வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய தமிழ் தாய் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

குருநாகலில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் தாயார் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி வெலேகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருந்தார்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி உயிரிழந்த மாணவனின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

“நானும் என் இரண்டு மகள்களும் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தோம். என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை, நாட்டுக்கு வருமாறு தொலைபேசி அழைப்பு வந்தது.

இவ்வளவு அவசர செய்தி எனக்கு ஒருபோதும் கிடைக்காததால், பதற்றத்துடன் 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்தேன். நான் வந்தபோது, ​​என் மகன் குருநாகல் போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

என் மகனால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை” என உயிரிழந்த மாணவன் திலின விராஜின் தாயார் கோவிந்தன் புஷ்பராணி கண்களில் கண்ணீருடன் கூறினார்.

என் மகன் கடைசியாக 14 ஆம் திகதி இறுதியாக கதைத்தார். வெளிநாட்டில் இருந்து வரும் போது சில ஆடைகளை கொண்டு வருமாறு கேட்டிருந்தார்.

அதன் பிறகு, அந்த மகனுடன் ஒரு வார்த்தை கூட பேச கிடைக்கவில்லை. என் மகனின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து என் மகனை ஏன் இப்படித் தாக்கினார்கள் என்பதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். எனது ஒரே மகன், அவரது நண்பர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஒரு தாய் எப்படி இவ்வளவு துயரத்தை தாங்கிக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

A/L பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம் : பிரதமர் வெளியிட்ட தகவல்!!

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கும் முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பரீட்சை எழுதத் தயாராகி வருவதாகவும், சில மாணவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்பது குறித்து எந்த நோக்கமும் இல்லை என்றாலும்,

தற்போதைய அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழல் மற்றும் குற்றங்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது.

அதனால் பலர் விரோத ஊழல் மற்றும் குற்றங்களுக்கு பாதுகாப்பு இல்லாததால், பயந்து குழப்பமடைந்த அரச மற்றும் பாதுகாப்பு சேவையில் உள்ளவர்கள், அரசியல் ஆசீர்வாதத்துடன் இவை அனைத்தையும் தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

மருமகனுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன் : கொழும்பில் பயங்கரம்!!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் இரண்டவது கணவரும் மருமகனும் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மகளுக்கு வந்த சந்தேகம்

நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் ஏப்ரல் 22 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இந்நிலையில் தனது தாயாரை , சிறிய தந்தையும் மருமகனும் இணைந்து அவரை கொலை செய்திருக்கலாம் என காணாமல்போன பெண்ணின் மகள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போன பெண்ணின் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில், வீட்டினுள் அங்கங்கே இரத்தம் சிதறி காணப்பட்டுள்ள நிலையில் அங்கு மறைத்து வைத்திருந்த கத்திகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவை பொலிஸார் சோதனையிட்டுள்ளார்.

இதன்போது, காணாமல்போன பெண்ணின் இரண்டாவது கணவரும் மருமகனும் வீட்டிலிருந்து மூன்று உரைப் பைகளை வெளியே எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் இருவரும் காணாமல்போன பெண்ணை கொலை செய்து அவரது சடலத்தை துண்டுகளாக வெட்டி உரைப் பைகளில் போட்டு நவகம்புர பிரதேசத்தில் உள்ள குப்பை ஆற்றில் வீசியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதலியுடன் சென்ற மேலாளர் நையப்புடைப்பு!!

நடுவீதியில் வைத்து தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவரை தாக்கிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வந்தமை தொடர்பில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் கிரிபத்கொடை நகரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாகொல மற்றும் களனி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 22 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைனஞர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நடுவீதியில் இளைஞர்கள் இருவர் இணைந்து நபரொருவரை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

அது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கிரிபத்கொடை நகரத்தில் அந்த சம்பவம் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளில், தாக்குதலுக்குள்ளானவர் தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் என தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான தனியார் நிறுவன உரிமையாளர் வேலை நிமித்தம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவருடன் தனது காரில் சென்றுள்ளார்.

இது தொடர்பில் பெண்ணின் காதலனுக்கும் தனியார் நிறுவன உரிமையாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பெண்ணின் காதலன் மற்றுமொரு இளைஞனுடன் இணைந்து தனியார் நிறுவன உரிமையாளரை கிரிபத்கொடை நகரத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை (26) பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான காதலனும் இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய் : தாதி ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை!!

பிரித்தானியாவில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் தாயார் ஒருவரின் மரணத்திற்கு காரணமான தாதி ஒருவருக்கு 9 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியாவின் வீட்ஸ் பகுதியில் நடந்துள்ளது. 27 வயது ரோமீசா அஹமட் என்ற தாதி, தனது இரவுப்பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, இந்தியாவை சேர்ந்த 28 வயது ஆதிரா அனில்குமார் என்பவரே உயிரிழந்தார். குழந்தை ஒன்றின் தாயான ஆதிரா அனில்குமார், இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு வந்த சில நாட்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய ரோமீசா அஹமட், மணிக்கு 40 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய வீதியில் 60 மைல் வேகத்தில் பயணித்ததோடு வாகனம் செலுத்தும் போது தனது அலைபேசியையும் பாவித்துள்ளார்.

இதேவேளை, ஆதிரா அனில்குமார் Leeds-Beckett பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்காக இணைய முடிவெடுத்திருந்த நிலையில் இந்த துரதிஷ்டவசமாக சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை!!

வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு இன்று (27.04) நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

வவுனியா- இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம்- நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது. குறித்த சடலம் 40 வயதிற்கு மேற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மரணமடைந்து 10 – 15 நாட்களுக்கு பின்னரே குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.

நீல கலர் கோடு போட்ட சேட்டு அவரது சடலத்தில் அருகில் கண்டு பிடிக்கப்பட்டது. உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதால் சடலத்தை பற்றிய மேலதிக அடையாளங்களை பெற முடியவில்லை.

வவுனியா வைத்தியசாலையில் உள்ள பிரேத அறை குளிரூட்டி இயங்காமையால் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடையாளம் காண உதவுமாறு கோருவதுடன், அவ்வாறு இல்லாவிடின் அரச செலவில் குறித்த சடலத்தை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த வயதை கிட்டிய நபர்கள் எங்காவது காணாமல் போயிருந்தால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தின் 0718592778 அல்லது 0242054286 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் விஞ்ஞானப் பிரிவில் முதல் இடம்!!

உயர்தர பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் முகமட் முபாரக் முகமட் பர்ஹத் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04.2025) வெளியாகின. அதில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற முகமட் முபாரக் முகமட் பர்ஹத் என்ற மாணவன் 3A சித்திகளை பெற்றுள்ளார்.

அவர், மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 187ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி சதுர்சிகா வர்த்தகப்பிரிவில் முதலிடம்!!

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் வர்த்தகப் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த,

வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி சதுர்சிகா வர்த்தகப்பிரிவில் 3A சித்திகளுடன் பாடசாலையில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தந்தையில்லாமல் பொருளாதார ரீதியில் மிகவும் பின்னின்றாலும் தனது முயற்சியில் சாதனை படைத்துள்ளார். இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி ச.பிதுர்சா வர்த்தக பிரிவில் முதல் இடம்!!

உயர்தர பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய பிதுர்சா சற்குணம் என்ற மாணவி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் வர்த்தகப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பிதுர்சா சற்குணம் என்ற மாணவி 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 357 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி கலைப் பிரிவில் முதல் இடம் பிடித்து சாதனை!!

உயர்தர பரீட்சையில் கலைப் பிரிவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி முகம்மது பைசல் பாத்திமா அஸ்ரா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் கலைப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற முகம்மது பைசல் பாத்திமா அஸ்ரா என்ற மாணவி,

தமிழ், அரசியல், பொருளியல் ஆகிய பாடங்களில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 94 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவன் கு.தனோஜன் கணிதப் பிரிவில் முதல் இடம்!!

உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவன் குகதாசன் தனோஜன் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் கணிதப் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற குகதாசன் தனோஜன் என்ற மாணவன் மூன்று பாடங்களில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 144 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையின் வரலாற்றில் மாணவன் ஒருவன் முதலாம் இடத்தை பெறுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மரண அறிவித்தல் : திரு. சின்னதுரை நாகராஜா!!

சங்கானையை பிறப்பிடமாகவும் வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் ராஜன் இன்டஸ்ரிஸ், சின்பொன், வைற்ஸ்டோன் நிறுவனங்களின் ஸ்தாபகருமாகிய திரு. சின்னதுரை நாகராஜா அவர்கள் நேற்று (26.04.2025) சனிக்கிழமை வவுனியாவில் காலமானார்.

இவர் காலஞ்சென்ற சின்னத்துரை பொன்னம்மா அவர்களின் அன்பு மகனும், கமலாதேவி அவர்களின் அன்பு கணவரும் ஶ்ரீஸ்கந்தராஜன் (ராஜன்), கல்பனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோமசுந்தரம் பிரபாகரன் (லண்டன்), திருமதி அபிராமி அவர்களின் பாசமிகு மாமனாரும், கவின், ஓவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சங்கானையை சேர்ந்த கந்தசாமி மற்றும் காலம்சென்ற தேவதாஸ் (லண்டன்) ஆகியோரது பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரது இறுதி கிரியைகள் அவரது இல்லத்தில் 29.04.2025 (செவ்வாய் கிழமை) காலை 10.00 மணியளவில் நடை பெற்று தட்சணாங்குளம் இந்து. மயானத்தில் ஈமைக்கிரியைகள் இடம்பெறும் என்பதனை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர் .
தொடர்புகளுக்கு
N.ராஜன் (மகன்) 0777562072
P.கல்பனா(மகள்) 0773838026

டொலர் மதிப்பின் அதிகரிப்பால் இலங்கைக்கு பெரும் சிக்கல்!!

கடந்த சில மாதங்களாக இலங்கை ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயரும் போக்கும், ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பதும் ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 1, 2025 நிலவரப்படி, ஒரு டொலரின் கொள்முதல் விலை 289ரூபாயக காணப்பட்டது. மேலும் டொலரின் விற்பனை விலை 297ரூபாயக காணப்பட்டது.

இருப்பினும், நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்த மாதம் 23 ஆம் திகதி, ஒரு டொலரின் கொள்முதல் விலை 295 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய விற்பனை விலை 304 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களில் ரூபாயின் மதிப்பு சுமார் ஐந்து ரூபாய் குறைந்துள்ளது. இதன் பாதகமான தாக்கம் பெரும்பாலும் நமது வெளிநாட்டுக் கடனில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுடன், வெளிநாட்டுக் கடனின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் மற்றும் பல விலைமதிப்பற்ற உலோகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தற்போது சுமார் 35 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

தற்போதைய விகிதத்தில் டொலரின் மதிப்பு ஒரு ரூபாய் குறைந்தால், வெளிநாட்டுக் கடன் அளவு 35 பில்லியன் ரூபாய் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமல்படுத்திய கடுமையான வரிக் கொள்கையைத் தளர்த்தாவிட்டால், இந்த நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயர் வையுங்கள் : பிமலுக்கு சத்தியலிங்கம் பதிலடி!!

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயரை வையுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின், ஊடகவியலாளர் ஒருவர் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆனையிறவு உப்பு விடயத்தில் பெயரை பார்க்க வேண்டாம். சுவையை பாருங்கள் எனக் கூறியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், உப்பில் ருசியைத் தான் பார்க்க வேண்டும். அது தான் உண்மை. ஆனால் உங்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கும் சத்தியலிங்கம் என்று பெயரை வையுங்கள். ஏன் ரத்நாயக்கா, விமல் வீரவன்ச, அந்த வன்ச, இந்த வன்ச என பெயரை வைக்கிறீர்கள்.

சத்தியலிங்கம், சுந்தரலிங்கம், பொன்னம்பலம் என உங்களது பிள்ளைகளுக்கும் பெயரை வையுங்கள். ஏன் என்றால் உங்களுக்கு பிள்ளை தானே வேண்டும். பெயர் முக்கியமில்லை தானே. அதற்கு பிறகு நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் போத்தலால் தன்னையே காயப்படுத்தியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!!

வவுனியா போகஸ்வெவ பகுதியில் போத்தலால் தன்னை தானே தாக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம்(24.04.2025) மாலை போத்தல் ஒன்றின் மூலம் தனது வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார்.

இதனால் காயமடைந்த அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று(25) உயிரிழந்தார்.

சம்பவத்தில் போகஸ்வெவ பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மனைவி வெளிநாடு ஒன்றில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக போகஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சுவிஸில் வாழ் இலங்கைத் தமிழர்கள் சிலருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தமிழ் இளைஞன், புதிய ஐபோனை பரிசாக பெற்றுள்ளதாக குறிப்பிட்டு அனுப்பப்பட்ட குறுந்தகவலை பெற்றுள்ளார். இதனை உண்மையென நம்பிய இளைஞன், அதிலுள்ள லிங்கினை கிளிக் செய்துள்ளார்.

அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். சில நிமிடங்களில் குறித்த வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறப்படும் அறிவுறுத்தலை பெற்றுள்ளார்.

இதன்போது வங்கியில் நிலுவையில் இருந்த சுமார் 1300 பிராங்குகள் மோசடியாளர்களில் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இவ்வாறான மோசடிகளில் சிக்கிய பல தமிழர்கள் பணத்தை இழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.