போர் பதற்றம் : ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு தொடரை காலவரையறையின்றி ஒத்திவைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.

அத்துடன் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள நாடுகளின் வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய நலன் கருதியும் பாதுகாப்பு கருதியும் போட்டிகள் ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இமாச்சல்- தரம்ஷாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி இரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணி வீரர்களையும் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை 57 போட்டிகள் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா இராசேந்திரகுளத்தில் இளம் பெண் சடலமாக மீட்பு!!

வவுனியா இராசேந்திரகுளம் கிராமத்தில் நேற்றிரவு இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நீண்ட நேரமாக அவரது வீட்டு அறையில் அமைதியாக இருந்தமையினையடுத்து வீட்டார் அறையின் கதவினை திறந்து பார்த்த சமயத்தில் வீட்டின் கூறையின் மேற்பகுதியில் துணியின் மூலம் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 24 வயதுடைய தவகுலசிங்கம் திவ்யா ஆவார். சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மகன், மகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த விபரீத முடிவு!!

நடத்தை சந்தேக தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மகன், மகளை கழுத்து நெரித்துக்கொன்ற லேப்-டெக்னிஷியன் தற்கொலை செய்துகொண்டார்.

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (42), அரசு ஆரம்ப சுகாதார நிலைய லேப் டெக்னிஷியன். இவரது மனைவி மஞ்சுளா (35). மகன் மரியன் (13), மகள் ஆராத்யா (9). இவர்கள் மல்காபூர் ஆதர்ஷ் நகரில் வசித்தனர்.

இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது சுபாஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். கடந்த வாரம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மஞ்சுளா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அவரை போனில் தொடர்புகொண்டு பேச முயன்றும் அவர் பேசவில்லையாம்.

இந்நிலையில் சுபாஷின் வீடு, கடந்த சில நாட்களாக திறக்கப்படாமல் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நேற்று இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொண்டாபூர் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு படுக்கையில் மகன், மகள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதே அறையில் சுபாஷ் தூக்கில் சடலமாக கிடந்தார். சடலத்தின் அருகே சுபாஷ் எழுதியதாக கூறப்படும் கடிதம் இருந்தது.

அதில், மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவி பிரிந்துசென்றதால் வேதனை அடைந்த நான், எனது குழந்தைகளுடன் இறந்துவிடுகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய மணப்பெண் மரணம்!!

நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த மணப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டம் நூர்பூர் பினானு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் தீக்ஷா (22). இவருக்கும் மொராதாபாத் மாவட்டம் ஷிவ்புரி கிராமத்தை சேர்ந்த சவுரப் என்ற இளைஞருக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற போது மணப்பெண் தீக்ஷா தனது சகோதரிகளுடன் நடனமாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தீக்ஷாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதில், நடன மேடையில் இருந்து தனது அறையில் ஓய்வு எடுக்க செல்வதாக கூறி விட்டு சென்றார்.

அறைக்கு சென்ற தீக்ஷா வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது தீக்ஷா கட்டிலின் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தீக்ஷாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. அதேபோல், தீக்ஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யவும் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாத்திரையில் மகளை தேடிய தாய் பரிதாபமாக உயிரிழப்பு!!

சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்டிருந்த பெண் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அக்குரெஸ்ஸ, பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான சுனிதா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் 2 பிள்ளைகளின் தாய் ஆவார். குறித்த பெண் தனது சொந்த ஊரான ஊருபோக்காவை சேர்ந்த உறவினர்கள் குழுவுடன் ஒரு யாத்திரையை ஏற்பாடு செய்து, இந்த மூன்று நாள் யாத்திரையில் இணைந்துள்ளார்.

பயணத்தின் இரண்டாவது நாளான மே மாதம் 4 ஆம் திகதி, நல்லதன்னி பகுதியில் உள்ள ஓடையில் வழுக்கி விழுந்து சுனிதா உயிரிழந்துள்ளார்.

திடீரென தனது மகளை காணவில்லை என தேடிய சுனிதா தனது கணவரிடம் மயக்கம் ஏற்படுவதாக கூறியதாகவும் மகளை தேடி பார்க்குமாறும் கூறியுள்ளார்.

கணவர் மகளை தேடி சென்ற போது சுனிதா வழுக்கி விழுந்துள்ளார். காயமடைந்த பெண்ணை பொலிஸார் மஸ்கெலிய பிராந்திய மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிக்கிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

8 வயது சிறுமியை கடத்த முயன்ற நபர் பொலிஸார் முன்னெடுத்துள்ள நடவடிக்கை!!

கடந்த 2 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஒரு பிரதான பெண்கள் பாடசாலைக்கு முன்னால் 8 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் மீது கார் மோதிய சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலன்னாவ வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் கடந்த 2 ஆம் திகதி குருந்துவத்தை, மல்பர பகுதியில் ஒரு காரில் அத்துமீறி நுழைந்து ஒரு சிறுமியைக் கடத்த முயன்றதாக தெரிவிப்படுகிறது.

இது தொடர்பாக கிடைத்த முறைபாட்டின் பேரில் குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை!!

எதிர்கால தேர்தல்களின் போது பாடசாலை ஊழியர்கள் மற்றும் பாடசாலை நடவடிக்கைகள் குறித்து முடிவுகளை எடுக்கும்போது மிகவும் அவதானம் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு திணைக்களத்திற்கு, அதிபர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

தேர்தல் முடிந்த மறுநாளே வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அவர்களது ஊழியர்கள் மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிற ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு ஏப்ரல் 25 ஆம் திகதி எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் தேர்தல் நாளில் இரவு 11.00 மணிக்கு இது தொடர்பாக ஊடக அறிக்கைகளை வெளியிட்டு தேர்தல் ஆணையாளர் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயல்கள் வருத்தமளிப்பதாக அதிபர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இரவு நேரங்களில் விடுமுறை அறிவிப்புகள் வெளியிடுவது பாடசாலை மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை நிர்வாகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய முடிவை அவர்கள் புறக்கணித்ததாக குற்றம் சாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலைகளில் இருந்து பாடசாலைக்கு வெளியே உள்ள மையங்களுக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்படும் மேசைகள்,

நாற்காலிகள் போன்றவற்றை சில இடங்கள் அலட்சியமாக எடுத்துக் கொண்டதால் பல சிரமங்கள் ஏற்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் சென்று திரும்பிய வாகனம் விபத்து : 12 பேர் காயம்!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான சாலையில் இன்று காலை பயணித்த வேன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன், லொறியின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

விபத்தில் வேனில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேனில் பயணித்தவர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் மாத்தறை முலட்டியான பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அம்புலன்ஸ்கள் மூலம் விபத்தில் காயமடைந்தவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உள்ளூர்வாசிகளும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை எடுத்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!!

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,023,227 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 36,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 288,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 33,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் (22 karat gold 8 grams) விலையானது 264,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 31,590 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 252,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 269,000 ரூபாவாகும். இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 248,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவியின் மரணம் : ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை!!

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியரை இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் விசாரணை நடவடிக்கையில் குறித்த பாடசாலை அதிபரை அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, ஆசிரியரை இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சொந்தமாக தீவு ஒன்றை வாங்கிய இலங்கை நடிகை : யார் தெரியுமா?

இலங்கை நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பாலிவுட் துறையில் உள்ளார்.

ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகளுக்குக் கூட இல்லாத ஒரு இடத்தை ஜாக்குலின் சொந்தமாக வைத்திருக்கிறார். அதாவது இலங்கையின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவை பாலிவுட் பிரபல நடிகை வாங்கியுள்ளார்.

நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கடந்த 2012 ஆம் ஆண்டு சுமார் 3.5 கோடிக்கு ரூபாய் மதிப்பில் வாங்கியதாக கூறப்படுகிறது.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் குமார் சங்கக்காரவின் தனியார் தீவுக்கு அருகில் இந்தத் தீவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தீவு ஆடம்பர ரியல் எஸ்டேட்டுகளுக்கான ஒரு முக்கியமான இடமாக மாறியுள்ளது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்த தீவை வாங்கி அதில் வில்லா கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் இந்த தீவை ஒரு தனியார் இல்லமாகப் பயன்படுத்துகிறாரா அல்லது வணிக நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடுகிறாரா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

2006 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இலங்கை பட்டத்தை வென்றவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான அலாடின் என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

அதேவேளை சொந்தமாக ஒரு தீவை வைத்திருக்கும் ஒரே பாலிவுட் நடிகை என்றால் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் 2012 ஆம் ஆண்டில், இந்த தீவை வாங்க சுமார் ரூ.3 கோடி செலவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் மிளகாய் தோட்டத்தில் நின்றவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி ஆணொருவர் இன்றையதினம் (8) உயிரிழந்துள்ளார்.

சம்பவ்த்தில் ஏழாலை கிழக்கு, ஏழாலை என்ற முகவரியை சேர்ந்த 39 வயதுடைய குணரட்னம் குமரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்றையதினம் தனது தோட்டத்தில் மிளகாய் ஆய்ந்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது. பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸ் – லொறி மோதி விபத்து : நான்கு பேர் காயம்!!

தங்காலை – அம்பாந்தோட்டை பிரதான வீதியில் ரன்ன வாடிகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (08) காலை 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாத்தறையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் புதன்கிழமை (07.05) இரவு தனது உழவு இயந்திரத்தின் கீழே இறங்கி நின்றவாறு திறப்பினை இயங்க செய்துள்ளார்.

இதன்போது கியர் இயக்கத்தில் இருந்த உழவு இயந்திரம் திடீரென இயங்க ஆரம்பித்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்ததால் அவர்மீது உழவு இயந்திரத்தின் சக்கரம் ஏறியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணையை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஒரு பெரல் கசிப்புடன் ஒருவர் கைது!!

வவுனியா பூவரசங்குளம் பொலிசார் ஒரு பெரல் கசிப்புடன் நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாலிக்குளம் குளப்பகுதியில் வைத்து குறித்தநபர் நேற்று.(07.05.2025) கைதுசெய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 90லீற்றர் அளவுகொண்ட ஒரு பெரல் கசிப்பு மீட்கப்பட்டது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்றப்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

திருமணமாகி இரு மாதங்களில் பெண் விபரீத முடிவு : தமிழர் பகுதியில் சோகம்!!

 

மட்டக்களப்பு காக்காச்சிவட்டை தாமரை கேணியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் விபரீத முடிவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் இப் பெண் நேற்று உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.