ஆசிரியையின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் : ஆசிரியை பகுதியை விட்டு தப்பியோட்டம்!!

நீர்கொழும்பில் பிரபல புலமைப்பரிசில் ஆசிரியை ஒருவரின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியை நடத்திய தாக்குதலால் அந்த இளைஞனின் அந்தரங்க உறுப்பு சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலை நடத்திய சந்தேகத்திற்குரிய புலமைப்பரிசில் ஆசிரியை அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அவரது கணவரும் மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணவரும் மேலாளரும் நேற்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரான ஆசிரியையை கைது செய்யுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான இளைஞன் கட்டான பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞனின் சகோதரி அனுப்பிய வட்ஸ்அப் செய்தியால் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்கப்பட்ட இளைஞன் சந்தேகத்திற்குரிய புலமைப்பரிசில் ஆசிரியையை கீழ் பணிபுரிந்த ஊழியர் என்று தெரிவிக்கப்பட்டது.

குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை தெரியுமா?

சுப கிரகமான குரு 2025 மே மாதம் 14 ஆம் திகதி பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் சில ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து நாம் இங்கு பார்ப்போம்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார் குரு. இந்தப் பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்மைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தருவார்

ரிஷபம் : குருவின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும். பதவியும் கௌரவமும் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் தொடர்பு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும்.

சிம்மம் : குருவின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு குரு நன்மை செய்வார். வேலையில் இருப்பவர்களுக்கு வேலை அழுத்தம் குறையும்.

துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி மங்களகரமான பலனைத் தரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கலாம். நிதி ஆதாயம் ஏற்படும். மத நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு : குருவின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நிம்மதியை தரும். நிதி ஆதாயம் ஏற்படும். முதலீட்டில் லாபம் தரும். ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கும்.

வேன் – முச்சக்கரவண்டி மோதி விபத்து – ஒருவர் காயம்!!

அநுராதபுரம் – ரம்பேவ வீதியில் பரசங்கஸ்வெவ பிரதேசத்தில் 9 வது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை (9.05.2025) மாலை இடம்பெற்றுள்ளது.

ரம்பேவையில் இருந்து பயணித்த வேன் ஒன்று, கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதி அருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் காரை செலுத்தியதால் விபத்து : சாரதி பலி!!

குளியாப்பிட்டிய – மாதம்பே வீதியில் பலுகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (09.05) நள்ளிரவு 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 மீற்றர் தூரத்துக்கு இலுத்திச் செல்லப்பட்டு அருகிலிருந்த வீடொன்றின் இரும்பு நுழைவாயில் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி பின்னர் மற்றுமொரு வீட்டின் கிணற்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த காரின் சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காரின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு : நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்!!

அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடனுக்கான உச்ச வரம்பு எல்லையை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை அறிவுறுத்தும் வகையில் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை 2025.05.01 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதில், 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் உயர்த்தப்பட்டதை கருத்தில் கொண்டு,

அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவதற்கான உச்ச வரம்பு எல்லையை தற்போதுள்ள 250,000 ரூபாவில் இருந்து 400,000 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமரைக் கோபுரத்தில் ஏற்படவுள்ள மக்களை கவரும் மாற்றம்!!

இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு தாமரைக் கோபுரத்தில் மக்களை கவரும் வகையில் அதிநவீன டிஜிட்டல் அலங்காரங்கள் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.

வெசாக் பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கோபுரத்தில் டிஜிட்டல் தோரணங்கள், பௌத்த இதிகாசங்களை சித்தரிக்கும் திரை அலங்காரங்கள்,

நியோன் மின் விளக்குகள், மற்றும் தரைக்கட்டமைப்பு மின் விளக்குகள் என பன்முகக் கலையமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் யோகேஸ்வரன் நிரோஜன் தெரிவிக்கையில்,

தெற்காசியாவின் முதலாவது டிஜிட்டல் கலை அருங்காட்சியகமாக தாமரைக் கோபுரத்தை வடிவமைத்துள்ளோம்.

இதன்மூலம் புனித வெசாக் பௌர்ணமியின் மகத்துவத்தை மக்கள் டிஜிட்டல் அனுபவம் வாயிலாக ரசிக்கக்கூடியதாக அமைத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவை சேர்ந்த இருவர் முல்லைத்தீவில் கைது!!

வவுனியாவை சேர்ந்த இருவரை முல்லைத்தீவில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (09.05.2025) இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவில் இருந்து இரு நபர்கள் கஞ்சாவினை கொள்வனவு செய்வதற்காக புதுக்குடியிருப்பு நோக்கி வந்துள்ளனர். இவர்களுடன் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வியாபாரிகள் பேரம் பேசியுள்ளார்கள்.

இந்நிலையில், இரண்டு கிலோ வரையான கஞ்சாவினை எடுத்துக்கொண்டு மீண்டும் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கற்சிலை மடுப்பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது மீட்கப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் இருவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் மதகுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி!!

வவுனியா இறம்பைக்குளம் சந்தி A9 பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முச்சக்கரவண்டி பாரியளவிலான சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தென்னிலங்கையில் நடந்த துயரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்அனுரதபுரத்தில் நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் நல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலேந்திரன் முகுந்தன் வயது 29 என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்தவர் ஆவார் .

அனுரதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றுமாலை (8) ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் .

தனது கடமை முடிந்து ஆற்றில் குளிக்கச் சென்ற சமயம் அவர் , நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. சடலம் அனுரதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை அனுரதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடக நட்பு : பெண்ணை நம்பிச் சென்ற இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் உட்பட நால்வர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் – மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு கொள்ளையிட்டவர்களில் 31 வயதுடைய பெண்ணொருவரும் காணப்படுகின்றார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சந்தேக நபரான பெண் அநுராதபுரம், விஜயபுரம், அசோகபுரம் மற்றும் கெக்கிராவை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களுடன் சமூக ஊடகங்களில் அறிமுகமாகி, நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளார். பின்னர் சந்தேக நபரான பெண், குறித்த இளைஞர்களிடம் நேரில் சந்திக்க வருமாறு கூறியுள்ளார்.

பெண்ணின் பேச்சை நம்பி சென்ற இளைஞர்களை ஏமாற்றி காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களின் உதவியுடன் இளைஞர்களை தாக்கி, அவர்களின் மோட்டார் சைக்கிள்கள்,கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் மஹியங்கனை மற்றும் அவுக்கண ஆகிய பொலிஸ் நிலையங்களில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைப்பேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கசிப்பு வழங்கியதா தமிழரசுக் கட்சி : சிறீதரனின் பதிலடி!!

இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கசிப்பு வழங்கியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியதை தான் வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(09.05.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழரசுக் கட்சி கசிப்பு வழங்கியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறிய கருத்தை அவர் மீளப்பெற வேண்டும்.

ஒரு காலமும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, மதுபான சாலைகளை திறப்பதற்கும் மக்களுக்கு மதுவை வழங்குவதற்கும் உடந்தையாக இருந்ததில்லை.

அத்துடன், ஒரு காலமும் நாங்கள் பணம் வழங்கி வாக்கு பெற்றதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

 

13 சிறுவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி விபத்து : மூவர் கவலைக்கிடம்!!

அளுத்கமவில் 13 சிறுவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பின்ஹேன, குருகந்த பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

சிறுவர்களை பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலை பைகளுடன் மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி, வாகனத்தின் எடையைத் தாங்க முடியாமல், அதிவேகமாக பள்ளத்தில் சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி பேருவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கவலைக்கிடமான நிலையில் இருந்த 6 பேர் நாகொட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் : ஆண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!!

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி ஆண்களிடம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பேஸ்புக் மூலம் ஆண்களை அடையாளம் கண்டு, வட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் மூலம் அவர்களுடன் அரட்டை அடித்து, போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி அந்த ஆண்களை மிஹிந்தலை பகுதிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

பின்னர், காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, மரங்களில் கட்டி வைத்து, அடித்து, அவர்களின் மோட்டார் சைக்கிள்கள், பணம் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடிக்கப்படுகின்றது.

இதற்கு தொடர்புடைய ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண்ணும் 3 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் 2 மோட்டார் சைக்கிள்கள், 4 கையடக்க தொலைபேசிகள் மற்றும் மேலும் பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் என மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கெகிராவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரும், அனுராதபுரம், அசோகபுர, விஜயபுர மற்றும் கெகிராவ பகுதிகளை சேர்ந்த 21, 27 மற்றும் 32 வயதுடைய மூன்று ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

2 பிரதேசங்களை சேர்ந்த இருவர் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது காதலி மிஹிந்தலை நகரத்திற்கு வருமாறு அழைத்ததாகவும், அவர் வந்த பிறகு, அவரும் ஒரு குழுவினரும் அவரைத் தாக்கி, மரத்தில் கட்டி வைத்து, அவரது மோட்டார் சைக்கிள், பணம், கையடக்க தொலைபேசி மற்றும் வங்கி அட்டைகளை கொள்ளையடித்து சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்களில் உயர் மட்ட வேலைகளில் பணியாற்றிய 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் பெண்ணின் மரணம் தொடர்பில் இலங்கையர் கைது!!

பிரேசிலிய யூடியூப்பர் ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரின் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் இடம்பெற்ற தீ விபத்தில் பிரேசிலின் பிரபல யூடியூப் நட்சத்திரம் Amanda Borges da Silva உயிரிழந்த நிலையில் அவரது மரணம் தொடர்பாக இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் வேலையில்லாத 31 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

டோக்கியோவின் முக்கிய சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நரிட்டாவில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் மே மாதம் முதலாம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் Amanda Borges da Silva புகையை சுவாசித்து உயிரிழந்துள்ளார்.

Amanda Borges da Silva உயிரிழக்கும் போது அவருக்கு 30 வயது என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் நடந்த நேரத்தில் தீயை அணைக்க முயற்சிக்காதது மற்றும் குடியிருப்பை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

எனினும் 31 வயதான இலங்கையர் மூன்று நாட்களுக்கு பின்னர் கட்டிடத்திற்கு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

தீயை அணைக்க முயற்சிக்காமல் அவர் குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. பல தனிப்பட்ட பொருட்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதில் ஒரு கையடக்க தொலைபேசி, நகைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் அடங்கும்.

பிரேசிலிய ஊடகங்களில் வெளியான தகவல்களில் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகவும், அவரது மரணம் வேண்டுமென்றே செய்யப்பட்டதா என ஜப்பான் பொலிஸார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளன.

காலநிலை மாற்றம் தொடர்பாக வெளியான அறிவிப்பு!!

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில், மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டம் மற்றும் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நீர்த்தேக்கத்தில் விழுந்து ஹெலிகொப்டர் விபத்து : 6 பேர் உயிரிழப்பு!!

இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து இன்று வெள்ளிய்கிகழமை (09) காலை இடம்பெற்றுள்ளது.

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், மாதுரு ஓயா இராணுவ விசேட படைதளத்தில் இருந்து விசேட படைப்பிரிவின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் ஒரு விளக்கப் பயிற்சியை காண்பிக்க ஆறு விசேட படை வீரர்களுடன் பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தின் போது ஹெலிகொப்டரில் இருந்த 2 விமானிகள் உட்பட 12 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அரலகங்வில அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு (Air Gunners) வான்வழி துப்பாக்கி வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்கள் உட்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விமானப்படைத் தளபதி தலைமையிலான 9 பேர் கொண்ட விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.