உண்டியலில் கை மாட்டிக்கொண்டதால் இரவு முழுவதும் கோவிலில் இருந்த நபர்!!

உண்டியலில் திருட முயன்ற போது, கை மாட்டிக்கொண்டதால் இரவு முழுவதும் கோவிலிலே இருந்துள்ளார். கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நகை, பணம் ஆகியவற்றை, உண்டியலை உடைத்து திருடர்கள் திருடி செல்வது நடந்து வந்தது.

தற்போது பெரும்பாலான கோவில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், உண்டியல் திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளது. ஆனால், சிசிடிவி கேமராக்கள் இல்லாத சிறிய கோவில்களில் அவ்வப்போது உண்டியல் நடைபெறுகிறது.

அதே போல், தர்மபுரியில் உள்ள கோவில் ஒன்றில், உண்டியலில் இருந்த பணத்தை திருட முயன்ற நபர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள சேஷம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியாண்டிச்சி கோயில் உண்டியலில் ஒரு நபர் நேற்று முன்தினம் இரவு திருட முயன்றுள்ளார்.

கையை உண்டியலின் உள்ளே விட்டு, அந்த நபர் பணத்தை எடுக்க முயன்றுள்ளார். அதன் பிறகு, அவரது கையை வெளியே எடுக்க முடியவில்லை.

இதன் காரணமாக இரவு முழுவதும், உண்டியலின் உள்ளே கையை வைத்துக்கொண்டே அந்த இடத்தில் அமர்ந்துள்ளார்.

மறுநாள் காலை அந்த வழியாக சென்ற மக்கள், உண்டியலின் உள்ளே கை சிக்கியிருந்த நிலையில், அவர் அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இயந்திரம் மூலம் உண்டியலை வெட்டி, அந்த நபரின் கையை உண்டியலில் இருந்து வெளியே எடுத்தனர். மேலும், அந்த உண்டியலில் ரூ.500 மட்டுமே இருந்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த தங்கராஜ்(43) என்பதும், கூலி தொழிலாளியான அவர்,

சிறுசிறு திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து : ஒருவர் பலி!!

தெற்கு அதிவேக வீதியில் கஹத்துடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5.5 கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (28) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறையிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த கார், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், காருக்கு அருகில் சாரதி நின்றுக்கொண்டிருந்த போது, அதே திசையில் பயணித்த மற்றொரு கார் அவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர் தும்மோதரை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய காரின் சாரதி மற்றும் காரில் பயணித்த இருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வாகன விபத்துக் குறித்து கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனேடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூன்று தமிழர்கள் வெற்றி.!!

2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (28) நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் விபரல் கட்சியின் சார்பில் மூவரும், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் இருவரும், பசுமை கட்சியின் சார்பில் ஒருவரும் என மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இவர்களில் விபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மூன்று தமிழர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, Pickering–Brooklin தொகுதியில் ஜுனிதா நாதன் ஆகியோர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

இதுவரை வெளியான உத்தியோகபற்றற்ற முடிவுகளின் அடிப்படையில் அனிதா ஆனந்த் 28,498 (50.4%) வாக்குகளையும், ஹரி ஆனந்தசங்கரி 33,164 (63.9%) வாக்குகளையும், ஜுனிதா நாதன் 24,951 (53.2%) வாக்குகளையும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்று லிபரல் கட்சி சிறுபான்மை ஆட்சி அமைத்துள்ள நிலையில் மீண்டும் அனிதா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இந்தத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் Markham-Stouffville தொகுதியில் போட்டியிட்ட நிரான் ஜெயநேசன்,

Markham -Thornhill தொகுதியில் போட்டியிட்ட லியோனல் லோகநாதன், பசுமை கட்சியின் சார்பில் Etobicoke வடக்கு தொகுதியில் போட்டியிட்ட சருன் பாலரஞ்சன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வங்கிக்குள் புகுந்து விளையாட்டுக் காட்டிய இலங்கையருக்கு நேர்ந்த கதி!!

நாட்டிலுள்ள அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கள் கணக்குகளுக்கு பணம் கிடைத்துள்ளதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தேனுக சச்சிந்த என்ற நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச வங்கி தலைமையகத்தின் தொழில்நுட்ப மேலாளரால் 2022 ஆம் ஆண்டு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

வங்கியின் கம்பஹா கிளையின் பல வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற பல குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கணக்குகளில் பணம் எதுவும் வரவில்லை எள அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வங்கியின் தலைமையகத்தின் தொழில்நுட்ப மேலாளர் முறைப்பாடு செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

வங்கியின் கணினி அமைப்பை அணுகி அந்த குறுஞ்செய்திகளை அனுப்பிய நபர் குறித்து நீண்ட விசாரணை நடத்தியதாகவும், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையர் எனவும் அவர் கணினி தரவுத்தளம் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் யாருடைய கணக்குகளிலிருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில் நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் தங்க விலையானது இன்று (29) மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 999,982 ரூபாவாக காணப்படுகின்றது.

அதன்படி, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,280 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 282,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,340 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 258,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 30,870 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 247,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்!!

தென்னிலங்கையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பெலியத்த நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பெலியத்தவிலிருந்து திக்வெல்ல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் 30 பேர் காயமடைந்து நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் தங்காலை மருத்துவமனையிலும்,

பெலியத்த ஹத்போதிய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் வெளிநாட்டு நாணயத்துடன் சிக்கிய தமிழ் யுவதி!!

கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்ய வந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொழிலதிபரின் வீட்டில் இருந்து ஒரு கோடி 34 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரங்கள் இரண்டு மற்றும் 500 ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியவற்றை திருடிச் சென்று மறைந்திருந்த பெண் குருந்துவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

மஸ்கெலியா பகுதியை சேர்ந்த சிவசுந்தரம் சிவரஞ்சனி என்ற 23 வயது பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இளம் பெண் வீட்டிற்கு வேலைக்கு வந்து 4 மாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் 9 ஆம் திகதி விடுமுறையில் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த தொழிலதிபரின் 2 பிள்ளைகள் 20 நாட்களில் மீண்டும் வெளிநாடு செல்லத் தயாராகியுள்ளனர்.

இதன் போது தந்தை தனது பிள்ளைகளுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த 2 மதிப்புமிக்க கைக்கடிகாரங்களை தேடியபோது, ​​அவை காணாமல் போனதைக் கண்டு, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

4 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த இளம் பெண் விடுப்பில் சென்றுவிட்டு வேலைக்குத் திரும்பவில்லை எனவும் தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபர் காணாமல் போன கைக்கடிகாரம் மற்றும் பணத்தை திருடிவிட்டதாக தெரியவந்தது. இந்த நிலையில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

250 ரூபாவை நெருங்கும் தேங்காயின் விலை!!

நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கடுமையாக அதிகரித்துள்ளது. ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நாட்களில் 180 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்ட தேங்காயின் விலை மீண்டும் 220 ரூபா மற்றும் 240 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் சாகுபடி அதிகரிக்கும் என்றும் அந்தக் காலப்பகுதியில் தேங்காயின் விலை குறையலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தையில் தேங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் பலி : அதிவேக வீதியில் சம்பவம்!!

தெற்கு அதிவேக வீதியில் கஹத்துடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5.5 கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் நேற்று (28) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறையிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த கார், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், காருக்கு அருகில் சாரதி நின்றுக்கொண்டிருந்த போது, அதே திசையில் பயணித்த மற்றொரு கார் அவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர் தும்மோதரை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய காரின் சாரதி மற்றும் காரில் பயணித்த இருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வாகன விபத்துக் குறித்து கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு : மீரிகமவில் சம்பவம்!!

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கம்பஹா – மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை அதிபர் உயிரிழப்பு!!

கந்தேகெதர – அலுகொல்ல வீதியில் சார்ணியா தோட்ட கொல்லுமண்டி பிரிவில் உள்ள ஆற்றங்கரை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் திங்கட்கிழமை (28) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் வியலுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 59 வயதுடைய அதிபரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த பஸ்ஸை முந்திச் செல்ல முயன்ற போது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வடிகானுக்குள் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பாடசாலை அதிபர் உயிரிழந்துள்ளார். இவர் பதுளையில் இருந்து பாடசாலையை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தேகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் பல மாணவர்கள் மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி!!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் சப்ரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை நகரில் அமைந்துள்ள கே/தெஹி/புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்தப் பாடசாலையில் 4 மாணவர்கள் 3 பாடங்களிலும் ‘ஏ ‘ சித்திகளைப் பெற்று அசத்தியுள்ளனர்.

கலைப் பிரிவில் ஜெயக்குமார் ஜெரோன் மற்றும் நாகராஜா கிஷாந்தனி ஆகிய மாணவர்கள் 3 பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

வர்த்தகப் பிரிவில் சிவராஜா காயத்திரி மற்றும் மஹேந்திரன் கோகிலா ஆகிய மாணவர்கள் 3 பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும், ஆசிரியர்களுக்கும், தங்களது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி

வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி பெற்ற சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது,

கணிதப் பிரிவில் அன்ரன் தேவராஜன் தேனுஜன் ஏ 2பி, வரதராசா தர்சிகன் ஏபிசி, உதயகுமாரன் தினேஷ் 2பி சி, வடிவேல் விக்னேஷ் பி 2சி, கிருஷ்ணதேவன் ரவிந் பிசி எஸ், சிறிரங்கநாதன் தனுசன் 3சி சித்தியை பெற்றுள்ளனர்.

உயிரியல் பிரிவில் சிவபாலன் நந்தசுந்தரன் 3சி சித்தியை பெற்றுள்ளார்.

வணிகப் பிரிவுவில் அபிநயா செந்தில்வேல் 3ஏ, கிஷானி ரங்கநாதன் பி 2சி, சோபிகா இலங்கேஷ்வரன் பி 2சி, ஜருணா விஜயசிறி 3சி சித்திகளை பெற்றுள்ளனர்.

கலைப் பிரிவுவில் தனுஷா முருகையா 3ஏ, நாகைமதி தினேஷ்குமார் 2ஏ சி, சிவனியா சிறிதரன் 3பி, சந்தியா கண்ணதாசன் ஏபிசி, சிறி அருளானந்தராசா கண்ணதாசன் 2பி சி, கிஷானி யோகேந்திரன் ஏபி எஸ், ஞானேஷ்வரன் யதுசிகன் பி 2சி, சிவகாமி சிவகுமார் பி 2சி சித்திகளை பெற்றுள்ளனர்.

மேலும், பொதுப் பிரிவில் புவிதா மகேந்திரராஜா பி 2எஸ் சித்தியையும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் பவித்திரா பரிபூரணா ஆனந்தம் 2பி சி, குயின்சியா மகேஷ்வரன் 2பி சி, கஷ்வினி சுதர்சன் பி 2சி,

ஜோன் ஒலிவர் ஜெனிபா பிசி எஸ், குகனேசன் விமலன் 2சி எஸ், விஜிந்தா தேவகுமார் 3சி, அபிநயா குலேந்திரன் சி 2எஸ்சித்திகளை பெற்றுள்ளனர். பொறியியல் தொழில்நுட்ப பிரிவு அல்பேர்ட் குணசூரியர் டிலக்சன் அருள்ராஜ் ஏபிசி சித்தியை பெற்றுள்ளார்.

வவுனியா

உயர்தர பரீட்சையில் உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சந்திரசேகரன் ருக்சிகா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் உயிர்முறைமை தொழில் நுட்பப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி

பயிலும் சந்திரசேகரன் ருக்சிகா என்ற மாணவி 2ஏபி சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 134 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அத்துடன், உயிர்முறைமை தொழில் நுட்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையை வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த உபைதுல்லா பாத்திமா ஹப்ஸா என்ற மாணவி 2ஏபி சித்திகளைப்

பெற்று இரண்டாம் நிலையும், சைவப்பிரகாச மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஜதுசனா என்ற மாணவி 2ஏபி சித்திகளை பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளனர்.

வீட்டில் வளர்த்த நாயால் பறிபோன உயிர் : மருத்துவர்கள் எச்சரிக்கை!!

காலி தேசிய மருத்துவமனையில் வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏழு வயது பாடசாலை மாணவன் எனவும் அவர் 24 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டி, மாணவனின் முகத்தில் கீறிய நிலையில், தரையில் வீழ்ந்தமையால் ஏற்பட்ட காயம் என பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

எனினும் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய பின்னர், 24 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி முறையாகப் போடுவதும், விலங்கு கடித்தாலோ அல்லது கீறப்பட்டாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம்!!

வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்பட்டதன் பின் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும், கணிசமான விலை அதிகரிப்பு காரணமாக வாகனங்களுக்கான தேவை குறைந்துள்ளதாக பிரதான வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகன இறக்குமதி துவங்கியவுடன் அதிக தேவை ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அவ்வாறான தேவை உருவாக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால், இறக்குமதியாளர்கள் அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

இறக்குமதியாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும், சில சமயங்களில் இறக்குமதி உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். எனவே, வாங்குபவர் முன்பதிவு செய்த பின்னரே வாகனங்களை இறக்குமதி செய்யத் தொடங்குவார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், வாங்குபவர் வாகனத்தை முன்பதிவு செய்த பின் வாகனத்தை விநியோகம் செய்ய சுமார் ஐந்து மாதங்கள் ஆகும்.

எனினும் புதிய வாகனங்களின் விலை உயர்வால், வாகனங்கள் வாங்குவதையோ, பயன்படுத்திய வாகனத்தை வாங்குவதையோ மக்கள் கைவிடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.

பாரிய மின்னல் தாக்கம் : மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, மாலை வேளையில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், அறிவுறுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இனி யாழ்ப்பாணத்தில்!!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை உருவாக்கும் பாரிய எதிர்பார்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் முதலாம் தவணைக் காலம் பூர்த்தியாகும் முன்னதாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கட் போட்டியொன்றை நடத்த வேண்டும் என்பது தமது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

எமது தலைமுறையினர் போர் புரிந்ததாகவும் அடுத்த தலைமுறையினருக்கு போர் இல்லாத ஓர் நாட்டை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அரசாங்கம் தராதரம் பாராது குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதிமொழி வழங்கியுள்ளார்.