நாட்டில் காற்றின் வேகம் அதிகரிப்பு அவதானத்துடன் இருக்க கோரிக்கை!!

நாட்டில் நிலவும் கன­மழை மற்றும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக இலங்­கையின் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ­மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கட­லோர பகு­தி­களில் மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் வானிலை அவ­தான நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

கடந்த மூன்று நாட்­க­ளாக நாட்டில் கன­மழை பெய்­து­வரும் நிலையில் நாட்டின் 14 மாவட்­டங்கள் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக களுத்­துறை, இரத்­தி­ன­புரி மாவட்­டங்கள் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ள அதே வேளையில் கேகாலை, காலி பகு­தி­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் நாட்டின் இந்த மோச­மான கால­நிலை இந்த மாதம் இறுதி வரையில் நீடிக்கும் நிலையில் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளுக்கு தொடர்ந்தும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்­நி­லையில் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காற்றின் வேகம் அதி­க­ரிக்க வாய்ப்­புகள் உள்­ள­தாக வானிலை அவ­தான மத்­திய நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. குறிப்­பாக கடற் பகு­தி­களில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதி­க­ரிக்­கலாம் எனவும் கட­லோரப் பகு­தி­களில் வாழும் மக்கள் மிக மிக அவ­தா­ன­மாக இருக்­கு­மாறும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

மேலும் காங்­கே­சன்­துறை, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு பகு­தி­களில் குறிப்­பாக கடற்­ப­கு­தியில் காற்­றின்­வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதி­க­ரிக்­கலாம். அதேபோல் தரையில் சுமார் 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் இருக்­கலாம். எனவே மீன­வர்கள் கட­லுக்கு செல்­வதில் மிக மிக அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும் எனவும் எச்­ச­ரித்­துள்­ளது.

அதேபோல் கொழும்பு, களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கும் அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. களனி கங்கை மற்றும் நில்­வலா கங்­கையின் நீர்­மட்டம் வேக­மாக அதிகரித்து வரும் நிலையில் கரையோர பகுதிகளில் உள்ள மக்களையும் உடனடியாக வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

மூன்று இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு!!

சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 3 இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு அறிவித்துள்ளது.

மின்சார துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் 1987, இலங்கை தனியார் மின்சார நிறுவனத்தின் 1910 அல்லது 1901 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்துமாறு அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறை, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் கொழும்பின் பல பாகங்களில் மின்விநியோக தடை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைக்கும் வகையிலேயே மின்விநியோக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் சென்ற இலங்கை அகதிக்கு நேர்ந்த கதி!!

சிங்கப்பூரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதி திருச்சியில் 11 மணிநேரம் தவித்தார். பின்னர் அவர் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்டார் என, தமிழக ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடந்த 26ம் திகதி இரவு 10.30க்கு வந்த விமானத்தில் பயணிகளின் ஆவணங்களை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற இலங்கையை சேர்ந்த பயணி அதே விமானத்தில் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கையை சேர்ந்த சுப்ரமணியம் மகன் ராணுகுமரன் (22), இலங்கை அகதியாக திருச்சியில் தங்கி தனியார் கல்லூரியில் பட்டம் பயின்றுள்ளார் என, தெரியவந்துள்ளது.

தற்போது மீள்குடியுரிமைப்படி இலங்கை செல்லும் அகதிகள் வரிசையில் ராணுகுமரன் மற்றும் அவரது பெற்றோர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருச்சி வழியாக இலங்கை சென்றுவிட்டனர்.

அங்கு ஓராண்டுகள் ஆன நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு வந்து செல்ல இந்திய தூதரகத்தை அணுகியுள்ளார்.
அனுமதி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் திருச்சி விமானநிலையம் வந்து நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். அங்கு ராணுகுமரனின் ஆவணங்களை சோதனை செய்த சிங்கப்பூர் அதிகாரிகள் சிங்கப்பூர் வருவதற்கான சிறப்பு விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லை என கூறி ராணுகுமரனை அவர் வந்த விமானத்திலேயே திருச்சிக்கு அனுப்பியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள், அவர் வந்த விமானத்தின் நிறுவனத்திடம் ராணுகுமரனை ஒப்படைத்தனர்.

இதனையடுத்து அந்த ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் ராணுகுமரனை இலங்கை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

11 மணி நேர தவிப்பிற்கு பிறகு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஶ்ரீ லங்கன் விமானம் மூலம் கொழும்புவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

மற்றுமொரு ஆபத்திற்கு முகங்கொடுக்கும் இலங்கை மக்கள் : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

நாட்டில் பெய்த அடைமழை காரணமாக மற்றுமொரு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் நீர் மற்றும் உணவு மூலம் நோய் பரவும் ஆபத்துக்கள் அதிகமாக காணப்படுவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் பொது மக்கள் குடிநீர் தொடர்பில் இந்த நாட்களில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது குடிப்பதற்கு பயன்படுத்தும் நீரை சூடாக்கிய பின்னரே அருந்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் வருண குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அனர்த்த்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதலில் அடைக்கப்பட்ட நீரை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 146 பேர் உயிரிழப்பு, 112 பேர் மாயம்!!

 
நாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 146 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 100 இற்கும் அதிகமானோர் காணாமற் போயுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தத்தினால் 4,23068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்களில் 46,358 பேர் 32 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி மாவட்டத்தில் 28,270 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

காலியில் 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் 10 பேர் காணாமற் போயுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காணாமற் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் மாலினி லொகுபோதாகம தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் 20,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

வௌ்ளம் மண்சரிவினால் கேகாலை மாவட்டத்தில் 1439 குடும்பங்கள் பாதிக்கப்பட்டள்ளன.

இவர்கள் 22 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வௌ்ளத்தினால் கம்பஹா மாவட்டத்தின் 99 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

பியகம, களனி,வத்தளை, தொம்பே, கம்பஹா மற்றும் மஹர பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

42 முகாம்களில் 16,852 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 24 மண்சரிவுகள் பதிவாகியுள்ளதுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 14 மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீட்பு பணிகளுக்காக 1700 இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வவுனியா,ஓமந்தை நாவற்குளத்தில் நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்த மண்டப திறப்பு விழாவும்!!

 
வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் வாழ்ந்த கனகசபை நல்லதம்பியின் (உடையார்) நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்த மண்டப திறப்பு விழாவும் இன்று(27.05.2017) இடம்பெற்றது.

நாவற்குளம் வீரசக்தி அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உடையாராக இருந்த நல்லதம்பியின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட மண்டபத்தினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திறந்து வைத்திருந்தார்.

இதன்போது அக்கிராமத்தில் வாழ்ந்து வரும் முதியவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர். இந் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, ஆர்.இந்திரராஜா உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சாதகமான தீர்வு கிடைக்காவிடின் எங்களது போராட்ட வடிவம் மாறும் : வவுனியா சுகாதாரத் தொண்டர்கள்!!

 
சாதகமான தீர்வு கிடைக்காத நிலையில் எங்களது போராட்டத்தை வேறு வடிவத்திற்கு மாற்ற வேண்டி வரும் என வவுனியாவில் நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார தொண்டர்கள் இருபத்து நான்காவது நாளாகவும் நிரந்தர நியமனம் கோரி வவுனியா பிராந்திய சுகாதார நிலையம் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 31ம் திகதி வடமாகாண ஆளுநரை சந்திப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 31ம் திகதி ஆளுநரிடம் இருந்து எங்களிற்கு சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். அங்கும் எங்களுக்கொரு சாதகமான தீர்வு கிடைக்கப்பெறாதபட்சத்தில் எங்களது போராட்டத்தை வேறு விதமாக செய்வதற்கு தீர்மானித்துள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பதினைந்து வருட காலமாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றியவர்களே தற்போது தமக்கான நிரந்தர நியமனம் கோரி வவுனியா சுகாதார பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட இளைஞர் தின நிகழ்வுகள்!!

 
வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான இளைஞர் தின நிகழ்வுகள் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் இன்றைய தினம் (27.05.2017) வவுனியா சிங்கள பிரதேச செயலக மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

“சுத்தமான இலங்கைக்கு இளைஞர்களின் குரல்” எனும் தொனிப்பொருளில் வவுனியா, செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா தெற்கு ஆகிய பிரதேசங்களிலிருந்து இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் நிகழ்வாக மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன் தலைமையில் இளைஞர் மாநாடும் , ஆதி இளைஞர்கள் கௌரவிப்பும் நடைபெற்று அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக விரிவுரையாளர்களினால் “திண்ம கழிவு முகாமை” தொடர்பான விரிவுரைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இளைஞர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி அதிகமான இளைஞர்களின் பங்குபற்றலுடன் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டிகள், மற்றும் நடைபவனியும் நடைபெற்றது. இவ் பேரணியில் விழிப்புணர்வு பதாகைகள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அதிதியாக வவுனியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சோமரத்ன , இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக்காரியாலய ஊடகப் பிரிவிற்கான உதவிப் பணிப்பாளர் ஜெயதிலக ஆகியோர் கலந்து இளைஞர் தினத்தை வலுவூட்டியிருந்தார்கள்.

கௌரவ அதிதிகளாக வவுனியா சிங்கள பிரதேச செயலக உதவி செயலாளர் ஆனந்தன், வவுனியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜெயரட்ணம், வடக்கு மற்றும் வன்னி மாகாணங்களுக்கான கணக்காளர் ஆர்.இரட்ணகுமார், மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீகரன் கேசவன், பதிந்து வாசல ஆகியோருடன் பிரதேச, மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்கள், ஆதி இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சமூக வலைத்தளங்களில் சந்தைப்படுத்தலை அறிமுகம் செய்யும் நிகழ்வு!!

 
‘சமூக வலைத்தளங்களினூடாக வியாபாரத்திற்கான சந்தைப்படுத்தல்’ எனும் வலைத்தளத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு வவுனியாவில் ‘விக்டா’ VICTA நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று (27.05) காலை 11 மணிக்கு வவுனியா இரண்டாம் குறுத்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக வவுனியா மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.பிறைசூடி, மற்றும் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரீ.கே.ராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மங்கள விளக்கேற்றல் மற்றும் மதகுருமார்களின் ஆசி உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் வளவாளர்களாக VICTA நிறுவனத்தின் பயிற்சியாளர்களான ஆர்.தமிழழகன், எஸ்.சிவராஜா மற்றும் எஸ்.கே.எஸ்.நாசிம் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

நிகழ்வில் வவுனியா வர்த்தகர்கள், இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த புகையிரதத்தின் மீது இனம் தெரியாத இளைஞர்கள் சிலரால் நாவற்குழி பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதலின் போது மகேஷ் என்ற இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கல்வீச்சு தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நீரில் மூழ்கும் அபாய கட்டத்தில் இலங்கை பாராளுமன்றம்!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பாராளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தியவன்னா ஓயவின் நீர் பாராளுமன்றத்தை மூடினால் அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மணல் மூட்டைகள் கொண்டு அதனை சுற்றி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறான அபாய நிலை ஏற்படும் பட்சத்தில் அதனை தடுக்க கடற்படையினர் உட்பட பாதுகாப்பு பிரிவினர் தயார் நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அடுத்து வரும் இரு நாட்களில் இலங்கையை அச்சுறுத்த வரும் அடைமழை!!

கடந்த சில நாட்களாக நிலவிய அடைமழையுடன் கூடிய காலநிலை தற்போது குறைவடைந்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை நாட்டின் தென் மேற்கு பிரதேசத்தில் தொடரும் என்று இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

முடிவடைந்த 21 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் 68.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு ,வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் காற்று மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும். மழை பெய்யும் நேரங்களில் காற்றின் வேகம் மேலும் அதிரிக்கலாம் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 29ம் 30ம் திகதிகளில் மீண்டும் அடைமழை பெய்யலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிகல் நாட்டல்!!

 
வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டுதல் நிகழ்வு நேற்று (26.05.2016) நண்பகல் 12 மணியளவில் ஸ்ரீ சிதம்பர லக்ஷ்மி திவாகரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.​

இந் நிகழ்வில் சந்திரகுலசிங்கம் மோகன் (உபநகர பிதா), சிதம்பரபுரம் பொலிஸ் அதிகாரி, வவுனியா மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் , அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியலாயத்திற்கு போட்டோப்பிரதி இயந்திரம் வழங்கல்!!

 
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியலாயத்திற்கு நேற்று (26.05) காலை 7.30 மணியளவில் பாடசாலை பிரார்த்தனையில் வைத்து போட்டோப்பிரதி இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டியின்போது பாடசாலையின் தேவைக்கு போட்டோப்பிரதி பெறும் இயந்திரம் தேவைப்படுவதாக கேட்டுக்கொண்டதற்கு அமைவாக விளையாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத் தலைவரும் வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரப்பட்டதாரிகள் சங்க இணைப்பாளருமான ம.ஆனந்தராஜாவினால் குறித்த பாடசாலைக்கு போட்டோப்பிரதி இயந்திரம் பெற்றுத்தருவதாக அவரது உரையின்போது தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தனது வாக்குறுதிக்கு அமைவாக நேற்று பாடசாலையில் மாணவர்களின் காலைப் பிரார்த்தனையின்போது பாடசாலையின் அதிபர் திருமதி கிருஷ்ணவேணி நந்தகுமாரிடம் புதிய போட்டோப்பிரதி இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டதுடன் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கும் துவிச்சக்கரவண்டி மாணவியின் தேவைகருதி வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்க சர்வதேச நிதிப்பங்களிப்பினூடாக போட்டோப்பிரதி இயந்திரம் துவிச்சக்கரவண்டி என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பூமியை நோக்கி வரும் 5 எரிக்கற்கல் : நாசா அதிர்ச்சித் தகவல்!!

பூமியை நோக்கி 5 எரிக்கற்கல் வந்துகொண்டு இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் சுற்றி வரும் எரிக்கற்கல் அவ்வப்போது பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதுபோன்ற ஒரு எரிக்கல் பூமி மீது மோதியதன் விளைவாகவே டைனோசர்களின் இனம் முற்றிலுமாக அழிந்து போயுள்ளன.

தற்காலத்தில் பூமியில் விழுந்த சிறிய அளவிலான எரிக்கற்கல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், எரிக்கற்கலால் பூமிக்கு உள்ள அச்சுறுத்தல் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், நாசா விண்வெளி நிலையம் நேற்று முன் தினம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், பூமியை நோக்கி 5 எரிக்கற்கல் வந்துகொண்டு இருப்பதாகவும், இவற்றில் ஒரு எரிக்கல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என தெரிவித்துள்ளது. எதிர்வரும் யூலை 23-ம் திகதி முதல் எரிக்கல் பூமியில் இருந்து 5 லூனார் தூரத்தில் கடந்து செல்லும். ஒரு லூனார் தூரம் என்பது 3,84,400 கி.மீ ஆகும்.

இதற்கு அடுத்ததாக அக்டோபர் 12, டிசம்பர் 17, அடுத்தாண்டு பெப்ரவரி 24 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய திகதிகளில் அடுத்தடுத்து எரிக்கற்கல் பூமியை கடந்து செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

இவற்றில் அக்டோபர் 12-ம் திகதி வரும் எரிக்கல் பூமிக்கு மிக அருகில்(0.15 லூனார் தூரம்) கடந்து செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

எனினும், பூமிக்கு மிக அருகில் கடந்து சென்றாலும் இந்த 5 எரிக்கற்கலால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என நாசா தெரிவித்துள்ளது

ஐபிஎல் தொடரில் சாதித்து காட்டிய ஜெயவர்த்னவிற்கு வங்கதேசத்தில் அழைப்பு!!

இந்தியாவில் நடைபெற்று முடிந்த பத்தாவது ஐபில் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அவருடைய பயிற்சியின் மூலம் மும்பை அணி 2017-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் சாம்பின் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து ஜெயவர்த்தனேவுக்கு வங்கதேசத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதாவது இந்தியாவில் எப்படி ஐபிஎல் தொடர் நடைபெறுகிறதோ, அதே போன்ற தொடர் அங்கும் பிபிஎல் தொடர் நடைபெறுகிறது.

இந்தாண்டிற்கான இத்தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் குல்னாடைடன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஜெயவர்த்தனே அழைக்கப்பட்டுள்ளார். இதற்கு அவரும் ஒப்புக் கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு குல்னாடைடன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.