பிரான்ஸ், பெல்ஜியத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் தீவிரவாதிகள் பயன்படுத்திய ஒரே ஆயுதம்!!

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22பேர் பலியாகினர். 119 பேர் படுகாயமடைந்தனர்.

இதுவரை இது தொடர்பாக 8 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதில் தீவிரவாதியான Salman Abedi-இன் சகோதரர் மற்றும் தந்தையும் அடங்குவர்.

Salman Abedi இத்தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிகுண்டு மற்றும் அது தொடர்பான புகைப்படங்களை அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கசியவிட்டனர். அது பிரித்தானிய அதிகாரிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மான்செஸ்டரில் தீவிரவாதிகள் பயன்படுத்திய வெடிகுண்டும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் தீவிரவாதி பயன்படுத்திய வெடிகுண்டும் ஒன்று என அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு குழு தலைவர் Mike McCaul கூறியுள்ளார்.

இது குறித்து கூறுகையில், மான்செஸ்டரில் தீவிரவாதி பயன்படுத்திய குண்டு TATP-வகையைச் சேர்ந்தது. இந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை எவ்வாறு தயாரிக்கலாம் என்ற வீடியோ யூடியுப்பில் உள்ளது.

இதே வகை குண்டு தான் கடந்த 2015ம் ஆண்டு பிரான்சின் பாரிசில் நடந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர், அத்தாக்குதலில் 89 பேர் பலியாகினர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெல்ஜியத்தின், புருசெல் விமானநிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதே வகை குண்டைத்தான் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.

பெல்ஜியம் தாக்குதலில் 32-பேர் பலியாகினர். மேலும் இந்த வகை வெடிகுண்டுகளில் அதிக அளவு கெமிக்கல் மற்றும் அசிடோன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி இதை ஒரு சாதரண மனிதன் செய்ய முடியாது, தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மான்செஸ்டரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியான Salman Abedi-யின் வீட்டை சோதனை செய்த போது, அங்கு ஒரு வெடிகுண்டு தொழிற்சாலையே இருப்பது போல் இருந்துள்ளது.

அந்த அளவிற்கு உபகரணங்கள் இருந்துள்ளன. அதிக அளவிலான கெமிக்கல்களும் வீட்டில் இருந்துள்ளன.

அதுமட்டுமின்றி Salman Abedi சிரியா சென்று தீவிரவாதிகளை சந்தித்துள்ளான் என்பதையும் பொலிசார் உறுதிசெய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஜெர்மனி சென்ற அவன் அதன் பின் துருக்கி வழியாக சிரியா சென்றுள்ளான் என்று தெரிவித்துள்ளனர்.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றது ரயில் தொழிற்சங்கங்கள்!!

ரயில் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் 24 மணித்தியாலய வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளன.

சம்பள நிர்ணயத்தை மீள்நிர்மாணம் செய்தல் மற்றும் ஓய்வூதியம் பெரும் வயதெல்லையை 63 வயது வரை அதிகரிக்குமாறு கோரியே ரயில் தொழிற்சங்கங்கள் மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.

ரயில் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 5ஆம் திகதி சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து ரயில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்திருந்தன.

இதன் காரணமாக நாட்டில் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணிநேர போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ரயில் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமை தொடர்பில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

சொக்லெட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது : ஆய்வில் தகவல்!!

சொக்லெட் சாப்பிட்டு வந்தால் இதயப் பிரச்சினைகள் ஏற்படாது என லண்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு 50 முதல் 64 வயதுள்ள சுமார் 55,000 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் தினசரி உணவுடன் சொக்லெட் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்களது உடல் நலம் குறித்த ஆரோக்கியம் தினமும் கண்காணிக்கப்பட்டது.

அதில் சொக்லெட்டை தங்கள் தினசரி உணவுடன் சேர்த்துக்கொண்டவர்களின் இரத்த ஓட்டம் சீரானமையும் இதயத்திலுள்ள அதிகப்படியான கொழுப்புகளைக் குறைக்கும் பணியில் சொக்லெட் ஈடுபட்டமையும் உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்களுக்கு சொக்லெட் மருந்தாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆரோக்கியம் காக்கும் தூக்கம்!!

 

ஒருவர் தினமும் சரியான நேரத்தில் உறங்கச் சென்று, நன்றாக தூங்கி எழுந்தால் அவருக்கு எத்தனை வயதானாலும்ஆரோக்கியமாகத்தான் இருப்பார். ஆனால் தூக்கம் கெட்டு சரியாக உறங்காமல் இருந்தால் ஆரோக்கியம் கெடுவதுடன் மனநலமும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

தூக்கத்திற்கு அவ்வளவு சக்தியிருக்கிறதா? என கேட்டால் ‘ஆமாம் ’ என்கிறது மருத்துவம்.ஒருவருக்கு தூக்கமின்மை பிரச்சினை வருவகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

உடலின் ஆரோக்கியம் காக்கப்படவேண்டும் என்பதற்காகவும், மேம்படவேண்டும் என்பதற்காகவும் ஹோர்மோன்கள் மாற்றங்களால் ஏற்படுவதே தூக்கம். இது சரியாகவோ அல்லது இயல்பாகவோ நடக்காமல் போனால் ஏற்படுவது தான் தூக்கமின்மை பிரச்சினை.

இந்த பிரச்சனை உருவாவதற்கு முக்கிய காரணமே எம்முள் ஏற்படும் மன அழுத்தம் தான். அத்துடன் மட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம், அதிகளவிலான பணிச்சுமை, நெருக்கடி, கவலை, திடிரென்று உடல் உறுப்புகளில் எதிர்பாராமல் தோன்றும் வலி என பல காரணங்களை கூறலாம்.

ஒருவர் இயல்பைக்கடந்து அதிகாலையில் விழித்தாலோ, தூங்கி எழுந்தபின்னரும் அசதியாக இருப்பதுபோன்று உணர்ந்தாலோ, யார் எதைப் பற்றி கேட்டாலும் எரிச்சலுடன் பதிலளித்தாலோ, கவனமின்மையால் அவதிப்பட்டாலோ,திடிரென்று சிறிது நேரம் வரை நீடிக்கும் தலைவலி வந்தாலோ அல்லது ஜீரண கோளாறுகள் இருந்தாலோ அவர்கள் குறுகிய கால அல்லது நீண்ட கால தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.

மூளையில் மெலோடனின் என்ற ஹோர்மோன் சுரக்கிறது. இது எம்முடைய உறக்கத்தின் போது தான் இயங்குகிறது. இவைகளால் தான் உடல் தசைகள்,எலும்புகள் மற்றும் மன நலம் ஆகியவை பாதுகாக்கப்படுகிறது. அத்துடன் மனச் சோர்வு, மன உளைச்சல், உடல் அசதி, உயர் குருதி அழுத்தம் ஆகியவற்றையும் தூக்கமே குணப்படுத்துகிறது.

ஒருவர் நீண்டகாலமாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தால் அதாவது ஒரு மாத காலத்திற்கு மேலாக தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருடைய காதுகளுக்கு மட்டும் கற்பனையான ஒலிகள் கேட்பது போலவும், மோசமான ஞாபக மறதியும் ஏற்படும். வேறு சிலருக்கு மூளைக்கும் உடல் உறுப்புகளுக்குமான தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு அதிக சோர்வுடன் ஜீரண கோளாறுகளுடன் எரிச்சலுடன் காணப்படுவர்.

இதனிடையே தூக்கமின்மை பிரச்சினையை உருவாக்குவதில் புகைக்கும் மதுவிற்கும் அதிகளவிலான தொடர்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இதற்கு உளவியல் சிகிச்சைகளைத் தொடர்ந்து அளித்தால் இதிலிருந்து மீண்டு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்பலாம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு பழக்க வழக்கத்தை கடைபிடித்தால் மூளையில் சுரக்கும் மெலோடனின் என்ற ஹோர்மோனின் உற்பத்தியை சமசீராக்கி,ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம்

நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் மாட்டிக்கொண்ட நடிகர்!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாக களமிறங்கிவிட்டனர். இதனால், இரண்டாம் கட்ட நகைச்சுவை நடிகர்கள் முன்னணி காமெடியர்களாக தற்போது வலம் வரத் தொடங்கியுள்ளனர்.

அந்த வரிசையில் இரண்டு, மூன்றாம் கட்ட காமெடியனாக இருந்த இரண்டெழுத்து காமெடி நடிகர் தற்போது தன் வசம் நிறைய படங்களை தன்வசம் வைத்துக் கொண்டு கல்லா கட்டி வருகிறார்.

அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது இவருக்கென்று ஹோட்டலில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறை அவருக்கு வசதியாக இல்லையாம். இதனால், தன்னுடைய உதவியாளரிடம் அந்த அறையை மாற்றுமாறு சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டாராம்.

படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் ஹோட்டலுக்கு திரும்பியவர், எப்போதும்போல் தனது அறைக் கதவை திறந்தாராம். உள்ளே பார்த்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம். நிறைய பெண்கள் அவருடைய அறையில் படுத்துக் கிடந்தார்களாம். என்னடா வம்பா போச்சு என்று அதிர்ந்தவர் உடனடியாக அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டாராம்.

அதன்பிறகுதான், அவரது மூளையில் தனது உதவியாளரிடம் அறையை மாற்றச் சொன்னது ஞாபகத்துக்கு வந்ததாம். அறையை மாற்றிய விபரத்தை தன்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று உதவியாளரிடம் அந்த நகைச்சுவை நடிகர் சண்டை போட்டுக் கொண்டிருக்கையில், அந்த அறையில் இருந்த பெண்கள், ஆண்கள் என எல்லோரும் அந்த காமெடி நடிகரை நோக்கி படையெடுத்து வர ஆரம்பித்தனராம்.

இதையடுத்து, அந்த காமெடி நடிகர் நடந்த விவரங்களை அவர்களிடம் சொல்லி மன்னிப்பு கேட்க, அதன்பிறகே அந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாம்.

மண்சரிந்து 3 பெண்கள் மரணம்!!

சப்புகஸ்கந்த, ஹெய்ந்தூவ பகுதியில் வீடு ஒன்றின் மீது மண் திட்டு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக இரண்டு பெண்கள் பலியாகினர்.

இதேவேளை, தெவினுவர பகுதியில் இடம்பெற்ற பிறிதொரு மண்சரிவு அனர்த்தத்தில் இன்னொரு பெண்ணும் உயிரிழந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஏற்பட்டுள்ள காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மீட்பு பயணிகளுக்காக படகுகள் மற்றும் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பணிகளில் ராணுவமும், வான்படையும், கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தங்காலை, ரண்ன பகுதியிலும் – கதிர்காமம் பிரதான வீதி மற்றும் தங்காலை- திஸ்ஸமஹாராம – வீரகெட்டிய வீதிகளிலும் வெள்ளநீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி வேளையில் உள்நுழைந்த நாயினால் ஏற்பட்ட வினை!! (வீடியோ)

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளர் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது, நாய் ஒன்று திடீரென அவ்விடத்திற்கு வந்தமையினால் செய்தியாளர் அதிர்ச்சியடைந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

ரஷ்யாவில் இயங்கிவருகின்ற ஒரு தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தவேளையில் செய்தி வாசிப்பாளரின் பின் பக்கத்திலிருந்து தீடீரென நாய் குரைக்கும் சத்தம் கேட்டு பயந்துப்போன குறித்த செய்தி வாசிப்பளாரான பெண் அதைச் சமாளித்து செய்தியினை தொடர முயற்சித்த வேளையில் குறித்த நாய் மேசையின் மீது ஏறி முயற்சி செய்த காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.

குறித்த நாயின் செய்த வேளையினால் செய்திசேவை 15 நிமிடங்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 120 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!!

குவைத்திற்கு சென்று சித்திரவதைகளுக்குள்ளான இலங்கை பணிப்பெண்கள் 120 பேர் நேற்று முன்தினம் (24.05) நாடு திரும்பினர்.

இவர்களில் 52 பேர் நேற்று அதிகாலை நாட்டிற்கு வருகை தந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. மீதமானோர் நேற்று பிற்பகல் தாயகம் திரும்பினர்.

குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொண்ட குறித்த பணிப்பெண்கள், குவைத் தூதரகத்தின் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும், 50 இலங்கை பணிப்பெண்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டது.

இதனைத் தவிர, குவைத் தொழில் அமைச்சின் கீழுள்ள தடுப்பு முகாமில் 91 இலங்கை பணிப்பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

தரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளி அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ் அணி!!

சர்வரேச கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷ் அணி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலக் கிண்ணத்தை வென்றுள்ள மூன்று அணிகளை பின்தள்ளி 6வது இடத்துக்கு பங்களாதேஷ் அணி முன்னேறியுள்ளமை இதுவே வரலாற்றின் முதல் தடவையாகும்.

பங்களாதேஷ் அணி 93 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளதுடன், இலங்கை 93 புள்ளிகளுடன் 7வது இடத்தையும், 88 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 8வது இடத்தையும் பிடித்துள்ள அதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி 79 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளது.

பங்களாதேஷ் அணி முதன் முறையாக 6வது இடத்துடன் சம்பின்ஸ் கிண்ணத்தில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தரவரிசை பட்டியலில் தென்னாபிரிக்க அணி முதலிடத்தில் உள்ளதுடன், அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் வீழ்ந்து மரணம்!!

மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட மீராகேணி ஸக்காத் கிராமத்தில் இன்று (25) பகல் தண்ணீர் வாளிக்குள் விழுந்து மூன்று வயதுடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றய காணொளிகளை இங்கு கிளிக் செய்க

மீராகேணி ஸக்காத் கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா வாஜீகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெரிய வாளிக்குள் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த நிலையில், அதில் இந்தக் குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் குளித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது, இந்தக் குழந்தை தண்ணீரினுள் அமிழ்ந்து மூச்சுத் திணறியுள்ளது.

குளித்து விளையாடிக்கொண்டிருந்த ஏனைய குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டார் ஓடிச் சென்று, தண்ணீரினுள் அமிழ்ந்து கிடந்த இந்தக் குழந்தையை மீட்டெடுத்து, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும், அவ்வேளையில் குழந்தை உயிரிழந்து காணப்பட்டது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

150 ரூபாயில் ஆரம்பித்து இன்று 3700 கோடியில் நிறுவனம் : சாதனைத் தமிழரின் கதை!!

 
மருத்துவ துறையில் Thyrocare நிறுவனம் என்றால் இன்று பல நாடுகளில் பிரபலம். இந்த நிறுவனம் நோய் தடுப்பு மற்றும் சுகாதார சோதனை ஆய்வகங்களை (Diagnostic And Preventive Care Laboratories) கொண்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 1150 Thyrocare நிறுவனத்தின் மையங்கள் அமைந்துள்ளன.

இந்த மையத்தில் முக்கியமாக தைராய்டு சோதனைகள், மனித ரத்த மாதிரிகள் சோதனை உள்ளிட்ட 200 மேற்பட்ட சோதனைகள் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.வேலுமணி ஆவார்.

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் கடந்த 1959ல் வேலுமணி பிறந்தார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த வேலுமணி தமிழ் வழி கல்வியில் தான் படித்தார்.

கடந்த 1978ல் பட்டப்படிப்பை முடித்த வேலுமணிக்கு போதிய பணி அனுபவமும், ஆங்கில பயிற்சியும் இல்லாத காரணத்தால் பல நிறுவனங்கள் வேலை தராமல் புறக்கணித்தது.

பின்னர், ரூ.150 சம்பளத்தில் வேலுமணிக்கு மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளில் மூடப்பட கையில் இருந்த 400 ரூபாய் பணத்துடன் அவர் மும்பைக்கு சென்றார்.
பின்னர், அங்குள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உதவியாளராக வேலுமணி வேலைக்கு சேர்ந்தார்.

அங்கு பணிபுரிந்து கொண்டே முதுகலை பட்டத்தையும், டாக்டர் பட்டத்தையும் முடித்தார். பின்னர் நல்ல சம்பளம், வேலை என இருந்தாலும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வேலுமணிக்கு தோன்றியது.

இதையடுத்து 14 ஆண்டுகள் அணு ஆராய்ச்சி மையத்தில் பார்த்த வேலையை ராஜினாமா செய்த அவர், தான் சேமித்து வைத்த 2 லட்ச ரூபாய் பணத்தை வைத்து கடந்த 1995ல் Thyrocare நிறுவனத்தை தொடங்கினார்.

பின்னர், தான் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து தைராய்டு சோதனைகளை வேலுமணி செய்ய தொடங்கினார். இன்று இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறேன் என்றால் எனது ஏழ்மையும், எளிமையும் தான் காரணம் – வேலுமணி.

Thyrocare நிறுவனத்தின் போட்டி நிறுவனத்தை விட குறைந்த விலையில் மக்களுக்கு சோதனைகளை செய்ய ஆரம்பித்தார். பின்னர் வளர்சிதை மாற்றம் (Metabolism), நாளமில்லா சுரப்பி (endocrine) சோதனைகள் போன்ற குறிப்பிட்ட துறையில் அதிக கவனத்தை செலுத்தினார்.

பின்னர், மெல்ல மெல்ல வளர்ந்த அவரின் மருத்துவ நிறுவனம் நல்ல லாபத்தை கொடுக்க ஆரம்பித்தது. இன்று, Thyrocare நிறுவனத்தின் மதிப்பு 3700 கோடியாகும்.

லாபத்துக்காக மட்டும் வேலை செய்யக்கூடாது, நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தவும் வேலை செய்தால் தான் லாபம் மற்றும் நிறுவன மதிப்பு என இரண்டும் உயரும் – வேலுமணி
இன்று வேலுமணி தனது போட்டி நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.

இலங்கை பெண் மீது ஜேர்மனியருக்கு ஏற்பட்ட காதலால் நடந்த விளைவு!!

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இப்ராஹிம் அல்சதுரி என்ற ஜேர்மனியர் வீசா இன்றி இலங்கையில் நீண்டகாலம் தங்கியிருந்த நிலையில், அவரை நாடு கடத்துமாறு களுத்துறை மேலதிக நீதவான் சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை பெண் ஒருவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவர் வீசா இன்றி தங்கியிருந்ததாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் உத்தரவிற்கமைய விசேட பாதுகாப்புடன், குறித்த ஜேர்மன் பிரஜை நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரி எல்.எஸ்.ஹெட்டியாராச்சி களுத்துறை நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளார்.

இப்ராஹிம் அல்சதுரி என்ற ஜேர்மனியர் பயாகல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ள நிலையில் அவருடன் நீண்ட காலமாக வசித்து வந்துள்ளார்.

விசா இன்றி வெளிநாட்டவர் ஒருவர் நீண்ட காலமாக இலங்கையில் தங்கியிருப்பது தொடர்பில் பயாகல பொலிஸாரினால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து களுத்துறை மற்றும் மாலிகாந்த நீதிமன்றத்தினால் அவரை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நபர் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கிருந்த தப்பி சென்று காதலியிடம் சென்றுள்ளார்.

எனினும் அவரை மீண்டும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி 22வது நாளாக சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம்!!

 
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் 22வது நாளாக இன்றும் (25​.05.2017​) தொடர்கின்றது.

வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய சுகாதார தொண்டர்களே இக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென குறிப்பிட்டுள்ளனர்.

கஷ்டப் பிரதேசங்களிலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் சேவையாற்றிய தமது நியமனம் குறித்து இதற்கு முன்னர் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தபோது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென தெரிவிக்கும் சுகாதாரத் தொண்டர்கள் இம்முறை தமக்கு உறுதியான தீர்மானம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடருமென குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் யுத்தத்தில் தனது பார்வையை இழந்தவருக்கு கடையமைத்து கொடுத்த தமிழ்விருட்சம்!!

 
வவுனியா செட்டிக்குளம் வீரபுரத்தில் தனது இரு சகோதரர்களும் இறுதிகட்ட யுத்தத்தில் காணாமல் போயுள்ளதுடன் யுத்தத்தில் இவரது பார்வையும் இழந்து வருமையின் மத்தியில் வாழ்ந்து வரும் தனபாலனுக்கு

வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் ஏற்ப்பாட்டில் லண்டன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பினால் நேற்று (24.05.2017) சுமார் நான்கு லட்சம் பெறுமதியான புதிய கடை அமைத்து பலசரக்கு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017.

ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க நயினாதீவில் ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் நாகஈஸ்வரரின் அரவணைப்புடன் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நிகழும் ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 11ஆம் நாள் (25.06.2017) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி

  • 01.07.2017  திருக்கயிலைக் காட்சியும்,
  • 04.07.2017  திருமஞ்ச திருவிழாவும்,
  • 07.07.2017  (வெள்ளிக்கிழமை) இரவு சப்பறத் திருவிழாவும்
  • 08.07.2017  (சனிக்கிழமை) அகிலாண்டேஸ்வரிக்கு தேர் உற்சவமும்
  • 09.07.2017  ஞாயிற்றுக் கிழமை. புனித கங்காதரணி தீர்த்தக்கரையில் தீர்த்தோற்சவம்.
  • 10.07.2017 இரவு தெப்போற்சவத்துடன் நிறைவுபெறும்.

இலங்கையின் கடல் சூழ்ந்த தீவாகிய நயினாதீவில் அழகொழுக வீற்றிருந்து அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் உயர்திருவிழாவிலே அன்னையடிவர்கள் வருகைதந்து அன்னையவள் திருவருட்கடாட்சத்தினை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்..

தாயேயாகி வளர்த்தனை போற்றி.

 

பிடியாணையை ரத்து செய்யக்கோரி சரத்குமார், சூர்யா மனு!!

தங்கள் மீதான பிடியாணையை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடிகர்களின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தனர்

சென்னையில் கடந்த 2009ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். இதுகுறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் 3.9.2009 அன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக நடத்தப்பட்ட சென்னை தென்னிந்திய திரைப்பட சங்க கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய் மற்றும் இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த செய்தியும் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து ஊட்டியை சேர்ந்த பத்திரிகையாளர் ரோசாரியோ மரியசூசை என்பவர் பத்திரிகையாளர்களை நடிகர்கள் தரக்குறைவாக பேசியதால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி ஊட்டியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 13.11.2009 அன்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக சரத்குமார், சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 3.1.2012-ல் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. பின்னர் இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஊட்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜராகாத நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேருக்கும் பிடியாணை பிறப்பித்து நீதிபதி செந்தில்குமார் ராஜவேலு உத்தரவு பிறப்பித்தார்.

தங்கள் மீதான பிடியாணையை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடிகர்களின் வழக்கறிஞர் விஸ்வநாத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.