கொழும்பு – வெல்லம்பிட்டிய பிரதேசத்திலிருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்படுகின்றனர். தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக களனி கங்கையை அண்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது.
இதனால் அப்பகுதியிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் தமது உடமைகளுடன் அப்பகுதியிலிருந்து வெளியேறி வருவதுடன் பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றனர்.
நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை முதல் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி இவர்கள் பலியாகியுள்ளார்கள்.
மேலும் குறித்த அனர்த்தத்தில் 5 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை முதல் நாட்டின் பல பாகங்களிலும் இயற்கை அனர்த்தத்தால் பலர் பாதிக்கப்பட்டதுடன், அதிலும் குறிப்பாக களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களிலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அந்த வகையில் இதுவரை 5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 110க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த அனர்த்தத்தினால் 300 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 20,000 மக்கள் மண்சரிவினால் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி களுத்துறை மாவட்டத்தில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
மாத்தறை – தெனியாய, மொரவகந்த பிரதேசத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், 16 பேர் காணாமல் போயுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் காணாமல் போயுள்ளவர்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்கப்படுவதாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரே நாளில் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.
எகிப்தில், குறிப்பிட்ட கிறிஸ்தவப் பிரிவினரை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதுடன், 25 பேர் படுகாயங்களுக்குள்ளாகினர்.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு சுமார் 220 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மின்யா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
கொப்ட் எனப்படும் கிறிஸ்தவப் பிரிவினர் எகிப்தின் பிரதான கிறிஸ்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொப்ட் பிரிவு கிறிஸ்தவர்களைக் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே இத்தாக்குதலும் கருதப்படுகிறது. எனினும் இதுவரை இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்கவில்லை.
இச்சம்பவத்தையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல் ஸிஸி, இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கு முழு முயற்சி எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்மழையினால் ஏற்பட்டு வரும் வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதுடன் 41 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே இந்த அனர்த்தங்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
புளத்சிங்கள போகஹாவத்த பகுதியில் ஆறு பேர் பலியானதுடன் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், தீவலகட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் எட்டுப் பேரைக் காணவில்லை.
களுத்துறை, பதுரெலிய பகுதியில் நிகழ்ந்த மண்சரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஹெய்யந்துடுவை, சப்புகஸ்கந்தையில் மதில் சுவரொன்று சரிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.
இரத்தினபுரி நகரம் முழுவதும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இந்த அசாதாரண காலநிலையால் அப்பகுதியில் மட்டும் பத்துப் பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
பெலியத்தை – கஹாவத்தையில் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த அசாதாரணச் சூழலால் தெனியாய, மொரவக்க கந்தையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ள நபர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஹினிதுக, நுககஹ பிரதேசதிலுள்ள வீடொன்று வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வீட்டை நெருங்க முடியாத அளவு வெள்ளம் நிரம்பியள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் சிக்கியுள்ள நபர் ஒருவர் ஊடகமொன்றுக்கு தொலைப்பேசி ஊடாக தகவல் தெரிவித்துள்ளார்.
15 சிறு பிள்ளைகளுடன் நேற்று மாலை முதல் இவ்வாறு தாம் ஆபத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 30 பேர் இவ்வாறு வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியாவில் வியாபார நிலையம் ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (25.05) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் அமைந்தள்ள வர்த்தக நிலையத்தில் தீயை அதானித்த அயலவர்கள் கூக்குரலிட்டதன் காரணமாக தீ அணைக்கப்பட்டு பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பல்பொருள் வியாபார நிலையத்தின் உரிமையாளர்..
நேற்று இரவு 8.30 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் இரவு 11 மணிக்கு அயலவர்களின் கூக்குரல் கேட்டதைத் தொடர்ந்து கடைக்கு ஓடிச் சென்று பார்த்தபோது வியாபார நிலையம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டதுடன் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் வியாபார நிலையத்திற்கு தீ வைத்த விசமிகள் பெற்றோல் மற்றும் மண்ணண்ணை கலந்து கடைக்குள் ஊற்றிவிட்டு தீயிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த கடை உரிமையாளர் கடையிலிருந்து சிறிது தூரத்தில் மது அருந்திவிட்டே அவர்கள் இந்த நாச வேலையை செய்திருப்பதாகவும் மதுப்போத்தல்களை அவ்விடத்தில் காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையினால் நாட்டின் சில இடங்களில் அனர்த்தங்கள் ஏற்படலாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
காலி, மாத்தறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று இரவு கடும் மழை பெய்துள்ளது.
ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையின் காரணமாக பத்தேகம, தவலம, நாகொட மற்றும் வெலிவிட்டிய உட்பட கீழ் மட்ட பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்காத பிரதேசங்கள் உட்பட பல பகுதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மணித்தியாலங்களில் அடைமழை பெய்தால் களனி கங்கைக்கு அருகில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன துறை திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக களனி கங்கைக்கு இரண்டு பக்கத்திலும் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி இயக்குனர் பிரதிப் கொடிபிலி குறிப்பிட்டுள்ளார்.
களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அதனை சுற்றியுள்ள கீழ் மட்ட பகுதி மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் இரண்டாம் திகதி வரை நாடு பருவபெயர்ச்சி மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
T20 கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையை அமல்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
ஐசிசி கிரிக்கெட் கவுன்சிலின் தொழில்நுட்ப வருடாந்திர கூட்டம் லண்டனில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளை சேர்ப்பது, மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரர்களை வெளியில் அனுப்பும் அதிகாரத்தை நடுவர்களுக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.
மேலும், T20 போட்டிகளிலும் டிஆர்எஸ் முறையை அமல்படுத்துவது குறித்த முக்கிய விவாதமும் அதற்கான பரிந்துரைகளும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயவர்தனே, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ராகுல் டிராவிட், டேரென் லீமென், ஷான் பொல்லாக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தமிழகத்தில் சாலையில் அடிபட்டு கிடந்த கீரிக்கு காவலர் ஒருவர் தண்ணீர் கொடுத்து காலை நீவி விட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் மனிதர்கள் அடிபட்டு கிடந்தாலே கண்டும் காணாமல் போகும் இந்த காலத்தில் காவலர் ஒருவர் விலங்கிற்கு இரக்கம் காட்டி உதவியுள்ளது வைரலாகியுள்ளது.
கோத்தகிரியிலிருந்து வண்டிச்சோலை நோக்கி வரும் சாலையிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
குன்னூர் காவல்துறையில் ஓட்டுநராக பணியாற்றி வரும் ஆனந்த் என்ற காவலரே இவ்வாறு உதவியுள்ளார்.
ஆனந்த் உட்பட மூன்று காவலர்கள் குன்னூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, சாலையின் நடுவே கீரி ஒன்று அடிபட்டு கிடந்தள்ளது.
இதை பலரும் கண்டுக்கொள்ளாமல் போக, கடந்து போக மனமில்லாத ஆனந்த் கீரிக்கு அருகே சென்று தண்ணீர் கொடுத்து அதன் கால்களை நீவி விட்டுள்ளார்.
தண்ணீர் குடித்த கீரி தெம்புடன் மீண்டும் காட்டிற்குள் போனதாக காவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வரும் பயணிகள் உணவுகளை சாலை ஓரத்தில் கொட்டுவதால், அதை உண்ண விலங்குகள் வரும்போது இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மென்பொருள் பொறியாளரான சுவாதி, பட்டப்பகலில் பலரது முன்னிலையில், படுகொலை செய்யப்பட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், குற்றவாளி என்று முடிவுசெய்யப்பட்ட ராம்குமாரை ஜூலை 1ம் திகதி பொலிசார் கைது செய்தனர்
பின்னர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், செப்டம்பர் 18ம் திகதி சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இச்சம்பவத்தில் மர்மம் இருப்பதாக ராம்குமாரின் பெற்றோரும் வழக்கறிஞரும் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருக்கின்றன. அதனால், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தர வேண்டும்.
ராம்குமாரின் பெற்றோர் கடந்த 7 மாதங்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், ராம்குமார் தொடர்பான எந்த ஆவணங்களையும் எங்களுக்குத் தர மறுக்கிறார்கள்.
காவல்துறை மட்டும் அல்லாமல் நீதிமன்றமும் ராம்குமார் குறித்த ஆவணங்களைக் கொடுக்க மறுக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நாங்கள் மீண்டும் நீதிமன்றத்திடம்தான் முறையிட வேண்டிய நிலைமை. ஆனால், நீதிமன்றங்கள் எதையோ மறைக்க விரும்புவதால் ஆவணங்களைத் தர மறுக்கின்றன.
அதனால், ராம்குமாரின் பெற்றோர் செங்கோட்டை காவல்நிலையத்துக்குச் சென்று காவல்துறை, நீதித்துறை மீது கொலை வழக்குப் பதிவு செய்யுமாறு புகார் கொடுக்க இருக்கிறார்கள்.
நீதிமன்றத்தின் பாதுகாப்பில் இருந்த அவர் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார்கள். அவரது பாதுகாப்புக்கு நீதிமன்றம்தானே பொறுப்பு ஏற்று இருக்க வேண்டும்.
அப்படியானால், சிறைக்குள் அவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நீதிபதிதானே புகார் செய்திருக்க வேண்டும். அப்படி நடக்காதது ஏன்,
சுவாதி கொலை வழக்கின் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அதன் பின்னணியில், தீவிரவாத இயக்கங்களுக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்கிற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது.
அதனால், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும். இதில் நீதித்துறைக்கும் தொடர்பு இருப்பதால், சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணையைக் கோருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் மாராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளரின் மனைவி மர்மமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள தனியார் ஊடகத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தவர் இந்திராணி முகர்ஜி.
இவரின் மகள் ஷீனா போரா என்பவரின் கொலை வழக்கை விசாரித்து வந்த குழுவில் காவல் ஆய்வாளர் தயனேஷ்வர் கனோர் முக்கிய பங்கு வகித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற கனோர்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் வீட்டிற்கு செல்லும்போது அவரது மனைவி, தீபாலி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.
அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் கனோர் மற்றும் தீபாலியின் 21வயது மகன் சித்தாந்தை காணவில்லை என்பதும் தெரிய வந்தது.
கொலை நடந்த இடத்தில் “இவர்களால் நான் சோர்வடைந்துவிட்டேன், என்னை பிடித்து தூக்கில் போடுங்கள்” என இரத்தத்தால் எழுதப்பட்டு ஒரு ஸ்மைலி குறியீடும் வரையப்பட்டு இருந்தது.
இதனால் காவல் ஆய்வாளரின் மகன் சிந்தாந்த் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள சித்தாந்தையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் கூறும்போது, கொலை செய்யப்பட்ட தீபாலியின் உடலில் 4 முதல் 5 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும், அவர் செவ்வாய் இரவு 8 முதல் 9 மணிக்குள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் தீபாலியை யார் கொலை செய்தது என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த நபரை நம்பி அந்நாட்டிற்கு சென்ற பெண் பல்வேறு துயரங்களுக்கு பின்னர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
டெல்லியை சேர்ந்த உஸ்மா என்ற பெண், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்த தாகிர் அலியை மலேசியா சென்ற போது காதலித்தார்.
கடந்த 1–ந் திகதி உஸ்மா, வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு துப்பாக்கி முனையில் வைத்து, உஸ்மாவை தாகிர் அலி திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் தான் அலியின் உண்மை முகம் உஸ்மாவுக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்திய தூதரகத்தை நாடிய உஸ்மா, தாகிர் அலி ஏற்கனவே திருமணம் ஆனவர், 4 குழந்தைகளுக்கு தந்தை, அவற்றையெல்லாம் என்னிடம் மறைத்துவிட்டார்.
எனது ஆவணங்களையும் கிழித்துபோட்டு என்னை உடல்ரீதியாக கொடுமைப்படுத்துகிறார் என தன்னுடைய நிலை குறித்து எடுத்துரைத்துள்ளார்.
மேலும், நான் எனது நாட்டிற்கு மீண்டும் செல்ல வேண்டும் என தூதரகம் உதவியுடன் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், உஸ்மா இந்தியா திரும்ப நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் அவர் வாகா எல்லையை அடையும் வரையில் பாகிஸ்தான் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அட்டாரி- வாகா எல்லையின் வழியாக இன்று இந்தியாவிற்குள் நுழைந்தவர், இந்திய மண்ணை தொட்டு கும்பிட்டார்.
இந்திய அரசு தங்களுக்கு முழு உதவியையும் செய்ததாக உஸ்மாவின் சகோதரர் கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை ஜுன் 05 ஆம் திகதி வரை தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. சில பகுதிகளில் கடும் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாகவே தற்போது கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இதற்கமைய இன்று நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் 150 மில்லிமீற்றரிலும் அதிக மழை பெய்யுமென்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல்,தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று அதிகூடிய மழையை எதிர்பார்க்க முடியும்.
கடும் மழையுடன் கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்குமென்பதனால் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தென்மேல் மாகாணங்களைத் தவிர்ந்த நாட்டின் ஊவா,கிழக்கு ஆகிய ஏனைய மாகாணங்களில் மாலை வேளைகளில் மட்டும் மழைபெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மன்னாரிலிருந்து கொழும்பு ஹம்பாந்தோட்டையூடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசம் மிகவும் கொந்தளிப்புடன் இருக்குமென்றும் காற்று மணித்தியாலத்திற்கு சுமார் 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென்றும் வானிலை அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் ஏனைய கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இக்காலப்பகுதியில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் விழிப்புடன் செயற்படுவது அவசியமென்றும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.