்சிகளின் கருத்துக்ளைப் பெறாது வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையளில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
இதனை நாம் கண்டிக்கின்றோம். இத்தகைய செயற்பாடுகளுக்கு எமது கட்சி எப்போதும் உடந்தையாக செயற்பட மாட்டாது.
7 உள்ளூராட்சி சபைகளில் தமிரசுக் கட்சி ஈபிடிபியுடன் இணைந்து நம்பிக்னையில்லா பிரேரணையை முன்னர் கொண்டு வந்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது அந்த நல்லுறவின் அடிப்படையில் அரச கட்சிகளுடன் இணைந்து வடக்கு மாகாண முதலமைச்சரையும் மாற்ற முயல்கிறது.
வடமாகாண முதலமைச்சர் தமிழரசுக் கட்சிக்குரியவர் அல்ல. அவர் மீது கட்சித்தலைவர்களுடன் பேசி முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.
அவர்களின் சர்வதிகாரப் போக்கை எமது கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முதலமைச்சரின் கரங்களைப் பலப்படுத்த எமது கட்சி குரல் கொடுக்கும் எனத் தெரிவித்தார்.