யாழில் கிணற்று தொட்டி அடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்!!

யாழில் குடும்ப பெண்ணொருவர் நேற்றையதினம்(24) வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணும் கணவனும் அவர்களது வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் உடல் சுகயீனம் ஏற்பட்டதால் மருந்து வாங்குவதற்காக கணவனை கடைக்கு அனுப்பியுள்ளார்.

கணவன் மருந்து வாங்கி கொண்டு வீடு வந்தவேளை மனைவி தண்ணீர் தொட்டியடியில் சடலமாக காணப்பட்டதை அவதானித்துள்ளார். அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக உடற்கூற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

தொடரும் வர்த்தகப் போர் : ட்ரம்புக்கு சீனா வழங்கியுள்ள ஆலோசனை!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உண்மையில் தீர்வு தேட விரும்பினால் வரிகளை இரத்து செய்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 145% வரி விதித்துள்ளது. பதிலடியாக, சீனாவும் அமெரிக்க தயாரிப்புகளுக்கு 125% வரி விதித்துள்ளது.

ட்ரம்ப் நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என கூறியிருந்தார். ஆனால், சீன வெளியுறவு அமைச்சகம் மற்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட், இவை உண்மை அல்ல என்றும், எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியளவில் குறைக்கப்படும் என ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதிலிருந்து, சீனாவுக்கு எதிரான வரி விவகாரத்தில் ட்ரம்ப் ஒரு மென்மையான அணுகுமுறையை நோக்கி திரும்பியிருப்பது தெரியவருகின்றது.

இந்நிலையில் சீனா, 80இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களை சந்தித்து, அமெரிக்க வரிகள், அவர்களின் முதலீடு மற்றும் பொருளாதார செயற்பாடுகளில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி விவாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாடொன்றில் மர்மக் கும்பலால் கடத்தப்பட்ட இலங்கைக் குடும்பம் : பெருந்தொகை டொலர் கப்பம் கோரல்!!

இலங்கையின் பிரபல அலங்கார மீன் ஏற்றுமதியாளரான ஆனந்த பத்திரண மற்றும் அவரது மனைவி உட்பட மூன்று இலங்கையர்கள் பங்களாதேஷில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷுக்கு வணிக பயணத்தில் இருந்தபோது குழுவொன்றினால் கடத்தப்பட்டு, பின்னர் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை கப்பம் கோரியுள்ளனர்.

தகவல் கிடைத்தவுடன் உடனடியாக பதிலளித்த இலங்கை அதிகாரிகள், பங்களாதேஷ் அதிகாரிகளிடம் உதவி கோரினர்.

மேலும் விரைவான நடவடிக்கையின் காரணமாக மூன்று இலங்கையர்களையும் மீட்டுள்ளனர். ஏற்றுமதி வணிகம் தொடர்பான பணிக்காக வந்த அழைப்பைத் தொடர்ந்து அவர்கள் சமீபத்தில் பங்களாதேஷுக்குச் சென்றிருந்தார்.

பங்களாதேஷ் சென்றவுடன், அவர்கள் கடத்தப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டதாகவும், அவர்களை விடுவிப்பதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை கப்பமாக கோரியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கடத்தல் செய்தி இலங்கைக்கு கிடைத்தவுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுனில் சில்வா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா, தேசிய புலனாய்வு இயக்குநர் ருவான் வணிகசூரிய உள்ளிட்ட குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

இது குறித்து பங்களாதேஷ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்தப் பணியை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் பங்களாதேஷுக்கான இலங்கைத் தூதர் தர்மபால வீரக்கொடி முக்கிய பங்காற்றியுள்ளார்.

இதையடுத்து, பங்களாதேஷ் பொலிஸாரும், இராணுவமும் இணைந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு, கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து மூன்று இலங்கையர்களை மீட்டனர்.

அவர்கள் தற்போது பங்களாதேஷ் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள் இன்றைய தினம் இலங்கை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவன் கொலையில் நீதிமன்றில் 11 பேர் முன்னிலை!!

வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் சில சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன், மேலும் இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 16 ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக சக பாடசாலை மாணவனை இளைஞர்கள் தாக்கியதில் காயமடைந்த சிறுவன் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் திகதி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள எட்டு சந்தேக நபர்களும் நேற்று பிலேஸ்ச நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அதன் பின் இரண்டு சந்தேக நபர்கள் ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மீதமுள்ள ஆறு சந்தேக நபர்கள் வயது குறைந்தவர்கள் என்பதால், அவர்களை சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

எட்டு சந்தேக நபர்களும் ஏப்ரல் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மாவத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை வானில் தோன்றும் அரிய நிகழ்வு : இலங்கையர்களுக்கு காணும் வாய்ப்பு!!

3 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வை நாளை 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பூகோள ஆய்வு பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார். வெள்ளி, சனி, மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களே இவ்வாறு தென்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கோள்கள், நாளை வெள்ளிக்கிழமை (25) அதிகாலை முதல் வானில் தெரியும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த அரிய நிகழ்வை இலங்கையர்கள் அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்றும் சுமார் ஒரு மணி நேரம் காணமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய கிரகணங்கள் போன்ற உள்ளூர் வான நிகழ்வுகளைப் போலல்லாமல், இந்த மூன்று இணைப்பு என்பது ஒரு உலகளாவிய நிகழ்வாகும்.

மேலும் இது உலகின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து தெரியும் என்றும் இந்த நிகழ்வை காண்பதற்கு தெளிவான வானம் கொண்ட திறந்த வெளிகளில் நின்று பார்வையிடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (24) சற்று குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,008,014 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,560 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 284,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 260,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,120 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 248,950 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 267,000 ஒன்று ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 245,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெண் : குற்றவாளிக்கு மரண தண்டனை!!

கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2015ஆம் ஆண்டு கொழும்பின் செட்டித்தெருவில் உள்ள விடுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவரது உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து, பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிலையத்தில் வீசிய வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி விடுதியில் தர்மராஜா கார்த்திகா என்ற பெண்ணைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பேட்ரிக் கிருஷ்ணராஜா மீது சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

நீண்ட விசாரணைக்கு பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை அறிவித்துள்ளார். தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று கூறினார்.

எனினும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசுத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் அந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளதால், அதன்படி மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

வட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : அறிமுகமானது புதிய வசதி!!

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் (Whatsapp) பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஆங்கிலத்தில் Advanced Chat Privacy எனப்படும் மேம்பட்ட அரட்டை தனியுரிமையை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனர்களின் ரகசியத் தன்மையைப் பாதுகாக்க இந்த புதிய வசதி உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்!!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கணவர் உயிரிழந்த நிலையில், தம்பதியினர் எடுத்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவர் உயிரிழந்தார். இவருக்கு 7 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

இவரும், இவரது மனைவியும் தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மனைவி கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த கணவனின் உடலின் முன்னே மனைவி அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு தமபதியினர் இருவரும் ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அடுத்த வாரம் திருமணம் : முன்னாள் காதலன் மிரட்டியதால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டம் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அசுன்டி கிராமத்தில் வசித்து வருபவர் சாய்ராபானு. இவர், பள்ளிக்கூடம் ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றவர். சாய்ராபானுவுக்கும் ஒரு இளைஞருக்கும் மே 8ம் தேதி திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்திற்கான வேலைகளில் சாய்ராபானுவின் பெற்றோர் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க சாய்ராபானு பெற்றோர் வெளியே சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த சாய்ராபானு திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சாய்ராபானுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது. அதில் தனது சாவுக்கு முன்னாள் காதலன் மைலாரி தான் காரணம் எனக் கூறியிருந்தார். நானும், மைலாரியும் காதலித்தோம்.

5 ஆண்டுக்கு முன்பாக எங்களது காதல் முறிந்து விட்டது. எனக்கு திருமணம் முடிவான பின்பு, மைலாரியை காதலிக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படம், வீடியோவை வெளியிட போவதாக மிரட்டல் விடுக்கிறார்.

இதனால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி இருந்தார். அதன்பேரில், மைலாரி மீது கதக் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை குறித்து வெளியான எச்சரிக்கை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளைய தினம் (24) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுமாறும், நிழலான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர!!

எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வெற்றி நமதே ஊர் எமதே என்னும் தொனிப் பொருளில் தேசிய மக்கள் சக்தி தேர்தல் பரப்புரைக் கூட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை,

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை என்பவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வவுனியா நகரசபை மைதானததில் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி வவுனியாவிற்கு வருகை தரவுள்ளார்.

யாழில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் குடவத்தை, துன்னாலை பிரதேசத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் திடீர் உடல்நல குறைவு காரணமாக நேற்று பு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பிரதேச பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இனி தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை : பொலிஸாருக்கு பறந்த உத்தரவு!!

தேவையின்றி பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என இலங்கை பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே.

எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் ஆய்வு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைக் காடாக மாறிய கண்டி : நோய்க் கிருமிகள் பரவும் அபாயம்!!

வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரம் தற்போது பெரும் குப்பை கூழங்களா நிறைத்துள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள வீதிகளில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன, பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதி பெட்டிகள் கடுதாசிகள் என குப்பைகளாக உள்ளன.

பொலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்

யாத்திரிகர்கள் பொலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களை வீதியில் விட்டுச் செல்வதால், துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுகாதார பிரச்சனையாகி நோய் கிருமிகள் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அனைத்து குடிமக்களையும் கோரியுள்ளார்.

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக கண்டியில் ஏற்கனவே 300,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கூடியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

யாத்ரீகர்கள் தொடர்ந்து கண்டி நகருக்குள் நுழைந்தால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் கண்டி மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.