மாவனல்லை – ரம்புக்கனை பகுதியில், பட்டவல மகா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது, உழவு இயந்திரத்தில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்திசையில் பயணித்த வாகனங்களின் ஒளி காரணமாக, டிப்பர் வாகனத்தின் சாரதி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை சரியாக கவனிக்காததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொலன்னறுவை மாநகர சபையில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (06.05) உத்தரவிட்டுள்ளது.
பொலன்னறுவை 28ஆவது மைல்கல் பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபரான இளைஞன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொலன்னறுவை மாநகர சபையில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது வேட்பாளரின் வீட்டில் அவரது மனைவியும் பிள்ளைகளும் மாத்திரமே இருந்துள்ளனர்.
இதனையடுத்து பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர். எவ்வாறிருப்பினும், மோட்டார் சைக்கிள் மற்றும் அதற்கு அருகில் இருந்த பெறுமதியான பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை, கொடகம ஹித்தெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.
மாத்தறையிலிருந்து அகுரெஸ்ஸ நோக்கிப் பயணித்த வேன் ஒன்று மீண்டும் மாத்தறையை நோக்கி திரும்பும் போது பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவியின் பெற்றோர், கடந்த ஞாயிற்றுக்கிழமை(04.05.2025) லங்காசிறி ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தனர்.
இதனையடுத்து, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜூக்கு எமது ஊடகத்திலிருந்து மாணவி விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவரும் அதற்கு உரிய நடவடிக்கையை கல்வி அமைச்சின் மூலம் எடுப்போம் என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தை விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னணி வணிக பண்டக்குறி நிறுவனங்களை விளம்பரம் செய்வது போன்ற போலி காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கையின் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தாம் டராஸ் மற்றும் சம்சுங் DARAZ, Samsung போன்ற நிறுவனங்ளை ஆதரிப்பது போல் காட்டும் காணொளிகள், செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், இது பொதுமக்களை ஏமாற்றும் முயற்சியெனவும் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
தாம் டராஸ் மற்றும் சம்சுங் DARAZ/Samsung போன்ற எந்த நிறுவனத்துடனும் இணைந்திருக்கவில்லை. என்னைப் போல காட்டப்படும் அனைத்து விளம்பரங்களும் AI தொழில்நுட்பத்தின் டீப் பேக் (Deep Fake) அடிப்படையில் உருவாக்கப்பட்ட போலிகள். தயவுசெய்து அவற்றை நம்ப வேண்டாம்,” என அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடி முயற்சிகள், AI தொழில்நுட்பத்தில் உருவாகும் deepfake வீடியோக்கள் மற்றும் படங்களை பயன்படுத்தி பிரபலங்களை போல காட்டி விளம்பரங்கள் அல்லது முதலீட்டு திட்டங்களை பொய்யாகப் பரப்புகின்றன.
இதன்மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மோசடிக்குப் பயன்படுத்து சமூக ஊடகங்களில் பரவுகின்றன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இணைய பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதற்கான சில முக்கிய ஆலோசனைகள்:
விளம்பரங்கள் உண்மையானதா என்பதை அதிகாரப்பூர்வமான ப்ராண்ட் பக்கங்கள் அல்லது உறுதியான சமூக ஊடக கணக்குகள் மூலம் சரிபாருங்கள்.
மிகவும் ஈர்க்கக்கூடிய அல்லது நம்பமுடியாத அளவிற்கு நல்ல சலுகைகள் என்றால் அதைப் பற்றிக் கவனமாக இருங்கள், குறிப்பாக பணம் தொடர்பான விவரங்கள் தேவைப்படும்போது.
சந்தேகத்துக்கிடமான விளம்பரங்கள் அல்லது உள்ளடக்கங்களை உடனடியாக அதற்கான சமூக ஊடக நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்யவும்
அரசியலியர்களோ, பிரபலங்களோ சார்ந்த போல் தோன்றும் எந்தவொரு விளம்பரத்தையும் நம்புவதற்கு முன் நன்கு சிந்திக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்தக் குற்றச் செயலில் DARAZ நிறுவனம் தொடர்பில்லையென்றும், அந்த விளம்பரங்களில் அவர்கள் பங்கு இல்லையென்றும் அந்த நிறுவனம் தங்கள் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவப்படமும் இதே போன்றதொரு விளம்பரத்தில் போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களை வெற்றிகொண்டது.
இதையடுத்து மக்கள் நேற்று இரவு பட்டாசு கொழுத்தி கொண்டாடியதுடன் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட பல்வேறு உள்ளுராட்சிமன்றங்களிலும் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது.
கொண்டாட்டம்
மட்டக்களப்பு மாநகரசபையின் 20 வட்டாரங்களில் 16 வட்டாரங்களை இலங்கை தமிழரசுக்கட்சி கைப்பற்றிய நிலையில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு மாநகரசபையின் பல்வேறு வட்டாரங்களிலும் நேற்று மாலை வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றதுடன் வேட்பாளர்களை மக்கள் கொண்டாடிய நிகழ்வும் நடைபெற்றது.
இதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றிபெற்றதையடுத்து அங்கு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளரும் ஊடகவியலாளருமான செ.நிலாந்தனின் ஆதரவாளர்களினால் தமிழரசுக்கட்சி சின்னம் கொண்ட கேக் வெட்டப்பட்டு வெற்றிக்கொண்டாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) கைகோர்த்து சபைகளை நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இன்று (07.05) தெரிவித்தார்.
இருப்பினும், NPP உடன் இணைந்து பணியாற்ற விரும்பும் தனிநபர்களின் சுயாதீன குழுக்களை NPP பரிசீலிக்கும் என்றும் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் கூறினார்.
தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்ற நிறுவனங்களில் தேசிய மக்கள் கட்சி சபைகளை நிறுவும் என்று அவர் கூறினார்.மக்களால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் சபைகளை அமைப்பது நெறிமுறைக்கு புறம்பானது என்று அவர் கூறினார்.
மேலும் , பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்ற கட்சி சபைகளை நிறுவ வேண்டும் என்றும் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறினார்.
பிரித்தானியாவின் லண்டனில் வீதி ஓரத்தில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் பிபிசியின் ஆவண படம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கைக்காக மாணவர் வீசாவில் சென்ற நதீர என்ற மாணவன், வீடற்ற நபராக வீதி ஓரத்தில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
பிபிசி ஆவணப்படத்தின் அடிப்படையில் இரண்டு மருத்துவ உதவியாளர்கள் குறித்த மாணவனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
ஹன்னா மற்றும் நியால் ஆகிய இரண்டு அதிகாரிகள், இந்த மாணவனை நேரில் சென்று பார்வையிட்ட போது ,அவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள மாமாவின் உதவியுடன் பிரித்தானியாவுக்கு வந்த நிலையில், தற்போது இலங்கையில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மாமா உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தனக்கான நிதி உதவியை செய்ய யாரும் இல்லாத நிலையில் வாகனம் நிறுத்துமிடத்தில் வசிப்பதாக நதீர குறிப்பிட்டுள்ளார். எனினும் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சென்று வரும் போதும், தனக்காக யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வீதி ஓரத்தில் தங்கியிருக்கும் வேளையில், அந்தப் பகுதியிலுள்ள போதைப்பொருள் பாவனையாளர்களால் தான் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பிபிசி காணொளியை பார்வையிட்ட சிலரினால் நதீரவுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், இலங்கை மாணவனுக்கு தங்குமிடம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், நிரந்தர வேலையும் ஒன்றும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பில் பெற்றோர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொட்டாஞ்சேனை – கல்பொத்த வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பிலிருந்து விழுந்து, கடந்த 29 ஆம் திகதி 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்தநிலையில், நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த அவரது பெற்றோர் தங்களது மகளின் மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் இன்றைய தினம், உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சென்றிருந்தனர்.
அதன்போது, குறித்த அதிகாரிகளுடன் இடம்பெற்ற உரையாடலின்போது, குறித்த தரப்பினர் தொடர்பான தகவல்களை உயிரிழந்த மாணவியின் பெற்றோர் வெளிப்படுத்தியிருந்தனர்.
அதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி, கொட்டாஞ்சேனையில் உள்ள பிரபல கல்வி நிறுவகம் ஒன்றில் வைத்து அதன் உரிமையாளரால் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்டமையே தமது மகளின் மரணத்துக்கான பிரதான காரணம் என, மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
குறித்த நபர் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் எனவும், அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் தமது கல்வி நிறுவகத்தில் வைத்து, தமது மகளிடம், காவல்துறை முறைப்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளமையினால் இனி இங்கே கல்வி கற்ற வரவேண்டாம் என எச்சரித்திருந்ததாகவும், அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து, தமக்கு உயிர் வாழ்வதற்கு விருப்பமில்லை என தமது மகள் பல தடவைகள் தம்மிடம் கூறியதாகவும், உயிரிழந்த மாணவியின் தாய் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
‘இங்கும் பல ஆசிரியர்கள் உள்ளனர், உன்னால் அவர்களுக்குச் சிக்கல் ஏற்படலாம் நீ இங்கு வருவதைத் தவிர்த்துக்கொள்’ என கூறியமையினால் தமது மகள் மிகவும் உள ரீதியாக அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், தமது மகளை பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி அவரை உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளிய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என, குறித்த மாணவியின் தாயார் வலியுறுத்தியுள்ளார்.
2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், T-56 துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர்.
இதில் ஒருவர் காயமடைந்ததையடுத்து, சீதுவை பொலிஸார் ஆரம்பித்த விசாரணைகளின்படி, குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சீதுவை பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
நீச்சல் தடாகத்தில் விழுந்து நான்கு வயதான சிறுவன், உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெஸ்பேவ, கஹபொல பகுதியில் உள்ள விடுமுறை விடுதியில் தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருந்த போதே இத் துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தம்புத்தேகம, இகிலி வெவ பகுதியைச் சேர்ந்த ஹேவா எம்பிட்டகே சித்தேவ் தனுல்யா என்ற நான்கு வயது குழந்தை ஆவார். சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையுடன் தனது தந்தையின் சகோதரியின் வீட்டிற்கு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சகோதரனும் சகோதரியும் தங்கள் சிறு குழந்தைகளுடன் பொழுதை கழிக்க விடுதிக்கு வந்ததாகவும், தாங்கள் சிறிது தூரத்தில் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது குழந்தைகளை அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நீச்சல் தடாகத்தில் மகிழ்விக்க விட்டுவிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மாத்தளை, கலேவெல, மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மகன் தனது தந்தையை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் இன்று இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. மகுலுகஸ்வெவ, 04ஆவது மைல்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுயைட தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 32 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகுலுகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம், அல்வாய் கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த 25 வயதான பாஸ்கரன் பரந்தாமன் என்ற இளைஞர், நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் கம்பர்மலை பகுதியில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இறப்புக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை இந்நிலையில் இளைஞனின் இறப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி செல்வாநகர் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்பாக வாள்களுடன் நின்ற இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாக்குச்சாவடிக்கு முன்பாக சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற கார் ஒன்றை பொலிஸார், இன்று (06) சோதனையிட்ட போது வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து காரில் வந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், வாளும் கத்தியும் கைப்பற்றப்பட்டு, அவர்களது காரும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா, கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.
இச் சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தலைமையில் உப பொலிஸ் அதிகாரி எல்.எஸ்.வீரசிங்க, பொலிஸ் கொஸ்தாபிள்களான நிரோஜன் (8137), தீபன் (80998) அடங்கிய குழுவினரால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா, கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 35 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேக நபரினை நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(4) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தும்பளை கிழக்கை சேர்ந்த 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரின் சடலமே கடலில் மூழ்கிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில் அருகிலுள்ளவர்களால் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.