வவுனியாவில் வாகன தகர்ப்பு வெடிபொருள் மீட்பு!!

 
வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் 15 கிலோ எடையுடைய வாகன தகர்ப்பு வெடிபொருள் ஒன்று இன்று (13.04.2017) மாலை மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா உக்கிளாங்குளம் 04ம் ஒழுங்கையில் உள்ள வீடென்றில் குறித்த வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

புதுவருடத்தினை முன்னிட்டு வீடு மற்றும் வீட்டின் வளவினை துப்பரவு செய்யும் போது மண்ணில் புதையுண்ட நிலையில் குறித்த 15 கிலோ நிறையுள்ள வெடிபொருள் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் பண்டாரிகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வெடிபொருளை பார்வையிட்டதுடன், இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்ற அனுமதியினை பெற்று விசேட அதிரடி படையினரின் உதவியுடன் வெடிபொருளை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த வெடிபொருளில் கப்டன் பவான் (ஐயா) தகர்ப்பு வெடிமருந்தென பொறிக்கப்பட்டுள்ளதுடன், இது விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

வவுனியாவில் 49வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 49 ஆவது நாளாகவும் இன்று (13.04.2017) தொடர்கிறது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் களைகட்டியுள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு!!

 
வவுனியாவில் தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் களைகட்டியுள்ளது.

பிறக்க இருக்கும் தமிழ்,சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும் வெளிமாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

மேலும் வாகன நெரிசல் காரணமாக பாதுகாப்புப் பொலிசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் புதுவடிவம் பெறும் காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம்!!

புதுவருடப் பிறப்பு அன்று மாபெரும் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை) சித்திரைப் புத்தாண்டுடன் 50ஆவது நாள் நிறைவடைகின்றது.

இந்நிலையில், நாளைய தினம் வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பொது அமைப்புக்களையும் தங்களுடன் இணைந்து போராட வருமாறு காணாமற்போனோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுவரையிலான தமது போராட்டத்துக்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் எவையும் ஆதரவு வழங்காத நிலையில், புத்தாண்டு தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சமூகம் மற்றும் பொது அமைப்புக்களின் ஆதரவு கோரப்பட்டுள்ளது.

10 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் : குடும்ப உறுப்பினரின் வெறிச்செயல்!!

இந்தியாவில் 10 மாத பெண் குழந்தை குடும்ப உறுப்பினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத், ஜாம்நகர் மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை அப்பகுதயில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு குழந்தையின் தந்தை உறவினரான 30 வயதுடைய Mukesh Thakor என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலயைில், குழந்தையை வெளியே கொண்டு சென்ற Mukesh Thakor பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர், குழந்தையை வீட்டிலேயே விட்டு விட்டு அவசரமாக சென்றுள்ளார். குழந்தை அழுதை தொடர்ந்து சோதனை செய்த பெற்றோர் ரத்த கறையை கண்டு நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள Mukesh Thakor மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், அவனை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர்.

இலங்கையில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் மக்கள்!!

 
இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் கொழும்பு, நகர மண்டப பகுதியில் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு நகரத்தை ஸ்மார்ட் நகரமாக்கும் நோக்கில் மொபிடெல் நிறுவனத்தினால் இந்த நடவடிக்கை முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அதிவேக இணையத்தளவசதி மற்றும் இயந்திரத்தின் ஊடாக குளிர் பானங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி இதில் காணப்படுகின்றது.

அத்துடன், அருகில் உள்ள பேருந்துகள், ரயில் நிலையங்கள், வங்கிகள் தொடர்பில் முழு விபரங்களையும் அறியக்கூடியவாறு குறித்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த ஸ்மார்ட் பேருந்து நிலையத்திற்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அதிகளவிலானோர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முதலாக கொழும்பில் இந்த ஸ்மார்ட் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டமையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டன் பேருந்தில் தாக்குதல் முயற்சி : திறமையாக முறியடித்த ஆப்பிரிக்கர்!!(வீடியோ)

பிரித்தானியாவில் கத்தியுடன் பேருந்தில் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற மர்ம நபரை ஆப்பிரிக்கர் ஒருவர் அடித்து ஓட விட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

Stoke Newington பகுதியில் 149 எண் பேருந்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது மர்ம நபர் ஒருவன் கத்தியுடன் ஓட்டுநர் ஜன்னல் வழியாக பேருந்தில் நுழைந்துள்ளான்.

உடனே ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளார். பின்னர், பேருந்தில் எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளார். இந்நிலையில், பேருந்திலிருந்து ஆப்பிரிக்கர் ஒருவர் தாக்குதல்தாரியுடன் சண்டையிட்டு அவனிடமிருந்த கத்தியை கைப்பற்றியுள்ளார்.

இதனையடுத்த அந்த மர்ம நபர் பேருந்திலிருந்து தப்பி ஓடியுள்ளான். சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், காயமடைந்த ஆப்பரிக்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

மேலும், குறித்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தொடர்புக் கொள்ளும் படி பொலிசார் அறிவித்துள்ளனர்.

லண்டன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, எட்டு மாதக் குழந்தையைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி!!

பெற்றோரின் கோரிக்கைகளை நிராகரித்து எட்டு மாதக் குழந்தையொன்றின் செயற்கை உயிர்காப்பு கருவியை அகற்றுவதற்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிறக்கும்போதே மிக அரிதான மரபணுத் தாக்கத்தால் பீடிக்கப்பட்ட சார்லி கார்ட் என்ற ஆண் குழந்தை, பிறந்தது முதல் கடந்த எட்டு மாதங்களாக செயற்கை உயிர்காப்புக் கருவியின் உதவியுடன் உயிர்வாழ்ந்து வருகிறது.

மருத்துவ ரீதியாக, இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை அந்நோயில் இருந்து மீட்க முடியாது. நோயாளி உயிருடன் மட்டுமே இருப்பார். வேறெந்த அசைவும் அவரிடம் இருக்காது.

இந்தக் குழந்தையின் செயற்கை உயிர்காப்புக் கருவியை அகற்றுவதன் மூலம், கௌரவமான மரணத்தை அதற்குப் பெற்றுத் தரவேண்டும் என்று, குழந்தைக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவமனை நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, உயிர்காப்புக் கருவியை அகற்ற மருத்துவமனைக்கு அனுமதியளித்தது.

இந்தத் தீர்ப்பை நீதிபதி வாசித்தபோது, ‘வேண்டாம்’ என்று அந்தக் குழந்தையின் பெற்றோர் கதறியழுதது அங்கு கூடியிருந்தோரைக் கண்கலங்கச் செய்தது.

தமது குழந்தையின் சிகிச்சைக்காக இணையதளம் மூலம் சுமார் ஒன்றரை மில்லியன் யூரோக்களைத் தாம் திரட்டியிருப்பதாகவும், அமெரிக்க மருத்துவமனை ஒன்று இந்தக் குழந்தைக்கான சிகிச்சையை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

என்றபோதும் நீதிபதிகள் பெற்றோருக்கு எதிரான தீர்ப்பையே வழங்கினர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வதா, இல்லையா என்று பெற்றோர் தமது தரப்பு சட்டத்தரணிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றனர்.

நான்கு மணி நேரத்தில் 50 இலட்சம் ரூபாவை தானமாக வழங்கிய இலங்கை வர்த்தகர்!!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெருந்தொகை பணத்தை மக்களுக்கு தானமாக பகிர்ந்தளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இரத்தினபுரி, மலங்கம பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவர் பெருந்தொகை பணத்தை தன்சலாக வழங்கியுள்ளார்.

தன்னிடம் வரும் ஏழை மக்கள் மற்றும் வீட்டின் அருகில் வசிக்கும் மக்களுக்கு பண உதவி வழங்கும் தன்சல் ஒன்று அந்தப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

மலங்கம பிரதேசத்தை சேர்ந்த இரத்தினக் கல் வியாபாரி ஒருவர் அவரது வீட்டில் வைத்து இந்த பண உதவியை செய்துள்ளார்.

இதன்போது பாரியளவு மக்கள் கூட்டம் ஒன்று அங்கு வந்துள்ள நிலையில் அவர்களுக்கு 5000, 3000,1500, 1000 என கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது.

நான்கு மணி நேரத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா தானமாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அசத்திய வெளிநாட்டுப் பெண்கள் : வியப்பில் சிங்கள மக்கள்!!

 
தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களில் இலங்கையில் களை கட்டியுள்ளன. இது தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நாட்டில் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் வென்னப்புவ “ரன்வெலி” ஹோட்டலில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இதில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

அழகு ராணி தெரிவு, நீர் விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் இதில் அடங்கும்.

இந்த போட்டிகளில் அதிகமான வெளிநாட்டவர்கள் பங்கேற்றனர். சிங்கள கலாசார உடையில் பல வெளிநாட்டு பெண்கள் அழகு ராணி போட்டியில் பங்கேற்றமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது.

போருக்கு தயார் : அமெரிக்காவுக்கு சவால் விடுத்த வடகொரியா!!

அமெரிக்கா விரும்பும் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், கடற்படை குழுவொன்றை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி வைத்த அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்கா தாக்குதல்களை நடத்தினால், வடகொரியா அணுவாயுத தாக்குதல்களை நடத்த நேரிடும்.

எந்தவொரு அழுத்தங்களையும் எதிர்கொள்ள வடகொரியா தயார் நிலையில் உள்ளது. அத்துடன், எதிரியின் நடமாட்டங்களை தொடர்ச்சியாக வடகொரியா கண்காணித்து வருகின்றது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த விமானங்களைத் தாங்கிய போர்க் கப்பலுடன் கார்ல் வின்ஸன் தாக்குதல் குழுவை அமெரிக்கா கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கண்டித்து வடகொரியா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, அமெரிக்காவுக்கும் தமக்கும் இடையிலான சிரியா தொடர்பிலான இராணுவத் தொடர்பை துண்டித்துக்கொள்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சிரியா மீதான அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, அமெரிக்காவுடன் நேரடி மோதலுக்கு தாம் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான தமது தொடர்பு சீரடையும் என்பதில் நம்பிக்கையில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் சிரியா தொடர்பில் “குறுக்கிடாத வழித்தடங்கள்” (Deconfliction channels) என்ற ஒரு நடைமுறை 2015ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகின்றது.

கணிசமான இடைவெளி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் தாக்கக் கூடாது. சிரியாவில் இரு வல்லரசுகளும் மேற்கொள்ளும் விமான தாக்குதல்கள் தங்களுக்கிடையே நேரடி மோதலாக உருவாகிவிடக் கூடாது என்பதே இந்த ஏற்பாட்டிற்கு முக்கிய காரணம்.

இக் காரணங்களின் அடிப்படையிலேயே ரஷ்ய ஜனாதிபதி இந்த முடிவினை எடுத்துள்ளார். இந்நிலையில், சிரிய வான் பரப்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் நெருங்கி வரக்கூடும் எனவும், இதனால் விபத்துக்கள் ஏற்பட கூடும் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துபாயில் பொலிஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்திய ரோபோ!!(வீடியோ)

துபாயில் பொலிஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் ரோபோ ஒன்று நேர்முகத் தேர்வு நடத்தியுள்ளது.

சர்வதேச அளவில் நவீன கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் துபாயும் ஒன்று.

இந்த நிலையில், நேர்முகத்தேர்வில் கேள்விகளைக் கேட்கும் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் முதற்கட்ட நேர்முகத் தேர்வை பொலிஸார் சார்பில் ரோபோ மேற்கொண்டது.

சயில் அல் பர்ஹான் என இந்த பொலிஸ் ஸ்மார்ட் ரோபோவிற்கு பெயரிடப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குள் துபாய் பொலிஸ் துறையில் 25 சதவீதம் ரோபோக்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போதைக்கு அடிமையான மலைப்பாம்புக்கு மறுவாழ்வு!!

அவுஸ்திரேலிய ஆய்வகம் ஒன்றில் கடந்த வருடம் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட, போதைக்கு அடிமையான மலைப்பாம்பு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களை தமது பாதுகாப்புக்காக வைத்திருப்பது வழக்கமாகிவிட்டது. அதன்படி, ஆறடி நீளமுள்ள இந்த மலைப்பாம்பை, கடந்த வருடம் ஆய்வகம் ஒன்றில் அதிகாரிகள் கைப்பற்றினர். பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்டுவந்த அந்தப் பாம்பிடம் போதைக்கு அடிமையானதன் அறிகுறிகள் தென்பட்டதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அதிகாரிகள், அப்பாம்புக்கு மறுவாழ்வளிக்கத் திட்டமிட்டனர்.

இதற்காக, பதினான்கு சிறைக் கைதிகளைத் தெரிவுசெய்து அவர்கள் மூலம் இந்தப் பாம்பு பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த ஏழு மாதங்களாக ‘மறுவாழ்வு’ பெற்று வந்த மலைப்பாம்பு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அறிந்த ஒருவர், குறித்த பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்க விரும்பினார். இதையடுத்து, அதற்கான நீதிமன்ற அனுமதிக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கை நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், பாம்பு விடுதலை செய்யப்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவில், விலங்குகளுக்கு மறுவாழ்வளிப்பதற்காக கைதிகளைப் பயன்படுத்தும் திட்டம் கடந்த இருபது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. விலங்குகளுடன் பொறுமையாகவும், சகிப்புத்தன்மையுடனும் நடந்துகொள்வது கைதிகள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், இதன்மூலம் கைதிகள் திருந்தி பொதுவாழ்வில் இலகுவாகக் கலந்துகொள்ள முடிகிறது என்றும் நம்பப்படுகிறது.

சிகரெட் துண்டை அணைக்க முற்பட்டவருக்கு நேர்ந்த அவலம்!!(காணொளி)

சாக்கடைத் துளையினுள் சிகரட்டை வீசியவர், சாக்கடை வெடித்து காயங்களுக்குள்ளான சம்பவம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றிய காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

காணொளியின்படி, இச்சம்பவம் கடந்த மாதம் 29ஆம் திகதி காலை சுமார் பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியோரம் இருக்கும் சாக்கடைத் துளை ஒன்றுக்கு அருகில் வரும் நபரொருவர், தன் கையில் இருந்த சிகரெட்டை அணைக்கும் விதமாக சிகரெட்டை அந்தத் துளையினுள் போடுகிறார். உடனடியாக அந்தச் சாக்கடைப் பகுதி வெடித்துச் சிதறுகிறது. தெய்வாதீனமாக அந்த நபர் சிறு காயங்களுடன் எழுந்து நிற்க முயல்கிறார்.

இந்த வெடிப்புச் சம்பவத்துக்குச் சற்று முன், மற்றொரு நபர் கழிவுகள் சிலவற்றைக் கொணர்ந்து அந்தத் துளை வழியாக அகற்றுவதும் பதிவாகியுள்ளது.

குறித்த நபர் அந்தத் துளையினுள் இட்டது வெடிபொருளாக இருக்கலாம் என்றும், இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஒக்டோபர் 1ம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள்!!

களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை நடுவர்களே களத்தை விட்டு வெளியேற்ற அனுமதியளிப்பது உட்பட, சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகளை நிர்ணயிக்கும் ‘மெரில்போன்’ கிரிக்கெட் சங்கமே இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி:

• களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை அந்த ஆட்டத்தை விட்டு தற்காலிகமாகவோ, குறிப்பிட்ட காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ விலக்கிவைக்கும் அதிகாரம் நடுவருக்கு உண்டு.

• இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நடுவர்கள் விரும்பினால் எதிரணியினருக்கு ஐந்து ஓட்டங்களைக் கொடுக்கலாம்.

• வீரர் ஒருவரை வெளியேற்ற அவ்வணித் தலைவர் மறுக்கும் பட்சத்தில், எதிரணியினர் வெற்றிபெற்றதாக நடுவர்கள் அறிவிக்கலாம்.

• ஒரு முடிவுக்கு இரு அணித் தலைவர்களும் இணங்க மறுத்தால் ஆட்டத்தைக் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவிக்கலாம்.

• பந்தைச் சேதப்படுத்துவது, களத்தைச் சேதப்படுத்துவது ஆகிய இரண்டு குற்றங்களும் ஒரே வகையாகவே இனங்காணப்படும். இதுபோன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு ஆட்டமிழப்பை செல்லுபடியற்றதாக அறிவிக்கலாம்.

• மாற்று வீரர்கள் விக்கெட் காப்பாளராகப் பணியாற்றலாம்.

• பெய்ல்களை ஸ்டம்ப்புகளுடன் பொருந்தியதாக அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம், விக்கெட் காப்பாளர்களின் கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படவுள்ளது.

பெய்ல் தாக்கியதில் கண்கள் பாதிக்கப்பட்டதால், தென்னாபிரிக்க வீரர் மார்க் பௌச்சர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதைக் குறிப்பிட்டே இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஸ்டம்ப்புகளுடன் பொருத்தப்பட்டதாக இருப்பதால் பெய்ல்கள் கூடிய தூரம் பறந்து செல்ல முடியாததாக அமைக்கப்படும் என்றும், எவ்வாறெனினும் அவற்றின் தற்போதைய நெகிழ்வுத் தன்மையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் மேற்படி கிரிக்கெட் சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டில் பொருட்களைத் திருடியதாக குரங்குகள் மீது பொலிஸில் முறைப்பாடு!!

மாத்தறை கோனஹென்வத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸாக்குக் கிடைத்த முறைப்பாட்டின்படி அந்த இடத்துக்குச் சென்று பொலிஸார் ஆராய்ந்த பின்னர் வீட்டு உரிமையாளரான பெண் நேற்று முன்தினம் 10 ஆம் திகதி குரங்குகளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டாளர் உட்பட குடும்பத்தினர் சுற்றுலா சென்று திரும்பியபோது வீட்டில் உடைகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் தாறுமாறாக வீசப்பட்டுக் கிடந்துள்ளன.

இதைப் பார்த்த பெண் உடனடியாக தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதன் பின்னர் பொலிஸார் வந்துள்ளனர்.

பொலிஸார் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்துக்கு வந்து முறைப்பாடு செய்யும்படி வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதன் பின்னரே அப்பெண் வீட்டுக்குள் குரங்குகளின் காலடிகளைக் கண்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் பொலிஸ் நிலையம் சென்று வீட்டுப் பொருட்கள் காணாமற் போகவில்லையென்றும் குரங்குகளே பொருட்களை எடுத்தெறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.