சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் : களமிறங்கிய சட்டத்தரணிகள்!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பாக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் (3) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு, உயிரிழந்த மாணவனுக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புவதாக சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான், கடந்த 29 ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.

மன அழுத்தம் காரணமாக தவறான முடிவெடுத்துக் கொள்வதாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதையை தாங்க முடியாமல் சரித் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சு நேற்று (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணை நடத்த ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரித்துடன் பகிடிவதைக்கு உள்ளானதாக கூறப்படும், 16 மாணவர்களிடம் சமனலவெவ பொலிஸார் நேற்று வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இந்தநிலையில், குறித்த மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணிகளான ரச்சிக பலிஹவடன மற்றும் கல்ஹார விஜேசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

இளைஞரொருவரை உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!!

கல்கிஸ்சை பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி இரவு கல்கிஸ்சை, ஹுளுதாகொடை பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

குறித்த இளைஞன் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சுவின் சகா என்றும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஏற்பட்ட தகராறே கொலைக்கான காரணம் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கல்கிஸ்சை, புனித ரீட்டா வீதியில் வசித்த ஐம்பது வயதான நபரொருவர் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தரை கொலை செய்த நபர்!!

சீகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த ஒருவரை மற்றொரு நபர் தாக்கி கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹென்வலயகம, கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே சிறிது காலமாக இருந்த தனிப்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்காக சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கிம்பிஸ்ஸா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்காக அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாராகும் டிஜிட்டல் அடையாள அட்டை!!

இலங்கையர்கள் பயன்படுத்தும் தற்போதைய சாதாரண அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“நாட்டின் குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போதும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.

புதிய டிஜிட்டல் அடையாள அட்டையில் உள்ள குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு வேறு எந்த தரப்பினருக்கும் அனுப்பப்படாத உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயலாக்கப்படும்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர் தரத்துடன் கூடிய அடையாள அட்டையாக இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!!

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக வெலிகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மாணவன் இது தொடர்பில் தெரிவிக்கையில், கடந்த 29 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதிக்கு வந்த மாணவர்கள் சிலர் தலைக்கவசங்களினால் எனது தலை மற்றும் முதுகு பகுதிகளில் பலமாக தாக்கினர்.

பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகடிவதைக்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். இதனால்தான் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் என்னை இவ்வாறு தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் எனக்கு நியாயத்தை பெற்றுத்தருமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

UK செல்ல தயாரான மாணவன் உயிரிழப்பு : தவிக்கும் குடும்பம்!!

சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு குடவெல்லவைச் சேர்ந்த முத்துமலகே ஆதித்யா என்ற மாணவனே, குடவெல்ல வாலுகாராமயவிற்கு முன்பாக நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 

சம்பவத்தில் , நகுலுகமுவ கல்லூரியின் 13 ஆம் ஆண்டு மாணவனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவர் சுமார் ஒரு மாதத்தில் வெளிநாட்டில் படிக்க ஐக்கிய இராச்சியத்திற்குச் செல்லத் தயாராகி வருவது தெரியவந்தது.

தனது பெற்றோரும் இரண்டு சகோதரிகளும் அருகிலுள்ள வீட்டில் ஒரு விழாவில் இருந்தபோது, ​​குடவெல்லவிலிருந்து மாவெல்ல நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளின் அதிவேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மாணவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலை மாணவன் உயிரிழப்பு : விசாரணைக்கு மூவரடங்கிய குழு!!

பகிவதையால் உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அறிக்கையை விரைவாக கையளிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் சுனில் ஷாந்த தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் உள்ளிட்ட தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தின் மாணவர்களுக்கு தற்போது இணையவழி (Online ) ஊடாகவே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கமைய அந்த மாணவருக்கு பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டிய தேவை இருக்கவில்லை எனவும் உபவேந்தர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் குறித்த மாணவன் கடந்த 26ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளதாகவும் 27ஆம் திகதி பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த மாணவனுக்கு பல்கலைக்கழகத்திற்குள் தங்குமிட வசதி வழங்கப்படாவிட்டாலும் அவர் மூன்றாமாண்டு மாணவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே தங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையே, குறித்த திடீர் மரணம் பகிடிவதை காரணமாக இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவரொருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பகிடிவதை குற்றவியல் குற்றம் என்பதால் அவ்வாறான விடயம் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படுமாயின் அதனுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.

3 பிள்ளைகளின் தாய் கொடூரமாக படுகொலை!!

கதிர்காமம், பேரகிரிகம பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது கணவனை பிரிந்து பேரகிரிகமவில் வேறொரு ஆணுடன் வசித்து வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் பதிவாகி உள்ளது.

உயிரிழந்த பெண் தனது முறையற்ற கணவருடன் அடிக்கடி வாக்குவாதங்களிலும் சண்டைகளிலும் ஈடுபட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமரா அமைப்பைக் கூட கொலையாளி அகற்றி எடுத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் – முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் பலி : மற்றுமொருவர் படுகாயம்!!

காலி – அஹங்கம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (02) காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி ஒன்று ரயைிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் மாமனாரும், மருமகனும் பலி : தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்!!

திருகோணமலை – ஈச்சிலம்பற்று – சூரிய நகரில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

காணி உரிமையாளரான 47 வயது நபர், வயலில் பொருத்தப்பட்டிருந்த யானைத் தடுப்பு மின் வேலியை சுத்திகரிப்பு செய்த போது மின்சாரம் தாக்கியுள்ளது.

அவரை மீட்க முற்பட்ட அவரது மகளின் கணவரான 27 வயதுடைய இளைஞரும் மின்சார தாக்கத்துக்கு உள்ளானார்.

பின்னர் அவர்கள் இருவரும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (02.05.2025) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 974,398 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,380 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 275,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,520 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 252,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,090 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 240,700 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்!!

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas), தனது 116 வயதில் காலமானார்.

தெற்கு பிரேசிலிய மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் 1908 ஜூன் 8 ஆம் திகதி அவர் பிறந்தார் இனா கனபரோ லூகாஸ், தனது 20 களின் முற்பகுதியில் கத்தோலிக்க கன்னியாஸ்திரியானார்.

அவர், தனது பிறந்தநாளை தனக்கு பிடித்த விளையாட்டுக்கழகமான இன்டர்நேசனல் – போர்டோ அலெக்ரேவின் கால்பந்து அணியுடைய அரங்கத்தின் வடிவத்தில் ஒரு கேக்குடன் எப்போதும் கொண்டாடி வந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தீவிர கால்பந்து ரசிகையான அவர், தனது 116வது பிறந்தநாளை தனக்குப் பிடித்த அணியின் சின்னத்தை அணிந்து கொண்டாடியுள்ளார். 2018 ஆம் ஆண்டு போப் பிரான்சிஸால் ஆசீர்வதிக்கப்பட்ட சகோதரி இனா, கடவுளே தனது நீண்ட ஆயுளுக்கு இரகசியம் என்று கூறி வந்துள்ளார்.

இந்தநிலையில், சகோதரி இனாவின் மறைவை அடுத்து, தற்போது வாழும் வயதானவர் என்ற பட்டம் இங்கிலாந்தின் சர்ரேயைச் சேர்ந்த 115 வயதான எத்தேல் கேட்டர்ஹாம் என்பவருக்கு செல்கிறது.

116 வயதான சகோதரி இனாவுக்கு எந்த நோயும் இல்லை, ஆனால் அவரது உடல் படிப்படியாக வேலை செய்வதை நிறுத்திவிட்டது என்று அவரது மருமகன் கூறியுள்ளார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நபர் சடலமாக மீட்பு!!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடும் மழை காரணமாக வெல்லவாய, கிரிந்தி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த நபரொருவர் நேற்று வியாழக்கிழமை (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் வெல்லவாய, தெலுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் ஆவார்.

இதேவைள, நேற்று வியாழக்கிழமை கிரிந்தி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரொருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போன நபரை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உயிரினங்களுடன் மூவர் கைது!!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உயிரினங்களுடன் பெண் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை (01) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா – வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும் இரண்டு ஆண்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து நேற்று காலை 09.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து உயிரினங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து அரிய வகை ஆமைகள், நத்தைகள், மீன்கள், கடல் நத்தைகள், தவளைகள், கடலாமைகள் உள்ளிட்ட பல உயிரிழனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய இன பாம்பு!!

மொனராகலை அருகே உள்ள உயிரியல் ரீதியாக வளமான மரகல மலைத்தொடரில் இலங்கைக்கே உரித்தான ஒரு புதிய பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் உள்ள மொனராகலை நகரத்திலிருந்து 54 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மலைத்தொடரில் இந்த புதிய வகை பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய பாம்பு, கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த டென்ட்ரெலாஃபிஸ் இனத்தைச் சேர்ந்தது.

அத்துடன், உருவவியல் ரீதியாக விரி ஹால்டாண்டா உடன் மிகவும் ஒத்திருக்கும் இந்தப் புதிய இனத்திற்கு, நாட்டின் முன்னணி ஆராய்ச்சியாளரான தாசுன் அமரசிங்கவின் நினைவாக, தாசுன்ஸ் ப்ரோன்ஸ்பேக் என்றும், விலங்கியல் ரீதியாக டென்ட்ரெலாஃபிஸ் தாசுனி என்றும் ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் உள்ள மரகல மலையிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒற்றை பெண் மாதிரியிலிருந்து இந்தப் புதிய இனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சிக் குழுவின் சமீரா சுரஞ்சன் கரனரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்பு, இலங்கையின் தனித்துவமான புவிசார் மற்றும் உயிரியல் வளங்களை மேலும் விளக்கும் வகையில் முக்கியமாக கருதப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவன் மரணம் : கல்வி அமைச்சு அதிரடி!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரின் திடீர் மரணம் தொடர்பாக இன்று (01.05.2025) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்தமை குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்ததும், பல்கலைக்கழக நிர்வாகமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட நபர் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, அவர் 28 ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சரித்தின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.